• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அதியா

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 20, 2021
Messages
267
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 3

பூட்டிய தன் அறைக்குள், தன் படைப்பு உருவங்களை எடுத்து தன்னைச் சுற்றி அடுக்கினாள் ஜேபி.

பாரதியின் உருவத்தை எடுத்து தன் செவிக்கு அருகில் கொண்டு வந்தாள். காற்றோடு காதில், "ரௌத்திரம் பழகு..." என்ற குரல் செவியில் மோத நிமிர்ந்து அமர்ந்தாள்.

தமிழ் வகுப்பில் தன் தமிழம்மா கூறிய விளக்கம் அவளுக்கு நினைவிற்கு வந்தது.

'எல்லோரும் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் என்று கூற பாரதி மட்டும், உங்களின் நியாயமான கோபத்தை வெளிப்படுத்துங்கள் என்கிறார். அநீதி நடக்கும் போது, அதனை துணிவோடு தட்டிக் கேட்கும் கோபம் வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் நமது நியாயமான கோபம், நாளை அந்தத் தவறை நடக்க விடாமல் தடுக்கும் என்கிறார். தவறு நடந்தால் தட்டிக் கேட்க வேண்டும்.

“ரௌத்திரம் பழகு” என்பது நம் கடமை. ஆணுக்கு அது ஆண்மை என்றால் பெண்ணுக்கு அது கவசம்' என்ற விளக்கங்கள் ரீங்காரமாய் அவள் மனதில் எழுந்தன.

'தட்டிக் கேட்க வேண்டும். முடிவு எழுத வேண்டும்' இறுதியாக இந்த வார்த்தைகளே, அவள் மனதில் நிலைபெற்று நின்றது. தெளிவான முடிவெடுத்த பின் தூக்கம் அவளை சூழ்ந்தது.

காலையில் உற்சாகமாக பள்ளிக்கு கிளம்பிய தன்மகளை பெருமையுடன் பார்த்தார் பெருமாள்.

அவளுடைய வகுப்புத் தோழிகள் அனைவரும் வகுப்பிற்குள் நுழைய ஜெயலட்சுமி பெருமாள் மட்டும் பள்ளியின் முதல்வர் அறைக்கு முன் அவரை சந்திப்பதற்காக அனுமதி வேண்டி நின்றாள்.

வகுப்பிற்குள் செல்லாமல் வெகு நேரமாக, காரணங்கள் எதுவும் சொல்லாமல், "முதல்வரை பார்க்க வேண்டும்" என்று மட்டும் கூறிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

"வகுப்பு ஆசிரியர்கள் இல்லாமல் மாணவிகள் தனியாக வந்து முதல்வரை பார்க்கக் கூடாது" என்று பியூன் முதலில் இதமாகத் தொடங்கி பின் காறாராக முடித்தார்.

" பரவாயில்லை எவ்வளவு நேரம் ஆனாலும் நான் பார்த்து விட்டு தான் செல்வேன்" என்று தன் உறுதியான குரலில் கூறிவிட்டு சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது, அவர்களைக் கடந்த சென்ற முதல்வர் என்னவென்று கேட்கும் முன், "நான் உடனடியாக உங்களிடம் பேச வேண்டும்" என்றாள் ஜேபி அவரின் கண்களை நேராகப் பார்த்து.

பியூன் ஏதோ சொல்ல வருவதற்குள், கைகாட்டி அவரை நிறுத்திவிட்டு, "யு மே கம் இன்... " என்று கூறிவிட்டு உள்ளே நுழைந்தார் முதல்வர்.

தன் அறைக்குள் நுழைந்தாளே பயமும் படபடப்புமாக இருக்கும் மாணவியரையே கண்ட அந்த முதல்வரின் கண்களுக்கு, நிமிர்வாக நின்ற ஜெயலட்சுமி பெருமாள் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தாள்.

தன் முன்னே நின்றவளை பேசும்படி சைகை செய்தார். வில்லிலிருந்து புறப்பட்ட நாண் போல் ஜெயலட்சுமியின் வார்த்தைகள் சரமாரியாக கொட்டத் தொடங்கின.

"வணக்கம் மேடம்! நமது பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் எனது பெயர் ஜெயலட்சுமி பெருமாள். நான் கடந்த சில நாட்களாக எனது வகுப்புத் தோழிகளுடன் அரசு பேருந்தில் பயணம் செய்கிறேன். பள்ளி பேருந்து நிறுத்தத்தில், நமது மாணவியர் பலரின் சீண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சரியான கண்காணிப்பு இல்லாததால், நாளுக்கு நாள் அவர்கள் கொடுக்கும் தொல்லையும் அதிகமாகிறது"

"அதற்கு என்ன தீர்வு? " என்று கேட்ட முதல்வரின் கண்கள் கூர்மையாய் ஜேபியை நோக்கியது.

"நமது பள்ளி முடியும் நேரத்தில், பேருந்து நிறுத்தத்தில் பெண் காவலர்களை, சில மணி நேரங்கள் நமது மாணவியருக்கான பாதுகாப்பு பணியில் அமர்த்தலாம்"

"இதனால் மட்டுமே, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியுமா?" அவளின் பதிலுக்காக காத்திருந்தார் முதல்வர்.

"நிச்சயம். கண்காணிப்பும் பாதுகாப்பும் மாணவியருக்கான பாதுகாப்பில் முதல் கட்ட நடவடிக்கை ஆகும். மேலும் காவலன் செயலி போல், பாதுகாப்பு கருவிகளை அந்தந்த பேருந்து நிலையத்தில் நிறுவலாம். உதவி தேவைப்படும் மாணவியர் அந்த கருவியை அழுத்தி அருகில் இருக்கும் காவல் நிலையங்களில் உதவி கேட்கலாம்.

நமது பள்ளி பேருந்து நிறுத்தத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவலாம். அதன் கண்காணிப்பை நமது பள்ளி எடுத்துக் கொள்ளலாம்" தன்னை போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில், தனக்குத் தெரிந்த யோசனைகளை முன் வைத்தாள் ஜேபி.

"அவ்வளவு தானா?" என்றார் முதல்வர் ஆராய்ச்சி குரலில்.

"மேடம்! விளையாட்டுப் பாட வேளையில் தற்காப்பு பயிற்சிகள் சொல்லித் தரலாம். பிரத்தியோக ஆலோசனை வகுப்புகள் வைக்கலாம். ஆலோசனை பெட்டி ஒன்று வைத்து மாணவிகளின் கருத்துக்களையும் கேட்கலாம்" என்று சொல்லிக்கொண்டே சென்ற ஜேபியை, "சபாஷ்..." என்ற முதல்வரின் கைதட்டல் நிறுத்தியது.

"ஏதோ வித ஒரு விதத்தில் உன்னை பாதித்ததற்கு நீ தரும் பதிலடி என்று புரிகிறது. நிச்சயம் உன் கருத்துக்களை எல்லாம் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவேன். உடனே தீர்வு காண வேண்டிய கட்டாயம் என்ன உனக்கு? "

" வந்தபின் தவிப்பதை விட, வருமுன் காக்க வேண்டும். நான் எந்த இடத்தில் வீழ்ந்தேனோ அதே இடத்தில் எழுந்து நிற்க ஆசைப்படுகிறேன் மேடம். என்னைப் போலிருக்கும் அனைவரையும் தூக்கி விட முயற்சி செய்கிறேன்"

" நிச்சயமாக! முதலில் உனக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! ஆசிரியர்களோடு சேர்த்து மாணவிகளையும் இணைத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்குகிறேன். நிச்சயம் அந்த குழுவில் உனக்கும் ஒரு பங்கு உண்டு"

" நன்றி மேடம்! எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன்" என்று கூறிவிட்டு தன் வகுப்பறைக்குத் திரும்பினாள் ஜேபி.


ஆலோசனைக் குழுவுடன் சேர்ந்த ஜேபி, மன தைரியம் தரும் வாசகங்களை அச்சிட்டு, பள்ளியின் முக்கிய இடங்களில் மாட்டினாள். தற்காப்பு கலை வகுப்புகளில் ஆர்வமுடன் பங்கேற்று மற்ற மாணவியரையும் பங்கேற்க உற்சாகப்படுத்தினாள்.

ஆலோசனை குழு நிறுவப்பட்டு, தேவைப்படுபவருக்கு பிரத்யோக ஆலோசனை வழங்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை சிறப்பாக எழுதி முடித்துவிட்டு, அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றி பெற்ற தன் மகளை வாழ்த்தினார் பெருமாள்.

பள்ளியில் முதலாவதாக வந்த ஜெயலட்சுமி பெருமாளை பள்ளி நிர்வாகம் பாராட்டி, பதினொன்றாம் வகுப்பில் அவள் கேட்கும் பிரிவை தர முன் வந்தது.

பெருமாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன் மகளைப் பார்க்க, " சாரி மேடம்! நான் என் மேல்நிலை வகுப்புகளை இரு பாலர் படிக்கும் பள்ளியில் தொடரப் போகிறேன். பாதுகாப்பு என்ற பெயரில் ஒரு சிறிய வட்டத்திற்குள் நின்று, ஆண்கள் உலகம் ஆபத்தானது என்று நான் சொல்லப் போவதில்லை.

பெண்கள் உலகத்தில் மட்டுமே பெண்களால் ஜெயிக்க முடியும் என்ற விதியை மாற்றி, ஆண்கள் உலகத்திற்குளும் அடி எடுத்து வைத்து நிச்சயம் வெற்றி பெறுவேன். அச்சுறுத்தலை விட அனுபவத்தை சிறந்த பாடமாக எடுத்துக் கொள்ளப் போகிறேன்.

என்னை வழிநடத்த என் தந்தை இருக்கும்போது நிச்சயம் நான் ஒருபோதும் என் முடிவில் இருந்து பிரள மாட்டேன். எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றிகள் மேடம்" என்று தெளிவாக பேசிய ஜேபியை அனைவரும் ஆச்சரியமாய் பார்த்தனர்.

அனைவரும் ஒரு சேர, "வாழ்த்துக்கள்!" என்றனர்.

இரு பாலர் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு கணிப்பொறிப் பிரிவு வகுப்பிற்குள் அடியெடுத்து வைத்தாள் ஜேபி.

முன்னிருக்கைகள் அனைத்திலும் மாணவியர் அமர்ந்திருக்க பின் இருக்கைகளில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். மாணவியர் சற்று நகர்ந்து அவளுக்கு இடம் கொடுக்க, அனைத்தையும் தவிர்த்து விட்டு, தன் கண்களால் அந்த வகுப்பறையை அலசி ஆராய்ந்து விட்டு, மூன்று மாணவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குச் சென்று, "இங்கே இடம் கிடைக்குமா?" என்றாள்.

"கேர்ள்ஸ் எல்லாம் முன்னாடி தான் உட்காரனும்" என்றான் மூவரில் ஒருவன்.

"ஏன் இந்த பெஞ்சு உங்க மாமியார் வீட்டில் இருந்து எடுத்து வந்ததா?" என்றாள் ஜேபி.

"மாமியாரா?" என்று அதிர்ந்தவன் ஓசை இல்லாமல் நகர்ந்து அமர்ந்தான்.

இருக்கையில் அமர்ந்தவள் அந்த மூவரையும் பார்த்து, "நான் ஜெயலட்சுமி பெருமாள்! யு கேன் கால் மீ ஜேபி" என்றாள் சிரித்த முகத்துடன்.

அவளின் சிரித்த முகம் சிநேகமாய் அவர்களிடம் நட்பு பாராட்ட, " நான் மதுசூதனன்! நான் யாதவ்! நான் கிருஷ்ணா!" என்று தங்களை அவளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

அவர்கள் அறிமுகப்படுத்தி முடித்ததும் விடாமல் சிரித்தாள் ஜேபி.

"இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?" புரியாமல் கேட்டான் கிருஷ்ணா.

கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "மதுசூதனன் எம், கிருஷ்ணா கே, யாதவ் ஒய், எம்கேஒய்... அதான்பா மங்கி, நீங்கள் மூவர் இருந்ததும் மூன்று குரங்குகள் ஞாபகம் வந்ததுவிட்டது மங்கி பிரதர்ஸ்" என்று நகைத்தாள் ஜேபி.

"இந்த மங்கி கூட்டத்திற்குள் வந்த இந்த சங்கியை வரவேற்கிறோம்" என்றான் கிருஷ்ணா காட்டமாக.

"ஓ... இன்று முதல் இந்த மங்கி டீம், சங்கி மங்கி டீம் என்று அழைக்கப்படும்.. டும்... டும்..." என்றாள்.

தங்களோடு சரிக்கு சரியாக வாயாடும் ஜேபியை, "பிரண்ட்ஸ்..." என்று கைநீட்டிய மதுசூதனனின் கை மீது தன் உள்ளங்கையை அடித்து, "பிரண்ட்ஸ்..." என்றாள் தன்னுடைய அழுத்தத்தில் இருந்து வெளியேறி, தன்னைத் தானே கலகலப்பாக உருமாற்றிக் கொண்ட ஜேபி.

அன்று ஆரம்பித்த அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமமாக அழகாக வளர்ந்தது.

ஜேபியின் பொக்கிஷப் பெட்டிக்குள் மங்கி பிரதர்ஸின் மெழுகு உருவங்களும் சேர்ந்தன.

தங்கள் வீட்டிற்கு மூவரையும் அழைத்து வந்து தன் தந்தையிடம் அறிமுகப்படுத்தினாள் ஜேபி.

அன்னம்மாளிடம் மூவரையும் அறிமுகப்படுத்தும் போது, ஜேபியை முறைத்துப் பார்த்தார்.

"மங்கி பிரதர்ஸ் உங்கள் மூவரையும் என் பாட்டிக்கு பிடிக்கவில்லை. அதனால் என் பாட்டியை இம்பிரஸ் செய்பவர்களுக்கு செம ட்ரீட் வைக்கப்படும்" என்றாள் ஜேபி.

"அவ்ளோதானே ஜேபி? பாட்டியை கரெக்ட் பண்ணுவது எங்கள் பொறுப்பு" என்றான் யாதவ்.

"என்னது பியூட்டியா? நானா?" என்று வாயைப் பிளந்தார் அன்னம்மாள்.

" ஆமாம்... ஆமாம்... " என்று எசப்பாட்டு பாடினர் மங்கி பிரதர்ஸ்.

"பாட்டி.... சீ... பியூட்டி... நாங்கள் உங்களிடம் தனியாக பேச வேண்டும்" என்று கூறி அவரை தனி அறைக்குள் அழைத்து சென்று கதவை அடைத்தனர் மங்கி பிரதர்ஸ்.

வரவேற்பறையில் தன் கைகடிகாரத்தை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் ஜேபி. இரண்டு மணி நேரம் கடந்த பின்பும் கதவு திறக்கப்படாததால், கதவை தட்டுவதற்கு கையை ஓங்கும் முன் கதவு திறந்தது.

மிடுக்குடன் பாட்டி வெளியே வர அவர் பின்னே தங்கள் கைகளை கட்டிக் கொண்டு பணிவாக நடந்து வந்தனர் மங்கி பிரதர்ஸ்.

" பாய்ஸ் அடுத்த தடவை வரும்போது உங்களுக்கு பிரியாணி செய்து வைக்கிறேன். அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்" என்றார் அன்பு கட்டளையாக.

"ஓகே பியூட்டி அப்போ நாங்க கிளம்புறோம் " என்ற மங்கி பிரதர்ஸ்க்கு கையசைத்து வழி அனுப்பினார் அன்னம்மாள்.

ஒன்றும் புரியாமல் திருத்திருவென விழித்த ஜேபி, "டேய் மங்கி பிரதர்ஸ் நில்லுங்கடா!" என்று வாசல் வரை ஓடினாள்.

"மிஷன் கம்ப்ளீட்டட். ட்ரீட் ரெடி பண்ணிவை ஜேபி" என்றனர்.

"இத்தனை வருஷமா என்னால முடியாததை எப்படி செய்தீர்கள்? " என்றாள் ஜேபி அதிர்ச்சியாக.

மூவரும் வீட்டை விட்டு வெளியேறும் முன் தங்கள் செல்போனை அசைத்து, "ம்... உண்மையை சொன்னோம்!" என்றனர்.

யோசனையுடன் தனது செல்போனை எடுத்துப் பார்த்த ஜேபி கண் சிமிட்டவும் மறந்து நின்றாள்.

மங்கி பிரதர்ஸ் உடன் பாட்டி சேர்ந்து செய்த ரீல்ஸ் அரை மணி நேரத்திற்குள் ஆயிரம் லைக்ஸ் வாங்கி குவித்திருந்தது.

"அடப்பாவிகளா! என் பாட்டியையே மாற்றி விட்டீர்களே!" என்றவள் மெதுவாகத் திரும்பி தன் பாட்டியை பார்க்க, முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தை பல கோணங்களில் மாற்றி மாற்றி நவரசத்தை பிழிந்து கொண்டிருந்தார் பாட்டி.

"அன்னம்மாள் பாட்டி... " என்று கத்தினாள் ஜேபி.

"ஹேய்... ஏன் இந்த கத்து கத்துற? இன்று முதல் என் பெயர் ரைஸா" என்றார்.

"என்ன? ரைஸாவா?"

" அட கிறுக்கு பயபுள்ள. அன்னத்துக்கு இங்கிலீஷ்ல ரைஸ். நம்ம கிருஷ் தான் சொன்னான். மதுவும், யாதும் இந்த பெயரை எனக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்கள். ரைஸா... ஹவ் இஸ் இட்? " என்றார் கண்ணாடியிலிருந்து தன் முகத்தை திருப்பாமல்.

"பாட்டி... ரொம்ப கேவலமா இருக்கு"

" உனக்குப் பொறாமை. உன் பெயரை விட என் பெயர் எவ்வளவு மார்டனாக இருக்கிறது என்று. நாங்கள் இனி யூ டுயூப் சேனல் ஆரம்பிக்கப் போகிறோம். எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி. பெருமாள் வந்ததும் எனக்கென்று ஒரு போன் வாங்கி தரச் சொல்ல வேண்டும்" கனவுகளில் மிதக்க ஆரம்பித்தார் பாட்டி.

"ஆங்... மங்கி பிரதர்ஸ். உங்களை..." என்று வார்த்தை வராமல் கோபம் கொண்டாள் ஜேபி.

அவள் நினைத்த மாத்திரத்தில் மங்கி பிரதர்ஸிடம் இருந்து போன் வந்தது. "அப்புறம் ஜேபி எங்களுக்கு எப்போ எங்கே ட்ரீட் தரப் போறே?" என்றனர் உற்சாகமாக.

"ஆடு தனக்குத்தானே மஞ்சள் தண்ணீர் ஊத்திக்கிட்டு, மாலையும் போட்டுக்கிட்டு, வெட்டு வெட்டுனா வெட்டாம விட முடியுமா? ட்ரீட் தானே, தந்தா போச்சு"

"மாலை எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு வந்து விடுங்கள். உங்களுக்கான பரிசு காத்திருக்கிறது" என்றாள்.

" நிச்சயம்" என்று கூறி அழைப்பை கட் செய்தனர் மங்கி பிரதர்ஸ்.

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா... "


அர்ச்சகர் விநாயகர் துதி பாடலை பாடிவிட்டு ஆரத்தி நீட்ட, கண் மூடி கடவுளோடு லயித்திருந்தான் வசீகரன்.

அவன் அருகில் நின்றிருந்த அவன் பெற்றோர்கள், வசுமதி மற்றும் தினகரன் மலர்ந்த முகத்துடன் தங்கள் மகனை நோக்கினர்.

வசுமதி மெல்ல வசீகரனின் தோளைத் தட்டி, " வசீ, ஆரத்தி எடுத்துக்கோப்பா!" என்றார் மென்மையாக.


மெல்ல கண்களைத் திறந்த வசீகரன், சிரித்த முகத்துடன் தன் முன் இருந்த தன் இஷ்ட தெய்வத்தை பணிவாய், வணங்கி விட்டு, ஆரத்தியை கண்களில் ஒத்திக் கொண்டான்.

"நல்லா படிச்சு முடிச்சிட்டு நல்ல வேலைக்கு போகணும். இந்த காலத்திலேயும் இவ்வளவு சிரத்தையாக, கடவுளை வணங்கும் உனக்குத் தகுந்தாற்போல், அமைதியான நல்ல ஆம்படையாள் கிடைப்பாள்" என்று அர்ச்சகர் ஆசீர்வாதம் செய்ய, "நச்" என்று தும்மி விட்டு, பிரகாரத்தை வலம் வந்தாள் ஜெயலட்சுமி பெருமாள் தன் நண்பர்களைத் தேடி.

மங்கி பிரதர்ஸ் பிரகாரத்தின் ஓரத்தில் பாவம் போல் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள் ஜேபி.

தன் பையில் இருந்த மூன்று குளிர்பான பாட்டில்களை எடுத்து அவர்களிடம் தந்தாள். "இவ்வளவுதான் ட்ரீட்டா சங்கி?" என்றான் கிருஷ்.

"முதல்ல இதை குடிங்கப்பா... "

சரி என்ற மூவரும் அவள் தந்த குளிர்பானத்தை வாங்கி அருந்தினர். குடித்து முடித்ததும் கையில் பாட்டிலை வைத்து ஆட்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் விளையாட்டை தன் அலைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தாள் ஜேபி.

யாதவ், குளிர்பான பாட்டிலை தன் கால்களால் உதைத்து குப்பைத் தொட்டியில் சரியாக வீசினான்.

அவனைத் தொடர்ந்து மது, முயற்சி செய்ய அது சொதப்பி போனது. அடுத்ததாக கிருஷ், மதுவை போல் அவமானப்படாமல், கையில் இந்த குளிர்பான பாட்டிலில் மிச்சம் இருந்த குளிர்பானத்தை ஒரே மடக்காக குடித்துவிட்டு பாட்டிலை குப்பைத்தொட்டியின் அருகில் வந்து போட்டான்.

தன் அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்த ஜேபி, "ஹூரே... மொத்த ட்ரீட்டும் உனக்கு மட்டும் தான் கிருஷ்" என்று கத்தினாள்.

மூவரும் புரியாமல் அவளைப் பார்க்க தன் அலைபேசியில் பதிவு செய்த வீடியோவை அவர்களது அலைபேசிக்கு அனுப்பினாள்.

அந்த வீடியோவில், நடந்ததை ரிவர்ஸ் மோடில் பதிவு செய்திருந்தாள் ஜேபி. கிருஷ் குப்பைத் தொட்டியில் இருந்து பாட்டிலை எடுத்து அருந்துவது போல் இருந்தது அந்த வீடியோ.

கிருஷ் கொலைவெறியோடு ஜேபியை பார்க்க அவளோ அவனை பாசமாக கண் சிமிட்டி தலையசைத்துப் பார்த்தாள்.


சிறகுகள் நீளும்...
 
Last edited:

Shimoni

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
May 17, 2022
Messages
160
அனுபத்திற்காகவா 🙄🙄🙄 ஆண் நண்பர்கள் 😊😊😊

வசியின் ஆம்படையாள் தான் தானென்று சம்மதம் சொல்லிவிட்டாள் போல 🤭🤭🤭

குறும்புக்காரி 🤣🤣🤣
 
Top