• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 13

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 13

ஆராவின் அணைப்பில் சங்கமித்ராவின் உள்ளம் குளிரவோ, உடல் நெகிழவோ இல்லை. மூடிய இமைகளுக்குள், இருண்ட வானில் எங்கேயும் வெளிச்சம் தென்படாதா? என்று மின்னலைத் தேடும் தாழம்பூவாய் தவித்துக் கொண்டிருந்தாள்.

அணைத்திருந்த ஆராவின் கைகள் மெல்ல உயர்ந்து சங்கமித்ராவின் உச்சந்தலையை ஆதுரமாய் தடவிக் கொடுத்தது. அடக்கி இருந்த அவளது அழுத்த மூச்சுக்கள் பெருமூச்சாய் வெளிவந்தது.

அவளின் நிலையை புரிந்து கொண்டவன், மெல்ல தன் இரு கைகளாலும் அவளது முதுகை தட்டிக் கொடுத்தான். அவன் காட்டும் பரிவிலிருந்து தப்பித்துக் கொள்ள, உடலை முறுக்கி அவன் பிடியிலிருந்து விலக நினைத்தாள்.

சின்னச் சிரிப்புடன் அவளை தன்னில் இருந்து விலக்கி நிறுத்தினான். "ஹேய்... ரிலாக்ஸ்... மை பொண்டாட்டி" என்றான் மென்மையான குரலில்.

அவன் காட்டிய புதிய பரிணாமத்தில் அவன் கண்களை ஆழ்ந்து நோக்கினாள். " என்ன மித்ரா அப்படி பார்க்கிறாய்? நானே மறந்தாலும் நீயே, இதைக் காட்டி காட்டி, நான் உன் மனைவிடா! என்று என் மனதில் பதிய வைக்கிறாயே!" என்று விழியால் பொன் தாலியை சுட்டிக் காட்டினான்.

" பொம்மை கல்யாணம், எப்பொழுது உண்மை கல்யாணமானது?" என்றாள் நிதானமாக தன் முகத்தில் வழிந்த மழை நீரை கைகளால் வழித்தபடி.

" உன்னை அறியாமல் பேசிய என் பேச்சுக்களை மறக்க மாட்டாயா?" என்றவன் கவனமாக, 'மன்னிக்க மாட்டாயா?' என்ற வார்த்தையை தவிர்த்தான்.

" என் நினைவடுக்குகளில் எப்பொழுதும் நீங்களும் கிடையாது. உங்கள் வார்த்தைகளும் கிடையாது" என்றாள் அழுத்தமாக.

" என்னை உன் நினைவில் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம். உயிரில் வைத்துக்கொள் மித்ரா" என்றவனின் வார்த்தையில் மென்மை மிளிர்ந்தது.

" என்ன இந்த திடீர் மாற்றம்?" என்றாள் சட்டென்று.

"ம் ஹூம்... உறவென்று இல்லாவிட்டாலும் நட்பாகவாது" என்றான்.

"நட்பா?. மிஸ்டர் ஆராவமுதன் உங்களுக்கு இந்த வேஷம் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. நீங்கள் சொல்லும் காரணமும் கூட பொருந்தி வரவில்லை"

"தன் காதலை நிரூபிக்க முன் வந்த சாராவை கூட நீ அடித்து விரட்டி விட்டாயே! எனக்கு என்று இருந்த ஒரே ஒரு காதலி.அவளின் வெற்றிடத்தை அப்போது நீதானே நிரப்ப வேண்டும். என் காதலிக்கு பதிலாய் இப்பொழுது நீ என்னை காதலி. என்னை அடிக்கத் தூக்கிய கரத்தால் அணைக்கத்தான் வேண்டும்" என்றான் சோகமான குரலில்.

"விளையாட்டுக்கள் போதும் மிஸ்டர் ஆராவமுதன்"

"ம்ஹூம்... இப்பொழுது தானே ஆரம்பித்திருக்கிறேன்"

"என்ன?"

"இல்லை இப்பொழுது தான் உன்னை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். இனி நான் உன்னை நெருங்குவதை உன்னால் தடுக்கவே முடியாது"

"நான் தடுக்கவே இல்லையே. யூ ஆர் மோஸ்ட் வெல்கம் மிஸ்டர் ஆராவமுதன்" பூகம்பம் புயலுக்கு அழைப்பு விடுத்தது.

"இந்த மழையும் இப்பொழுது விடுவதாக இல்லை. நம் வார்த்தையாடலும் இப்பொழுது முடிவதாகத் தெரியவில்லை. வீட்டிற்குள்ளே செல்லலாமே!" என்றான்.

"சரி " என்று உரைத்தவள் மழையில் நனைந்த தன் சேலையை இரு கரம் கொண்டு பிழிந்து, உதறி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

வெட்கமோ, கூச்சமோ இன்றி வெகு சாதாரணமாக அவள் செய்த செயல் கண்டு, அவளைப் பற்றிய ஒரு கணிப்புக்கு வர முடியாமல் தவித்தான்.

வீட்டிற்குள்ளே நுழைந்ததும் வெளிச்சத்தில், மழையில் நனைந்த அந்தக் குவளை மலரை ரசிக்காமல் ரசித்தான்.

" உனது ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது மித்ரா!" விட்ட பேச்சை தொடர முயன்றான்.


"அப்படியா? மகிழ்ச்சி"

" நாட்டியத்தை யாரிடம் கற்றுக் கொண்டாய்?"

"அலர்மேல் வள்ளி" குரலில் சற்றே பெருமிதம் துள்ளியது.

"ம்... அலர்மேல் வள்ளி. முன்னணி இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர். கரெக்ட்" என்றவனை முகம் மலர நோக்கினாள்.

" உங்களுக்கு அவர்களைத் தெரியுமா? நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? " தன்னை மீறி ஆர்வத்தில் கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றாள் சங்கமித்ரா.

"எஸ்... நியூயார்க் இன்டர்நேஷனல் ஃபெஸ்டிவலில் ஒரு தடவை அவர்களை சந்தித்து இருக்கிறேன். கட்டிடக்கலைக்காக நான் விருது வாங்கும் பொழுது பரத கலைக்காக அவர்களும் விருது வாங்கினார்கள்" என்றவன், வாயை பூட்டிக் கொண்ட அவளின் பூட்டு, நாட்டியம் என்ற ஒற்றைச் சாவியில் திறப்பதைக் கண்டு மெல்ல மெல்ல அவளின் ஆர்வ விளக்கின் திரியைத் தூண்டினான்.

"அவர்கள் என்ன அவ்வளவு பிரமாதமா?" என்றான்.

" அவர்களை நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி. என்ன அப்படி ஒரே கேள்வியில் கேட்டு விட்டீர்கள்? வார்த்தை, பொருள் மற்றும் இசை ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பை அவர்களது நாட்டியம் ஆழப்படுத்தும். அவர்கள் உடலால் 'எழுத', இசையோ உயிர்ப்புடன் 'பாட' உயிர் பெற்ற ஒரு கவிதையாய் அவர்கள் நடனம் இருக்கும்" என்றவளின் இதழும், விழியும் நடனம் போல் அசைந்தது.

அவள் காட்டும் உணர்வின் பிரதிபலிப்பில், ஆராவின் மனதிற்குள் சொல்ல முடியாத ஓர் இதம் பரவியது.

" பார்த்த நான் அதிர்ஷ்டசாலி என்றால் அவர்களிடமே நாட்டியம் கற்ற நீ பேரதிர்ஷ்டசாலி அல்லவா?" என்று கொக்கியிட்டு நிறுத்தினான்.

"இல்லை. அவர்களைப் பார்க்கும் பாக்கியம் இதுவரை எனக்கு கிடைக்கவே இல்லை" என்றாள் குரலில் ஏக்கம் இழையோட.

"வாட்?" அவளிடம் மாட்டி வகைத்தொகையாக அதிர்வதே ஆராவின் வழக்கமாயிற்று.

"அப்புறம் எப்படி நீ அந்த குருவுக்கு சிஷ்யையானாய்?" என்றவனின் குரலில் ஏளனம் கலந்து இருந்தது.

அவன் ஏளனத்தை புறந்தள்ளி முகத்தில் மிளிர்வைக் கொண்டு வந்து, " உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஏகலைவன் என்பவன் மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன். மகத நாட்டைச் சேர்ந்த இவன் பிறப்பினால் ஒரு வேடன். அவன் இருந்த இடம் அஸ்தினாபுரத்திற்கு அருகில் இருந்தது. அவனோ வில் வித்தையில் தேர்ந்தவனாக வர ஆசை கொண்டான்.

துரோணர் தான் சிறந்த குரு என்று தெரிந்து கொண்டு அவரிடம் சென்று தனக்கு வில் வித்தையைக் கற்றுத் தருமாறு வேண்டினான். துரோணர் சத்திரியர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுப்பதால், அதை வெளிக்காட்டாமல், ஏராளமான சீடர்களுக்குப் பயிற்சி அளிப்பதால் தனக்கு நேரமில்லை என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்.

பிறகு நான் எப்படி இதைக் கற்றுக்கொள்வது என்று துரோணரிடமே கேட்டான் ஏகலைவன். "உனக்கு என்மீது நம்பிக்கை இருந்தால் நீ எங்கிருந்தாலும் கற்றுக்கொள்வாய்" என்று அனுப்பிவிட்டார்.

ஏகலைவன் அவர் வார்த்தைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு, தனது இருப்பிடத்திற்கு திரும்பித் துரோணரைப் போல ஒரு சிலையை செய்தான், அந்தச் சிலையை குருவாகக் கருதிக்கொண்டு பயிற்சியை மேற்கொண்டான்.

ஒரு நாள் பயிற்சியில் ஏகலைவன் துரோணரின் சிலைக்கு முன்பாக மிகவும் சிரத்தையோடு வில் வித்தை கற்றுக்கொண்டிருந்தான், அப்போது ஒரு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அவன் கவனம் சிதறியது, குரைப்புச் சத்தம் வந்த திக்கை நோக்கி அம்புகளை எய்தான், அம்புகள் எல்லாம் நாயின் வாயைச் சுற்றித் தைத்து குரைக்க முடியாதபடி செய்தது. நாய் அருச்சுனனை நோக்கி ஓடியது. நாயைக் கண்ட அருச்சுனன் அதை இழுத்துக் கொண்டு போய் துரோணரிடம் காண்பித்து "இந்த அற்புதத்தைச் செய்தவன் நிச்சயம் என்னைவிடச் சிறந்தவனாக இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்" என்று துரோணரிடம் அருச்சுனன் கேட்டான்.

இப்படித்தான் இருக்கிறது என் மானசீக குருவைப் பற்றி நீங்கள் கேட்கும் போது " என்றவள் தான் கொண்ட நெகிழ்சியில், தன் மணிவாய் திறந்து சரமாரியாக முத்துக்களை உதிர்த்தாள் அதிசயமாக.

அவள் கதையைக் கேட்டு தன் தலையை ஸ்டைலாக இடவலமாய் அசைத்தான். " வாய்ப்புக்காக காத்திருப்பதை விட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். நீ ஏன் அலர்மேல் வள்ளி அவர்களை சந்திக்க முயலவில்லை?" என்றான் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.

" வேடனாகப் பிறந்ததால் ஏகலைவன் வீரம் வெளிவரவில்லை. நான்.. நான்... சுமித்திரையின் மகளாகப் பிறந்ததால், வெளிவராமல் இருளில் தள்ளப்பட்டேன்" என்றவள் தான் அறியாமலேயே தன் தாயின் பெயரை உரைத்தாள்.

'சுமித்திரை' என்ற பெயரை தன் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டான் ஆரா.

" இருள் என்ன இருள் மித்ரா? இரவில் நிலவின் ஒளியை நாடலாமே"

" அந்த நிலவே களங்கத்தை தன்னில் சுமந்து கொண்டு தான் இருக்கிறது. அதன் மறுபக்கமோ அந்தகாரமாய் இருள் பூசி இருக்கிறது" என்றவள் வெற்றுப்புன்னகை விடுத்தாள்.

"ஓ... மித்ரா இந்த ஆராமுதன் இருக்கும்போது எதற்கும் கலங்க கூடாது" என்று வெளிப்படையாக உரைத்தவன் தன் மனதிற்குள், 'உன்னை கலங்க வைப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும்' என்று சொல்லிக் கொண்டான்.

" மிஸ்டர் ஆரா! இருள் எனக்கு மிகவும் கஷ்டம் தரும், இஷ்டமான பழக்கம் தான். நான் உங்களை ஒரு அமாவாசை இரவிலேயே கரம் பிடித்தேன் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள் கூர்மையாக.

"அடடா! அலர்மேல் வள்ளி மேடத்தை பார்க்க உன்னை கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தேனே! இருளுக்குள்ளேயே உன்னை ஒளித்துக் கொண்டு, உன் நிழலை தேடினால் எப்படி கிடைக்கும் சங்கமித்ரா? வெளிச்சம் பார்க்க விருப்பம் இல்லையா?" என்றான் கேள்வியாக.

சுருங்கிக் கிடந்த அவளின் இதழ் வரிகள் தன் இறுக்கத்தை விடுத்து மலர ஆரம்பித்தது. "உண்மையாகவா? " அவள் உள்ளம் பரபரத்தது.

இரும்பு இளகி வரும் நேரம் உணர்ந்த கொல்லன் அதன் தலையில் சம்பட்டியால் ஒரு போடு போட எண்ணி, "ஓ... நீ சரி என்று சொன்னால் சென்னைக்கு டிக்கெட் போட்டு விடலாம். தேனம்மாவையும் பார்த்துவிட்டு வரலாம் " என்றான்.


திடீரென பொங்கி வரும் அவன் பாச வெள்ளம் கண்டு, தன் ஆவலை உள்ளடக்கி, " யோசித்து சொல்கிறேன் " என்று அவனைக் கடந்து சென்றாள்.

அவள் பாதத்தில் அணிந்திருந்த சலங்கைகள் ஜல் ஜல் என ஒலி எழுப்ப முன்னே சென்றவளின் கால் சலங்கையிலிருந்து ஒரு முத்து கீழே விழுந்தது.

தரையில் கலீர் என்ற சத்தத்துடன் அது தெறித்து விழுந்து ஆராவின் பாதம் சரண் அடைந்தது.

முத்து தெறித்த ஒலியில் திரும்பிப் பார்த்த சங்கமித்ரா ஆரா அதனை குனிந்து எடுப்பதைக் கண்டு, "நீங்கள் தொடக்கூடாது!" என்றாள் அதிகாரமாக.


பிறவி குணம் தலைதூக்க, 'நீ சொன்னால் நான் கேட்பேனோ?' என்று அதனை எடுத்து உள்ளங்கையில் மறைத்து வைத்துக் கொண்டான்.

"பச்... அதை என்னிடம் கொடுத்து விடுங்கள் " ஒரு விரல் நீட்டி தைரியமாக அவனை எச்சரித்தாள்.

" இந்த ஒரு பித்தளை முத்துக்காகவா இதுவரை குரல் உயர்த்தாத சங்கமித்ரா குரல் உயர்த்தி பேசுகிறாள்! ஆச்சரியமாக இருக்கிறதே! என் வசதிக்கு உனக்கு தங்கத்திலேயே சலங்கை வாங்கி தருகிறேன் " என்றவன் அந்த ஒற்றை முத்தை தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு மாடி ஏறத் தொடங்கினான்.

பரந்து விரிந்த அவன் முதுகைப் பார்த்தவள், தீரா அழுத்தத்தின் உச்சியில் கண்களை இருக்க மூடித் திறந்து " அமுதா!" என்று கத்தினாள் வீடு அதிர.

'அமுதன்' என்ற ஒற்றை அழைப்பு அவன் தாயை நினைவூட்டியதில் தேகம் விரைக்க படிக்கட்டில் நின்றான். நீர் நிரம்பிய பாத்திரம் போல் அவன் மனது தழும்ப ஆரம்பித்தது. ' உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன் வார்த்தைகள் என் உயிரை உரசிச் செல்கிறதே' மனம் சங்கமித்ராவோடு சண்டையிட்டது.


அவளை திரும்பிப் பார்க்காமலேயே, " என் கைவசமானது என் வசமே" என்றவன் நிதானமாக மீண்டும் மாடி ஏறத் தொடங்கினான்.

" என் பொருள் எனக்கு வேண்டும்" அவளது உணர்வுக் காட்டில் தீப்பொறி பற்றிக்கொள்ள, அது வெடிக்கும் நேரம் பார்த்தது.


இடது கால் ஒரு படிக்கட்டில், வலது கால் மேற்படிக்கட்டில் இருக்க, தன் வலது கையை ஐவிரல் பிரித்து நீட்டியவன், அதனை அசைத்து தன் மறுப்பினை தெரிவித்தான்.

பட்டுப்பூச்சி அதன் கூட்டை தானே உடைத்து வெளிவர நேரம் பார்த்தான் அவன்.

தரை அதிர சலங்கைச் சத்தம் கேட்பது கண்டு புயல் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து கொண்டான்.

சங்கமித்ரா தன் உரிமை பொருளை மீட்பதற்காக மாடிப்படி ஏறினாள். அவள் தன்னை நெருங்கி விட்டதை உணர்ந்த ஆரா சட்டென்று படியில் அமர்ந்தான். பொருளை எடுப்பதற்காக கையை நீட்டியவளோ நிலை தடுமாறி அவன் தோள்களைப் பற்றினான்.

இருவர் முகமும் நேர் எதிராக நோக்க, அடுத்த நொடி அவள் பாதத்தை பற்றி தன் மடியில் வைத்தான். உள்ளங்கையில் இருந்த ஒற்றை முத்தை பாத சலங்கையில் கோர்த்தான்.

அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை எதிர்பாராமல் அதிர்ந்த சங்கமித்ரா, அதிர்ச்சியில் பேச்சிலிருந்து நிற்க, " ஆராவின் அதிரடிக்கு தயாராகு" என்றவன் அவள் முகத்தருகே வர, ' முத்தம் தானே!' என்றவளின் முகத்தில் அதிர்ச்சி போய் அசட்டை வந்தது.


ஆனால் ஆராவின் இதழ்களோ வளைந்து நெளிந்து அவள் காது மடல் அருகே வந்து, " ஒற்றை முத்துக்கே ஓராயிரம் உணர்ச்சிகளைக் காட்டினாயே, இப்போது மொத்த சலங்கையும் என் வசம் " என்றவன் அவளை சட்டென்று விலக்கி விட்டு கைகளில் சலங்கை குலுங்க குலுங்க விறுவிறுவென மாடி ஏறி தன்னறைக்குள் நுழைந்தான்.

குனிந்து தன் பாதத்தை பார்த்தவள், வெறுமையாய் இருப்பது கண்டு உணர்வற்றவளின் உயிர் துடித்தது.

நின்ற இடத்திலேயே சிலையாய் நிற்க, " மித்திரை இது உனக்கான பிறந்தநாள் பரிசு ' என்ற குரல் காதில் ஒலிக்க, உயிரற்றுப்போன தன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து, தன் உயிர்ப் பொருளை வாங்குவதற்காக அவன் அறையை நோக்கி, செந்தனலென முகம் சிவக்க, அவள் கால்கள் நகர்ந்தது.

கதவின் பின்புறம் நின்று கொண்டவன், நிச்சயம் மித்ரா தன்னை தேடி வருவாள் என்பதை நன்கு உணர்ந்திருந்தான்.

தன் முழு பலத்தையும் ஐவிரல்களில் கொண்டு வந்து, கதவினை ஓங்கித் தட்ட, தாழ்ப்பாள் இடாத கதவு சட்டெனத் திறந்து அவளை அறைக்குள் உள்வாங்கியது. உள்ளே கண்களுக்கு எதுவும் புலப்படாத கும்மிருட்டு. இருட்டு அவளைத் துரத்த அனைத்தும் மறந்து போனது.

வேகமாக வெளியில் வந்து சுவற்றில், தன் முதுகைப் பதித்து, பின்னந் தலையை சுவற்றில் தட்டிக் கொண்டே தரையில் கால் மடங்கி அமர்ந்தாள்.

மை இருளில் அவள் பெண்மையை தீண்டித் தூண்டி நெகிழச் செய்யலாம் என்று கணக்கிட்டிருந்த ஆரா, கதவைத் திறந்த ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் கேட்காமல் போகவே, மெல்ல அறையை விட்டு வெளியில் வந்தான்.


தரையில் கால் மடக்கி, வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த சங்கமித்ராவைக் கண்டதும், 'பச்... இவள் விஷயத்தில் என்றைக்கு நான் நினைத்தது நடந்தது?' என்ற மனச்சலிப்போடு அவள் முன் சொடுக்கிட்டு, "என்ன?" என்றான்.

சங்கமித்ரா ஆராவின் அறையை நோக்கி கையைக் காட்டி, "அம்மா..." என்றாள்.

"யார்? உள்ளே ஒருவரும் இல்லையே?"

"ப்ளீஸ் சார்... அம்மா பாவம்" என்றாள்.

" முட்டாள் என்ன உளறுகிறாய்? " கோபம் எட்டிப் பார்த்தது ஆராவின் குரலில்.

"அம்மா..." என்று ஆராவின் அறையை நோக்கி கூப்பிட்டவள் அப்படியே மயங்கி சரிந்தாள் தரையோடு.


மன அழுத்தத்தில் அவள் மயங்கியது தெரியாமல், " மித்ரா போதும் உன் நாடகம் எழுந்திரு!" என்றான்.

மூச்சுப்பேச்சு இல்லை அந்த மங்கையிடம். சிறிது பதற்றம் தொற்றிக் கொண்டது ஆராவிற்கு.

"ஏய்... ஏய்..." என்று கன்னத்தை தட்டினான். தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்துப் பார்த்தான். சிறிதும் சலனமில்லை.

உயிர் போய்விட்டதோ என்று உலுக்கினான் அவளை. அவன் கையில் இருந்த சலங்கையும் சேர்ந்து குலுங்கியது. சலங்கை ஒலியில் "மா..." என்று ஈனஸ்வரமாய் அவள் உதடுகள் அசைந்தது.


நிம்மதிப் பெருமூச்சு விட்டவன், அவளை கையில் அள்ளிக் கொண்டு தனது அறையில் கட்டிலில் படுக்க வைத்தான். ஈரத்துணியுடன் அவள் இருப்பதால் காய்ச்சல் வந்து விடுமோ என்று எண்ணி, அவளின் ஈர உடைய மாற்றுவதற்கு புடவையில் கை வைத்தான்.

பின் தன் தலையை இடவலமாக அசைத்து விட்டு, நாயகியை வரச் சொல்லி உடைமாற்றச் செய்தான். இருட்டு அவளை மிரட்டியது என்று எண்ணியவன் அறையிலுள்ள அனைத்து விளக்குகளையும் எரியச் செய்தான்.

அத்தனை விளக்கும் பிரகாசமாய் ஒளிர்ந்தது ஆராவின் எதிர்காலத்தை போல்.


சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஏகலைவன் போல நடனத்திலும் ஒரு சிஷ்யை 👏👏👏

மித்திரையின் தாய் சுமித்திரையா 🤔🤔🤔

ஏன் இருளுக்குள் தள்ளப்பட்டாள் மித்ரா 🤨🤨🤨 அவளின் பின்புலம் பூகம்பத்தை உள்ளடக்கியதாக தான் இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெறுகின்றது ஆத்தரே 🥺🥺🥺

சலங்கைக்குள் ஒரு ரகசியம் 🙄🙄🙄
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️சலங்கை சங்கமித்ராவுக்கு அவள் அம்மா கொடுத்ததா இருக்குமோ நீங்கா நினைவுகளாய் 🤔🤔🤔🤔🤔🤔🤔
தோழமையின் கணிப்பு என்றும் சரியாகத்தான் இருக்கும் 👍
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
ஏகலைவன் போல நடனத்திலும் ஒரு சிஷ்யை 👏👏👏

மித்திரையின் தாய் சுமித்திரையா 🤔🤔🤔

ஏன் இருளுக்குள் தள்ளப்பட்டாள் மித்ரா 🤨🤨🤨 அவளின் பின்புலம் பூகம்பத்தை உள்ளடக்கியதாக தான் இருக்குமோ என்ற சந்தேகம் வலுப்பெறுகின்றது ஆத்தரே 🥺🥺🥺

சலங்கைக்குள் ஒரு ரகசியம் 🙄🙄🙄
இருள்.... காரிகை கண்ட காரிருள்....
அந்த இருளை மையாய் எடுத்து என் பேனா எழுத... உண்மை கண்ட உள்ளம் உறைந்தே போனது 🥺
 
  • Wow
Reactions: Shimoni