• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 9

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 9

அன்று காலை பத்து மணியளவில் ஜேபியின் வீடு ஒரே களேபரமாக இருந்தது.

ஜேபி மங்கி பிரதர்ஸ் உடன் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அன்னம்மாள் பாட்டி அவர்கள் பிரச்சனைக்கு நடுவராக நின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.

அவர்களின் சண்டைகளையும் விளக்கங்களையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த பெருமாள் சிரித்துக் கொண்டே உணவு அருந்திவிட்டு, அவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டால் தன் தலையும் உருளும் என அஞ்சி, சத்தம் இல்லாமல் தன் சோப்பு ஃபேக்டரிக்கு கிளம்பினார். இறுதியில் அவர்கள் எடுக்கும் முடிவு நிச்சயம் சரியானதாகவே இருக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு வானளவு இருந்தது.

"கிருஷ், நம்முடைய அறிவையும் திறமையையும் யாருக்கும் அடமானம் வைக்கத் தேவையில்லை. நாம் நம்முடைய முயற்சியிலேயே முன்னேறலாம்" என்றாள் ஜேபி.

" கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் யோசித்துப் பார் ஜேபி. ' கரன் சொல்யூஷன்ஸ்' எவ்வளவு பிரபலமான மென்பொருள் தயாரிப்பு நிறுவனம். ஒரு கண்டுபிடிப்பின் மூலம் நாம் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து விட முடியாது.


நாம் கற்றுக்கொள்ள வேண்டியது மிகப் பெரிய அளவில் நம் முன்னே நிற்கிறது. நாம் ஏன் மிஸ்டர் வசீகரன் தந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அவரது கம்பெனியில் பணிபுரியக் கூடாது?

அவருடைய கம்பெனியில் யாரும் எளிதாக வேலைக்கு சேர்ந்து விட முடியாது. நமது அறிவாற்றல் பல விதங்களில், பல நிலைகளில் சோதிக்கப்பட்டு இறுதியாக பல கட்டங்களுக்குப் பிறகு தான் நேர்முகத் தேர்வையே சந்திக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் நிறுவனரே நம்மிடையே ஒரு வாய்ப்பைத் தரும் போது, அதை நாம் மறுப்பது முட்டாள்தனமாகும் " என்றான் கிருஷ்.

" ஜேபி கிருஷ் சொல்வதையும் நன்றாக யோசித்துப் பார். அவர்கள் தரும் ஒப்பந்த காலம் வரை நாம் நமது பணியை செய்யலாம். அதன் பிறகு வேண்டுமானால் நீ சொன்னதைப் போல், நம்முடைய தனி முயற்சியில் ஜெயிக்கலாம். அதுவரை அங்கு பணி புரியும் காலத்தை நமது அனுபவ காலமாக எடுத்துக் கொள்ளலாமே!" என்றான் யாதவ்.

" அவனுக்கு ஜிங்-சாங் அடிக்கிறியா யாதவ்?" என்று யாதவை முறைத்தாள் ஜேபி.

" இல்லை ஜேபி! பரந்து விரிந்த இந்த உலகில் தட்டு தடுமாறி நமக்கென ஓர் இடத்தை கண்டுபிடிக்கும் வரை, நம் திறமையையும் அறிவையும் கூர்த்தீட்டும் வாய்ப்பாக இதனை நாம் ஏன் பயன்படுத்தக் கூடாது? " என்றான் மது நிதானமாக.

"நாம் ஏன் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளே நிற்க வேண்டும்?" கோபம் கலந்த குரலில் கேட்டாள் ஜேபி.

" அடியே ஜெயலட்சுமி பெருமாளு! என் பிரண்ட்ஸ் இவ்வளவு தூரம் சொல்லியும், நீ துள்ளிக்கிட்டு திரியுற. ஏதோ என்னோட அறிவு உனக்கு கொஞ்சம் வந்துவிட்டது என்ற காரணத்தினாலேயே நீ இந்த ஆட்டம் ஆடக்கூடாது.

இப்ப ஏன் நீ அந்த கம்பெனில போய் வேலைக்கு சேர விருப்பம் இல்ல அப்படின்னு சொல்ற? " என்றார் அதிகாரமாக அன்னம்மாள்.

" யாருக்கும் அடிமையாய் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை அவ்வளவுதான்" என்றாள் கறாராக ஜேபி.

"ம்க்கும்! பல்லு இல்லாதவ பக்கோடா வேணான்னு சொன்னாளாம்!"

"என்னது?"

" உனக்கு ஒருத்தர் கிட்ட வேலை செய்ய துப்பு இல்லன்னு சொன்னேன்"

" அப்பத்தா! என்னை ரொம்ப சீண்டி பாக்குறீங்க. வேலைக்குப் போக மறுப்பதால் வேலை தெரியாது என்று அர்த்தம் இல்லை"

" அப்ப வீட்டில் இருந்து, துணி துவைத்து, பத்து பாத்திரம் தேய்த்து அக்மார்க் குடும்ப பெண்ணின் இலக்கணமாய் மாறப் போறியா? "

" என்னை வீட்டுக்குள் அடைத்து வைக்க எந்த சக்தியாலும் முடியாது. நான் என் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது என்ன பெண்ணின் இலக்கணம் என்றால் வீட்டு வேலைகள் மட்டும் தானா?"

" அடிப்போடி! இப்ப என்ன வாடகை காலுலேயா நிக்கிற? அது சரி! குடும்பப் பெண்ணின் இலக்கணம் வீட்டு வேலைகள் இல்லை என்றால் இன்று முதல் நானும் ஒரு முடிவெடுத்து விடுகிறேன்.

டேய்! உங்களோடு இவள் வரவில்லை என்றால் போனால் போகிறது. நான் உங்களோடு வருகிறேன். இதுவரை நான் கத்துக்கிட்ட திறமை எல்லாம் ஒன்று விடாமல் களம் இறக்குகிறேன். என்னுடைய இங்கிலீஷ் அறிவுக்கே இரண்டு லட்சம் அதிகமா சம்பளம் தருவாங்க." என்ற அன்னம்மாளை பார்த்து மங்கி பிரதர்ஸ் நடுநடுங்கினர்.

"ரைசு...."

"ம்...."

"ரைஸா... பேபி...."

" சொல்லுடா கிருசு கண்ணா!"

" வேலைக்கு வயது வரம்பு உண்டு பேபிமா... உங்களுக்குத் திறமை இருந்தாலும்... சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்" என்றான் கிருஷ்ணா அவசரமாக. இல்லையென்றால் எப்படியாவது தங்களோடு அன்னம்மாள் வந்துவிடுவார் என்ற பயத்தில்.

" இந்த உலகத்தில் பெண்களுக்கு தான் எத்தனை தடைகள். சாதிக்க மனசு இருந்தாலும் வயதை தடையாக நிறுத்துகிறதே இந்த சமூகம்.

ஆனால் இந்த அன்னம்மாள், இல்லை இல்லை இந்த ரைஸா இனிமேல் வருவாள் செம மாஸா!" என்று அன்னம்மாள் பாட்டி டயலாக்கை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார்.

அதுவரை விளையாட்டாக போய்க் கொண்டிருந்த அவர்களது விவாதம், முக்கிய கட்டத்தை நெருங்கியது.

" ஜேபி இந்த ஒரு முறை எங்கள் மூவருக்காகவும் 'கரன் சொல்யூஷனில்' வேலைக்கு சேர்.

உனக்கு பிடிக்காத மாதிரி அங்கே எதுவும் நடந்தால், உன்னுடன் சேர்ந்து நாங்கள் மூவரும் வெளியேறி விடுவோம். எங்களை நம்பினால், எங்கள் நட்பின் மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் எங்களோடு கரம் சேர்த்துக் கொள் " என்ற மது தன் கரத்தை நீட்ட, அவன் வலகர உள்ளங்கை மீது யாதவ் தன் கரத்தை வைக்க, அவன் கரம் மீது கிருஷ்ணா தன் கரத்தை வைக்க, தன் நட்பிற்காக மட்டுமே தனது கரத்தையும் ஜேபி வைத்தாள் பெருமூச்சுடன்.


" என்னைய விட்டுட்டு நீங்க மட்டும் கூட்டு சேருவீங்களா? " அவர்களின் கரங்களுக்கு மேல் அன்னம்மாள் பாட்டி தன் கரத்தை வைத்தார் தோரணையாக.


" கரன் சொல்யூஷன்ஸ் " - நகரின் மையத்தில் இருந்த அந்த மிகப்பெரிய அடுக்குமாடி மென்பொருள் தயாரிப்பு கட்டடத்திற்குள் கால் பதித்தனர் சங்கி மங்கி டீம்.

தன் இதயத்திற்குள் நுழைந்தவளின் கால் தடம் தனது அலுவலக கட்டிடத்திற்குள் பதிந்ததும் இனிமையாய் அதிர்ந்தான் வசீகரன்.

அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் நேரடியாக வசீகரனின் அறைக்குள் நுழைய அனுமதி கிடைத்தது.

அலுவலகத்திற்குள் நுழைந்த ஜேபியின் கண்கள் அகல விரிந்தது, அந்தக் கட்டிடத்தின் கட்டமைப்புகளைக் கண்டு. குறை காண முடியாத நேர்த்தி எங்கும் மிளிர்ந்தது.

கத்துக்குட்டிகளான தங்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமோ? என்ற ஐயமே வந்துவிட்டது மங்கி பிரதஸ்க்கு.

"டேய் மது! இவ்வளவு பெரிய கம்பெனியில் வேலை தருகிறேன் என்று நமக்கு சும்மா சொல்லி இருப்பாரோ? எனக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை சுத்தமாக இல்லை. ஜேபி பேச்சை அப்பொழுதே கேட்டிருக்கலாம்" என்றான் யாதவ்.

"ம்.... நிச்சயமா கேட்டிருக்கலாம் டா... அலுவலக அமைப்பே நம்மை மிரட்டுகிறது " என்றான் மது.

" டேய் இந்த கம்பெனியோட பின்வாசல் கேட் எங்க இருக்குன்னு பாருங்கடா! அப்படியே எகிறி குதிச்சு எஸ்கேப் ஆகி விடுவோம்" என்று அவர்களின் கருத்தை ஆதரித்தான் கிருஷ்.

" வாயை மூடுங்கள்! முடிவெடுத்த பின் பின்வாங்குவது கோழைத்தனம். எடுத்த முடிவில் உறுதியாய் இருங்கள். நொடிக்கு நொடி ஆச்சரியத்தை மறைத்து வைத்திருக்கும் இந்த வாழ்க்கையை ஒரு கை பார்த்து விடலாம் " என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டினாள் ஜேபி.

வசீகரனின் அறைக்குள் நுழைந்த நால்வரையும் தலையசைத்து அமர்த்தலாய் வரவேற்றான் வசீகரன்.

"குட் மார்னிங் சார்..." வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் நால்வரின் குரலும் ஒரே நேரத்தில் ஒலித்தது.

" வெல்! என் நிறுவனத்தில் வேலை சேர்வதற்கான ஒப்பந்த பத்திரத்தை படித்துவிட்டு, ஒப்புதல் இருந்தால் உங்கள் பணியை இங்கே தொடரலாம். நேர்முகத் தேர்வு இல்லாமல் நேரடியாக பணியில் அமர்வதால் என்னிடமிருந்து எந்த வித சிறப்பு சலுகையையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. பணிபுரியும் இந்த ஒரு வருடத்தில் நீங்கள் உங்கள் திறமையை நிரூபித்தால் இங்கே உங்கள் பணியை தொடரலாம். இல்லையென்றால்.... " என்று கூறி விட்டு மென்புன்னகையை சிந்தினான் வசீகரன்.

" நீங்கள் உதிர்த்த இந்த வார்த்தைகளுக்கு நிச்சயம் ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும், எங்கள் திறமைகளை பார்த்து விட்டு...
எங்களது ஒப்பந்த பணி காலம் முடிந்த பிறகு, இங்கே எங்கள் பணியைத் தொடர நீங்கள் கெஞ்சி நிற்கும் அந்தக் காலத்தை நினைத்தால் இப்பொழுது, எங்களுக்கும் உங்களைப் போலவே சிரிப்பு வருகிறது..." என்றாள் ஜேபி.

' அப்படிச் சொல்லுங்க அம்மணி... இனி உங்களை என் வாழ்க்கையை விட்டே பிரித்து பார்க்க நினைக்காதவன், இந்த அலுவலகத்தை விட்டா பிரித்து வைக்கப் போகிறேன்... சின்னதா சீண்டல் செய்ததற்கே, சிலிர்த்தெழுந்தால் எப்படி?' மனதிற்குள் அவளை வம்பிழுத்தான் வசீகரன்.

"ஏய்! ஜேபி பேட் கேர்ள்... பெரிய ராணி மங்கம்மா சபதம் எல்லாம் எடுக்கிற. இதுல ஜோசியக்காரி மாதிரி ஜோசியம் வேற... ஏற்கனவே பயந்து வருது. இதுல நீ வேற... ஐயோ கடவுளே இத்தன பெரிய கட்டிடத்துல பாத்ரூம் எங்க இருக்குன்னு தெரியலையே..." என்று சத்தம் இல்லாமல் மெதுவாக ஜேபியின் காதில் புலம்பினான் கிருஷ்.

" ஓகே... " என்று கூறியவன் அழைப்பு மணியை அழுத்தினான்.


உள்ளே நுழைந்த அவனது மேனேஜரிடம், இவர்கள் டீம் வேலையில் சேர்வதற்கான ஒப்புதல் படிவத்தை காட்டி கையொப்பம் பெற்றுக்கொள்ள கட்டளை இட்டான்.

" ஓகே சார்... " என்ற அவனது மேனேஜர், அவர்களை தன் பின்னே வரும்படி கண்ணசைத்து விட்டு நகர்ந்தார்.

குறும்புடன் வளைய வந்து கொண்டிருந்த மங்கி பிரதர்ஸ், ஆளுமை நிறைந்த வசீகரனின் உடல் மொழியில் கவரப்பட்டு காதில் விழுந்த வார்த்தைகளுக்கு தலையை அசைத்து விட்டு, அவனையே பார்த்தபடி நின்றனர்.

வெளியே செல்லும்படி வசீகரன் கையசைத்துக் காட்ட, சத்தம் இல்லாமல் நகர்ந்தார்கள் மங்கி பிரதர்ஸ்.


ஜேபி மட்டும் வெளியே செல்லாமல் வசீகரனை முறைத்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

புருவங்களை மட்டும் உயர்த்திக் காட்டி, "என்ன?" என்று கண்களால் வினவினான் வசீகரன்.

ஜே பி அவனைச் சுற்றி வந்து எதையோ தரையில் தேடினாள். வசீகரனை நகர்ந்து கொள்ளச் சொல்லி மேசையின் அடியிலும் தேடினாள். அறையை ஒரு முறை சுற்றிப் பார்த்து முழுவதுமாய் தேடினாள்.


தேடியது கிடைக்காததால் உதட்டை பிதுக்கி இடுப்பில் கையை வைத்து யோசனை செய்தாள்.

தன் பொறுமையை கைவிட்ட வசீகரன், " மேடம் எனது அறையில் என்ன தேடுகிறீர்கள் என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும்" என்றான் அவள் என்ன தேடுகிறாள் என்ற காரணம் தெரியாத சிறு கடுகடுப்புடன்.

" அது இல்லை சார். எங்களை கண்களால் வெளியே போகச் சொல்கிறீர்கள். வாயில் இருந்து முத்துக்கொட்டி விடுமோ என்று வார்த்தைகளை அளந்து அளந்து பேசுகிறீர்களோ என்று நினைத்தேன். அப்படி கொட்டிய முத்து எங்கே சிதறி இருக்கிறது என்று தேடிப்பார்த்தேன் " என்றாள் நக்கலாக.

"ஹலோ..." என்றான்.

" உங்கள் எதிரில் தானே நிற்கிறேன். போனில் பேசுவது போல் ஹலோ என்கிறீர்கள். பார்த்து பேசுங்கள் சார். இந்த உலகம் அதற்கு வேறு பெயர் வைத்து விடும் " என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்.

' அம்மணி என்னை பைத்தியம் என்று சொல்றீங்க. ஒரு விதத்துல அதுவும் சரிதான். உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறேனே. வைத்தியம் செய்ய எப்பொழுது வருவீங்க அம்மணி?' என்றான் குறுநகையுடன்.

மேனேஜர் காட்டிய ஒரு வருட ஒப்பந்த படிவம், அவர்கள் அனைவருக்கும் திருப்திகரமாக இருக்கவே அனைவரும் கையெழுத்திட்டனர் ஜேபியை தவிர.


பேனாவை விரல் இடுக்கில் சுற்றியபடி தன் நாடியில் தட்டிக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தவளின் தலையைத் தட்டினான் கிருஷ்.

"ஷ்... பக்கி. என்ன?" என்றாள்.

" என்ன பலத்த யோசனை? சுற்றிலும் ஒரு முறை பார். எவ்வளவு பெரிய வாய்ப்பு. அவ்வளவு பெரிய மனிதன் இறங்கி வந்து சொல்கிறார், ராங்கி ரங்கம்மா மாதிரி முறைச்சிக்கிட்டு நிக்கிற.

அவர் என்ன உன்னை பொண்டாட்டியா ஏத்துக்க அக்ரீமெண்ட்டா போடப் போகிறார். சாதாரண எம்ப்ளாயி அக்ரீமெண்ட்க்கு இவ்வளவு யோசனையா? யப்பா...." என்றான் பின்னால் நடக்கப் போவதை விளையாட்டாக முன்னால் கணித்து.

"ஓ... அப்படி அக்ரிமெண்ட் போட்டுத்தான் பாக்கட்டுமே. நான் குத்துற குத்துல அவரு மூஞ்சி சுவரு பக்கம் திரும்பி இருக்கும்" என்றாள்.

"அவரு, சுவரு... நீ சூப்பர் பவரு ஜேபி" என்ற கிருஷை முறைத்துக் கொண்டே ஒப்புதல் படிவத்தை ஒரு முறை முழுவதுமாக படித்துவிட்டு கையெழுத்திட்டாள்.

அவர்கள் நால்வருக்கும் செயலியை வடிவமைக்கும் துறையில் பணி கொடுக்கப்பட்டது.

தன் மேஜையில் இருந்த கணினியில் அவர்கள் நால்வரின் தகவல்களை பார்வையிட்டுக் கொண்டு வந்த வசீகரன், ஜேபியின் அலைபேசி எண்ணை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டான்.

தன் பிரத்யோக அலைபேசி எண்ணில் இருந்து அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

" தாகம் தணிக்க அருவி வேண்டாம்!
சொட்டுநீர் போதும் உயிர் இனிக்க!


உன்னுடன் வாழ ஒரு ஆயுள் வேண்டாம்!
ஒரு நொடி போதும் உன்னவனாய் உன்னோடு இருக்க!"

இப்படிக்கு

ஜேகே!

வசீகரன் தன் எண்ணை மறைத்து குறுஞ்செய்தி அனுப்பியதால், அவன் அனுப்பிய குறுஞ்செய்தி 'பிரைவேட் நம்பர்' என்ற பெயரைத் தாங்கி ஜேபிக்கு சென்றது.

தன் அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி எழுப்பியதும், எதேச்சையாக பார்த்த ஜேபியின் முகத்தில் யோசனைகள் படிந்தது.

ஏனோ அந்த கவிதையில் இருந்த வரிகளை சாதாரணமாக தள்ளி விட முடியவில்லை. அதன் அர்த்தம் ஆழ்ந்த பொருளை தந்ததைக் கண்டு, காதலாய் ரசிக்காமல் அதனை கவிதையாய் ரசித்தாள்.

முகம் சுமந்த மென்னகையுடன், "பரவாயில்லை. சுமாராக இருக்கிறது!" என்று பதில் செய்தி அனுப்பி வைத்தாள்.

பதில் செய்தியை வாசித்த வசீகரன் வாய்விட்டு சிரித்தான்.

" பாருடா! எங்க அம்மணியின் குறும்பை. இந்த வசீகரன் எதற்கு இருக்கிறேன் அம்மணி. உங்களை வசியம் செய்யத் தானே!" என்றான் கண்களில் மலர்ந்த காதலுடன்.


சிறகுகள் நீளும்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஜேபிக்கு ஜேகேவா 😃😃😃 விளையாட்டு ஆரம்பம் 🥰🥰🥰