• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ஒரு அண்ணனா தங்கச்சிக்கு பொருப்பா மாப்பிள்ளை பார்த்து வெச்சிருக்கேன். அதுவும் என் தங்கச்சி மனசுக்கு பிடிச்ச மாப்பிள்ளை..." என்ற அகிலனை நம்புவதா கூடாதா என்று தெரியாமல் விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள்.

அகிலன் அம்முவின் முகபாவனை எதையும் கண்டு கொள்ளாமல் அம்முவின் திறன்பேசியில் இருந்த கமலின் விவரங்களையும், புகைப்படங்களையும் தந்தையிடம் காட்டினான்.

அப்போதும் கூட கோமதி பாட்டி தன் பேரனை வம்பு வளர்த்துக் கொண்டு தான் இருந்தார். "என்னடா அகி! உன் தங்கச்சிகாரி உன் கல்யாணத்துக்கு தடையா இருந்திருவாளோனு பயந்து சீக்கிரமா அவளை துரத்திவிடப் பாக்குறேயா!"

பாட்டியின் அருகே சென்று தோளில் கை போட்டுக்கொண்டு தாடையைப் பிடித்து கொஞ்சி, "என் செல்லபாட்டி... சரியா கண்டுபிடிச்சுட்டிங்களே!!! ஆனா இப்படியே உண்மைய பேசிட்டு இருந்தேனு வையேன், தாத்தாவுக்கும் சேர்த்து பொண்ணு பாத்து கூட்டியாந்திருவேன் நியாபகம் வெச்சிக்கோ!" என்று பாட்டியை மிரட்டினான் அகிலன்.

"அடி படவா! நீ என்னடா பொண்ணு பாக்குறது... அவர் இருக்குற அழகுக்கு சும்மா வீதில நடந்து போனா கிழவில இருந்து அழகிங்க வரைக்கும் சைட் அடிப்பாளுங்க... க்கும்!"

"என் தாத்தாவுக்கு எப்பவும் ராஜ கலை தான்... ஆனா அம்புட்டு அழகா இருக்குறவரு உன்னை எப்படி கல்யாணம் செய்துகிட்டார்!!!" என்று அவனும் பதிலுக்கு பதில் வம்பு செய்து கொண்டிருந்தான்.

மற்றொரு புறம் கமலின் குடும்ப படத்தைக் கண்ட தியாகு ஒரு நொடி பனியென உறைந்து நின்றார். குடும்பத்தாருக்கும் அகிலன் கூறும் மாப்பிள்ளை அந்த கே.கே வாகத் தான் இருப்பான் என்று ஓரளவு யூகம் இருந்த போதும் தியாகுவின் முகமலர்ச்சிக்காக காத்திருந்தனர்.

ஆனால் அவரது பார்வை ஓரிடத்தில் நிலை குத்தி நிற்க, சிலையென இருப்பவரின் கையிலிருந்த திறன்பேசியை பறித்துப் பார்த்தார் கனகவேல். பார்த்த கையோடு தன் தந்தைக்கும் காண்பித்திட, ஆண்களின் முகத்தில் இருந்த அந்த சொல்லொண்ணா உணர்வு உமாவிற்கு பயத்தை ஏற்படுத்தியது.

மகள் வாழ்வின் மீதான அக்கறை அவரை யார் அந்த மாப்பிள்ளை என்று பார்க்கும் ஆவலைத் தூண்டிய போதும், அவ்வீட்டின் எழுதப்படாத சட்டமாக பிள்ளைப் பெற்ற அன்னையே என்றபோதும் கூட ஆணின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவள் தான் பெண் என்ற காரணத்திற்காக ஓரமாய் நிற்க வைக்கப்பட்டிருந்தார்.

தன் மனைவியும் தனக்கு சமமாவள் தான் என்று கருதும் தியாகு கூட பெரியவர் முன்னிலையில் எதுவும் பேச முடியாமல் மனைவியின் புறம் திரும்பாமல் நின்றிருந்தார்.

கமலின் குடும்பப் படத்தைக் கண்ட பழனிவேல் தன் பாட்டியுடன் வாய் ஜாலம் செய்து கொண்டிருக்கும் அகியைக் கண்டு உச்சக்கட்ட சுதியில் கத்தினார்.

"நம்ம குடும்பத்தையே ஊரைவிட்டு விரட்டிவிட்டவன் குடும்பத்தோட உறவு கொண்டாட உனக்கு ஆசையா இருக்கோ! உன் அத்தை எவளோ ஒருத்திக்கு பிறந்தவளுக்காக பெத்தவங்க, கூடப் பிறந்தவங்கனு யாரும் வேண்டாம்னு ஒதுங்கி இருக்கா... அவ வீட்டு மருமகளாக உன் தங்கச்சிய அனுப்ப நினைக்கிறேயா!" என்று மீசை துடிக்க கத்தினார்.

அகிலனிற்கும், அம்முவிற்கும் அத்தை மாமா மற்றும் அவர்களது இரு பசங்கள் வரை உறவுமுறை உமாவால் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க, சிறிய தகராறு ஒன்றில் குடும்பம் இரண்டாகிவிட்டது என்று தான் தெரியும்... என்ன பிரச்சனை எங்கே இருக்கிறார்கள் என்று எதுவும் தெரியாது. தெரிந்து வைத்திருக்கவும் தன் தந்தையைப் பற்றி அறிந்திருந்த தியாகு அனுமதிக்கவில்லை.

"என்ன தாத்தா ஆச்சு? அது நம்ம அத்தை குடும்பமா?" என்று அதிசயித்து கேட்க,

"ஏது!!! நம்ம அத்தையா! புதுசா என்னடா சொந்தம் கொண்டாடுறே! எப்போத்துல இருந்து வந்தா உங்க அத்தை? அந்த குடும்பத்தோடு திரும்பவும் சொந்தங்கொண்டாடனும்னு நெனச்சிங்கன்னா அது எனக்கு காரியம் பண்ணினதுக்கு அப்பறம் வெச்சிக்கோங்க..." என்று கோபமாக உரைத்துவிட்டு விறுவிறுவென்று தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

கனகவேலோ "என்னடா ரெண்டு பேரும் சேந்து இப்படி பண்ணி வெச்சிருக்கிங்க... இது ஒத்துவராது... அம்முவுக்கு அவன் சங்காத்தமே வேண்டாம்... படத்தோட சேத்து மனசுல தோனுன எண்ணங்களையும் அழிச்சிடுங்க... அது தான் எல்லாருக்கும் நல்லது" என்று கவலையில் ஆரம்பித்து, கட்டளையில் முடித்துச் சென்றார்.

அதுவரை இருந்த கலகலப்பும், மகிழ்வும் நொடி பொழுதில் தலைகீழாக மாறியிருந்தது. இத்தனை நாள் கே.கே என்ற அடையாளத்தை மட்டுமே அம்முவின் வாய்மொழி வார்த்தையாக கேட்டிருந்த அம்முவின் குடும்பத்தாருக்கு அது கமலகண்ணன் தான் என்ற செய்தியே பேரதிர்ச்சி தான்.

அம்முவின் மனநிலையோ 'எவ்வளவு கோபம் இருந்தாலும் பெற்ற மகளையும் பேரன்களையும் கண்டபோதும் கூடவா துளி பாசம் கூட இல்லாமல் போனது தன் தாத்தனுக்கு!' என்று தான் தோன்றியது.

அதே எண்ணத்தோடு தன் தந்தையின் உணர்வுகளை படிக்க நினைத்து தியாகுவை நிமிர்ந்து பார்க்க, அவரோ தலைகவிழ்ந்தபடி அங்கிருந்து நகர்ந்து சென்றார். 'அப்பாவும் ஒதுக்கி வைக்கும் அளவிற்கு அப்படி என்ன பிரச்சனை!' என்று சிந்தித்தவள் அதனையே தன் அன்னையிடமும் வினவினாள்.

உமாவும், பரிமளாவும் பிள்ளைகளுக்கு கங்காதரன் குடும்பத்தோடு ஏற்பட்ட சச்சரவுகளை விளக்கிக் கூறிட, வயதிற்கே உரிய துடுக்கில் அம்மு எடுத்தெறிந்து பேசினாள்.

"தப்பு செஞ்சது எல்லாம் நம்ம குடும்பத்தாளுங்க தான். ஆனால் எல்லா பலியையும் சிவா க்கா மேல ஏன் சுமத்துறிங்க... யார் மேலேயோ இருக்க கோபத்துல சித்தப்பா எதுக்கு மாமாவை அசிங்கமா பேசி அவமானப்படுத்தனும்... இவங்க சொல்றாங்களேனு நான் என் கண்ணாவைத் தேடிப் போகாமேலாம் இருக்க மாட்டேன். நான் போறது போறது தான்." என்றாள் உறுதியாக...

"அம்மு..... பொம்பல பிள்ளையா அடக்கமா வீட்ல பெரியவங்க சொல்றதை கேட்டு நடந்துக்கோ.... நீ மதுரைக்கு போக வேண்டாம்... இங்கேயே வேற ஹாஸ்பிடல் பாரு" என்றான் அகிலன்.

"அகி நீயும் சித்தப்பா, தாத்தா மாதிரி தான் இருக்க போறேயா? உன் கிட்ட இதை எதிராபார்க்கலே அண்ணா..."

"ஏன் எதிர்பார்க்கலே? நானும் அவங்க ரத்தம் தானே! அவங்கள மாதிரி இருக்கிறதுல தப்பே இல்ல..." என்றான் தான் கூறியது சரியே என்ற த்வனியில்...

"அவங்களோட எண்ணங்களே தப்புனு தான் சொல்றேன் அகி..." என்று அவளும் பட்டென்று கூற,

"தாத்தா சொன்னதை கேட்டேல... இதுக்கும் மேல உனக்கு அவன் முக்கியமா? இல்லே தாத்தா முக்கியமானு டிஸைட் பண்ணிக்கோ! ஆனா ஒன்னு போகனும்னு முடிவெடுத்துட்டா உன் அத்தை மாதிரி அப்படியே போயிடு... அந்த கமலகண்ணன் வொய்ஃபா திரும்ப இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வெச்சே கண்டந்துண்டமா வெட்டி போட்டிடுவேன் பாத்துக்கோ" என்று மிரட்டிச் சென்றான்.

எப்போதும் எவ்வளவு பெரிய சண்டை நேர்ந்தாலும், எவ்வளவு தான், தான் அவனை காயப்படுத்தியிருந்தாலும், இறுதியில் தனக்கு சாதகமாக பேசும் அண்ணன் கூட இன்று வெறுப்பை கொட்டிச் செல்கிறானே என்ற வருத்தம் வேறு அம்முவின் மனதில் ஏறிக் கொண்டது.

என்ன செய்வது யார் பக்கம் முடிவெடுப்பது என்று தெரியாமல் யாரும் அறியாவண்ணம் அழுது கரைந்தாள் அம்மு. தன் காதலை நிராகரித்த கமலைத் தான் இழக்கத் துணிந்திருந்தாள். ஆனாலும் அது அவ்வளவு எளிதல்ல என்று ஒவ்வொரு முறையும் மறக்க நினைக்கும் போது அவள் மனம் கொள்ளும் வேதனை அவளுக்கு புரிய வைத்தது.

இருந்தும் தான் எடுத்த முடிவில் தெளிவாக இருந்தவள், தன் குடும்பத்தாருக்காக இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் மகளின் மனம் அறிந்த தியாகு அவள் படும் வேதனையை சகிக்க முடியாமல், ஒரு முடிவோடு அவளிடம் சென்றார்.

"அம்மு... நீ எப்போ ட்யூட்டி ஜாயின் பண்ண போறே!"

"ம்ம்ம்? நான் இங்கே வேற ஜாப் அப்ளை பண்ணிருக்கேன் ப்பா... கிடைக்கவும் போகனும்..."

"ஏன்? மதுரை ஹாஸ்பிடல் என்னாச்சு?"

"என்ன விளையாட்டா இருக்கா உங்களுக்கு! வீட்ல எல்லாரும் பேசாறதை கேக்கதனே செய்றிங்க? பின்னே இது என்ன அர்த்தம் இல்லாத கேள்வி!"

"ஆனா நானும் உன் அம்மாவும் எதுவும் சொல்லலேயே!" மகளின் வாழ்வில் பெற்றோருக்கால்லவா முதலிடம் என்று வலியுறுத்தினார்.

தன் தந்தையை அதிர்ச்சியாக பார்த்து வைத்தாள். உள்ளே சென்ற குரலில் "ஆனா அண்ணனுக்கும் தான் பிடிக்கலேயே!"

"அவன் கெடக்குறான்... உங்க தாத்தாவும் சித்தப்பனும் ஆடுறவரைக்கும் தான் அவன் ஆட்டமெல்லாம்... அப்பறம் அவனும் அடங்கிடுவான்..."

"ஆனா அதுவே புளியங்கொம்ப புடிக்குற கதையா இருக்கே! யார் யாரோ பேசின பேச்சுக்கும், செய்த தப்புக்கும் இந்த வீட்டு பெண் வாரிசுகள் தான் தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கோம்... அத்தை பிறந்த வீட்டு பக்கம் வரமுடியாம கஷ்டபடுறாங்க... நான் பிறந்த வீட்லேயே இருந்தும் கஷ்டப்படுறேன்..."

"அதை தான் நானும் கேக்குறேன்... நீ ஏன் இங்கே இருந்து கஷ்டபடுறே! போ........ போயி உன் அத்தை மகனை கல்யாணம் செய்து உன் அத்தைய இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வா!"

"ப்பா...."

"கமல் உன் அத்தை பையன்றதுக்காக இதை நான் சொல்லலே டா... உன் மனசுக்கு பிடிச்சவன் கேரக்டரை மட்டும் தான் பாக்கனும்னு நெனச்சேன்... பாத்துட்டேன்... கமல் எனக்கு மாப்பிள்ளையா வர்றது எனக்கு முழு சம்மதம்... நீ போ... போயி அந்த ராஸ்கல் சட்டைய பிடிச்சு கன்னத்துலேயே நாலு அடி அடிச்சாவது உன் காதலை புரியவை..." என்றிட தாவிச் சென்று அவரை அணைத்துக் கொண்டாள் அம்மு.

அதன் பிறகு தான் வீட்டில் இருப்போர் எந்த வித எதிர் கேள்வியும் கேட்க முடியாதபடி ஒரு நாடகத்தை நிகழ்த்தி, அம்முவை மதுரை அனுப்பி வைத்தது எல்லாம்.

இப்போதும் தன் தந்தையின் வார்த்தைகளை நினைத்துப் பார்த்தவள் மனதில் அவர் சொன்னபடியே செய்தால் தான் என்ன என்றிருந்தது... கன்னம் பழுக்க நாலு அறைவிட்டாவது தன் காதலை சொல்ல வேண்டும்...

ஒரு நாளைக்கு ஆயிரம் முறையேனும் இம்சை என்று அழைப்பவனை பாடாய் படுத்தி துரத்தித் துரத்தி காதல் செய்யும் ஆசை மேன்மேலும் கூடியது. அந்த எண்ணம் கூட, எவ்வளவு தான் அவள் அவனை இம்சித்தாலும் அவனது கைகளிலும், கண்களுக்குள்ளும், ஹிருதத்திலும் அல்லவா அவளை தாங்குகிறான்...

அப்படிப்பட்டவனது காதலை அடைய இன்னும் சில துயரங்களை தான் தாங்கிக் கொண்டால் தான் என்ன! என்ற எண்ணமே அவனை மீண்டும் தேடிச் செல்லும் துடிப்பை அவளுக்குள் ஏற்படுத்தியது.

இம்முறையும் தந்தையின் துணையை நாட முடியாது... அப்படி செய்தால் அவரும் மாட்டிக்கொள்வார்... என்று தோன்றிட, வேறு வழி யோசித்தாள். சட்டென ஒரு எண்ணம் தோன்றிட,திறனாபேசியை எடுத்து மருத்துவமனைக்கு மின்னஞ்சல் செய்துவிட்டு அது சென்றுவிட்டதை உறுதி செய்து கொண்டு தான் அனுப்பிய மின்னஞ்சலை நீக்கம் செய்துவிட்டாள்.
००००००००००

இந்த ஒரு வாரத்தை அன்னையின் முகம் காணாமல், மற்றவர்களின் கட்டாயத்திற்காக மூன்று வேளையும் கொரித்து, வேலை என்று காரணம் காட்டி அரைகுறை உறக்கத்தோடு ஆமை வேகத்தில் கடந்திருந்தான் கமல்.

இரவு உணவு எட்டிக்காயாய் கசக்க, போதும் என்று கூறி பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டான். படுக்கையில் உடலைக் கிடத்தியவனுக்கு தன்னவளின் வாசம் நாசியை துளைக்க, அவள் உடுத்தி அவிழ்த்து வைத்துச் சென்றிருந்த உடை தனது மேனி தழுவியிருப்பதை உணர்ந்து கழற்றி மெத்தையில் எறிந்தான். வேறு உடை மாற்றியும் அவளது வாசமே அவனை இம்சித்தது... மெத்தை விரிப்பையும் கசக்கி தூக்கி எறிந்துவிட்டு பொத்தென படுக்கையில் குறுக்கே விழுந்தான்.

சரியாக சாப்பிடாமல் சென்றுவிட்டானே என்று மனம் கேளாமல் அருந்துவதற்கு பால் எடுத்து வந்த மிதுன்யா கமலின் அலப்பறைகளைக் கண்டு அறைக்குள் நுழையாமல் அப்படியே திரும்பிச் சென்றுவிட்டாள்.

நல்லிரவு தாண்டியும் உறக்கம் வராமல் திறன்பேசியை உருட்டிக் கொண்டிருந்த கமலின் கைகள் தானாக அவளது புலனக் குறுந்தகவல் பக்கத்தில் வந்து நிற்க, அதில் இருந்த 'சாப்பிடேயா? தூங்குடா! லவ் யூ, மிஸ் யூ, அப்பறம்?' என்று அவள் அனுப்பியிருந்த ஒற்றை வார்த்தைகளில் கூட அன்பு கொட்டிக்கிடந்ததாகவே உணர்ந்தான்.

"ஏன் டி என்னை இவ்ளோ லவ் பண்றே! உனக்கு மொதோவே நான் உன் அத்தை பையன்னு தெரியும் தானே! அப்பறமும் ஏன் என்னை தேடி வந்தே! என்னை பத்தி தெரிஞ்சிருந்தும் ஏன் என்னை அவ்ளோ காதலிச்சே! தப்பு பண்ணிட்ட டி நீ... பெரிய தப்பு பண்ணிட்ட... தகுதியில்லாத ஒருத்தன் மேல உன் காதலை அளவுக்கு அதிகமாவே கொட்டிட்டே! இப்போ அந்த காதலை திருப்பிக் கொடுக்க கூட முடியாத சுயநலவாதியா நான் இருக்கேன் டி! ஆனா ஒன்னு நீ கொடுத்த காதல் என் மனசு ஃபுல்லா நெறஞ்சு கிடக்கு. அது பஸ்ட் ஆகுற அன்னைக்கு நீ என் பக்கத்துல இல்லேனா கண்டிப்பா நான் அந்த வலி தாங்க முடியாமலேயே செத்திடுவேன் டி..." என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

००००००००००
அந்த பெரிய மருத்துவமனையின் வரவேற்பிலிருந்து அவசர அறுவை சிகிச்சை பிரிவு வரை நல்லிரவிலும் படு மும்பரமாக இயங்கிக் கொண்டிருந்தது. அதன் தலையை மருத்துவர் அறையில் அமர்ந்திருந்த அந்த நபரோ அம்முவின் கோப்புகளை கையில் வைத்து பார்த்தபடி, 'தானா வந்த பேஷண்ட்டையும் காப்பாத்திட்டு நீயும் எஸ்கேப் ஆகிட்டேல! உன்னை அப்படியேலாம் விட்டுட மாட்டேன்.... உன்னை எப்படி என்கிட்ட வரவைக்கனும்னு எனக்கு தெரியும்' என்று நினைத்த வண்ணம் இருக்க,

"டாக்டர் ஆப்ரேஷனுக்கு எல்லாம் ரெடி" என்று செவிலியர் கூற அவரது உதவியுடன் அறுவை சிகிச்சை உடையணிந்து சிகிச்சை அறை நோக்கி சென்றார் அவர்.
எட்டு தட்டை எலும்புகளுக்கு நடுவே பாதுகாப்பாய் இருக்கும் மூளையில் பாதிப்பு என்றால் அது எவ்வளவு கொடூரமான விபத்தாக இருந்திருக்க வேண்டும்!!! அப்படி பட்ட விபத்தை தன் தேவைக்காக ஏற்படுத்திய மருத்துவர் எப்படிப்பட்ட அரக்கனாக இருப்பார்!!! இதோ இந்த அறுவை சிகிச்சையும் மூளை சம்மந்தப்பட்ட சிகிச்சை தான். விடிந்தால் அந்த நோயாளியின் உறவுகளுக்கு சொல்ல அவர்களிடம் உள்ள ஒரே செய்தி "ஆப்ரேஷன் சக்ஸஸ்... பட் பேஷண்ட் டெத்" என்பது தான்.

சீண்டல் தொடரும்.

யாரந்த மருத்துவர்? அம்மு அவரிடம் மாட்டிக்கொள்வாளா? அதற்கு முன்னால் கமல் அம்முவை தேடிச் சென்று அவள் கரம் பற்றுவானா!!!
 
Top