• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 18

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 18

இறக்கிவிடப்பட்ட காரில் இருந்து தள்ளாடியப்படியே நடந்து வந்தாள் சுமித்திரை. மங்கலான தெருவிளக்கில், ஆள் அரவமில்லாமல், வெறிச்சோடிக் கிடந்த இருளடைந்த பாதையில் நடந்து வரும் அவளை ஒருவரும் கவனிக்கவில்லை.

ஆனால் உலகமே தன்னை கவனிப்பது போல் கூனிக்குறுகி, அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் பலமுறை செத்துப் பிழைத்தாள். சாக்கடையில் விழுந்த அருவருப்புடன் வலது கையை இடது தோளிலும், இடது கையை வலது தோளிலும் தேய்த்துக்கொண்டே தன்மேல் படர்ந்த அழுக்கை அகற்ற முயன்றாள். அவளது நினைவுகளை எல்லாம் இருள், இருள், இருள் மட்டுமே சூழ்ந்து இருந்தது.

நீரில் மூச்சுக்காற்றுக்காய் தத்தளிக்கும் போது உயிர் மட்டுமே பிரதானமாய் தெரிவது போல், தன் உயிர் வற்றிப் போகும் சூழ்நிலையிலும், தன் குழந்தையின் நினைவில் நடந்தாள்.

கதவைத் திறந்ததும் சோனா ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்துவிட்டு தன்னறைக்குத் திரும்பினாள்.

தன் அன்னையைக் கண்ட சங்கமித்ரா, ராஷ்மியை விடுத்து சுமித்திரையை நோக்கி தவழ்ந்து வந்தாள்.

தன் குழந்தையை தூக்க நீண்ட தன் கரத்தை வெறித்துப் பார்த்துவிட்டு, தரையில் அமர்ந்து தன்கரத்தின் மீது முகத்தை வைத்து கதறி அழுதாள்.

அவளின் நிலையை புரிந்து கொண்ட ராஷ்மி, "நீ உன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வா சுஷ்மி. மித்துவை நான் வைத்துக் கொள்கிறேன்" என்றவள் மித்ராவை தூக்கிக் கொண்டாள்.

" சுத்தமா! அதுதான் சுத்தமாய் இல்லையே!" என்று விரத்தியுடன் பேசியவள், புறங்கையால் கண்ணீரை துடைத்துக்கொண்டு, உடல் வலி, மன வலி சூழ குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு உடைமாற்றி வந்தாள்.

வெளியே வந்தவள் ஏதோ ஓர் யோசனையில், சுவற்றில் சாய்ந்த படி நின்றாள். அவளது உலகம் மட்டும் அசையாது அவளிடத்தில் நின்றது.

தன் கால்களில் ஏற்பட்ட குறுகுறுப்பில் கீழே குனிந்து பார்த்தாள். சங்கமித்ரா அவளது காலை வருடிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் சுயநினைவு வந்த சுமித்திரை கீழே தன் மகள் அருகே அமர்ந்தாள்.

சங்கமித்ராவை தூக்குவதற்காக தன் கைகளை நீட்டும் போது, சுமித்திரையின் கைகள் அந்தச் சலங்கையை எதேச்சையாக தட்டியது. "ஜல் ஜல்" என்று குலுங்கிய சலங்கையின் ஒலியைக் கேட்டதும் சங்கமித்ரா வாய்க்கொள்ளாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

கருவிலேயே இறுகி வளர்ந்ததால், பிறந்ததிலிருந்து, நிறைந்து சிரிக்காத தன் மகளின் இதழ்கள், மலர்ந்து சிரிப்பதைக் கண்ட சுமித்திரை ஆச்சரியத்தில் தன் உள்ளே உழன்ற துன்பத்தையும் மறந்து மகளை அள்ளி எடுத்தாள்.

நடுங்கும் விரல்களுடன் சலங்கையைப் பற்றி குலுக்க, அள்ளித் தெறிக்கும் வெள்ளியருவி போல் குளிர்ந்து சிரித்தாள் சங்கமித்ரா.

அவர்கள் அருகில் வந்த ராஷ்மி, "பாருடா! என் நடன வகுப்பில் இருந்து என் சலங்கையை வலுக்கட்டாயமாக எடுத்து வந்து விட்டு, தன் அம்மாவிடம் காட்டி சிரிக்கிறாளே இந்த செல்லக் குட்டி மித்து.

அடக்கி வைத்திருந்த உன் அழுகையையும், ஆச்சரியமாய் மாற்றி விட்டாளே இந்த பட்டுக்குட்டி. சரியான வித்தைக்காரி தான்" என்றாள்.

கன்னம் மீறி வழிந்த தன் கண்ணீரும் கண்களின் ஓரமே கரைகட்டி நின்று விட்டதை உணர்ந்த சுமித்திரை கையில் சுமந்திருந்த தன்மகவை நெஞ்சோடு இறுக்கி அணைத்தாள்.

" சுஷ்மி, உன் பாதை இதுதான் என்று மாறிய பின், பின்னோக்கி யோசிப்பது அர்த்தம் அற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து நீ மீண்டு வருவதை யோசிப்பதை விட்டுவிட்டு, உன் மகளை எப்படி மீட்கலாம் என்பதை மட்டும் யோசி" என்றாள் ராஷ்மி.

திடுக்கிட்டு நிமிர்ந்தவள், காய்ந்த கரித்துண்டு அழுத்தம் தாங்காமல் வைரமாய் மாறிய நொடியை உணர்ந்தாள் சுமித்திரை.

அவளை அறியாமல் அவள் கைகள் ஆதூரமாய் தன் மகளை வருடி, அவளை பாதுகாப்பாய் தன்னுள் மேலும் இறுக்கிக் கொண்டது.

"ஹேய்... சுஷ்மி. இந்த ஏரியாவின் ஒவ்வொரு வீட்டின் கதவும், ஜன்னலும் பல பெண்களின் அழுகையையும், துக்கத்தையும் மறைத்து வைத்திருக்கின்றன.

இந்த நிமிடம் உன் மனம் எப்படி துடிதுடிக்கும் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடியும். என்னால் மாற்ற முடியாத விஷயத்தை என்றுமே நான் யோசிப்பதில்லை.
உன்னுடைய நிலைக்கு யார் காரணம் என்று எனக்குத் தெரியாது. இந்த நிலையை உன்னாலும், என்னாலும் நிச்சயம் மாற்ற முடியாது.

நான் உனக்கு இறுதியாக எச்சரிக்கும், அறிவுறுத்தும் ஒரே ஒரு விஷயம் நம் மித்து தான். அவளைக் காப்பதற்கு மட்டும் உன்னுடன் நான் நிச்சயம் துணையாக இருப்பேன்.
அவளுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், மாற்று வழியையும் தரவல்ல கல்வியை அவள் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். உன்னுடைய எண்ணமும் செயலும் அதை மட்டுமே மையம் கொள்ள வேண்டும்.
உன்னால் மாற்ற இயலாததை மறக்க முயற்சி செய் சுஷ்மி" என்றாள்.

திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டதைப் போல் உணர்ந்தவள் சிறு வெளிச்சம் கண்டு, நன்றியுடன் இரு கரம் கூப்பினாள்.

"ஹேய்... சுஷ்மி! ஆதிபாய் உன்னை பார்க்க வருவான். அவனின் மூலதனம் நீ. அவனிடம் உன் வெறுப்பை, கோபத்தை காட்டாமல், தன்மையாக பேசி ஓர் வழியைக் கண்டுபிடி.
அவனிடம் போராடி, தப்பித்த பெண்கள் என்று ஒருவரையும் நான் அறிந்ததில்லை. ஆனால் மேலும் சிக்கிச் சின்னா பின்னமான பெண்களைத் தான் எனக்குத் தெரியும்.

அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கும் வரை, நம் சொல்லுக்கும் சில நேரம் மதிப்பு இருக்கும் அவனிடம்.
எந்தக் குழந்தையை காப்பதற்காக இந்த முடிவை நீ எடுத்தாயோ அந்த குழந்தையை நிரந்தரமாக காப்பாற்ற என்றும் முயற்சி செய்" என்றாள்.

சுமித்திரையின் தலை மட்டும் மெதுவாய் மேலும் கீழும் அசைந்தது கண்ணீருடன்.

"மித்து குட்டி! என்னுடைய புது சலங்கையை நீ எடுத்துக் கொண்டு வந்து விட்டாயே! இன்னும் ஒரு தடவை கூட நான் அதை அணிந்து பார்க்கவில்லை. என்னிடம் கொடுத்துவிடு தங்கம்..." என்று கூறி சங்கமித்ராவின் கையில் இருந்த சலங்கையை வாங்க முயற்சி செய்தாள்.
முயற்சி மட்டுமே இருந்தது அவளிடம். அந்தத் தளிர் பிஞ்சு கரங்கள் சலங்கையை இறுக்கமாய் இரு கைகளிலும் பற்றிக் கொண்டது.

இரு பெண்களின் விழிகளும் ஆச்சரியத்தில் அதிர்ந்து விழித்தன. சங்கமித்ரா அழுகவில்லை, அடம் பிடிக்கவில்லை திடமாய் அந்தச் சலங்கையை பிடித்துக் கொண்டிருந்தாள்.
பின் ராஷ்மி சிரித்துக்கொண்டே, "அந்தச் சலங்கை கொஞ்சம் விலை அதிகமானது. உனக்கு வேறு சலங்கை வாங்கித் தருகிறேன்" என்று கண்களை உருட்டி உருட்டி சங்கமித்ராவிடம் பேரம் பேசினாள்.

சலங்கையை பிடித்துக் கொண்டே மறுப்பாய் தலையை ஆட்டினாள் சங்கமித்ரா.

வளர்ந்த தன்னிடம் இல்லாத உறுதி, தன் மகளிடம் இருப்பதைக் கண்டு மனதின் ஓரம் நிம்மதிப் பூ பூக்க, ஒரு முடிவுடன் தன் கழுத்தை தடவினாள் சுமித்திரை.


அடுத்த நிமிடம் தன் கழுத்தில் அந்த கயவன் அனுவித்த பொன் தாலியை அறுத்தெடுத்து, தன் கைகளில் தாங்கி, ராஷ்மியை பார்த்து, " என் மகளுக்காக என் வாழ்க்கையை பணயம் வைத்த நான், என் மகளின் ஆசைக்காக என் கடந்த கால வாழ்க்கையை என்னிலிருந்து அழித்து விடுகிறேன் முற்றிலுமாய். சுமித்திரை இன்றோடு இறந்து விட்டாள்" என்று கூறி சலங்கைக்கு ஈடாக தன் மாங்கல்யத்தை அவள் கையில் வைத்தாள்.

ராஷ்மி பந்தம், சொந்தம் எல்லாம் பணம் உள்ளவரைதான் என்பதை நன்கு உணர்ந்தவள். அவள் மாங்கல்யத்தை கழட்டிக் கொடுத்ததை ஒரு பொருட்டாக எடுக்காமல், தன் தோள்களை குலுக்கி விட்டு, " பரவாயில்லை சுஷ்மி, சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, நீ எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். உனக்கு அறிவுரைகள் கூற முடியுமே தவிர, சலுகைகள் வழங்க என்னால் முடியாது" என்று கூறிவிட்டு அவள் கையில் இருந்த மாங்கல்யத்தை சலங்கைக்கு ஈடாக பெற்றுக் கொண்டாள்.

சிறிது தூரம் நடந்த ராஷ்மி பின் நிதானமாகத் திரும்பி, " இந்த சலங்கையின் சத்தம் உன் கடந்த கால சந்தோஷம் சுஷ்மி. அதை உன் மகளின் கையில் ஒப்படைத்தது மிகச் சரி!" என்றவள் தனது அறைக்கு திரும்பினாள்.

தன் மகளின் கையில் சத்தமிட்டு சிரித்த சலங்கை அதிரும் போதெல்லாம் தன் மனதில் அடைத்த பாரங்கள் எல்லாம் அதிர்ந்து விலகுவதைப் போல் உணர்ந்தாள் சுமித்திரை.

நாட்கள் அதன் போக்கில் நகர, சங்கமித்ரா ராஷ்மியின் பாதுகாப்பிலும், மித்திரையின் பாதுகாப்பிலும் பத்திரமாய் வளர்ந்தாள்.

ஆதிஷின் கட்டளைகளை ஏற்று நித்தம் நித்தம் குற்ற உணர்வு எனும் நெருப்பில் உள்ளுக்குள் வெந்து கொண்டிருந்தாள் சுமித்திரை. மும்பையின் நாகரீகத்தில் அவளும் ஒன்றி நன்றாக ஹிந்தி பேச ஆரம்பித்தாள். ராஷ்மி, சங்கமித்ரா, சுமித்திரை மூவரும் ஹிந்தியில் அளவலாவினர்.

தகவல்கள் சோனா மூலம் ஆதிஷூக்கு சென்று கொண்டே இருந்தது. தனக்கு தொல்லை இல்லாததால் அந்த அரக்கனும் எல்லை மீறி தொல்லை தரவில்லை.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு, ராஷ்மியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. சோர்ந்து அடிக்கடி படுக்கும் ராஷ்மியைக் கண்ட சுமித்திரை, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

ராஷ்மியை சோதித்த பெண் மருத்துவர், அவளது மார்பில் இருந்து நீர் வடிய, சிறிது சந்தேகத்துடன் மார்பக பரிசோதனைக்கான மெமோகிராம் சோதனைக்கு எழுதிக் கொடுத்தார்.

சோதனையின் முடிவில் ராஷ்மி மூன்றாம் கட்ட மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து கொண்ட மருத்துவர் உடனடியாக மார்பகத்தை நீக்குவதற்கான அடுத்த கட்ட சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்.

நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்ட இரு பெண்களும், மருத்துவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டனர்.

சோனா எதிலும் கலந்து கொள்ளாமல் பட்டும் படாமல் இருந்தாள். புற்றுநோய்க்கான மார்பக சிகிச்சையில் தன் ஒரு பக்க மார்பகத்தை இழந்த ராஷ்மி, அடுத்த கட்டமாக கதிர் இயக்க ஹீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டதால், முடி இழந்து வீட்டின் மூலையில் ஒடுங்கினாள்.

சங்கமித்ராவை ஆரம்பப் பள்ளியில் சேர்த்தாள் சுமித்திரை. இரவில் ராஷ்மியின் பாதுகாப்பில் விட்டுவிட்டு தன்னைச் சூழ்ந்த இருளுக்குள் மறைவாள் சுமித்திரை.

ராஷ்மியின் மருத்துவ செலவுகள் அதிகரிக்க, சோனா முகத்தை திருப்ப ஆரம்பித்தாள். தகவல்கள் ராக்கெட் வேகத்தில் ஆதிஷ்க்கு போய்ச் சேர்ந்தது.

ஒரு நாள் மையிருள் இரவில், சங்கமித்ராவை உறங்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ராஷ்மி. சோனாவுடன் உள்ளே நுழைந்த ஆதிஷ், " ராஷ்மி உபயோகமற்ற எந்த ஒரு பொருளையும் இந்த ஆதிஷ் தன் வசம் வைத்திருக்க மாட்டான்" என்றான் அவளை ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து.

" ஆதிபாய்! என் பெற்றோர்கள் என்னை உங்களிடம் ஒப்படைத்த நாள் முதல் இன்று வரை உங்களுக்கு எவ்வளவு பொருள் சம்பாதித்துக் கொடுத்திருப்பேன். எனக்கு சிறிது காலம் தாருங்கள் இந்த நோயிலிருந்து மீண்டு வந்தவுடன், மீண்டும் ஹோட்டலில் பார் நடனம்...."

" சீ வாயை மூடு! உன்னை இனிமேல் யார் சீண்டப் போகிறார்கள். உனக்கு மருத்துவச் செலவு பார்க்கும் எண்ணமும் இனி எனக்கு இல்லை. உனக்கு அன்னதானம் போட நான் அன்னதானப் பிரபுவும் இல்லை. இந்த இடத்தை விட்டு நீ காலி செய்கிறாயா? இல்லை உன்னை நான் காலி செய்யவா?" என்று மிரட்டினான்.

" இல்லை. ஆதி பாய் இந்த வீட்டின் ஒரு மூலையில் நான் இருந்து கொள்ள ஒரு வாய்ப்பை தாருங்கள். இந்த நிலையில் நான் எப்படி வெளியே சென்று வாழ முடியும்" என்று ஆதியின் மறுமுகம் தெரிந்தும் கெஞ்சினாள் பேதை.

"ஓகே. சோனா அதை எடுத்து வா!" என்றான்.

ஆதியின் கையில் பால்குவளையை ஒப்படைத்தாள் சோனா. தன் முடிவை தன் கண் எதிரே கண்ட ராஷ்மி, "ப்ளீஸ் ஆதிபாய். நான் இதிலிருந்து எப்படியும் மீண்டு வருவேன். நான் வாழ வேண்டும்" என்றவளின் வார்த்தை வாயோடு நிற்க, அவளின் கழுத்தை தன் கரத்தில் பிடித்துக் கொண்டு, அவள் மறுக்க மறுக்க பாலை அவள் வாயில் ஊற்றினான்.

அறையின் வாயிலில் இதைக் கண்ட சுமித்திரை அதிர்ச்சியில் அசையாது நின்றாள். நஞ்சை உண்டவள் கண் சொருக மயங்கி கீழே விழ, ஓடிச் சென்று மடி தாங்கினாள் சுமித்திரை.

உறவென்று இல்லாமல் உறவாய் தன்னைக் காத்த நட்பும் தன்னை நீங்கிச் செல்லும் துயரில் சுமித்திரை மனதோடு இறுகி மறுகினாள். ஆதிஷை வெறுப்பை உமிழும் கண்களால் முறைத்துப் பார்த்தாள்.

" சுமித்திரை! ஓ நோ... சுஷ்மி, உன் தோழி இறந்ததற்காக ஒரு வாரம் விடுப்பு எடுத்துக் கொள். குழந்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆள் இல்லை என்ற எண்ணத்தில், தப்பி ஓட எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். மீறி முயன்றால்.... ம்... இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது தெரியுமா?" என்று நாரசமாய் சிரித்தபடி வெளியேறினான் அந்தக் காமுகன்.

முடிந்தது, ராஷ்மியின் காரியங்கள் எல்லாம் முடிந்தது. அவள் அந்த இருள் சூழ்ந்த வேலைக்கு செல்லும் வேளையும் வந்தது.

சோனாவின் பாதுகாப்பில், சங்கமித்ராவை விட்டுச் செல்ல மனம் வரவில்லை சுமித்திரைக்கு. தன் மகளையும் தன்னோடு அழைத்துச் செல்லும் சுமித்திரையை ஒரு மார்க்கமாக பார்த்தாள் சோனா.

எப்போதும் தனக்கு ஒதுக்கப்படும் அறையோடு இணைந்திருந்த அந்த ஜன்னல்கள் இல்லா இருட்டடைந்த அறையில், தன் மகளை பத்திரமாய் வைத்து பூட்டி சாவியை தன்வசப்படுத்திக் கொண்டாள் சுமித்திரை.

பேசக்கூடாது, எந்த சப்தமும் செய்யக்கூடாது, முக்கியமாக கதவை தட்டக்கூடாது என்ற அறிவுரைகளை அன்பாய் ஆயிரம் முறை அறிவுறுத்தினாள் சுமித்திரை சங்கமித்ராவுக்கு.

நடுநிசியில் தாயின் அலறலில் விழித்து எழுந்தாள் சங்கமித்ரா. அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மருட்டும் இருட்டில் தவித்தது தன் தாய்க்காக.

வெகு நேரம் கழித்து கதவு திறந்தபின், பதட்டத்துடன் போர்வையை போத்தி தன் தாய் தன்னை மறைத்து இழுத்துச் செல்வதைக் கண்டு புரியாமல் தன் தாயின் கரத்தை இறுகப்பற்றினாள் சங்கமித்ரா.

தன் தாயின் தவிப்பை அவள் கரங்களின் மூலம் அறிந்து கொண்டது அந்தப் பிஞ்சு.
நாட்களின் போக்கில், அந்த இருட்டறை உலகத்திற்கு தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள் சங்கமித்ரா. அறியா வயதில், அறியாமல் மனதில் அழுத்தம் புக ஆரம்பித்தது.

பள்ளி விட்டு வந்ததும் சலங்கையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் சங்கமித்ராவைக் கண்ட சோனா, அவளை அழைத்து அவள் கால்களில் சலங்கையைப் பூட்டி, நடனம் கற்றுத்தர ஆரம்பித்தாள்.

மகளின் அழகும், அறிவும், சிரித்த முகத்துடன் அவள் ஆடும் நடனமும் அந்த தாய்க்கு பெருமையை தருவதற்கு பதிலாக பயத்தையே தந்தது. அது ஒரு தாயாய் அவள் வாங்கிய சாபம்.

ஒருமுறை தன் மகளுடனும், மற்ற பெண்களுடனும் இரவில் அவள் வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது, தாகம் எடுக்கவே தண்ணீர் குடிப்பதற்காக திரும்பினாள்.

சிறிது தூரத்தில் அழகாய் பெரியதாய் கண்ணை மூடி அமைதியாய் அமர்ந்திருக்கும் அந்த புத்தர் சிலை சங்கமித்ராவை ஈர்த்தது. தன் தாயின் கரத்திலிருந்து தன் கையை விடுவித்துக் கொண்டு அந்த சிலை நோக்கி நகர்ந்தாள்.

சிலையை தொட்டுப் பார்க்கும் ஆர்வம் வரவே, தன் பிஞ்சு கரங்களை மேலே உயர்த்தி சிலையைத் தொட முயன்றாள். அது முடியாது போகவே மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள்.

அப்போது அந்த வழியே வந்த ஒருவன் குழந்தை ஒன்று சிலையைத் தொட முயற்சி செய்வதைப் பார்த்து குழந்தையை தன் கைகளில் தூக்கி, தன் கைகளுக்குள் குழந்தையின் கரத்தை வைத்து புத்தர் சிலையை தொட்டுக் காண்பிப்பது போல், அந்தப் பெண் சிலையை உணர முயற்சி செய்தான்.

தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த டம்ளரை கீழே போட்டுவிட்டு, படபடக்கும் நெஞ்சுடன் சுமித்திரை ஓடிவந்து தன் மகளை வெடுக்கென்று பிடுங்கி தன் கையில் வாங்கிக் கொண்டாள்.

அந்த ஆடவனோ நக்கல் சிரிப்புடன் நகர்ந்து சென்றான்.

" உனது மகளை வேறு எந்த கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்? " என்று மற்ற பெண்களும் கேலி செய்து சிரித்தனர் சுமித்திரையை.

பதில் சொல்ல முடியாமல் கூனிக் குறுகி நின்ற சுமித்திரை, சங்கமித்ராவின் பாதுகாப்பிற்காக தங்கியிருக்கும் வீட்டிலேயே, தன் அறையிலேயே அவளை பூட்டிச் செல்ல ஆரம்பித்தாள்.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
இருளின் பிண்ணனியில் இத்தனை போராட்டமா 🥺🥺🥺

மகளுக்காக இத்தனை கொடுரங்களை சகித்தவளின் முடிவு என்னவானதோ 😔😔😔

தன்னிடம் இல்லாத தைரியத்தை தன் உதிரத்திற்கு கற்று கொடுத்து விட்டாளோ 😏😏😏
 
  • Like
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
இருளின் பிண்ணனியில் இத்தனை போராட்டமா 🥺🥺🥺

மகளுக்காக இத்தனை கொடுரங்களை சகித்தவளின் முடிவு என்னவானதோ 😔😔😔

தன்னிடம் இல்லாத தைரியத்தை தன் உதிரத்திற்கு கற்று கொடுத்து விட்டாளோ 😏😏😏
பெண்மையின் போராட்டம்.... வன்மையில் மென்மையாய் மாறி,
மென்மையில் வன்மையாய் மாறி நிற்கிறது 🥺
 
  • Like
Reactions: Shimoni