• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை -17

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 17

சுமித்திரை தன்னைச் சுற்றி வீசிய மண் மணம் மாறா கடற்காற்றை, தன் கடைசி சுதந்திரக் காற்றாய் எண்ணி, உள்ளிழுத்து தன் காற்றுப் பையில் நிறைத்தாள்.

'வலியவன் வகுத்தது தான் விதி' என்பதை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டாள். இனி தன்னால் எந்த உயிரும் போகக்கூடாது என்பதில் உறுதியாய் இருந்தாள்.

மடியில் சுமந்து இருந்த தன் பாட்டியை கீழே இறக்கி வைத்து விட்டு, எழுந்து நின்று மாடிப்படியின் வளைவில் கைகளை வைத்துக்கொண்டு இலக்கில்லாமல் தொடு வானத்தை பார்த்து நின்றாள்.

சுமித்திரையின் பெரியப்பா அவள் பாட்டியை காணாமல் தேட, ஆங்காங்கே நின்றவர்கள் அவர் சுமித்திரையின் வீடு போகும் பாதையில் பார்த்ததாகக் கூற, சுமித்திரையின் வாசல் நின்று தன் தாயைத் தேடினார் சுமித்திரையின் பெரியப்பா. அவர் தன் தாயை அழைத்து எழுப்பிய குரலில், உள்ளிருந்து உடனே வெளியே வந்த ஆதித், "வாங்க மாமா... நீங்கள் மீண்டும் உங்கள் வீட்டிற்கு வந்தது மகிழ்ச்சி. உள்ளே வாருங்கள்" என்று வரவேற்பு நாடகமாடினான்.

"இருக்கட்டும் மாப்பிள்ளை. அம்மா இந்தப் பக்கம் வந்ததாக கூறினார்கள். அவர்களை வெகு நேரமாகக் காணவில்லை" என்றார் சற்று வருத்தமாக.

"ஐயோ பாட்டியைக் காணோமா? நான் இங்கே அவர்களைப் பார்க்கவில்லையே " என்று பசப்பினான்.

மொட்டை மாடி கைப்பிடி சுவற்றில் இருந்து கைத்தட்டி ஓசை எழுப்பி தன் பெரிய தகப்பனை தன்னை நோக்கி பார்க்கச் செய்த சுமித்திரை, தன் வலது கையின் நான்கு விரல்களை உள்ளங்கையில் மடக்கி, பெருவிரலை மட்டும் பாட்டி விழுந்த திசை நோக்கி காட்டினாள்.

அவள் தங்களை இகழ்ந்ததெல்லாம் மறந்து தாய்ப் பாசத்தில் பதறி வீட்டுக்குள் ஓடி, மொட்டை மாடி படிக்கட்டில் ரத்தம் ஒழுக வீழ்ந்து கிடக்கும் தன் தாயைக் கண்டு கதறினார்.

உடனே ஆதிஷ், " என்ன சுமி, கோபத்தில் அவர்களை ஏதேனும் செய்து விட்டாயா?. வயதானவர்கள் என்ற கருணை கூட உனக்கு கிடையாதா? மாமா ஒரு கை பிடியுங்கள் நாம் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் " என்று பதட்டப்படும் குரலில் பேசி அவரை சுமித்திரைக்கு எதிராக திசை திருப்பினான்.

வார்த்தைகள் ஏதுமின்றி கண்ணீர் மல்க சுமித்திரையை பார்த்தார் அவளின் பெரியப்பா. அந்தக் கண்களில், "ஏன்? எதற்கு?" என்ற கேள்வி இல்லை. "நீயா?" என்ற கேள்வியே மேலோங்கி நின்றது.

முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு, "நான் அவர்களிடம் உங்களோடு பேசப் பிடிக்கவில்லை, வேண்டாம் என்று மறுத்துக் கூறிய பிறகும், வயதான காலத்தில் என்னை பின் தொடர்ந்து வந்து, கால் தடுக்கி கீழே விழுந்தால் நான் என்ன செய்ய முடியும்? கூட்டிச் செல்லுங்கள். இல்லை அள்ளிச் செல்லுங்கள். அது உங்கள் பாடு" என்றவள் கீழிறங்கிச் சென்றாள், படியிலும், அவர் மனதிலும்.

துடிப்பில்லாமல் கிடந்த தன் தாயைப் பார்த்தவர், சுமித்திரையை நோக்கி, "உன்னை பழிக்க எனக்கு மனம் வரவில்லை. ஆனால் இனி உன்னை பார்க்கவே கூடாது என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்" என்று கடினக் குரலில் கூறிய சுமித்திரையின் பெரியப்பா தன் தாயை, தாங்க வந்த ஆதிஷை விடுத்து தானே தாங்கிச் சென்றார்.

அவர் வெளியேறியதை உறுதி செய்ததும் சுமித்திரையை பார்த்த ஆதிஷ், "குட்... இப்படியே எல்லா விஷயத்திலும் என் சொற்படி நடந்தால் உனக்கு இனி சிரமம் ஏதும் இல்லை" என்றான் கண்களை சிமிட்டி, சிரித்துக்கொண்டே.

அந்த நெய்தல் நிலம் பாலை நிலமாய் மாறியது சுமித்திரைக்கு. தங்களுடைய சொத்துக்கள் எல்லாம் பணமாய் மாறி, ஆதிஷின் பெட்டிக்குள் அடைக்கலமாவதை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இவை அனைத்திற்கும் சுமித்திரையே காரணம் என்ற மாயவலை நன்று விரிக்கப்பட்டிருந்தது.

உறங்கிய உண்மை என்றேனும் ஒரு நாள் விழித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன், உறங்காமல் தன் விடியும் நாளுக்காக காத்திருந்தாள் சுமித்திரை.

தன் உயிருக்கு நிகரான தந்தையை இழந்து, சுற்றம் இழந்து, பொருள் இழந்து, தன் மானத்தை தான் காப்பாற்றிக் கொண்ட தன் சுயநலத்தை எண்ணி நித்தம் நித்தம் மனதில் குமைந்தாள்.

தான் பிறந்ததில் இருந்து நினைக்க மறந்த தாயை, தனக்குத் துணையாய் மனதில் இருத்திக் கொண்டாள்.

தன்னைச் சுற்றி இருக்கும் காற்றில் அரூபமாய் அனைவரும் வந்து அவளை பழி சுமத்த, அவளது இதழ்கள் " அம்மா... அம்மா... " என்ற சொல்லையே தாரக மந்திரமாய் உச்சரித்தது.

தன் வயிற்றில் தன் தாய் தான் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்பினாள்.

தன் அடிவயிற்றில் கை வைத்துக் கொண்டு, " அம்மா உனக்கு நான் சேயாய் பிறந்து தாய்ப்பாலிற்காக கதறி அழுத போது, எனக்கு அமுது ஊட்ட நீ வரவில்லை. தளிர் நடையிடும் போது விரல் பிடித்து வழிநடத்த நீ வரவில்லை.

சீவிச் சிங்காரித்து பின்னலிட்டு பள்ளி அனுப்ப நீ வரவில்லை. பள்ளிக் கணக்கு புரியாமல் துள்ளி நான் அழுத போது, அள்ளி அணைத்து சொல்லிக் கொடுக்க நீ வரவில்லை.

ஊரார் வீட்டு பெண்கள் எல்லாம் என் முகத்தில் மஞ்சள் பூச, என்னை கொஞ்ச, கொஞ்ச நேரம் கூட நீ வரவில்லை. கயவன் ஒருவன், என் கரம் பிடித்த போது, என்னை காக்க நீ வரவில்லை.

வரவில்லை... வரவில்லை... வரவில்லை... எனக்காக நீ என்றுமே வரவில்லை. அம்மா தயவு செய்து இந்த ஒரே ஒரு முறை என் வயிற்றில் மகளாய் மட்டும் பிறந்து வா... " என்று கதறி அழுதாள் தனிமையில்.

அவளின் அனைத்து சொத்துக்களையும் விற்க முடிந்த ஆதிஷால் அவர்கள் குடியிருந்த சொந்த வீட்டை மட்டும் விற்க முடியவில்லை. அந்த வீடு வம்சாவளியாக வாரிசுகளுக்கும் சொந்தமாக எழுதி வைக்கப்படும். சுமித்திரையின் வாரிசுகளுக்கும் அந்த வீடு சொந்தம் என்று முன்பே எழுதி வைக்கப்பட்டிருந்ததால், அந்த வீட்டை விற்க வேண்டும் என்றால் சுமித்திரை மற்றும் அவளின் வாரிசுகள் இணைந்தே விற்க முடியும் என்ற சட்ட சிக்கல் இருந்தது.

'சுமித்திரை தன்னை மீறி எங்கே சென்று விடுவாள்?' என்ற தைரியத்தில் ஆதிஷும் அதனை பொருட்படுத்தாமல், மும்பைக்கு சுமித்திரையுடன் பயணம் மேற்கொண்டான்.

"தொல்லை ஒழிந்தது..." என்றே அவளது சொந்தங்களும் நினைத்தது.

ரயிலில் தன் பயணத்தை ஆரம்பித்த சுமித்திரை, நீண்ட நாள் தூங்காத தன் தூக்கத்தை, தாலாட்டும் ரயிலின் உதவியால் ஜன்னல் ஓரம் சாய்ந்து கண்களை மூடினாள். ஆச்சரியம் தரும் விதமாக ஆதிஷ் அவளுக்கு எந்த ஒரு தொல்லையையும், கட்டளையையும் தரவில்லை.

முடிய கண்களுக்குள் அவள் தந்தை, "அம்மா சுமித்திரை, போகாதே! போகாதே!" என்று ரயிலின் பின்னே ஓடி வருவது போல் கனவு கண்டவள் திடுக்கிட்டு விழித்தாள்.

பல்வேறுபட்ட மனிதர்களும், அவர்கள் பேசும் பாஷையும் மிரட்டியது சுமித்திரையை. அவர்களுடன் சரளமாய் பேசும் ஆதிஷை அச்சத்துடனே நோக்கினாள்.

தன்னை மிரட்டும் விஷயம் ஒவ்வொன்றையும் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டாள். தனக்குப் பிறக்கப் போகும் மகவிற்கு அந்த பயம் ஒவ்வொன்றும் அணுக விடாமல் காக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை மனதிற்குள் வளர்த்துக் கொண்டாள்.

மும்பை வந்து சேர்ந்ததும், சுமித்திரையை காமாத்திபுராவிற்கு அழைத்துச் சென்றான் ஆதிஷ்.

கண் கவர் கட்டிடங்களுக்கு இடையே மறைந்திருந்த, அந்த அழுக்கு படிந்த கட்டிடங்கள் நிறைந்த பகுதிக்குள் நுழைந்தான். ஒரு வீட்டு வாசலின் முன் நின்று, "ஹே சோனா... புதிதாக வந்திருக்கும் நம் விருந்தாளியை பார்க்க வா " என்றான் சத்தமாக.

"ஹான்... ஹான்... இதோ வருகிறேன்..." என்று உள்ளிருந்து பதில் வந்தது.

ரயிலில் முதன் முதலில் வெகு தூரம் பிரயாணம் செய்த களைப்பு, தாய்மை தந்த சோர்வு, உள்ளுக்குள் உருண்டு கொண்டிருந்த பயம் தந்த தயக்கம் காரணமாக சுமித்திரை சுற்று முற்றும் பார்த்தவாரே நின்றாள்.

ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தாள்.

"ஹேய்... ஆதி இந்தப் பெண் மிகவும் அழகாக இருக்கிறாள். நீ விரிக்கும் வலையிலும் வந்து விழுகிறார்கள் பார். உன் நல்ல நேரமோ? இல்லை அவர்களின் கெட்ட நேரமோ? சரி சரி இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?" என்றாள் ஹிந்தியில்.

"சோனா! இந்தப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள். நான் சொல்லும் வரை இவளை உன் பாதுகாப்பிலேயே வைத்துக்கொள்" என்றான்.

சுமித்திரைக்கு மொழி புரியாவிட்டாலும் ஆதி இந்த பெண்ணின் பாதுகாப்பில் தன்னை ஒப்படைப்பது நன்கு புரிந்தது. சோனா சுமித்திரையை பார்த்து சினேகமாக புன்னகைக்கவும், இயல்பாய் சுமித்திரையும் புன்னகைத்தாள்.

தனது உடமைகளை எடுத்துக் கொண்டு சோனாவுடன் வீட்டிற்குள் நுழைந்தாள் சுமித்திரை.

அந்தத் தெருவை நோட்டமிட்டான் ஆதி. வீட்டு வாசல்களில் ஆங்காங்கே சில பெண்கள் நின்று கொண்டிருக்க, ஒரு சில பெண்கள் டாக்ஸி உடன் வந்த ஆண்களுடன் பேரம் பேசிக் கொண்டிருக்க, இங்கிருந்தே ஆதி கையசைக்க, முழு மேக்கப்புடன் இருந்த பெண் ஒருத்தி ஓடி வந்து அவனின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

அந்தப் பெண் செல்லமாக ஆதியின் தோளில் அடித்து, "இவ்வளவு நாள் எங்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு எங்கே சென்றாய் ஆதி பாய்?" என்று செல்லம் கொண்டாடினாள்.

"ம்... வேட்டைக்கு சென்றேன். வேட்டையாடி முடித்து விட்டேன். இனி வெற்றியைக் கொண்டாட வேண்டியது தான் பேபி..." என்று கூறி அவளை அணைத்துக்கொண்டு, அவளின் வீட்டிற்குள் புகுந்தான்.

சோனா அவளின் உடல் மொழி அறிந்து உணவு கொடுத்து உபசரித்தாள். ஆனால் சுமித்திரையோ, சோனாவின் பாஷை புரியாமல் தத்தளித்தாள். சோனாவுக்கு நன்றி சொல்லக் கூட தெரியாமல் இரு கரம் கூப்பி கண் கலங்க அவள் முன் நின்றாள்.

நீண்ட பெருமூச்சுடன் சோனா, தன் வீட்டின் மாடியை நோக்கி, "ராஷ்மி ராஷ்மி" என்று கத்தினாள்.

"தீதி... ஏன் கத்துகிறாய் இதோ வருகிறேன் " என்று ஹிந்தியில் கூறிக்கொண்டு மாடி இறங்கி வந்தாள் ராஷ்மி.

" ஹே ராஷ்மி. இவள் சுமி, உன் ஊர் பக்கம் தான். ஆதிபாய் கொண்டு வந்த புதுவரவு. நம் பாஷை புரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறாள். நீ இவளை உன்னுடன் வைத்துக்கொள். இவளை ஆதிபாய் சொல்லும் நேரம் தயார் செய்து வைக்க வேண்டும். முக்கியமான ஒன்று இவள் கர்ப்பமாக இருக்கிறாள்" என்றவள் தனது வேலை முடிந்து விட்டது என்று உள்ளறைக்குள் சென்று டிவி பார்க்க அமர்ந்து விட்டாள்.

"அச்சா..." என்று கூறிய ராஷ்மி சுமித்திரையை மேலும் கீழுமாய் அளவெடுத்தாள்.

" உன் பெயர் என்ன? " என்று சுத்தமான தமிழில் ராஷ்மி கேட்டதும், குருடனுக்கு கண் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியுடன் ராஷ்மியை பார்த்தாள் சுமித்திரை.

"நீங்கள் தமிழா?" ஆர்வத்துடன் கேட்டாள் சுமித்திரை.

"ஹான்... என் பெயர் லட்சுமி பிரியா. நான் இங்கே ஒரு ஹோட்டலில் பார் டான்ஸராக இருக்கிறேன். இந்த மும்பை லட்சுமி என்ற என் பெயரை ராஷ்மி என்று மாற்றிவிட்டது. உன்னிடம் சொல்லும் போது தான் என் பழைய பெயரே எனக்கு நினைவுக்கு வருகிறது. என் ஊர்... அதைத் தெரிந்து உனக்கு என்ன ஆகப்போகிறது? என்ன ஆதி பாய் உன்னை ஏமாற்றி கூட்டி வந்து விட்டானா?" என்றாள் சற்றே இளக்காரமான குரலில்.

பதில் கூட பேசத் தோன்றாமல் சுமித்திரை தலையை மட்டும் ஆட்டி கண்கலங்க ஒத்துக் கொண்டாள் தான் ஏமாற்றப்பட்டதை.

"ஓ... சரி உன் பெயர் என்ன?" என்றாள்.

"சுமித்திரை..." நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொள்ள சிரமத்துடன் தன் பெயரை உச்சரித்தாள்.

"சுமி... ம்ஹூம். இன்று முதல் நீ சுஷ்மி. ஹிந்தி ஒன்றும் கஷ்டமான மொழி அல்ல. பேசிப் பேசி பழகினால் எளிதாக கற்றுக் கொள்ளலாம். முடிந்தவரை நானே உனக்கு கற்றுக் கற்றுத் தருகிறேன். அதற்காக என்னிடம் அதீத எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளாதே. என்னிடம் எல்லாமே ஓர் எல்லையுடன் தான் நிற்கும்" என்றாள் ராஷ்மி.

அடுத்து வந்த மாதங்களில் சுமித்திரை ஆதிஷை பார்க்கவே இல்லை. ஆதிஷ் அடுத்த ப்ராஜெக்ட்டில் மிகவும் பிஸியாக இருந்ததால், கடிவாளம் கட்டிய குதிரையான சுமித்திரை தனது வட்டத்திற்குள்ளே நிற்பாள் என்ற நம்பிக்கையும், அவளை நெருங்கும் காலம் கனியும் வரை பொறுத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்க அவனும் சுமித்திரையை பார்க்க வர வில்லை.

சுமித்திரைக்கு ஹிந்தி பேச சரளமாக வராவிட்டாலும், பேசுவதை புரிந்து கொண்டு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லும் அளவிற்கு முன்னேறினாள். சோனாவிற்கும் ராஷ்மிக்கும் சுமித்திரையின் சமையல் பிடித்து விடவே, தங்களால் ஆன சிறு சிறு உபகாரங்களை சுமித்திரைக்கு செய்தனர்.

தான் கற்றுக்கொண்ட ஹிந்தி வார்த்தைகளை, இரவின் தனிமையில் தன் மகவிடம் கூறி வார்த்தைகளை மனதில் நன்கு பதிய வைத்துக் கொண்டாள்.

அருகில் இருக்கும் சிறிய மருத்துவமனையில் மாதம் ஒரு முறை சுமித்திரையை அழைத்துச் சென்றாள் சோனா.

சுமித்திரைக்கு ஏழாவது மாதம் தொடங்கியதும், கால் பாதங்களில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்பட ஆரம்பித்தது. சிறிது தூரம் தினமும் நடந்தால் நன்றாக இருக்கும் என்றும், ரத்த அழுத்தம் குறைய, மனதில் மண்டியிருக்கும் கவலை மாற, வேறு எங்காவது அழைத்துச் செல்லலாம் மருத்துவர் அறிவுரை கூற, சோனாவும், ராஷ்மியும் அவளை அழைத்துக் கொண்டு, மும்பை கடற்கரைக்கு வந்தனர்.

கடற்கரையைக் கண்டதும் தன் ஊரின் நினைவு,மீண்டும் அலை அலையாய் பொங்க கடற்கரை மணலில் மண்டியிட்டு அமர்ந்து, இரு கைகளாலும் மணலை அள்ளி தன் மார்பில் பூசி கதறி அழுதாள் சுமித்திரை.

உள்ளிருந்த மகவும் கடற்கரை சத்தத்தில், தாயின் அழுகுரலில் விழித்து எழுந்து, சுமித்திரையின் வயிற்றில் முட்டி மோதியது.

தன் குழந்தையின் நினைவு பெருக கையில் இருந்த மணலை தன் துன்பம் போல் பாவித்து, இரு கை கொண்டு தட்டி கீழே தள்ளினாள்.

கடலை காட்டியதற்காக சோனாவிற்கும் ராஷ்மிக்கும் நன்றியை தெரிவித்தாள். அவளின் எதிர்கால துன்பத்தை, இந்த இடைக்கால இன்பம் ஈடு கட்டாது என்று தெரிந்தும் ஒரு அப்பாவி பெண்ணிற்காக உதவி செய்தனர் இருவரும்.

மேலும் மாதங்கள் உருண்டு ஓட சுமித்திரை, பெண் மகவை ஈன்றெடுத்தாள். மும்பை வந்த பிறகு ஆதிஷ் என்ற அரக்கனின் நினைவு சுமித்திரைக்கு மறைய ஆரம்பித்தது.

தன்னோடு சங்கமமான தன் அன்னையின் நினைவில், தன்னை எப்பொழுதும், "மித்திரை" என்று பாசமாக அழைக்கும் தந்தையின் அன்பில் தன் மகளுக்கு சங்கமித்ரா என்று பெயரிட்டாள் சுமித்திரை.

அனைவரும் அவளை, "மித்து" என்று செல்லமாக அழைத்தனர். சங்கமித்ரா பிறக்கும் போது அழுததைத் தவிர அடுத்து எதற்கும் அவள் அழுததில்லை. அக்கம்பக்கத்தினர் அந்தக் குழந்தையை அதிசய குழந்தை போல் பார்த்தனர்.

சங்கமித்ராவிற்கு ஆறு மாதம் ஆன நிலையில், குளித்துவிட்டு உடை மாற்றி வந்து மகளைத் தேடிய சுமித்திரைக்கு வெறும் தொட்டிலே தென்பட்டது. மேலேயும், கீழேயும் மாறி மாறி ஓடி, பதறி பதறித் தேட குழந்தை கிடைக்கவில்லை.

வாசலில் ஓடியவளுக்கு, காரின் மேல் சாய்ந்து நின்ற ஆதிஷை கண்டதும் உயிர் உறைந்தது.

"சுமி.... இல்லை இல்லை சுஷ்மி, உன் குழந்தையை காணவில்லையா?" என்று இரக்கமில்லாமல் கேட்டான் அந்த அரக்கன்.

சுமித்திரைக்கு அனைத்தும் புரிந்தது. அப்பொழுது குடும்பம் என்ற பகடைக்காயை உருட்டி தன்னைத் தகர்த்தவன், தற்பொழுது குழந்தை என்ற பகடைக்காயை கையில் எடுத்து விட்டான் என்று.

மார்பு தாண்டிய அவள் தாய் பாசம், கால் வழியே வழிந்து, தரையில் வீழ்ந்தது.

"என்ன செய்ய வேண்டும்? " என்றாள் சுமித்திரை இயந்திரக் குரலில்.

டாக்ஸியின் கதவை திறந்தான் ஆதிஷ். உள்ளே அமர்ந்திருந்த பெண்களின் உடையும் அலங்காரமும் சொல்லியது அவர்கள் செல்லும் இடத்தை.

" என் குழந்தை எப்பொழுது என்னிடம் வருவாள்?" என்றாள் நடுங்கும் குரலில்.

" உன் குழந்தை வேறு இடத்தில் ராஷ்மியிடம் இருக்கும். நீ வீட்டுக்கு வரும் நேரம் உன் கையில் உன் குழந்தை இருக்கும். நீ முரண்டு பிடித்தால், நீ இருப்பாய் ஆனால் உன் குழந்தை இருக்காது" என்றான்.

அந்த தாய் கோழி, பருந்திடமிருந்து தன் குஞ்சை காப்பாற்ற தன்னையே இரையாய் கொடுக்க முன் வந்தது.

சுமித்திரை டாக்ஸியில் ஏறி அமர்ந்ததும், வெற்றிச் சிரிப்புடன் வண்டியை எடுத்தான் ஆதிஷ்.

ராஷ்மி நடன வகுப்பில் நடனம் பயின்று கொண்டிருக்கும் போது, தரையில் அமர வைக்கப்பட்டிருந்த சங்கமித்ரா மெல்ல தவழ்ந்து, தவழ்ந்து நடனக்கலைஞர் அணிவதற்காக வைத்திருந்த கால் சலங்கையை கையில் எடுத்தாள்.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
சேயை தாயாய் காண்டாளோ 🥰🥰🥰

ஆதீஷ் 😡😡😡

ஓ மித்ராவின் அந்த சலங்கையின் ரகசியம் இங்குதான் ஆரம்பம் போலவே 🤔🤔🤔
 
  • Like
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சேயை தாயாய் காண்டாளோ 🥰🥰🥰

ஆதீஷ் 😡😡😡

ஓ மித்ராவின் அந்த சலங்கையின் ரகசியம் இங்குதான் ஆரம்பம் போலவே 🤔🤔🤔
சேர்த்து வைத்த சுமித்திரையின் சந்தோஷங்கள் அவள் கால்களில் சலங்கையாய்....
 
  • Love
Reactions: Shimoni