சமாரியன்
அது நான்கு ஊர் பாதைகள் வந்து சந்தித்து ,பிரியும் நால் வழிப்பாதை. நண்பகலை சற்று தாண்டி இறுகிய தார்சாலையை உருக்குகிறேனா இல்லையா பார் என்று சூரியன் தகித்துக் கொண்டிருந்தது அந்தக் கரும்பரப்பில் ஒளிபட்டு நட்சத்திரங்களைப் போல மினுமினுப்பு காட்டியது
அங்கே ஒரு சாலை விபத்து 45 வயது மதிக்கதக்க ஒருவரும் 15 வயது இளம் பெண்ணும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்
சுற்றியும் மனித கூட்டம்.
அவருடைய சட்டைப்பையில் இருந்த அலைபேசி தெறித்து விழுந்ததில் தகவல் அறிய முடியாத , சொல்ல முடியாத ஒரு நிலை.
மிகக் கோரமான விபத்து.
ஐந்தரை லிட்டர் மூலதனம் வெகுவாக வெளியேறிக்கொண்டிருந்ததது
அனைவரும் கையறுநிலையில்
பார்வையாளர்களில் ஒருவர் 108 க்கு சொல்லியாச்சா என்று கேட்கிறார் .
ஒருவர் சொல்லியாகிவிட்டது வந்து கொண்டிருக்கிறது என்கிறார்.
கூட்டத்தில் ஒருவர் அதுவரை இவங்க தாங்குவாங்களா உயிர் பிழைப்பார்களா என்பதை கூற முடியாது என்பதை சோகத்துடனும் சந்தேகத்துடனும் கலக்கமுற வந்த வார்த்தையை விழுங்கிகொள்கிறார்.
அவசர ஊர்தி ஊர்ந்து வருகிறதா அவசரமாக வருகிறதா என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவரைக்.காப்பாற்ற,ஏதாவது வாகனத்தில் ஏற்றிச் செல்ல, எல்லோருக்கும் பதைபதைப்புதான்.இதில் இருக்கும் சட்ட சிக்கலும், நடைமுறை பின்விளைவுகளும் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது .காவல் துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் தன்னுடைய அன்றாட வாழ்க்கையை விட்டுவிட்டு இதன் பின்னால் ஓட வேண்டுமா என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விபத்துக்குள்ளானவர், அவருடைய மனது பிள்ளையை நினைத்து கனமாய் இருக்கிறது. அரைகுறை நினைவிழப்பில் இதுவரை பார்த்திராத முகங்கள். கிராமத்திலிருந்து புறப்பட்டு நகரத்தின் மையப்பகுதியில் வணிக நிமித்தமாக வந்தவரை வேகமாக கனரக வாகனம் மோதி நிற்காமல் சென்றதை அடியாழத்தில் உணர்ந்தார் ,
தனக்கு யாராவது உதவ மாட்டார்களா என்று எண்ணும் போது தன் மகனுக்கு கூறிய அறிவுரையான
"எந்த ஒரு வம்பிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
நீ உண்டு உன் வேலை உண்டுனு இருக்கனும் ,
நாம நல்லது செய்ய நினைத்தாலும் கெடுதல் வரும்.என்பதை நினைவில் வை" என்பதை இங்கே இருக்கும் அத்தனை பேரின் அப்பாக்களும் இதையே சொல்லியிருக்கலாம். எண்ணியிருக்கலாம்.
அவருடைய இதயத்துடிப்பு குறைந்து வரும் வேளையில் அப்போது இரு இளைஞர்கள் சாலையின் வழியாக தனித்தனி இருசக்கர வாகனத்தில் வருகிறார்கள்.
'ஒரு நண்பன்,டேய் மச்சி விபத்து ஏற்பட்டு இருக்கும் போல. போய் பார்க்கலாமா என்கிறான்.
மற்றொருவன் "நமக்கு ஏன் வம்பு நமக்கு .எவ்வளவு வேலை இருக்கு. தேவையில்லாத வேலை எதுக்கு? ".
இல்ல மச்சி "யாருனு பார்த்துட்டு போகலாம் .என்ன நிலமனு தெரிஞ்சுக்கலாமல்ல ".
இதில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்ல "நீ வேணுனா போய் பார்த்து விட்டு வா என்கிறான்".
அரைகுறையாக வண்டியிலிருந்து இறங்கி விபத்து நடந்த இடத்தை சுற்றி இருக்கும் பார்வையாளர்களை விலக்கிக் கொண்டு வந்து பார்க்கிறான்.
ஒரு உயிர் ஊசலாடிகொண்டிருப்பதை கண்முன் முதல்முறையாக பார்க்கிறான். அவனுடைய இதய துடிப்பு வேகமெடுக்கிறது. கிறுகிறுப்பும், கால் நடுக்கமும் காட்டி கொடுப்பதை மறைக்க முயல்கிறான். அவன் எல்லோரையும் பார்க்கிறான் ஏன் எல்லோரும் இவருக்கு உதவி செய்யாமல் நின்று கொண்டிருக்கிறார்கள்
நான் ஏதாவது செய்யலாமா என்று நினைக்கிறான்.ஆனால் நண்பனின் அறிவுறுத்தல்கள் அச்சுறுத்தல்கள் அவனை எச்சரிக்கை செய்கிறது.
மீண்டும் நண்பனிடம் வருகிறான். மச்சி வயிற்று பகுதியில பெரியவருக்கு இரத்த கசிவு அதிகமா இருக்கு. துணிய நல்லா தண்ணியில நனைச்சு தொடர்ச்சியா அழுத்தி, இறுக்கிப் பிடித்தால் ரத்தக் கசிவைத் தடுக்க வாய்ப்பு இருக்கு.அந்த பெண்ணின் கால்கள் சேதமாயிருக்கு.. மண்டைல அடி பலம், தாங்காதுடா ஏதாவது முதலுதவி முயற்சிக்கலாம் வாடா .
நண்பா ! இது என்ன மேலைநாடுனு நினைச்சியா அங்கெல்லாம் குட் சமாரிட்டன் (GOOD SAMARITAN LAW-GSL) சட்டம் செயல்பாட்ல இருக்கு. இந்தியால எந்த அளவு இருக்குனு தெரியாதா? அடிபட்டவங்க யாருன்னே உனக்கு தெரியாது. அப்புறம் ஏன்டா?
மச்சி , இந்தியால 2015 லே குட் சமாரிட்டன் சட்டம் கொண்டு வந்துட்டாங்க. விபத்து, கற்பழிப்பு,கொலை நடக்கும் போது தானே முன்வந்து காப்பாற்றும் சமாரிட்டன்களை (மனிதர்கள்) இந்த சட்டம் காப்பாற்றும்..
இந்த சட்டம் கூறுவது
பாதிக்கப்பட்டவர யார் வேண்டுமானாலும் எந்த மருத்துவமனையிலும் கொண்டு சேர்க்கலாம்.
உதவி செஞ்சவங்க எந்த விவரங்களையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
மருத்துவமனை சார்பில் யாரும் உதவுபவரின் தகவல்களைக் கேட்கக் கூடாது.
காவல் துறைக்கு தகவல் மருத்துவமனையிலிருந்தே சொல்லிவிடுவார்கள். அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் ஏ.ஆர் காப்பி (ஆக்ஸிடென்ட் ரிஜிஸ்டர் காப்பி-Accident register copy) இருக்கிறது. நோயாளிக்கு முதலில் சிகிச்சை கொடுத்த பின்னர் மருத்துவமனை செய்து விடும்.
தகவல்களைச் சொன்னால்தான் மருத்துவமனையில் சேர்த்துக்கொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட நபரிடம் வலியுறுத்த கூடாது
உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை செய்வதற்கு மருத்துவமனை பணத்தை எதிர்பார்க்கக் கூடாது. உயிர்காக்கும் சிகிச்சை தருவது, மருத்துவமனைகளின் கடமை என்கிறது.
எந்த தொல்லையும் வராது. வந்தா பாத்துக்கலாம் வா.
டேய்... நிஜ உலகத்துக்கு வாடா. இந்த சட்டம் பற்றி 90% நகரவாசிகளுக்கே தெரியாது.60% காவல் துறையினருக்கும் மருத்துவனைக்கும் கூட தெரியாது.இந்த சட்டத்தைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக காவல்துறை முகப்புவாயிலிலும் மருத்துவமனை வளாகத்திலும் எழுதி வைக்கவோ, ஒட்டி வைக்கவோ அரசு சொன்னாங்க.செயல்பாட்டுல எங்காவது இருக்கா?. இது அறியாத காவல்துறை அலுவலர் வந்தா சிக்கல் யாருக்கு. யோசி.
அடிபட்ட பெண்ணை சுற்றி நிற்கும் கூட்டத்துக்குள்ளே கலக்கிறான்
கூட்டத்தில் ஒருவர் அப்பாவும் மகளும் போல பாவம் இரண்டு பேரும் அடிபட்டு கிடக்கிறாங்க.
கூட்டத்தில் ஒருவன் இந்தப் பெண்ணுக்கு நீர் கொடுக்க,பகுதியளவு உள்ளேயும் பகுதி வெளியேயும் வருகிறது நம்ம கையில ஒண்ணுமில்ல என கை விரிக்கிறார் .உடனே அந்த இளைஞன் நாம கொண்டு போய் இந்த பொண்ண மருத்துவமனையில சேர்க்கலாங்களா?
தம்பி சிக்கல் நிறைய இருக்கே.
நான் பாத்துக்குறேன். எல்லாத்தையும் நான் ஏத்துக்கிறேன்.
பாவம் உயிர் ஊசலாடுது. ஆனா அது நம்ம விட்டு இன்னும் போகல.
முடியும். நான் வண்டி எடுத்துட்டு வரேன்.
ஓடுகிறான்.
நண்பனை அழைக்கிறான்.
அவனோ "வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனையாயிரும்டா கிளம்புறேன் .நீ சொன்னா கேக்க மாட்டியா " என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி போய் விட்டான்.
அசராத அந்த இளைஞன் வண்டியை முறுக்கி சீக்கிரம் என்கிறான். கூட்டம் தயங்குகிறது.
முதியவர் ஒருவர் தூக்குங்கப்பா ஆனது ஆகட்டும்ங்க.
பெண்ணை நடுவில் கிடத்தி தாங்களாக வண்டியின் பின்னால் தண்ணீரை கொடுத்தவர் ஏற்றிக்கொள்ள அருகிலுள்ள மருத்துவமனையை நோக்கி சீறிப் பாய்ந்தான்.
மருத்துவமனையில் பெரிய போராட்டம் அவர்களுக்கு இணையத்திலிருந்து GSl தகவலை திரட்டிக் காட்டி சிகிச்சை அளியுங்கள் என உறுதியாக நிற்க அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்குள் 20 நிமிடம் கடந்து விட அவர்களிடம் அந்த பெண்ணை பற்றிய எந்த தகவலும் இல்லை.
ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்.அவரைச் சுற்றி இறந்தவர்கள் கூட்டம்,
108 அலறல் சத்தம் கேட்கிறது.வந்து அவரை அள்ளியெடுக்கிறது. காவல்துறையும், போக்குவரத்து துறை அலுவலர்களும் அங்கே குழும, இந்த விபத்தை யாராவது பார்த்தார்களா, இது எப்படி நடந்தது என்று யாருக்காவது தெரியுமா என்ற வினாக்களுக்கு எழுப்ப கூட்டம் களைந்துவிடுகின்றது.
அவரை அவசர ஊர்தியில் ஏற்றியவுடன் , அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு சென்றிருக்கும்.உயிர் பிரிந்து விடுகிறது.அவரது உடமைகளை பரிசோதித்தபோது அவர் அணிந்திருந்த சட்டை பையில் ரத்தக்கறை படிந்த காசோலை நைந்தும், நனைந்தும் கிழியும் நிலையில் கண்டெடுக்கபடுகிறது. அந்த காசோலையில் வங்கியின் பெயர், அவருடைய வங்கிக் கணக்கு எண் போன்றவை தென்படுகின்றன, வங்கியை தொடர்பு கொண்டதில் காவல்துறை பெறப்பட்ட தகவலால்
அவருடைய பெயர் - மாறன்,
வயது -45,
ஊர்- குடவர் மலை
விபத்து நடந்த இடத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் சார்ந்த ஒரு கிராமம.என அறிந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது .
அவருடைய மனைவி 100 நாள் வேலை திட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த போது தகவல் வந்தடைகிறது.அக்கம் பக்க குழப்பமும் கூச்சலும் கலந்து அந்த கிராமத்தில் மரங்களில் எதிரொலிக்க நடக்ககூடாததது நடந்ததை அறிந்த பறவைகள் எல்லாம் பட படத்து பறந்து சென்றுவிடுகின்றன.
கல்லூரியில் படிக்கும் அவருடைய மகனுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சகல இத்தியாதிகளும், மருத்துவ ஆய்வு கூறும் முடிந்து உடல் ஒப்படைக்கப்பட்டு கிடத்தப்பட்டிருந்தது..
ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையிலிருந்து ஒவ்வொருவிதமாக அவருடைய நல்ல பண்புகள், கடமை உணர்ச்சி ,யாருக்கும் தீங்கு செய்யாத மனப்பாங்கு. எந்த வம்பு தும்புக்கும் செல்லாதது. எல்லாம் முன்வைக்கப்படுகிறது.
சில மணிநேரங்கள் கழித்து மருத்துவமனையில் (காவல்துறை உதவியுடன்) இருந்து அக்குடும்பத்தின் இளம் பெண்ணைப் பற்றி தகவல் வந்தது.அபாய கட்டத்தில் இருப்பதாகவும் ஆனால் காப்பாற்றப்பட்டு விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சில உறவினர்கள் அந்த மருத்துவமனை வந்தடைய அங்கே அந்த இளைஞர் நின்று கொண்டிருந்தான்.கரம்குவித்து கண்ணீர்விட்டு நன்றி சொன்னார்கள். பெண்ணின் அப்பா இறந்து விட்டதை சொல்ல, அவர்களில் ஒரு சிலர் கிராமத்திற்கு திரும்ப ஆயத்தமாகும் போது அந்த இளைஞனும் இறந்தவரை காண அவர்களுடன் இணைந்து விட்டான்
இரண்டாவது தடவையாக கிடத்தப்பட்ட மாறனை அருகில் காண இளைஞன் விழைந்தபோது.
திடுக்குற்றான்.
விபத்து நடந்த இடத்தில் தன்னுடன் இருந்த நண்பன் ராம் சடலத்தை பற்றி அப்பா,அப்பா என அரற்றி கொண்டிருப்பதை பார்த்தான்.
பெண்களின் மரண ஓலங்களும், ஒப்பாரிகளும், சாபங்களும் அந்த இளைஞனை குறுகுறுக்க செய்கின்றது. ராமை உற்று நோக்கினான் கல்லூரி நண்பன் ஆனந்த். அவனுக்கும் எல்லாம் புரிந்து விட்டது. தலையிலடித்துகொண்டே கதறி அழுகிறான்
.இது ஒரு விபத்தாகதான் நடந்தது ஆனால் பின் கொலையாகிவிட்டதா?.இது எப்படி ?ஏன்? எது என்னை தடுத்தது .ஏன் காப்பாற்றும் உறுதி நீடிக்கவில்லை .ஒருவேளை நான் பார்த்திருந்தால் அப்பாவை காப்பாற்றி இருக்க முடிந்திருக்குமா? என்ன விதமான மனநிலை?'உயிர் காக்கும் அந்த பொன்னான மணித்துளிகளை வீணடித்து விட்டேனே என்று புலம்பிக்கொண்டே ராம் வண்டியை உசுப்ப மற்றவர்கள் தடுக்க தடுக்க விபத்து நடந்த இடத்திற்கு பறந்தான்.
குற்ற உணர்ச்சியோடு சாலையிலே , சாலை சவக்குழி போல் காட்சியளித்தது. அத்தனை பேர் குழுமியிருந்தார்கள் ஒருவர் கூடவா ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை. எல்லோரையும் குறை சொல்கிறேனே. நான் ஏன் முயலவில்லை.
என்னை தடுத்தது நானா, சமுதாயமா,சட்ட சிக்கலா, அலைகழிப்பா, அனுபவமின்மையா (மனிதம் இருந்தால் போதாதா?) எதுவென்று அவனால் கூற முடியவில்லை இது விபத்து அல்ல இது ஒரு கொலை. விபத்து தற்செயலானது, நாளை நமக்கு விபத்து ஏற்பட்டாலும் இதே நிலைமை தான் என்ற எண்ணம் அவனுள் ஓடியபோது அவனால் வாகனத்தை எப்போதும்போல இயக்க முடியவில்லை.
இரத்தவாடை வீசிய இடத்தில் இரத்த உறவு கதறியது. வீறீட்டான், விழுந்தான் புரண்டான். எல்லாம் முடிந்துவிட்டது. ஆனந்த், ஆனந்த் கத்தியழுதான். மன்னித்துவிடு தங்கையே, அப்பா என்று அரற்றினான்.
ஆனந்த் நகரத்தில் வீட்டின் நுழைவாயிலை திறந்து உள்ளே சென்று வண்டியை நிறுத்திவிட்டு, குளித்து முடித்து , வீட்டிற்குள்ளே, கவ்வியிருந்த இருளை கிழித்த அவனை போலவும், மின்பல்பு ஒளிர்ந்தது.தப்பாக நடந்ததையும் முடிந்த அளவு மாற்றங்கள் செய்த ஆனந்த் குலச்சாமி போல நிறைந்திருந்தான்.
தெரியாத ஒருவரின் மரணம் தெரிந்த ஒன்றாக மாறும்போது வலியும், வேதனையும் நீண்டகாலம் சலசலக்கும். கடமையும் பரிதவிப்பும் இடம் பார்த்தும், நபர் பார்த்தும் தான் வெளிவருமோ?
ஒரு கடமையை அனைவரும், சிலராவது, யாராவது, ஒருவராவது என்பதிலிருந்து நழுவி யாவருமில்லை என்ற குழுவில் ராமும் ஒரு அங்கமாகினான்.
முற்றும்.
***
நன்றி.