• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 2

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை
சிறகை விரிக்க துடிக்கிறதே...


சிறகு - 2

ஜேபியுடன் படிக்கும் அவள் வகுப்புத் தோழிகள் பலர் அரசு பேருந்தில் பயணம் செய்தனர், அன்றாடம் பேருந்தில் பயணம் செய்யும் போது நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளையும், தாங்கள் சந்தித்த பல்வேறு மனிதர்களின் குணாதிசியங்களையும் பகிர்ந்து கொள்ளும் போது ஜே பிக்கு பகிர்ந்து கொள்ள ஒரு தகவலும் இல்லாது போனது. அவள் வாயை திறக்கும் முன்பே, " அம்மா சாமி உங்க பெருமாள் புராணம் போதும்" என்று கைதட்டி நகைக்க ஆரம்பித்தனர் அவளது தோழியர்.

அன்று வீடு திரும்பியதில் இருந்து, உம்மென்ற முகத்துடன் வலம் வரும் மகளை நோக்கிய பெருமாள், ஜே பியை தன்னருகில் அமர வைத்து, " கண்ணம்மா என்னடா பிரச்சனை" என்றார் வாஞ்சையாக.

ஒன்றும் பேசாமல் தன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு, " அப்பா நானும் என் தோழியருடன் அரசு பேருந்தில் பள்ளி சென்று விட்டு வரவா? " என்றவள் மெல்ல மெல்ல தன் ஆசையை வெளிக்கொண்டு வந்தாள்.

தான் வளர்க்கும் சிட்டுக்குருவிக்கு சிறகு முளைத்ததைக் கண்ட பெருமாளும் பலத்த யோசனைக்குப் பிறகு , " சரிடா. ஆனால் கவனமாக சென்று வர வேண்டும் " என்றார் கரிசனத்துடன்.

"அடேய் அவ தான் ஏதோ சொல்றானா நீயும் ஏன்டா அவ பாட்டுக்கு டப்பாங்குத்து டான்ஸ் ஆடுற" என்றார் அன்னம்மாள்.

"ஓ... டப்பாங்குத்தா? ம்... எல்லாம் ஒரு கலை சேவை தான் அப்பத்தா " என்று அன்னம்மாளை பார்த்து கண்ணடித்தாள் ஜேபி.

பலவித கனவுகளுடன், தோழியருடன் நகரப் பேருந்தில் பயணிக்க ஆரம்பித்தாள். அந்தப் பெண்கள் பள்ளியின் அருகில் இருக்கும் ஆண்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி முடிந்ததும் பேருந்து நிலையத்தில், மாணவிகளை கிண்டல் செய்ய, மாணவிகளும் சரிக்கு சமமாய் பதில் தர, வெளியுலகம் கண்ட அந்த சிட்டுக்குருவி தன் விழிகளை அகல விரித்துப் பார்த்தது.


இதுவரை அவள் படிக்காத பக்கங்களை எல்லாம் வாழ்க்கை புரட்டிக் காட்ட, ஆச்சரியத்துடனும் சிறிது அச்சத்துடனும் கவனித்துக் கொண்டே வந்தாள் ஜே பி.


பேருந்தில் பயணம் செய்யும் போது கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் கொடுத்தது, குண்டு குண்டு கன்னங்களுடன் நிறைந்த குழந்தையைப் பார்த்தது, கண் தெரியாத தாத்தா பேனா விற்றது, மாங்காய் வாங்கி சாப்பிட்டது என அனைத்து கதைகளையும் பகிர்ந்து கொண்ட ஜெயலட்சுமி பெருமாளுக்கு, ஆண், பெண் நட்பு, ஆண்களின் பார்வை பகிர யோசனையாகவே இருந்தது.வெகு இயல்பான அவர்களின் நட்பு சரியா? தவறா? என ஒரு போராட்டமாக இருந்தது அவளுக்கு.


அவளின் தயக்கத்தை துடைக்க தாயும் அருகில் இல்லையே. அன்னம்மாளும் அவளுடன் சிறு கண்டிப்புடன் இருந்ததால், அப்பத்தாவிடமும் பகிர அவளுக்கு தயக்கம் இருந்தது. தன் மனதின் பார்வையை தன் தந்தையிடம் உரைத்தால், தன்னை அவர் நோக்கும் பார்வையும் தவறாக போய்விடுமோ என்று சிந்திக்க ஆரம்பித்தாள்.

தங்கள் குழந்தைகளுக்கு தங்களை விட்டு நழுவும் சூழ்நிலையை உருவாக்கித் தராத பெற்றோர்கள் நல்ல பெற்றோர்கள் ஆகிறார்கள். எதிர்பாராமல் சூழ்நிலையை உருவாக்க காரணமான பெற்றோர்கள் அங்கே குற்றவாளி ஆகிறார்கள்.

தன் தோழிகள் அவர்களின் ஆண் நண்பர்களிடம் கிரீட்டிங் கார்டு பெற்றுக் கொள்வது, டைரி மில்க் சாக்லேட் பெற்றுக் கொள்வது, ரோஜா பரிசினை வாங்கிக் கொள்வதைப் பார்த்து, அந்த மாய உலகம் அவளை மிரட்டியது. அவர்களிடம் ஜே பி கோபமாக கேட்கும் போது, " நட்பு எப்படி தப்பாகும்? " என்று விளக்கம் தர, முழுவதுமாக நெருங்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் ஒரு தவிப்பிற்குள் அவளை சிக்க வைத்தது.


ஆனால் அந்த வயதிற்கே உரிய குறும்புடனும், கேலியுடனும் வரம்பு கடக்காமல் பேசும் அவர்களின் பேச்சுக்கள் அவளையும் மீறி ரசிக்க வைத்தது.

அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என்ற இயல்பான அவளின் துணிவுடன், அந்த சிட்டுக்குருவியும் வீட்டைக் கடந்த சமுதாயம் எனும் வானில் பறக்க தன் சிறகை விரிக்க நினைத்தது. ஆனால் வானத்தில் கழுகுகளும் வல்லூறுகளும் வட்டம் இட்டுக் கொண்டிருக்கும் என்பதை மறந்தே போனது அந்த சிட்டுக்குருவி.

அன்று பள்ளி முடிந்ததும், வானம் விடாது மழையைப் பொழிந்தது. ஜெயலட்சுமியும், அவளின் தோழியரும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக வெகு நேரம் காத்திருந்தனர்.


கூட்டம் நிறைந்து வழியும் ஒரு பேருந்து வந்தது. அனைவரும் ஏறிய பின் தட்டுத் தடுமாறி, நனைந்து கொண்டு ஜெயலட்சுமி பெருமாளும் ஏறினாள் கடைசிப் படியில். ஒரு கை பேருந்தின் கம்பியை பிடித்திருக்க, மறுகை தோளில் தொங்கிய புத்தகப் பையை இழுத்துப் பிடித்து இருந்தது.

" பாருடா பொம்பள புள்ள , ஆம்பள பிள்ளை மாதிரி படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வருகிறது... நல்ல தைரியசாலி புள்ளதான் " என்று மாணவர்களின் கேலியான பாராட்டைக் கேட்டதும், ஏதோ ஆணுக்கு நிகரான சாதனை நிகழ்த்தியதைப் போல் மகிழ்ச்சி அவளைச் சூழ்ந்தது. தன் தைரியத்தை தனக்குத்தானே பாராட்டி கொண்டாள்.

பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே நுழையும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவில்லை. சாரல் முகத்தில் தெறித்து, கன்னம் வழிந்து, கழுத்தை உரசி அவள் உடையை நனைத்தது. அதன் குளுமையை உள்வாங்கிக் கொண்டு, படியில் தொங்கிக் கொண்டு வரும் அந்தப் பயணத்தை சாகசமாக நினைக்கத் தொடங்கினாள்.

சீருடை அணிந்த தேவதை சாரலில் நீராடி வர, டாஸ்மாக்கில் இருந்து வெளிவந்த ஒரு குடிமகனின் கண்கள் சிவந்தது. அது குடித்த போதையினாலா? இல்லை தான் பார்க்கும், மழையில் நனைந்த அந்தப் பேதையினாலா?.

பேருந்து சிக்னலில் நின்று புறப்பட ஆரம்பித்ததும், அந்த மிருகம் ஓடி வந்து பேருந்தின் படியில் ஏறிக்கொண்டது.

கூட்டத்தை தனக்கு பயன்படுத்திக் கொண்டு, ஜேபியை நெருங்கி, பின்னால் இருந்து அவளின் அங்கத்தை பிடித்தது. பிடித்திருக்கும் கையை விட்டால் நழுவி மரணம் என்ற நிலையிலும், எதிர்க்க முடியாத சூழ்நிலையிலும், பெண்ணவள் அதிர்ந்து, வாய் திறந்து கூச்சலிட முயன்ற போது, அந்த மிருகம் அவள் காதில், "ஏதாவது கத்தின, சுடிதார் பேண்டின் முடிச்சை அவிழ்த்து விடுவேன்! ஊரே உன் கோலம் பார்க்கும் வசதி எப்படி? " என்று நாரசமாய் நகைத்து பேருந்தில் இருந்து விசில் அடித்தபடி, அந்தச் சிட்டுக்குருவியின் சிறகை ஒடித்து விட்டு இறங்கிச் சென்றது.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் ஊமையாய் இறங்கியவள், பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையின் அடியில் இருந்த கல் இருக்கையில், பேச்சின்றி அமர்ந்தாள்.

பெரும் மழையின் காரணமாக, ஒதுங்கி இருந்த கூட்டமும் அவளை வித்தியாசமாக பார்த்தது. நல்ல மனம் படைத்தோர் கூட நமக்கேன் வம்பு என்று விசாரிக்காமல் சென்றனர் தங்கள் வழியைப் பார்த்து.

அந்த பேருந்து நிலையத்தில் பூக்கட்டி விற்கும் ஒரு பாட்டி, அவளின் இலக்கற்ற பார்வையைக் கண்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டார் அவளுக்கு பாதுகாப்பாக. மழை நின்றதும் கூட்டமும் கலைந்து சென்றது.

வெகுநேரமாகியும் வீட்டிற்கு பெண் திரும்பாததால் பெருமாள் பதறி அடித்துக் கொண்டு, அவளின் வகுப்புத் தோழியரின் வீட்டில் சென்று கேட்க, மழையின் காரணமாக பேருந்தில் இருந்து அவள் இறங்கியதை சரியாக கவனிக்கவில்லை என்று கூறினர்.

" பொம்பள பிள்ளைக்கு செல்லம் கொடுக்காதேன்னு சொன்னா கேட்காமல், நீ கொடுத்த இடம், உன்னிடம் கூட சொல்லாமல் ஊர் சுற்ற கிளம்பி விட்டாள். பொழுதுபோயும் பொம்பள புள்ள வீட்டுக்கு வரல. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. உன் கண்முடித்தனமான பாசம் இப்பொழுது எங்கு வந்து நிற்கிறது என்று பார்!" என்று பெருமாளை கோபமாக சாடினார் அன்னம்மாள்.

தன்னைக் குற்றம் கூறும் தாயை, கையறு நிலையில் பரிதாபமாக பார்த்தார் பெருமாள். நிமிடத்திற்கு நிமிடம், மனதை சூழ்ந்த பயம் அதிகரிக்க, ஒவ்வொரு இடமாக ஜெயலட்சுமியை தேடினார்.

பேருந்து நிலையத்தில் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் தன் மகளைக் கண்டதும் திக் என்றது அவருக்கு.

" கண்ணம்மா" என்று பெருமாள் அழைத்ததும், உள்ளம் அதிர நிமிர்ந்து தன் தந்தையை பார்த்தவள், சுயம் உணர்ந்து பாய்ந்து சென்று அவர் மார்புக்குள் அடைக்கலமானாள்.

கலகலவென வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஜே பி அமைதியாக ஒரே இடத்தில் இருப்பதும், வற்புறுத்தினால் மட்டுமே சாப்பிடுவதும், அடிக்கடி குளித்துக் கொண்டு வருவதும், பள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிப்பதும் வித்தியாசமாகப்பட்டது பெருமாளுக்கு. சோப்பு கட்டிகளில் ஒரு உருவத்தை செய்வதும், பின் அதனை கரைப்பதுமாகவே இருந்தாள்.

" ஐயா பெருமாளு அந்த பிள்ளைக்கு ஏதோ காத்து கருப்பு அடிச்சிருக்கு. நீ ஒரு வாட்டி நம்ம கருப்பு கோயில போய் திருநீறு பூசி விட்டு வா!" என்றார் பேத்தியை நினைத்து கவலையோடு.


தன் தாய் சொல்வது சரியாக வருமோ என்று நினைத்து, என் மகளை கருப்பசாமி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தவள் சிறிது நேரம் சாமியை உற்றுப் பார்த்துவிட்டு, "அப்பா இந்த சாமி வேண்டாம் பா. இந்த சாமி ஆம்பள சாமி.' என்று கத்தி கதறி துடிக்க ஆரம்பித்தாள்.

அழுதபடியே தூங்கிக் கொண்டிருக்கும் தன் மகளை கவலையோடு பார்த்தார். என் மகளுக்கு தான் தந்தையாக மட்டுமே நடந்து கொண்டிருக்கிறோமோ? என்ற குற்ற உணர்ச்சியுடன் தாயுமானவனாக மாறி, தன் மடியில் ஏந்திக் கொண்டார்.

"கண்ணம்மா" என்று கனிவாக அழைத்தார்.

" இந்த அப்பாவை உன் அம்மாவாக நினைத்து உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை சொல்வாயா?" என்றார்.


கண்கள் கலங்க ஆரம்பித்தது ஜெயலட்சுமிக்கு. " கண்ணம்மா பெண்கள் கண்ணீர் விலைமதிப்பற்றது. அது உன்னதமானவர்களுக்கு மட்டுமே உரித்தாக வேண்டும். மனதை அடைக்கும் குப்பைகளுக்கு அல்ல" என்றவுடன் அவளது கண்ணீர் நின்றது.

அவளது வலது கையை தனது வலது கையில் இறுகப்பற்றிக் கொண்டு, " உன் அப்பாவின் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால், இந்த அப்பாவிடம் நீ உன் பாதுகாப்பை உணர்ந்தால் சொல்!" என்றவரின் குரலில் இருந்த உறுதி நீ சொல்லியே ஆக வேண்டும் என்றது.

தந்தையின் கையை கன்னத்தில் பதித்துக் கொண்டு, அந்த மிருகம் தன்னை தீண்டியதும், தன்னால் அதனை தடுக்க இயலாமல் போனதையும் கூறிவிட்டு, "அப்பா! பெண்ணாக பிறப்பது குற்றமா?" என்றாள் வேதனை சுமந்த விழிகளுடன்.

மகளின் கண்ணீர் தன் சொல்லுக்கு கட்டுப்பட்டு நின்றாலும், தன் கைகளைத் தீண்டிய அவளின் மூச்சுக்காற்று தரும் வெப்பத்தில் அவளின் அழுத்தம் தெரிந்தது. "நான் ஒரு பெண்" என்று மலர்ச்சியுடன் சொல்லும் தன் மகளின் முகம், இன்று குற்ற உணர்ச்சியில் தவிப்பதைக் கண்டு கலங்கினார்.

"கண்ணம்மா அமைதியாக நான் சொல்வதைக் கேள். நான் கூறுவதை உன் மனதில் பலமுறை கூறி, உறுதி செய்து கொள். உன்னை பலப்படுத்திக் கொள்.

நடந்தது உன் தவறு அல்ல. அது ஒருபோதும் உன்னுடையது இல்லை . நீ உணரக்கூடிய அருவருப்பு, அவமானம், பயம் மற்றும் கழிவிரக்கம் எல்லாம் உன்னை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு மட்டுமே சொந்தமானது. உன்னை நினைத்து நீயே வெட்கிக் கொள்வதாலும், சுயபழியை உன் மீது திணித்துக் கொள்வதாலும், உன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாலும் உன் நிலை மாறப்போவதில்லை.

பிறந்த எல்லோரும் மரணிக்கப் போவது என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த நிலையில்லாத பூமியில் நாம் ஏன் பயந்து நடுநடுங்கிச் சாக வேண்டும்?

'அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே...' என்றார் உன் பாட்டன் பாரதி.

நீ பயம் கொள்வது என்று முடிவு செய்து விட்டால், ஒவ்வொரு நாளும், ஏன்... ஒவ்வொரு நிமிடமும் பயந்து தான் தீர வேண்டும். உன் வாழ்க்கையை நீ வாழாமல், உன் பயத்தில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் இதிலிருந்து நீ மீண்டு வந்து விட்டால், வாழ்க்கை உன் வசமாகும். கடித்து குதறும் தெரு நாய்களுக்கு நாம் வைத்தியம் பார்க்க முடியாது. முடிந்தால் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்யலாம்.

நீ நீயாக இரு. பெண்ணின் அடையாளமே கம்பீரம் தான். பெண்ணாய் பிறந்தது குற்றமா? என்றாய். ஒரு பெண் அங்கீகரித்தால்தான் ஒருவன் ஆண் மகன் என்ற அங்கீகாரத்தையே அடைய முடியும். மானுடம் தழைக்கும் சக்தியே பெண் சக்தி.

மூடி இருக்கும் கதவுகளைத் தட்டி பயனில்லை. உனக்காக எங்கோ திறந்திருக்கும் கதவை நீ தேடு. பழி சொல்லும் இந்த உலகிற்கு வலி மட்டுமே கொடுக்கத் தெரியும் நீ உன் வழியைத் தேடு.

தவறு செய்தவனிடம் இருக்க வேண்டிய மன அழுத்தம் உனக்கு எதற்கு? சங்கிலி என்று நீ நினைத்து பிணைத்துக் கொண்டது வெறும் மணல் கயிறு. அதனை தூசி போல் தட்டி விடு" என்றார் பரிவாக.

" எனக்கு ஆண்களைப் பார்த்தால் பிடிக்கவில்லையே அப்பா... மீண்டும் மீண்டும் அந்த சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறதே..." ஒரு வழியாக தன் மனதைத் திறந்தாள் ஜேபி.

" கண்ணம்மா! கண்களைத் திறந்து அறிவை விசாலமாக்கிப் பார். அந்தக் கயவன் மட்டுமே ஆண்மகன் அல்ல. உலகில் சாக்கடை மட்டுமே நீரும் அல்ல. கொட்டும் அருவி, குதித்தோடும் நதி முதல் சமுத்திரம் வரை அழகான ஆண்கள் உலகமும் இருக்கிறது.

கயவர்களை விட்டுத்தள்ளு. கண்ணோடு கண் நோக்கிப் பேசும் உலகில் கைகோர்த்து நடக்கப் பழகு. இன்று நீ தலை குனிந்தால் வாழ்க்கை முழுதும் குனிந்து கொண்டே நடக்க வேண்டும். கண்ணம்மா என்னை பார்க்கவும் உனக்கு அருவருப்பாக...." தயங்கியவரின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது.

அடுத்த நொடி "அப்பா..." என்ற கதறலுடன் அவர் மார்பில் சாய்ந்து தன் கண்ணீரை அவர் சட்டைப் பையில் துடைத்துக் கொண்டாள்.

"அப்பா..."

"என்னடா?"

"நான்... எனக்கு... மீண்டும் இப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நான் எப்படி நடக்க வேண்டும்?" குழம்பிய தன் மனதிற்கு தெளிவுரை கேட்டாள் தன் தந்தையிடம்.


மகளின் உச்சந்தலையை ஆதுரமாய் தடவி, அவள் கைகளைப் பிடித்து பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றார் பெருமாள்.

சுவற்றில் மாட்டியிருந்த பெண் தெய்வங்களை சுட்டிக் காட்டினார். பல பெண் அவதாரங்களை புரியாமல் பார்வையிட்டாள் ஜேபி.

" இந்தப் பெண் தெய்வங்களின் ஆடையை அகற்றி பார்க்க நினைப்பவனும், தன் தாயின் ஆடையை அகற்றிப் பார்க்க நினைப்பவனும், பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்பவனும் ஒன்றே. அப்படிப்பட்ட கயவர்களை, ஆண்டவன் வந்து தண்டிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை சந்தர்ப்பம் வாய்த்தால் நாமே அந்த ஆண்டவனாக மாறலாம்.

தெளிவாக யோசிக்கும் வயதில் இருக்கும் உனக்கே இத்தனை குழப்பம் என்றால், எத்தனை குழந்தைகள் ஒவ்வொரு வினாடியும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் நிலை? நம்மினும் கேடு நாட்டினில் கோடியடா கண்ணம்மா.

காயமடைந்து மீண்ட ஒருவனுக்கு மட்டுமே அந்த காயத்தை குணப்படுத்தும் வைத்தியம் தெரியும். இன்று உன் மனம் அடைந்த தெளிவை நீ உன்னைப் போல் தேவைப்படுபவருக்கு பரிசளி.

எளிதில் மறந்து விட முடியவில்லை என்றாலும் கடந்து விட முடியும் உன்னால்..." என்றார் உறுதியோடு.

தூண்டி விட்ட தீபம் போல் அவளின் அகஜோதி பிரகாசமாய் ஒளிர்ந்தது. அது அவள் கண்களில் மிளிர்ந்தது.

"சே... நான் அவமானத்தில் உயிரை விட்டுவிட நினைத்தேன்..."

"கண்ணம்மா..."

" தவறு செய்பவர்களே தலை நிமிர்ந்து இந்த உலகில் நடமாடும் போது, நான் ஏன் என்னுடைய ஒப்பற்ற வாழ்க்கையை தொலைக்க வேண்டும்? என் தாய், தந்தை பரிசளித்த இந்த உடலை நான் என் சிதைக்க வேண்டும்? என் உயிரை நானே ஏன் புதைக்க வேண்டும்?

இது என் தவறு அல்ல. இது என் தவறு அல்ல. இது என் தவறே அல்ல... " என்று இரு கைகளை விரித்து சிரிக்க ஆரம்பித்தாள்.


மெல்ல தன் தலையை நிமிர்ந்து வானோக்கி பார்த்து, " எனக்கு இப்பொழுது சிறகுகள் முளைத்தது போல் இருக்கிறது அப்பா. என் மனதில் அழுத்திய பாரங்கள் எல்லாம் விட்டு விலகி லேசாக பறப்பது போல் உணர்கிறேன்... இனி ஒரு போதும் பெண்ணாய் பிறந்ததற்கு வெட்கப்பட மாட்டேன். ஆண் உலகத்தை தைரியமாக எதிர்கொள்வேன்" என்று சிலாகித்தாள் கண்களை மூடிக்கொண்டே.

பெண்களை அடைத்து வைப்பதால் மட்டுமே காக்க முடியாது. அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணரச் செய்தால் போதும். பெருமாள் தன் மகளின் பலத்தை அவளுக்கே அடையாளம் காட்டினார்.

சிறகுகள் நீளும்...


( இந்த நிகழ்வு கற்பனை அல்ல...)
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
பெண்மையை போற்ற தெரியாத கயவர்கள் 😡😡😡

ஜேபியின் பலமும் திடமும் சூப்பர் 🥰🥰🥰
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பெருமாள் தன் மகளுக்கு அளித்த நேர்மறை எண்ணங்களும், பெண்ணின் பலம் என்ன என்பதை புரியவைத்த விதமும் அருமை 👌