• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 5

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 5


"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடிபோற்றுகின்றேனே!"

விநாயகர் துதியினை பாடிவிட்டு காலை உணவிற்கு உணவு மேசையில் வந்து அமர்ந்தார் பெருமாள். பாத்திரத்தை திறந்து பார்த்தவர் அப்படியே அதிர்ந்தார்.

பிரட்டும், ஜாமும் தனித்தனியே வீற்றிருக்க, எப்பொழுதும் தாய் தனக்கு பரிமாறும் இட்லியும், மணக்கும் சாம்பாரும், வகையான சட்னியும் இல்லாமல் காய்ந்து போன அந்த ரொட்டித் துண்டை பார்த்துவிட்டு, "அம்மா" என்று அழைத்தார் சத்தமாக.

எப்பொழுதும் தான் அழைத்ததும் உடனே வரும் அன்னை இன்று வராமல் போகவே, " குட்டிமா கொஞ்சம் பாட்டியை கூட்டிட்டு வாடா... " என்றார் அங்கு வந்த தன் மகளிடம்.

"சரிப்பா..." என்றவள் தன் பாட்டியை அழைத்து வரச் சென்றாள்.

"பாட்டி..." என்றவள் கத்திய கத்தலில், "எஸ்... எஸ்... கம்றேன்..." என்று கூறிக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்த பாட்டியை பார்த்து திருதிருவென முழித்தாள் ஜேபி.

காதில் மாட்டிய ப்ளூடூத் ஹெட்செட் உடன் யாருடனோ பேசிக் கொண்டே வெளியில் வந்தார் பாட்டி.

மங்கி பிரதர்ஸின் அட்டகாசத்தை நினைத்து மனதிற்குள் அவர்களை வறுத்து எடுத்தாள் ஜேபி.

"பாட்டி..." என்றாள் ஜேபி தன் கைகளை அன்னம்மாளின் முன் ஆட்டியபடி.

"யூ... வெயிட்... மீ... கம்மு" என்று அலைபேசியை தன் கைகளால் பொத்தியபடி, "என்னடி?" என்றார் காட்டமாக.

"கர்.... அப்பா உங்களை கூப்பிடுகிறார்" என்றாள்.

பெருமாளின் முன் வந்த அன்னம்மாள், "என்னப்பா? கொஞ்சம் சீக்கிரம் சொல்லு. வஞ்சிர மீனு போன்ல வெயிட் பண்ணுது" என்றார்.

ஒரே நாளில் தன் உலகம் தலைகீழாய் மாறியதைப் போல் தாயை ஒன்றும் புரியாமல் பார்த்தார் பெருமாள்.

" அம்மா காலை உணவு இன்று தயார் செய்யவில்லையா? " என்றார்.

"மை சன்னு... கண்ணு தெரியவில்லை என்றால் டாக்டர் கிட்ட போ. பிரட்டும் ஜாமும் எடுத்து வச்சுட்டு தானே வஞ்சர மீன் கூட பேசப் போனேன்"

" யாருமா அந்த வஞ்சர மீன்? அவருக்கு என்ன வேணுமாம்? "

" மை மூஞ்சி புக்கு பெஸ்டி. பழைய சோறு எப்படி வைக்கணும்னு டவுட் கேட்டுட்டு இருந்தான். அதை நான் சொல்லி முடிப்பதற்குள் இந்த வீட்டில் ஆயிரம் தொந்தரவு. ஒரு நாள் பிரட் ஜாம் சாப்பிட்டால் குறைந்து போய் விடுமா பெருமாள்? "

தாயின் புது அவதாரத்தில் மிரண்ட பெருமாளும், "ம்.. சரி மா..." என்று தனக்கு விதித்த பிரட்டையும் ஜாமையும் சாப்பிட உட்கார்ந்தார்.

ஜேபி தன் தலையை குறுக்காக சாய்த்து, அன்னம்மாள் போனின் தொடுதிரையை பார்த்தாள். மெசஞ்சரில் பெஞ்சமின் என்ற பெயரை தாங்கி இருந்தது அந்த அழைப்பு.

"ஹா... ஹா... பாட்டி பெஞ்சமின் என்ற பெயரை வஞ்சர மீன் என்று சொல்லும் உனக்கு, இங்கிலீஷ் பேசும் ஒரு அடிமை சிக்கி இருக்கிறதா?" என்றாள் சிரித்தபடி ஜேபி.

"ரைஸ்... ரைஸ்..." அந்தப் பக்கம் அலைபேசியில் இருந்து சத்தம் வரவே, " சிக்குனலு கிடைக்கல மீனு. தோ வரேன்..." என்று கூறிக்கொண்டே அலைபேசியை எடுத்துக்கொண்டு ஜேபியை பார்த்து கழுத்தை சுளுக்கிவிட்டு
சென்றார் பாட்டி.

தன் தந்தையின் அருகில் சென்றவள் அவர் தோளைத் தொட்டு, " சாரிப்பா இந்த மங்கி பிரதர்ஸ் உடைய வேலைதான் இதெல்லாம். நான் உங்களுக்கு தோசை சுட்டுக் கொண்டு வருகிறேன் " என்றாள் தன் தந்தையிடம்.

" இல்லைமா. எப்பொழுதும் மூலையில் அடைந்து எதையோ நினைத்துக் கொண்டே இருக்கும் என் அம்மா, இப்படி கலகலவென வளைய வருவது எனக்கு சந்தோஷமே. சிறு குழந்தை போல் அவரின் இந்த சந்தோஷம் என்றும் நிலைத்து நிற்க வேண்டும். ஆயிரம் சொன்னாலும் என் அன்னைக்கு என் மீது அலாதி பாசமே" என்றவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரட் சிக்கி விட, சத்தமாக புரையேறி இருமினார்.

மகனின் இருமல் சத்தம் கேட்டதும், ஓடி வந்த அன்னம்மாள், அவரின் தலையில் தட்டி, தண்ணீர் எடுத்துத் தந்தார்.

" நம்ம யாதவ் தான் நேற்று வரும்போது இதை வாங்கித் வந்தான். அவர்கள் வீட்டில் காலை உணவிற்கு இதைத்தான் உண்பார்கள் என்று சொன்னான். உனக்கு ஒத்துக் கொள்ளவில்லையா ராசா. நான் வேண்டுமென்றால் வேறு ஏதாவது செய்து தரவா? " என்றார் மகனிடம் தவறு செய்த குழந்தை போல்.

ஜேபியிடம் கண்களை காட்டி, சிரித்தார் பெருமாள்.

இவர்கள் இருவரையும் பார்த்து சத்தம் இல்லாமல் கிண்டல் செய்துவிட்டு நகர்ந்தாள் ஜேபி.

ஜேபியை பின் தொடர்ந்து வந்த பாட்டி, தன் அலைபேசியை ஜேபியின் மூக்குக்கு நேராக நீட்டி, "முகர்ந்து பார்.." என்றார்.

பாட்டியை இளக்காரமாக பார்த்துவிட்டு, முகர்ந்து பார்த்தாள் அவரின் அலைபேசியை.

"என்ன வாசனை வருகிறது?" என்றார் பாட்டி.

"வாசனையா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை " என்று முகத்தை சுளித்தாள் ஜேபி.

கலகலவென நகைத்தபடி, "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? " என்றார் பாட்டி.

"கர்.... பாட்டிமா... " என்று தன் கை கால்களை உதறி கோபத்தை அடக்கினாள் ஜேபி.

நான் உனக்குப் பாட்டி என்பது போல் அவளை மிதப்பாக பார்த்துவிட்டு நகர்ந்தார் அன்னம்மாள்.

பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால், நால்வரும் சேர்ந்து படிக்கலாம் என்று ஜேபியின் வீட்டிற்கு மாலை வந்தனர் மங்கி பிரதர்ஸ்.

ஜேபியை முந்திக்கொண்டு பாட்டி அவர்களை ஆரவாரமாய் வரவேற்றார். கிருஷ் காலை நொண்டி நொண்டி வரவே பதறிப் போனார் பாட்டி.

"ஏய்... கிருசு! என்னடா ஆச்சு?"

" அது ஒன்னும் இல்ல ரைசு. ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேனா, தவறி கீழே விழுந்து விட்டேன்" என்றான்.

" பார்த்து ஓடக் கூடாதா? முதல் பரிசு வாங்கினாயா? " என்றார் பாட்டி ஆர்வமாக.

" அட போ ரைசு. ஓட்டப் பந்தயம் ஆரம்பித்ததும் எல்லா பயலும் எனக்கு பயந்து முன்னாடி ஓடிப் போய்விட்டார்கள். ஓடிப்போன பயபுள்ளைக என்னை கீழே தள்ளி விட்டு போயிட்டாங்க. சோகம் சோகம்" என்றான் கிருஷ்ணா.

அனைவரும் சிரித்து விட, அன்னம்மாள் மட்டும் அவர்களை அடக்கினார்.

உள்ளே சென்ற அன்னம்மாள் மருந்து பாட்டிலை எடுத்து வந்து, "இந்த மருந்தை தடவிக்கிட்டே இரு சரியா போய்விடும்" என்றார் கரிசனையாக.

நண்பர்கள் பட்டாளம் முழுமூச்சாக படிப்பதற்காக அமர்ந்தனர்.

யாதவ் எவ்வளவு முயன்றும் அந்த கணக்குகளை அவனால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பயம் கொண்ட யாதவ், அந்தப் புத்தகத்தின் பக்கங்களை எல்லாம் கைகளால் தடவி தடவி, அள்ளி அள்ளி முகத்திலும் தலையிலும் பூசினான்.

அவனை வினோதமாய் பார்த்த நண்பர்களுக்கு, " டேய் கடவுளுக்கு ஆராத்தி காட்டி ஒத்திக்கிட்டோம்னா கடவுளோட ஆசிர்வாதம் கிடைக்கும்னு நம்புறோம் இல்ல. அதுபோலத்தான்" என்றான் கெத்தாக.

" அடச்சீ... " என்று அனைவரும் அவனை அன்பாய் பார்த்தனர்.

அனைவருக்கும் குடிப்பதற்கு பூஸ்ட் கலைக்கி கொண்டு வந்த அன்னம்மாள், கிருஷ் படித்துக்கொண்டே மருந்து பாட்டிலை தடவுவதை பார்த்து, "என்ன கிருசு? மருந்து பாட்டிலை தடவிக்கிட்டு இருக்க?" என்றார்.

"ரைசு நீங்கதான மருந்த தடவிக்கிட்டே இருந்தா காயம் சரியாகிவிடும் என்று சொன்னீங்க. இப்படி நீங்களே கேட்கலாமா? " என்றான் அப்பாவியாக.

" கிருசு நீ ஒரு லூசு..."

"போங்க ... ரைசு. சொன்ன நீங்கதான் லூசு "

தண்ணீர் குடித்து விட்டு வந்த யாதவ், " என்னப்பா அங்க சத்தம். நான் ஒருத்தன் இருக்கிறதை இங்க மறந்துட்டீங்களா? " என்றான்.

அனைவரின் சிரிப்பலைகளுடன் அந்த இடம் கலகலவென மாறியது.

மறுநாள் தேர்வு அறைக்குள் நண்பர் கூட்டம் நுழைந்தது. தேர்வறையில் ஜேபியின் பின்னால் அமர்ந்திருந்த மது, விடை கேட்க, அவனை முறைத்து விட்டு தேர்வு எழுதினாள் ஜேபி.

"துரோகி..." என்று முனங்கினான் மது.

ஏனோ அந்த வார்த்தை ஜேபிக்கு மனதில் கலக்கத்தை உண்டு பண்ண, முக்கிய வினாவிற்கு விடைகளை ஒரு பேப்பரில் எழுதி, அதனை சுருட்டி பின்னால் எறிந்தாள்.

அதனை அழகாக கேட்ச் பிடித்த மது எழுதி முடித்ததும், தன் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்க்கு தூக்கி எறிந்தான்.

மகிழ்ச்சியுடன் அதனை பிடித்துக் கொண்ட கிருஷ், தான் எழுதி முடித்ததும், பின்னால் அமர்ந்திருந்த யாதவிற்கு தூக்கி எறிந்தான்.

" என் நண்பன் போட்ட பிட்டு. அதை நானும் எழுத ஹிட். பிட்டுத்தந்த ஃப்ரெண்ட்ஷிப் என்னைக்கும் குட்" என்று மெல்லிய குரலில் பாடியபடி, எழுதி முடித்ததும் பிட்டை அவர்கள் போலே பின்னால் தூக்கி எறிந்தான் யாதவ்.

அவனுடைய எழுத்து மேசையிலேயே பிட்டு மீண்டும் வந்து விழ, 'இது என்னடா ஆச்சரியம்' என்று அவன் குனிவதற்கும், " இது என்னடா? " என்று தேர்வறை கண்காணிப்பாளர் கேட்பதற்கும் சரியாக இருந்தது.

" சார் பின்னால இருந்து யாரோ ஒருத்தன் எறிஞ்சி இருக்கான். அவன புடிச்சு உள்ள போடுங்க சார்" என்றான் நேர்மைவாதியாக மாறி.

அவனை இன்னும் தீவிரமாக தேர்வவறை கண்காணிப்பாளர் முறைக்க, மெல்ல திரும்பி பின்னால் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

அவனுக்குப் பின்னால் சுவரே இருந்தது. அந்த வரிசையில் அவன் தான் கடைசி என்பதை மறந்து போனான்.

பின்னால் இருந்த சுவற்றில் பிட்டு, பட்டு அவனுடைய எழுத்து மேசையிலேயே வந்து விழுந்திருந்தது.

மிகவும் கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு, "சாரி சார்..." என்றான் மன்னிப்புக் கோரி.

மிகவும் கோபத்துடன் தேர்வறை கண்காணிப்பாளர் யாதவை வெளியேறச் சொல்லி கட்டளையிட்டார்.

யாரையும் காட்டிக் கொடுக்காமல் கவிழ்ந்த முகத்துடன் வெளியேறிய யாதவுடன், நண்பர் பட்டாளமும் தங்கள் விடைத்தாள்களை கொடுத்து விட்டு வெளியேறியது.

முகக் கன்றலுடன் யாதவ் தலைகுனிந்து நிற்க, " அந்தத் தாமஸ் ஆல்வா எடிசன் கூட ஆயிரம் முறை தோற்றாலும் இறுதியாக அவர் ஜெயித்தது பல்பில் தான்" என்று நகைச்சுவையாக அவனை தேற்றியது நண்பர் கூட்டம்.

சரியோ, தவறோ ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கும் அவர்கள் நட்பு மேலும் வலுப்பட்டது. அன்று முதல் ஜேபி அவர்களின் படிப்பில் தனிக் கவனம் செலுத்தினாள்.

எப்பொழுதும் போல் அவர்களின் விளையாட்டுகள் தொடர்ந்தாலும், படிப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

அதன் விளைவாக அனைவரின் படிப்பிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. சங்கி மங்கி நண்பர் கூட்டம், அவரவர் வீடுகளில் நல்ல பெயரை வாங்கியது.

அவர்கள் பள்ளியில், 'ஃபேர்வெல் டே' கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அனைவரும் கலாச்சார உடையில் வரவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியது.

புதிதாக சேலை கட்டி வந்த தன் பேத்தியை, கண் கலங்க பார்த்து நெற்றி முறித்தார் அன்னம்மாள்.

"ராசாத்தி நாம ரெண்டு பேரும் குல்பி எடுத்துக்கலாம். நம்ம சாக்குபை கூட போன வாரம் அனுப்பி இருந்ததே அதைப் போல" என்றார்.

"பாட்டி... நீங்க செல்பிய குல்ஃபின்னு சொன்னது கூட ஓகே. ஆனால் ஜாக்கோப் என்ற பெயரை சாக்குப்பை என்று நீங்க கூப்பிடுவது தெரிந்தால், அந்த ஆள் அங்கேயே சூசைட் அட்டம்ப்ட் பண்ணிக்குவான். முதலில் உங்கள் பேஸ்புக், இன்ஸ்டா அக்கவுண்ட்டை எல்லாம் இழுத்து மூட வேண்டும்" என்றாள் ஜேபி.

வளர்ந்துவிட்ட தன் மகளின் தலையை வாஞ்சையாக தடவிய பெருமாள், " அப்படியே உன் அம்மா போல் இருக்கிறாய் தங்கம். சீக்கிரம் வாடா. மீண்டும் மழை வரும் போல் இருக்கிறது" என்று தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்து மகளுக்காக காத்திருந்தார்.

தந்தையின் வாகனம் அருகில் வந்தவள் சில நொடி தாமதித்து விட்டு, "பாட்டி" என்று அன்பொழுக அழைத்தாள்.

"என்னை கிண்டல் செய்துவிட்டு மறுபடியும் எதற்கு பாசமாக அழைக்கிறாய்?"

"அது ஒன்னும் இல்லை பாட்டி. சேலை கட்டிக்கொண்டு வண்டியில் எப்படி உட்காருவது என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு முறை அப்பாவின் வண்டியில் ஏறி உட்கார்ந்து காட்டினீர்கள் என்றால், கொஞ்சம் கற்றுக் கொள்வேன் " என்றாள் ஜேபி பணிவாக.

அவள் கண்களில் தெரிந்த போலிப் பணிவை கண்டு கொள்ளாமல் இரு சக்கர வாகனத்தில், "அது" என்பது போல் கெத்தாக ஏறி அமர்ந்தார். அன்னம்மாள்.

பின் கீழே இறங்கி விட்டு, "பெரியவர்களை பார்த்து கற்றுக்கொள் அவர்களை கிண்டல் செய்யாதே. உன் வயது என் அனுபவம்" என்றார் கட்டளையாக .

பைக்கில் வசதியாக ஏறி அமர்ந்து கொண்ட ஜேபி, "அடப்போ பாட்டி. மழையில் நனைந்து பைக் ஈரமாக இருந்தது. துணி எடுத்து துடைப்பதற்கு பதிலாக, உங்களை வைத்து துடைத்துக் கொண்டேன். பாய்... " என்று கையசைத்து, தளிர் நாக்கை உதட்டோரம் கடித்து, கண் சிமிட்டி சிரித்தாள்.

சிறகுகள் நீளும்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
எங்கிருந்த்து ஆத்தரே இந்த பியூட்டியை பிடித்தீர்கள் 🤣🤣🤣 சிரித்து சிரித்து வயிற்றுவலியே வந்து விட்டது போங்கள் 😂😂😂🥹🥹🥹