• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 6

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 6

அன்று ஃபேர்வெல் டே....

திரும்பும் திசையெங்கும் வண்ணமயமாக பள்ளி முழுவதும் கோலாகலமாக இருந்தது. வானிலிருந்து இறங்கிய தேவதை போல் அடியெடுத்து வைத்த ஜேபியை கண்டு அனைவரும் அதிசயத்தனர்.

புதிதாக சேலை கட்டியதில் சங்கடத்துடன் குனிந்து நடந்த அந்த மாணவிகளுக்கு மத்தியில், என் உடை, என் நடை என்ற பாவத்தில் நிமிர்ந்து நடந்து வந்த ஜேபியை அனைத்து கண்களும் மொய்த்தது.

அவளோடு பயின்று கொண்டிருந்த சக மாணவன் ஒருவன், அவள் முன்னால் வந்து ஒற்றை ரோஜாவினை நீட்டி, "ஐ லவ் யூ " என்றான். தன் கைகளை கட்டிக்கொண்டு அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் ஜேபி.

"எனக்கு பதில் சொல்!" வெகு நேரம் நின்றிருந்த எரிச்சலில் அந்த மாணவன் கேட்டான்.

"ஓ.... ஐ லவ் யூ! என்றால் கேள்வியா? அடடா இத்தனை நாள் எனக்கு அது தெரியாமல் போய்விட்டதே" என்று போலியாக பரிதாபப்பட்டாள்.

"ஜெயலட்சுமி..." என்று கத்தினான் அவளின் கிண்டல் பொறுக்காமல்.

"ஹலோ... நான் ஜெயலட்சுமி பெருமாள்! அன்பை கட்டாயப்படுத்தி வாங்க முயற்சி செய்யாதே. உன் விருப்பத்தை தெரிவித்ததும் நானும் உடனே விரும்புவேன் என்று எதிர்பார்த்தது உன் முட்டாள்தனம்"

"என்ன அழகாய் இருக்கிறோம் என்கிற திமிரா?"

"அழகா? உன் கேள்வியே தவறு. இது பெண் என்கின்ற நிமிர்வு. என் வானம் மிகப்பெரியது. இந்த சங்கிலிகளை பூட்டிக்கொள்ள எனக்கு நேரமில்லை"

" கடைசியா என்ன சொல்ற? "

"சரி. என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்?"

"ம்... அழகா இருக்க. நல்லா படிக்கிற புத்திசாலி. அப்புறம்...."

"வெளியில் தெரியும் இந்த சதையும், உள்ளே இருக்கும் மூளையும்தான் ஜெயலட்சுமி பெருமாளின் அடையாளம் என்று நீ நினைத்தால் அது உன் தவறு. என்னுடைய குறைந்தபட்ச விருப்பு வெறுப்புகளை அறியாத நீ என் நண்பனாய் கூட இருக்க முடியாது. ஐ ஆம் சாரி"

" அதுதானே! உனக்கெல்லாம் ஒருவன் போதாது என்று மூன்று தடியர்கள் உடன் எந்நேரமும் சுற்றிக் கொண்டிருக்கிறாயே!" அவள் மறுத்த ஆத்திரத்தில் அறிவிழந்து கத்தினான் அந்த மாணவன்.

" ஆரோக்கியமான நட்பை பற்றி ஒரு மூடனுக்கு பாடம் எடுக்க எனக்கு நேரமில்லை வழி விடு" என்றாள் அழுத்தமாக.

"ஏய்... சும்மா நடிக்காத. உங்க ரகசியம் எல்லாம் ஒரு நாளைக்கு நிச்சயம் அம்பலமாகும் "

" நீ சொல்வது போல் நிச்சயம் ரகசியம் இருக்கிறது. அந்த ரகசியம் உண்மையான மாசற்ற நட்பு மட்டுமே. தோள் கொடுக்க தோழனும், தோள் சாய தோழியும் கிடைத்தால், அவர்கள் கூட தாய், தந்தை தான்.

கடவுள் கொடுத்த வரம் தான் நட்பு என்றாலும் அந்தக் கடவுளுக்கே கிடைக்காத வரம் தான் நட்பு" என்று தூசி போல் தட்டி விட்டு அவனைக் கடந்தாள் ஜேபி.

அன்று அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விதவிதமான போட்டிகள் வைக்கப்பட்டன. பள்ளிப் பருவத்தின் கடைசி நாளில் அனைவரும் உற்சாகமாகவே கலந்து கொண்டனர்.

பாட்டிலில் நீ நிரப்புதல் போட்டியில், எத்தனை முறை கைகளில் நீரை அள்ளினாலும் ஒழுகவிட்டான் கிருஷ்.

பரிதாபமாய் அவன் தன் நண்பர்களைப் பார்க்க, ஜேபி தன்னிரு உள்ளங்கைகளையும் இணைத்து வானத்தில் சூரியனை நோக்கிப் பார்த்தாள்.

உடனே கிருஷ் தன் உள்ளங்கைகளை இணைத்து, உயர்த்திப் பார்த்தான். அதில் தெரிந்த இடைவெளியை இறுக்கி மூடிக்கொண்டு, மீண்டும் உற்சாகமாகவே கலந்து கொண்டு பாட்டில் நீ நிரப்பி வெற்றி பெற்றான்.

நீர் அருந்தும் போட்டியில் கலந்து கொண்ட யாதவை, விதவிதமான குளிர்பானங்கள் பெயரைச் சொல்லி நீரை அருந்த உற்சாகப்படுத்தி வெற்றி பெற வைத்தது நண்பர் கூட்டம். சுவையில்லா அந்த நீரிலும் நண்பர்களின் உற்சாகம் தந்த வார்த்தைகளில் நிஜமாகவே அந்த நீர் குளிர்பானமாய் தித்தித்தது

உறி அடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட மதுசூதனனை, அவனின் நண்பர் கூட்டம் வழிநடத்த அற்புதமாக உறியடித்து வெற்றி பெற்றான். அவனின் ஒரு ஜோடி கண்கள் கட்டப்பட்டிருந்தாலும் மூன்று ஜோடிக் கண்கள் அவனுக்கு வழி காட்டியதே.

அடுத்ததாக ஜேபியின் முறை வந்தது. அது ஒரு சுலபமான போட்டி. தொடக்கம் முதல் இறுதி வரை இருக்கும் எல்லை கோட்டிற்குள் நடக்க வேண்டும் கால்களை தரையில் பதிக்காமல்.

கைக்கெட்டும் தூரம் இருந்த பொருட்களை எல்லாம் கீழே போட்டு அதன் மீது நடந்து கடந்து செல்ல முயன்றனர் பெண்கள். ஏனோ பாதி தூரம் மட்டுமே கடக்க முடிந்தது. இடையில் இருந்த பொருட்களை எல்லாம் மாணவர் கூட்டம் அப்புறப்படுத்தி கேலி செய்தது.
ஜேபியின் முறை வந்ததும் காலையில் அவளிடம் தகராறு செய்த மாணவன் கண்களைக் காட்ட, அனைத்து பொருட்களும் அப்புறப்படுத்தப்பட்டது.

ஜேபி அடுத்த அடி எடுத்து வைக்க பொருள் இல்லாமல் யோசிக்க, அவளின் மலர்ப் பாதங்களை தாங்க வரிசையாக கைகள் வந்து அமர்ந்தது. " மங்கி பிரதர்ஸ்... " என்று கண்கள் கலங்க தன் நண்பர்களை அவள் பார்க்க, "வாடா சங்கி..." என்று அவள் பாதங்களை ஒருவர் மாற்றி ஒருவராக தாங்கி எல்லைக்கோட்டை அடைந்து அவளை வெற்றி பெறச் செய்தனர்.

தன் நண்பர்களின் கைகள் மீது அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் பெருமை பொங்கி நட்பு நிறைந்து வழிந்தது. ஒரு மகாராணியின் தோரணை அவள் உடல் மொழியில் தெறித்தது.

கைகளில் இதழ்கள் முத்தமிட்டால் அது காதல் என்று கதை பேசும் உலகம். கை கொடுத்து உறவாய் மாறி இருந்த அந்த நட்புகளை கண்டு பொறாமைப்பட்டது அனைத்து மாணவர் கூட்டமும்.

ஒரு பெண்ணின் தூய நட்பிற்காய் மண்டியிட்ட அந்த மூவரைக் கண்டதும் காலையில் அவளை கேலி பேசியவனின் தலை தானாகக் குனிந்தது.

நட்புகள் தந்த கர்வத்தில் ஜேபியின் தலை தானாக நிமிர்ந்தது.

அந்த சிறிய பறவை தனக்குள் ஒளித்து வைத்திருந்த வண்ணச் சிறகை விரித்தது அந்த நொடி.

இறுதிப் போட்டியாக பெண்கள் ஒரு அணியாகவும், ஆண்கள் ஒரு அணியாகவும் நின்று கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது.

நிச்சயம் பெண்கள் அணி தோற்கும் என்று ஆண்கள் அணி கேலி செய்து சிரித்தது. உடலில் வலு இல்லாதவர்களை ஒரு நிமிடத்தில் தோற்கடித்து விடலாம் என்று இறுமாப்புடன் நின்றது ஆண்கள் அணி.

சேலை அணிந்து கொண்டு வந்த மாணவிகள், அச்சமும் நாணமுமாக பயந்து, "நிச்சயம் நம்மால் முடியாது. நாம் உறுதியாக தோற்று விடுவோம். கீழே விழுந்து மண்ணை வார வேண்டாம். அது நமக்கு அவமானமாக போய்விடும்.

கீழே விழுந்து சேலை எல்லாம் விலகினால், அச்சச்சோ! நினைத்துப் பார்க்கவும் அசிங்கம். நாம் கலந்து கொள்ளாமலேயே தோற்று விட்டோம் என்று ஒத்துக் கொள்வோம் " என்று பலவாறு சிந்தித்து ஆண்கள் அணியிடம் பெண்கள் அணி சரணடையப் பார்த்தது.

பெண்கள் அணியை தனியே அழைத்த ஜேபி, "நான் சொல்வதைக் கேட்டால் நாம் அனைவரும் நிச்சயமாக வென்று விடலாம்!" என்றாள் உறுதியான குரலில்.

" பைத்தியம் மாதிரி பேசாதே ஜெயலட்சுமி பெருமாள். எதை வைத்து நாம் ஜெயிக்க முடியும் என்று கூறுகிறாய்? சற்று அங்கே திரும்பிப் பார். ஒவ்வொருவரும் நம்மை விட அதிக உடல் எடையுடன் இருக்கிறார்கள். அந்த அணியின் தலைவனைப் பார் ஆறடி அர்னால்டு போல் இருக்கிறான்.

இங்கே நம் பக்கம் திரும்பிப் பார். ஜீரோ சைஸ் உடல்வாகுடன் இருக்கும் நம் அணியினர் எப்படி ஜெயிக்க முடியும்? நிச்சயம் தோற்று விடுவோம் என்ற இந்த அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள்? " என்றாள் மாணவியருள் ஒருத்தி.

"கதையில் முயலும் வெல்லும். ஆமையும் வெல்லும். ஆனால் நிச்சயம் முயலாமை வெல்லாது. இந்த அணிக்கு நானே தலைமை பொறுப்பை ஏற்கிறேன். இந்த அணியை வெற்றி பெறச் செய்வது என் பொறுப்பு " என்றாள்.

" ஓ... எப்படியம்மா வெற்றி பெறுவாய்? அந்தக் கதையை எங்களிடம் கூறு... " என்று நக்கல் அடித்தாள் சக மாணவி ஒருத்தி.

" கயிறு இழுக்கும் போட்டியில், அணியின் தலைவர் மிக முக்கியம். அவரின் நம்பிக்கை கொண்டு தான் அந்த அணி ஜெயிப்பதும், தோற்பதும்.

அடுத்ததாக கயிற்றை ஒரே பக்கமாக பிடிக்காமல், நாம் அனைவரும் மாறி மாறி திசைக்கு ஒருவராக கயிற்றை பிடிக்க வேண்டும்.

போட்டி ஆரம்பித்த அடுத்த நொடி, கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி, கயிற்றை வலுவாகப் பிடித்துக் கொண்டு, ஒரு அடி கூட நகலாமல் நின்ற இடத்திலேயே நம் முதுகுப் பக்கத்தை மண்ணோக்கி சில நொடிகள் முடிந்தவரை வளைக்க வேண்டும்.

அப்படி வளைக்கும் போது எதிர் அணியால், கயிற்றை இழுக்க முடியாத நிலை வரும். அவர்கள் யோசிக்கும் அந்த ஒரு நொடி நேரத்தை நாம் பயன்படுத்தி கயிற்றை வலுவாக இழுக்க வேண்டும்" என்று கயிறு இழுக்கும் போட்டியின் வித்தைகளை எடுத்துக் கூறினாள்.

தங்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போனாலும், ஜேபியின் பேச்சில் நம்பிக்கை ஊற்று பெருக்கெடுக்க, "முயன்றுதான் பார்ப்போம்" என்று மாணவியர் அணி கயிறு இழுக்கும் போட்டிக்கு தயாரானது.

மாணவியர் தான் என்று சாதாரணமாக எடை போட்ட மாணவர் அணி, ஜெயித்து விடுவோம் என்ற இறுமாப்பில் கயிற்றை அசால்ட்டாக பற்றிய படி நின்றது.

மங்கி பிரதர்ஸ், எதிரணிக்கு தலைமை ஏற்பது ஜேபி என்று தெரிந்ததும் கயிற்றின் பின்னால் சென்று நின்று கொண்டனர்.

போட்டி ஆரம்பிப்பதற்கான விசில் சத்தம் எழும்பியதும், ஜேபி சொன்னது போல், மாணவியர் அனைவரும் கயிற்றை திசைக்கு ஒருவராக மாறி மாறி பிடித்துக் கொண்டு, கால்களை அழுத்தமாக தரையில் ஊன்றி, உடல் முழுவதையும் வில் போல் மண்ணோக்கி வளைத்தனர்.

மாணவர் அணி எவ்வளவு இழுத்தும் அசைக்க முடியாத தன்மையைக் கண்டு திகைத்தது.

அணியின் தலைவன் முகத்தில் அதனை கண்டு கொண்ட ஜேபி, "வேகமாக இழுங்கள்!" என்று தன் அணிக்கு கட்டளையிட்டாள்.

மாணவிகள் அணியின் பக்கம் கயிறு விறுவிறுவென சென்றதும், சுதாரித்துக் கொண்ட மாணவரணி அதிக வலுவுடன் கயிற்றை இழுக்க, கயிறு மாணவர் அணி பக்கம் சென்றது.

சற்றும் மனம் தளராத ஜேபி, "கயிற்றை சற்று தளர்வாக விடுங்கள் " என்று கட்டளையிட்டாள்.

"நீ என்ன லூசா? கயிற்றைத் தளர்வாக விட்டால் நாம் அனைவரும் தோற்று விடுவோம்" என்று கத்தினாள் ஒரு பெண்.

" சொன்னதைச் செய்யுங்கள்!" என்று ஆணையிட்டாள் ஜேபி.

அவள் கட்டளைக்கேற்ப சில வினாடிகள் கயிற்றை மாணவியர் அணி தளர்த்த, கயிறு மடமடவென அவர்கள் கையை விட்டு மாணவர் அணி பக்கம் சென்றது.

சட்டென்று ஒரே நேரத்தில் மாணவியர் அணி, கயிற்றை தளர்த்தியதால் தடுமாறி பின்னே சாய்ந்தது மாணவர் அணி.

அந்த நொடியை தன் வசமாக்கிய ஜேபி, " வேகமாக கயிற்றை இழுங்கள்" என்று தன் அணிக்கு கட்டளையிட, மாணவியர் அணியின் மொத்த இழுவிசையில் மாணவர் அணி கீழே சரிந்தது.

மாணவியர் அணி வெற்றி பெற்றது. ஆரவாரத்துடன் மாணவியர் அணி ஜேபியை, அவளின் தைரியத்தை, புத்தி சாதுரியத்தை கொண்டாடியது.

மங்கி பிரதர்ஸ் தங்கள் அணிக்கு தெரியாமல் ஜே பி க்கு வெற்றிக்குறியை காட்டி வாழ்த்து தெரிவித்தனர். கலகலப்பாகவே பிரிவு உபச்சார விழாவும் முடிந்தது.

மாலை வந்ததும், முக்கியமான ஒரு வாடிக்கையாளருடன் வர்த்தக விஷயமாக பேச பெருமாள் காத்துக் கொண்டிருந்ததால், பள்ளிக்கு வந்து ஜேபியை அழைத்துச் செல்ல நேரமாகும் என்று தெரிவித்தார்.

தந்தை எவ்வளவு மறுத்தும் தான் பேருந்தில் வந்து விடுவதாகக் கூறி பேருந்து நிலையத்தை அடைந்தாள் ஜேபி.

உள்ளத்தின் ஆழத்தில் புதைந்த நிகழ்வுகள் எல்லாம் வெளியில் வர, மிரட்டும் உலகை, புரட்டும் நோக்கில் பேருந்துக்காக காத்திருந்தாள்.

மிதமான கூட்டத்துடன் இருந்த பேருந்துக்குள் ஏறினாள். இரண்டு நிறுத்தங்கள் கடந்த பிறகு, கம்பியைப் பற்றி நின்றிருந்த ஜேபியின் கைகளை தெரியாமல் தடுமாறி பிடிப்பது போல் பிடித்துக் கொண்டிருந்தான் பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவன்.

அவளின் உள்ளம் படபடத்தது. மூளைக்கு செல்லும் நரம்புகளில் சூடான ரத்தம் பாய்ந்தது. அடுத்த முறை அவனின் கை தன் வலக்கையில் படுவதற்குள் இடக்கையில் மூடி வைத்திருந்த சேலை ஊசியினால் நங்கு நங்கு என்று நன்றாக குத்தினாள் ஒரே இடத்தில் ஆழமாக.

வலியில் வீறிட்டு கத்தியவன் நிலை தடுமாறி, பின்னே சரிந்து விழுந்தான். 'நமக்கேன் வம்பு' என்பதுபோல் சுற்றி நின்ற சமுதாயம் எப்பொழுதும் போல் அமைதியாக இருக்க, விழுந்த இடத்தில் எழுந்த நிமிர்வுடன் வீடு திரும்பினாள் ஜேபி.

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, தனது அறைக்குள் நுழைந்த ஜேபி, தன் சோப்பு சிற்பங்களுடன் அன்று நடந்த ஒவ்வொன்றையும் விளக்கி கூறி, உரையாட ஆரம்பித்தாள்.

தன் முன்னால் ரோஜாவை நீட்டி காதல் சொன்னவனைப் பற்றி பேசும் போது, " என் தந்தையையும், நண்பர்களையும் தவிர்த்து, வேறு யாரிடமும் என் மனது நிலைக்க மறுக்கிறது. இவர்களை விடவும் என் மீது அன்பை பொழிய ஒருவன் வருவானா? " என்று இதழ் கடையோரம் ஏளனமாய் சிரிப்பை உதிர்த்தாள்.

அதேநேரம் உண்டு கொண்டிருந்த உணவு திடீரென்று அடைக்க, விக்கல் சத்தத்துடன் நிமிர்ந்தான் வசீகரன்.

சிறகுகள் நீளும்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
நட்பை கலங்கம் சொல்லும் சமூகம் இன்னுமா மாறவில்லை 😏😏😏 அதுவும் இளைஞர்களே சொல்வது 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பெண்மை என்றால் மென்மை மட்டும் என்று யார் சொன்னது 🤨🤨🤨

வந்துவிட்டானே அம்மா உன் அன்பிற்கினியவன் 😎😎😎