• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 14

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 14

வசீகரனோடு அவன் வீட்டிற்குள் நுழைந்தவளின் மனதில் ஏகப்பட்ட முரண்கள் முரண்டியது. இந்த நிரந்தரம் இல்லாத உறவில் அனைவரையும் பிணைத்து ஏமாற்றும் நிலையை அறவே வெறுத்தாள்.

தன் அருகில் நின்றிருந்த வசீகரனை பார்த்தாள். மலர்ந்த முகத்துடன், சாதனை புரிந்திட்ட சிரிப்புடன் மகிழ்ச்சியின் உருவாய் நிற்பவனைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.

'தன் அன்பு கூட முழுவதுமாய் கிடைக்காத இந்த திருமணத்தில் இவனுக்கு இவ்வளவு ஆனந்தமா? நிச்சயம் இந்த திருமணத்தின் பிரிவு இவனுக்கு வேதனையைத் தரும்' என்று அவனுக்காய் வருந்தினாள்.

தினகரனும், வசுமதியும் தங்கள் வீட்டு திருமகளை நிறைவாய் வரவேற்றனர்.

" கடைசியில் நீ நினைத்ததை சாதித்து விட்டாய் வசீ!" என்று வசுமதி வசீகரனை கிண்டலடித்தார்.

தன் அன்னைக்கு கண்களால் சமிக்கை செய்து கெஞ்சுவது போல் பாவனை செய்த வசீகரன், " என் அம்மா எப்பவுமே இப்படித்தான். ரொம்ப ஜாலி டைப். எல்லோரையும் தன் அன்பால் மாற்றி விடுவார்கள்" என்றான் ஜேபியிடம்.

"ஓ..." குழப்பத்தில் இருந்தவள் சரியாக கவனிக்காமல் எளிதாக அதனைக் கடந்தாள்.

தன் வீட்டை சுற்றிக் காட்டி விட்டு, தோட்டத்திற்கு அழைத்து வந்த வசீகரன், "பிடித்திருக்கிறதா?" என்றான்.

"ம்..." என்றாள் தோட்டத்தின் அழகில் மயங்கி.

"ம்க்கும்..." என்று தன் தொண்டையை செருமிக் கொண்டவன், "நான் என்னை பிடித்திருக்கிறதா? என்று கேட்டேன்" என்றான் மென்மையாக.

" பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன செய்வதாக உத்தேசம்? ப்ளீஸ் வசீகரன். நான் ஏதோ பெரிய தவறை செய்வதுபோல் என் உள்ளம் என்னை எச்சரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த திருமணப் பேச்சை இத்தோடு நிறுத்தி விடலாமா? " என்றாள்.

" அடடா எந்த ஒரு முடிவையும் அசால்ட்டாக எடுத்து அதில் உறுதியாக நிற்கும் ஜேபியா இப்படி பேசுவது? உன் தந்தைக்கு என்ன பதில் சொல்வாய் ஜேபி?" என்றான் அவளை உற்று நோக்கி.

அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

அவள் முன் வந்து நின்றவன், குனிந்திருந்த அவள் தலையை அவளின் நாடியை பற்றி நிமிர்த்தினான்.

தன் கை கொண்டு அவன் கையைத் தட்டி விடப் பார்த்தவள், "ஜேபி..." என்றவனின் மாயக் குரலில் கட்டுப்பட்டு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

"என் மீது நம்பிக்கை வைப்பாயா? நான் பார்த்துக் கொள்கிறேன். சரிதானே?" என்றான்.

அவன் கண்ணில் கரை புரண்டு ஓடிய காதலில் திகைத்தவளின் தலை மேலும் கீழும் அசைந்து தன் நம்பிக்கையை தெரிவித்தது அவளையும் மீறி.

தவிக்கும் அவளை கட்டியணைத்து ஆறுதல் கூற மனம் முழுவதும் துடித்தாலும், ஜேபி என்ற இறுகிய கற்பாறைக்குள் ஒளிந்திருக்கும் அழகிய சிற்பத்தை வெளியே கொண்டு வருவது தனக்கு சவாலான விஷயம் என்று புரிந்தவன், "ஈஸி பேபி..." என்று கூறி தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

வசுமதி அவர்களின் சம்மதத்தை கொண்டாடும் விதமாக, நெய் மணக்கும் கேசரி செய்து அனைவருக்கும் பரிமாறினார்.

தினகரன் ஜேபியின் அருகில் வந்து, " வசீகரன் என் மகன் என்பதற்காக நான் சொல்லவில்லை. படிப்பையும் தொழிலையும் தவிர அவன் கவனம் எங்கும் எப்பொழுதும் சிதறியது இல்லை. அவனுடைய அதிகபட்ச ஆசையே அவைகள் தான்.

அவனுடைய தேர்வுகள் எப்பொழுதும் நேர்த்தியாக இருக்கும்.

அவன் உன்னை பிடித்து இருக்கிறது என்று கூறிய ஒரே காரணத்திற்காகவே உன்னை எங்களுக்கும் ரொம்ப பிடித்திருக்கிறது. நீ மிகவும் கலகலப்பானவள் என்று வசீகரன் சொல்லி இருந்தான்.

எங்கள் வீட்டில் குடி கொண்டிருக்கும் அமைதியை நிறைத்து எங்கள் மனதிலும் அமைதியை நிறைப்பாய் என்று நம்புகிறோம். அப்படித்தானே? " என்றார்.

தன்னால் இந்த குடும்பத்தின் அமைதி என்றும் குறையக்கூடாது என்று இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டவள், தினகரனைப் பார்த்து சிரித்தாள்.

" நீ எப்பொழுது எங்கள் வீட்டிற்கு வருவாய் என்று இருக்கிறது" என்று தன் மனதின் ஆசையை ஜேபியிடம் பகிர்ந்தார் வசுமதி.

அவர்களின் அன்பென்னும் சுழலுக்குள் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தவள், " சார் நாம் கிளம்பலாம்" என்றாள் பதட்டத்துடன்.

" இனியும் என்ன சார்? இனி உனக்கு அவன் முதலாளி அல்ல. நீதான் அவனுக்கு எஜமானி. அவனை நீ வாடா போடா என்று அழைத்தாலும் நாங்கள் உன்னை குறை சொல்ல மாட்டோம்" என்று கூறி சிரித்தார் வசுமதி.

" ஓகே ஆன்ட்டி. வசீ வாடா போகலாம் " என்றாள் சட்டென்று.

அவளைப் பற்றி சரியாகத் தெரியாத தன் அன்னையை செல்லமாக முறைத்த வசீகரன், சிரித்துக் கொண்டே ஜேபியுடன் வெளியேறினான்.

அமைதியாக சென்று கொண்டிருந்த அவர்களது கார் பயணத்தை ஜேபியின் குரல் கலைத்தது.

" அத்தையும் மாமாவும் நான் திருமணத்திற்குப் பிறகு இங்கேயே தங்கி விடுவேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் " என்று பெருமூச்சுடன் சொன்னாள் ஜேபி.

தன் பெற்றோர்களை அத்தை மாமா என்று அவள் இயல்பாக ஏற்றுக் கொண்டதை உணர்ந்தவன், " இங்கே வராமலும் இருக்க மாட்டோம் தானே? அதில் ஏதும் உனக்கு பிரச்சனையா?" என்றான்.

'இல்லை' என்று மறுப்பாக அவள் தலை அசைந்தது.

அவனது அலைபேசியில் சில மெசேஜ்களை டைப் செய்து விட்டு, ஒரு பெரிய ஹோட்டலுக்குள் காரினை செலுத்தினான்.

கார் நின்றதும் சுற்றுப்புறத்தை உணர்ந்தவள், " இப்பொழுது எதற்காக ஹோட்டலுக்குள் வந்திருக்கிறோம்? " என்றாள் சற்று கடுப்புடன்.

" இந்த ஹோட்டலில் ஹனிமூன் சூட் சூப்பராக இருக்கும் என்று என் நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். நம் திருமணத்திற்கு புக் செய்வதற்காக வந்திருக்கிறோம்" என்றான்.

அவனை திட்டுவதற்காக வாயை திறந்தவள் அவன் கண்களில் மிதந்த கேலியைக் கண்டு, " வேண்டாம் வசீ. ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்கள் விளையாட்டு வினையாய் முடியும்" என்று கோபத்துடன் ஆரம்பித்தவள் அவன் சிரிப்பில் தன் கோபத்தை கைவிட்டு அவனோடு சிரிக்க ஆரம்பித்தாள்.

அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட உணவு மேஜையில் அமர்ந்து கொண்டு எந்த உணவையும் ஆர்டர் செய்யாமல் தன் கைகடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

" யாரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? " சற்றே எரிச்சலான குரலில்.

" என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் வரேன்னு சொல்லி இருந்தாங்க. வெயிட் பண்ணலாமே!" என்றான்.

' கேர்ள் பிரண்டா?' அவளின் உள் மனம் கேள்வி எழுப்பினாலும், 'உனக்கென்ன?' என்று பதில் தந்து அதனை தட்டி வைத்தாள்.

சிறிது நேரத்தில் உள்ளே வந்தவரைக் கண்டு விழி விரித்தாள்.

பாட்ஷா பட ரேஞ்சில், அன்னம்மாள் பாட்டி முன்னே வர அவரின் நண்பர் பட்டாளம் ஆரவாரமாய் பின்னே வந்தது.

" இவங்க உங்களுக்கும் பிரண்டா? எப்படி சார்?" என்றாள் பரிதாபமாக.

" இன்றைக்கு காலையிலிருந்து தான் " என்றான்.

"ஹாய்! வசீ! எம் ஜி ஆர் யூ!" என்றார் அன்னம்மாள்.

" பேபி அது எம்ஜிஆர் யூ இல்லை ஹவ் ஆர் யூ" என்று அவர் காதில் சொன்னான் கிருஷ்.

" அது ஒன்றும் இல்லை. வரும்போது உங்கள் கல்யாண விஷயத்தை யோசித்துக் கொண்டே வந்தபோது, என் கல்யாண விஷயமும் ஞாபகத்திற்கு வந்தது. அதான் டக்குனு அவர் பெயர் வாயில் வந்து விட்டது" என்றார் அன்னம்மாள் கெத்தாக.

" எம்ஜிஆருக்கும் உங்கள் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் பேபி? " என்றான் யாதவ்.

"அது... அது..." என்று வெட்கத்துடன் இழுத்தார் அன்னம்மாள்.

" அப்பத்தா அதை சொல்ல வேண்டாம். வேண்டாம்" என்று திடீரென்று பொங்கினாள் ஜேபி.

சுவாரசியம் மிக, " நீங்க சொல்லுங்க டார்லிங்" என்றான் வசீகரன்.


"அது. எங்க அப்பா ஒரு எம்ஜிஆர் ரசிகர். என்னை கட்டிக் கொடுத்தால் எம்ஜிஆருக்கு தான் கட்டிக் கொடுப்பேன் என்று ஒத்தைக் காலில் நின்றார்.

என் ஜாதகத்தை எல்லாம் எம்ஜிஆர்க்கு அனுப்பி வைத்தார். பதிலுக்கு எம்ஜிஆர் அவர் கையெழுத்துப் போட்ட போட்டோவை எங்களுக்கு அனுப்பி வைத்தார்.

நேரம் காலம் பார்த்து எங்க அப்பா மாப்பிள்ளை பார்க்க போவதற்குள், இவங்க தாத்தா வந்து என்னை கட்டிக் கொண்டார்" என்று வெட்கப்பட்டு சிரித்தார் அன்னம்மாள்.

"எப்புறா....?" என்று கிருஷ் யாதவ் காதில் கடித்தான்.

" டேய் இவங்க அனுப்பிச்ச லெட்டர படிச்சு பாக்காம, ரசிகர்கள் கடிதம் என்று நினைத்து பதிலுக்கு போட்டோ அனுப்பி வைத்து இருப்பார்கள். ஆனாலும் நம்ம ரைஸாவுக்கு கொஞ்சம் நினைப்பு ஜாஸ்தி தான்" என்றான் யாதவ்.

ஜேபியோ தலையில் கைகளை வைத்துக்கொண்டு மேஜையில் குனிந்து கொண்டாள்.

"ஏய்... நீ ஏன்டி தலை குனிஞ்சு கிடக்க? நானே அதை எல்லாம் கஷ்டப்பட்டு கடந்து வந்து விட்டேன். அவருக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். இன்றைக்கு ஏதோ பழைய நினைப்புல..." என்றவரை கோபத்துடன் நோக்கி ஒரு விரல் நீட்டி எச்சரிக்கை செய்தாள்.

"சரி.... சரி.... கூல்" என்று இருவரையும் சமாதானப்படுத்தினான் வசீகரன்.

அவரவர்களுக்கு விருப்பப்பட்ட உணவை ஆர்டர் செய்ய ஆரம்பித்தனர்.

ரொம்ப நேரமாக மெனு கார்டை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அன்னம்மாள்.

சர்வர் பணிவாக அவரிடம் குனிந்து, "மேடம் யுவர் ஆர்டர் ப்ளீஸ்" என்றதும், "டூ ஃபிளவரி " என்றார் கெத்தாக.

சர்வர் மட்டுமல்ல சுற்றி இருந்த அவர்கள் கூட்டமும் புரியாமல் அவரைப் பார்த்தது.

"மேம்... நீங்கள் ஆர்டர் செய்த டிஷ்...?" என்று பரிதாபமாக இழுத்தான் அந்த சர்வர்.

" எவ்வளவு நாளாக இங்கே வேலை பார்க்கிறாய்? " என்று கெத்தாக கேட்டார் அன்னம்மாள்.


" ஐந்து வருடம் " என்றான் பெருமையாக அந்த சர்வர்.

" இவ்வளவு வருடம் இவ்வளவு பெரிய ஹோட்டலில் வேலை பார்க்கிறாய். நான் சொன்ன ஃபிளவரி என்ன என்று உனக்குத் தெரியவில்லையா? உனக்கு இந்தச் சின்ன இங்கிலீஷ் கூட தெரியாதா? " என்றார் கோபமான குரலில்.

" நிஜமாகவே எனக்கு தெரியவில்லை மேம்" என்றான் பணிவாக.

"டேய்... எல்லாரும் உங்க நெஞ்ச பத்திரமா பிடிச்சுக்கோங்கடா. இப்போ நம்ம ரைஸா பேபி சொல்லப்போற பதில்ல யார் யாரு நெஞ்செல்லாம் வெடிக்க போகுதுன்னு தெரியல" என்றான் கிருஷ்.

" ஃபிளவர் என்றால் என்ன?" என்றார் அன்னம்மாள்.

"பூ " என்றான் சர்வர்.

" அப்போ ஃபிளவரி? "

"பூரியா?" என்றான் அதிர்ந்த குரலில்.

" அட போப்பா. உனக்கு விளக்கம் சொல்லியே நான் களைத்துப் போய் விட்டேன். அப்படியே ஒரு ஒயிட் மூன் ஐஸ்கிரீம் கொண்டு வந்துடு" என்றார்.

"மேடம்..." விட்டால் அழுது விடுவான் போல இருந்தான்.

"சார், வெண்ணிலா ஐஸ்கிரீம் கேட்கிறார்கள் " என்று பற்களை கடித்துக் கொண்டே பதில் சொன்னாள் ஜேபி.

சுற்றி இருந்தவர்கள் தங்கள் சிரிப்பை அடக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்.

" டேய் ஏன்டா பாட்டியை இங்க கூட்டிட்டு வந்தீங்க? " அடிக்குரலில் தன் நண்பர்களிடம் சீறினாள் ஜேபி.

"பேய் கூட டான்ஸ் ஆட பயந்தவனுக்கு பிசாசு கூட ஃபர்ஸ்ட் நைட்டாம்.

சார் திட்டுவார்னு பயந்துட்டு கூட்டிட்டு வந்தா, இங்க நீ வந்து திட்டுற. இதெல்லாம் சரி இல்லை ஜேபி" என்றான் யாதவ்.

" சூப்பர் ரா " என்றான் கிருஷ்.

" எதுடா? " என்றான் யாதவ்.

" பழமொழி" என்று கூறி கண்ணடித்தான் கிருஷ்.

" சும்மா விளையாட்டை நிறுத்துங்கடா. ஜேபி, சார் தான் நம்ம எல்லாருக்கும் ட்ரீட் தருவதாய் சொல்லி வரச் சொன்னாரு" என்றான் மது.

ரைஸா பேபியின் விடாத அட்டகாசத்துடன் அந்த ஹோட்டல் களை கட்டியது.

அந்தப் பாசக் கூட்டிற்குள் தானும் நுழைந்ததை எண்ணி மகிழ்ந்தான் வசீகரன்.

மட மடவென கல்யாண வேலைகள் நடந்தேறியது. அலுவலகமே ஜேபியை பொறாமையாய் பார்த்தது.

கேண்டினில் அமர்ந்து கொண்டு ஜேபியை தவறாக சித்தரித்து பேசிய நபர்களுக்கு எல்லாம் மங்கி பிரதர்ஸின் கைங்கரியத்தால் பதிலடி கொடுக்கப்பட்டது.

சிரிப்பிற்கும், சந்தோஷத்திற்கும், குழப்பத்திற்கும் இடையே திருமண நாளும் அழகாய் விடிந்தது.

திருமண மண்டபத்தின் பால்கனியிலிருந்து விடியலை ரசித்தவள், அறையின் உள்ளே நுழைந்ததும் அவள் அலைபேசி ஒளிர்ந்தது.

" கடக்கும் ஒவ்வொரு நொடிகளும் அழகானது!
உன் நினைவுகளுடன் உரசிக் கொண்டே இருப்பதால்...

நீ தொலைதூரம் சென்றால்
நான் தொலைந்து விடுவேன் என்று நினைத்தாயோ?

நம்மை தொலைத்த காலத்திற்குள் துளைத்து வருவேன்...
என்றும் உனக்குத் துணையாய்..."
-ஜேகே

காதல் நிரம்பி வழியும் கவிதையில், கரையத் துடித்த தன் மனதை இறுக்கிக் கொண்டவளின் விரல்கள் கவிதையை அழிக்க போக, பாதை மாறி மீண்டும்.அதை சேமித்தது.

தன் அலைபேசியை எடுத்து வசீகரனை உடனே தன்னறைக்கு வரும்படி அழைத்தாள்.

அனைவரின் கேலிப் பேச்சுகளையும் கிண்டல்களையும் ரசித்துக் கொண்டே தன்னவளின் அறைக்குள் நுழைந்தான் வசீகரன்.

கதவை நாசூக்காக தட்டிக்கொண்டு அறையின் வெளியே காத்திருந்தவனுக்கு, "வரலாம்" என்று பதில் அளித்தாள் ஜேபி.

முழு அலங்காரத்தில் தன் முன்னே நின்றவளின் மேல் பித்தம் கொண்டாளும், அவள் மனதை தான் வெல்ல போகும் இந்தத் திருமணச் சவாலில் நிச்சயம் வெற்றி தனக்கே என்ற உள்ளம் கொண்ட உறுதியுடன் அவளை எதிர் நோக்கினான்.

" அக்ரீமெண்ட் பேப்பர்" என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

கையோடு கொண்டு வந்த, தான் கையொப்பம் போட்ட அக்ரீமெண்ட் பேப்பரை அவளிடம் கொடுத்தான்.

நிதானமாக ஒருமுறை படித்து விட்டு, முழு திருப்தியுடன் தன் கையொப்பத்தை அதில் சேர்த்தாள்.

" அப்போ நான் கிளம்பலாமா? " என்றான் வசீகரன்.

"ஒரு நிமிடம். இன்னும் ஒரு முக்கியமான விஷயம்" என்றாள்.

"என்ன?" என்றான்.

" எனக்கு அன்நோன் நம்பரிலிருந்து சில கவிதைகள் வரும். ஏனோ அவற்றை வெறும் கவிதைகள் என்று என்னால் ஒதுக்கி விட முடியவில்லை. அந்தக் கவிதையின் வார்த்தைகள் என்னை எனக்கே அடையாளம் காட்டுகிறது. ரசிக்க வைக்கிறது.

நிச்சயம் அதை அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்றாள்.

" கவிதைகளைப் பிடித்தால் ரசிக்கலாம்" என்றான் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு.

" இல்லை இப்பொழுது கவிதைகளோடு கவிதை அனுப்பியவரையும் ரசிக்கத் தோன்றுகிறது" என்றாள் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு.

சிறகுகள் நீளும்...

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஜேபிக்கு கவிதை குறித்த சந்தேகம் வந்து விட்டதோ 🤔🤔🤔