• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 15


"கண் முன்னே நிற்கும் உங்கள் மீது கூட தோன்றாத ஓர் அன்பு, எழுத்துக்களோடு மறைந்து நின்று, என்னோடு போர் தொடுக்கும் முகம் தெரியாத ஒரு உயிரிடம் உன்னதமாய் தோன்றுகிறது.

நான் இதை உங்களிடம் மறைத்து இருக்கலாம். இந்த திருமணத்தின் அடிப்படையே பொய்மையாக இருந்தாலும், உங்களிடம் பொய் சொல்ல எனக்கு மனம் இல்லை.

இந்த விஷயத்தில் என்னிடம் எந்த ஒரு தெளிவும் இல்லை. தெளிவுபடுத்திக் கொள்ளவும் நான் விரும்பவில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். உங்களை நான் விரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த திருமணத்தை ஒரு வருடத்திற்கும் மேல் நீட்டிக்கலாம் என்று உங்களுக்கு ஏதாவது கற்பனை இருந்தால் அந்த கற்பனையை இந்த நிமிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று தெளிவாக அவனை குழப்பினாள் ஜேபி.

" அப்படி என்றால் அந்த கவிதை எழுதுபவனையே நீ திருமணம் முடித்திருக்கலாமே... நிச்சயம் அந்த திருமணம் திருமணம் போல் அக்ரீமெண்ட் திருமணமாக இருக்காது. உங்கள் காதல் திருமணமாகத்தான் இருக்கும்" என்று வார்த்தைகளில் கோபம் ஏற்றி நடித்தான் வசீகரன்.

ஒருவேளை அவள் காதல் என்று ஒத்துக் கொண்டால், தனது அடையாளத்தை வெளிப்படுத்தி அவளை கரம் பிடிக்கலாம் என்ற சிறு சலனம் அவனுள் ஏற்பட்டது.

"வசீ... எனக்குப் பிடித்ததை ரசித்தேன். ஆமாம் ரசிக்கும்படியாக எழுதியவரையும் ரசிக்கத் தோன்றியது. என் பிடித்தத்தை மட்டுமே உங்களிடம் பதிவு செய்தேன். என் பிடித்தத்தின் அளவை காதல் என்று நீங்கள் கொண்டால் அது உங்களது மடத்தனம்.

துணிச்சல், தைரியம் இல்லாமல் மறைந்திருந்து ஒரு பெண்ணை ரசிக்கும் ரசிகனின் எழுத்தை மட்டுமே நேசித்தேன். அந்த எழுத்துக்களின் உரிமையாளனுக்கு, என்றைக்கு என் முன்னே நேரில் வர தைரியம் இருக்கிறதோ, அப்போது நான் பார்த்துக் கொள்வேன். என் நேசம் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்து விடாது" என்று சூடாகப் பதில் தந்தாள் ஜேபி.

' அடிப்பாவி! சொல்லாமல் இருப்பதால்தான் ரசிக்கவாவது செய்கிறாய். நான்தான் என்று சொன்னால், கெத்து மாரியாத்தா, சொத்து போனது போல் கத்து கத்துன்னு கத்துவ.

அவ்வளவுதான் மொத்தமா சோலி முடிந்து போகும். உன்னை கொஞ்சம் கொஞ்சமாக என் வழிக்கு வரவழைப்பது என் பொறுப்பு.

அதுவரை என் காதல் மனது உன்னிடம் கவிதையை கொட்டட்டும்.

உன் முன்னே வரத் தயங்குவது பயம் இல்லையடி பெண்ணே. உன்னைச் சுற்றி நீ எழுப்பி இருக்கும் கோட்டையை எல்லாம் தகர்த்துவிட்டு, உன்னுடைய மொத்த காதலையும் கொள்ளையடித்து உன்னையும் கொள்ளையடிக்கத்தான் .

ரெமோ வேஷம் போட வேண்டியவன் அம்பி வேஷம் போட்டே, உன்னை காதலிக்க வைக்கிறேன்.

இந்த மாமனோட மொத்த புத்திசாலித்தனத்தையும் நீ பார்க்கத்தானே போற!' என்று உள்ளுக்குள் அவளை கொஞ்சிக் கொண்டு, வெளியில் கெத்தாக நின்றான் வசீகரன்.

"ஓகே... நம் வாழ்க்கையை நண்பர்களாக ஆரம்பிக்கலாமா?" என்றான்.

பட்டும் படாமல் தன் கைகளோடு அவள் கைகளை சேர்த்தவளைப் பார்த்து சிரித்துக் கொண்டு, "இயல்பாய் கை கொடுக்கக் கூட மறுப்பவள் எப்படி நெருக்கமாய் நிற்பாய்? சரி சரி நீ ஒரு பெண் தானே. உனக்கு கண்டிப்பாக வெட்கமாயிருக்கும். அதனால் இதெல்லாம் உனக்கு சரி வராது. நான் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறேன் " என்று அவள் கோபப்படும் படி பெண்மையை குறைத்துப் பேசினான்.

"ஏன்? நெருங்கி வந்தால் உங்களிடம் வழிந்து தான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை" என்று சீரியவள், அவன் கைகளை அழுந்தப் பற்றி நெரித்து, " நம் வாழ்க்கையில் என்றும் நாம் எதிரிகள் தான்" என்றாள் சினத்துடன்.

'இதுக்கெல்லாம் பயந்தா எப்படி முருகேசா? இனி நீ பார்க்க வேண்டியது எவ்வளவு இருக்கு! உன் வாழ்க்கையில் பல சிறப்பான தரமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கிறது' வசீகரனின் மனசாட்சி அவனைக் கிண்டல் செய்தது.

"ஊப்...." என்று இழுத்து வைத்த மூச்சினை வெளியேற்றி, " இந்தக் கல்யாணத்தின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், நம்மிடையே நெருக்கம் மிக அவசியம்.
அறைக்கு வெளியே நண்பர்களாகவும், அறைக்கு உள்ளே எதிரிகளாகவும் இருப்போம். அப்போ தானே சண்டை எல்லாம் போட முடியும்" என்று கட்டிலை கண்களால் ஜாடை காட்டினான்.

"யூ...." என்று கோபப்பட்டவள் பற்றியிருந்த அவன் கைகளை விடுவித்து அவன் கழுத்தை பற்றி நெரிக்க ஆரம்பித்தாள்.

சரியாக அதே நேரம் வசீகரன் உள்ளே நுழைந்து வெகு நேரம் ஆகியதால் அன்னம்மாள் பாட்டி கதவை திறந்து உள்ளே நுழைந்தார்.

வசீகரனின் முதுகுப் பக்கம் மட்டுமே அவருக்குத் தெரிந்தது. வசீகரனை ஜேபி நெருங்கி இருந்த கோலம் அவருக்கு, கட்டிப்பிடித்து அணைப்பது போல் தெரிய,

"அடியாத்தி! ஒன்னும் தெரியாத பாப்பா விடிஞ்சும் விடியாமல் போட்டாளாம் தாப்பா... அங்கே மணமேடையில் பொண்ணையும், மாப்பிள்ளையும் காணோம் என்று கத்து கத்துன்னு கத்திக் கூப்பாடு போடுது ஒரு கூட்டம்.
இதுக்கு.... இதுக்கு.... இதுவா நேரம்?" என்று ஜேபியை கத்தினார்.

தன் பாட்டியின் குரலைக் கேட்டதும் வசீகரனை விட்டு விலகி நின்றவள், "எதுக்கு?" என்றாள் புரியாமல்.


அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் கையால் சுட்டிக் காட்டியவர், ஒற்றை விரலை நிமிர்த்தி அவளை மிரட்டினார்.

ஜேபியோ கையை கட்டிக்கொண்டு அசால்ட்டாக அவரை எதிர்கொண்டாள்.

" டார்லிங் ஆனாலும் உங்க பேத்தி ரொம்ப முரடு" என்று கழுத்தை தடவிக் கொண்டே சொன்னான் வசீகரன்.

" போங்க மாப்பிள்ளை நீங்க ஒரு பிளேபாய்" என்றார் அன்னம்மாள் சிரித்துக் கொண்டு.

" டார்லிங்! என் வாழ்க்கை ஆரம்பிப்பதற்குள் மண்ணை அள்ளிப் போட்டு விடாதீர்கள்" என்றான் வசீகரன் பதட்டமாக.

" விளையாட்டுப் பிள்ளை என்று இங்கிலீஷில் சொன்னேன். போங்க மாப்சன்...."

"மாப்சன்னா?"

" இப்போ மாப்பிள்ளையை இங்கிலீஷில் சொன்னேன். என்ன படிச்சு இருக்கீங்களோ ஒன்னும் புரிய மாட்டேங்குது உங்களுக்கு. மத்த விவரம் எல்லாம் அளவுக்கு அதிகமாக இருக்கு. சீக்கிரம் மணமேடைக்கு வாங்க!" என்று அறையை விட்டு வெளியேறினார் அன்னம்மாள்.

" இதுக்கே அதிர்ந்து போனா எப்படி மாப்சன்? இனிமேதான் எங்க அப்பத்தாவின் அதிரடி ஆக்சனை பார்க்கப் போறீங்க மாப்சன். இது நீங்க எடுத்த ஆப்ஷன்" என்று அவனை கிண்டலடித்தாள் ஜேபி.

" நான் எடுத்த முடிவிலிருந்து என்றும் பின் வாங்குவதில்லை. சரி கிளம்பலாமா?" என்றான் வசீகரன்.

அவன் முன்னே நடக்க பின்னே சென்றவள், கதவைத் திறந்து இருவரும் அறையிலிருந்து வெளியேறியதும் , "ஒரு நிமிடம்!" என்று கூறிவிட்டு அவன் கைகளோடு தன் கைகளை இணைத்து கொண்டவள், அவனைப் பார்த்து மோகனப் புன்னகை சிந்தினாள்.

தன் ஒற்றைப் புருவத்தை அழகாய் ஏற்றி இறக்கி, ' இது போதுமா?' என்று கேள்விக்கனையை தொடுத்தாள் விழியாலே.

பாவை தொடுத்த பாணத்தில் பாகாய் உயிர் உருகி நின்றவன், அவளைப் பார்வையாலே பருகிப் பருகி மீண்டும் உயிர் பெற்றான்.

திடீரென்று தன் மீது பூமழை கொட்ட ஆனந்தமாய் அதிசயத்தவன் சுற்று முற்றும் பார்க்க, மங்கி பிரதர்ஸ் அவர்கள் இருவரின் மீதும் பூமாரி பொழிந்து அவர்களை மணமேடைக்கு வரவேற்றனர்.

தன் நண்பர்களைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன் முன்னேறி நடக்க, அவர்கள் கொட்டிய பூக்களின் மேல் பாதத்தை பதித்தாள்.

"நோ.... ஜேபி..." என்று கிருஷ் கத்தினான்.

"என்னடா? ஏன்டா?" என்று யாதவும் மதுவும் பதிலுக்கு கத்த,
"நம்ம ஜேபிக்கு பூக்களின் மீது நடந்தால் பாதம் வலிக்கும்...." என்றான் முகத்தை பாவம் போல் வைத்துக் கொண்டு.

"டேய்...." என்று அவர்கள் இருவரும் பதிலுக்கு கத்துவதற்குள், "ஹேய்..." என்று அலறிய ஜேபியை தன்னிரு கரங்களில் தாங்கி இருந்தான் வசீகரன்.

முகம் மாறத் தொடங்கிய ஜேபியின் காதில், " வெட்கமாக இருந்தால் சொல் இறக்கி விடுகிறேன்" என்றான் காதோரத்தில் கிசுகிசுப்பாக.

ஜேபியின் உடலில் சட்டென்று இறுக்கம் தோன்றினாலும், கைகளை அவன் கழுத்தில் மாலையாய் கோர்த்துக்கொண்டு, "ஹலோ! மாப்சன் எப்படி நம்ம ரியாக்ஷன் ?" என்றாள் பதிலுக்கு அவளும் வீம்பாக.

நண்பர்கள் ஆரவாரித்து, பூமழையை அவர்கள் இருவர் மீதும் பொழிந்து மணமேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பூமகள் பூங்கரங்களை பூமாலையாய் தன் கழுத்தில் சூடிக்கொண்டு, வசீகரன் முன்னேறினான்.

நடந்து கொண்டிருந்த வசீகரன், தன் காதல் மயக்கத்தில் அவளை தன் மார்போடு அணைக்க, அவன் கைகள் தந்த அழுத்தத்தில், திடுக்கிட்டவள், அவன் கழுத்தில் தன் ஒற்றை விரலை அழுத்தி, "அக்ரீமெண்ட் " என்று நினைவுறுத்தினாள் மெல்லிய குரலில்.

அவள் கூறியது தன்னுடைய காதில் விழுந்தாலும், அவள் முகத்தை நோக்கி குனிந்து, "என்ன சொல்ற? மேளச் சத்தத்தில் ஒன்னும் கேட்கல" என்றான் தன் மீசையை அவள் கன்னத்தில் உரசி.

அந்த நேரத்தில் ஜேபியின் முகம் கோபத்தில் சிவந்ததா? வெட்கத்தில் சிவந்ததா? அது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

மண மேடைக்கு ஏறும் முன், இருவருக்கும் சேர்த்து மங்கி பிரதர்ஸ் ஆரத்தி எடுத்தனர்.

ஆரத்தி தட்டில் பணம் போடாமல் மணமேடைக்கு ஏறக்கூடாது என்று இருவரையும் மறித்து வம்பு செய்தது அந்த மங்கி பிரதர்ஸ் கூட்டம். ஜேபியையும் கீழே இறக்க கூடாது. தட்டிலும் பணம் போட வேண்டும் என்று அதிகாரம் செய்தது அந்த நண்பர்கள் பட்டாளம்.

வசீகரனின் கைகளோ ஜேபியை தாங்கி இருக்க, செய்வதறியாது திகைத்தான்.

"என்ன செய்வது?" என்று கண்களால் ஜேபியை கேட்க, அவனை வெற்றி கொண்ட கர்வச் சிரிப்புடன், அவன் சட்டை பையில் இருந்த பணத்தாள்களை வரிசையாக எடுத்து தன் நண்பர்கள் எடுத்த ஆரத்தி தட்டில் நிறைத்தாள் .

புன்னகைத்ததும்ப மணமக்கள் இருவரும் ஒரே நேரத்தில் மணமேடையில் அமர, அவர்களின் பொருத்தத்தை கண்டு அதிசயத்தது மொத்த திருமண மண்டபமும்.

தன்னுடைய கடமையை சரியாக செய்து விட்டோம் என்ற திருப்தி பெருமாளின் கண்களில் நிறைந்திருந்தது. மகனின் பெருமை பூத்த முகத்தில் தானும் தன்னுடைய நிறைவை உணர்ந்தார் அன்னம்மாள்.

தினகரனும் வசுமதியும் தன் மகனின் தோற்றப்பொலிவில் பரிபூரண மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

கெட்டி மேளச் சத்தம் முழங்க, பொன் தாலியை எடுத்து அவளின் கழுத்தருகே கொண்டு சென்றவன், பார்வையாலே அவள் சம்மதத்தை கேட்க, ' இது நிரந்தரம் அல்ல' என்று அவள் அறிவு எடுத்துக் கூறினாலும், மனம் தந்த உந்துதலில் இமை மூடித் திறந்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

அடுத்த நொடி அதிரடியாய் பொன் தாலியை அணிவித்து, அவளை தன் உரிமையானவளாய் ஏற்றுக்கொண்டான்.

மாலை மாற்றும் போது வசீகரன் போட்ட மாலையை ஜேபி ஏற்றுக் கொண்டாள் பாந்தமாக.


ஜேபி மாலை மாற்றும் போது வசீகரன் தன் முழு உருவத்திற்கும் நிமிர்ந்து தலையை பின்னே சரித்துக் கொள்ள, ஜேபியால் வசீகரனின் கழுத்தில் மாலையிட முடியவில்லை.

"ஹே... உன் ஆட்டம் எல்லாம் இனிமேல் அவ்வளவுதான்..." என்று கைதட்டி சிரித்தார் அன்னம்மாள்.

தன் தோழியின் முக வாட்டத்தை காணப் பொறுக்காத நண்பர்கள் பட்டாளம் ஜேபியை தங்கள் கரங்களில் தாங்கிக் கொள்ள, அவள் கைகளில் இருந்த பூமாலை வசீகரனின் தோளில் விழுந்தது எளிதாக.

திருமண விளையாட்டுக்களில் எல்லாம் வசீகரன் ஜேபிக்கு அவள் அறியாமலேயே விட்டுக் கொடுத்தான். ஏனோ அவனிடம் தோற்கக் கூடாது என்று ஜேபியும் முனைப்புடன் விளையாடினாள்.

இதைக் கண்டுபிடித்த அன்னம்மாள் பாட்டி, வசீகரனை எழுப்பி அவன் கைகளில் ஒரு மஞ்சள் கயிற்றை இறுக்கமாக கட்டினார்.

"எங்கே இதை இந்தக் கட்டை பிரித்துக் காட்டு பார்ப்போம்!" என்றார் ஜேபியிடம் சவாலாக.

நண்பர்கள் பட்டாளம் கைத்தட்டி உற்சாகப்படுத்த, அந்த முடிச்சை அவிழ்க்கப் பார்த்தவள் முடியாமல் திணறினாள்.

"எப்புடி?" என்று தன் இடுப்பில் இரு கைகளையும் குற்றிக் கொண்டு அன்னம்மாள் பாட்டி சிறு குத்தாட்டம் போட்டார் தன் பேத்தியிடம்.

" உன்னால் முடியும் ஜேபி!" என்று மங்கி பிரதர்ஸ் அவளை விடாமல் உற்சாகப்படுத்தினர்.


ஒரு கட்டத்தில் முடிச்சை பிரிக்க முடியாமல் திணறியவள், பற்களால் கடித்து அவிழ்த்து விடலாம் என்று நினைத்து, வசீகரனின் கையை சட்டென்று தன் உதட்டருகே இழுக்க, அவளின் முதல் முத்தம் அவனின் மணிக்கரத்தில் பதிந்தது, அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு அச்சாரமாக.

அதிர்ச்சியுடன் ஜேபி வசீகரனை பார்க்க, அவள் பார்த்தவுடன் ஒற்றைக் கண்ணடித்து சிரித்தான்.

கோபத்தில் அவனை விட்டு விலகப் பார்த்தவளின் கரத்தை பிடித்துக் கொண்டு, " இப்பொழுது முயற்சி செய்" என்றான்.


வசீகரன் தன் கரத்தை இறுக்கிக் கொள்ளவே, கிடைத்த இடைவெளியில் கயிற்றில் முடிச்சை லாவகமாய் கழட்டினாள்.

போட்டிகளில் வெற்றி பெற்றாலும், அவள் மனதில் குறுகுறுப்பு மலர்ந்தது.

திருமண ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் முடிந்து, அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்ற பிறகு வசீகரனின் வீட்டிற்குச் சென்று முறையாக உரிமையாக விளக்கேற்றினாள்.

வசீகரன் ஏற்கனவே தன் பெற்றோர்களிடம் விவரித்துக் கூறி இருந்ததால், எந்த ஒரு பிரச்சனையும் இன்றி திருமணம் முடிந்த அன்றே வசீகரன் தன் உடமைகளுடன் தன் மனைவி ஜேபியின் வீட்டில் குடிபுகக் கிளம்பினான் ஆர்ப்பாட்டமாக.


சிறகுகள் நீளும்...
 
Last edited:
Top