• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 13

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 13


" உனது நிபந்தனையை கேட்க ஆவலோடு இருக்கிறேன்" என்றான் வசீகரன் முகம் சுமந்த புன்னகையுடன்.

" நிபந்தனையா? மிஸ்டர் வசீகரன் உங்களை கொஞ்சம் திருத்திக் கொள்ளுங்கள். அவை நிபந்தனைகள்" என்றாள்.

வசீகரனின் புருவங்கள் உயர்ந்து, அவளைப் பாராட்டியது.

"இந்தக் கிண்டல் எல்லாம் என்னிடம் வேண்டாம். எக்காரணம் கொண்டும் ஜெயலட்சுமி பெருமாள் என்ற என் அடையாளத்தை நான் விட்டுத் தர மாட்டேன். மாற்றிக் கொள்ளவும் மாட்டேன்.

இந்தத் திருமணம் என் சுயமரியாதையை சோதித்தால் பாதிப்பு உங்களுக்குத்தான்.

திருமணம் முடிந்த பிறகும், நான் என் தந்தையுடன், எங்கள் வீட்டில்தான் இருப்பேன். சரியாக ஒரு வருடம் முடிந்த பிறகு, இந்த திருமணம் எனக்கு நம்பிக்கை தராவிட்டால், நாம் பிரிந்து விட வேண்டும். நிச்சயம் நம்பிக்கை தராது என்பது எனது உறுதியான எண்ணம்.

என் தந்தையின் அன்பை மீறி வேறு ஒருவரின் அன்பு என்னை அசைக்காது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அதனால் எதிர்கால காதல் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.

இந்தத் திருமணம் மூலம் நம்முடைய அடையாளம் கணவன், மனைவி என்று மாறிவிட்டாலும் என்னை பொறுத்தவரை நீங்கள் மிஸ்டர் வசீகரன் தான். உங்களைப் பொறுத்தவரை நான் மிஸ் ஜெயலட்சுமி பெருமாள் தான்.

நாம் நட்பாய் பழகுவதற்கு எந்த தடையும் இல்லை. அந்த எல்லையைத் தாண்டி உங்கள் எண்ணங்கள் எங்கேயும் பயணம் செய்யக்கூடாது.

என்னுடைய தந்தையின் ஆசைக்காக, சரியாக ஒரே ஒரு வருடம் மட்டுமே இந்த திருமண பந்தம். அதன்பின் அவரவர் பாதையில் அவரவர் பிரிந்து சென்றுவிட வேண்டும்.

உறவைக் காரணம் காட்டி மிரட்டவோ பணிய வைக்கவோ முயற்சி செய்யக் கூடாது.

முக்கியமாக இந்த அக்ரீமெண்ட் திருமணம் பற்றி வெளியில் மூச்சு விடக் கூடாது. உங்களை பொய் சொல்லச் சொல்லவில்லை. உண்மையை மறைக்கத்தான் சொல்கிறேன்.

இப்பொழுது சொல்லுங்கள். இந்த பொம்மைக் கல்யாணத்தில் உங்களுக்கு சம்மதமா?" என்றாள் ஜேபி.

" நடக்கும். ஆனால் நடக்காது. அப்படித்தானே" என்றான் குறும்புடன்.

" ஆமாம் நான் சொன்னபடி நடக்கவில்லை என்றால் இந்த திருமணம் நடக்காது" என்றாள் வீம்புடன்.

" ஒருவேளை இந்த ஒரு வருடத்தில் என் மீது உனக்கு காதல் வந்து விட்டால் உன் முடிவுகளில் மாற்றம் வருமா?"

கவிதை வரிகளின் காதலில் கண்மூடி ஒரு நிமிடம் லயித்தவள், " மாற்றமா? என்றும் உங்களுக்கு ஏமாற்றம் தான். உங்கள் மீதான காதலுக்கு வாய்ப்பே இல்லை" என்றாள் அழுத்தத்துடன்.

'உன் காதலின் முகவரியே நான்தானே!' என்று மனதோடு நினைத்தவன், "ம்... பார்க்கலாம். உன்னுடைய நிபந்தனைகள் எல்லாம் இந்த வசீகரனுக்கு மட்டும்தானா...?"

" ஹலோ ஒரே ஒரு வாய்ப்பு தான். என் வீடு தேடி வந்து கெஞ்சிக் கதறும் போது, பிழைத்துப் போகட்டும் என்று நானாகப் பார்த்து தந்த வாய்ப்பு தான் இது" என்றாள் அசட்டையாக.

" அது சரி. நம் கல்யாணத்திற்கு பிறகு டச்சிங் டச்சிங், கிஸ்ஸிங் கிஸ்ஸிங் சீன் எல்லாம் உண்டா?" என்றான் குறும்பாக.

அவனை முறைத்துப் பார்த்தவள், பின் சிரித்துக் கொண்டு, "வசீகரன் சார், என் தந்தையின் ஆசை, உங்களின் ஆசை, என் ஆசை என்று நான் அனைத்தையும் யோசித்து கண்டுபிடித்த இந்த திருமணத்தில் நீங்கள் கேட்ட காட்சிகள் எல்லாம் நிச்சயம் இடம் பெறாது. அவையெல்லாம் உங்களின் வீண் கற்பனைகள். நினைவில் கொள்ளுங்கள்" என்றாள்.

" இந்த ஒரு வருடம் சென்ற பிறகு, நமது திருமணம், ஒரு ஒப்பந்த திருமணம் என்று தெரிந்த பின், நம் முடிவு சாரி, உன் முடிவு, உன் தந்தைக்கு வருத்தமாக இருக்காதா? அவருடைய ஆசையின் ஆயுட்காலம் ஒரு வருடம் தானா?"

" நான் திருமணத்தை வேண்டாம் என்று வெறுக்க, அவருக்கு என்னை சரியாக வளர்க்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சி பெருகிக்கொண்டே இருக்கிறது. இந்த திருமணத்தின் மூலம் அவருடைய குற்ற உணர்ச்சியை போக்குவேன். கிடைக்கும் இந்த ஒரு வருடத்தில், எத்தனை உறவுகள் வந்தாலும், எந்தன் உண்மையான உறவே என் தந்தை தான் என்பதை நன்றாக அவர் மனதில் பதிய வைத்து விடுவேன். மொத்தத்தில் அவரின் ஆசையை விட என் பாசமே உயர்ந்தது என்பதை நிரூபித்து விடுவேன்
திருமணம் என்ற ஒன்று நமக்கு சரி வராது என்பதை உங்களுக்கும் புரிய வைத்து விடுவேன். மூன்று லட்டு கண்ணா. மூன்று லட்டு"

"திருமணத்தின் அடிப்படையே புரிதல் தான். ஆனால் உன்னுடைய புரிதல் வேற லெவல் ஜேபி. உன்னுடைய திட்டங்கள், நிபந்தனைகள் எல்லாமே உன்னைச் சுற்றியே இருக்கிறதே.

இப்படிப்பட்ட திருமணம் எனக்கு ஏமாற்றமாக இருக்கும் என்று உனக்குத் தோணவில்லையா? "

" நான் வெற்றிலை பாக்கு வைத்து உங்களை அழைத்து வரவில்லை. நீங்கள் கேட்டீர்கள். நான் பதில் சொன்னேன் அவ்வளவுதான். திருமணம் என்ற ஒன்றையே வெறுக்கும் என்னிடம் வேறு எப்படிப்பட்ட நிபந்தனைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?

திருமணத்திற்காக நான் இந்த அளவு இறங்கி வந்தது கூட என் தந்தைக்காக மட்டுமே. அதில் இலவச இணைப்பாக உங்கள் விருப்பம்"

" நம் திருமணத்திற்கு பிறகு உன் தந்தை பேபி வேண்டும் என்று கேட்டால்.... " என்றான்.

" பேபியா...? கடவுளே... இந்தத் திட்டம் சரி வராது. நான் கிளம்புகிறேன்" என்று கோபமாக வெளியேறியவளை, "ஜேபி நில்!" என்ற வசீகரனின் குரல் தடுத்தது.

" ஜேபி உன்னுடன் தான் என் வாழ்க்கை என்று நான் தீர்மானித்து விட்டேன். நீ கூறிய அனைத்து நிபந்தனைகளுக்கும் முழு சம்மதம்.

ஆனால் உன்னுடைய இந்தத் திட்டம், நீ கூறிய நிபந்தனைகளோடு நிச்சயம் ஒரு நாள் உடைந்து தான் போகும்"

"வாவ்... என்ன ஒரு நம்பிக்கை?"

" என் மீது நான் கொண்ட நம்பிக்கையை விட உன் மீது நான் கொண்ட நம்பிக்கை தான் இது. உண்மையாகவே அந்த நிபந்தனைகளை உடைக்கப் போவதும் நீதான்"

"புரியவில்லை?"

"என் உண்மையான அன்பை நிராகரிக்கும் மனதிடம் உன்னிடம் கிடையாது"

" இது மாயை என்று உங்களுக்கு நான் புரிய வைப்பேன்"

" பார்க்கலாம்"

" நீ இப்படி முறைப்பாக இருந்தால், உன் மங்கி பிரதர்ஸ் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். நீ மாட்டிக் கொள்வாய் ஜேபி " என்று நகைத்தான்.

"என் உழைப்பை பார்த்த நீங்கள் என் நடிப்பையும் பார்ப்பீர்கள்"

"ஓகே" என்று தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

" என் சம்மதத்தை எங்கள் வீட்டில் கூறி விடுகிறேன். நீங்களும் உங்கள் வீட்டில் சொல்லி விடுங்கள். நம் திருமணத்திற்கு முன்பே அக்ரீமெண்ட் பேப்பரில் தெளிவாக எழுதி கையெழுத்திட்டு எனக்குத் தர வேண்டும்" என்றவளின் சொல்லுக்கு சரி என்பது போல் புன்னகையுடன் அவன் தலை அசைந்தது.

" நிரந்தரம் இல்லாத இந்த பந்தத்தில் இணைய வேண்டுமா நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். என் சம்மதத்தை நான் எங்கள் வீட்டில் கூறிய பிறகு என்னால் பின் வாங்க முடியாது" என்றாள் சிறிது தயக்கத்துடன்.

" எப்பொழுதும் நிமிர்வுடன் பேசும் ஜேபியின் முகத்தில் ஏன் இந்த பரிதவிப்பு? "

"ம்... க்கும்... நான் சுயநலமாக சிந்தித்து உங்கள் வாழ்வை வீணாக்குகிறேனோ என்ற ஒரு சிறு குற்ற உணர்வு" என்றாள் இறங்கிய குரலில்.

' நீ என்னிடம் சுயம் தொலைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை பெண்ணே!' என்று மனதோடு கொஞ்சியவன், " உன்னை பற்றி தெரியாத யாருடனோ இந்த ஒப்பந்தத்தை போடுவதை விட, உன்னை பற்றி தெரிந்த என்னோடு இந்த ஒப்பந்தம் என்பது உன் வரையில் சரிதான்.

விரும்பியே நான் இதை ஏற்றுக் கொள்ளும் போது, இந்த குற்ற உணர்வு உனக்குத் தேவையில்லை. என் ஜேபியின் அழகே அவள் நிமிர்வுதான்" என்றான் ரசிக்கும் குரலில்.

" கரெக்ட் சார் என் அப்பத்தாவும் இதைத்தான் சொல்வார்கள். அது உங்களுக்கு நூறு சதவீதம் பொருத்தமாக இருக்கிறது" என்றாள் சோகக் குரலில்.

"எதை?"

" தெரியாத பேயை விட, தெரிந்த பிசாசு எவ்வளவு மேல்" என்றாள் தலையை மேல் நோக்கி பார்த்தவாறு.

' இந்த பிசாசுக்கு ஏற்ற பிரம்ம ராட்சசி நீதானடி' என்று நினைத்தவன் உள்ளுக்குள் நகைத்து, வெளியில் அவளை முறைத்தான்.

வசீகரன் அறைக்குள் சென்ற ஜேபி வெளியே வராமல் இருப்பதைக் கண்டு, அவளுடைய நண்பர்கள் மூவரின் முகமும் யோசனையுடன் அவர்களின் அலுவல அறையையே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

"ஓகே ஜேபி, நம் இருவரின் சம்மதத்தையும், தனித்தனியாக சொல்லாமல் சேர்ந்தே நம் வீட்டில் சொல்லலாம்" என்றான் வசீகரன்.

"அதுவும் சரிதான். போடும் வேஷத்திற்கு பொருத்தமாக இருப்பது சிறப்பு தானே"

"ம்ஹூம்... வேஷம் உன்னிடம். பாசம் என்னிடம்"

" அப்போ ஓகே. உங்கள் பாசத்தை வைத்து பாயாசம் செய்திடலாம்" என்று கிண்டலாக சிரித்தாள்.

அவளுடன் இணைந்து சிரித்தபடி அறையில் இருந்து வெளியேறினான் வசீகரன்.

"டேய்... என்னடா இது ஒன்னுமே புரியல" என்றான் கிருஷ்.

" பலி கொடுக்கப் போகும் ஆடு சிரித்துக்கொண்டே போவதை பார்" என்று வசீகரனை காட்டி சிரித்தான் யாதவ்.

" பெண்களுக்கு வேண்டாம் என்றால் வேண்டும் என்று அர்த்தம். பிடிக்காது என்றால் பிடிக்கும் என்று அர்த்தம். இதில் நம் ஜேபி மற்றும் விதிவிலக்கா என்ன? " என்றான் மது.

அவர்கள் இருவரும் தங்களை நோக்கி வருவதைக் கண்டு சட்டென்று அமைதியாகினர் மங்கி பிரதர்ஸ்.

"ஹாய்... மச்சீஸ்" என்று அவர்களை நெருங்கினான் வசீகரன்.

"சார்... சாரி... மாப்ஸ்" உளறினான் கிருஷ்.

அவர்கள் தன்னைக் கண்டு தடுமாறுவதை உணர்ந்த வசீகரன் கண்களால் ஜேபியை பேச சொன்னான்.

சிறு பெருமூச்சுடன், "நான் வசீகரன் சாரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விட்டேன்" என்றாள் ஏற்றம் இறக்கம் இல்லாத குரலில்.

" ஓய் என்ன அடுத்த வாரம் மழை பெய்யும் என்று செய்தி வாசிப்பது போல் சொல்கிறாய். எங்களை ஏமாற்ற பார்க்கிறாயா?" என்று எகிறினான் கிருஷ்.

" ஜேபி. உன்னை யாரும் மிரட்டினார்களா?" வசீகரனை அர்த்தத்துடன் பார்த்தான் யாதவ்.

" ஜேபி எதுவும் பிரச்சனையா? " என்று படபடத்தான் மது. ஜேபி ஒன்றை நினைத்த பின் அதனை மாற்றுவது இயலாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். நேற்று தங்களிடம் வேண்டாம் என்று கூறிவிட்டு மறுநாளே சம்மதம் தெரிவிக்கும் அவளை நம்ப இயலாது பார்த்தான்.

ஜேபியை வைத்துக்கொண்டு கதையாகாது என்பதை புரிந்து கொண்ட வசீகரன், ஜேபியின் தோளில் தன் கைகளை போட்டுக்கொண்டு, "ஹலோ... உங்களுடைய கற்பனைகள் எல்லாம் ஜெட் வேகத்தில் பறக்கிறது. என்னதான் தைரியமான பெண்ணாக இருந்தாலும், கல்யாணம் என்றதும் சிறு படபடப்பில் அப்படி பேசி விட்டாள். அப்பப்பா அதற்குள் எத்தனை பேச்சுக்கள் உங்களிடம்.
எங்களின் திருமண முடிவை முதலில் உங்களிடம் தான் அறிவித்து இருக்கிறோம். இனிமேல் தான் இருவர் வீட்டிலும் சொல்ல வேண்டும்" என்று கையில் அணிந்திருந்த கடிகாரத்தை பார்த்துக் கொண்டே, " சாரி பாய்ஸ். நாங்கள் கிளம்புகிறோம் " என்று இறுகி நின்ற ஜேபியின் தோள்களை பற்றியவாறே வெளியே இழுத்துச் சென்றான்.

நண்பர்களிடம் பொய் சொல்ல முடியாமல் தவித்தவளும் அவனுடைய இழுப்பிற்கு இசைந்து சென்றாள்.

" டேய் எப்படிடா ஒரே நாளில் நம் ஜேபியின் தோளில் கை போட்டுக் கொண்டு செல்கிறார்" ஆச்சரியப்பட்டான் கிருஷ்.

"ஹான்... தேன் பாட்டிலுக்குள் கையை விட்டவன் வாயில் வைக்காமல் டவுசர்லயா துடைப்பான். போடா டேய்.. நம் ஜேபி சந்தோஷமாய் இருந்தால் அதுவே நமக்கு போதும்டா" என்றான் யாதவ்.

" இல்லடா எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தேகமா இருக்கு " என்றான் மது.

"ஹலோ... போதும் நிறுத்துங்க. நம்ம ஜேபி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதற்கு பார்ட்டி கொண்டாடலாம்" என்றான் கிருஷ்.

காரில் அமர்ந்ததும் தோளில் கையை போட்டதற்கு சரமாரியாக திட்டத் தொடங்கினாள் ஜேபி.

சுட்டு விரலை காதில் குடைந்து கொண்டு, " பெரிய நடிகயர் திலகம் சாவித்திரி மாதிரி நன்றாக நடிப்பேன் என்று சொல்லிவிட்டு, உன் பிரெண்ட்ஸ் முன்னாடி தோற்றுவிடப் பார்த்தாய். நல்ல வேலை நான் உன் தோளில் கையைப் போட்டு சமாளித்தேன். இல்லையென்றால் உன் குட்டு உடைந்து அரை மணி நேரம் ஆகி இருக்கும். ஐயாவின் சாமர்த்தியத்தை பாராட்டாவிட்டாலும் போகிறது. கொஞ்சம் திட்டாமல் வா " என்றான் இலகுவாக.

சட்டென்று அமைதியானவள், "எதற்கும் முதல் முறை என்று உண்டுதானே " என்றாள்.

" பரவாயில்லை ஜேபி நீ எத்தனை முறை தப்பு செய்தாலும் அதை சரி செய்யத்தான் நான் இருக்கிறேனே. உன்னை தப்பு செய்யாமலும் தடுத்து விடுவேன்" என்று அவளின் மீது அர்த்தம் பொதிந்த தன் பார்வையை பதித்தான்.

நடக்கும் சூழ்நிலையோடு இயல்பாகப் பொருந்த முடியாதவள் கண்ணை மூடி சீட்டில் சரிந்தாள்.

'இனி உன் நிழல் கூட என் அனுமதி கேட்டு தான் நகர வேண்டும்' என்று மனதோடு நினைத்தவன் ஆசையாக அவளைப் பார்த்தான்.

ஜேபியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவளுடைய வீட்டிற்கு முதலில் சென்றான் வசீகரன்.

தந்தையை ஏமாற்றுகிறோமோ என்று சிறு குறுகுறுப்புடன் தயங்கினாள் ஜேபி.

" வாங்க மாப்பிள்ளை... வெல்கம் ஹோமு. ரைஸா மை நேமு" ஆர்ப்பாட்டமாய் வரவேற்றார் அன்னம்மாள் பாட்டி.

"ஹான்... சாப்பிடறதுக்கு வெச்சிருப்பாங்க பிரட் ஜாமு" என்று தன் பாட்டியை முறைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள் ஜேபி.

"ஹாய்! கிரான்மா. உங்கள் பேத்தி எப்பொழுதுமே இப்படித்தானா? உங்களுடைய பேத்தி என்றால் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது. உங்கள் அழகில் பாதி கூட இல்லையே" என்றதும் செட்டு பல் மினுங்க சிரித்தார் அன்னம்மாள்.

" இருவரும் சேர்ந்து வந்திருக்கிறீர்களே நல்ல செய்தி சொல்லத்தானே " என்றார் அன்னம்மாள் ஆர்வத்துடன்.

ஜேபியுடன் பெருமாளும் வந்துவிடவே, வசீகரன் தங்கள் சம்மதத்தை அவர்களுக்கு தெரிவித்தான்.

பெருமாள் கண்கலங்கத் தன் மகளைப் பார்த்தார். தன் தந்தையின் புதிய பரிமாணத்தை ஆச்சரியமாய் பார்த்தாள் ஜேபி. அவரின் சந்தோஷத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற முடிவில் திடமாய் நின்றாள்.

" கண்ணம்மா உனக்கு சம்மதம் தானே? உனக்கு மாப்பிள்ளை பிடித்திருக்கிறது தானே?" என்றார்.

பொய் சொல்லத் தவித்த ஜேபி, "போங்கப்பா... " என்று கூறிவிட்டு தன்னறைக்குள் புகுந்து கதவடைத்துக் கொண்டாள் ஆசுவாசமாய் .

" அம்மா என் மகளுக்கு கூட வெட்கம் பார்த்தீர்களா? " என்றார் பெருமாள்.

" மாப்பிள்ளை நின்று கொண்டிருக்கும்போது மரியாதை இல்லாமல் ஓடுகிறாள். அவ கெடக்கா. தங்கம், தங்கம்மா அள்ளிக் கொடுத்தாலும் சுமக்கிற கழுதைக்கு அது தெரியாது. இல்லையா தம்பி" என்று வசீகரனையும் தனக்கு துணைக்கு அழைத்தார்.

" எப்படி இப்படி டைமிங்ல பேசுறீங்க. எனக்கு உங்க பேத்தி ஜேபியை விட உங்களைத்தான் ரொம்ப பிடிச்சிருக்கு" என்று வசீகரன் கூறியதும் உச்சி குளிர்ந்தார் அன்னம்மாள்.

" ஏய் ஜெயா புள்ள! மாப்பிள்ளை தம்பிக்கு காப்பி எடுத்துட்டு வா" என்று அதிகாரமாய் கூப்பிட்டார்.

கதவைத் திறந்து விறுவிறுவென வெளியே வந்த ஜேபி, " அப்பா நாங்கள் இருவரும், அத்தை மாமாவிடம் எங்கள் சம்மதத்தை கூறி விட்டு வருகிறோம் " என்று கூறி வசீகரனின் கரத்தைப் பிடித்துக் கொண்டு விறுவிறுவென வெளியேறினாள்.

தன் கையோடு பிணைந்திருந்த ஜேபியின் கையை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டு அவளுடன் நகர்ந்தான்.

" அடி ஆத்தி இன்னும் கல்யாணத்துக்கு எவ்வளவு நாள் இருக்கோ? இப்படி மாப்பிள்ளை கைய புடிச்சுகிட்டு ஓடுறா. குத்தாலத்துக்கு குளிக்கப் போறவன் கும்பகோணம் வந்தவுடனே துணி அவுத்த கதையால இருக்கு" என்று பெருமாளிடம் நொடித்துப் பேச, கைகோர்த்து செல்லும் தன் மகனையும் வருங்கால மருமகனையும் கண் நிறையப் பார்த்தார் அவர்.

சிறகுகள் நீளும்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அதிரடி ஆரம்பம், ஆனால் பாவம் பெருமாள் சார்🥺🥺🥺