• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 12

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 12

ஜேபியின் வீட்டு வரவேற்பறையில் தன் பெற்றோர்களுடன் அமர்ந்திருந்தான் வசீகரன்.

பெருமாள் கேட்கும் கேள்விகளுக்கு சிரித்தபடியே பதிலளித்து அவரின் பார்வையில் நன்மதிப்பை பெற்றுக் கொண்டிருந்தான்.

" உங்கள் மகளை எங்கள் மகனுக்கு மணமுடித்து தர முடியுமா?" தினகரனும், வசுமதியும் நேரடியாகவே வசீகரனுக்கு ஜேபியை மணமுடித்து தரும்படி பெருமாளிடம் கேட்டனர்.

வீடு தேடி வந்த சம்பந்தத்தில் ஆனந்தமாக அதிர்ந்தார் பெருமாள். ஜேபியோ அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்.

மகளின் கையைப் பிடித்து தன்னருகில் உட்கார வைத்துக் கொண்ட பெருமாள், "பாப்பா! கொஞ்சம் அமைதியாய் அவர்கள் சொல்வதைக் கேள். இறுதியாக உன் முடிவை யோசித்துக் கொள்ளலாம். வீடு தேடி வந்தவர்களை புறக்கணிப்பது அவமரியாதை. அவர்களின் விருப்பத்தை அவர்கள் சொல்லும்போது நம்முடைய விருப்பத்தை நாமும் சொல்லலாம்." என்று தன் கைப்பிடியில் கையை முறுக்கி கொண்டிருந்தவளின் காதில் மெதுவாகச் சொன்னார்.

பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை, " ஏம்மா ஜெயா வந்த எல்லாருக்கும் காபி கொண்டு வா!" என்று அதிகாரமாக மிரட்டினார் பாட்டி.

தன் பாட்டியிடம் பதில் பேசுவதற்காக வாய் திறக்கப் போனவள், " பாட்டி சொல்வதை செய் பாப்பா " என்ற தந்தையின் அன்புக் குரலுக்கு கட்டுப்பட்டு சுனங்கிய மனதுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.

வசீகரனின் முன் பவ்யமாக மங்கி பிரதர்ஸ் அமர்ந்திருக்க, அன்னம்மாள் பாட்டி மட்டும் வசீகரனை குறுகுறுவென்றே பார்த்துக் கொண்டிருந்தார்.

"ஹாய்... கிரான்மா. யூ ஆர் சோ நைஸ்!!" என்று வசீகரன் கையசைத்ததும், செட்டுப்பல் மின்ன சிரித்தவர்,

"ஹாய்! எஸ். மீ ரைஸ். யூ... யூ...." என்று திக்கித் திணறியவரின் காதில் கிருஷ், "என்ன ரைஸா பேபி, எங்க பாஸை திட்டப் போறீங்களா?" என்றான் மெதுவாக.

' அது இல்லடா. அந்த புல்லுக்கு பெயர் என்ன?"

" பாட்டி சரக்கு பற்றி பேசும் அளவிற்கு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு ஃபுல் எல்லாம் வேண்டாம். மட்டையாகி மடங்கி விடுவீர்கள். குவாட்டர் போதும். அதுவும் கண்டிப்பாக வாட்டர் மிக்ஸ் செய்ய வேண்டும். சைடு டிஷ்ஷில் பாதியை எனக்கு தர வேண்டும் " என்றவனின் காலை யாரும் அறியாமல் ஓங்கி மிதித்த பாட்டி, " லூசு பயலே, அழகாய் இருப்பதை சொல்வார்களே! அது அருகம்புல்லா? கோரைப் புல்லா?" என்றார் கோபத்தில் குரலை சிறுத்துக் கொண்டு.

கிருஷ் வலியில் தன் கால்களை லேசாக தடவிக் கொண்டே, "ஹான். பியூட்டிஃபுல்" என்றான் கடுப்புடன்.

" அட ஆமாம். தம்பி நீங்க கூட பியூட்டிஃபுல்லு " என்றார் அன்னம்மாள் வசீகரனிடம்.

"அவ்... சத்தியமா பாட்டி கூட மல்லுக்கட்ட முடியலடா" யாதவ் காதில் கிசுகிசுத்தான் கிருஷ்.

"அடேய்! ஜேபி ஃப்ரண்டா இருக்கும்போதே நம்மளால சமாளிக்க முடியலையே, நம்ம பாஸுக்கே பாஸ் ஆனால், நாமெல்லாம் கிளோஸ்டா" என்றான் யாதவ் பதிலுக்கு.

" அது என்னவோ உண்மைதான் போல டா. அங்க பாரு. காபி கொண்டு வரச் சொன்னால் ஜூஸ் கொண்டு வருகிறது அந்த லூசு" என்றான் கிருஷ் மெதுவான குரலில்.

அனைவருக்கும் குளிர்பானத்தை கொடுத்துவிட்டு எந்தவித உணர்வும் இன்றி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தாள் ஜேபி.

"சிறுவயதில் இருந்தே என் மகளை அவளது விருப்பத்திற்கு ஏற்ப வளர்த்து விட்டேன். அவளுடைய வாழ்க்கையில் எந்த ஒரு முடிவையும் திருத்தம் இல்லாமல் எடுக்க பழக்கி வைத்திருக்கிறேன்.

என் மகளின் சுதந்திரம் எனக்கு மிகவும் முக்கியம். அவளின் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் அவளுக்குத்தான். என் மகளின் முடிவில் என்றும் அவனுக்கு நான் உறுதுணையாய் நிற்பேன். வாழ்க்கைத் துணை என்று வரும்போது அவளுடைய விருப்பமே என்றும் என் விருப்பம்.

என் மகளோடு தனித்து பேசிப் பாருங்கள். இருவருக்கும் பிடித்திருந்தால், மனது ஒத்திருந்தால் மேற்கொண்டு நாம் பேசலாம். ஆனால் என் மகளின் முடிவே இறுதியானது" என்றார் பெருமாள் இறுகி நின்ற தன் மகளை பார்த்துக்கொண்டே.

தன் தந்தையின் ஒவ்வொரு வார்த்தையிலும், அன்பும், பெருமையும், பாசமும் ததும்ப இறுகி நின்றவளின் முகம் புன்னகையில் மலர்ந்தது.

தனியறையில் வசீகரன் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவன் எதிரே கைகளை நெஞ்சின் குறுக்காக கட்டிக்கொண்டு, நேர் பார்வை பார்த்தபடி நின்று இருந்தாள் ஜேபி.

வசீகரன் பேச ஆரம்பிப்பதற்குள் தன் வலது உள்ளங்கையை அவன் புறம் நீட்டி, "என்ன சார்! பார்த்தவுடன் பிடித்து, பிடித்த உடனே கல்யாணமா?" என்றாள் ஏளனமாக.

"ஏன் நம்புவதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறதா?" என்றான்.

"ஹலோ சார்! இதை நீங்கள் என்னிடம் நேரடியாக சொல்லி இருந்தால் நான் அப்பொழுதே மறுத்திருப்பேன். இப்படி உங்கள் பெற்றோர்களோடு என் வீடு தேடி வந்து, என் மறுப்பை கேட்க வேண்டும் என்று உங்கள் தலையில் எழுதி இருக்கிறது போலும்"

"ஆஹான். புரியவில்லையே. என்னை வேண்டாம் என்று மறுப்பதற்கான உன்னுடைய காரணங்களைச் சொன்னால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும்"

"எனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை "

"ஏன்?"

" திருமணம் என்ற ஒன்று என் தந்தையை என்னிடமிருந்து பிரித்து விடும் என்றால் அப்படி ஒரு திருமணமே எனக்குத் தேவையில்லை. காலம் முழுவதும் என் தந்தைக்கு மகளாகவே இருந்து விடவே ஆசைப்படுகிறேன்."

"அதாவது?"

" நான் ஜெயலட்சுமி பெருமாள் என்ற அடையாளத்தையே விரும்புகிறேன் "

' நான் அந்த ஜெயலட்சுமி பெருமாளை அடையவே விரும்புகிறேன் ' என்றான் மனதோடு வசீகரன்.

"ஓகே ஜேபி. உன் அடையாளத்தை மாற்றாமல், உன் தந்தையை உன்னிடம் இருந்து பிரிக்காமல், உன்னை உனக்காகவே ஏற்றுக்கொள்ள நினைக்கும் என்னை ஏற்றுக் கொள்வாயா?" என்றான் ஜேபியின் கண்களை நேராகப் பார்த்து.

"வாவ்... அப்படி என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்ன கட்டாயம் உங்களுக்கு?"

" காதலின் சாரலில் நனைந்திருக்கிறாயா ஜேபி? " என்றான் அழுத்தமான குரலில்.

ஜேபியின் மனதில் புதைந்திருந்த கவிதை வரிகள் மேலெழுந்து வர, இழுத்துப் பிடித்த மூச்சில் மீண்டும் அந்த வரிகளை மனதிற்குள் புதைத்தாள்.

கம்பீரமான அந்த கண்களில் சிறிது கள்ளத்தனத்தை பார்த்ததும் மனதிற்குள் சிரித்துக் கொண்டான் வசீகரன்.

"வெல் ஜேபி. எப்படியும் உனக்கு உன் தந்தை மாப்பிள்ளை பார்க்கத்தான் போகிறார். அது நானாக இருக்கும் பட்சத்தில், நம் திருமணத்திற்கான உன் நிபந்தனைகளை, அது எந்தவிதமான நிபந்தனைகளாய் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள தயாராய் இருக்கிறேன்" என்றான் கால்களை அகட்டி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு.

' நிபந்தனை' என்ற வார்த்தையை அழுத்தமாய், ஆழமாய் ஜேபியின் மனது உடனே பதிவு செய்து கொண்டது.

" எனக்கு ஒரு நாள் கால அவகாசம் கிடைக்குமா?" என்றாள்.

" உன் பதிலை சுமந்து வரும் அந்த நொடிக்காய் காத்திருக்கிறேன்" என்று தன் கை கடிகாரத்தை பார்த்து கண் சிமிட்டினான்.

அனைவரிடமிருந்தும் விடை பெற்றுக் கிளம்பினான் வசீகரன்.

அறையில் யோசனையுடன் நின்று கொண்டிருந்த ஜேபியை சுற்றி வளைத்தனர் மங்கி பிரதர்ஸ்.

"ஜேபி பாஸ்..." என்றான் கிருஷ்.

"ஓனர் அம்மா..." என்றான் யாதவ்.

" சும்மா இருங்கடா..." என்று அவர்களை அதட்டிவிட்டு மது, "எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அசால்டாக முடிவெடுக்கும் எங்கள் ஜேபி இப்படி யோசித்துக் கொண்டு நிற்பதா? இந்த அமைதி உனக்கு சற்று பொருந்தவில்லை ஜேபி" என்றான் தன்மையாக.

" ப்ளீஸ் ப்ளீஸ் இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லு ஜேபி. அந்த கம்பெனியில் வேலை கிடைப்பதே பெரிய விஷயம் என்கிற போது , அந்த கம்பெனியே நமக்கு சொந்தமாகி விடும் என்றால்..." என்றான் கிருஷ் கண்களை அகல விரித்துக்கொண்டு.

" அந்த கம்பெனில இனி எவனாவது நம்மை ஒரு கேள்வி கேட்க முடியுமா? நீதான் எங்களைக் கேட்க விட்டு விடுவாயா? " கிருஷ்ணாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டான் யாதவ்.

"இல்லை. இது எதுவும் சரிவராது. நான் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன் " என்றாள் தீர்க்கமாக.


"அடிப்பாவி, சதிகாரி, சண்டாளி. என் ஆசையெல்லாம் உன் அப்பத்தா தோசை போல் கருகிப் போய்விட்டதே. சரி விடு. உனக்கேற்ற இளிச்சவாயன் நம்முடைய பாஸ் இல்லை" என்றான் கிருஷ்.

" ஏன் ஜேபி. இந்த அக்ரீமெண்ட் கல்யாணம் மாதிரி ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்து கொண்டு, கம்பெனியை நம்முடைய பெயரில் மாற்றி எழுதிக் கொண்டால் என்ன? 'ஆப்ரேஷன் வசீ' எப்படி நம்முடைய பிளான்? " என்ற யாதவின் முதுகில் அடிபோட்டான் மதுசூதனன்.

" ஏன்டா அடிச்ச? முழு நேர வேலை பிடிக்கவில்லை என்றால், பகுதி நேர வேலை தேடுவது போல் ஒரு ஐடியா சொன்னது குத்தமா?" என்று தன் முதுகை தடவிக் கொண்டு சொன்னான் யாதவ்.

அவ்வளவு விளையாட்டாக பேசியும் ஜேபி அழுத்தமாக நிற்பதை பார்த்த மங்கி பிரதர்ஸ் தங்களது கிண்டல்களை கை விட்டு, "ஜேபி நன்றாக யோசித்து உன் மனது சொல்வதைக் கேள். நாங்கள் எப்பொழுதும் உன்னுடனே இருப்போம் மச்சி. உன் மனதை ஏதோ குழப்புகிறது. அதை சரி செய்து விட்டு தெளிவாக யோசி" என்று அவளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து விட்டுச் சென்றனர் மங்கி பிரதர்ஸ்.

அவர்கள் வெளியே சென்றதும் வரவேற்பறையில் வந்து அமர்ந்த ஜேபியிடம் வந்த அன்னம்மாள், "என்ன கல்யாணத்துக்கு தேதி குறிக்கட்டுமா?. பொம்பள பிள்ளையை எவ்வளவு நாளு நாங்களும் காவல் காப்பது? எங்கள் பாரத்தை இறக்கி வைக்க அந்த மகராசன் நல்ல வேளையாக வந்தான் " என்றார்.

எப்பொழுதும் தன் பாட்டியிடம் வம்பு கட்டி நிற்கும் ஜேபி, எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்திருந்த, தன் தந்தையின் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள்.

" ஏன்ப்பா, பெண்ணாய் பிறந்தால், பெற்றோரை விட்டு விட்டு திருமணம் என்ற பெயரில், புகுந்த வீட்டுக்கு சென்றே தீர வேண்டுமா? பெற்றோருடன் காலம் முழுவதும் இருக்கக் கூடாதா?" என்றாள் ஜேபி ஏக்கமாக.

" அது நம்முடைய பாரம்பரியம் " என்று குறுக்கிட்டார் அன்னம்மாள்.

" அது ஏன் ஆணாதிக்கமாகவே இருக்கிறது. பெண்ணின் விருப்பப்படி எங்கும் இருக்கலாம் என்ற வாய்ப்புகள் ஏன் மறுக்கப்படுகிறது? ஆணின் விருப்பமே முதன்மையாக கருதப்படுகிறது.

ஒரு குருடனைப் பின்தொடர்வது போலத்தான் இந்த சமுதாயம் பழைய பழக்க வழக்கங்களை தொடர்கிறது.

இந்த கருத்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாகியிருக்கலாம். நாகரீகங்களில் முன்னேறிய நாம் ஏன், நம் மனநிலையில் இருந்து முன்னேறவில்லை.

கண்டிப்பாக பழைய மரபுகளைத் தான் பின்பற்ற வேண்டும் என்றால், பெண் குழந்தைகளுக்கு கல்வியை நிறுத்துங்கள், ஏனெனில் அவள் தன்னை, தன் உணர்வுகளை என்றும் பூட்டிக் கொண்டு சுயமாய் சிந்திக்க கூடாது. அப்பொழுதுதானே பழைய மரபுகளுக்கு தலையாட்டி சம்மதம் சொல்வாள்.

அப்படி பழங்காலத்திலேயே நாம் நிற்க வேண்டும் என்றால், நவீன சமூக ஊடகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு, குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் கையால் எழுதப்பட்ட கடிதங்களை ஏன் எழுத தொடங்கக்கூடாது?

பெண்கள் எல்லா இடங்களிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் விமர்சிக்கப்படுகிறார்கள், உணர்வுகளால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். அவமதிக்கப்படுகிறார்கள். உரிமைகளை விட்டுக் கொடுக்கிறார்கள். இதுதான் பெண்களுக்கு பாரம்பரியம் தரும் பரிசா?"

இடையில் பேச வந்த அன்னம்மாளை தடுத்து தான் பார்த்துக் கொள்வதாக தலையசைத்தார் பெருமாள்.

" பாரம்பரியம் தரும் சவால்களை எல்லாம் பெண்கள் எளிதாக கடந்து விடுவார்களே. அதுவும் எனது மகள்..." என்று ஆதுரமாய் ஜேபியின் தலையை ஆதரமாய் தடவிக் கொடுத்தார் பெருமாள்.

"உடல்ரீதியான சவால்கள் தவிர, சில உணர்வுரீதியான சவால்களும் தாக்கினால் எந்த ஒரு பெண்ணும் நிலை குலைந்து போவாளே. அப்படி ஒரு திருமணம் தேவையா? நிச்சயம் உங்கள் பெண்ணுக்கு தேவையா? சொல்லுங்கள் அப்பா!" என்றாள் தீவிரக் குரலில் ஜேபி.

"திருமணம் வேண்டாம் என்கிற உன் முடிவு இப்பொழுது முற்போக்கு சிந்தனையாகவும், உன்னை தைரியமானவள் என்றும் காட்டலாம். அது எனக்கு பெருமையாகவும் இருக்கலாம். ஆனால் அது சமூகத்திற்கு மட்டுமே.

ஒரு சாதாரண தகப்பனான எனக்கு, திருமணம் வேண்டாம் என்கிற உன் முடிவு மன அழுத்தத்தை தருகிறது. ஒரு தாயின் ஸ்தானத்தில் உன்னை வளர்க்கவில்லையோ என்ற குற்ற உணர்வை உருவாக்குகிறது.

தனிமை மிகவும் கொடிய நோய். எந்தன் தனிமை போக்க வரமாய் வந்தவள் நீ. இந்த பூமியை விட்டு நான் பிரியும் போது மீண்டும் உன்னை தனிமையில் தள்ள என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

வசீகரனை வேண்டாம் என்று சொன்னால் கூட என்னால் ஒத்துக் கொள்ள முடியும். ஆனால் திருமணமே வேண்டாம் என்று நீ கூறினால், ஒரு தகப்பனாக என் கடமையை சரிவரச் செய்யாத மனிதனாக என் ஆத்மா நிறைவில்லாமல் இந்த உலகை விட்டு வெளியேறும்" என்றார் கண்களை மூடி.

தன் தந்தையின் கண்ணீர் தன் கன்னங்களில் பட்டுத்தெரிப்பதை உணர்ந்தவள், தன் உணர்வுகளை உள்ளே புதைத்துக் கொண்டு, "என் தந்தைக்கு எந்த ஒரு குற்ற உணர்வையும் மகளாய் தர மாட்டேன். அப்பா! என்னை புரிந்து கொள்வீர்கள் தானே!" என்றாள் பரிதவிப்புடன்.

" கல்யாணத்துக்கு சரி என்று ஒரு வார்த்தையில் பேசாமல் அப்பாவும் மகளும் சேர்ந்து பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு மனதில் பாரத்துடன் நகர்ந்தார் அன்னம்மாள்.

இரவின் தனிமையில் தன் மனதோடு போராடிக் கொண்டிருந்தாள் ஜேபி.

நடந்த நிகழ்வுகளை ஒன்றன்பின் ஒன்றாக தொகுத்துக் கொண்டிருந்தவள், மங்கி பிரதர்ஸ் தன்னை கலகலப்பாக மாற்ற செய்த குறும்புகள் நினைவிற்கு வர சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்ததில் மலர்ந்த முகத்துடன் உறக்கத்தை தழுவினாள்.

மறுநாள் அலுவலகத்தில் வசீகரனின் அறைக்குள் அதிரடியாக நுழைந்த ஜேபி, "உங்களிடம் பேச வேண்டும்" என்றாள் நேரடியாக.

இதழ் சுமந்த புன்னகையுடன் எதிரில் இருந்த இருக்கையை காட்டினான்.


தோரணையாக அமர்ந்து கொண்டவள், " உங்களைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம்" என்றாள்.

வியப்பில் புருவங்களை உயர்த்தி, சிரிக்கத் துடித்த இதழ்களை விரல்கள் கொண்டு லாவகமாய் மறைத்தான்.

"இந்தத் திருமணம் அக்ரீமெண்ட் திருமணமாக இருக்க வேண்டும் என்னுடைய நிபந்தனைகளுடன். உங்களுக்கு சம்மதமா?" என்றாள் "ஆப்ரேஷன் வசீ" என்ற அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து.


சிறகுகள் நீளும்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஜே பி யின் அப்பா சரியான வார்த்தைகளால் அவளின் பிடிவாதத்தை தளர்த்திட்டாரு ஆனால் வசிக்கு என்ன கதியோ 😁👍😁😁
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஆப்ரேஷன் வசீ 😎😎😎 வெல்வது யாரோ 🤔🤔🤔