• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 30 Final

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 30
( இறுதி அத்தியாயம் )


காமாத்திபுராவில் தான் அறிந்த சிறுமியர் முதல் அவள் வயதை ஒத்த பெண்கள் வரை அனைவரும் திரண்டிருந்து, அவளை வரவேற்கவும் பேச்சற்று சிலையாக நின்றாள்.

அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டு, அவர்கள் தவறவிட்ட படிப்பை தொடரப் போவதாகவும், அவர்களுக்கு விருப்பம் இருந்தால் வெளிநாடு அனுப்பி படிக்க வைப்பதாகவும் கூறி ஆரா அழைத்து வந்திருப்பதாக கூறினார்கள்.

சங்கமித்ராவின் அருகில் வந்த ஸ்வீட்டி, அவள் சேலையை பிடித்து இழுத்து, அவளின் கவனத்தை தன் புறம் திருப்பினாள்.

குனிந்து ஸ்வீட்டியை தன் கரங்களில் அள்ளிக் கொண்டு முத்தமழை பொழிந்தாள்.

"ஏய் மித்தக்கா! நானும் அவர்களுடன் போகட்டுமா? எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை" என்று ரகசிய குரலில் தன் விருப்பத்தை தெரிவித்தாள்.

சங்கமித்ரா, நெஞ்சம் படபடத்தபடி ஆராவை பார்க்க, தன் இமை மூடித் திறந்து, தன் ஒற்றை சுட்டு விரலை அவள் புறம் நீட்டி, 'உனக்காக..." என்று ஓசை இல்லாமல் இதழ் அசைத்தான்.

அவனின் அசைந்த உதட்டால், உள்ளம் அதிர்ந்த சங்கமித்ரா பேசாமல் நிற்கவும், அவள் கைகளில் இருந்து இறங்கிய ஸ்வீட்டி ஆராவை நோக்கி நடந்தாள். அவளை தன்னிடம் வரும்படி ஆரா இரு கரம் நீட்டி அழைக்கவும் தலையசைத்து மறுத்தாள்.

" நீங்க குட் பாயா? பேட் பாயா? " என்றாள்.

"ஏன்டா பேபி?" என்றான் புன்னகை தவழ்ந்த முகத்துடன்.

" உங்க கிட்ட வந்தா நீங்க பேட் டச் பண்ணுவீங்களா? " கண்களை உருட்டி உருட்டி பயத்துடன் கேட்டது அந்த சின்னஞ்சிறு மொட்டு.

இந்தப் பூமியில் தான் ஆணாகப் பிறந்ததற்கு அந்த கணம் வெட்கப்பட்டு, உதிரம் உறைந்த நெஞ்சுடன், வலிகள் சுமந்த விழிகளுடன் ஸ்வீட்டி முன் மண்டியிட்டான்.

அவனுடைய ஆண் என்ற அகந்தையும் அவனோடு சேர்ந்து மண்டியிட்டது. சிறு வயது முதல் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த தன் மனைவியை, தான் படுத்திய பாடுகள் எல்லாம் நினைவிற்கு வந்து அவனை சாட்டை போல் சுழற்றி அடித்தது.

அவனையே பயத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சிறு குழந்தையிடம் உதடுகள் துடிக்க, 'இல்லை' என்று தலையசைத்தான்.

" அப்போ நீங்க வந்தா நான் கதவைப் பூட்டி பாத்ரூம்க்குள் ஒளிஞ்சிக்க தேவையில்லையா?" என்றாள் ஸ்வீட்டி.

ஆ.... என்று ரௌத்திரம் பிடித்து கத்தியவன் அருகில் இருந்த நாற்காலியை தூர வீசி எறிந்து, தன் ஆத்திரத்தை தணிக்கப் பார்த்தான்.

மிரண்டு போன ஸ்வீட்டி மடமடவென பின்னால் நகர்ந்தாள். அவள் அருகில் வந்த சங்கமித்ரா, அவளை தட்டிக் கொடுத்து, தைரியம் தந்து, ஆராவின் அருகில் செல்லும்படி கண் ஜாடை காட்டினாள்.

மித்ரா கொடுத்த தைரியத்தில் முன்னே சென்று ஆராவின் குனிந்த தலையை நிமிர்த்தினாள் ஸ்வீட்டி. தன்னை ஜெயிக்க யாரும் இல்லை என்று இறுமாப்புடன் இருந்தவன், சிறு குழந்தையின் கேள்வியில் தோற்று, கலங்கிய கண்களில் கண்ணீருடன் பார்த்தான்.

" அச்சச்சோ வலிக்குதா?" என்று கூறி அவன் கண்ணீரைத் துடைத்து விட்டது அந்தப் பிஞ்சுக் கரம். அந்தக் குழந்தையின் பாசத்தில் தன் தாயைக் கண்டவன், மெல்லச் சிரித்தான்.

" இனிமேல் அழக்கூடாது" என்று தன் தலையை ஆட்டிக் கொண்டே சொன்ன ஸ்வீட்டி, அவன் இரு கன்னங்களையும் வலிக்கும்படி கிள்ளி எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தம் தந்தாள்.

சங்கமித்ராவிற்காக, அவள் கொண்ட கனவிற்காக காலடி எடுத்து வைத்தவன், கன்னிவெடியில் வைத்ததைப் போல் திகைத்து நின்றான்.

வேரோடு இப்பிரச்சனைகளை களைய முடியாவிட்டாலும், கள்ளிச்செடியில் பூத்த இந்த சின்னஞ்சிறு மொட்டுக்களையும், இளம் பூக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டான்.

தன்னவளின் பாதம் தன்னருகே தெரிந்தும், வருந்திய உள்ளத்துடன் அமைதியாகவே மண்டியிட்டு இருந்தான்.

இவன் தன்னவன் என்று, அவன் காதல் தந்த உறுதியில், அவன் காதலுக்கு மரியாதை தந்து அவன் முன்பு தானும் மண்டியிட்டு, அவன் முகத்தை தன் மார்போடு பதித்து உச்சந்தலையில் உயிர் உருக முத்தம் பதித்தாள் சங்கமித்ரா காதலுடன்.

" மித்ராம்மா... " என்று அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

காதலை உரைக்காமலேயே காதலைக் கொண்டாடிய அந்த உள்ளங்களைக் கண்ட பெண்கள் கரவொலி எழுப்பி, தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் தெரிவித்தனர்.

அவர்களின் மோன நிலையைக் கலைத்த கரவொலியில், வெட்கம் தவழ்ந்த புன்னகையுடன் இருவரும் எழுந்து நின்றனர்.

" மித்ரா உங்கள் அம்மா சேர்த்து வைத்த சந்தோஷத்தையும் சேர்த்து நீ அனுபவித்து வாழ வேண்டும்" என்று மித்ராவிடம் கூறியவள் ஆராவைப் பார்த்து, "சார்! நீங்கள் செய்த இந்த உதவியை எங்கள் உயிர் உள்ளளவும் மறக்க மாட்டோம்.

எங்கள் காலம் இப்படியே சிதைந்து விட்டது என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எங்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறது என்று வழிகாட்டிய உங்களை... உங்களை... நாங்கள் அண்ணா என்று அழைக்கலாமா?" என்றாள் தயக்கத்துடன் ஒரு பெண்.

"ஹேய்... நான் எப்பொழுதும் உங்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக இருந்து வழி நடத்துவேன். ஒருமுறை என்ன ஆயிரம் முறை அழைத்துக்கொள்" என்றான்.

"இல்லை. நாங்கள் வசிக்கும் பகுதியில் அனைத்து ஆண்களையும் எத்தனையோ உறவு முறை கூறி அழைத்திருக்கிறோம். ஆனால், 'அண்ணா' என்று அழைத்துக் கூற ஒருவரும் இல்லை அண்ணா... அண்ணா..." என்று கதறி அழுதாள் அந்தப் பெண்.

தண்ணீர் இன்றி தரையில் துடிக்கும் அந்த மீன்களைக் காண ஆராவின் கண்களில் கண்ணீர் மீண்டும் பெருகி நின்றது.

ஆரா தன் அலைபேசியில் அழைப்பெடுத்து, தன் பணியாளர்களை வரச் செய்து, பெண்களின் விண்ணப்ப படிவங்களை நிரப்பி, வெளிநாட்டிற்கு செல்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆரம்பித்தான்.

சங்கமித்ரா ஒருவித அமைதியுடனே அவர்களுடன் வலம் வந்தாள். ஆரா அனைவரையும் உயர்தர ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு உணவளித்து, அவர்களை நம்பிக்கை கலந்த நிறைவுடனே வழி அனுப்பி வைத்தான்.

வீட்டுக்கு வந்ததும் ஆரா எப்பொழுதும் போல் தன் அறையில் அடைந்து கொண்டான். தானாக தன்னவனின் அறைக்குள் செல்ல அவளின் நாணம் தடுத்தது. கூடவே சிறு பயமும் எழுந்தது. அவனிடம் இயல்பாக தன்னை அர்ப்பணிக்க முடியாதோ என்று. குழப்பம், பயம், நாணம் என அவளை வாட்டி எடுக்க, விடை தெரியாமல் சில கணங்கள் தடுமாறியவள், தன் ஆயுதத்தை கையில் சுமந்து கொண்டு மொட்டை மாடியை நோக்கி நடந்தாள்.

பால் நிலா வான் வீதியில் பவனி வர, கடற்கரை காற்றின் குளுமையோடு மொட்டை மாடியின் கை பிடிச்சுவற்றில் சாய்ந்து நின்றாள். தன் முதுகை யாரோ துளைப்பது போல் உணர்ந்தவள் சட்டென்று கீழே பார்த்தாள்.

திறந்த இமைகள் அகண்டு கொண்டே சென்றது. தான் கண்ட காட்சியை நம்ப முடியாமல். மேலிருந்து குனிந்து பார்த்த அவளை, பால்கனியின் கைப்பிடிச்சுவற்றிலிருந்து நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரா. அந்த விழிகளில் தெரிந்த தவிப்பில், செய்வதறியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"வா..." என்று இதழ் அசைத்து, இமை மூடித் திறந்து அவளை அழைத்தான்.

"ம் ஹூம்..." என்று தலை அசைத்தவளின், மறைத்த காதல் உடைப்பெடுத்து வெளிவர கண்கள் கலங்கி கண்ணீர் சிந்தியது.

உதிர்ந்த அவளின் கண்ணீர் பூக்கள் ஆராவின் கன்னத்தில் பட்டுத் தெறிக்க, " உன் கண்ணீர் எனக்குப் பிடிக்கவில்லை, உன் முத்தத்தால் துடைத்து விடு மித்ரா!" என்றான்.

புறங்கையால் கண்ணீரை அழுத்தமாக துடைத்தெடுத்தவள், மையலாக ஆராவை பார்த்தாள். வலது கையில் ஐவிரல்களைக் குறுக்கி, தன் உதட்டில் ஆழ்ந்த சத்தமுடன் முத்தமிட்டு மேலிருந்து கீழாக ஆராவின் முகத்தை நோக்கி வீசுவது போல் எறிந்தாள் முத்தங்களை.

கன்னங்களை இடமும் வலமுமாகத் திருப்பி, அவளின் முத்த வெள்ளத்தில் குளித்தான் ஆரா. கிறக்கமாக தன்னை பார்த்தவனை, மிதப்பாகப் பார்த்தாள் பாவை.

இடது கை உள்ளங்கையை விரித்து, வலது கையால் உள்ளங்கையை கிள்ளுவது போல் கிள்ளி, ஆராவின் மீது வீசுவது போல் பாசாங்கு செய்தாள்.

தன் முகத்தை இரு கரத்தாலும் பிடித்துக் கொண்டு வலியால் துடிப்பது போல் நடித்தான். ஆரா தன் சட்டையின் பட்டன்களை மெதுவாக கழட்டினான். தன் அகன்ற மார்பைக் காட்டி, குத்திக் கொன்று விடும்படி சைகை செய்தான்.

விழிகள் என்னும் குத்தீட்டிக்கொண்டு அவனைத் தாக்கியவள், மேகம் மறைத்த நிலவாய் அவன் பார்வையில் இருந்து மறைந்தாள்.

கையோடு கொண்டு வந்த சலங்கையை எடுத்து தன் பாதங்களில் சிறை செய்தாள் தன் மன்னவனை சிறை செய்யும் நோக்கில்.

கண்களை மூடி நின்றவளின் கருவிழிக்குள் தன் மன்னவனின் முகம் நிழலாட, ஆத்ம ராகத்தை அவள் உதடுகள் இசைக்க, அதனை அவள் சலங்கைகள் மொழிபெயர்க்க ஒரு காதல் தவம் அங்கே அரங்கேறியது.

"காற்றோடு குழலின் நாதமே...

கண்ணன் வரும் நேரம், யமுனைக் கரை ஓரம்,
அவன் வரும் வழி பார்த்து, வழி பார்த்து
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது
காற்றோடு குழலின் நாதமே...

வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
கண்டாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண் மீன்கள் வானில் விளக்கேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்
தங்கச் சிலைக்கு அந்திக் கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில்
காற்றோடு குழலின் நாதமே....
கண்ணன் வரும் நேரம், யமுனைக் கரை ஓரம்,
அவன் வரும் வழி பார்த்து, வழி பார்த்து
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது

காற்றோடு குழலின் நாதமே..."

என்று பாடி முடித்து, ஆடி ஓய்ந்து, விழிகள் திறந்து பார்க்க, அவள் அழைத்த கண்ணன் மொட்டை மாடி கதவில் சாய்ந்து கைகளைக் கட்டிக் கொண்டு அவளை உறுத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

நெஞ்சில் முட்டி மோதி நின்ற காதலை இறக்கி வைக்க வழி தெரியாமல் திகைத்து நின்றவள், பொங்கி வந்த வெட்கத்தை உதடு கடித்து தனக்குள் அடக்க முயன்றாள். அவள் விழிகள் ஆராவின் விழிகளை காந்தம் போல் பற்றிக் கொண்டு, இமைக்க மறந்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தது.

அழுத்தமான காலடிகளுடன் அவள் அருகில் நெருங்கி வந்தவன், அவளை தன் மார்போடு அழுத்திக்கொண்டு, "அமுதா..." என்றழைத்தவளை தடுத்து நிறுத்தி, "ப்ளீஸ் மித்ரா! முதலில் நான் பேசி விடுகிறேன்" என்றான்.

அவன் அணைப்பில் பாந்தமாக அடங்கி நின்றவளின் அமைதியை சம்மதமாய் எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.

"அந்தப் பெண்களுக்கு உதவி செய்ததால் என்னை ஏற்றுக் கொள்கிறாயா? நன்றி உணர்ச்சியால் மட்டுமே உன் காதல் கிடைக்கும் என்றால் அது என் காதலுக்கு அவமானம் மித்ரா!" என்றான் உடல் இறுக.

அவன் அணைப்பிலிருந்து விலகி பின்னோக்கிச் சென்று சுவற்றில் சாய்ந்து நின்றவள், "புதைந்து போன என் கனவிற்கு உயிர் தந்த உங்களுக்காக என் உயிர் துடிக்கிறதே. நன்றி உணர்வா? நன்றியை உரைப்பது என்றால் இரு கரம் கூப்பி, உங்கள் கால்களில் விழுந்திருப்பேனே. உங்கள் இரு கரங்களுக்குள் என் உயிரை ஒப்புக்கொடுக்க நினைக்கும் இந்த உணர்விற்கு பெயர் காதல் அமுதா!" என்றாள்.

" நிச்சயமாக காதல் தானா? "

" அதில் என்ன சந்தேகம் அமுதா? உங்கள் மீதான என் காதல் உண்மை... உண்மை... உண்மை..." தவிப்புடன் தவித்தது அவள் குரல்.

" உன் காதலைக் காட்டு... " என்றான் இறுகிய முகத்துடன்.

தவித்தவள் நிமிர்ந்து நின்றாள். சற்றும் தயங்காது, அடிமேல் அடி எடுத்து வைத்து அவனை நெருங்கினாள். அவனுக்கான தன் தவிப்புகள் உண்மை. அந்த தவிப்பிற்கு காரணம் காதல் என்பதும் உண்மை.

'அவன் அருகில் தன் காதலின் உணர்வுப் பூட்டுக்கள் உடைக்கப்படுமா? இல்லை அவனின் உணர்வுகள் அடித்து நொறுக்கப்படுமா?' மனதில் எழும் இந்த வினாவிற்கு விடையை கண்டுபிடிப்பதே தீர்வு என்ற முடிவுடன் அவன் அருகில் வந்து நின்றாள்.

நடுங்கிய கைகளுடன் அவனை அணைத்தாள். அவளின் நடுக்கத்தில் ஆராவின் உடல் மேலும் விறைக்க ஆரம்பித்தது. பெரு விரல்களை நிலத்தில் ஊன்றி, அவன் முகம் நோக்கி நிமிர்ந்தாள்.

அதுவரை அமைதியாய் அழுத்தமாய் இருப்பது போல் காட்டிக்கொண்டிருந்த அவன் விழிகள் அலைப்புற ஆரம்பித்தது. அவன் விழிகளில் அவளுக்கான தவிப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

ஆராவின் இதழ்களை நெருங்க சங்கமித்ராவின் இதழ்கள் மறுப்பு தெரிவித்தது. ஒரு ஆணைப் பற்றி இருக்கிறோம் என்ற நினைவும் அவள் நினைவில் இல்லை.

'ஆராவை ஏமாற்றாதே சங்கமித்ரா! உன் உணர்வுகளை மீட்டெடுக்கும் சக்தி உன் காதலுக்கு உண்டு! ' அவள் மனம் அவளை, ஆராவின் காதலுக்குள் தள்ளத் துடித்தது.

பரிதவிக்கும் அவனின் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை. பதட்டத்துடன் நகங்களை கடிக்க ஆரம்பித்தாள். பெண் என்றால் பேயும் இறங்குமே. இயற்கை உதவாதா என்ன?

மினுமினுத்த அவளின் உதடுகளுக்கு இடையே பற்களால் கடிபட்டு நகங்கள் கீழே விழுந்து கொண்டிருக்க, பௌர்ணமி அலைகளால் வீறிட்டு எழுந்த கடற்காற்று வேகமாக வீச ஆரம்பித்தது. சங்கமித்ராவின் சேலை காற்றில் படபடவென பறந்து ஆராவின் முகத்தை மறைத்தது.

சேலையை விலக்குவதற்காக நீட்டியவனின் கைகள் எக்குத்தப்பாய் சங்கமித்ராவின் மீது உரச, உயிர் தீண்டலில் மேல் மூச்சு இழுத்தவளின் இடை சட்டென்று சிறுக்க, ஆராவின் கைகள் வசதியாய் குடி புகுந்தது அவளின் இடைப் பள்ளத்தாக்கில்.

வீசும் காற்றுக்கு படபடவென அவன் முகத்தில் சேலை பட்டுப்பட்டு விலக, தன்னை நிலை நிறுத்துவதற்காக அவளின் இடையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான்.

அவன் முகத்தில் படர்ந்த தன் சேலையை மெல்ல மெல்ல விலக்கினாள் சங்கமித்ரா. அவன் புருவம் வரும் வரை விலக்கிய கைகள், அவன் விழிகளைக் கண்டதும் அப்படியே நின்றது.

கேள்வி கேட்ட அவன் விழிகள் காதல் கேட்க, முகத்தில் பாதி மூடிய சேலையோடு, அவனை தன்னை நோக்கி இழுத்து, அவன் கண்களில் இதழ் பதித்தாள்.

முகம் மறைத்த சேலையை சற்று கீழ் இறக்க, அவன் நாசியோடு தன்நாசி சேர்த்து, உயிர் காற்றோடு கலந்தாடி, வெட்கப் புன்னகையோடு, சேலை மூடிய அவன் இதழோடு இதழைச் சேர்த்தாள்.

மீசை முட்கள் குத்திய குறுகுறுப்பில், சேலை மூடிய அவன் இதழ்கள் மீது தன் இதழ்களைத் தேய்த்தாள்.

தப்புத் தப்பாய் அவள் தரும் முத்தங்களை அதுவரை பொறுத்துக் கொண்ட அந்த காதல் தியாகி, தன் முகத்தை மூடிய மாய முகத்திரையை விலக்கினான்.

கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள, உணர்வுகளின் பூட்டுக்கள் எல்லாம் மொத்தமாய் தகர்ந்த நிலையில், தன் கைகள் கொண்டு அவன் கண்களை மறைத்து விட்டு, அவன் முத்தம் கொடுப்பதற்கு வாகாய் தன் இதழை ஏந்திக் கொடுத்தாள் சங்கமித்ரா.

தான் காண்பது கனவா? நினைவா? என்று புரியாமல் கையில் கிடைத்த சொர்க்கத்தை கொண்டாடித் தீர்த்தான் ஆராவமுதன்.

அவளை கைகளில் அள்ளிச் சென்று, தன் அறையின் பால்கனியில் உள்ள முல்லை பந்தலின் கீழ் படரவிட்டான். சத்தமிட்டு குலுங்கிய கால் சலங்கைகளை மெல்ல அவிழ்த்தான். சலங்கையின் சத்தங்களை அவனின் முத்தச் சத்தங்கள் ஈடு செய்தது. பயந்தவளோ கிறங்கினாள். மயங்கினாள். சினுங்கினாள் அமுத சங்கமத்தில். ஆராவோ, தன்னை சிறை எடுத்தவளிடம் ஆயுள் கைதியாய் சரண் புகுந்தான்.

இரண்டு வருடங்கள் கழித்து...

" டேய் சிவா விடாதடா, அவனைப் பிடி... மித்ரா நீயும் விடாதே! பிடி அவனை!" தேனம்மா தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்.

" பொண்டாட்டியை சுற்றிச் சுற்றி வரவேண்டிய வயதில், என் கிரகம் உன்னை சுற்றுகிறேனே! டேய் நில்லுடா!" என்று ஆராவை துரத்தினான் சிவா.

கையை கட்டிக்கொண்டு அவன் செய்யும் அக்கப்போர்களை முறைத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கமித்ரா.

ஆராவோ தன் ஒரு வயது மகள் மதுஸ்ரீயை கையில் சுமந்து கொண்டு அனைவருக்கும் போக்கு காட்டிக் கொண்டிருந்தான்.

குலதெய்வம் கோவிலில் மொட்டை அடித்து விட்டு, காது குத்துவதற்குத் தான் இந்தப் பாடு. மொட்டை போடுவதற்குள் முகம் முழுவதும் சிவந்து அழுத தன் மகளை, தன் கரத்தில் பொத்தி வைத்துக்கொண்டு, காது குத்த விடாமல் காப்பாற்றிக் கொண்டிருந்தான் அந்தப் பாசக்கார தந்தை.

" அடேய் சாமி குத்தமாகிவிடும் " சலித்துக் கொண்டார் தேனம்மா.

கடைசியாக சந்தனத்தில் ஒரு புள்ளியை மதுஸ்ரீயின் காதில் வைத்துவிட்டு, விழாவை சிறப்பாக முடித்து வைத்தான் ஆரா.

வீடு திரும்பியதும் தன் மகளை படுக்க வைத்து விட்டு, தூங்குவது போல் பாசாங்கு செய்யும் தன் மனைவியின் தோளைப் பற்றி திருப்பினான் ஆரா.

சங்கமித்ரா முறுக்கிக் கொள்ளவே, ஆராவும் அவளை தொந்தரவு செய்யாமல் இருந்தான்.

சினுங்கும் மெல்லிய கொலுசொலியில் திரும்பிப் பார்த்தாள். ஆரா தன் மகளின் பிஞ்சுக் காலை தன் நெஞ்சில் பதித்து தங்கக் கொலுசை அணிவித்து முத்தமிட்டான்.

தன் மனைவி தன்னை நோக்குவதை பார்வை வட்டத்திற்குள் அறிந்து கொண்டவன், ஒன்றும் அறியாதவனைப் போல் விளக்கை அணைத்துவிட்டு, கட்டிலில் படுத்துக்கொண்டான்.

மெல்ல அவனை நெருங்கி வந்தவள், அவன் முதுகில், "கோபமா?" என்று எழுத அவனோ கோபம் இல்லை என்று அவள் இதழில் எழுதினான். இருவரும் எழுதி எழுதி களைத்தபின், மித்ராவின் பாதங்களில் தங்க கொலுசை மாட்டி அழகு பார்த்தான். கொலுசு அணிவித்த தன் பாதங்களை அவன் முன் காட்டினாள்.

" நல்லா இருக்குடா மித்ராம்மா!" என்றான்.

அவளோ தங்க கொலுசின் முத்துக்கள் சிணுங்க மீண்டும் காலை அவன் முன் காட்டினாள்.

புன்னகையுடன் கொலுசின் சத்தத்தை தன் முத்தத்தால் அடக்கினான்.

'அது...' என்பது போல் மிதப்பாய் பார்த்தாள் சங்கமித்ரா.

" மித்ராம்மா சின்ன பிள்ளையோடு போட்டி போடுவதெல்லாம் நன்றாக இல்லை" என்று ஒரு விரல் நீட்டி மிரட்டினான்.

நீட்டிய அவன் விரல் கொண்டு, தன் காதில் இல்லாத அழுக்கை குடைந்து எடுத்தாள் மித்ரா.

சிரித்துக் கொண்டே தூங்கும் தன் மகளை மித்ராவின் காலுக்குள் வைத்து இருவரின் பாதங்களையும் தன் கரத்தில் தாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

அவனின் அலைபேசியை பறித்துக் கொண்டவள், புகைப்படங்களை வரிசையாகப் பார்வையிட்டாள். அலர்மேல் வள்ளியுடன் தான் எடுத்த புகைப்படம் வந்ததும் எப்பொழுதும் போல் அவள் கண்கள் ஆராவை காதலுடன் பார்த்தது.

"என்ன?" என்றான் அவளுக்கு சளைக்காத காதலுடன்.

" குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா... " என்றவளின் சின்னஞ்சிறு கண்கள் அவனை அழகாய் சிறை எடுத்தது.

***சுபம்***
 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
653
88
63
Coimbatore
அருமையான கதை. மித்ராவின் தாய் வீட்டாரை பற்றி ஒன்றும் தெரியவில்லையே.
 

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அமுத சங்கமம் இனிமையாய் 😍😍😍

நீங்கள் வர்ணித்த விதத்தில், வெட்கம் வந்துவிட்டது ஆத்தரே 😜😜😜

மதுஶ்ரீ என்னும் குட்டி தேவதையோடு குறையில்லா நிறைவான காதலோடான வாழ்க்கை 🥰🥰🥰, சங்கமித்ராவிற்காக இனி என்றும் ஆராவமுதன் இருப்பான் 😊😊😊

அடுத்த கதைக்களம் எப்போது ஆத்தரே 😊😊😊 காத்திருக்கின்றேன் அடுத்த பதிவிற்காய் ஆவலோடு 🥰🥰🥰
 

Kavi priya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2022
25
24
3
Madurai
வெகு அருமையான எழுத்து நடை. எழுத்தாளர் க்கு வாழ்த்துக்கள்.