• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
"ராம் பையா ப்ளீஸ், நான் நமக்காகவும் தான் இந்த முடிவு எடுத்தேன்" என்று அடிக்குரலில் கெஞ்சினாள் மிதுன்யா.
அவளின் ராம் பையா என்ற அழைப்பில் சிலையாகி நின்றான் ராம்.

பல வருடங்களுக்குப் பின் மிதுன்யாவின் 'ராம் பையா' என்ற அழைப்பைக் கேட்டவன் சர்வமும் அடங்கி, கண்ணீருடன் அவளை நோக்கினான்.

மிதுன்யாவின் குழந்தைப் பருவத்தில் ஆரவைப் பார்த்து இவளும் ராம் பையா என்று தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
அதுவரை பெற்றோருக்கு சிறு குழந்தையாகத் தெரிந்தவள், பருவமெய்தியப்பின் பெரியவளாகத் தோன்றிட ராமிற்கே அவளை கல்யாணம் செய்து தர வேண்டும் என்ற ஆசை தோன்றியது.

ஆதலால் பையா என்ற அழைப்பைத் தவிர்த்து மச்சான் என அழைக்கச் சொல்லி கட்டளையிட்டார் குந்தவி. ஆனால் ராமிற்கோ அப்போதிருந்தே மச்சான் என்று அழைத்தால் பிடிக்காது. அவளை திட்டிக் கொண்டே இருப்பான்.
மிதுன்யா பேச்சுலர் டிகிரி முடித்தவுடன் கல்யாணப் பேச்சை ஆரம்பித்தார் தாத்தா.

"தாத்தா, நான் மாஸ்டர் டிகிரி படிக்கப் போகிறேன்" என்று கூறினாள்.

"கல்யாணத்தை முடிச்சிட்டு படி. ராம் உனக்கும் உன் படிப்புக்கும் பக்கபலமா இருப்பான்."

"இல்ல தாத்தா.... அது... வந்து...படிச்சிட்டு கல்யாணம் செய்துக்கிறேனே???"

"அது இல்லைடா ம்மா..." என்று தாத்தா ஏதோ சொல்லவர இடை புகுந்தான் ராம்.

"மிதுன் படிக்கட்டும் தாத்தா. எனக்கும் இப்போ கவனம் முழுசும் இன்டஸ்ட்ரி மேல தான் இருக்கு. இன்னு இரண்டு வருடம் தானே..." என்று அவனும் இணைந்து கெஞ்சினான்...

ராம் அவள் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்தது இல்லை. தாத்தாவிடம் பேசி அவளின் மேல்படிப்பிற்கு சம்மதம் வாங்கிக் கொடுத்தவன், குந்தவி மற்றும் சுஷேண் கிருஷ்ணாவிடமும் பேசி மிதுன்யாவின் மாஸ்டர் டிகிரிக்கு வழிவகுத்தான்.

இப்போது மாஸ்டர் டிகிரியும் முடித்துவிட்டாள். மீண்டும் பெரியவர்கள் ஜாடைமாடையாக கல்யாணப் பேச்சை எடுக்க, எப்படி ஒத்தி வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மிதுன்யா.

ராமும் அதே மனநிலையில் தான் இருந்தான். தன் தம்பிகளுடன் இணைந்து வளர்ந்த சிறுமி என்பதால் தங்கை உறவாகவே அவன் மனம் அவளைப் பார்க்க வைத்தது.

ஒருவரின் அருகாமையில் மற்றொருவர் ஒருபோதும் காதல் உணர்ந்திடவில்லை என்பதை விட சகோதரத் தன்மையுடன் பழகிவிட்டு, திருமண வாழ்வில் எவ்வாறு பொருந்துவது என தங்களுக்குள்ளாகவே புலம்பித் தவித்தனர்.

மிதுன்யா ராமை தவிர்க்கத் தொடங்கினாள். அவளால் இயல்பாகவும் பேச முடியாமல், வருங்காலக் கணவன் என நினைத்தும் பேச முடியாமல் அவனிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினாள். அதற்கு குடும்பத்தார் வெட்கம் என்று பெயர்வைத்திட ராம் வெகுவாகக் குழம்பிப் போனான்.

மிதுன்யாவின் ஒதுக்கத்திற்கான காரணத்தை நேரே சென்று கேட்டு அறிந்திட நினைத்து அவளை தனியே சந்தித்துப் பேசினான்.

"இந்தத் திருமணத்தில் உனக்கு சம்மதமா?" என்று வினவினான்.
அவள் இல்லை என்று இடவலமாக தலையசைத்திட, தனக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றுக் கூறி அவள் மனதை குளிர வைத்தான்.

"கல்யாணத்தை நிறுத்துவது பற்றி தாத்தாவிடம் தகுந்த நேரம் பார்த்து நான் கூறிக் கொள்கிறேன். நீ நம் குடும்பத்தார் மற்ற யாரிடமும் மறுப்புத் தெரிவிக்காதே" என்றுக் கூறினான்.

அதன்பின் தான் அவனுடன் அவளால் இயல்பாகப் பேச முடிந்தது. ஆனாலும் பையா என்று அழைப்பது இல்லை. அதற்கு பதிலாக ராம் என அழைக்க ஆரம்பித்தாள்.
பெற்றோர்கள் முன் கல்யாணப் பேச்சு வந்தால் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவது போல் நடித்துக் கொள்வார்களே தவிற அவர்கள் மனதில் அப்படி ஒரு கற்பனை ஒரு நாளும் தோன்றியதில்லை.

இப்போது மிதுன்யா, ராம்கிரனுடனான திருமணத்தை நிறுத்த தனக்குக் கிடைத்த வாய்ப்பாக இந்த திருமணத்தை பயன்படுத்திக் கொள்ளத் துணிந்திருந்தாள் பெண்ணவள்.

அவளின் நோக்கம் அறிந்து கொண்ட ராம், பழிவாங்கவென கடத்திச் சென்று கட்டாயக் கல்யாணம் செய்து கொண்ட குடும்பத்தில் அவளை வாழ வைப்பதற்கு பதிலாக, தானே அவளை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருந்தான்.

"மிதுன் வேண்டாம் டா... அவன் உனக்குப் பொருத்தமானவன் இல்லே. அந்த குடும்பமே நமக்கு வேண்டாம். உனக்கு நான் இருக்கேன் டா. என்னை நம்பு ம்மா. உன்னை எப்பவும் சந்தோஷமா பாத்துக்க நம்ம குடும்பம் இருக்கு டா. நாமலும் கொஞ்ச கொஞ்சமா நம்ம மனசை மாத்திக்க முயற்சிக்கலாம்.... தாத்தாகிட்ட எல்லா உண்மையும் நான் சொல்றேன் டி... தாத்தா எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்கிறேன். ஆனால் என்னால நீ கஷ்டபட வேண்டாம் டி..."

"எப்படி ராம்?.... எப்படி என்னால உங்களை கல்யாணம் செய்துக்க முடியும்?... இத்தனை நாள் நம்ம கல்யாணத்தை நிறுத்திட நெனச்ச நீங்களா இப்படி பேசுறிங்க!!!... வேண்டாம் இனி பேச்சுக்கு கூட அப்படி சொல்லாதிங்க..."

ராமின் மனம் முழுதும் தன்னாலும் தன் குடும்பத்தாலும் தான் மிதுன்யாவை சந்தோஷமாகப் பார்த்துக் கொள்ள முடியும் என நம்பியது.

"இப்போ அப்படி பேசினா என்ன மிதுன்?... நாம ரெண்டு பேரும் கட்டிக்கிற முறை தானே!!! நமக்குள்ள புரிதல் இருக்கு. அளவு கடந்த அன்பு இருக்கு. அது காதலா மாறவும் வாய்ப்பிருக்கு....
என்னைப் பழிவாங்க நினைச்சி அந்த குடும்பம் உன்னை வாழாவெட்டியா திருப்பி அனுப்பினா நம்ம வீட்ல யாரும் தாங்கிக்கமாட்டாங்க மிதுன். அந்த எண்ணத்துல தான் அவன் உன்னை கல்யாணம் செய்திருக்கான். என்னால உனக்கு எந்த கெட்ட பேரும் வந்திடக் கூடாது மிதுன். நான் ஏன் சொல்றேனு புரிஞ்சிக்கோ டி..."

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டிட, திறந்திருக்கும் கதவைத் தட்டுவது யார் என்பது போல் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

"சாரி... அனுமதி இல்லாம ரூம் வரைக்கும் வந்ததுக்கு மன்னிச்சிடுங்க. ஆனால் எனக்கு மிதுன்யாகிட்ட பேசனும். அதான் வந்தேன்." என்று கூறிய பவனைக் கண்டு ராம் முறைத்துக் கொண்டிருந்தான்.

"என்னிடம் பேச இன்னும் என்ன இருக்கு?.... ஒருவேளை மிரட்டல் ஏதும் பாக்கியிருக்கிறதோ?" என்று எங்கோ பார்த்து மிதுன்யா வினவிட,
அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன்,அவனை நிமிர்ந்து பார்த்தவள் அவனின் முறைப்பில் தானாக "சொல்லுங்க" என்று முடித்திருந்தாள்.

ராமை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தான் பவன். 'நான் ஏன் வெளியே போக வேண்டும்!!!' என்பது போல் அவனும் பதிலுக்கு முறைத்துவிட்டு மிதுன்யாவின் அருகில் சென்று நின்றான்.

இவ்வளவு நேரம் தனக்குத் தெரிந்தளவு ஹிந்தியில் தத்தி தத்தி பேசிக் கொண்டிருந்தவன், ராமின் செயலில் தமிழில் பேசத் தொடங்கினான்.

"உன்னை மிரட்டி கல்யாணம் செய்துகிட்டதுக்கு முதல்ல மன்னிப்புக் கேட்டுக்கிறேன். உன் தங்கச்சிய சொல்லி மிரட்டினா தான் நீ கல்யாணத்துக்கு சம்மதிப்பனு தான் அப்படி சொன்னேன். ஆனால் உனக்கு இப்போ எந்த கட்டுப்பாடோ கட்டாயமோ இல்லே. உனக்கு என்னைப் பிடிக்கலேனா தாராளமா மறுக்கலாம். உன் விருப்பத்தை தான் உன் தாத்தாகிட்டயும் கேட்டிருக்கேன். உனக்கு விருப்பம் இருந்தாத் தான் அடுத்து எதுனாலும் நடக்கும். திரும்பவும் கேட்டுக்கிறேன் என்னை மன்னிச்சிடு..." என்று மீண்டும் மனமுணர்ந்து மன்னிப்பு வேண்டினான்.

அவன் மன்னிப்பு கேட்பான் என்று நினைத்திடாத மிதுன்யா அவனின் முகத்தை தான் பிரம்மிப்பாகப் பார்த்திருந்தாள். அன்று திமிராகப் பேசி தன்னை மிரட்டிய வில்லனா இவன் என்று சிந்திக்கத் தான் செய்தது அவள் மனம்.

அவன் கூறியது சாதாரண வார்த்தைகளாக இருந்த போதிலும் அவனின் நிமர்ந்து நின்ற சிரமும் தாழ்ந்திருந்த கண்களும் அவன் தன் தவற்றை உணர்ந்து தான் கேட்கிறான் என்பதை பெண்ணவளுக்குப் புரிய வைத்தது.

பவன் என்ன சொல்கிறான் என்று புரிந்திடாமல் போக மேலும் மேலும் அவனை முறைத்துக் கொண்டிருந்தான் ராம்.

ராமின் புறம் திரும்பி அவனுக்குப் புரியும்படியாக ஹிந்தியில் "உன் வீட்டுப் பொண்ணுக்கு தப்பான பேர் வந்திடக் கூடாது, ஆனால் நீ அடுத்தவீட்டுப் பெண்ணை வாய்க்கு வந்தது எல்லாம் பேசுவே.... என்ன புத்திடா உனக்கு!!!" என்று கூறிய பவன் ராமை அற்பமாகப் பார்த்து வைத்தான்.

இன்னும் தான் கட்டியத் தாலி அவள் கழுத்தில் இருப்பதைக் கண்டு கொஞ்சம் துணிவோடு மிதுன்யாவின் அருகில் வந்து நின்று, "இவள் என் மனைவி... இந்த ஜென்மத்தில் இவ ஒருத்தி தான் என் மனைவி...
இன்னைக்கு இவ என்னை வெறுத்து நான் கட்டின தாலிய கழட்டிக் கொடுத்திட்டு என்னை விரட்டியிருந்தாலும் இவளைத் தவிற வேற யாரையும் கல்யாணம் செய்துக்கக் கூடாதுன்ற முடிவோட தான் இங்கே வந்தேன்.
உன் குடும்பத்துல ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துறது என் நோக்கம் இல்லே.. எனக்குத் தேவை இப்போ நீ துடிச்சியே அது தான். இனி எந்த பெண்ணையும் அவமானப்படுத்துறதுக்கு முன்னாடி உன் வீட்லேயும் பொண்ணுங்க இருக்காங்கனு யோசி. கவலைப்படாதே இவளை வாழாவெட்டியா உன் வீட்டுக்கு அனுப்பி வைக்கமாட்டேன். என் வீட்ல இவ மகாராணி போல ரெம்ப சந்தோஷமா இருப்பா...." என்று ராமைப் பார்த்து உரைத்தவன், மிதுன்யாவின் புறம் திரும்பி

"சாரி, உன்கிட்ட பேசனும்ற ஆர்வத்துல உன்னை ஃபாலோப் பண்ணி வந்ததுல நீங்க பேசின எல்லாத்தையும் கேட்க வேண்டியதாகிடுச்சி... நீ என்னை ஏத்துக்கிட்டது தெரிஞ்சா என் குடும்பத்துல எல்லாரும் ரெம்ப சந்தோஷப்படுவாங்க... தாங்க்ஸ். இதுக்கு மேல உங்க தாத்தா சொன்ன மாதிரி என்னைக் கொன்னுபோட்டாலும் சந்தோஷமா ஏத்துப்பேன்." என்று கூறியவன் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்பு தானாக எரிந்தது.

அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வரவேற்பறையில் வந்து அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் பவனின் முன் வந்து நின்ற லட்சுமணன்,

"உங்க மனைவி, உங்க கூட வரத் தயாரா இருக்காங்க. நீங்க கூட்டிட்டுப் போகலாம்." என்று தன் முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு கூறிவிட்டு விறுவிறுவென்று நகரந்து சென்றுவிட்டார்.
-ஊடல் கூடும்​
 
Top