• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 25

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 25

" அப்படி என்றால் நம் ஒரு வருடத் திருமண ஒப்பந்தத்தின் காரணமும் இதுதானோ?" என்றான் வெகு நாட்களாகத் தேடிய விடையைக் கண்டுபிடித்த வேகத்தில்.

" இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்" என்றாள் அலட்டிக் கொள்ளாமல் .

" நீங்கள் இரட்டை வாழ்க்கை பிரமாதமாக வாழ்கிறீர்கள் அம்மணி" சத்தமாக கைத்தட்டி உரக்க உரைத்தான் வசீகரன்.

" இரட்டை வாழ்க்கை. நானா? வார்த்தைகளில் கவனம் வேண்டும் வசீ... " என்றாள் ஜேபி.

" இதோ... இதோ... இப்பொழுது கூட என்னுடைய பெயரை கோபத்தில் சுருக்கி செல்லமாகக் கூப்பிடுகிறீர்கள் என்று தெரியாமலேயே நீங்கள் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் அம்மணி. என்னைப் பிடிக்கும் ஓர் வாழ்க்கை. என்னைப் பிடிக்காத ஒரு வாழ்க்கை.

அதேபோல் உங்களுக்குப் பிடித்த ஓர் வாழ்க்கை. உங்களுக்குப் பிடிக்காத ஓர் வாழ்க்கை. நீங்கள் இரட்டை வாழ்க்கை நிச்சயமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்றான் வாதிடும் குரலில்.

" உங்கள் பிதற்றலுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது" என்றாள் கோபமாக ஜேபி.

" நிச்சயம் உங்கள் சிறுவயதில் நடந்த அந்த மோசமான நிகழ்ச்சி உங்களை வலிமையாக்கி இருக்கிறது. உங்கள் ஆழ்மனம் எந்த ஆணையும் நம்ப மறுக்கிறது. ஒரு கட்டத்தில் உங்களை நீங்களே வெறுக்கிறீர்கள். இது உங்களின் ஓர் வாழ்க்கை.

மறு வாழ்க்கையில் நீங்கள், குடும்பத்தினருடன் எப்பொழுதும் சகஜமாக பழகுபவளாக, ஆண் நண்பர்களுடன் இயல்பாக இருப்பவளாக, அந்த நிகழ்வை மறந்தவளாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆகாயத்திற்கும், அதல பாதாளத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, உங்களையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றான்.

தன்னுடைய நிலையை தத்ரூபமாக விளக்கும் வசீகரனின் வார்த்தைகளில் அடி வாங்கிய ஜேபியின் மனது தவியாய் தவித்தது. நிற்க வலுவில்லாமல் அவளின் கால்கள் துவண்டு, கண்களை மூடி, மணலில் மண்டியிட்டு அமர்ந்தாள்.

அவளின் தவிப்பை உணர்ந்தவன், அவளின் எதிரே அவளைப் போல் தானும் மணலில் மண்டியிட்டு அமர்ந்து,

" நீ காயப்பட்டு இருக்கிறாய் கண்ணம்மா. காயத்தை மறைத்தால் மட்டும் போதாது. மருந்திட வேண்டும். உங்கள் ரணங்களுக்கு இதமாய் மருந்திடுவேன். என்னை, உங்கள் வசீகரனை நம்புங்கள் அம்மணி!" என்றான் இதமான குரலில்.

கண்களைத் திறந்தவள், மிகவும் தீர்க்கமான குரலில், " ஆம்! இரட்டை வாழ்க்கை உண்மை தான். என்னை அந்த நிகழ்வு அடிக்கடி வேட்டையாடுகிறது, மனதில் எவ்வளவு அடி ஆழத்தில் புதைத்தாலும், அன்றைய அதே சோகம், உதவியற்ற தன்மை மற்றும் பயம் மேலெழும்பி என்னை உலுக்குகிறது.

ஆண்கள் மோகமாக, கிளர்ச்சியாக, வெறிகொண்டு பார்க்கும் இந்த மேனியை நான் வெறுக்கிறேன். நீங்கள் எதிர்பார்க்கும் எந்த சுகத்தையும் என்னால் உணர்வுடன் கொடுக்க முடியாது. உங்களது தூய்மையான நேசம் பிடித்திருக்கிறது வசீகரன். ஆனால் என் மனதின் எல்லையைக் கடந்து என்னால் வர முடியவில்லை. வர முடியாது!

உங்களின் எதிர்பார்ப்புகளை ஏக்கங்களாய் மாற்றி ஏமாற்றுவது எனக்கு குற்ற உணர்வைத் தருகிறது. ஒரு வருட காலம் எல்லாம் இழுக்க வேண்டாம். இந்த நிமிடம். இந்த நொடி. நாம் விலகி விடலாம் " என்றாள் முடிவாக.

அவள் குரலின் தீவரத்தை உணர்ந்தவன், இந்த நிலையை நீட்டிக்க விரும்பாமல், "வாங்க அம்மணி. இரவு நேரத்தில் இந்த கடற்கரை ஓரத்தில் நாம் ஜாகிங் செய்து வரலாம். மனம் சிறிது புத்துணர்வு அடையும்" என்றான்.

திடீரென்று வசீகரன் இப்படி கேட்டதும் புரியாமல் விழித்தாள் ஜேபி.

திகைத்தவளின் தோற்றத்தைக் கண்டு கொள்ளாமல், அவளின் தோளினைத் தொட்டு, மணலில் இருந்து எழுப்பி, " ஓடிப் போகலாமா? " என்றான்.

"வாட்...?" என்று அதிர்ந்தவளிடம், "கடற்கரையைச் சுற்றி ஓடிப் போகலாமா என்று கேட்டேன்" என்றான் வசீகரன் குறும்புச் சிரிப்புடன்.

சிறுவயதில் இருந்து அவளின் மனதில் பூட்டி வைத்த பக்கங்களை வசீகரன் வாசித்ததில், மனம் சற்றே லேசானது போல் உணர்ந்தவள், அவனோடு ஜாகிங் செல்ல சம்மதித்து, அவனோடு இணைந்து ஓட ஆரம்பித்தாள்.

ஸ்ருதியோடு தாளம் இணைந்தது போல், இதமான தாள லயத்தோடு இருவரின் காலடி ஓசைகளும், இதயத்துடிப்புகளும் லாலிதம் பாடின.

நிலவு தோன்றிய வானில், நட்சத்திரப் பூக்களை பார்த்துக் கொண்டே, இலக்கில்லாமல் இருவரின் கால்களும் பயணப்பட்டது.

அரை மணி நேரம் ஓடியதில் தோன்றிய கோபங்களும், படபடப்புகளும், ஆதங்கங்களும், கசப்புகளும், ஏக்கங்களும் சற்றே வடிந்தன ஜேபிக்கு.

ஓரிடத்தில் யாரோ நெருப்பினை பற்ற வைத்து, குளிர் காய்ந்துவிட்டு, நெருப்பினை அணைக்காமல் விட்டுவிட்டு போயிருக்க, அந்த ஜோதி சுடர் விட்டு வளர்ந்து, எரிந்து கொண்டிருந்தது.

அந்த நெருப்பின் அருகே வந்ததும், வசீகரனின் ஓட்டம் தடைபட்டது. வசீகரன் நின்றதும் ஜேபியும் அவனுடன் நின்றாள்.

நெருப்பின் ஒரு பக்கம் ஜேபியும் மறுபக்கம் வசீகரனும் நின்றனர்.

" மனிதர்கள் இறைவனுடன் பேசுவதற்கு இந்த அக்னி தான் தூது செல்கிறது அம்மணி. அப்படிப்பட்ட இந்தத் தூய அக்னி சாட்சியாக உங்களை என் சரிபாதியாக ஏற்றுக் கொண்டேன். இதோ இன்று மீண்டும் இந்த அக்னி சாட்சியாகக் கேட்கிறேன்.

உங்களை உங்களாகவே உணரச் செய்வேன். உங்களை என் உயிரினும் மேலாகப் பாதுகாப்பேன். என் காதல் அனைத்தையும் உங்கள் முன் சமர்ப்பிப்பேன்.

என் வார்த்தைகளைக் கடந்து செல்வதும், என்னைக் கடந்து செல்வதும் இனி உங்கள் விருப்பம்.

என்னைக் கடந்து சென்ற பின், உங்களிடம் தோற்றுப் போன இந்த வசீகரன் என்ற ஒருவன் இனி உங்கள் வாழ்க்கையில் எந்த இடத்திலும் நிற்க மாட்டான். என் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! " என்றவன் கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு கால்களை அகட்டி நின்று, ஜேபியின் விழிகளை ஆழ்ந்து நோக்கினான்.

வேரோடு அவனை வெட்டி வீச வேண்டும் என்றதும் ஜேபியின் அடி ஆழத்தில் வசீகரன் மேல் பூத்த நேசத்தின் வேரில் தீப்பற்றிக் கொண்டது.

" கணவன் மனைவி என்ற உறவு இல்லை என்றால் என்ன, நான் உங்களைப் பார்க்கவும் பேசவும் கூடாது என்றால் எப்படி மிஸ்டர் வசீகரன்? " என்றாள்.

"கிட்டாதாயின் வெட்டென மற. அதாவது ஒரு பொருள் அல்லது ஒரு விஷயம் நமக்குக் கிடைக்காது என்ற பட்சத்தில் அதனை உடனடியாக அப்படியே மறந்துபோய் விட வேண்டும். அங்கேயே நாம் தேங்கி நின்றால் வீழ்ந்து போய் விடுவோம் அம்மணி " என்றான்.

' எனக்கு வாரங்கள் , நாட்கள் கூடக் கொடுக்காமல், இப்படி நிமிடங்களைக் கொடுத்து விட்டு பதில் கூற வேண்டும் என்றால் எப்படி? " பதட்டத்துடன் வந்தது ஜேபியின் குரல்.

கைப் பொருள் நம்மை விட்டு பறிபோகும் போது தான், அதன் முழுமதிப்பும் தெரிந்து, அதனைக் கையகப்படுத்தும் வழியை நம் மனது ஆராயும்.

ஜேபியின் ஆழ் உணர்வுகளைத் தட்டி விட்டு, அதன் பிரதிபலிப்புகளை அவள் கண்களில் வாசித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.

" எனக்கு வேறு வழி கிடையாது அம்மணி. இந்த நொடி உங்களுக்கானது. அதை நமக்கானதாக மாற்றும் முடிவும் உங்களிடமே. உங்கள் முடிவில் மாற்றமில்லை என்றால் உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வேன். நில்! அல்லது செல்! இதுவே நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் சொல்." என்றான்.

மௌனம். மௌனம். நீண்ட மௌனம் மட்டுமே ஜேபியின் பதிலாக இருந்தது.

பட்டுப்புழு கூட்டை விட்டு தானாகவே வெளிவர வேண்டும். நாம் உதவ முயற்சி செய்தாலோ அது மரித்துப் போகும். அந்தச் சிறிய பறவை தானாகவே சிறகை விரிக்க வேண்டும். அந்த வலியையும், வேதனையையும் கடந்து வரும் நொடி இதுவே எனத் தீர்மானித்த வசீகரன், சத்தமின்றி ஜேபியை விட்டு விலகிச் செல்ல ஆரம்பித்தான்.

அவன் செல்லும் திசையை ஆடாமல், அசையாமல், விழி மூடாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜேபி, வசீகரனின் தோற்றம் முற்றிலுமாக மறைந்ததும், தன் சக்தி எல்லாம் தீர்ந்தது போல் மண் தரையில் அக்னி முன் அமர்ந்தாள்.

'வசீகரன் போல் ஒரு அருமையான வாழ்க்கைத் துணை உனக்கு அமைவது அரிது. உன் வசீகரன் உன்னைப் புரிந்து கொள்வார். உன் நிராகரிப்புகளை அவர் அங்கீகரிப்பார். அவரை உன் வாழ்க்கையில் அடியோடு ஒதுக்கிய நீ ஒரு முட்டாள்!' அவளது மனம் அவளைச் சாடியது.

' என்னை மாற்ற முயற்சிக்காதே! வசீகரன் நன்றாக இருக்கட்டும். அவருக்கென்று ஒரு பெண்... பெ...ண் வ... ரு... வா... ள்' என்றது அவளது மற்றொரு மனம்.

" வசீகரனை வேறொரு பெண்ணுடன் வார்த்தையால் கூட உன்னால் சேர்க்க முடியவில்லை. வாழ்க்கையில் சேர்ந்து இருப்பதைப் பார்த்தால் என்ன செய்வாய்?' என்றது.

மனதிற்குள் வசீகரனுடன் வேறொரு பெண்ணை கற்பனை செய்ய முயன்ற ஜேபியின் முகம் கசங்கியது.

' உன் தந்தை உனக்கு அவ்வளவு ஆறுதல் கூறி உற்ற துணையாய் நின்றது எல்லாம் வீணா? தைரியசாலி போல் வெளி உலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கும் நீ, உண்மையிலேயே உன் மனதை வெல்லத் தெரியாத ஒரு கோழை.
உன் மாற்றத்திற்கான முதல் அடியை நீதான் எடுத்து வைக்க வேண்டும்.
வேறொரு ஆணின் கரத்தால் தீண்டப்பட்டதால், நீ தீண்டத் தகாதவளா? வசீகரனின் காதலுக்கு அருகதை இல்லாதவளா?' மனசாட்சி கேள்வி கேட்டது.

'அன்று நடந்த நிகழ்வில் என் தவறு என்ன இருக்கிறது? பெண்ணாய் பிறந்தது என் தவறா? அழகு தவறா? உடை தவறா? நடை தவறா? வசீகரன் தீண்டத் தகாதவளாக நான் ஏன் என்னை சித்தரித்துக் கொள்கிறேன்! வசீகரனின் காதலை எவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்து விட்டேன்', உண்மை சுட, தன் மனம் வலிக்க, சுடர்விடும் அக்னியை அசையாமல் பார்த்தாள்.

ஜேபியின் மனம் எங்கும் போராட்டமும், தள்ளாட்டமும் மாறி மாறி நிழலாடியது.

தன்னுள் விழும் எதனையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு, ஜூவாலையாய் மாற்றி புனிதமாக்கும் அக்னியில், தன் கடந்த காலக் கசடுகளை மனதில் இருந்து அள்ளிக்கொட்டி வீசிவிட்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள்.

உடலெங்கும் பரவிய உஷ்ணம் குறைய, உடலைத் தளர்வாய் தளர்த்தி, மணலில் சரிந்து, நட்சத்திர ஓட்டைகளைத் தாண்டி தன் வானம் தென்படுகிறதா? என்று பார்த்தாள்.

நேற்று வரைஅவளுக்கு இனித்த தனிமை, வசீகரனின் வரவிற்குப் பின் பாரமாய் இருந்தது.

தன் மன மாற்றத்தை வசீகரனிடம் சொன்னால் தன்னைப் புரிந்து கொள்வானா? தன்னை மீறி எழும் எதிர்ப்புகளை எதிர்கொள்வானா? இல்லை. முடிந்த கதை முடிந்தது தான் என்று முற்றுப்புள்ளி வைப்பானா? தேவர்களுக்கு தூது செல்லும் அக்னியிடம் தன் தேவனுக்கு தூது விட்டாள் ஜேபி.

சுழன்று அடித்த கடற்கரைக் காற்றில், மண் துகள்கள், மூட்டிய நெருப்பில் விழுந்ததும் நெருப்புப் பொறிகள் உயர்ந்து எழுந்து படபடவென தெறித்து தலைவனுக்கு தலைவியின் மனதைத் தூது அனுப்பியது.

நேரம் செல்லச் செல்ல, வசீகரன் இல்லாத வாழ்க்கையின் நிதர்சனம் ஜேபிக்கு உண்மையைக் கூற, புறங்கைகள் கொண்டு கண்களை மூடி படுத்திருந்தவளின் கண்களின் ஓரம் மெல்லிய நீரால் கசிய ஆரம்பித்தது.

வசீகரனை தான் நேசித்த உண்மையை இந்த நொடி ஒத்துக்கொள்ள வேண்டும் என்பது போல் அவள் உள்ளம் உணர்த்த, யாருமற்ற தனிமை தைரியம் தர, உள்ளத்தின் இடுக்கில் கசிந்த காதல், தேனாய் அவள் நாவில் விரவி, மெல்லிய இதழ் பூட்டைத் திறந்து காற்றோடு சொன்னாள், "வசீ ஐ லவ் யூ...".

" கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள் அம்மணி" என்று அருகில் வசீகரன் குரல் கேட்டதும், சட்டென்று குரல் வந்த திசைப் பக்கம் திரும்ப, வசீகரனின் மார்போடு ஒட்டிக்கொண்டாள்.

"ஏன்?" என்று வார்த்தைகளால் இல்லாமல் கண்களால் அவனைப் பார்த்து கேட்க, "எத்தனை வருடக் காதல். அவ்வளவு சீக்கிரம் விட்டு விலகிச் செல்வேனா?" என்றான்.

"நான்.... இன்னும் கொஞ்சம் நாள்... எடுத்துக்கொள்ளலாமா?" தயக்கத்துடன் வந்ததது ஜேபியின் வார்த்தைகள்.

அவனுக்கென உள்ளத்தை தயார் செய்தாலும், உடலால் எதிர்வினை காட்டி விடுவோமோ என்ற அச்சத்தை அவளின் விழிகள் பிரதிபலித்தது.

சிரித்துக் கொண்டே வசீகரன் தான் மறைத்து வைத்திருந்த, ஜேபி முதல் நாள் கல்லூரியில் தூக்கி எறிந்துச் சென்ற அவளின் துப்பட்டாவினை அவள் முன்காட்டி, "என் காதல் எந்த இடத்திலும் உங்களை காயப்படுத்தாது அம்மணி" என்றான்.

பார்வையில் ஆச்சரியமும், மெல்லிய வெட்கமும் படற, அவன் கொண்ட காதல் மெல்ல அவள் வசமாகத் தொடங்கியது.

தன் கையில் இருந்த துப்பட்டாவை ஜேபியின் முகத்தில் படரவிட்டான். என் நேசத்தின் அழகை சொல்ல இன்னும் ஆயிரம் இரவுகள் இருந்தாலும், என்னை நேசத்தின் அறிமுகத்தை இந்த இரவில் எழுதப் போகிறேன்.

"வில்லாய் வளைந்து என்னைத் தாக்கும் இந்த புருவங்கள் எத்துனை அழகு!"

வார்த்தைகளின் வழி அவன் விரல்களும் அவளின் புருவ மேட்டினை மீட்டியது.

" ஒவ்வொரு முறையும் மூடித் திறக்கும் போது இந்த இமைக்குள் எத்தனை தடவை சிறைக் கைதியாய் அகப்பட்டிருக்கிறேன். அதற்குத் தண்டனை தரவில்லை என்றால் எப்படி? " என்றவனின் இதழ்கள் அவளின் இமைகளுக்கு முத்தத் தண்டனை தந்தது.

கசக்குமோ, தகிக்குமோ என்று எண்ணியவளின் தேகமோ சிலிர்த்து அடங்கியது.

" கோபத்தை கிரீடமாய் சூட்டி இருக்கும் இந்த நாசியின் நுனி என்றும் தனி" என்றவனின் நாசி அவளின் நாசியோடு உரசி தீப்பற்ற வைத்தது.

" பேசிப் பேசி என்னை பேசாமல் செய்த இந்த இதழ்களுக்கு... " என்றவனின் வார்த்தை முடிவதற்குள் ஜேபியின் முகத்தில் படர்ந்து இருந்த துப்பட்டா வசீகரனின் முகத்திற்கு இடம் மாறியது.

சிரித்துக் கொண்டே தன் முகத்தில் படர்ந்த துப்பட்டாவினை விலக்கிய வசீகரனின் கண்களுக்கு, கடற்கரை ஓரத்தில் கைகளை இருபுறமும் விரித்துக்கொண்டு ஓடும் ஜேபி தெரிந்தாள்.

"சிறிய பறவை

சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகை விரித்து

நிலவை உரச நினைக்கிறதே..."

சிறகுகள் நீளும்...

 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
வென்று விட்டான் வஞ்சியவள் மனதை 🥰🥰🥰