• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறை - 9

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...

சிறை - 9

ஆராவின் எண்ணங்கள் சங்கமித்ரா என்னும் ஒரு வட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றி வந்தது.

'அவளுக்கு வெற்றி என்றால், எனக்குத் தோல்வியா?' என்ற கேள்வி அவனை சுழற்றி அடிக்க, அவன் மனமோ, 'ஆமாம், ஆமாம் அப்படித்தான்...' என்று கூப்பாடு போட்டது.

'முடியாது... அவள் தோற்க வேண்டும். ஆமாம் கண்டிப்பாக தோற்க வேண்டும். எப்படி? அவள் உள்ளம் கொண்ட உறுதியில் உயிரைக் கூட பலியிட துணிந்தாளே!' என்று உள்ளம் கேள்வி எழுப்ப, உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் அவன் கர்வம், 'அவளது பலத்தை தகர்த்தெறிந்து, பலவீனத்தை பரிசளிக்க வேண்டும்' என்று சிரித்தது.

'அவளது பலம்...?' என்று விடாமல் மனம் கேள்வி எழுப்பியது.

அதற்கு ஆராவின் கர்வப் புன்னகை சுமந்த இதழ்கள், "மிஸஸ்ஆராவமுதன்" என்று சுருங்கி விரிந்தது.

'ஓ... சங்கமித்ரா மிஸஸ்ஆராவமுதனாய் இருப்பதற்கு ஒரு தகுதியும் இல்லை என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கும் போது அவள் பலம், பலவீனமாகத் தானே முடியும்' என்று அவனது மனம் அவனது கர்வத்திற்கு, 'சபாஷ்' போட்டது.

வீட்டிற்குள் அவளை அடைத்து வைத்து, அடிமையாய் மாற்றி அடக்கி ஆளலாம் என்று அவன் நினைக்க, அடி மேல் அடி எடுத்து வைத்து அவள் ஆளுமையை நிரூபிக்க, அவன் தன் எல்லைக்கோட்டை விரிவுபடுத்த விரும்பினான்.

கண்களை மூடியபடி ஆரா தனது வலது புருவத்திலிருந்து, இடது புருவத்திற்கு விரல்களில் சொடுக்கிட்டான். மீண்டும் மீண்டும் அந்த செய்கையை அவன் தொடர, மின்னல் கீற்றாய் யோசனை தெறித்தெடுக்க, இமைக்கதவுகள் திறந்தது அவனுடைய பளபளக்கும் விழியுடன்.

"டேய்..." என்று சிவா அவன் முக பாவத்தைக் கண்டு கத்த, தன்னிடக்கையை திருப்பி மணியை பார்த்துக் கொண்டே, "இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? சீக்கிரம் முடிச்சுட்டு, இழுத்துட்டு வா" என்று சிடுசிடுத்தான்.

" தூக்கத்தில் இருக்கும் ஒரு மனுஷனை எழுப்பி, ஹாஸ்பிடல் போ என்கிறாய். இப்போ இழுத்துட்டு வா என்கிறாய். இதுவரை என்ன நடந்தது என்று நீ சொல்லவில்லை. இனிமேல் என்ன நடக்கும் என்று புரியவில்லை.

உன் இஷ்டப்படி என்னை ஆட்டி வைக்கிறாயே நான் என்ன உன் பொண்டாட்டியா? " என்று எகிறினான்.

ஆராவின் யோசனைகள் வேறு எங்கோ இருக்க தோள்களை இலகுவாக குலுக்கினான்.

இவர்களின் சம்பாஷனைகளைக் கேட்டு விட்டு அவர்களை கடந்த ஒரு பெண், " என்ன ஆபரேஷன் கேசா? பார்க்க நல்லாத்தான இருக்க... " என்று சிவாவை ஒரு மார்க்கமாய் பார்த்துவிட்டு கடந்தார்.

தன் எதிரே அழுத்தமாக நிற்பவனைமுறைத்த சிவா, " அடேய்! அர்னால்டு மாதிரி நிக்கிறவனை, ஆபரேஷன் கேஸா? அப்படின்னு ஒரு ஆன்ட்டி நக்கல் செய்யுது. நீ என்னடானா, ஆஞ்சநேயர் மலையை தூக்கி வச்சிட்டு நிக்கிற மாதிரிமூஞ்ச தூக்கி வச்சிட்டு நிக்கிற" என்றான் கோபத்துடன்.

ஆரா எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தன் மனதிற்குள் ஒன்று, இரண்டு, மூன்று என்று திட்டங்களை அடுக்கத் தொடங்கினான்.

அப்போது செவிலியர் வெளியே வந்து, "டாக்டர் உங்களை கூப்பிடுகிறார்" என்றார்.
இருவரும் உள்ளே நுழைந்தனர். "ஹலோ ஐ அம் டாக்டர் சஞ்சய்" என்று டாக்டர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"ஆரா... ஆராவமுதன்" என்றான்.

"சீ ஆரா. என்னுடைய இத்தனை வருட அனுபவத்தில், இப்படி ஒரு பெண்ணை நான் பார்த்ததே இல்லை" என்று ஆராவின் முகத்தை கேள்வியாக நோக்கினார்.

பதில் ஏதும் உரைக்காமல் அவர் முகத்தையே உற்று நோக்கினான் ஆரா.

"இல்லை. வலியில் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. கிட்டத்தட்ட உடலின் திரவ நிலை வற்றி, ரத்த அணுக்கள் உறை நிலைக்கு செல்லும் நிலை வந்தும், நினைவு பிறழாமல் தெளிவாகப் பேசும் உங்கள் மனைவியைக் கண்டு நான் வியக்கிறேன்" என்றார்.

' அதனால் எனக்கென்ன?' என்பது போல் அசால்டாக கதை கேட்க அமர்ந்திருந்தான்.

"அவர்களின் மன உறுதி, அவர்களுடைய மன அழுத்தத்தை காட்டுகிறது. அழுத்தம் இன்னும் அதிகமானால் விளைவு விபரீதமாகும். அதனால் நீங்கள் அவர்களை கவுன்சிலிங் அழைத்துச் செல்ல வேண்டும் " என்றார் வேண்டுகோளாய்.

" டாக்டர் நாங்கள் அவளை பார்க்கலாமா? " என்றான் அவரின் அறிவுரைகளை புறந்தள்ளி.

"ஓ... நீங்கள் அவர்களை கூட்டிச் செல்லலாம். ஆனால் நான் கூறியதை சற்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் " என்றார் தன்மையாக.

கட்டிலில் ட்ரிப் ஏறி முடிந்து இருக்க, இடது கையில் கட்டுடன் தலையணையில் சாய்வாக படுத்திருந்தாள் சங்கமித்ரா.

ஆரா சிவாவை பார்த்து கண்ணசைக்க, ஒரு பெருமூச்சுடன், "நாம் கிளம்பலாம்" என்றான் சிவா.


இமை திறந்தவள், கட்டிலிலிருந்து எழ முயல, சற்று பலவீனமாய் உணர்ந்தவள், மரத்துப்போன வலக்கையை மீண்டும் மீண்டும் ஊன்றி எழ பார்த்தாள்.

அவளின் இயலாமையில் கரம் கொடுக்க சிவா முன் வந்தான்.
"சிவா.." என்ற ஆராவின் குரலில் அப்படியே நின்றான்.

"மிஸஸ்ஆராவமுதன் என்றும் யார் கையையும் எதிர்பார்க்க மாட்டார் " என்றான் அர்த்தம் பொதிந்த பார்வையுடன் ஆரா.

உடல் தராத தெம்பை ஆராவின் வார்த்தை தர, நிமிர்ந்து எழுந்து நின்றாள். சட்டென்று தலை கிறு கிறுக்க, அவள் கீழே விழப்போகும் அந்த நொடியை ஆராவின் விழிகள் ரசனையுடன் எதிர் நோக்கியது.

காப்பாற்ற நீண்ட சிவாவின் கரங்களை, ஆராவின் உறுத்தும் விழிகள் தடுத்து நிறுத்தியது.

'ஐ அம்மா ராட்டணம். சுத்துது சுத்துது' என்று குதூகலித்த ஒரு மழலையின்குரல் காதில் ஒலிக்க, அடக்கி இருந்த அவள் மூச்சு பெருமூச்சாய் வாங்க, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஆக்சிஜன் அவசரமாய் நிரப்பப்பட, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவள், அவர்களைத் தாண்டி எட்டெடுத்து வைத்தாள்.

அவளின் நொடி நேர சமாளிப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை ஆராவால். 'சங்கமித்ரா' என்ற மர்ம நாவலின் தலைப்பு மட்டுமே தெரிந்திருக்க, அவளின் வாழ்க்கை பக்கங்களை புரட்டிப் பார்க்கும் ஆர்வம் வந்தது அவனுக்கு.

சிவாவை அனுப்பிவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்தனர் இருவரும். அறைக்குள் நுழைந்த சங்கமித்ராவிற்கு, உட்செலுத்தப்பட்ட மருந்தின் வீரியத்தில் தூக்கம் துரத்தினாலும், காதில் கேட்ட மழலையின் குரலில், வெறுமை சுமந்த அவள் கண்களில், தூக்கத்திற்குப் பதிலாக ஏக்கம் படர ஆரம்பித்தது.

கண்களைச் சிமிட்டி ஏக்கத்தை விரட்டப் பார்த்தாள். நிலை கொள்ளாப் பட்டாம்பூச்சியாய் அவள் இமைகள் சிறகடித்து திறக்க, அவள் முன் ஆரா இரவு உடையுடன் நின்றிருந்தான்.


"வெல்கம் டு மை லைப் " என்றவனை நம்பாத பாவனையுடன் பார்த்தாள்.

"என்ன மிஸஸ் ஆராவமுதன், நடப்பதை நம்ப முடியவில்லையா?" என்றான்.

அசையாத அந்தக் கூர்விழிகள் தன்னை துளையிடுவதை உணர்ந்தவன், " என் கையால் உணவு வாங்குவதற்கு உயிரை இழக்கத் துணிந்தவள், என் கையால் தாலி வாங்குவதற்கு... " என்று நிதானமாக நிறுத்தினான்.

சங்கமித்ராவின் விழிகள் , அவனது சுடும் வார்த்தைகளுக்கு பதில் தாக்குதல் நடத்த தயாரானது.

"ம்... தாலி வாங்குவதற்கு எதையெல்லாம் இழக்கத் துணிந்தாயோ! பாவம்" என்று உச்சுக் கொட்டினான்.

'நான் எதை இழந்தேன்?' என்றவள் யோசிக்க, தான் இழந்தது அவள் விழிகளில் நகர்வலம் வந்தது. முடிந்தது என நினைத்தது முழுவதுமாய் அவளை சுழற்றி அடித்தது.

" ஓ மேடத்திற்கு ஞாபகம் வந்துவிட்டது போலும். சரி விடு அது பழைய கதை. வா புதிய கதையாய் நம் வாழ்வைத் தொடங்குவோம்" என்று கூறிவிட்டு தன் வலக்கையை நீட்டினான் அவள் முன்பு.

சோர்வாய் சிரித்தாள் சங்கமித்ரா. "இங்கே தொடங்குவதற்கு பெயர் வாழ்க்கை அல்ல" என்று கட்டிலை நோக்கி கண் காட்டினாள்.

" இரவில் என் கையால் தாலி கட்டிக் கொள்ள பிடிக்கிறது. ஆனால் இரவில் என்னை கட்டிக் கொள்ள பிடிக்கவில்லையோ? உங்கள் லாஜிக்கே சரியில்லையே மிஸஸ் ஆராவமுதன் " என்று ஒரு மார்க்கமாய் சிரித்தான்.

" தாலி கட்டிக் கொள்ளத்தான் கணவன் தேவை. ஆனால் இதற்கு நீங்கள் என் கணவனாக இருக்க வேண்டும் என்று இல்லை. வாடிக்கையாளராக இருந்தாலே போதும்" என்றாள் அவன் கண்களை பார்த்தபடி.

அவன் மிஸஸ் ஆராவமுதனை குறி வைக்க, அவளோ மிஸ்டர் ஆராவமுதனை அடுத்து பேச விடாமல் தூள் தூளாக்கினாள்.


மனதில் பொங்கிய கோபப் பேரலையை, கைமுஷ்டியை மடக்கி அடக்கினான்.

"வார்த்தையை என்னிடம் கவனமாக பார்த்து பேச வேண்டும். வேடிக்கை பேச்சு வேண்டாம்" என்று எச்சரிக்கை விடுத்தவனை சலனம் இல்லாமல் பார்த்தாள்.

அவள் அருகே நெருங்கி வந்தவன், அந்தக் குவளை மலர் நிறத்தழகியின் விழி அருகே தன் சுட்டு விரலை கொண்டு சென்றான்.

சாராவின் புருவங்கள் செயற்கையாக வெட்டப்பட்டு, மை தீட்டி அடர்த்தியாக இருப்பது போல் காட்சி அளிக்கும். வீடுகளில் வெட்டி வளர்க்கும் குரோட்டன்ஸ் செடி போல்.

ஆனால் சங்கமித்ராவின் புருவங்களோ காட்டுக் கொடி போல் வளைந்து, நெளிந்து இயற்கையில் மிளிர்ந்தது.

ஆராவின் மனம் அவனையும் அறியாமல் சாராவை சங்கமித்ராவோடு ஒப்பீடு செய்து, சாரவை கீழ் இறக்கப் பார்த்தது.

தன்விரலை அவள் அருகில் கொண்டு செல்லச் செல்ல, வில் நிகர்த்த புருவங்களின் வளைவிற்கேற்ப அவன் விரலும் வளையத் தொடங்கியது.

புருவத்தின் இறக்கத்தில் இருந்த தன் விரலை, அந்தப் புருவக் காட்டில் புதைத்து எதிர்ப்புறமாய் நகர்த்தினான்.

அப்பொழுது புருவ முடிக்கற்றைகளுக்குள் ஒளிந்திருந்த ஒற்றை கரும் மச்சம் அவனைப் பார்த்து கண் சிமிட்டியது.

தன் தொடுகைக்கு நெளிந்து குழைவாள், குறைந்தபட்சம் கண்மூடி ரசிப்பாள் என்றவன் நினைக்க, சங்கமித்ராவோ, வெறித்த விழிகளுடன் எந்த உணர்வுமின்றி அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


'தன் பார்வைக்கே மயங்கும் சாரா எங்கே? தன் தீண்டலில் கல்லாக அமர்ந்திருக்கும் இவள் எங்கே?' அவன் மனம் கேள்வி எழுப்ப, அவனது தன்மானம் சீண்டி விடப்பட்டது.

' நிச்சயம் ஒரு நாள், என் தீண்டலில் நீ கரைந்து உருகத்தான் போகிறாய்' நொடி நேர சபதம் எடுத்தது அவன் கர்வம்.

ஆனால் அந்தோ பரிதாபம்! மச்சத்தை தீண்டிய அவன் விரலோ குறுகுறுக்க ஆரம்பித்தது.

மேகத்திற்குள் பாய்ந்த மின்னல் போல், அவன் தேகத்திற்குள் வெம்மை பரவியது. உணர்வை கடத்த விரும்பியவனின் உணர்வுகள் கட்டவிழ ஆரம்பித்தது. குறுகுறுத்த தன் கையை பேன்ட் பாக்கெட்டுக்குள் விட்டுக்கொண்டு, அவள் கண்களையே பார்த்து, "இதோ தெரிகிறதே.." என்றான் தன் கண்களை கூர்மையாக்கி.

'என்ன?' என்பது போல் அவள் புருவங்கள் இடுங்கியது.

"ஹான்... திமிர்... திமிர்... அது மிஸஸ் ஆராவமுதனிடம் இருக்க வேண்டிய குணம் தான். ஆனால் அது அடுத்தவர்களிடம் காட்ட வேண்டியது. என்னிடம் அது இருக்கும் இடம் தெரியக்கூடாது. ரைட் " என்றான் அழுத்தமான குரலில்.

" அப்பாடி ஒரு வேலை இலகுவாக முடிந்தது" என்று நிம்மதியாக கண்மூடி அயர்ந்தாள்.

அவளது பதிலில் அவன் மூளை தாறுமாறாக யோசித்தும், விளக்கத்தை புரிந்து கொள்ள முடியாமல், "என்ன வேலை?" என்றான் குரலை செருமிக் கொண்டு.

கண்மூடியபடியே இதழ் கடையோரம் சிரித்தவள், உடல் அசதியில் மெதுவாக பேச, அது ஆரா காதில் சரியாக விழவில்லை.

"என்ன?" என்றான் அவள் உதட்டசைவை கண்காணித்தபடி.


"அதான், நான் மிஸஸ் ஆராவமுதன் என்று உங்கள் வாயாலேயே ஒத்துக்கொள்ள வைப்பது. அதுவும் மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் திருவாயால் சொல்லும் போது என் மனம் பூரிக்கிறது " என்றாள் மென்குரலில்.

கன்னிவெடியில் கால் வைத்தது போல், பெண்ணவள் தந்த பதிலடியில் பேச்சிழந்து நின்றான் ஆரா.

சங்கமித்ராவை பலவீனமாக்க ஆரா நினைக்க, அவளோ அவனது பலத்தையும் உள்வாங்கிக் கொண்டு விஸ்வரூபம் எடுத்தாள்.

' அவளுக்கு அங்கீகாரம் தராமல் அசிங்கப்படுத்துவதை விட, அங்கீகாரம் தந்து அசிங்கப்படுத்துவதே சாலச் சிறந்தது' என்ற முடிவுக்கு வந்தான் ஆரா.

' ஆனால் அவள் அந்த அங்கீகாரத்தையே தன் வெற்றியாக கொண்டாடுகிறாளே!' அவன் மனம் வினா எழுப்பியது.

' பரமபதத்தில் தாயம் விழும் வரை காத்திருக்கத்தானே வேண்டும்' என்று தன்னையும், தன் மனதையும் சமாதானப்படுத்திக் கொண்டு, தன் அறையில் வந்து கட்டிலில் விழுந்தான் ஆரா.

ஏதோ யோசனையுடன் தன் நெற்றியை தேய்க்க, அவள் புருவம் தீண்டிய விரலைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான்.

" நான் தீண்டினால், நீ என்னை தூண்டுவாயா? ம்ஹும். என்னைக் கவர்ந்திழுக்க உன்னிடம் அப்படி என்ன இருக்கிறது? சொல்லுடி! இனியும் தீண்டுவேன். என் எல்லை தாண்டுவேன். கணவனாய் ஏற்றுக் கொள்வதும்,வாடிக்கையாளராய் ஏற்றுக் கொள்வதும் உன் இஷ்டம்.

ஆனால் என்னை பொறுத்தவரை என்றுமே நீ என் மனைவி கிடையாது. மனைவி கிடையாது" என்று கூறிக் கொண்டே பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி, அதை உண்மையாய் மாற்றி தன் மனதில் பதிய வைக்க தொடங்கினான்.

விதி எழுதிய எழுத்தை மானிடன் மாற்ற இயலாது என்று யார் அவனிடம் உரைப்பது?

விடியல் பொழுதில், நல்ல உறக்கத்தில் இருந்தவனின் காதில், அலைபேசி இசைக்க, தொடுதிரையில் 'ஹனி காலிங்' என்று ஒளிர, அழைப்பை ஏற்று காதில் வைத்தான் ஆரா.

அழைப்பை ஏற்ற உடன், "ஆரா. சங்கமித்ரா சாப்பிட்டு விட்டாளா?" என்றார் தேனம்மா.

அவன் குரல் பதில் பேசாமல் மௌனம் சாதித்தது. எழுந்தவுடன் அவள் பெயரை கேட்பது எரிச்சலாக இருந்தது அவனுக்கு.

அவன் பதிலளிக்காமல் இருந்ததும், தேனம்மாவிற்கு சற்று நெருடலாக பட, " ஆரா! மனைவி என்பவள்இன்னொரு தாய் போல், உன் தாய்க்கு உணவளிக்காமல் இருப்பாயா?" என்றார் தன்மையாக.


அவளை தன் தாயுடன் ஒப்பிட்டுக் கூறியது ஏனோ புதிதாக இருந்தது அவனுக்கு. அதை கூறுவது அவனை வளர்த்த தாய் என்பதால் மறுக்க இயலாமல், அவன் நினைவடுக்குகளில் இருந்த தன் தாய் முகத்தை தேடும் போது, சங்கமித்ராவின் முகமும் மின்னி மறைந்தது.

தன் தலையை உலுக்கி கொண்டவன், இதற்கு மேலும் பேசாமல் இருந்தால் தன் பாட்டி மீண்டும் தன்னை குழப்பக் கூடும் என்பதை உணர்ந்து, " அவள் சாப்பிட்டு விட்டாள். ஆம் உணவையும், எனக்கே எனக்கான உங்கள் பாசத்தையும் " என்று கூறிவிட்டு மறுபேச்சின்றி அலைபேசியை வைத்து விட்டான்.

கோபமோ, துக்கமோ, சந்தோஷமோ தன்னுணர்வுகளை எல்லாம் நொடிப்பொழுது வெளியேற்றும் தன் பேரன், இன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதைக் கண்டு புன்னகையுடன் முகம் மலர்ந்தார்.

அலுவலகத்திற்கு கிளம்பி, காலை உணவிற்காக, உணவு மேசையின் முன் வந்து அமர்ந்தான்.

நாயகி அவனுக்கு உணவு பரிமாற ஆரம்பித்ததும், உணவை வாயருகே கொண்டு சென்றவனின் கைகள் அப்படியே நிற்க, கண்களை சங்கமித்ராவின் அறைப்பக்கம் திருப்பினான்.

' உன் தாயை பட்டினி போடுவாயா?' என்ற தேனம்மாவின் குரல் காதுகளில் ஒலிக்க, ஒருவித ஒவ்வாமையுடன், " அவளை வரச்சொல்!" என்றான் நாயகியிடம்.


நாயகிக்கும் சங்கமித்ராவை பார்க்க வேண்டும் என்று மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. கைகளில் ரத்தம் கொட்ட இரவு அவளை பார்த்த கோலம், நாயகியின் உறக்கத்தை பறித்திருந்தது.

'மேல் தட்டு விவகாரம் நம்மால் தலையிட முடியாது' என்று மனதை அடக்கிக் கொண்டிருந்தவள், ஆரா கூறியதும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய் சங்கமித்ராவின் அறைக்கதவின் முன் நின்று, "மேடம்..." என்று மெதுவாக கதவைத் தட்டி அழைத்தாள்.


சில நிமிடங்களில் கதவைத் திறந்த சங்கமித்ராவை பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தில் மிதந்தது. முகத்தில் சோர்வின்றி இடது கையில் கட்டுடன் கதவைத் திறந்தாள்.

'இரும்பு மனுசி' என்று மனதிற்குள் அவளுக்கு பட்டம் கொடுத்துவிட்டு "சார் உங்களை வரச் சொல்கிறார்" என்றாள்.

அவள் அவன் அருகே வந்ததும், அவளைப் பார்த்தும் பார்க்காதது போல் உணவு உண்பதிலேயே கவனமாக இருந்தவன், தன் இடது கையை உணவு மேசையின் இருக்கையை நோக்கி சுட்டிக் காட்டினான்.

சேற்றில் மிதந்தாலும், தண்ணீரில் மூழ்கினாலும் தாமரை தலை நிமிர்ந்து ஆதவனை பார்க்குமே, அதைப்போல ஆராவைப் பார்த்தவள், ராஜாவின் அருகே சிம்மாசனத்தில் அமரும் மகாராணி போல் அமர்ந்தாள்.

அவளின் கம்பீரத்தில் கவரப்பட்ட நாயகி, அவளுக்கு உணவு பரிமாற ஆரம்பித்தார்.


தன் பார்வை வட்டத்திற்குள் இதை கவனித்துக் கொண்டிருந்த ஆரா, உணவருந்திய பின் கைகளை கழுவி விட்டு எழுந்து, அவள் முன் ஒரு விசிட்டிங் கார்டை தூக்கி எறிந்தான்.

"இந்த அலுவலகத்திற்கு சரியாக பத்து மணிக்கு வரவேண்டும். வந்திருக்க வேண்டும். ரைட் " என்று கூறிவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.

அந்த விசிட்டிங் கார்டை பார்த்ததும், சங்கமித்ராவின் முகம் அவளது கட்டுப்பாட்டையும் மீறி மலர்ந்தது.


சிறை எடுப்பாள்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
ஆராவுக்குள் சலனம் தோன்ற ஆரம்பித்து விட்டதே 😃😃😃

மன அழுத்தமா 😳😳😳 என்ன காரணமோ 🤔🤔🤔 அவளை மீட்க வேண்டியவன், ஆறுதல் அளிப்பானா அல்லது அழிப்பானா 🥺🥺🥺

மித்ராவிற்கு தெரிந்த கம்பெனியோ 🧐🧐🧐
 
  • Love
Reactions: அதியா

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
ஆராவுக்குள் சலனம் தோன்ற ஆரம்பித்து விட்டதே 😃😃😃

மன அழுத்தமா 😳😳😳 என்ன காரணமோ 🤔🤔🤔 அவளை மீட்க வேண்டியவன், ஆறுதல் அளிப்பானா அல்லது அழிப்பானா 🥺🥺🥺

மித்ராவிற்கு தெரிந்த கம்பெனியோ 🧐🧐🧐
கர்வம் தகனமானால்
சலனம் காதல் ஆகுமே.
மனம் கொண்ட மலர் நட்பே நன்றிகள் உமக்கு🙏🙏🙏
 
  • Love
Reactions: Shimoni