• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 22

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 22

ஆராவின் கைச்சிறையிலிருந்து முயன்று தன்னை விடுவித்துக் கொண்டவள், " என்ன அமுதா! என் கடந்த காலத்தைக் கேட்டதும், என் பிறப்பிடத்தை அறிந்து கொண்டதும், என் மீது தோன்றிய ஏளன உணர்வில், இவள் இதற்குத்தான் என்று அணைத்துக் கொண்டீர்களா?" என்றாள் அவன் கண்களை நேராகப் பார்த்து.

மார்பின் குறுக்கே தன் கைகளை கட்டிக்கொண்டு, "இல்லை" என்னும் விதமாய் இடவலமாய் தலை அசைத்தான்.

" அம்மாவைப் போலத்தான் மகளும் இருப்பாள் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? " என்று அலட்சியமாய் பேசத் தொடங்கினாலும், தாயைப் பற்றி பேசும்போது அவளை மீறி எழும் தவிப்பை தொண்டைக்குழிக்குள் அடக்க முயன்றாள்.

"பச்...பச்..." என்ற ஒலியுடன் தலையசைத்தான்.

புரியாது , "அப்புறம் ஏன்?" என்ற கேள்வியை விழிகளில் தேக்கி நின்றவளின் அருகில் வந்தான்.

மெல்ல அவள் கண்களின் அருகே தன் சுட்டு விரலைக் கொண்டு சென்றான். அவன் சுட்டு விரலோ அவனுடைய கட்டுப்பாட்டின் எல்லை கடந்து, அவனைப் பற்றவைக்கும் அந்த ஒற்றை மச்சம் மறைந்துள்ள புருவக்காட்டை விரலால் வருடியது.

மச்சமோ, மிச்சமோ எதையும் கணக்கில் கொள்ளாது அச்சமின்றி அவனை எதிர்ப்பார்வை பார்த்தாள் சங்கமித்ரா.

" இது எந்த நேரமும் என்னோடு சண்டையிடும் இந்த விழிகளை சமாதானப்படுத்தும் அணைப்பு இல்லை... ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து, ஒட்டிக் கொள்ளத் தூண்டும் இந்த இதழ்களுக்காக இல்லை..." என்று கூறியபடி மென்மையாக அவளின் கீழ் உதட்டை வருடினான்.
சிலிர்க்க வேண்டியவளோ சீற்றமாய் பார்த்தாள்.

உடல் சற்று குலுங்க ஒரு மௌனச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, " நீ உண்மையைக் கூறுகிறாயா? இல்லை பொய் சொல்கிறாயா? என்று எப்படி நான் அறிந்து கொள்வது. பொய் சொல்லும் போது மூளை வேகமாக யோசிப்பதால், உடலில் சூடு ஏறி உஷ்ணமாகி, உடல் இளகி இருக்குமாம்.

உண்மையைத் துணிவுடன் சொல்லும்போது உடல் குளிர்ந்தது இறுக்கத்தை தத்தெடுத்துக் கொள்ளுமாம்" என்றவன் ஒரு நொடி அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் வருடி விட்டு, கைகளை மேலே தூக்கி சோம்பல் முறித்து, "பரவாயில்லை உன் உடல் குளிர்ந்து தான் இருந்தது. நீ பொய் கூற வாய்ப்பில்லை" என்றவன் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

" பரவாயில்லை அமுதா. சீறி வரும் தோட்டாவை, எதிராளிக்கு திருப்பி அனுப்பும் அற்புதக்கலையை கற்று வைத்திருக்கிறீர்களே! ஆச்சரியமான அதிசயம். நிச்சயம் பாராட்ட வேண்டிய ஒன்றுதான் " என்று இதழ்களில் இளக்காரமான சிரிப்பை சிதறவிட்டாள் சங்கமித்ரா.

"பாராட்டுக்கு நன்றி. ஆனாலும்..." என்றவனின் முகம் லேசாக இறுகி பின் தன்னை சரி செய்துவிட்டு, "தாயை இழந்தால் ஏற்படும் துயரை வார்த்தையால் சொல்ல முடியாது என்பதை நான் நன்கு அறிவேன். அறியா வயதில் பிரிந்த என் அன்னைக்காக என் உயிர் இன்றும் துடிக்கிறது. உன்னை வளர்ப்பதற்காக தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்ட உன் அன்னையின் தூய உள்ளத்தை, உன் உள்ளம் எப்படி மறக்கும்? மறைக்கும்?

எந்தன் அணைப்பு தாயை இழந்த ஒரு மகளுக்கான பரிதாப அணைப்பு மட்டுமே" என்றான் அமைதியாக.

" என் கதை, சொல்லும் போதெல்லாம் புண்ணியம் தேடிக் கொள்ளும் புண்ணியக்கதை அல்ல. ஆனால் சொன்ன பிறகு, உண்மையான உள்ளங்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிந்த ஓர் பெண்ணின் பாவப்பட்ட கதை மட்டுமே. என்னிடம் ஏற்கனவே பாவமும், பரிதாபமும் கைவசம் அள்ள அள்ளக் குறையாமல் நிறைய உள்ளது.

அதனால் உங்களது பரிதாபம் எனக்குத் தேவையற்றது. எந்த நிலத்தில் பயிரிட்டாலும் இருப்பதைக் கொண்டு வாழும் கள்ளிச்செடி நான். என்னைத் தீண்டி உங்கள் கைகளை புண்ணாக்கி கொள்ளாதீர்கள்.
இது அக்கறையல்ல. எச்சரிக்கை மட்டுமே" என்றாள் எதற்கும் பணியாத குரலில், அவன் புறம் ஒரு விரல் நீட்டி எச்சரித்து.

தன் முகம் நோக்கி நீண்ட அவள் தளிர்விரலை, தாவிப்பிடித்து, " என் தாயைத் தவிர என்னிடம் யாரும் இப்படி விரல் நீட்டி பேசியது இல்லை. நீ எச்சரிக்கிறாயே. அது மிகவும் தவறாயிற்றே. என்ன செய்யலாம்... " என்று கண்களை மேல் நோக்கிப் பார்த்து, உதடு கடித்த ஆரா, லாவகமாய் தன் தலை அசைத்து, சங்கமித்ராவின் விரலை விடுவித்து, அவளின் கீழுதட்டை தன் இரு விரலிடுக்கில் சிறை எடுத்தான்.

"உன் உதடுகள், என்னிடமிருந்து உண்மையை வாங்க முடியாது என்று இந்த ஆராவிடம் சவால் விட்டது. அந்தோ பரிதாபம்! உன் கதையைக் கூறி என்னிடம் தோற்றுவிட்டது.
தோற்றுப் போனதற்கே தண்டனை கொடுக்கும் கணக்கு நிலுவையில் உள்ளது. இப்போது என்னவென்றால், எட்டி நிற்கச் சொல்லி எச்சரிக்கை தருகிறதே. கொடுக்கல் வாங்கல் கணக்கில் என்றும் நான் கறார் தான்.
உன் இதழ் செய்த தப்பிற்கு என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொல் மித்ரா " என்றான் மெதுவான குரலில் சீற்றத்தை உள்ளடக்கி.

மறுப்பாக சங்கமித்ராவின் தலை அசைவோடு, ஆராவின் கைகளும் அசைந்தது.

" தோற்றுப் போன உன் உதடுகள், சத்தம் போட்டு முத்தம் தந்தால், சத்தம் இல்லாமல் என் கோபமும் ஓடிவிடும். ஆராவின் கோபம் என்றும் உன் நல்லதற்கல்ல. கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் " என்றான்.

சங்கமித்ராவின் முன் நெற்றி அவனை அருகில் வரும்படி அசைந்தது. இமைகளோ திறந்து மூடி அவனுக்கு வரவேற்பு அளித்தது.

ஆச்சரியத்துடன் ஆராவின் புருவங்கள் உயர்ந்து, உதடுகள் நிறைந்த புன் முறுவலுடன், சிறைப்பிடித்த சங்கமித்ராவின் உதட்டை விடுதலை செய்து விட்டு, இதமாய் தன் இமைக் கதவுகளை மூடி, மன்னவன் மங்கையவள் முன் சரிந்து நின்றான்.

அவன் அழுத்தியதால் சிவந்த தன் உதட்டை, உள்வாங்கி சமப்படுத்தி விட்டு, அவன் நெற்றியை தன் நெற்றியால் ஓங்கி முட்டினாள்.


அதிர்ந்து விழித்தவன் தன் நெற்றியை தடவிக்கொண்டே, " உன் தவறுகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. எல்லையைத் தாண்டினால் என்றும் தீவிரவாதம் தான்" என்றான் உக்கிரமாக.

" நான் அழைத்த காரணம் வேறு. நீங்கள் புரிந்து கொண்ட காரணம் வேறு. இப்பொழுதென்ன ஆரா? நீங்கள் நான் பெண் என்பதை அறிய வேண்டுமா? இல்லை கன்னி என்பதை உணர வேண்டுமா!" என்றாள் அலட்டல் இல்லாத அமைதியான குரலில்.

"சீ.... உன் உள்ளத்தில்தான் உணர்வுகள் இல்லை என்றால், பேசும் வார்த்தைகளிலும் உணர்வில்லாமல் பேசுகிறாயே! உயிர் என்று ஒன்று இருந்தால் மானிடர்க்கு உணர்வென்ற ஒன்றும் இருக்கத்தான் வேண்டும்.

உன் தாய் மறக்கடித்த உணர்வுகளை உன்னில் எழ வைப்பேன். என் முன் விழ வைப்பேன்" என்றான் அழுத்தமாக.

"உணர்வுகளா! அப்படி என்றால் என்ன? எவர் முன்னும் வருவதற்கு சாத்தியம் இல்லை. அதுவும் உங்கள் முன்பு நிச்சயமில்லை " என்றாள்.

சங்கமித்ரா சவால் விட, ஆராவமுதனின் ஐம்புலன்களும் வெறியேறி அவன் உச்சியில் ஏறி நின்று அவனை உலுக்கியது.

கோபத்துடன் அவளை தன் இரு கரங்களில் ஏந்தினான்.

" படுக்கைக்கா?" என்றாள் பதட்டமில்லாமல்.

" பந்தக்காலிட்ட நான் உன்னை பந்தலுக்கு அள்ளிச் செல்கிறேன்" என்றான்.


மும்பைக்கு வந்த போது தேனம்மா பார்த்து பார்த்து பதியம் போட்டு வளர்த்த ஜாதி முல்லைக் கொடி, சரசரவென உயர்ந்து, ஆராவின் பால்கனியை நிறைத்திருந்தது.

முல்லை பந்தலின் அருகே இருந்த திவானில், சங்கமித்ராவை கிடத்தினான். அசைவின்றி அவனின் செய்கைகளை ஏற்றுக்கொள்ள தன்னை தயார்படுத்தினாள்.

அசையாது அவனை விழுங்கப் பார்க்கும் விழிகளை கண்டான். அடுத்த நொடி, "கண்களை மூடு" என்றவனின் கட்டளைக்கிணங்க கண்களை மூடிக் கொண்டாள். அனலைப் போல தகிக்கப் போகும் அவனின் தீண்டலுக்கு தன்னை முழுவதுமாய் அர்ப்பணிக்க அமைதியாய் இருந்தாள்.

நேரம் கடந்து கொண்டே சென்றது. தான் எதிர்பார்த்த எதுவும் நடக்காமல் போனதும், அதுவரை அடக்கி வைத்த மூச்சை பெருமூச்சாய் வெளியேற்றினாள்.


சில்லென்ற மெல்லிய குளிர் பனித்துளி நெற்றியில் விழ, அதனை துடைப்பதற்கு எழுந்த தன் கைகளை இறுக்க மூடிக் கொண்டாள்.

சட சடவென ஏதோ விழுந்து கழுத்தில் உராய்ந்து குறுகுறுப்பு ஏற்படுத்த, அதனை தட்டி விட எழுந்த கைகளை மீண்டும் அடக்கினாள்.

சேலை விலகிய இடுப்பில் சிலு சிலுவென ஏதோ சரிய உடலை சற்று நெளித்து சமன் செய்தாள்.

தீயை எதிர்பார்த்து காத்திருந்தவளை, குளிரும் ஏதோ ஒன்றின் தழுவலில் அவள் மனம் நழுவப் பார்த்தது.

"அது என்ன? " என்ற கேள்வி அவள் மனதில் ஊற்றாய் பெருக்கெடுக்க, பொங்கிய வெள்ளத்திற்கு அணை போட முடியாமல் மெல்லக்கண் திறந்தாள் ஆராவின் கட்டளையையும் மீறி.

அவள் கண் திறப்பதற்காகவே காத்திருந்த ஆரா, தன் உள்ளங்கையில் குவிந்திருந்த, மாலை மலர்ந்த, மழையில் நனைந்த முல்லைப் பூக்களை, தன் நாசியில் நுகர்ந்து, தன் இதழ்களின் முத்தத்தில் குளிப்பாட்டி, சங்கமித்ராவின் முகத்தில் மழையாய் கொட்டினான்.

அந்தப் பூக்கள், பனியோடு கலந்து மென்மையாய், அவள் முகம் எங்கும் வழிந்து, பூவிதழோடு சேர்ந்திருந்த மன்னவனின் இதழ் வாசத்தோடு அவள் கன்னங்களை மென்மையாய் முத்தமிட்டது.
தலைவனின் நாசி பட்ட காற்று, தலைவியின் நாசிக் காற்றோடு சேர்ந்து பூவோடு கலந்து, அவளின் இதழ் பிளவில் வந்து நின்றது.

அவர்களின் அறியா காதலை அறிந்த காற்று, பூவோடு சேர்ந்து அவள் செவியில் உரக்கக் கத்தியது.

மெய்த் தீண்டலை எதிர்பார்த்து கல்லாய் இறுகி இருந்தவளை, மென் தீண்டலாய் முல்லைப் பூக்கள் முத்தமிட்டு , பூட்டி வைத்த அவளின் உணர்வுக் கதவுகளை லேசாகத் தட்டியது.

ஏகாந்த வேளையில் பூக்களின் மகரந்தம் அவள் மேல் அள்ளித் தெளித்து விழ, பூவையவளின் பரிமாணத்தில் ஆண் வண்டின் கருவிழிகள், பூட்டுக்களின் திறவுகோல் கண்ட உற்சாகத்தில் வட்டமிட்டது.

அவன் தீண்டலைக் கூட சகித்து இருப்பாள். தீண்டாமல் தீண்டிய அவன் செய்கையில் அவளின் மெல்லிய உணர்வுகள் வற்றிய கேணியில் நீராய் ஊற்றெடுக்க ஆரம்பித்தது.

தன் கோபத்தோடு, அவளை ஆட்கொள்ளத்தான் நினைத்தான் ஆரா. சிலை போல் சித்திரமாய் கண்மூடிக் கிடந்தவளின் அழகில் சலனம் தோன்ற, ரசிகனாய் மாறி தன்னை மீறி அவளை ஆராதிக்கத் தொடங்கினான்.
அவளின் உடல் மொழி காட்டிய அதிர்வில், நளினத்தில் தன்னை தொலைத்து நின்றிருந்தான்.

தன்னில் எழுந்த அந்த உணர்வுகளின் தாக்கம் பிடிக்காமல், தன்னைச் சுற்றி சிதறிய பூக்களை கையில் எடுத்து தரையில் வீசினாள். தன்னை பார்த்து குறும்பாக சிரிப்பவனை ஒன்றும் செய்ய முடியாத இயலாமையுடன் விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.


"ஹா... ஹா... " என்ற ஆராவின் சிரிப்புச் சத்தம் அவளை துரத்தியது.

எதற்கும் எதிர் வினை காட்டாத சங்கமித்ரா, 'புதிதாக பூத்த உணர்வு, ஏன்? எப்படி?' என்ற குழப்பத்தில் பின் தலையை சுவற்றில் சாய்த்து, விட்டத்தைப் பார்த்துக் கொண்டு தன் யோசனைக்குள் சுழல ஆரம்பித்தாள். தன் கடந்த கால வாழ்க்கையை கொண்டவனோடு பகிர்ந்து கொண்டதில், எப்பொழுதும் நெஞ்சை அழுத்தும் துக்கம் குறைந்ததை உணராமல் இருந்தாள்.


சோர்ந்து, ஒரு முடிவில்லாமல் தவிக்கும் நேரமெல்லாம், சிறுவயதில் தன் தாய் எப்பொழுதும் விரும்பிச் சூடும் ஜாதி முல்லைப் பூவின் கொடியோடு என்றும் தஞ்சம் புகுபவனுக்கு, இன்று முல்லைக்கொடி பச்சைக்கொடி காட்ட, ஆனந்தத்தில் கொடிகளை உலுக்கினான். கொடியோ வாழ்த்து போல் அவன் மீது பூமாரி கொட்ட, சுவாசத்தை ஆழ்ந்து உள்ளிழுத்து, பூக்களின் நறுமணத்தை தன் காற்றுப்பையில் நிரப்பிக் கொண்டான்.

சங்க மித்ராவை ஜெயிப்பதற்காக, தான் மேற்கொள்ளும் முயற்சிகள் என்று, தன் நடத்தைக்கு அவன் சாயம் பூசிக் கொண்டான்.

'இடி, மின்னல், புயலோடு கொட்டப் போகும் காதல் மழையில், அவன் சாயம் வெளுக்கப் போவது உறுதி' என்று விதியும் சிரித்தது.
அறைக்குள் நுழைந்தவனின் முன் வேகமாக ஓடிச் சென்று, தன் உள்ளங்கையை நீட்டினாள்.

புரியாது பார்த்தவனிடம், "வாக்கு கொடுப்பது உங்களின் நேரப் பொழுது போக்கு போலும்" என்றாள் குற்றம் சாட்டும் குரலில்.

"என்ன உளறல்?" என்றவனின் முன் மீண்டும் தன் கையை நீட்டி, "என் சலங்கை" என்றாள்.

"ஓ.... கதை முடிந்ததும், நீயே கேட்டு பெற்றிருக்க வேண்டும். மறந்துவிட்டு என்னை குற்றம் சாட்டுவது சரியல்ல" என்று அவளோடு வாதத்தில் குதித்தான்.

"விளையாட்டு போதும் அமுதா! என் தாயின் நினைவுச் சின்னத்திற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்" என்று, என்றோ கோப உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவளின் குரலில், இன்று கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

அவளை சீண்டச் சீண்ட உற்சாகம் கரை புரண்டது ஆராவிற்கு. தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சலங்கையை எடுத்து, கைகளில் பிடித்து உயர்த்தி நின்றான்.

விறு விறுவென அவன் முன் வந்து சங்கமித்ரா தன் கைகளால் சலங்கையை பிடிக்க முயன்றாள். ஆரா உயரத்தில் உயர்த்திப் பிடித்திருக்கவே முடியாமல் போனது சங்கமித்ராவுக்கு.

அவன் விளையாட்டு தொடரவே, கோபத்தில், ஆத்திரத்தில், "டேய் அமுதா!" என்றவள் அதட்டவே, தாய் சொல்லுக்கு மடங்கும் பிள்ளை போல் கைகளை இறக்கினான்.

அவன் கைகளில் இருந்து சலங்கையை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு தன் அறையை நோக்கி கீழ் இறங்கிச் சென்றாள் சங்கமித்ரா.

" டேய் அமுதா!" என்ற வார்த்தையில் ஆராவின் உலகம் நின்று சுழல ஆரம்பித்தது.

ஒரே நாளில் தன்னை, தன் நினைவுகளை சிறை எடுத்தவளின் மீது கோபமும், பாவமும், தாபமும் ஒருங்கே மோத, அவளை சாய்க்கவா? இல்லை தன்னோடு தோள் சாய்க்கவா? குழப்பங்கள் குமிழாய் நெஞ்சத்தில் ஆழத்திலிருந்து புறப்பட்டு எழ, 'அவள் உன்னில் தோற்கத்தான் வேண்டும்' என்று அவன் மனம் தீர்ப்பு கூற, அவனின் காதல் குமிழிகள் காற்றோடு உடைந்தே போனது.

சங்கமித்ராவால் அவமானப்படுத்தப்பட்ட சாரா, அவளை ஆராவின் வாழ்வில் இருந்து, அடியோடு விலக்கி நிறுத்துவதற்கான வழிவகைகளை திட்டமிட்டுக் கொண்டிருந்தாள்.

தன்னவனுக்கு தன் காதலை நிரூபிப்பதற்காக தன்னாடையைக் கழற்றி, உள்ளமும் உடலும் உனக்குத்தான் என்று உணர்த்தும் சமயம், குறுக்கீடு செய்தது மட்டுமல்லாமல் தன்னை அறைந்த சங்கமித்ராவை உயிரோடு கொன்று புதைக்கும் வெறி வந்தது சாராவுக்கு.

ஆராவின் அலுவலகத்தில் சில கைக்கூலிகளை விலைக்கு வாங்கி, எந்த அலுவலகத்தில் தான் விரட்டப்பட்டோமோ, அதே அலுவலகத்தில் அனைவரும் முன்பும் சங்கமித்ராவை அவமானப்படுத்தும் திட்டத்தை செயலாக்க முனைந்தாள்.

நிச்சயம் இந்த அவமானம் தாங்காமல் சங்கமித்ரா தன் உயிரை மாய்த்துக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை என்றே கருதினாள்.

பொழுது விடிந்ததும், விரைந்து எழுந்த சங்கமித்ரா வீட்டின் பின்பகுதியில் கல்மேடையில் வந்து அமர்ந்தாள். மழை பெய்ததால் நீர் தேங்கி இருக்க, தேங்கிய நீரில் தன் முகத்தைப் பார்த்தாள்.

கலங்கிய நீரில், ஆதவனின் வெளிச்சம் பட்டு அவள் முகத்தை பொலிவாகக் காட்டியது. ஏனோ அந்த மாற்றத்தை விரும்பாத சங்கமித்ரா, கல் மேடையில் இருந்து தேங்கி நீரில் தன் கால் பட லேசாக குதித்தாள். சிதறிய நீரில் தன் உருவமும் மறைந்தது கண்டு, ஆழ்ந்தெடுத்த மூச்சுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

நாயகி, சங்கமித்ராவிற்கு காபி கொண்டு வந்து கொடுக்க, சிறு தலை அசைப்புடன் அதனை பெற்றுக் கொண்டாள்.


சூடான பானம் தொண்டைக்கு இடம் தர, கண் மூடி தலையை உயர்த்தி வான் நோக்கி நிமிர்ந்தாள். நச்சென்று ஓர் நீர்த் துளி அவள் நெற்றியில் விழ, உதிரும் மழைத்துளிக்காய் கையை விரித்தாள்.

மொட்டை மாடியில் இருந்து தேங்கிய நீர் சொட்டுச் சொட்டாய் கையில் விழ நீரை சேர்த்து ரசித்தாள்.

உள்ளங்கையில் தேங்கிய நீரில் திடீரென்று காற்றில் சுழன்று முல்லைப் பூ ஒன்று விழ உள்ளம் அதிர்ந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்து, யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டு பூவின் வாசனையை நுகர்ந்தாள் சுகந்தமாய்.

சோம்பல் முறித்துக் கொண்டே பால்கனியில் இருந்து இந்த காட்சியைக் கண்ட ஆராவின் கண்கள் பளபளத்தது.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
ஆரா அவளுக்கு காதல் உணர்வுகளைக் கொண்டுவருவானா
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
எப்படி இருந்த ஆரா இப்படி ஆகிவிட்டானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️, ஆனாலும் அந்த செல்லச் சீண்டல்கள் மட்டும் இன்னும் குறையவில்லை 😜😜😜

ஆத்தரே நீங்கள் சொன்னது போலவே, பாறைக்குள் ஒளிந்த விதை முளை விட ஆரம்பித்து விட்டது போலவே 😍😍😍

இனி காதலின் அதிராட்டம் தானோ 😃😃😃

ஆனால் அந்த சாராவை நினைக்கும்போது, மனதில் பகீர் என்றும் இருக்கின்றதே 🥺🥺🥺
 
Last edited: