• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 4

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 4

' தொடாமலேயே தூங்கச் செய் ' என்றவனின் சொற்கள் காதில் விழுந்த அடுத்த கணமே கண்கள் பளபளக்க, முகம் மலர அவனை ஆவலோடு பார்த்தாள்.

கடந்து சென்ற நொடி வரை முகம் இறுக நின்றவள், தான் கூறியதைக் கேட்டதும், சினம் கொண்டு பதில் வார்த்தை பேசுவாள் என்று காத்திருந்தவனின் எண்ணம் பொய்யானது.

ஆனந்தத்தை அள்ளிப் பூசியவளாய் தன் முன்னே நிற்பவளைக் கண்டு அவளை மேலும் மேலும் ஆராய அவன் மனம் விளைந்தது.

தன்னை ஆராய்ச்சி பார்வை பார்ப்பவனைக் கண்டு முகத்தை சாதாரணமாக மாற்றினாள் சங்கமித்ரா.

தலை நிமிர்ந்த நடையோடு அவன் எதிரே வந்து தரையில் சம்மனமிட்டு அமர்ந்தாள். பரபரத்த இரு கால்களின் விரல்களையும் இறுகத் தன் கையால் பற்றிக் கொண்டாள்.

படுக்கையில் படுத்திருந்த ஆராவமுதன், முதுகினில் தலையணையை அணைவாய் கொடுத்து, நிமிர்ந்து கால் நீட்டி அவளை ஆராய ஆரம்பித்தான். தன்னை ஆச்சரியப்படுத்தும் அவளின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்நோக்கி அவளையே உற்றுப் பார்த்து இருந்தான்.

ஆராவின் பார்வை கணைகள் தன்னைத் துளைப்பதைக் கண்டும் கவலை கொள்ளாமல், கண்ணை மூடி தனக்கென ஓர் உலகத்தை படைக்கத் தொடங்கினாள்.

தன் இரு கரங்களையும் தேய்த்து சூடேற்றிய தன் உள்ளங்கையை விரித்து பார்த்தாள். தெய்வத்தை பார்த்து மகிழும் பக்தை போல் பரவசத்துடன், இதழில் புன்னகை கீற்றாய் தவழ, கண்மூடிய அவளின் தலை ஒருபுறமாய் சரிந்தது.

கைகள் தொடையினில் தாளமிட ஆரம்பித்தது. அவளின் நாசிகள் புல்லாங்குழலாய் மாறி காற்றினை இசையாய் சுவாசிக்க தொடங்கியது.

ஏதோ ஓர் புரியாத ஆனந்தத்தில் ஆரா அருகினில் இருந்த தலையணையை எடுத்து மடியினில் வைத்து கட்டிக் கொண்டான் தன் மார்போடு.

பூமியை முட்டி மோதி திறக்கும் விதை போல் உள்ளிருந்து பிறந்த உயிர் நாதம் அவளின் செம்பவள இதழ்களை திறக்கச் செய்தது.

அறை நிறைந்த குறை ஒளியில், நிறைவாய் அவளின் இனிய குரல் பாட்டினை இசைக்க ஆரம்பித்தது.

"கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்

கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

காலை இளம்
காற்று பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே
ஓஓ ஓஓ எதிலும்
அவன் குரலே

கண்ணன் முக
தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம்
கொண்டேன்

கண் மயங்கி
ஏங்கி நின்றேன் கன்னி
சிலையாக நின்றேன்

என்ன நினைந்தேனோ
தன்னை மறந்தேனோ கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ கண்ணீர்
பெருகியதே

கங்கை கரை
தோட்டம் கன்னி பெண்கள்
கூட்டம் கண்ணன் நடுவினிலே
ஓஓ ஹோ ஓஓ கண்ணன்
நடுவினிலே

கண்ணன்
என்னை கண்டு
கொண்டான் கை
இரண்டில் அள்ளி
கொண்டான்

பொன்னழகு
மேனி என்றான் பூ
சரங்கள் சூடி தந்தான்

கண் திறந்து
பார்த்தேன் கண்ணன்
அங்கு இல்லை கண்ணீர்
பெருகியதே ஓ ஹோ
கண்ணீர் பெருகியதே

அன்று வந்த
கண்ணன் இன்று வர
வில்லை என்றோ
அவன் வருவான் ஓ
ஹோ என்றோ
அவன் வருவான்

கண்ணன்
முகம் கண்ட கண்கள்
மன்னர் முகம்
காண்பதில்லை

கண்ணனுக்கு
தந்த உள்ளம்
இன்னொருவர்
கொள்வதில்லை

கண்ணன் வரும்
நாளில் கன்னி இருப்பேனோ
காற்றில் மறைவேனோ
ஹோ காற்றில் மறைவேனோ..."

அவளின் குரல் அவனின் உயிர் வரை சென்று தித்திக்கச் செய்தது.

ஆனால் முகத்தில் உணர்வுகளை காட்டாமல் கவனமாக தவித்தான். அவனின் மனம் கொண்ட அலைப்புறுதலை அவன் கைகளிடையே நசுங்கிய தலையணையே பறைசாற்றியது.

சங்கமித்ராவோ எதனையும் கண்டு கொள்ளாது தெய்வத்திற்கு படைத்தது போன்ற மன நிறைவுடன் தரையினில் கைகளை தலைக்கு அணைவாய் கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

இம்மையைக் கடந்து மறுமைக்கு சென்றவனின் மனமோ குளிர்ந்து வேறு எதையும் நினைக்கத் தூண்டாமல், அவனை உறக்கத்தை தீண்டச் செய்தது.


விடிந்த காலைப் பொழுதில் துயில் கலைந்து எழுந்த ஆரா கண் விழித்ததும் இரவு நடந்த நிகழ்வுகள் ஒன்றொன்றாய் நினைவுக்கு வந்தன.

' சங்கமித்ரா என்ற புதிருக்கு விடை தான் என்ன?' அவன் மனம் அவனை உலுக்கி கேள்வி கேட்டது.

தலையை குலுக்கி, தன்னை சமன் செய்தவன், தன்னை விழுங்கப் பார்க்கும் அவளின் நினைவுகளை போர்வையோடு உதறித் தள்ளிவிட்டு குளியலறைக்குள் புகுந்தான்.

குளியல் அறைக்குள் புகுந்த சில நிமிடங்களில் குளியலறைக் கதவு பலமாய் பலமுறை தட்டப்பட்டது ஆவேசமாக. கதவு தட்டப்பட்ட வேகத்திலேயே அதனைத் தட்டியது யார்? என்று அறிந்தவன் புன்னகை முகமாய் குளியலறைக் கதவை படக்கென்று திறந்து, அந்த கையினை உள்ளே இழுத்துக் கொண்டான்.

' அடேய் கிராதகா! அரைகுறையாய் நின்று கொண்டு என்னையும் பாரு என் அழகையும் பாரு என்று நிற்கிறாயே வெட்கம் கெட்டவனே!' என்று கைகளால் தன் கண்களை மூடிக்கொண்டு கத்தினான் ஆராவின் நண்பன் சிவா.

" அடச்சீ கண்ணைத் திறந்து பாருடா! கதவை மட்டும் வேகமாக தட்டத் தெரியுது. என்ன அவசரமோ என்று திறந்து விட்டால் ரொம்பத்தான் பண்ற சிவா" என்ற ஆரா தன் தலையை நிதானமாக டவலால் துடைத்துக் கொண்டான்.

" உள்ள இருந்து சத்தம் கொடுத்தால் என்னடா? மொத்தமாக காட்டி விடுவாயோ என்று பயந்து விட்டேன். அப்புறம் முழுசா உன்ன பார்த்த என்னை நீ உன்னையே கல்யாணம் பண்ணிக்கணும்னு மிரட்டிடுவியோ என்று பயந்துவிட்டேன் " என்று உதட்டை பிதுக்கி இளித்தான் சிவா.

" அப்படின்னா உனக்கு முன்னாடி என்னை பார்த்தவர்களை எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்ன?" ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேட்டான்.

" விளையாட்டிற்கு சொன்னால், பக்கி அதையும் எப்படி விஷமமாய் பேசுது. விஷம் விஷம் உடம்பு முழுவதும் விஷம்" என்றவன் ஆராவின் தோள்களில் உரிமையாய் அடித்தான்.

"என்ன விஷயம்?" என்று ஆரா கேட்ட பிறகுதான், தான் உள்ளே அவசரமாக நுழைந்ததன் காரணமே புரிந்தது சிவாவிற்கு.


தன் எதிரே நின்ற ஆராவை இறுக்க கட்டிக்கொண்டு " எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா " என்றான் உள்ளம் ததும்பிய சந்தோஷத்தில்.

" டேய் ஏன்டா இப்படி வெறும் உடம்போட கட்டிக்கிற எனக்கு ஒரு மாதிரி இருக்குடா. நீ அவனாடா? " ஒற்றைப் புருவத்தை ஏற்றி, இதழ்களை கடித்துக் கொண்டே குறுகுறுவென கண்சிமிட்டிப் பார்த்தான் சிவாவை.


பதிலுக்கு சிவாவும் அவனைப் போலவே இதழ் கடித்து சிரித்து, உடம்பை நெளித்து "தெரியலடா" என்றான்.

ஆராவிற்கென பிரத்தியோகமாக செய்யப்பட்ட காபியை எடுத்துக்கொண்டு அவன் அறைக்குள் அடி எடுத்து வைத்த சங்கமித்ரா அனைத்து சம்பாசனைகளையும் கேட்டுவிட்டு நின்றாள் அதிர்வென்றி.

" ச் சீ போங்கள் என்னை அப்படி பார்க்காதீர்கள்" என்று அருகில் இருந்த நீரை எடுத்து ஆராவின் மீது தெளித்தான் சிவா.


இருவரும் சிரித்துக்கொண்டே தோள்களின் மீது கைகளை போட்டபடி குளியலறை கதவை திறக்க எதிரே நின்ற சங்கமித்ராவை பார்த்து முற்றிலும் அதிர்ந்தான் சிவா.

" வேலைக்காரர்கள் கதவைத் தட்டி விட்டு, உத்தரவு கேட்டு விட்டு தான் உள்ளே வரவேண்டும் என்று உனக்கு தெரியாதா? வெளியே போ... " தாங்கள் இருவரும் அன்னியோன்யமாய் நட்புடன் பேசி சிரித்த மகிழ்ந்ததை இவள் தவறாக எடுத்துக் கொள்வாளோ என்ற கோபத்தில் பொரிந்து தள்ளினான் சிவா.

மறுபேச்சு இன்றி அறைக் கதவை திறந்து வெளியேறினாள் சங்கமித்ரா.


எதையும் கருத்தில் கொள்ளாமல் காதில் நுழைந்த நீரை சுண்டு விரலால் குடைந்து வெளியேற்றிக் கொண்டிருந்தான் ஆரா.

" அப்புறம் எதுக்கு சந்தோஷம் என்று சொல்லவே இல்லை? " என்று சிவாவைப் பார்த்து கேட்டான் ஆரா.

" டேய் உனக்கு நிறைய முறை ஃபோனில் தொடர்பு கொள்ள முயற்சி பண்ணினேன். தொடர்பு கிடைக்காமல் உன் செக்ரட்டரியிடம் கேட்டேன். அது சாரோட பர்சனல் ட்ரிப் என்று கூறி முடித்து விட்டான் . சரி வீட்டிற்கு கூப்பிடலாம் என்று முடிவு செய்து தொடர்பு கொண்டால் உன் பாட்டி தான் போன் எடுத்தார்கள். உனக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற மிகப்பெரிய உண்மையை போட்டு உடைத்து விட்டார்கள்.


என்னை விட்டுவிட்டு நீ திருமணம் செய்து கொண்டாலும் நீ திருமணம் செய்து கொண்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்டா.

எனக்கு தெரியாமல் நீ திருமணம் செய்து கொண்டதற்கு உனக்கு தனி தண்டனை தருவேன். நிச்சயம் கும்பி பாகம் தான்.

சரி சரி, உன் சரிபாதியை உன் அன்பிற்கு உரியவளை, உன் இல்லத்தரசியை நான் பார்க்க வேண்டும் கூப்பிடா சீக்கிரம். சாரா... சாரா..." என்றான் சிவா ஆர்வமாக.

" நீ தொண்டை கிழிய கத்தினாலும் மும்பையில் இருக்கும் சாரா இங்கு வர மாட்டாள்" என்றான் சோபாவில் சத்தமாக அமர்ந்து கொண்டு.

"ஏன்டா?" என்றான் விளங்காத பார்வையோடு.

" சாரா இங்கே இருக்க வேண்டும் என்றால் சாராவை நான் கல்யாணம் செய்யவில்லையே..." என்றான் ஒரு காலின் மீது இன்னொரு காலை போட்டு ஆட்டிக்கொண்டே.

" அடேய் குழப்பத்துக்கு பொறந்தவனே! நான் தலையைப் பிடித்துக் கொண்டு பைத்தியம் ஆவதற்குள் உண்மையைச் சொல்லித் தொலைடா. உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? இல்லையா?" என்றான் கொலை வெறி தாக்குதல் நடத்தும் பார்வையோடு.

வசீகர புன்னகையுடன் அனைத்து திசையிலும் தலையை உருட்டி சிரித்தான் ஆரா.

"ஆரா..." என்றான் சிவா அழுத்தமாக.

இனியும் தன் நண்பன் பொறுமை காக்க மாட்டான் என்பதை உணர்ந்த ஆரா கண்ணை சிமிட்டி 'ஆமாம்' என்பது போல் சமிக்கை செய்தான்.

"சாரா இல்லையா ஆரா? " என்றான் சிவா கேள்வியாக.


சிரித்துக் கொண்டே ஆம் என்பது போல் தலையசைத்தான்.

"உன் மனைவியை கூப்பிடு ஆரா. நான் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்" என்றான் ஆர்வமாக.

" கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே போ என்று கூறிவிட்டு இப்பொழுது அவளை பார்க்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறாயே!" என்று நக்கல் பார்வை பார்த்தான்.

"வாட்.....?" என்று அதிர்ந்து நின்றான் சிவா.

"டேய்..." என்று ஆரா அமர்ந்த இடத்திலேயே சொடுக்கிட்டு அவனின் அதிர்ச்சியை போக்கினான்.

" அந்தப் பெண்ணா? உன் மனைவியா?" என்று ஆராவை கூர் பார்வை பார்த்துக் கொண்டே முன்னேறி அவன் முன் நின்றான் சிவா.

" என் தேனம்மாவின் விருப்பம். அவ்வளவுதான். ரைட்... " என்றான் ஆரா.

அவனின் 'ரைட்' க்கான முழு அர்த்தத்தையும் உணர்ந்த சிவா அத்துடன் தன் அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டான்.

" உன் மனைவியை கூப்பிடுடா நான் அவமரியாதை செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் " என்றான் சற்றே வருத்தம் தேய்ந்த குரலில்.

" நீ என்ன தவறு செய்தாய் மன்னிப்பு கேட்பதற்கு. அவளுடைய தகுதியும் இடமும் அதுதானே " என்றான் அலட்சியமாக.

" ஆயிரம் இருந்தாலும் அவள் உன் மனைவி ஆரா... "

" காசுக்காக வந்தவள் எல்லாம் மனைவி என்று ஆகிவிடாது சிவா. அவளுடைய தகுதி அவளுக்கே தெரியும். என் தேனம்மாவை பொருத்தவரை இது உண்மை கல்யாணம். என்னைப் பொருத்தவரை இது ஒரு பொம்மை கல்யாணம். இருந்தாலும்..."

" இருந்தாலும் என்னடா அவளை உனக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டதா? " என்றான் சிவா ஆர்வமாக.

"ஆர்வமா? ஆர்வம் தான் சிவா"

" அடி சக்கை.... "

" அவளின் திமிரை அடக்க வேண்டும் என்ற ஆர்வம். அவளின் திமிருக்கு பின்னே இருக்கும் மர்மத்தை அறிய ஆர்வம். அவளை என் காலடியில் அடக்கி ஆள ஆர்வம்." என்றான் ஏதோ ஒரு வெறியில் கண்கள் பளபளக்க.

நெஞ்சில் குளிர்வாள் பாய்ச்சுவது போல் திடுக்கிட்ட சிவா, ஆராவின் எண்ணப் போக்கை மாற்ற, " சரி சரி. மிஸ்டர் ஆராவமுதன் தான் தவறாக இருந்தாலும், எதிரில் இருப்பவர்கள் சரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதுதானே சட்டம்.

அந்தப் பெண்ணைப் பற்றிய பேச்சை விடு.
மும்பையில் இருந்து அடித்து பிடித்து ஓடி வருகிறேன். ஒரு வாய் சோறு போட மாட்டாயா நண்பா? " என்றான்.

இருவரும் கிளம்பி கீழே உணவு அருந்த உணவு மேசைக்கு வந்தனர். வேலையாட்கள் பரிமாற முன்வர, அவர்களை ஐவிரல் நீட்டி தடுத்தவன், சங்கமித்ராவை பார்த்து பார்வையால் உணவைப் பரிமாற அழைத்தான்.

அருகில் வந்தவளைப் பார்த்து ஆரா அறியாமல் கண்களை சுருக்கி மன்னிப்பை யாசித்தான் சிவா.

வரவழைத்த புன்னகையுடன் அவனைக் கடந்து வந்தவள், இருவருக்கும் சாப்பாட்டுத் தட்டில் இட்லியை வைத்து சுடச்சுட இருக்கும் சாம்பாரை ஊற்ற வரும்போது, வேண்டுமென்றே அவளின் கையை தட்டி விட சங்கமித்ராவின் சற்று வீங்கி இருந்த வலக்கையில் சூடான சாம்பார் பட்டதும் கையில் இருந்து ஆவி கிளம்பி மேலே வந்தது.

" ஐயோ சிஸ்டர்" என்று கத்த ஆரம்பித்த சிவா ஆராவின் முறைப்பில் அமைதியாகினான்.

" சாப்பாட்டை கூட ஒழுங்காக பரிமாறத் தெரியாதா? " சூடான சாம்பாருக்கும் மேலாக சுட்டான் ஆரா.

இருவரும் அவளின் முகத்தை உற்றுப் பார்க்க அதில் வலியின் சாயலோ தடமோ தெரியவில்லை.

'விஷயம் பெரிது, தான் அவளிடம் மன்னிப்பை யாசித்ததற்காகவே இந்த தண்டனை என்பதை புரிந்து கொண்ட சிவா அமைதியாக உண்ண ஆரம்பித்தான்.

அவ்விடம் வந்த தேனம்மா, "சிவா கழுதை. என்னிடம் போனில் பேசும் போது கூட ஒரு வார்த்தை வருகிறேன் என்று கூறவில்லையே. என் பேரன் மனைவி சங்கமித்ராவை பார்த்தாயா? என்னுடைய தேர்வு எப்படி? " என்றார் பெருமையாக.

சிவா குனிந்த தலை நிமிராமல் "ம் " என்றான் சத்தத்தை மட்டும் எழுப்பி.

தன்னைப் புரிந்து கொண்ட நண்பனின் செயலை கர்வமாக பார்த்தான் ஆரா.


உணவு மேஜைக்கு அருகில் வரும்போதுதான் மேஜை மீது கொட்டி இருந்த சாம்பாரையும், சங்கமித்ராவையும் கவனித்த தேனம்மா, "மித்ரா தெரியாமல் சாம்பாரை கொட்டிக் கொண்டாயா? உடனே கையை கழுவு இல்லையென்றால் கொப்பளித்து விடும் என்றார் " உண்மையான பாசத்துடன்.

சிறு தலையசைப்புடன் சமையலறைக்குள் சென்றவள், கண்களை உருட்டி உப்பு இருக்கும் இடத்தை கண்டு கொண்டாள்.

கை நிறைய உப்பை அள்ளி சூடு பட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க எரிமலை போல் தகதகத்தது சங்கமித்ராவின் கைகள். இருந்தும் சிறு முக மாறுதலையும் அவள் பிரதிபலிக்கவில்லை. அது வாழ்க்கை அவளுக்கு கற்றுக் கொடுத்தது. அவள் கற்றுக்கொண்டதும் கூட.

உடல் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டவளின் மன எரிச்சலை எரிய வைக்க அடுத்த கட்டத்திற்கு தயாரானான் ஆரா.

" தேனம்மா நான் மும்பை கிளம்ப வேண்டும்" என்றான் ஆரா.

" சரிப்பா இந்த பாட்டி பேச்சைக் கேட்டு இவ்வளவு தூரம் நீ மனம் இறங்கி வந்ததே எனக்கு போதும். நீ மறுபடியும் இங்கே வருவதற்குள் சங்கமித்ராவிற்கு இங்கு உள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்து முற்றிலுமாக மாற்றி இருப்பேன்" என்றார்.

"எப்படி எனக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் செய்யச் சொன்னீர்களே! இதைப் போலவா?" என்று இன்றும் முழு அலங்காரத்துடன் இருந்த முருகன் சிலையை கை நீட்டிக் காட்டினான்.

"அது...." என்று பதில் தெரியாமல் இழுத்தார் தேனம்மா.

"நான் மும்பை கிளம்பும்போது என்னுடன் அவளும் வருவாள் ரைட்" என்றான்.

"அவளுக்கு அது புது இடம். அவளுக்கு எதுவும் தெரியாது இல்லையா ஆரா. அதனால் கொஞ்ச நாள் மட்டும் இங்கு இருக்கட்டுமே" என்றார்.

"டிக்கெட்டை கன்ஃபார்ம் பண்ணு சிவா" என்று தன் பேச்சை முடித்துக் கொண்டான்.

சமையலறையில் இருந்து வெளிவந்த சங்கமித்ராவின் காதில், மும்பை என்ற பெயர் கேட்டதும் அவளின் இதழ்கள் ஏளனமாய் கீழ்நோக்கி வளைந்தது.

சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
அது எப்படி ஆத்தரே, எல்லா ஆண்டி ஹீரோவுக்கும் இப்படியொரு பாவப்பட்ட நண்பன் 🤭🤭🤭

மித்ராவின் இந்த நிமிர்வு பிறப்பால் உண்டானதோ 🤔🤔🤔, புரியாரா புதிராக இருக்கின்றாளே 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

மும்பை என்ற சொல்லின், ஏளனத்திற்கான காரணம் என்னவோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️, அப்படியும் இருக்குமோ 😃😃😃
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
அது எப்படி ஆத்தரே, எல்லா ஆண்டி ஹீரோவுக்கும் இப்படியொரு பாவப்பட்ட நண்பன் 🤭🤭🤭

மித்ராவின் இந்த நிமிர்வு பிறப்பால் உண்டானதோ 🤔🤔🤔, புரியாரா புதிராக இருக்கின்றாளே 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️

மும்பை என்ற சொல்லின், ஏளனத்திற்கான காரணம் என்னவோ 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️, அப்படியும் இருக்குமோ 😃😃😃
அவன் எடுத்த ஆயுதம் அவனையே தாக்கும் என்ற ஏளனம் தான் 😍