• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 14

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 14

தன் படுக்கையில் படுத்து இருந்த சங்கமித்ராவை உற்று நோக்கினான் ஆரா. எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் அந்த அந்த மேனி இன்று குழைந்து, குழந்தை போல் சுருண்டு படுத்திருந்தது.

அவளின் ஒரு கை கழுத்தின் அடியில் இருக்க மறு கை போர்வை விரிப்பில் எதையோ தேடியது. அலைபாயும் அந்த கையினை அவள் அருகில் அமர்ந்து தன் கையில் அடக்கிக் கொண்டான்.

அறையின் வெளிச்சத்தில் ஆராவிற்கு உறக்கம் வர மறுத்தது. பொழுதுபோக்கிற்காக சங்கமித்ராவின் கையினை விரித்துப் பார்த்தான். அதன் மென்மையை இதமாய் வருடிக் கொடுத்தான். அவளின் கையில் அழுத்தமாய் ஓடிய ரேகையில் தன் விரல் கொண்டு பயணித்தான்.

தன் தாயின் இடக் கையையும் தன் வலக் கையையும் விரித்தபடி ஒன்றாக ஒட்டிக்கொண்டு, இரு ரேகைகளும் ஓடம் போல் பயணிப்பதை கண்டு மகிழும் சிறு வயது ஆரா உள்ளிருந்து விழித்து எழ, சங்கமித்ராவின் கையையும் தன் கையையும் நடுங்கியபடி இணைத்துப் பார்த்தான்.

அழகிய அவர்களின் வாழ்க்கை ஓடம், கையில் மிதப்பதை உணர்ந்தவன் ஆனந்த அதிர்வில் மிதந்தான். வசதியாக படுக்கையில் கால்நீட்டி அமர்ந்து முதுகிற்கு தலையணையை அணைவாய் கொடுத்து, நிதானமாக அவள் உள்ளங்கையிலே மீண்டும் ஆராய்ச்சி நடத்தினான்.

சங்கமித்ராவின் கரம் சூடாக இருப்பதைக் கண்டு அலைபேசியில் சில கட்டளைகளை பிறப்பித்தான்.

நாயகி சங்கமித்ராவிற்கு சூடான பாலினை புகட்ட முயன்றார். மயக்கமும் உறக்கமும் தழுவிய நிலையில் கூட அவளது இதழ்கள் திறக்கவில்லை. வெகு நேரம் போராடிவிட்டு தன் முயற்சியை கைவிட்டார் நாயகி.

'நீ போகலாம்' என்பது போல் சைகை செய்தான் ஆரா. ஆராவின் முகத்தில் தென்பட்ட மாறுதலை வியப்புடன் பார்த்தபடி நின்றிருந்தார் நாயகி. அடுத்த நொடி அவன் பார்த்த முறைப்பில் அறையை விட்டு வேகமாக விலகி ஓடினார்.

ஆரா அலைபேசியில் சிவாவுக்கு அழைப்பு எடுத்து அன்று சங்கமித்ராவிற்கு வைத்தியம் பார்த்த மருத்துவரின் அலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டான். ஆழ்ந்து யோசித்தவன், மருத்துவரின் எண் குறுஞ்செய்தியாய் வந்தவுடன், சங்கமித்ராவின் நடவடிக்கைகளை சுருக்கமாகச் சொல்லி, அவரிடமிருந்து சில விளக்கங்களைக் கேட்டான்.

"இது அதீதமான மன அழுத்தத்தின் வெளிப்பாடு. அழுத்தத்திற்கான சூழ்நிலைகளை குறைத்தால் குறையலாம். சூழ்நிலைகள் மீண்டும் உருவாகினால் மீண்டும் மீண்டும் அதிகரிக்கலாம்" என்றார்.

"அவள் மனதில் இருக்கும் சில உண்மைகளை எப்படி வாங்குவது? " என்றான் ஆரா.

" சூழ்நிலையை தக்க முறையில் கையாண்டால் உண்மைகள் வரலாம். இல்லை மீண்டும் அதீதமான அழுத்தத்திற்கு உள்ளாகலாம் "என்று எச்சரித்தார்.

அலைபேசியின் இணைப்பை துண்டித்தவன், அவளின் மன அழுத்தத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்து, அவள் கையை தன் நெஞ்சத்தில் சேர்த்து கண் மூடினான்.

திடீரென்று தன் நெஞ்சில் ஏதோ பாரம் குறைந்ததை உணர்ந்தவன், கண் விழித்துப் பார்க்க அருகில் சங்கமித்ரா இல்லை. சுற்று முற்றும் பார்க்க அறையோடு இணைந்திருந்த ஓய்வறையில் இருந்து தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.

தண்ணீர் விழும் சத்தம் குறைந்து, ஓய்வறையின் கதவு திறக்கும் ஒலி கேட்டதும், ஏனோ மனம் பொறுக்காமல் விறுவிறுவென படுக்கையில் இருந்து எழுந்து, ஓய்வறை வாசலில் வந்து நின்றான்.

கதவைத் திறந்தபடி சங்கமித்ரா வெளிவர, அவளுக்கு உடம்பில் ஏதும் சூடு இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக ஆரா தன் வலது கையின் நான்கு விரல்களை மறுபுறம் திருப்பி அவள் நெற்றி நோக்கி கொண்டு போனான்.

ஆனால் அடுத்த நொடி, எதையும் சரியாக கவனிக்காத சங்கமித்ரா தன்னை நோக்கி நீண்ட கரத்தைக் கண்டதும், தன்னை தாக்க யாரோ வருகிறார்கள் என்று நினைத்தவள், ஆராவின் தாடை அடியில் தன் கை விரல்களை மடக்கி ஓங்கி ஓர் குத்து குத்தினாள்.

எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ஆரா, பின்புறமாய் சாய்ந்து படுக்கையில் வீழ்ந்தான். அவனைத் தாக்கிய பிறகுதான் அது ஆரா என்பதை அறிந்து கொண்டவள், தான் செய்த தவறை சரி செய்வதற்காக கட்டிலின் அருகே வந்து ஆராவை நோக்கி கையை நீட்டினாள்.

நீட்டிய கையையும் அவள் முகத்தையும் பார்த்த ஆரா தன்னுள் பொங்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு, அவள் முகத்தை பார்த்தவாரே தன் கையை மெதுவாக நீட்டினான்.

அவன் கையைப் பற்றி இழுப்பதற்காக குனிந்த சங்கமித்ரா, அடுத்த நொடி ஆரா இழுத்த இழுவிசையில் நிலைத்தடுமாறி அவன் நெஞ்சம் எனும் மஞ்சத்தில் விழுந்தாள்.

"மழையில் நனைந்த உனக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்று பார்ப்பதற்காக கையை நீட்டிய என்னை தாக்கினாயே! இப்பொழுது உன் உடல் சூட்டை என் உடலால் அறிந்து கொண்டேன். இதற்கு என்ன பதில் தாக்குதல் மித்ரா? " என்றான்.

"இவ்வளவுதானா? உங்கள் கையோ, மெய்யோ தேகச் சூட்டினை துல்லியமாய் அறியாது. வேறு முயற்சி செய்து பாருங்களேன் " என்று புதிர் போட்டாள், அவன் மீது படுத்துக் கொண்ட எந்த ஒரு அனிச்சை உணர்வும் இன்றி.

விடை தெரியாமல் ஆராவின் கண்கள் விரிந்து, இமைகள் சரிந்தது. ஆனால் மூளையோ தீவிரமாக யோசித்தது.

அவனின் எண்ணப் போக்கை துல்லியமாக உணர்ந்து கொண்டவள், "மனைவியிடம் தோற்பது கூட ஒரு அழகு தான்" என்று கூறி அவன் இதழ் மீது தன் நெற்றியை பதித்தாள்.

அவனின் மெல்லிய இதழ், அவளின் நெற்றிச் சூட்டை துல்லியமாய் உள்வாங்கியது. சிறுவயதில் தன் அன்னை செய்வதுபோல் இருந்தது அவனுக்கு. இமைகள் தாமாக மூடிக்கொள்ள, இதழ்கள் தாமாக விரிந்தது ஆராவமுதனுக்கு.

சாராவின் முத்தம் அவனுக்கு வெறும் சத்தமாய் இருக்க, மித்ராவின் முத்தமோ யுத்தமாய் அவனுக்குள் வெடித்தது. அனைத்தும் மறந்த நிலையில், ஆராவின் கைகள் சங்கமித்ராவை தழுவிக் கொள்ள முயன்ற நேரம், அவன் பிடியிலிருந்து நிதானமாக எழுந்து நின்றாள்.

அவளின் அருகில் தோன்றிய இதம் அவள் அகன்றதும் அவன் இதயத்தில் வதம் செய்ய ஆரம்பித்தது. அதனை ஒத்துக் கொண்டால் அவன் ஆரா இல்லையே.

தன்னை வீழ்த்தியவளை காயப்படுத்தியே ஆக வேண்டும் என்ற ஆராவின் அகந்தை வெளியே வந்தது. வன்மச் சிரிப்புடன் அவளின் இயலாமையை குறி பார்த்து அடிக்க, படுக்கையில் இருந்து மெல்ல எழுந்து நின்றவன் கதவருகே சென்று தாளிட்டு விட்டு, படபடவென அனைத்து விளக்குகளையும் அணைத்தான். அவளின் பயம் என்ற உணர்வை பந்தாடத் துணிந்தான்.

இருட்டிற்கு கண்கள் பழகியதும், சங்கமித்ராவைத் தேடினான். விளக்கை எரியச் செய்தால், அவளது பய உணர்வு அகன்று விடும் என்ற எண்ணத்தில் நிதானமாக அடி மேல் அடி எடுத்து வைத்தான்.

அவன் அறையை நிதானமாக கால்களால் துலவியபடி ஒருமுறை வலம் வந்தும் சங்கமித்ராவை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. மெல்ல தன் அலைபேசியில் ஒளியை ஒளிரச் செய்தான். படுக்கையின் அடியில் சங்கமித்ராவின் புடவை நுனி தென்பட, நெற்றிச்சுருக்கத்துடன் படுக்கையின் அருகே ஒற்றைக் காலில் குத்திட்டு அமர்ந்தான்.

"மித்ரா வெளியே வா" என்று கூப்பிட்டான்.

சங்கமித்ராவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. படுக்கையின் அடியில் விழிகளை அசைக்கவோ, இமைகளை திறக்கவோ செய்யாமல் காதினை கூர்தீட்டி சுற்றுப்புறத்தை அவதானிக்க ஆரம்பித்தாள். மறைக்கப்பட்ட கையின் அடியில் இருந்த அவள் உதடுகளோ சத்தம் இன்றி "அம்மா காப்பாற்றுங்கள்! அம்மா காப்பாற்றுங்கள்!" என்று அசைந்து கொண்டே இருந்தது.

" மித்ரா வெளியே வா இது உனக்காக கடைசி அழைப்பு!" என்றான் ஆரா அதிர்ந்த குரலில்.

அவளது தலை மறுப்பாய் அசைந்தது. அவனது குரலை கேட்கப் பிடிக்காமல் காதுகளை மூடிக்கொண்டாள் இறுக்கமாக.

சிறிது நேரத்தில் எந்த சத்தமும் இல்லாமல் போக, ஒளியைத் தேடி இருளில் தவித்தாள் சங்கமித்ரா. ஒரே நாளில், ஒரே நேரத்தில் மீண்டும் மீண்டும் மனதை பழைய நினைவுகள் அழுத்த, அதன் தாக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் தவித்தாள்.

அவளின் பலத்தை அறிந்து கொண்ட ஆரா இன்று அவளின் பலவீனத்தை அறிந்து கொண்ட மகிழ்ச்சியில், மேலும் மேலும் அவளை சீண்ட ஆரம்பித்தான்.

அவளின் சலங்கையை கையில் எடுத்த ஆரா மெல்ல அதனை அசைத்து, அனைத்து திசைகளிலும் சப்தங்களை சிதறச் செய்தான்.

உதடு கடித்து, உண்மையை விழுங்க முயன்றவள் தோற்று நின்றாள். கட்டிலின் அடியில் இருந்து உருண்டு வெளியில் வந்து சலங்கையின் சப்தம் முன் நின்றாள் ஒரு கை நீட்டி. கண்களில் தவிப்பு மட்டுமே எஞ்சி இருந்தது. கலக்கமோ கண்ணீரோ சிறு துளியும் இன்றி துடைக்கப்பட்டிருந்தது.

சலங்கையை தன் உள்ளங்கையில் வைத்தே தட்டிக் கொண்டிருந்தவன், தன் முன்னே சங்கமித்ராவின் வேகப் பெருமூச்சின் சத்தம் கேட்க, அவளை வென்ற மமதையுடன் ஜன்னலின் திரைச்சீலையை விலக்கினான்.

தூரமாய் இருந்த இரவு விளக்குகளின் வெளிச்சத்தில், தன் முன்னே நின்றவளின் வரி வடிவம் தெரிய, அதிலும் அவள் நின்ற கோலம் அவனின் அகோரமான அகந்தைப் பசிக்கு உணவு அளித்தது.

"என் சலங்கை " ஓய்ந்த தோற்றத்திலும் உறுதியான குரலில் கேட்டாள் மித்ரா.

"ம்... குட். இந்த சலங்கைக்காக எதுவும் செய்வாய். ரைட்?" என்றான்.

அடுத்த நொடி சங்கமித்ரா தன் உடலில் உடுத்திருந்த சேலையை மடமடவென அவிழ்த்து அவன் முகத்தில் வீசினாள்.

விபத்தில் தன் அன்னை இறந்தபோது, அவர் உடுத்தி இருந்த சேலையினை நுகர்ந்த போது, ரத்த வாடை வீசிய உணர்வு வந்தது ஆராவுக்கு, தன் முகத்தில் விழுந்த சங்கமித்ராவின் சேலையில்.

அவன் ஒரு வித அருவருப்புடன் சேலையை விலக்கி முகத்தை திருப்ப, "என் சலங்கை" என்றாள்.

" பைத்தியமாடி நீ! என்னைப் பார்த்தால் உடம்பு திணைவெடுத்து அலையும் ஆள் போலவா தெரிகிறது? தொலைத்து கட்டி விடுவேன் ஜாக்கிரதை " என்று உறுமினான்.

எந்தவித உணர்வும் இன்றி மீண்டும், "என் சலங்கை" என்றாள்.

ஆத்திரம் மிகுதியில் ஆரா அவள் கழுத்தைப் பிடித்தான். அவன் பிடியில் இருந்தாலும் தன் கைகளை முன்னும் பின்னும் அசைத்து அவனது மறுகரத்திலிருந்த சலங்கையை பறிக்க முயன்றாள்.

அவளது முயற்சி தோற்கவே, அழுத்தி இருந்த மன பாரங்கள் எல்லாம் வெடிக்கத் தொடங்கியது. தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனை தாக்கினாள். தன் நகங்களால் அவன் முகத்தினை கீறினாள்.

அவளின் கழுத்தைப் பிடித்து தள்ளினான். தடுமாறினாலும் தள்ளாடி நின்று கொண்டாள். "சங்கமித்ரா இந்த சலங்கைக்காகத்தானே இத்தனை போராட்டம்! இதோ இந்த சலங்கை முத்துக்களை ஒவ்வொன்றாகப் பிரித்து தூர வீசி விடுகிறேன்" என்றான் அவள் தன்னைத் தாக்கிய கோபத்தில்.

தன் உயிர் அவன் கையில் ஊசலாடுவதைக் கண்டவள், நடுங்கும் இதழ்களால், "அமுதா... ப்ளீஸ் " என்றாள்.

அவளின் அந்த அழைப்பு அவனை குளிரச் செய்தது. " சரி நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறினால் உனது சலங்கை உன் கையில் வரும்" என்றவன் இறுகிய கற்பாறை உருகுவதைக் கண்டு, சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணினான்.

"ம்... சரி " என்றாள் உணர்வற்ற குரலில். அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது. அந்த சலங்கை தரும் நினைவுகள் மட்டுமே அவளை வாழ வைத்தது. தான் வாழ வேண்டுமே. அன்னைக்கு தான் செய்து கொடுத்த வாக்கிற்காகவாவது. அது இல்லை என்றால் சங்கமித்ராவும் இல்லை, அவள் உறுதியும் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருந்தாள்.

இதுவரை யாரிடமும் எதற்காகவும் கையேந்தி நிற்காதவள், முதன் முறையாக ஆராவின் முன் கையேந்தியதில் அவளின் நிமிர்வு அடி வாங்கியது. அதுவும் அந்த உயிர்ப் பொருளுக்காக என்று எண்ணும் போது மீண்டும் அந்த நிமிர்வு அவள் மனதில் வந்து குடி புகுந்தது.

அவளை கட்டுப்படுத்தும் ஆயுதத்தை தன் கையில் வைத்துக்கொண்டு, இனி அவள் தன்னை மீற முடியாது என்பதை நன்கு உணர்ந்தவன், அறையின் விளக்குகளை ஒளிரச் செய்தான்.

சேலையின்றி நின்ற சங்கமித்ராவைக் கண்டதும், மேலிருந்து கீழாக அவளை அளவெடுத்தான். கூச்சமும் நாணமும் இன்றி அவள் நிற்பதைக் கண்டு, " என் முன் இப்படி நிற்க உனக்கு வெட்கமாக இல்லையா? தன் மானத்தை விற்று பிழைப்பு நடத்துபவள் கூட வெட்கப்படுவது போல நடிப்பாள். ஆனால் நீ! " என்று அவளை தாக்காமல் தாக்கினான்.

"நான் ஏன் வெட்கப்பட வேண்டும் அமுதா? மறைத்து மறைத்து பெண்கள் தங்களை பொத்தி பாதுகாத்துக் கொண்டாலும், மனதாலும், கண்ணாலும் அவர்களை துகிலுரியும் ஆண்கள் இருக்கும் போது நான் ஏன் வெட்கப்பட வேண்டும்? ஏன் இப்பொழுது உங்கள் கண்கள் பார்க்கவில்லையா? உங்களுக்கு வராத வெட்கம் எனக்கு மட்டும் ஏன்?" அவனைச் சாடியது அவளின் குற்றச்சாட்டு.

"அது... மனைவியைப் பார்க்கலாம். தவறில்லை" என்றான் அலட்டல் இல்லாத குரலில்.

'அப்படியா?' என்பது போல் புருவம் உயர்த்தினாள் ஏளனச் சிரிப்புடன்.

அவள் நின்ற நிலைக்கண்டு அவன் கால்கள் அவளை நோக்கி நகர்ந்தது. அவன் அருகில் வந்தாலும் சங்கமித்ராவின் கவனம் முழுவதும் ஆராவின் கையில் இருந்த சலங்கையில் மட்டுமே. தாய் தேடும் சேயாய் தவிப்புடன் நின்றாள்.

அவன் அருகில் வந்ததும் சலங்கையை பறிக்க முயலும் தன் கைகளை இறுக்க மூடி, கால் பெருவிரலை தரையில் ஊன்றி, தன் உணர்வுகளுக்கு அணைக்கட்டி நின்றாள்.

அருகில் வந்தவனோ, தன் கையை அவள் முன் நீட்ட, தன் பெண்மையை மறைக்காமல் விழிகள் அசைவின்றி அவன் கையில் இருந்த சலங்கையையே பார்த்தது.

ஆரா தன் கையை அப்படியே கீழிறக்கி சங்கமித்ராவின் புடவையை எடுத்து அவள் மேல் போர்த்தினான். "நான் கெட்டவனாகவே இருந்தாலும், கொஞ்சம் நல்லவன்தான் மித்ரா " என்றான்.

சங்கமித்ரா மெல்ல தன் கை உயர்த்தி சுட்டு விரலினால் அவன் கையிலிருந்த சலங்கையை சுட்டிக் காட்டினாள்.

"சரி... இருட்டு என்றால் உனக்கு பயமா?" கேள்வியை தொடுக்க ஆரம்பித்தான்.

" வெறும் இருட்டு இல்லை. பூட்டிய அறையில் நான்கு சுவர்களுக்குள் இருக்கும் இருட்டு. கும்மிருட்டு" சொல்லும்போதே கன்னத்து தாடைகள் இறுகி, உதடுகள் நடுங்கியது அவளுக்கு.

சொல்லும்போதே அவள் மீண்டும் உள்ளே இறுகுவதைக் கண்டு கொண்டவன், கட்டிலில் அமர்ந்து கொண்டு, " அருகில் வந்து உட்கார் மித்ரா " என்றான் மென் குரலில்.

மறுவார்த்தை மறுத்து பேசாமல் அவன் அருகில் வந்து அமர்ந்தாள். "நீ மும்பைக்கு எப்பொழுது வந்தாய்?" என்றான்.

"நான்..." என்று வார்த்தைகள் இன்றி அமைதியானாள்.

ஆராவின் கையில் சலங்கைகள் குலுங்க, "ம்... நான் பிறந்ததே இந்த மும்பையில் தான் " என்றாள்.

"வாட்?" ஆச்சரியம் மின்னியது ஆராவின் விழிகளில்.

அவளைப் பற்றி சொல்வதில், அவளுக்கான பிடித்தமின்மை அவளது முகத்தில் தெளிவாக மையம் கொண்டது.

" அப்பொழுது அந்த கிராமம்? "

" என் அம்மாவின் கடைசி ஆசைக்காக"

"ஓ... ஐ ஆம் சாரி. அப்போ உன் அம்மா"

'இல்லை' என்பது போல் அவளது தலை இடவலமாக அசைந்தது.

"நீ என்ன படித்திருக்கிறாய்?"

"பி டெக் சிவில் இன்ஜினியரிங்"

"ஓ... குட். எந்த கல்லூரி?"

"ஐ ஐ டி பாம்பே"

ஆச்சரியம் அவன் கண்களில் நிழலாடியது. அந்தத் திறமை தான் அவன் அலுவலகத்தில் வெளுத்து வாங்கியது என்று நினைத்துக் கொண்டான்.

"ஐ ஐ டி யில் எல்லாம் படித்திருக்கிறாய். உன்பால் இதுவரை வராத மதிப்பு எல்லாம் வரும் போலவே. இத்தனை வருடம் இங்கே இருந்திருக்கிறாய். உன்னை நான் பார்த்ததே இல்லையே" என்றான் சிறு யோசனையுடன்.

"நீங்கள் என்னைப் பார்க்க வாய்ப்பே இல்லை"

"ஓ... மும்பையில் நீ எங்கே தங்கி இருந்தாய்?"

இதுவரை ஏனோ தானோ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தவளின் இதழ், ஏளனமாய் சிரித்தபடி, நேருக்கு நேராய் அவனைப் பார்த்து சலனமின்றி, "காமாத்திபுரா' என்றாள்.

"ஹேய்..." என்று உட்கார்ந்திருந்த ஆரா அப்படியே எழுந்து நின்றான் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியைத் தேக்கியபடி.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
என்ன ஆரா, அடி கொஞ்சம் பலமோ 😜😜😜🤣🤣🤣

சலங்கை கொண்டு அவள் பூர்வீகம் அறிந்து விட்டானே 😲😲😲 பலே கில்லாடிதான் ஆரா நீ 😏😏😏

எதே 😳😳😳 ஆத்தரே தாங்கள் தந்த அதிர்ச்சியால் ஆராவை போல நானும் எழுந்து நின்று விட்டேன் பேரதிர்ச்சியால் 😱😱😱
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
என்ன ஆரா, அடி கொஞ்சம் பலமோ 😜😜😜🤣🤣🤣

சலங்கை கொண்டு அவள் பூர்வீகம் அறிந்து விட்டானே 😲😲😲 பலே கில்லாடிதான் ஆரா நீ 😏😏😏

எதே 😳😳😳 ஆத்தரே தாங்கள் தந்த அதிர்ச்சியால் ஆராவை போல நானும் எழுந்து நின்று விட்டேன் பேரதிர்ச்சியால் 😱😱😱
எழுந்து நின்றாலும் நீங்கள் என் மனதில் இதமாக அமர்ந்து விட்டீர்கள் நட்பே ❤️
 
  • Love
Reactions: Shimoni