• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 36

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
இந்த பகுதி முற்றிலுமாக அறிவியல் புனைவு சார்ந்த பதிவு... இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மூளை மாற்று அறுவை சிகிச்சை என்பது மட்டுமே உண்மை... மற்ற அனைத்தும் கற்பனையே

32

இதுவரை பணக்கார நாடுகளில் மட்டுமே செய்யக் கூடிய சில சிகிச்சைகளில் ஒன்றான பகுதி மூளை மாற்று அறுவை சிகிச்சையை முறைகளை முதன்மையாகக் கொண்டு மூளை மாற்று அறுவை சிகிச்சை நம் தமிழகத்திலும் சட்டத்திற்கு புறம்பாக நடத்திப் பார்க்க நினைத்திருந்தார் Dr.ஜெயதர்மன். இதன் மற்றொரு உள்நோக்கம் மனவளர்ச்சி குறைபாடு உடையவர்களுக்கு இந்த சிகிச்சை உதவுமா என்ற ஆராய்ச்சி தான். அதிலும் பயனடைய போவது மேலை நாடுகள் தான்.

உடலுறுப்பு கடத்தல் என்பது போல் மூளை அணு கடத்தல். இது எத்தனை சதவீதம் சாத்தியம் என்று தெரியாது... ஆனால் சில மேலைநாடுகளில் நடந்த மூளை சம்மந்தமான அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் Dr.ஜெயதர்மன்

மூளை மாற்று அறுவை சிகிச்சை. அதாவது மனித உடலின் பாதிப்புற்ற பாகங்களை மாற்றியமைத்து அவரை மேலும் சிலகாலம் உயிர் வாழச் செய்வது போல் மூளை பாதிப்பு உள்ளவருக்கு அதனை மாற்றியமைத்து சரி செய்ய முடியுமா என்று அறிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி மட்டுமே.

மூளை மாற்று சிகிச்சை என்பது சாத்தியமற்ற ஒன்று என்று மருத்துவ உலகம் அறிந்த ஒரு உண்மை தான். ஆனால் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டுவது தானே மனிதனின் பண்பு.

இதுவரை மூளையில் உள்ள நரம்பு திசுக்களை மாற்றியமைத்து அதாவது பகுதி மூளை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பக்கவாதம் போன்ற நோய்களுக்கு நிரந்தர தீர்வு கண்டுபிடிக்க முடிந்த மருத்துவத்தால் மூளை பாதிப்பை சரி செய்ய முடியவில்லை என்பது பெரும் சவால் தான்.

அதற்கு முக்கிய காரணம் மூளை நம் உடலின் மிக முக்கிய உறுப்பாக இருப்பது தான். நம் நினைவு திறன் முதற்கொண்டு உடலின் அனைத்து இச்சை மற்றும் அனிச்சை செயலுக்கு அடிப்படை காரணியே மூளை தான். கண், முதுகுத்தண்டு, மற்றும் மூளை நரம்போடு தொடர்புடைய கை, கால் அறுவை சிகிச்சைக்கு நரம்பியல் நிபுணர்களும், மூளை பற்றிய தனி பிரிவு நிபுணர்களும் ஒரு ஓப்பீனியன் தருவதை பார்த்திருக்கிறோம்.

அதன் காரணம், மூளையோடு நம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் நேரடி தொடர்பு உண்டு. அறுவை சிகிச்சையின் போது மூளைக்குச் செல்லும் நரம்பில் ஏதேனும் சேதாரம் ஏற்பட்டுவிட்டால் அந்த பாகம் செயல்படாமல் போகவும் வாய்ப்புண்டு. அதாவது கையில் அறுவை சிகிச்சை செய்யும் போது மூளைக்குச் செல்லும் நரம்பில் சேதம் ஏற்பட்டுவிட்டால் நம்மால் கையை அசைக்க முடியாது.

மூளை மாற்று அறுவை சிகிச்சையின் போது மூளைக்குச் செல்லக் கூடிய சிறிய நரம்போ அல்லது ரத்தக் குழாயோ சேதம் அடைந்தால் நிச்சயம் மரணம் தான். கால தாமதமும் கூட உயிரைப் பரித்துவிடும் என்பதும் ஒரு காரணமே.

ஆயிரத்தில் ஒரு சதமாக இந்த மூளை மாற்று சிகிச்சை வெற்றியடைந்தால் கூட மாற்றப்பட்ட அந்த நபர் யாருடைய நினைவுகளைப் பெற்றிருப்பார் என்பது இன்னமும் கேள்விக்குறியே!

நிச்சயமாக அந்த மூளை டோனருக்குரிய நினைவுகளைத் தான் பெற்றிருக்கும். அப்படியென்றால் பையர் தன் நினைவுகளை இழக்கும் பட்சத்தில் தன் சுற்றம் மறந்து, நட்பை நிராகரித்து, உறவுகளைத் துறந்து உயிருடன் இருப்பேன் என்பதற்காக மட்டுமே அந்த உடலை சுமக்க விரும்புவாரா! என்பது சந்தேகமே...

இதனாலேயே மூளை மாற்று அறுவை சிகிச்சை இதுவரை இவ்வுலகில் எங்கேயும் நடத்தப்படவில்லை. நடத்த முயற்சித்தவர் எவரும் வெற்றி காணவில்லை.

அப்பேற்பட்ட சிகிச்சையை நடத்திக் காட்டி வெற்றி பெரும் முனைப்பில் சட்டத்திற்கு விரோதமாக சில செயல்களை செய்து வருகிறது தர்மா மருத்துவமனை.

பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளில் மட்டுமே நடத்த வேண்டிய இந்த ஆராய்ச்சி சட்ட விரோதமாக நடத்தப்படுவதால் எவருக்கும் சந்தேகம் வராத அளவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கக் கூடிய சிறிய மருத்துவமனைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து தன் சோதனையை நடத்துகிறார் தர்மா மருத்துவமனையின் உரிமையாளர் Dr.ஜெயதர்மன்.

இதற்காகவே மூளை பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளைத் தேடிப்பிடித்து, அவர்களுக்கு மூளைச்சாவு அல்லது மூளையில் பெரும் பாதிப்பு என்று கூறி, மூளையில் சிறிய அறுவை சிகிச்சை அல்லது உறுப்பு தானம் என்ற பெயரில் அறுவை சிகிச்சை பிரிவில் கேன்சர் நோயால் இறந்த ஒருவரின் மூளையை மாற்றி தனது ஆராய்ச்சியை செய்து வருகின்றான் அவரது மகன் Dr.ஜகன் தேவ்.
★★★★★★★★

இவை அனைத்தையும் முன்பே அறிந்து தான் அம்முவைத் தேடி வந்தான் கமல். அதுவும் அவள் பத்திரமாகத் தான் இருக்கிறாள் என்ற நம்பிக்கையில். அதன் பின்னரும் தேவ்வின் எண்ணை GPS உதவியோடு தேடிப் பார்க்க, எந்த பலனும் இல்லை. அடுத்து அம்முவின் எண் கொண்டு தேடக் கூறினான்.

அதுவும் நெடுஞ்சாலையில் சுவிட்ச்சிடு ஆஃப் என்று காண்பிக்க, அதன் பின்னும் துவண்டு போகாமல் தன் முயற்சியைத் தொடரச் செய்தான் Dr.போஸ்-ஸின் GPS-ஐ ட்ராக் செய்தபடி. ஆனால் சற்று நேரத்திற்கு முன் போஸ்-ஸின் எண்ணும் கேரளத்தில் கோவளம் அருகே சுவிட்ச் ஆஃப் ஆகிவிட, இனி யாரைத் தொடர்வது என்று தெரியாமல் தத்தளித்தான்.

அப்போது தான் நேத்ரா உண்மை அனைத்தும் அறிந்து அவனை நெருங்கினாள். இருவரின் அழுகையைக் கண்ட ராம் என்னவென்று விசாரிக்க, வீட்டில் எவருக்கும் தெரியக் கூடாது என்ற நிபத்தனையோடு ராமிடம் அனைத்தையும் கூறினான் கமல்.

"இனிமேலும் டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பு கமல்?"

"எங்கே போறது ராம்? டெஸ்டினேஷன் தெரியாம எங்கே தேட சொல்றிங்க?"

"இப்படி ஹோப் இல்லாம பேசாதே! உன் அமுலு உன் வருகைய எதிர்பார்த்து தன் உயிரை கையில பிடிச்சு காத்துட்டு இருப்பா... ஆனா நீ இல்லாம்..." என்ற ராமின் பேச்சில் இடை புகுந்தான் கமல்.

"அவ..... உயிரோட இருப்பா தானே ராம்... நாம போலாம்... அவளை கூட்டிட்டு வந்திடலாம்..." என்று எழுந்தவன், மீண்டும் மெத்தையில் தொப்பை விழுந்து,

"உயிரோட இருந்தாலும் என்னை மறந்திருப்பால்ல!!!... என்னை துரத்திச் துரத்தி காதலிச்ச காதலை மறந்திருப்பால்ல!!!... நான் அவளை எவ்ளோ தான் துறத்திவிட்டாலும் பதிலுக்கு அவ எனக்குக் கொடுத்தது காதல் மட்டும் தான் ராம்." என்றவனது வார்த்தைகளில் அவ்வளவு வலி....

இவ்வளவு நேரம் எப்போதடா வடிகால் கிடைக்கும் என்று ஏங்கியது போல அவனது உள்ளம்!!! மேலும் அவனே தொடர்ந்தான்.

"ரொம்ப அசால்ட்டா பொய் சொல்லுவா தெரியுமா ராம்!!!... ஆனா அதுல இருக்க உண்மை,அவளை புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு மட்டும் தான் தெரியும்...

அம்மா கிட்ட கூட ஒரு டைம் ரொம்ப சலிப்பா 'கமலை மாதிரி காதல் சொல்லி சொதப்பினவனை பார்த்ததே இல்லே!'னு சொன்னாளாம்... ஆனா அவ கிட்ட உன் வாழ்நாள்லேயே மறக்க முடியாத மொமென்ட் எதுன்னு கேட்டா கண்டிப்பா நான் என் காதலை அவகிட்ட சொல்லிய அந்த தருணத்தை தான் சொல்லுவா...

அவளுக்கு என்னை அவ்ளோ பிடிக்கும்... ஆனா இப்போ அதெல்லாம் மறந்திருப்பால்ல!!!

ஏன்? எதுக்கு? எப்படினே தெரியாம முளைத்த காதல் அவளது... அதை எனக்குள்ளும் விதச்சுட்டு போயிட்டா.... அந்த காதல் விருட்சம் என் கண்ணு முன்னாடியே அழிஞ்சு சாகுறதை என்னால பாக்க முடியாது ராம்... எனக்கு அவ்ளோ தைரியம் இல்லே" என்று சிறு இடைவெளி விட்டு "வேண்டாம்.... போக வேண்டாம்.... நாம அவளைத் தேட வேண்டாம்..." என்றான் வற்றா கண்ணீரோடு...

அவனது வருத்தம் தாளாமல் "கமல்... அப்படிலாம் இருக்காது டா... நானும் வர்றேன்... உன் அமுலுவே உன் அமுலுவாவே கூட்டிட்டு வரலாம்... வா" என்று அவனது வேதனையை தன்னுள் தாங்கி வலியோடு உரைத்தாள் நேத்ரா...

"அவ என் அமுலு தான் சிவா..... ஆனா இனிமே இல்லே இல்லையா!!!.... நாம அவளை தேடி கண்டுபிடிக்கிறதுக்குள்ள ஆப்ரேஷன் முடிஞ்சு என்னைவிட்டு ரெம்ப தூரம் போயிருப்பா... சிவா!!!.... என்னை யாரோ போல பார்ப்பா.... என்னால...... என்னால..... அதை தாங்க முடியலே சிவா... நெனச்சு பார்த்தாலே பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு சிவா..... செத்திடலாம் போல கூட....." என்றவனின் கன்னம் நேத்ராவின் கரத்தால் செவ்வனே சிவந்தது.

மீண்டும் இயலாமையோடு மெத்தையில் அமர்ந்த நிலையிலேயே கைகளால் கண்களை மூடி அழுதவனை அணைத்துக் கொண்டாள் அவனை தண்டித்தவளே! ராம் நான் எப்போதும் உன்னோடு துணையாக இருப்பேன் என்பதை காட்டும் விதமாக இருவரின் தோளையும் சேர்த்தார் போல் அணைத்து நின்றான்.

"லாஸ்ட்-டா Dr.போஸ்-ஸோட சொல்ஃபோன் சிக்னல் கட்டான இடத்துக்குப் போவோம்... அங்கே போனா ஏதாவது க்ளூ கிடைக்கும்..." என்ற கணீர் குரலுக்கு சொந்தக்காரன் யாரெனத் தெரிந்து மூவரும் விலகி வாசல் புறம் பார்க்க, அங்கே அகிலன் நின்றிருந்தான்.

அவனது விழிநீர் தடமும், நயனச் சிவப்பும் அனைத்தையும் கேட்டுவிட்டான் என்றே உரைத்தது. அதில் கோபம் கொண்ட கமல், வெளி வாசலை ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு அகிலனை முறைத்தான்.

கமல் எதற்கு முறைக்கிறான் என்று உணர்ந்த அகிலனும் எவரையும் நிமிர்ந்து பாராமல், "ஸ்டேஷன்ல கேஸ் ஃபைல் பண்றதுக்கு அம்முவோட ஃபோட்டோ கேட்டாங்க.... அதை எடுக்க வந்தப்ப தான் எதார்த்தமா எல்லாம் கேட்க வேண்டியதாகிடுச்சு... வீட்ல...... யாருக்கும் தெரியாது....தெரியவும் வேண்டாம்...... தெரிஞ்சா கண்டிப்பா தாங்க மாட்டாங்க..." என்னும் போதே அவனது கண்களும் மீண்டும் மடை திறந்தது.

இன்னமும் நேத்ரா கமலை அரவணைத்தபடி தான் நின்றிருந்தாள். அதனைக் கண்ட அகிலனுக்குமே இந்த அரவணைப்பு தேவைப்படத் தான் செய்தது. இருந்தும் ஆண்(தான்) என்ற அந்தஸ்த்து அரவணைப்புக் கேட்கும் மனதையும் தாண்டி தலைதூக்கி நின்றிட, இறுகிய முகத்துடன் தன் கண்ணீரைத் துடைத்து தன்னை சமன் செய்து கொண்டான்.

"கமல்.... கிளம்பு... நாங்க உனக்கு துணையா இருப்போம்... வா இப்போவே கேரளா போலாம்... அம்முவைத் தேடலாம்." என்று அவனை விரட்டினாள் நேத்ரா.

அப்போதும் அவன் அசையாமல் அமர்ந்திருக்க, "தரு... நீ போயி நாம கிளப்புறதுக்கு ஏற்பாடு பண்ணு... அவன் வருவான்..." என்று கூறி அங்கிருந்து தன்னவளை அனுப்பி வைத்தான் ராம்.

வாசல் வரை சென்றவளை மீண்டும் அழைத்து, "தரு... யார்கிட்டேயும் எதுவும்..." என்றவனது வார்த்தைகள் அவள் முடித்து வைத்தாள் "சொல்லமாட்டேன் ராம்" என்று.

"கமல்... நீ இல்லாம எங்களால அம்முவைத் தேட முடியும் தான். ஆனா உன் காதல் மட்டும் தான் அவகிட்ட நம்மல சீக்கிரம் கொண்டு சேர்க்கும்... சொல்றதை புரிஞ்சுக்கோ கமல்" என்று ராம் பக்குவமாக எடுத்துக் கூற, வீறிட்டு கத்தினான் கமல்,

"உங்களுக்குத் தான் புரியலே! என் அமுலு முன்னாடி நின்னு யாரோ ஒருத்தன் போல என்னை நான் அறிமுகப்படுத்திக்க விரும்பலே... எந்த குழந்தைக்கும் இது தான் உன் அம்மானு யாரும் சொல்லித் தர தேவையில்லை... அம்மாவோட அரவணைப்பே போதும்... குழந்தை தன்னால புரிஞ்சுக்கும்... என் அமுலு என்னை அப்படித் தான் உணரனும்னு நெனைக்கிறேன். ஆனா அது நடக்க கொஞ்சமும் ச்சான்ஸ் இல்லே... அதான் சொல்றேன், நான் வரலே... என்னை விட்டுடுங்க..." என்றவனை என்ன சொல்லி சம்மதிக்க வைப்பது என்று தெரியாமல் நின்றிருந்தான் ராம்.

நிதானமாக கமலின் முன்னால் வந்து நின்ற அகிலன் அவனது கையைப் பிடித்து அதில் புகைப்படம் ஒன்றை திணித்தான். அதில் மழலை அம்முவும் அவள் அருகே தன் காதுகளை அவளது கைகளிலும், தன் மூக்கை அவளது இதழ்களுக்கு நடுவேயும் சிக்கவிட்டுத் தவித்து எச்சில் மனம் பிடிக்காமல் அழுது வடியும் சிறுவன் கமலும் இருந்தனர்.

அதனைக் கண்ட கமலுக்கு ஒருபுறம் கண்கள் மடை திறந்தாலும், மறுபுறம் இதழ்கள் தானாக 'இம்சை' என்று உச்சரிக்கவும் தவறவில்லை.

"இது...... அம்மு பிறந்த கொஞ்ச நாள்லயே எடுத்தது. என் அம்மா ஸ்பரிசத்துக்கு அப்பறம் அவ உணர்ந்தது உன் ஸ்பரிசமாத் தான் இருக்கும்... அதை அவளுக்கு நீ தர நெனச்சா கிளம்பு இல்லேனா கூட நானே பார்த்துக்கிறேன்" என்ற அகிலன் ராமின் புறம் திரும்பி "மாமா... நீங்களும் கூட இங்கேயே இருங்க... நான் மட்டும் போறேன்" என்றான்.

அகிலனின் அழைப்பை கவனித்த போதும் கூட அதனை பெரிதாக கண்டுகொள்ளாமல் "ம்ம்ம்" என்று மட்டும் பதிலுரைத்தான் ராம்.

கமலோ "ராம்... அவன் ஏதோ தனியா போறேன்-னு உளர்றான்.. நீங்களும் சரினு சொல்றிங்க..." என்று ராமிடம் கூறிவிட்டு அகிலனிடம் "நீ தனியாலாம் போக வேண்டாம்..."

"அவ என் தங்கச்சி... நான் போறேன்... யார் வர்றிங்களோ வாங்க... ஆனா என்னே யாரும் தடுக்க வேண்டாம்..."

"டேய்... உன்னை தான் தனியா போக வேண்டாம்னு சொல்றேன்ல.... சொன்னா கேக்கமாட்டேயா?"

"அப்போ நீ வா! என்னையும் தனியா விடமாட்டே!!! அவங்க போறேன்னு சொன்னாலும் சரினு சொல்லமாட்ட... நீயும் கூட வரமாட்ட... இது என்னடா அநியாயம்" என்று கமலுடன் மள்ளுக்கு நின்றான்.

ஒரு பெருமூச்சு எடுத்துக் கொண்ட கமல், அகிலன் பேச்சின் இறுதியில் "சரி வரேன்..." என்று கத்தி விட்டு சட்டென குளியலறை புகுந்தான்.

கமலும், அகிலனும் மட்டும் அம்முவைத் தேடி கேரளா செல்வதாகக் கூறிட, நேத்ரா சற்றே கோபமுற்றாள். அகிலன் பிடிவாதமாக மறுத்துவிட அவளது கோபம் அவன் மீது திரும்பியது. இதனை வேடிக்கை பார்த்த ராமின் மீதும் கூட அவளுக்கு கோபம் தான்.
★★★★★★★★★★

சேர வள நாடு தன்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களை அப்படி ஒன்றும் அரவணைத்திடவில்லை. Dr.போஸ்-ஸின் தடங்காட்டிச் செயலி இறுதியாக காட்டி அணைத்து வைக்கப்பட்ட இடம் கோவளம் கடற்கரை தான். அதனைக் கொண்டு அங்கிருக்கும் சுற்றுலா கடைகள், படகு சவாரி படகோட்டிகள் மற்றும் ஊதுபந்து வியாபாரிகள் முதற்கொண்டு குண்டூசி வியாபாரிகள் வரை அனைவரிடமும் விசாரித்தும் பலன் இல்லை. மாறாக மலபார் காவலர்களிடம் மாட்டிக்கொண்டு நான்கு ஐந்து நாட்கள் சிறையில் இருந்தது தான் மிச்சம்.

மீண்டும் கமலின் நம்பிக்கை உடையத் தொடங்கிட, இம்முறை அகிலனுமே சேர்ந்து அயர்ந்து தான் போனான். மேலும் ஒரு வாரம் கடந்தும் சிறு துரும்பு கூட கிடைக்காமல் போனது தான் கமலால் நம்ப முடியாமல் போன விடயமே!!!

மீண்டும் ஒரு தேடலாக கோவளம் வந்திருக்க, தூரத்தில் முககவசம் அணிந்து, கண்களில் குளிர் கண்ணாடியும், தலையில் தொப்பியுமாக ஒரு உருவம் இவர்களை நெருங்குவதும், விளகுவதுமாக இருக்க அதனை முதலில் கண்டுகொண்டது அகிலன் தான். அகிலன் தன்னை நோட்டமிடுகிறான் என்றவுடன் அவ்வுருவம் அங்கிருந்து நகரத் தொடங்கியது.

நொடியும் தாமதிக்காமல் அகிலன் அவ்வுருவத்தைத் தொடர, கமல் என்னவென்று விசாரித்தபடி அகிலனைத் தொடர்ந்தான். அகிலன் அவ்வுருவத்தைக் கை காட்டிட, இப்போது அவ்வுருவம் கமலைக் கண்டு அங்கிருந்து விரைந்து ஓடினான்.

சீண்டல் தொடரும்.