• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..16

Oct 31, 2021
304
11
63
29
Sri Lanka Jaffna
சாளரத்தின் வழியே கசிந்து வந்து கொண்டிருந்த வெண்ணிலவின் வெளிச்சத்தில், அசையாமல் நின்றிருந்த வானதியைப் பார்த்ததும், அவளருகில் வந்து அவள் தோள் தொட்டான் அருண்மொழி.

திடுக்கிட்டுப் போய்த் திரும்பிப் பார்த்தவளுக்கு பக்கத்தில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் லேசாக அழுகை வருவது போல் இருக்கவே, அதை வெளியே காட்டாமல் தன்னுள் அடக்கப் பெரும்பாடு பட்டுப் போனாள்.

ஆனாலும் ஒருவழியாகச் சுதாரித்துக் கொண்டு, வேகமாக அவனது கரத்தைத் தட்டி விட்டவள், தன் அறையினுள் போகத் திரும்பவும் சட்டென்று அவளது கரம் பற்றி இழுத்தான் அருண்மொழி.

அவன் அவ்விதம் இழுப்பான் என்பதை எதிர்பாராதவள், அவன் மார்போடு வந்து மோதிக் கொண்டு நிற்க, அவளை லேசாக அணைத்துக் கொண்டு அவளின் கருவிழிகளை இமைக்காமல் பார்த்தவனது முகத்தில் குறும்பு மிளிர்ந்தது.

"விடுங்கோ அருண்.."

"ஏனாம்.."

"யாரும் வந்திரப் போகினம்.."

"வரட்டுக்குமே.."

"உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.. இப்ப விடப் போறீங்களோ இல்லையோ.."

"விட மாட்டேன்.."

"கத்துவன்.."

"கத்து.."
என்று சொன்னவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தவள், சட்டென்று அவனது வலது தோளில் கடித்து விட்டாள்.

அவள் அவ்விதம் செய்வாள் என்பதை எதிர்பாராதவன், லேசான வலியில் கையை விலக்க, அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டவள், வேகமாக ஓடிப் போய்த் தனது அறையினுள் புகுந்து தாழிட்டுக் கொண்டாள்.

வலது தோளை அழுத்தமாகத் தேய்த்து விட்டுக் கொண்டவன், மூடியிருந்த அவளது அறைக் கதவைத் தான் ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.

அதற்குள் அம்புஜம் அவர்கள் இருவரையும் தேடிக் கொண்டு வந்து விட்டார்.

"மொழீ.. இங்கினை நிண்டு என்ன தியானம்.. உன்ரை வானம் எங்க அவளையும் கூட்டிக் கொண்டு வா.."

"ஒரு தியானமும் இல்லை.."

"என்னடா ரொம்பத் தான் அலுத்துக்கிறாய்.. நீ தானே ஆசைப் பட்டு நிலாச் சோறு கேட்டாய்.. மொட்டை மாடிக்குப் போய்ப் பாரு நிலவு எப்புடி நிக்குது எண்டு.. அது தான் மாடியில பாய் போட்டிட்டு.. சோறு குழைச்சு உருண்டை பிடிச்சு வைச்சிட்டு வந்தனான்.. போ போய் பிள்ளையையும் கூட்டிக் கொண்டு வா.."

"அவளை நீங்களே போய்க் கூப்பிடுங்கோ.."

"ஏன்டா ஏதும் சண்டை பிடிச்சியளோ.."

"நான் மாடிக்குப் போறேன் மம்மி.."

"வர வர ரெண்டு பேரும் சரியில்லை.. வீட்டுக்கு வந்தவை போகட்டும் உங்கள் ரெண்டு பேருக்கும் இருக்கு கச்சேரி.."
என்றவர் நிமிர்ந்து பார்ப்பதற்குள் மொட்டைமாடிக்குத் தாவியிருந்தான் அருண்மொழி.

"உவனை வயித்துல வைச்சிருந்த நேரம் குரங்குக் குட்டியளாப் பாத்துச் சிரிச்சது பெரிய பிழையாப் போச்சுது.. எங்கையாவது மனுசர் மாதிரி நடந்து போறானா.. தாவித் தாவித் தான் குதிக்கிறான் குரங்குக் குப்பன்.."
என்று புலம்பிக் கொண்டே, வானதியின் அறைக்குப் போனார் அம்புஜம்.

அங்கே அவளோ தலையணையில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தாள்.

அறைக் கதவு தட்டப்படும் சத்தத்தில் அருண் தான் மீண்டும் வந்து விட்டானோ என்கிற எண்ணத்தில் அசையாமல் கிடந்தவளை, அம்புஜத்தின் குரல் எழும்பி உட்கார வைத்தது.

வேகமாக ஓடிச் சென்று முகத்தைக் கழுவி அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்தவள், ஒரு நொடி நிதானித்த பின்னரே அறைக் கதவைத் திறந்தாள்.

"என்னடி பிள்ளை.. அதுக்குள்ள நித்திரையாப் போயிட்டியோ.. சாப்பிடாமல் கொள்ளாமல் அதென்ன நித்திரை.. என்ன முகம் எல்லாம் ஒரு மாதிரிக் கிடக்குது.. அருண் ஏதும் சண்டை போட்டவனோ.. அது தான் நீ அறையை மூடிப் போட்டு ஒப்பாரி வைச்சனியோ.. அவன் சண்டை போட்டால் உனக்குத் திருப்பிச் சண்டை போடத் தெரியாதோ.. சரி சரி முகத்தை வடிவாத் துடைச்சுப் போட்டு மொட்டை மாடிக்கு வா.. உனக்குப் பிடிச்ச நிலாச்சோறு சாப்பிடுவம்.."
என்று தன் பாட்டில் பேசிக் கொண்டே வானதியின் கரத்தைப் பிடித்து இழுக்காத குறையாக மொட்டைமாடிக்குச் சென்றார் அம்புஜம்.

அங்கே இவர்களுக்கு முன்பாகவே விக்டரும் அருண்மொழியும் அருகருகே அமர்ந்திருக்க, சட்டென்று சுற்றும்முற்றும் பார்த்தாள் வானதி.

இருவரையும் தவிர வேறு யாரும் அங்கே இல்லை என்றதும் உள்ளூர லேசாக நிம்மதி பரவவே, அமைதியாகப் போய் விக்டரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டவளையே, லேசான கோபத்தோடு அருண்மொழி பார்த்து வைத்தான்.

பெரிய குண்டாளச் சட்டி நிறைய சோறு போட்டுக் குழைத்து, அதனை உருண்டை பிடித்து வைத்திருந்த அம்புஜம், முதல் உருண்டையை வானதியிடம் நீட்ட குனிந்த தலை நிமிராமல் அதை வாங்கிக் கொண்டாள் அவள்.

அடுத்த உருண்டையை மகனிடம் நீட்டும் போது தான், அவனது வலது தோளில் தெரிந்த மெல்லிய பல் தடத்தை அவர் கவனித்தார்.

கையில்லாத ஆர்ம்கட் பெனியன் போட்டிருந்ததால், அவனது வெளிர் வண்ணத் தோளில் மெல்லிய கண்டல் போல சிவப்பு வண்ணத்தில் கசிந்திருந்த இரத்தம் பளிச்சென்று தெரிந்தது.

"மொழீ.. என்னடா உது.."

"எது மம்மி.."

"வலது பக்கத் தோளில ஏதவோ கடிச்சிருக்குதே என்னடா அது.. ரத்தம் கண்டுற வரை போய் இருக்குதே.."

"ஓம் அம்மா.. ஒரு பூனைக் குட்டி ஒண்ணு.. இறுக்கமா எல்லாம் கட்டிப்புடிக்கலை லேசாத் தான் கட்டிப்புடிச்சேன்.. அது வலது பக்கத்துல கடிச்சிட்டுப் பாய்ஞ்சு ஓடீட்டுது.."
எனச் சொன்னவனின் பதிலில் வானதிக்குச் சோறு புரையேறி விட்டிருந்தது.

சட்டென்று அருணின் தோள் மீது இருந்த பார்வை வானதியின் பக்கம் திரும்பவே, விக்டர் அவளது தலையைத் தட்ட அம்புஜம் அவளுக்குத் தண்ணீர் பருக்கினார்.

இந்த நேரத்தில் தான் அந்த வீட்டுக்கு விருந்தாட வந்திருந்த, அம்புஜத்தின் ஒன்றுவிட்ட அண்ணனான பொன்னம்பலமும் அவரது மகள் கேமவர்ஷினியும் அங்கே தரிசனம் கொடுத்தார்கள்.

அதிலும் வானதிக்கு அந்த வீட்டில் கொடுக்கப்பட்ட அந்த உயர்ந்த பட்சமான அக்கறை, கேமவர்ஷினியின் வயிற்றுக்குள் ஒரு பெரிய அடுப்பில் பென்னம்பெரிய சட்டியாக வைத்து யாரோ கருக்கி விட்டது போல, கருக்கத் தொடங்கியது.

அதை எப்படி உடனே வெளிக்காட்டுவது என்று தெரியாமல் நின்றவளோ, சட்டென்று அருண்மொழியின் மடியில் ஏறியிருக்காத குறையாக, அவனை உரசிக் கொண்டு அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

கேமவர்ஷினியின் உரசலில் தன்னிச்சையாக நகர்ந்து போனவனின் முகம் பார்த்து
"என்ன ஆரு.. உங்க டாடியும் மம்மியும் உங்களைக் கவனிக்காம அந்த வேலைக்காரப் பொண்ணை இப்புடி விழுந்து விழுந்து கவனிக்கிறாங்களே.. உங்களுக்குக் கோபம் வரலையோ.."
எனச் செல்லமாகக் கேட்க, இவள் சொல்வதை அவன் எங்கே கவனித்தான்.

அவன் தான் தன் பெற்றவர்கள் தன் மனங்கவர்ந்தவளைக் கவனிக்கும் அழகில் தன்னை மறந்து இலயித்துப் போய் விட்டிருந்தானே, அப்போது பொன்னம்பலமும் தன் பங்குக்கு சில வார்த்தைகளை அவிழ்த்து விட்டார்.

"அம்பு.. என்ன நீ உன்னோட மருமகளைக் கவனிக்காமல் வேலைக்காரியோட கொஞ்சிக் கொண்டு இருக்கிறாய்.. பாரேன் உம் மருமக முகம் எப்புடி வாடிப் போச்சுதுனு.."

"என்ரை மருமகளை நான் கவனிக்காமல் விடுவேனா.. ஆனாப் பாருங்கோண்ணா இவ ஒண்டும் வேலைக்காரி இல்லை.. இவளும் எங்க வீட்டுப் பொண்ணு தான்.. இதை நான் நீங்கள் வந்த நேரத்துல இருந்து சொல்லீட்டன்.. ஆனா நீங்க அதைக் கேக்கிறதாவே இல்லை.."

"அது உன்னோட பெருந்தன்மை அம்பு.. ஊருல இருக்கிறவங்க இந்தப் பொண்ணு வேலை பாக்க வந்த பொண்ணுனு தான் சொல்லிக்கிறாங்க.."

"ஊர் சொல்றதை நம்புறீங்களே நான் சொல்றதை நம்ப மாட்டீங்களா.."

"சரி உன்னோட இஷ்டம் எப்புடி வேணாலும் வைச்சுக்கோ.. ஆனா எங்கடை அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி தான் நாங்கள் நடந்து கொள்ளுவோம்.."
என்றவர் வானதியை ஏளனமாகப் பார்க்க, தைரியமான பெண்ணான அவளால் கூட ஒரு வார்த்தை பேச முடியவில்லை.

அந்த இடத்தில் இருந்து சட்டென்று எழுந்து கொண்டவள்,
"அம்மா.. எனக்குப் போதும்.. நித்திரை வார மாதிரி இருக்கு நான் போறேன்.."
என்றவள் அம்புஜம் பதில் சொல்வதற்கு முன்பாகவே, கீழே போய் விட்டிருந்தாள்.

அவள் போன திசையை வெற்றிப் பார்வை பார்த்த கேமவர்ஷியோ
"ஆரு.."
என்றபடி, அருண் பக்கம் திரும்ப, அவனோ
"மம்மீ.. எனக்கும் தூக்கம் வருது.."
என்று கொண்டு எழுந்து போய் விட, கேமவர்ஷி தன் தந்தையைப் பார்த்து முகம் சுளித்தாள்.

அவளது முகச் சுளிப்பில்
"கேமாக்குட்டி.. தம்பிக்கு ஏதாவது குடிக்க தண்ணி எடுத்துக் கொண்டு போய் குடும்மா.."
எனப் பொன்னம்பலம் சொல்ல, உடனே எழுந்து ஓடப் பார்த்த கேமவர்ஷியின் கரத்தைப் பிடித்துத் தன்னருகே அமர்த்திக் கொண்ட அம்புஜம்,
"அதெல்லாம் அங்க ரூம்லயே இருக்கும் கேமா.. நீ இரு நான் உனக்கு சோறு குடுக்கிறன்.. ரொம்ப நல்லா இருக்கும் சாப்பிட்டுப் பாரு.. அப்புறம் எங்கண்ணா எம்புள்ளையை நீ ஒழுங்காக் கவனிக்கலைத் தானேனு கோவிச்சுக் கொள்ளப் போறாரு.."
எனச் சொல்லிக் கொண்டே அவளது கையில் ஒரு சோற்று உருண்டையை வைத்தார்.

அந்த உருண்டையை உண்ணவும் முடியாமல் கீழே வைக்கவும் முடியாமல் உருட்டிக் கொண்டிருந்தவளைப் பார்க்க விக்டருக்குச் சிரிப்புத் தான் வந்தது.

ஆனாலும் இடம் பொருள் பார்த்துத் தன் சிரிப்பை அவர் அடக்கிக் கொள்ள, அதனை அம்புஜம் பார்த்து விட்டார்.

தந்தையும் பெண்ணும் அறியாமல் தன் கணவனைப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தவர், உருண்டை உருண்டையாகக் கொடுத்து இருவரையும் ஒரு வழி செய்து விட்டார்.

கீழே தன் அறைக்கதவைத் திறக்கப் போனவளின் பின்னாலேயே வந்து அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு, வீட்டின் பக்கவாட்டில் இருந்த மல்லிகைப் பந்தலுக்குள் நுழைந்து கொண்டான் அருண்மொழிவர்மன்.

சட்டென்று காற்றில் மிதப்பது போல உணர்ந்தவளோ, அப்போது தான் தன்னை அருண்மொழி தூக்கி விட்டான் என்பதை உணர்ந்தாள்.

அவன் தூக்கிய தினுசில் கீழே விழுந்து வைக்காமல் இருக்க, அவனது கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டவள், அதை விடவும் இறுக்கமாகக் கண்களை மூடிக் கொண்டாள்.

மல்லிகைப் பந்தல் பிடிமானமாக நின்றிருந்த, அந்தப் பெரிய பூமரத்தின் தண்டில், அவளைச் சாய்த்து நிறுத்தியவன், கசிந்து வந்த மின்குமிழ் வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான்.

அவளுக்கோ அவனின் நீல விழிகளை நேர் கொண்டு பார்க்கும் தைரியமே வரவில்லை.

"என்னாச்சு.."

".............."

"அந்தக் கோமா ஏதாச்சும் சொன்னாளா வானம்.."

"யாரு.."

"அதான் புதுசா வந்திருக்காளே.. என்னை ஆரு மோருனு கொஞ்சிக்கிட்டு அவ தான்.."

"இல்லை.."

"பொய்.."

"இல்லை உண்மையாவே இல்லை.."

"அப்போ நீ எதுக்கு ஒரு மார்க்கமா சுத்தீட்டு திரியிறே.."

"அது.. எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அது தான்.."

"ஏன் உடம்புக்கு என்னாச்சு.. அம்மாக்கிட்டே சொன்னியா.. வா ஹாஸ்பிடல் போலாம்.."

"அங்க எல்லாம் போகத் தேவையில்லை.."

"ஏன் போகத் தேவையில்லை.. வானம் என்னோட முகத்தைப் பாத்துப் பேசு.."

"கொஞ்ச நேரத்துல சரியாயிடும்.."

"நிஜமாவா.. இல்லாட்டிக்கு அம்மாவைக் கூப்பிடவா.."

"இல்லை அதெல்லாம் வேண்டாம்.. எனக்கு கொஞ்சம் நேரம் படுத்து இருக்கோணும் போல இருக்கு.."

"ஓ.. சரி போ.."
என்று கொண்டு வானதி போக வழி விட்டவன், அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நயினாதீவு கோவில் போய் வந்த பின்னர் கூட கலகலப்பாக இருந்த பெண், அந்தப் பொன்னம்பலமும் அவர் பெற்றெடுத்த அந்தப் பன்னாடையும் வந்த பின்னர் தான் ஒரு மாதிரி ஆகி விட்டாள் என்பதை உணர்ந்தான்.