• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..6

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
அதிகாலை நேரத்துக்கே உரிய புத்துணர்ச்சியுடன் தென்றல் வீசிக் கொண்டிருக்க, மெல்ல எழுந்து சோம்பல் முறித்தாள் வானதி.

வழமை போல அவளது கரங்கள் படுக்கையை ஆராய, அவள் தேடியது கிடைக்காமல் போகவும் லேசாகத் திடுக்கிட்டுப் போய் எழுந்து நின்றவளுக்கு, அப்போது தான் சுற்றுப்புறம் புரிந்தது.

ராஜேந்திரனும் யாழ்மொழியும் இப்போதெல்லாம் அவளுடன் தூங்குவதில்லை, கனகலக்சுமியோடு தான் தூங்குகிறார்கள். அந்த நினைவு வந்ததுமே மெல்லத் தலையைத் தட்டிக் கொண்டவள், தன் அன்றாட வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.

சரியாக அரைமணி நேரத்திற்குள் அவளைத் தேடிக் கொண்டு கனகலக்சுமி வந்து விட்டார்.

"என்னடி பிள்ளை.. ராவு நித்திரை எப்புடி நல்லாக் கொண்டியோ.."

"ஓம் அம்மா நல்லாக் கொண்டன்.."

"சரி சரி குளிச்சு முடிச்சால் வா.. அங்க போவம் சமையல் வேலை எல்லாம் இனி நீ தான்.."

"எத்தினை பேருக்கு அம்மா சமைக்கோணும்.. நிறையப் பேரோ.."

"பிள்ளை நீ அருண்மொழிக்கு மட்டும் சமைச்சால் போதும்.. மற்றவைக்குப் புரிம்பாச் சமையல் நடக்கும்.."

"அவருக்கோ நானோ.. அச்சோ வேண்டாமே அம்மா.."

"நீ புதுசு எண்டதால பயப்பிடுறாய்.. முதல்ல அங்க வந்து இடத்தைப் பாரு.. உனக்குத் தன்னால சமைக்க ஆசை வரும் பாரன்.."

"இருந்தாலும் அம்மா.."

"பொறு நானும் உன்னை ஒண்டு கேக்கோணும் எண்டு தான் நினைச்சுக் கொண்டிருந்தன்.. இப்பத் தான் நினைவுக்கே வருகுது.."

"என்னம்மா கேக்கோணும் எண்டு நினைச்சனியள்.."

"உனக்கு ஏன் எங்கடை அருணைக் கண்டால் பயம்.. நானும் வந்த நாள் தொட்டுப் பாக்கிறன்.. அவனைக் கண்டாலே பயந்து கொண்டு எனக்குப் பின்னால ஒளிக்கிறாய்.."

"அப்புடி எல்லாம் இல்லையம்மா.. அவரு புது ஆள் அது தான்.. நான் வேறை ஆம்பிளையளுக்கு முன்னால போறது இல்லை.."

"இனி நீ தைரியமா இருந்து பழகு பிள்ளை.. சரி வா போவம் இண்டைக்குக் காலமை அருணுக்கு என்ன சமைக்கப் போறாய்.."

"நீங்களே சொல்லுங்கோவன்.."

"என்ன எண்டாலும் உனக்குப் புடிச்சதைச் செய் பிள்ளை.. உனக்கு ஒரு உண்மை சொல்லட்டே.."

"என்னம்மா.."

"சும்மா சம்பிரதாயத்துக்குத் தான் அருணுக்குச் சமைக்கோணும் எண்டு சமைக்கிறதே தவிர.. அவன் வீட்டுல சாப்பிடுறதே இல்லை.."

"என்னது.. அப்ப பிறகு ஏன் சமைப்பான்.."

"அவன் திடீரெண்டு மனம் மாறிக்கீறி சாப்பாட்டை எடுத்து வையுங்கோ எண்டு கேட்டால் என்ன செய்றது.. அதனால மூண்டு நேரமும் ஏதாச்சும் சமைச்சு வைச்சிடுறது.."

"இன்னும் அப்ப அவரு மனம் மாறேல்லை.."

"எப்ப மாறுவான் எண்டு நானும் பாத்துக் கொண்டு இருக்கிறன்.."

"அதெல்லாம் சரி இத்தனை நாளும் ஆரு அவருக்குச் சமைச்சது.."

"நான் தான்.."

"ஓ.. நீங்கள் சமைச்சே மனம் மாறாதவர் நான் சமைச்சால் மாறுவாரோ.."

"எல்லாம் ஒரு நம்பிக்கை தானே பிள்ளை.."

"என்னவோ சொல்லுறீங்கள் அம்மா.. வாங்கோ போவம்.. ஏதவோ எனக்குத் தெரிஞ்சதைச் சமைச்சு வைக்கிறன்.. நீங்கள் சொன்ன மாதிரி அவர் என்ன சாப்பிடவே போறார்.."
என்று கொண்டு கனகலக்சுமியோடு அருணோதயம் சென்றாள் வானதி.

அவள் உள்ளே நுழையவும் அருண்மொழிவர்மன் வெளியே வரவும் சரியாக இருந்தது.

வழமையாக வேகமாக வெளியேறும் அவன் சற்று நேரம் நிதானித்து விட்டே சென்றான். தன்னைத் தாண்டிச் செல்லுகையில் குனிந்த தலை நிமிராமல் சென்ற வானதியைப் பார்த்ததும் சட்டென்று கடுப்பாகிப் போகவே கனகலக்சுமியை இடைமறித்தான் அவன்.

கனகலக்சுமி திடீரென நிற்கவும், அவருக்குப் பின்னாலேயே போய்க் கொண்டிருந்தவள் சட்டென்று அவரோடு மோதிக் கொண்டு நின்றாள்.

"பாத்துப் பிள்ளை பாத்து.. ராசா என்னத்துக்கோ நிக்கச் சொன்னது.."
என்று கொண்டு அருண்மொழியிடம் திரும்பியவர்,
"என்ன ராசா என்ன விசயம்.."
என்று கேட்க, அவருக்குப் பின்னால் நின்றிருந்தவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன்
"சாரி ஷாப்புக்கு கொஞ்சம் வரணுமே.."
என்று சொல்ல,
"அதுக்கென்ன வந்துட்டாப் போச்சுது.."
என்று கொண்டு வானதியின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னே நடக்கத் தொடங்கினார் கனகலக்சுமி.

அவர் அப்படித் தன்னையும் அழைத்துக் கொண்டு போவார் என்பதைச் சற்றும் எதிர்பாராதவளோ, சங்கடத்தோடு நெளிந்தபடி
"அம்மா.. நீங்கள் போங்கோவன் நான் என்னத்துக்கு.. அதோட அவர் உங்களை மட்டும் தானே கூப்பிட்டவர்.."
எனச் சொல்லிக் கொண்டு அப்படியே நின்றாள்.

"இல்லேடி பிள்ளை.. நீ உள்ள வரேக்க ராசா அப்புடிக் கேட்டது எண்டால் முக்கியமா உன்னையும் தான் கூட்டிக் கொண்டு வரோணும் எண்டு அர்த்தம்.."

"இருந்தாலும் நான் என்னத்துக்கு அம்மா அங்க எல்லாம்.."

"ஏன் உனக்கு என்ன குறை.. நீ வராமல் வேறை ஆரைக் கூட்டிக் கொண்டு போகோணும்.."

"என்ரை தோற்றத்தைப் பாருங்கோ.. இப்புடியே வந்தால் ஆரும் ஏதும் நினைக்க மாட்டினமோ.."

"ஏன் உன்ரை தோற்றத்துக்கு என்ன குறை.. ஆரும் ஏதும் நினைச்சால் எங்களுக்கு என்னடீ.. நானே உன்னைய வெளியால கூட்டிக் கொண்டு போற சந்தோஷத்துல இருக்கிறன்.. பேசாமல் வா.. இரு இரு கழுத்துல இந்தச் சங்கிலியைப் போடு.."
என்று சொன்னவரை எப்படி மறுப்பது எனத் தெரியாதவள், பின்னால் நின்றவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

அவனோ வானத்தைப் பார்த்து விட்டு
"டுடே இஸ் வெரி ஹாட்"
என்று சொன்னபடி கூலிங் கிளாஸை எடுத்து மாட்டிக் கொண்டான்.

அவன் தான் முறைத்ததால் தான் அப்படிச் சொல்கிறான் என்பதைப் புரியாத அளவுக்கு அவள் ஒன்றும் முட்டாள் இல்லையே, தனக்குள்
"இப்ப புடைவைக் கடைக்குப் போய்ப் புதையலோ எடுக்கப் போறம்.. பேசாமல் தன்ரை மனுஷியைக் கூட்டிக் கொண்டு போக வேண்டியது தானே.."
என மெல்ல முணுமுணுத்தவளின் பக்கமாக வந்து, காரின் கதவைத் திறந்து விட்டவனுக்கு அவள் சொன்னது கேட்டு விட்டது.

தலையை லேசாகக் கோதியபடி
"கனகாம்மா.. மை வைபை கூட்டிட்டு போகச் சொல்லி உங்க பொண்ணு சொல்லுது.."
என்று கனகலக்சுமியின் காதுகளில் சொல்லிக் கொண்டே காரில் ஏறி உட்கார்ந்தவனையும், வானதியையும் பார்த்து விட்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தார் அவர்.

"ஏம்மா உப்பிடிச் சிரிக்கிறீங்கள்.."

"பின்ன என்ன பிள்ளை நீ.. ராசாவே பிரம்மச்சாரி அதைப் போய் வைபைக் கூட்டிக் கொண்டு போ எண்டு சொன்னால் சிரிப்பு வருமா வராதா.."

"அப்ப அவருக்கு இன்னும்.."

"ஓம் பிள்ளை இன்னும் கலியாணம் ஆகேல்லை.. ஆனா சீக்கிரமா செஞ்சு கொள்ள மாட்டுதோ எங்கடை ராசா எண்டுறது தான் எங்கடை பெரிய கவலையே.."

"ஓ.."
என்றவள் மெல்லத் திரும்பி அருண்மொழிவர்மனைப் பார்த்தாள். இந்தத் திருப்பத்தை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையே, தன்னைப் போல அவனும் திருமணம் குழந்தை என செட்டில் ஆகி இருப்பான் என நினைத்திருக்க, அவன் இன்னும் திருமணம் கூடச் செய்து கொள்ளவில்லையே என்பதைக் கேட்டவளுக்குத் தான் எப்படி உணர்ந்தேன் என அவளாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை.

அது கவலையா சந்தோஷமா அதிர்ச்சியா எது என்று அவளுக்கே புரியவில்லை. ஆனாலும் மனதோரம் ஒரு கவலையோடு சேர்ந்து ஒரு மெல்லிய படலம் போல ஆறுதல் ஒன்றும் இழையோடுவதை அவள் திடுக்கிடலோடு உணர்ந்தாள்.

தன் நெஞ்சறிய பொய்யற்க என்பது போல அவளால் தன் நெஞ்சில் இருக்கும் உணர்வுகளை இல்லை என்று ஆணித்தரமாக மறுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

எப்படி என்ன சொன்னாலும் வானதி அருண்மொழிவர்மனை நேசித்தது உண்மை, இதோ நேசித்துக் கொண்டிருப்பதும் உண்மை. ஆனால் அவள் ஒரு சூழ்நிலைக்கைதி அவளது வாழ்வில் அரங்கேறியது எல்லாம் அவள் விரும்பாத எதிர்பாராத சம்பவங்கள். உயிரே போனாலும் நான் உன்னைத் தான் நேசித்தேன் என்று அவள் அவனிடம் சொல்லப் போவது இல்லை.

பின் புறம் பார்க்கும் கண்ணாடி வழியே, தன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்திருந்தவனோ 'என்னடி' என்பது போல இமைகளை உயர்த்த, அதைக் கொஞ்சம் கூட எதிர்பாராதவள் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள்.

அவளது குனிந்த தலையையே பார்த்திருந்தவனின் முகத்தில் லேசாக ஒரு புன்னகை வந்து போனது.

அருண்மொழியின் காரை முன்னும் பின்னுமாக இவ்விரண்டு ஜீப்புகள் தொடர்ந்து வர, அருண் புடைவையகம் என்ற பெயர் கொண்ட, பெரிய கடையின் முன்னால் போய் அவர்களது வாகனங்கள் நிற்க, உள்ளே இருந்து ஐந்தாறு பேர் ஓடி வந்து வரவேற்க, சட்டென்று அவர்களைக் கையமர்த்தி அவர்களின் வேலைகளைக் கவனிக்குமாறு அனுப்பி வைத்தான்.

வழமைபோல வானதி கனகலக்சுமியின் பின்னால் நிற்க, இருவரையும் கடையினுள் அழைத்துச் சென்றவன், கனகலக்சுமியிடம் கண்ணசைத்து விட்டு, ஒரு ஷோபாவில் அமர்ந்து கொண்டு ஃபோனைப் பார்க்கத் தொடங்கினான்.

வருடத்துக்கு ஒரு தடவை இப்படி அவருக்கு அவர் விருப்பத் தேர்வில் ஐந்தாறு புடைவைகள் எடுத்துக் கொடுப்பது அவன் வாடிக்கை, அதே போன்று இந்த முறையும் அழைத்து வந்திருக்கிறான். இந்த முறை கூடுதல் போனசாக வானதியையும் அழைத்து வந்திருக்கிறான்.

வானதியை இழுத்துத் தன்னோடு அமர்த்திக் கொண்ட கனகம், அவளுக்குப் புடைவைகள் தேர்வு செய்வதில் முனைப்பானார்.

"எடு பிள்ளை எடு.. உனக்குப் புடிச்ச கலருல நல்லதாப் பாத்து எடு.."

"அச்சோ நான் ஏன் எடுக்க.. நீங்கள் எடுங்கோ.."

"நான் ஏன் எடுக்கவோ.. நீ கட்டத் தான் வேறை என்னத்துக்கு.."

"நான் கட்டவோ.."

"ஓம் பிள்ளை.."

"விளையாடாதேங்கோ அம்மா.."

"விளையாடுறனோ.. நான் ஏன்டி பிள்ளை விளையாட.."

"நான் தான் கலர் சாரி கட்டுறதே இல்லையே.. பிறகு என்னத்துக்கு என்னைச் சாரி எடுக்கச் சொல்லுறீங்கள்.."

"இஞ்சை வா பிள்ளை.. நான் இதை முன்னமே உன்னட்டைச் சொல்லோணும் எண்டு இருந்தனான்.. பிறகும் எப்புடிச் சொல்லுறது எண்டு விட்டிட்டன்.. ஆனா இப்ப உரிமையாச் சொல்லுறன் கேளு.."

"என்னம்மா.."

"புருஷன் கட்டின தாலியும் அவன் வைச்ச குங்குமமும் தான் அவன் இறந்து போனால் போடக் கூடாது.. மற்றபடி இந்தப் பூவு பொட்டு கலர்ப்புடவை எல்லாம் நீ வயசுக்கு வந்த காலம் தொட்டே உனக்கானது.. அவ்வளவு ஏன் நீ பிறந்த காலத்துலயே உங்கம்மா உனக்கு வைச்சு அழகு பாத்திருப்பா.. அதையெல்லாம் துறந்து வெள்ளை நிறம் உடுத்தோணும் எண்டு எந்த அவசியமும் இல்லை.. காலம் ரொம்ப மாறிப் போச்சுது பிள்ளை.."

"ம்ம் புரியுதம்மா.."

"புரிஞ்சு என்ன பிரயோசனம்.. ஒண்டத்தையும் செய்ய மாட்டன் எண்டுறியே.."

"இல்லையம்மா.. ஆரும் ஏதும் தப்பாச் சொல்லுவினமோ எண்டு.."

"ஆரடி பிள்ளை தப்பாச் சொல்லுறது.. ஒரு உண்மை சொல்லட்டே உன்னில உண்மையான அக்கறை உள்ளவை ஒரு நாளும் உன்னைத் தப்பாச் சொல்ல மாட்டினம் அதைப் புரிஞ்சு கொள்ளு.."

"இருந்தாலும்.."

"நீ சரிப்பட்டு வர மாட்டாய்.. நான் ராசாவைக் கூப்பிடுறன் வா வீட்டை போவம்.."
என்று கொண்டு கனகலக்சுமி அருண்மொழிவர்மனைக் கூப்பிட்டே விட்டார்.

ஃபோனில் எதையோ தேடிக் கொண்டிருந்தவன் அவரது அழைப்பில் நிமிர்ந்து பார்த்தான்.

"இவா.. தனக்கு என்னத்துக்கு கலர்ப் புடைவை எண்டிட்டு.. ஒண்டையும் தொட்டுக் கூடப் பாக்கிறாள் இல்லை ராசா.. வாங்கோ நாங்கள் பேசாமல் வீட்டை போவம்.."
என்றவரின் வார்த்தையில், அவனது நீல விழிகள் சட்டென்று பழுப்பு நிறமாக மாறவே அவனது கைமுஷ்டி இறுகியது, அவன் கோபத்தை அடக்கப் பெரும்பாடு படுகிறான் என்பது அப்பட்டமாகவே தெரிந்தது.

அவனது கோபத்தின் வீரியம் தெரியாதவள் அல்லவே வானதி, சட்டென்று ஐந்தாறு புடைவைகளை எடுத்துத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டாள்.