• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 19

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 19

தன் மகளை நெஞ்சமெனும் கூட்டிற்குள் ஒளித்து வைத்துக்கொண்டு, உறங்கும் மகளை உறங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை.

விடுதி இருக்கும் பள்ளியில் தன்மகளை சேர்க்க வேண்டும் என்று எண்ணியவள், அடுத்த நொடி, தன் கண்ணை மறைக்கும் மகளின் பாதுகாப்பில் பயம் கொண்டாள்.

தன் கண்ணெதிரே மகள் இருக்க வேண்டும். அவள் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கு என்ன வழி என்று இடைவிடாது யோசித்தாள் அந்த இருளில்.

பொழுது விடிந்ததும், சங்கமித்ரா கண்விழித்ததும், "மித்திரை! இப்பொழுது அம்மா கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்வாயா?" என்றாள்.

"ம்... " என்று தலையசைத்தாள் சங்கமித்ரா.

தன் கண்களைக் காட்டி, "இது என்ன?" என்றாள்.

"கண்"

தன் காதினைக் காட்டி, "இது என்ன?" என்றாள்.

"காது அம்மா "

தன் கழுத்தினைக் காட்டி, "இது என்ன?" என்றாள்.

"கழுத்து " என்று தனக்குத் தெரிந்த கேள்விகளையே கேட்டதால், உற்சாகமாய் பதில் சொன்னாள் சங்கமித்ரா தன் அன்னையிடம்.

தன் மார்பைச் சுட்டிக் காட்டியவள், "நம் ஒவ்வொரு அங்கமும் போல் தான் அனைத்து உடல் உறுப்புக்களும். உன் உடலை தவறாகப் பார்த்தாலோ, உடையில்லாமல் பார்த்தாலோ, நீ எந்த நாளும் கலங்கக்கூடாது. அதை நீ அசிங்கமாக நினைக்கக் கூடாது. அதைக் கூறி யாரும் மிரட்டினாலும் நீ பயப்படக்கூடாது.
வாழ்க்கை எந்த இடத்திலும் நமக்காக நிற்பதில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ வேண்டும்" என்று கூறிய சுமித்திரை தன் மகள் புரியாமல் விழிப்பதைக் கண்டு, தன் மகளின் கைகளிலும், இடையிலும் குறுகுறுப்பை ஏற்படுத்தினாள்.

நெளிந்தபடி நின்ற சங்கமித்ராவை, "அசையாமல் நில் மித்திரை!" என்று அதட்டினாள்.

சொல்லில் புரிய வைக்காமல், செயலில் உணர்த்த ஆரம்பித்தாள் சுமித்திரை. நாளடைவில் அன்னையின் பயிற்சியினால், உடல் தொடும் உணர்வுகள் மரத்துப்போக ஆரம்பித்தது சங்கமித்ராவிற்கு. உடல் பற்றிய கூச்சம் மறைந்தது அவளுக்கு.

அடுத்தபடியாக யாரும் அவளை நெருங்கா வண்ணம், அவள் பேச்சுக்களை குறைத்து அமைதியாக்கப்பட்டாள். அடுத்தவர்களின் பேச்சுக்களுக்கு அவளிடம் எதிர்வினை குறைந்தது. மொத்தத்தில் சங்கமித்ரா, சுமித்திரை இட்ட வட்டத்திற்குள் தனித்து நிற்க ஆரம்பித்தாள்.

ஒருமுறை சுற்றி இருக்கும் குழந்தைகள் அனைவரும் மேக்கப் போடுவதைக் கண்ட சங்கமித்ரா, அவளும் தன் அன்னையின் பொருட்களை எடுத்துக்கொண்டு ஒப்பனை போட்டுவிட்டு, கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து ரசித்த போது, சுமித்திரை ஆங்காரமாக ஓடி வந்து கண்ணாடியை தரையில் தூக்கி வீசி, சில்லுச் சில்லாய் சிதறச் செய்தாள்.

தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் சங்கமித்ராவின் முகத்தை மூழ்கச் செய்து, மூச்சுத் திணறி நின்றவளை ஆள் உயரக் கண்ணாடியின் முன் நிற்கச் செய்து, "இதுதான் நிஜம் மித்திரை!" என்று வாழ்க்கை பாடத்தை வலியுடன் கற்றுத் தந்தாள் தான் சுமந்த வலி, அவள் சுமக்கக் கூடாதென்று.

பசும்மரத்தில் எழுதிய எழுத்துக்கள் வளர வளர ஆழமாக அழுத்தமாக பதிந்து கொண்டே வளர்ந்தது சங்கமித்ராவுக்கு.

சங்கமித்ரா வளர்ந்து பருவம் எய்தியதும், அனைவரையும் தன் பார்வையாலேயே எட்டி நிற்கச் செய்தாள். இருட்டு அறையும், தன் தாயின் வாழ்க்கை முறையும் அவளை உருகச் செய்யாமல், இறுகச் செய்தது.

புரிந்தும் புரியாத வயதில், வீட்டில் தனித்து இருந்த சங்கமித்ராவிடம், சோனா காமக் கதைகளையும், காமக் களியாட்ட காணொளிகளையும் காட்டி அவள் மனதை தவறான திசையில் மாற்ற முயன்றாள்.

அவள் எவ்வளவு முயன்றாலும், விழிகளில் சிறு மாற்றம் கூட இல்லாது, அசையாது உறுதியாய் நின்ற சங்கமித்ராவை, "உணர்ச்சியற்ற கல்!" என்று திட்டிவிட்டு, தலையில் அடித்துக் கொண்டே சென்றாள் சோனா.

சின்னஞ்சிறு வயதில் தன் தாய் கூறிய புரியாத வார்த்தைகளின் அர்த்தங்கள் எல்லாம் புரிய ஆரம்பித்தது சங்கமித்ராவிற்கு.

இந்தச் சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கல்வி வேண்டும் என்று இடைவிடாது நன்றாக படித்தாள் சங்கமித்ரா.

இருளில், நடுநிசியில் விழித்து எழும்போதெல்லாம், பயந்து கொண்டே சுவற்றினை தடவிக் கொண்டு அந்த அறையை வலம் வரும்போதெல்லாம், கற்பனையில் அந்த அறையை ஒவ்வொரு வடிவமாய் வடிவமைத்தாள். கற்பனைகளின் உச்சத்தில், அவளுக்கு கட்டடக்கலையின் மேல் ஓர் அசுரத்தனமான காதலே வந்தது.

ஒரு நாள் நடு இரவில் வீடு திரும்பிய தன் தாய் கதவினைத் திறந்த போது, உடல் முழுவதும் கீறல்களுடன், உதட்டில் வழிந்த ரத்தத்துடன், கலைந்த ஆடைகளுடன் உடல் வலியில் முனங்கிக் கொண்டே நின்ற தன் தாயைக் கண்டு உள்ளம் பதறியது சங்கமித்ராவிற்கு.

அப்படியே மயக்க நிலையில் சுவற்றில் சரிந்து அமர்ந்த சுமித்திரை, "அம்மா! என்னால் தாங்க முடியவில்லையே!" என்று அரற்ற ஆரம்பித்தாள்.

பதறிய தன் தாயை அணைத்துக் கொள்ள வந்த சங்கமித்ராவை, தன்னை தொடக் கூடாது என்று எட்டி நிற்க வைத்தாள்.

உடல் வேதனையோடு, தூக்கமும் வராமல் புழுப்போல் சுருண்டு கிடக்கும் தன் அன்னையை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்தாள் சங்கமித்ரா.

"தன் தாயின் துயரைத் தன்னால் துடைக்க முடியாவிட்டால், தான் வாழ்ந்து என்ன பயன்? " என்ற தன் எண்ண அலைகளுடன் போராடியவள், பின் ஓர் முடிவு எடுத்தவளாய் உறுதியுடன் நிமிர்ந்தாள்.

கண்ணில் நீர் வழிய தரையோடு கன்னம் பதித்துக் கிடந்த சுமித்திரையின் முன் சலங்கை அணிந்த மலர் பாதங்கள் வந்து நிற்க, இமை சுமந்த நீரை இறக்கி விட்டு, கண்களை மட்டும் நிமிர்த்திப் பார்த்தாள் சுமித்திரை.

சங்கமித்ராவின் சலங்கை ஒலி, தரையில் பதிந்து, சுமித்திரையின் கன்னத்தில் அதிர்வைத் தந்து, ஆதுரமாய் தொடாமலேயே அவளின் உடல் வலிக்கு ஆறுதல் சொன்னது. அவளின் இதழ்கள் பாடல் வரிகளை உச்சரித்து, தாயின் மனவலிக்கு காற்றோடு தூது சென்றது.

இடியும் மின்னலும் சேர்ந்து மழை பொழிவது போல், சங்கமித்ராவின் தாளமும், ராகமும் சேர்ந்து தன் அன்னைக்கு ஆறுதல் மழையை பொழிய ஆரம்பித்தது.

"பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே!


நிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ .....

காலம் கலிகாலம் இதில் நேயம் கனவாகும், சோகம் வரவாகும் தினம் துரோகம் பயிராகும்....

கருவாகும் பெண்மை உருவாகும் போது கொலை வாளை ஏந்த தகுமோ ........

மனிதாபிமானம் பலியாகும் போது மனசாட்சி தூங்கி விடுமோ!

தொடந்திடும் துயர் பெரும் கதையோ .....

வேதம் பல ஓதும் பல பேதம்
தினம் பேசும் வேஷம் பகல் வேஷம் இதுதானே இயல்பாகும்

சமுதாயம் என்னும் கடை வீதி தன்னில்,
சம நீதி என்ன விலையோ.....

அறிவாளி கூட விலை போகும் வாழ்கை இது நாகரீக முறையோ? சுகம் தரும் யுகம் வெறும் கனவோ ......

பொருள் தேடும் பூமியில் அருள் தேடும் நெஞ்சமே!


நிறம் மாறும் வாழ்கையில் நிஜம் காணக் கூடுமோ ...."

மெல்ல மெல்ல சுமித்திரையின் கண்கள் உறக்கத்தை தழுவ ஆரம்பித்தது. தன் தாயின் அருகில் அமர்ந்த சங்கமித்ரா, சுமித்திரையின் தலையை தன் மடியில் ஏந்தி, இதமாய் தடவிக் கொடுத்தாள்.

அன்றிலிருந்து தன் தாய் ரணப்படும் போதெல்லாம் இசையை மருந்தாய் மாற்றி சுமித்திரைக்குப் புகட்டினாள் சங்கமித்ரா.

பள்ளிப்படிப்பை அதிக மதிப்பெண்களுடன் முடித்து, நுழைவுத் தேர்விலும் முதல் இடத்தில் வந்த சங்கமித்ராவிற்கு, கல்லூரி செல்ல பல அறக்கட்டளைகள் உதவி புரிய முன் வந்தது. செய்தித்தாள்களும் காமாத்திபுராவிலிருந்து உயர்கல்வி பெற விரும்பும் பெண்களை படம் எடுத்து பத்திரிக்கையில் பரபரப்பை கூட்ட நினைத்தது.

சோனா கொடுத்த தகவலில் ஆதிஷ் சுமித்திரையின் முன் வந்து நின்றான். சங்கமித்ராவோ அச்சமின்றி சூழ்நிலையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் நின்றாள்.

"தயவுசெய்து என் மகளை, உயர்கல்வி படிப்பதற்கு அனுமதி தாருங்கள். இதற்கு மேலும் நீங்கள் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்" என்று ஒரு தாயாய் தன் மகளுக்காக மன்றாடினாள் மடியேந்தி.

சோனாவோ ஆதிஷ்க்கு மறைமுகமாக இன்னும் காலம் கனியவில்லை என்பது போல் சைகை செய்தாள்.

"முடியாது" என்பது போல் ஆதிஷின் தலை யோசனையாய் அசைந்தது.

பதறிய தன் உள்ளத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு ஆதிஷின் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்தாள் சுமித்திரை.

அதுவரை அமைதியாக நின்றிருந்த சங்கமித்ரா முன்னே வந்து தன் தாயை இரு கைகளிலும் தாங்கிக் கொண்டாள்.

அரக்கனின் பார்வைக்கு சளைக்காமல் எதிர்பார்வை பார்த்தாள் சங்கமித்ரா.

அவளின் நிமிர்வு அவனுக்கு ஆச்சரியத்துடன் கூடிய அலட்சியத்தை தந்தது. சோனாவோ கண்களிலேயே ஆதிஷை எச்சரிக்கை செய்தாள்.

"என் விலை என்ன?" தெளிவாக உச்சரித்தது சங்கமித்ராவின் இதழ்கள்.

"ஹான்...." என்று அதிர்ச்சியில் மூச்சு விடவும் மறந்து சிலையாக நின்றாள் சுமித்திரை.

இடுங்கிய கண்களுடன், "புரியவில்லை..." என்றான் ஆதிஷ்.

" ஒரு நாளிற்கு எனக்கு நீங்கள் நிர்ணயிக்கும் விலை என்ன? " என்றாள் அசராமல்.

ஒரு மகளாய் தன் தகப்பனிடம் கேட்கும் அந்தக் கேள்வியில், வெட்கம் வராத அந்தக் கயவனும், "குட்... நல்ல தெளிவான சிந்தனை" என்று பாராட்டினான் ஆதிஷ்.

" எனக்கு நீங்கள் நிர்ணயிக்கும் விலை உங்கள் கைகளில் தவறாது வந்து சேரும். அதை உங்கள் வசம் ஒப்படைப்பது என் பொறுப்பு " என்று நிதானமாகப் பேசினாள்.

பதிலுக்கு அந்த அயோக்கியனும், "அது எந்த வழி என்று நான் கேட்கப் போவதில்லை. இந்தச் சலுகை உனக்கு மட்டுமே. உன் அன்னைக்கு கிடையாது. அவள் என்றும் என் பிடியில் மட்டுமே" என்றான் அதிகாரமாக.

மறுப்பாக சங்கமித்ரா, தன் வாயை திறக்கும் முன், சுமித்திரை ஓடி வந்து அவள் வாயை அடைத்துக் விட்டு, " எங்களுக்கு இதுவரை நீங்கள் காட்டிய கருணையே போதும்" என்றாள் அவசரமாக.

சோனாவிடம் தன் நீண்ட விரலினால் இருவரையும் சுட்டிக்காட்டி விட்டு நக்கல் சிரிப்புடன் சென்றான் ஆதிஷ்.

" உன் வாக்கு தவறும் பட்சத்தில் உன் வாழ்க்கையும் தவறும் நினைவில் வைத்துக்கொள்" என்று கூறிவிட்டு சோனாவும் சென்று விட்டாள்.

பெருமையும், பயமும் கலந்து தன் மகளை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமித்திரை.

தன் அன்னையின் முடிவில் தனக்கு விருப்பம் இல்லாததை புருவச் சுழிப்பில் உணர்த்திய சங்கமித்ராவின் புருவங்களை அன்பாய் நீவி விட்டாள் சுமித்திரை.

" நீ படிக்க வேண்டும் மித்திரை! என்னை மட்டும் நீ காப்பாற்றாமல் இங்கிருக்கும் அனைத்து பெண்களையும் காப்பாற்ற நீ கண்டிப்பாக படிக்க வேண்டும். நீ ஒவ்வொரு பெண்ணையும் மீட்கும் போது, அது என்னை மீட்பதற்கு சமம் அதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் பணத்திற்கு என்ன செய்யப் போகிறோம்? " என்று தன் மகளுக்காய் பதற்றத்தை சுமந்தது அந்தத் தாயின் மனது.

" கண்டிப்பாக உங்கள் மித்திரை சாதிப்பாள் அம்மா! படிக்கும் நேரம் தவிர பகுதி நேர வேலை செய்து எனக்கான பணயத் தொகையை ஈட்டி என்னை மீட்டுக் கொள்வேன். எனக்கான அடையாளத்தை வெகு சீக்கிரம் தேடிக்கொண்டு, விரைவில் உங்களையும் சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்வேன்.

விபரம் தெரிந்தும் உங்களை இந்த மீளாத் துன்பத்தில் தவிக்க விட என் மனம் என்னை சிறிதும் அனுமதிக்கவில்லை அம்மா.

சுழலுக்குள் சிக்கிய நாம் சுழலின் போக்கில் செல்வது போல் சென்று, எதிர்பாரா திருப்பத்தில், எதிர் நீச்சல் இட்டு வெளியேற வேண்டும்.

ஆரம்பத்திலேயே எதிர்த்தால் அந்தச் சுழல் நம்மை வேகமாக இன்னும் சுழற்றி அடிக்கும். எனக்காகவே நீங்கள் படும் இந்த துன்பத்தை பார்க்கும் போது, இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் உங்களுக்கு நான் மகளாக பிறந்து, உங்களுக்கு பணிவிடைகள் செய்து என் பாவத்தை போக்க வேண்டும் அம்மா.

ஆனால் இனி பிறக்கும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்கள் கண்களில் சிறு துன்பம் கூட வராமல் நான் காப்பேன் . இப்பிறவியிலேயே அதற்கான வாய்ப்பு வரும்வரை, உங்களை துன்பப்படுத்தும் என்னை மன்னிப்பீர்களா அம்மா" என்று உயிர் உருக வேண்டி நின்றாள் சங்கமித்ரா தன் அன்னையிடம்.

"வெளிச்சம் தர சூரியன் வராவிட்டால் என்ன, நிலவைக் கொண்டு தன் இருளை துடைக்கும் இரவைப் போல், என் வாழ்வின் இருள் துடைத்த வெளிச்சம் நீ மித்திரை! நீ என் அம்மாடா!

இது நீ தேடித்தந்த துன்பம் இல்லை மித்திரை. என் பயத்திற்காக, என் சொந்தங்களின் நம்பிக்கையையும், உயிருக்கு உயிரான உயிரையும் விழுங்கிய என் பசிக்கான தண்டனை.

நான் கொண்ட பயத்தின் பிடியில் நீயும் ஆட்கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், எந்த ஆடவனின் பார்வையும் உன்னுள் சலனத்தை விதைக்காது வளர்த்தேன். ரத்தமும் சதையும் கலந்த உடம்பை, கல்லையும் மண்ணையும் போல் பாவிக்க வைத்தேன்.

இன்று நீ அந்த ராட்சசனிடம் தைரியமாக பேசியதைக் கண்டபோது என் பெற்ற வயிறு குளிர்ந்தது மித்திரை.

மரமாய் மரத்துப் போன நான், உன்னை கத்தியாய் கூர் தீட்டி, உன் கைப்பிடி மரமாய் நான் நின்றேன். உன்னை கத்தியாய் மாற்றியது அந்த கயவனின் கழுத்தை நறுக்க அல்ல. என்னைப் போன்ற பெண்களின் கைகளில் கட்டப்பட்ட விலங்கை அறுத்து எறிய" என்றாள் கண்கள் கலங்க சுமித்திரை.

சங்கமித்ராவின் கண்களோ துளியும் கலங்கவில்லை. தன் தாயின் களங்கத்தை துடைக்காமல், கலங்கி நிற்பதால் மட்டும் பயன் என்ன? அவள் மனம் அவளை பல துண்டாய் கூறு போட்டது.

அவளது மதிப்பெண்களுக்கு ஐஐடி பாம்பேயில் இடம் கிடைத்தது. அவளின் கனவான பி டெக் சிவில் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுத்தாள். கட்டிட வரைபடங்கள் தயாரித்தல், ஆய்வுத் தாள்கள் சமர்ப்பித்தல், தகவல் பதிவேற்றம் என பல வேலைகளில் தன்னை உட்புகுத்தி கிடைக்கும் நிமிடங்களை எல்லாம் தன்னைக் காக்கும் ஆயுதமாய் மாற்றினாள்.

காமாத்திபுராவில் வாழும் பெண் குழந்தைகளுக்கு, தன் அனுபவ பாடத்தை முன்னிறுத்தி, அவர்களின் மனதில் மனவலிமையை உண்டாக்க, அவர்களின் அறிவை வளர்க்க, மாலை நேரத்தில் டியூஷன் வகுப்புகள் ஏற்பாடு செய்தாள்.

ஆனால் பல பெண்கள் தங்கள் குழந்தைகளை அனுப்ப முன் வரவில்லை. தன் திட்டத்தை மாற்றி நடன வகுப்பாய் மாற்றினாள்.

நடனத்தை தங்கள் குழந்தைகள் கற்றுக் கொள்வதற்கு ஆர்வத்துடன், குழந்தைகளை சங்கமித்ராவிடம் அனுப்பி வைத்தனர்.

நடனம் மூலமும், பாடல் மூலமும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அந்தப் பெண் குழந்தைகளின் மனதில் விதைக்க ஆரம்பித்தாள் அவர்களின் செல்ல, "மித்து அக்கா".

அவளது நடன வகுப்பிற்கு முதல் ஆளாக வரும், தாயில்லாமல் பாட்டியின் வளர்ப்பில் வளரும் ஸ்வீட்டி என்ற குழந்தை அன்று வராமல் இருக்கவே சங்கமித்ராவிற்கு லேசாக சந்தேகம் எழுந்தது.

இரவு உணவிற்காக, சாப்பாடு வாங்க வெளியே வந்த சங்கமித்ரா, ஸ்வீட்டியை ஐஸ்கிரீம் பார்லரில் வேறு ஒரு ஆடவனுடன் கண்டாள். சில தரகர்களுடன் அந்த ஆடவனை அவள் பார்த்திருக்கிறாள்.

அவள் அவர்களை நெருங்குவதற்குள் அவன் தன் இரு சக்கர வாகனத்தில் ஸ்வீட்டியை முன்னால் அமரச் செய்து, வண்டியை கிளம்பச் செய்திருந்தான்.

ஆட்டோவில் அவர்களைத் தொடர்ந்த சங்கமித்ரா, ஆள் அரவமற்ற கடற்கரைப் பகுதியில், அவன் தன் வண்டியை நிறுத்தி, வேறு ஒருவருக்காக அவன் காத்திருப்பதை உணர்ந்தாள்.

நெஞ்சம் பதைக்க, ஆட்டோவில் இருந்து இறங்கி, அவன் எதிர்பாராத நேரம், ஸ்வீட்டியை வண்டியில் இருந்து இறக்கினாள்.

தன் திட்டம் பாழாய் போன கோபத்தில், அவன் தன் வண்டியை உயிர்பித்து, ஸ்வீட்டியை மீண்டும் அதில் அமர வைக்க முயற்சி செய்தான்.

வண்டியோடு அவனை கீழே தள்ளியவள் ஸ்வீட்டியை விடுவித்தாள். அந்த ஸ்வீட்டி ஓடி வந்து சாராவிடம் அடைக்கலமாகி, ஆராவமுதனின் கண்காணிப்புக்குள் வந்தாள்.

கடற்கரை மணலில் வண்டியை வேகமாக ஓட்ட முடியாதவனை, தூரத்தில் தெரிந்த ரோந்து காவல்துறையிடம் மாட்டி விட சங்கமித்ரா முயற்சி செய்த நேரம் ஸ்வீட்டி, ஆரா மற்றும் சாராவுடன் காப்பகத்தில் அடைக்கலமானாள்.

குழந்தையைத் தேடி தோற்று விட்டு, மனச்சோர்வுடன் அமர்ந்திருந்த சங்கமித்ரா முன் காலையில் ஸ்வீட்டி வந்து சேரவே, அவளைக் காப்பாற்றிய உள்ளங்களுக்கு நன்றி உரைத்தாள் மனதோடு.

மனதோடு பேசியவனே தன் மணவாளன் என்று அறியாமல் போனது பெண்மை. அது விதி மறைத்த உண்மை.

சிறை எடுப்பாள்...
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
பெண்ணவள் உணர்வு கல்லாய் மாறியது தாயால் தானா 😲😲😲

இப்படியொரு தகப்பனை 😡😡😡

ஹுர்ரா என் ஊகம் சரியாகிவிட்டதே 😃😃😃 அந்த மித்து அக்கா நம் மித்ரா செல்லமே தான் 😍😍😍😍
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
பெண்ணவள் உணர்வு கல்லாய் மாறியது தாயால் தானா 😲😲😲

இப்படியொரு தகப்பனை 😡😡😡

ஹுர்ரா என் ஊகம் சரியாகிவிட்டதே 😃😃😃 அந்த மித்து அக்கா நம் மித்ரா செல்லமே தான் 😍😍😍😍
கற்பனையை மிஞ்சும் நிஜங்கள் இருக்கத்தான் செய்கின்றன நட்பே....
என் தோழமை என்றும் சரியே அவர் எண்ணங்களின பாதையும் சரியே....சகியே 😍
 
  • Love
Reactions: Shimoni

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
நல்லது கெட்டது எல்லாமே பிள்ளைக்கு சொல்லி வளர்த்த தாய் இரும்பு பெண் தான், சூப்பர் சங்கமித்ரா தாய் ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
சிக்கி தவிக்கும் வாழ்க்கை கடலில் தன்னையே படகாய் மாற்றி மகளை சுமைந்து கரைசேர்க்கத் துடிக்கும் தாய் நட்பே 😍