• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 2

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 2

உடற்பயிற்சி கூடத்தில் இருந்து தன் பயிற்சியை முடித்துவிட்டு முகத்தில் வியர்வை சொட்டு சொட்டாய் வடிய, திமிறிக் கொண்டிருக்கும் தன் படிக்கட்டு தேகத்தை பனியனில் மறைத்துக் கொண்டு, மாடி படிக்கட்டுகளில் நிதானமாக சங்கமித்ராவை பார்த்துக்கொண்டே இறங்கினான் ஆராவமுதன்.

அவனுக்கு அவள் தான் தன் மனைவி என்று தெரியவில்லை. அவளுக்கும் அவன் தான் தன் கணவன் என்று தெரியவில்லை. முகமறியா தம்பதியர் அவர்கள்.

செந்தூர் அதிபனின் திருமேனியில் சந்தனத்தில் பொட்டிட்டு மணக்கச் செய்துகொண்டிருந்தாள் சங்கமித்ரா. செய்யும் வேலையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே நிறைந்திருந்தது அவள் மனதில்.

தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு பணிப்பெண் தன்னை, தன் மிரட்டலை ஒரு பொருட்டாக மதிக்காமல் அனைவர் முன்பும் தன்னை இழிவு படுத்தியது போல் தோன்றியது ஆராவுக்கு.

கடலில் பல வண்ண மீன்களை விழுங்கி ஏப்பம் விட்ட சுறாவாகிய ஆராவுக்கு இந்த விலாங்குமீன் விளையாட்டு காட்டியது போல் இருந்தது.

கிஞ்சித்தும் தன்னை ஏறிட்டு பார்க்காமல் தன் வேலையில் கவனமாய் இருந்த சங்கமித்ராவை பார்க்கப் பார்க்க சினம் சீறியது. மாடிப்படியில் நின்று கொண்டு தன் இரு விரல் சேர்த்து சொடுக்கிட்டான்.

அவனின் விரல் சொடுக்குச் சத்தத்தில் அனைத்து வேலைக்காரர்களும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தனர்.

தேனம்மாவும் படபடக்கும் நெஞ்சுடன் தூரத்தில், சமையலறை வாசலில் நின்று நடக்கவிருக்கும் திகில் காட்சிக்கு தயாரானார்.

அவளது பெயர் தெரியாத காரணத்தால் "ஏய்..." என்று ஏக வசனத்தில் அழைத்தான்.

தன் உள்ளங்கையை குழி ஆக்கி, அதில் மணக்கும் சந்தனத்தை குழைத்து வைத்திருந்தவளோ, 'யாரோ யாரையோ' கூப்பிடுவது போல் கண்டும் காணாமல் இருந்தாள்.

தன் தன்மானத்தை சீண்டிய பெண்ணவளை பதம் பார்க்க, பாய்ந்து வைத்து கரம் பிடித்தான்.

குழைத்த சந்தனம் அவன் மார்பில் தெறிக்க சட்டென்று திரும்பிய சங்கமித்ராவின் கை அவன் நெஞ்சத்தில் அழுந்த, சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.

அலைபாயும் கண்களுடனே இருக்கும் பெண்களையே கண்டவனின் கண்களுக்கு, தன்னையே சுருட்டிக் கொள்ளும் அலைகடலாய் நயனங்களை விரித்தவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான்.

சங்கமித்ராவின் விழி ஆராவை நோக்கி தன் கைகளில் பதிந்து இருந்த அவன் கைகளை சுட்டிக் காட்டியது.

வார்த்தைகள் இல்லாமல் பார்வைகளால் தனக்கு கட்டளை இடுவதைக் கண்டவன், சுவாரசியம் மிக அவளை மேலிருந்து கீழாக உற்று நோக்கினான்.

அலட்டல் கிடையாது. ஆடம்பரம் கிடையாது. எந்த நாகரீகமும் நளினமும் இல்லை. பெண்களிடம் தான் விரும்பும் ஒரு குணமும் இல்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பெண் தன் கவனத்தை கவர்வதாகவே நினைத்தான். அந்தக் கண்களில் தெரிந்த நிமிர்வு அவனுக்கு திமிராகவே பட்டது.

'சந்தனத்தை என் மீது தெறிக்க வைத்து விட்டு, என்னிடம் மன்னிப்பு கூட வேண்டாமல், திமிர் பார்வை பார்த்தால் விட்டு விடுவேனா?' அலட்சியத்தை முகத்தினில் கொண்டு வந்து சங்கமித்ராவின் கைகளை நெரிக்க ஆரம்பித்தான்.

மெல்லிய மலரின் இதழை கசக்குவது போல் அவள் தளிர்க்கரங்களை அவன் நசுக்க அவளோ எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாமல் கால்களை தரையில் அழுந்த ஊன்றி அழுத்தமாக நின்றாள்.

அடுத்த நொடி அவனுடைய அழுத்தத்தில், அவள் கை எலும்புகள் உடைந்து விடுவது உறுதி என்ற நிலையிலும் மனோதிடத்துடன் நிற்கும் மங்கையை விசித்திரமாகப் பார்த்தான்.

தூரத்திலிருந்து பார்த்த தேனம்மாவின் கண்களுக்கு ஆரா சங்கமித்ராவுடன் கைகுலுக்கி நட்புறவாய் பழகுவது போல் தெரிந்தது.

'அருகில் வந்ததும், தன் பொண்டாட்டி என்று தெரிந்ததும் கைகுலுக்கி குலாவுகிறானே... என் செல்ல பேராண்டி..' உண்மை அறியாமல் அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தார்.

மனதை ஏதோ ஒன்று திசை மாற்ற தன் கை அழுத்தத்தை விட்டு, தன்னிலிருந்து அவள் கையை உதறினான்.

வலியில் தீயாய் கை எரிந்த போதும், தன் வேதனையை வெளிக்காட்டி அவனை மகிழ்ச்சியுறச் செய்ய சங்கமித்ரா எண்ணவில்லை.

லேசாக வீங்கி இருந்த கையை சற்று சிரமத்துடன் தூக்கி, மலர் மாலையை அந்த குமரனின் சிலைக்கு சாற்றினாள்.

'யூ... டாமிட்... நான் சொல்லச் சொல்ல, இதுவரை என் தாய் மட்டுமே தீண்டிய இந்த சிலையை நீ தீண்டி கலங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாய். உன்னை கொன்று விடும் வெறி எனக்கு வருகிறது.

கேவலம்... படுக்கையை அலங்கரிக்கும் ஒரு பெண்ணை கொன்று என் ஆண்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. உனக்கு ஒரு நொடி மட்டுமே அவகாசம். இந்த வீட்டை விட்டு செல். ரைட்... " என்றான் குரல் அதிர.

சங்கமித்ராவோ அவனுக்கு எந்த பதிலும் உரைக்காமல், சிலைக்கு அருகில் இருந்த விளக்கினை துணியால் துடைத்து தீபமிடத் தயாரானாள்.

அனைவரின் பேச்சை அடக்குபவனின் மூச்சையே திணறடித்தாள் தன் அசால்ட்டான நடவடிக்கையால்.

"இத்தனை பேச்சுக்கள் பேசியும் உன்னால் வாயைத் திறந்து பதில் அளிக்க முடியாதா? அவ்வளவு அழுத்தமும் திமிரும் என்னிடம் ஆகாதடி பெண்ணே!" என்றான்.

விளக்கில் எண்ணெயை ஊற்றியவளோ, தீக்குச்சியை உரசி தீபமிட்டாள். தீபம் சுடர்விட்டு எரிய, ஆராவமுதனின் மனதில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

ஆத்திரத்தில் அறிவை இழந்தான். கைகூப்பி இறைவனை கண்மூடி தொழுதவளின் முன் வந்தான். தன் இரு விரல் நீட்டி அவளின் கீழ் உதட்டை அழுத்தப்பற்றினான்.

சட்டென கண்கள் திறந்து பார்த்த சங்கமித்ராவின் விழிகளை உற்று நோக்கியவாறு, "உனது செயல்களுக்கு இப்பொழுது நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் என்னுடைய தண்டனையில் நீ கூனிக் குறுகிப் போய்விடுவாய்!" திமிர்த்தனம் தூக்கலாக இருந்தது ஆராவின் பார்வையில்.

அசராமல் அந்தக் குவளை மலர் நிறத்தழகி, தன் நெஞ்சை நிமிர்த்தி, விழியை உயர்த்தி, அவன் உயிரை உரசாமல் உரசி சென்றாள் பெண்மையின் கம்பீரத்தில்.

"முறையான வகையில் கேள்வி கேட்டால் முறையான பதில் கிடைக்கும்" பிதுங்கிய உதட்டில் நசுங்கிய படி அவள் வார்த்தைகளும் வெளிவந்தது.

"இதுவே முறையற்ற செயலா? வாவ்... அப்போ இதை என்னவென்று சொல்வாய்?" அவள் இதழை நோக்கி தன் முகத்தை நகர்த்தினான்.

தன் சேலை முந்தானையின் ஓரத்தை எரியும் தீபச்சுடரில் காட்டினாள் சங்கமித்ரா. பெண் மனதில் எரியும் எரிச்சலைப் போல் அவளது சேலையும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

"ஏய்... முட்டாள்..." என்று கத்தி, அவளது சேலையில் பற்றிய தீயை உதறி அணைக்க முற்பட்டான் ஆரா.

தான் ஆரம்பித்து வைத்த விளையாட்டு, வினையாகிப் போனதை உணர்ந்து தேனம்மா ஓடி வந்தார்.


சங்கமித்ராவை மேலிருந்து கீழாக பார்த்து அவளுக்கு எந்த ஒரு காயமும் இல்லை என்று தெரிந்த பின் நிம்மதி பெருமூச்சுடன் ஆசுவாசம் அடைந்தார்.

பின் திடீரென்று தன் பேரனின் கைகளை வேகமாக ஆராய்ந்தார். கையில் காயங்கள் இல்லை என்று உணர்ந்த பின், ஆராவின் கைப்பிடியில் சங்கமித்ராவின் சேலை முந்தானை இருப்பதை பார்த்து கலகலவென நகைக்க ஆரம்பித்தார்.

அவரின் திடீரென்ற நகைப்பிற்கு காரணம் புரியாமல் "தேனம்மா" என்று அதட்டினான் ஆரா.

"கல்யாணம் முடிந்த மறுநாளே, பொண்டாட்டியின் முந்தானையை பிடித்துக் கொண்டு நிற்கிறாயே! அதை பார்த்துத்தான் சிரித்தேன்" என்றார் பேரனையும், பேரன் பொண்டாட்டியையும் பார்த்து.

அணைந்த நெருப்பு தன் கையில் மீண்டும் பட்டார் போல் சேலையை உதறினான் ஆரா. தீயினால் கருகிய சேலையைப் போல் முகத்தை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தாள் சங்கமித்ரா.

இருவரின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து, இந்தச் செய்தி அவர்களுக்கு புதியது என்று அறிந்து கொண்ட தேனம்மா தான் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

"தேனம்மா இவள் இனி ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்கக் கூடாது. உடனே இவளை வீட்டை விட்டு வெளியே தள்ளுங்கள். முறையற்ற வழியில் வந்தவள், என்னை முறையாக பேசச் சொல்கிறாள்.

உலகத்திற்கு தெரியாமல் உங்கள் வார்த்தைக்காக மட்டுமே இவள் கழுத்தில் தாலியை கட்டினேன். பணத்திற்காக... எப்படி வெறும் பணத்திற்காக மட்டுமே இருட்டடிக்கப்பட்ட கல்யாணத்திற்கு சம்மதித்தவள், நேர்மையின் திருவுறு போல் என்னை அழுத்தமாக பார்க்கிறாள்.

சரியான நெஞ்சழுத்தக்காரி! உடல் முழுவதும் திமிர். என் வீட்டில் வேலைக்காரி ஆகக் கூட இருக்க தகுதி இல்லாதவள், என் கையால் தாலி வாங்கிக் கொண்டதும் வீட்டுக்காரி என்று நினைத்து விட்டாள் போல.

ஹா... ஹா... ஹா... மாட்டிற்கு மூக்கனாங் கயிறு மாட்டுவதும், நாய்க்கு கழுத்தில் கயிற்றை மாட்டுவதும் போல் தான் எனக்கு இது" என்று நடந்த திருமணத்தை கேலிக்கூத்தாய் ஆக்கினான் ஆராவமுதன்.

தேனம்மாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'தான் ஒன்று நினைக்க, இப்படி நடந்து விட்டதே!' என்ற இயலாமை அவர் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.

"ஒரு நிமிடம்..." என்று அவன் சிரிப்பை தன் வார்த்தையால் நிறுத்தினாள் சங்கமித்ரா.

தனது கரத்தினால் கழுத்தில் மறைந்திருந்த திருமாங்கல்யத்தை வெளியே எடுத்து நீட்டிக் காட்டினாள்.

"ஊருக்குத் தெரியாமல் இருக்கலாம். உறவுக்குத் தெரியாமல் இருக்கலாம். என் உள்ளத்திற்கும் உங்கள் உள்ளத்திற்கும் நன்றாகத் தெரியும்" அவ்வளவுதான் தன் விளக்கம் முடிந்தது என்பது போல் சங்கமித்ரா அந்த இடத்தை விட்டு நகர்ந்து உணவு மேஜைக்குச் சென்று, வீங்கிய கையில் வலியை பொறுத்துக் கொண்டு தன் உணவினை தனக்குத்தானே பரிமாறி விட்டு ஒரு ராணியின் கம்பீரத்துடன் உணவு உண்ண ஆரம்பித்தாள் எதையும், யாரையும் பொருட்படுத்தாமல்.

அவளின் எதிர்வினையில் கோபத்தின் உச்சியை தொட்ட ஆரா அவளை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்த போது, தேனம்மா அவன் கைகளை இறுக்கப்பற்றிக் கொண்டு கண்களால் யாசிக்க ஆரம்பித்தார்.

" இந்த முறை அவள் தப்பித்தாள். உங்களால்... ஆனால் அடுத்த முறை உங்களுக்கு அந்த வாய்ப்பு நிச்சயமாய் மறுக்கப்பட்டு இருக்கும். ரைட்..." என்று கூறிவிட்டு விறுவிறுவென மாடிப்படி ஏறி தன்னறைக்குச் சென்றான்.

முதல் முறை ஒரு பெண்ணால் தனக்கு அவமானம் ஏற்பட்டதை எண்ணி மனதிற்குள் வெதும்பினான். மனதின் வெட்கை தீராமல் குளியல் அறைக்குள் சென்று குளிர் நீரில் தன்னை நனைத்தபடியே அவளைக் கொல்லும் வேட்கையை அடக்க நினைத்தான்.

நடந்த திருமணத்தை ஒரு திருமணமாகவே நினைக்காதவன், அந்தத் திருமணத்தை அவளை அழிக்கும் ஆயுதமாய் எடுக்க நினைத்தான். முடிவெடுத்த பின் மனதின் வெம்மை சிறிது சிறிதாய் குறையத் தொடங்கியது அவனுக்கு.

வேலை செய்தாகிவிட்டது. செய்த வேலைக்கு உணவும் எடுத்துக் கொண்டாகிவிட்டது அவ்வளவுதான் சங்கமித்ராவுக்கு. கைகளைக் கழுவும் போது மிச்சம் மீதி ஒட்டி இருக்கும் உணவுப்பருக்கைகளை களைவது போல், நெஞ்சமதில் எச்சம் என ஒட்டி இருக்கும் ஆராவமுதன் வார்த்தைகளையும் கழுவினாள்.

வார்த்தைகளை எளிதாய் ஒதுக்கியவளுக்கு அவன் தான் கணவன் என்ற உண்மையை உள்ளத்தில் உறைய வைக்க பெரும்பாடு பட வேண்டி இருந்தது. உணர்வுகளை வெளிப்படுத்தாமல் கொந்தளித்து வரும் உணர்வுகளையும் அடக்கி தவயோகி போல் முகத்தில் சாந்தத்தை வரவழைத்தாள்.

'பறித்த பூக்கள் கோவிலுக்கு செல்வதோ இல்லை இடுகாட்டிற்குச் செல்வதோ இறைவன் வகுத்த வழியே' என்று விதியின் கையில் தன்மதியை ஒப்படைத்து விட்டு இயல்பானாள்.

தன் பேரனாக பேச மாட்டான் என்பதை உணர்ந்த தேனம்மா, ஆராவையும் சங்கமித்ராவையும் பேச வைப்பதற்காக, சங்கமித்ராவிற்கு சிலையை தூய்மைப்படுத்தும் வேலை கொடுக்க, தன் முதல் முயற்சி முற்றும் கோணலாக முடிந்ததை எண்ணி மனம் வருந்தினார்.

தளர்ந்த வயதிலும் தளராத மனதுடன் சங்கமித்ராவை நாடிச் சென்றார்.

"சங்கமித்ரா நீ திருமணத்தின் போது ஆராவை பார்க்கவில்லையா?" கூர்விழியால் மித்ராவை அளவிட்டார் தேனம்மா.

இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

"ஏன்?" என்றார் அவசர அவசரமாக.

"பிச்சைக்காரர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை" என்றாள் குரலில் எந்த உணர்ச்சியும் இன்றி.

"என்ன வார்த்தை இது சங்கமித்ரா? இந்த பந்தம் அற்றுப்போகும் பந்தம் அல்ல. உங்கள் திருமணம் அனைத்து விதிகளையும் மீறி விதியால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று.

உன்னை பற்றி ஆராவிடம் நான் எடுத்துக் கூறுகிறேன். உன் குடும்பச் சூழ்நிலை பற்றி சரிவர அவனுக்குத் தெரியாது. அவன் மனதில் ஏதோ ஒரு தவறான வரையறை வைத்துள்ளான். உடனடியாக முடியாது என்றாலும் சிறிது சிறிதாக அந்த எண்ணத்தை நாம் மாற்றி விடலாம்.

ஆராவைப் பற்றி நீயும் அறிந்து கொள்ள முயற்சி செய். அவன் விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொள். கண்டிப்பாக உங்கள் இருவருக்கும் நான் உதவுவேன்" என்றார் ஆதரவாக.

"செய்த தவறுக்கு பிராயச்சித்தம்..." என்று உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவரது முகத்தையும் உணர்வற்ற பார்வையால் அளந்து விட்டு, தன்னறைக்குள் புகுந்து கொண்டாள் சங்கமித்ரா.

கண்ணாடியின் முன் வந்து நின்று தன் தோற்றத்தை அளவிட்டாள். கன்றிச் சிவந்த கீழ் உதடுகள் அந்த முரட்டுக் கரத்தின் வன்மையை பறைசாற்றியது.

வலது கையில் ஏற்பட்ட வீக்கம் அவனது கோபத்தை எடுத்துரைத்தது.

ஆராவமுதனின் வன்மை, கோபம், ஆளுமை எல்லாம் வண்ணமாய் சங்கமித்ராவின் உடலில் பூசி இருக்க, கண்ணாடியில் தெரியும் அந்த சிதைந்த ஓவியத்தின் பொருளை தேடினாள்.

திமிரா? கர்வமா? மென்மையா? துணிச்சலா? தனக்கான பொருளை தன் பிம்பத்திடம் தேடியவள் தோற்று, சோர்ந்தே போனாள்.

ஆணவனின் தொடுகை அமிலம் போல் உடலைப் பொசுக்க, குளிர் நீரடியில் சென்று நின்றாள். கல்லைப் போல் மண்ணைப் போல் சொற்களைக் கடந்து வந்தவளால், தீண்டலைத் தாங்க முடியவில்லை.

மனதைத் தாண்டி என்னென்னவோ வார்த்தைகள் வெளிவரத் துடித்தது அவளுக்கு. அதன் வேகம் தாங்காது, குளிர் நீரை கையில் எடுத்து தன் வாயில் அடைத்தாள்.

கன்னத்து தாடைகளில் வலி எடுத்த போதும் நீரை வெளியே துப்பினாள் இல்லை. சாதாரண கரித்துண்டின் அழுத்தம் வைரமாய் மாறும் போது, பெண்ணவளின் மன அழுத்தம் என்ன ஆகுமோ?

குறுக்கும் நெடுக்குமாக தன்னறைக்குள் நடந்தவன், தேனம்மாவை அழைத்தான்.

"என்ன ஆரா?" என்றார் அவனது அறைக்குள் நுழைந்து.

"இந்தத் திருமணத்தில் அவளுக்கு விருப்பமா? விருப்பம் இல்லையா?" என்றான் அவரை ஆழமாகப் பார்த்தபடி.

"அது..." என்று இழுவையாக இழுத்தார்.

"அப்படி என்றால் இந்த திருமணத்தில் அவளுக்கு விருப்பமில்லை. அதாவது இந்த ஆராவமுதனை கட்டிக் கொள்ள அவளுக்கு இஷ்டம் இல்லை. ரைட்..." என்றான் சரியான விடையை கணித்தபடி.

வார்த்தைகள் வராமல், சங்கடமாக அவனைப் பார்த்தார் தேனம்மா. முயன்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "நீ நினைப்பது போல் அப்படி முழுவதுமாக இருக்காது..." என்று திக்கித் திணறினார்.

"ஓகே. நடந்தது நடந்து விட்டது. அவள் என் மனைவி தானே?" என்றான் ஏளனத்துடன்.

"ஆமாம்... ஆமாம்... " என்றார் தேனம்மா முகம் கொள்ளாச் சிரிப்புடன்.

தன் பேரனின் வாயால் அவளை மனைவி என்றது அவரது தலையில் ஆயிரம் பூக்களைக் கொட்டி மகிழச் செய்தது.

"அப்படி என்றால் அவளை இன்று முதல் எனது அறையில் வந்து தங்கச் சொல்லுங்கள் எனது முழு மனைவியாக" என்றான் அதிகாரமாக.

இருவரும் இணையும் காலம் இன்னும் கனியவில்லை என்பதை நன்கு அறிந்த அந்த அனுபவசாலி, "நாள் நேரம் எல்லாம் குறித்து விட்டு பிறகு இதை முடிவு செய்யலாம் ஆரா" என்றார் முடிவாக.

"எனது திருமணமே நாள், நட்சத்திரம், நேரம் எல்லாம் பார்க்கவில்லை. வாழ்க்கையை ஆரம்பிக்க பார்க்கவில்லை. வாழ்க்கையை அனுபவிக்க பார்க்க வேண்டுமோ?" கேலியாய் இதழ் வளைந்தது அவனுக்கு.

"ஆனாலும்... சங்கமித்ராவின் விருப்பத்தையும் தெரிந்து கொண்டு..." என்று பேச ஆரம்பித்தவர் தன் பேரனின் கன்னத்து தாடைகள் இறுகுவதைக் கண்டு தன் பேச்சை நிறுத்தினார்.

"எனது திருமதிக்கு பல வெகுமதிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவருக்குமான நேரத்தில்..." என்று கூறி கண்ணடித்தான்.

தான் போட்ட புதிரில் தானே மாட்டிக் கொண்டு முழிப்பதை எண்ணி மனம் நொந்தார் தேனம்மா.

அந்த நேரம் ஆராவின் அலைபேசி அழைக்க, அழைப்பை ஏற்றான்.

"ஹலோ டார்லிங்... இச்... இச்..." என்று முத்தச் சத்தங்கள் அலைபேசியை அதிரத் செய்தது.

"சாரா... வாட்?" என்றான் தோரணையாக.

"ஒரு நாள் கூட உங்களை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை. உங்களைப் பார்க்காமலும், பேசாமலும் நான் நானாகவே இல்லை. நமது நிச்சயத்திற்கு நாள் பார்க்கச் சொல்லட்டுமா?"அழகிய சர்ப்பம் தன் தலையை நீட்டியது.

தன் தேனம்மாவை பார்த்தவாரே, "எஸ்..." என்றான் அசால்டாக.

சிறை எடுப்பாள்...
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️ஆராவுக்கு ஏற்ற மித்ரை தான்,,, ஏழையாக இருந்தாலும் தன்மானத்தை விட்டுகுடுக்காத பேதை சூப்பர்.
ஆரா அவளை என்னென்ன உரிமை கொடுமைகள் செய்யப்போறானோ 😳😳😳😳😳
 
  • Love
Reactions: அதியா

Priyakutty

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 28, 2022
112
55
28
Salem
மித்ரா.... 🤩🤩

கொஞ்சமா பேசினாலும்... செமையா பேசுறாங்க...

ஆரா... ஓவரா பண்ணாதீங்க... அதியா சிஸ் ஹீரோயின்ஸ் பத்தி தெரில... உங்களுக்கு...

சாரா... 🙄

நைஸ் எபி dr... ❤
 
  • Love
Reactions: அதியா

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
தன்மானச்சிங்கமாய் அவளிருக்க, அவளை தன் ஆணவம் கொண்டு அடக்க அவனால் முடியுமா 😏😏😏

பெண்ணை இழிவாக நினைக்கும் ஆராவுக்கு புத்தி தெளியும் நாளும் வருமா 🤨🤨🤨

சாராவை வைத்து சங்கமித்ராவை அடை நினைக்கும் அவன் எண்ணம் வெற்றி பெறுமா 🙄🙄🙄
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சூப்பர் சூப்பர் சகி ♥️♥️♥️♥️♥️♥️ஆராவுக்கு ஏற்ற மித்ரை தான்,,, ஏழையாக இருந்தாலும் தன்மானத்தை விட்டுகுடுக்காத பேதை சூப்பர்.
ஆரா அவளை என்னென்ன உரிமை கொடுமைகள் செய்யப்போறானோ 😳😳😳😳😳
எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்ச்சிகளின் குவியல் அவள் 😍
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
மித்ரா.... 🤩🤩

கொஞ்சமா பேசினாலும்... செமையா பேசுறாங்க...

ஆரா... ஓவரா பண்ணாதீங்க... அதியா சிஸ் ஹீரோயின்ஸ் பத்தி தெரில... உங்களுக்கு...

சாரா... 🙄

நைஸ் எபி dr... ❤
பிரியமான பிரியா குட்டிக்கு
உண்மைதான் நட்பே
சுட்டாலும் சங்கு வெண்மை தரும்...
எரித்தாலும் உதைத்தாலும் மிதித்தாலும் தங்கத்தின் பெருமை குறைவதில்லை 😍
 

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
தன்மானச்சிங்கமாய் அவளிருக்க, அவளை தன் ஆணவம் கொண்டு அடக்க அவனால் முடியுமா 😏😏😏

பெண்ணை இழிவாக நினைக்கும் ஆராவுக்கு புத்தி தெளியும் நாளும் வருமா 🤨🤨🤨

சாராவை வைத்து சங்கமித்ராவை அடை நினைக்கும் அவன் எண்ணம் வெற்றி பெறுமா 🙄🙄🙄
அவனது எண்ணங்கள் வண்ணமாய் இருந்தாலும்...
அவளின் மாயத்தூரிகை மட்டுமே மன்னவனின் ஓவியத்தில் உயிர் சேர்க்குமே....
 
  • Haha
Reactions: Shimoni