• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
மெல்லிசையாக தொடங்கிய புல்லாங்குழல் ஓசை, அதனைத் தொடர்ந்து வயலின்... இரண்டின் இசைச் சங்கமத்தில் தன்னை மெய்மறந்து அதனை ரசித்தது ஒருநொடி தான். பின் அது தன் அலைபேசியின் அழைப்பொலி என்று உணர்ந்து அதன் தொடுதிரையைக் கண்டவள் அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.

அட்டன்ட் செய்யக்கூடத் தோன்றாமல் கையிலேயே வைத்திருந்தவள் மணியைப் பார்க்க, அவளுக்கு கடிகாரத்தின் மேல் சந்தேகம் மூண்டது... இரவு முழுதும் ஓயாமல் தன் பணியை செவ்வனே செய்து கலைத்து தூங்கிவிட்டதோ இந்த கடிகாரம்!!! என்ற சிந்தனையோடு நான்கைவிட்டு நகராமல் நிற்கும் பெரியமுள், சின்னமுள் இரண்டையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் அழைப்பு நின்று மீண்டும் ஒருமுறை புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பித்தது. இப்போது அலைபேசியில் மணி சரியாகத் தான் காட்டியது 4:20am என்று. திரையைத் தடவி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

இருபக்கமும் சற்று நேரம் மௌனம் மட்டுமே நிலவியது.

அழைப்புவிடுத்தவனே ஆரம்பித்தான். "என்ன மேடம்? இன்னைக்கு மௌனவிரதமா? பேசமாட்டிங்களா?" என்றான் ராம்.

"உனக்கு அறிவே இல்லேயா? காலங்கார்த்தால ஃபோன் பண்ணுறே? சரியான லூசா இருப்பேயா?!!!" என்று தமிழில் திட்டினாள்.

அவள் குரலே கூறியது அவனைத் திட்டுகிறாளென்று. அவனுக்கும் அது புரிந்திட,

"ஹேய்... நான் தமிழ் கத்துக்குறேன் தான். அதுக்காக என் சுஷேண் மாமா மாதிரி நீ திட்டுறதெல்லாம் புரியிற அளவுக்கு இன்னும் புலவன் ஆகலே... அதனால எனக்கு புரியுற மாதிரி திட்டு, காது குளிர கேட்டுக்குறேன்...." என்று சிரித்துக் கொண்டே கூறினான்.

நேத்ராவோ 'ஐயோ ஐயோ' என்று சொல்லிக் கொண்டே தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

"இப்போ எதுக்கு கால் பண்ணுனிங்க... இப்படி அன் டைம்ல டிஸ்டர்ப் பண்ணுறதுனா நான் திரும்ப உங்க நம்பரை ப்ளாக் செய்துடுவேன்..." என்று மிரட்டும் தோரணையில் கூறினாலும், பயந்தது என்னவோ அவள் தான். சொல்லிவிட்டாலே தவிர அவனது ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று தெரியாதே!!! திடுதிப்பென்று நேரில் வந்து நின்றுவிட்டான் என்றால்!!! அந்த பயம் தான்.

"சரி சரி... இனிமே இப்படி அன் டைம்ல கால் பண்ணமாட்டேன். இப்போ நான் ஒரு சின்ன குழப்பத்துல இருக்கேன். அதுக்கு தீர்வு மட்டும் சொல்லிட்டு நீ நிம்மதியா தூங்கு.."

"ரெம்ப முக்கியம்!!! இந்த நேரத்துல என்னத்த யோசிச்சிங்க குழப்பம் வர அளவுக்கு??? என்னனு சீக்கிரம் சொல்லித் தொலைங்க?" என்று எரிச்சலுடன் வினவினாள்.

"உன் வீட்டுக்கு வெளியே தான் நிக்கிறேன். உங்க தோட்டக்காரன் கேட்டுக்குக் குறுக்கால படுத்துத் தூங்குறான்... அவனை எழுப்பி நான் யாரு?, யாரை பாக்க வந்திருக்கேன்? னு சொல்லிட்டு உள்ளே வரவா? இல்லே காம்பவுட் சுவர் ஏறி குதிச்சு யாருக்கும் தெரியாம உன்னை பார்க்க உள்ளே வரவா?" என்றானே பார்க்கனும்.... பெண்ணவளோ ஆடிப்போனாள்.

'நினைப்பதற்குள் வந்து நிற்கிறானே' என்ற பதைபதைப்போடு "எங்க வீட்டு வாசல்லேயா? ஆர் யூ சிரியஸ்?" என்றாள்.

"ஏன் என்னை பார்த்தா ஜோக் பண்ணுற மாதிரி இருக்கா? இரு... ஒரு செல்பி எடுத்து அனுப்புறேன் நீயே பாரு..." என்று கூறி அவள் வீடு தெரியும்படியாக நின்று ஃபோட்டு எடுத்து அனுப்பினான்.

அவன் அனுப்பிய ஃபோட்டோவைக் கண்டவள் கண்களை விரித்தவாறே ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்.

"ஹலோ... ஹலோ... தரு.... ஹலோ..." என்ற அவனின் கத்தலில் சுயவுணர்வு பெற்றவள் ஃபோனை மீண்டும் காதிற்கு வைத்து,

"இங்கே எதுக்கு வந்திங்க? அப்படியே வந்தாலும் மாமாக்கு கால் பண்ணி சொல்ல வேண்டி தானே!!! எனக்கு ஏன் கால் பண்ணுறிங்க?" என்று ஏதோ ஒரு பதற்றத்தில் கூறினாள் இல்லை இல்லை பல்லைக் கடித்துக் கொண்டு முனுமுனுப்பாக கத்தினாள்.

"உங்க மாமாவுக்கு கால் பண்ணுறது எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லே... ஆனா நான் உன்னை பார்க்கத் தான் வந்தேன்... அவர் கேட்டாலும் அதைத் தான் சொல்லுவேன், யார் கேட்டாலும் அதைத் தான் சொல்லுவேன்... சரி ஓகே... நீ தூங்கு... நான் சித்தப்பாவுக்கு கால் பண்ணுறேன்... பைய்..." என்று கூறி கட் செய்யாமல் காதிலேயே வைத்திருந்தான்.

அது தெரியாதவளோ "ஹலோ... ஹலோ... வெச்சுடாதிங்க.... ஹலோ... ப்ளீஸ்..." என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

"என்ன? எதுக்கு என்னை கூப்பிட்ட?" என்று சலிப்பாக கேட்பது போல் வினவினான்.

"இப்போ எதுக்கு என்னை பார்க்க வந்திங்க? ஏன் இப்படி பிரச்சனை பண்றிங்க?" என்று அழுதுவிடுவது போல் கேட்டாள்.

"ம்ம்ம்.... என்னோட குயினையும், ப்ரின்ஸஸ்-ஐயும் பார்க்கனும் போல இருந்துச்சு... அதான் கிளம்பி வந்துட்டேன்... இப்போ நீயே வெளிய வந்து என்னை உள்ளே கூட்டிட்டுப் போனா எந்த பிரச்சனையும் பண்ணாம அப்படியே ஈவ்னிங் ப்ளைட்டை பிடிச்சி ஊருக்கு போயிட்டே இருப்பேன்... இல்லேனா நான் உன்னை தான் பார்க்க வந்தேனும், தேவைப்பட்டா நீ தான் என்னை வரச்சொன்னதாவும் சொல்லி பிரச்சனை பண்ணுவேன்... எப்படி வசதி?" என்று அப்பட்டமாக மிரட்டினான்.

"ராம்... ஏன் என்னை இப்படி படுத்துறிங்க... சொன்னா கேளுங்க... ப்ளீஸ்..." என்று மீண்டும் அவனிடம் கெஞ்சிப் பார்த்தாள்.

"ஹோ... பேபி... நீ இப்படி கெஞ்சுறதைக் கேட்க சகிக்கலே... இன்னும் உனக்கு பத்து நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள நீயே வெளிய வந்து என்னை அழைச்சிட்டு போற... அப்படி இல்லேனா பதினோராவது நிமிஷம் நான் யாரையும் மைண்ட் பண்ணமாட்டேன். உன் ரூமுக்கு தான் வருவேன், உன்னை தான் பார்க்க வந்ததா எல்லார்கிட்டேயும் சொல்லுவேன்... கௌண்டவுன் ஸ்டார்ட்ஸ் நைவ்..." என்று கூறி அழைப்பை துண்டித்திருந்தான்.

'இவன் ஏன் இப்படி செய்றான்... வீட்ல யாராவது கேட்டா என்ன பதில் சொல்றது' என்று நினைத்துக் கொண்டே தன் அறை வாயிலில் வந்து நின்றாள்.

'இன்னு கொஞ்ச நேரத்துல இந்த பவன் வேற ஜாக்கிங் போறேனு வந்து நிப்பான்... என்ன பண்ணுவேன்??? கடவுளே...' என்று யோசித்துக் கொண்டே கைகளை பிசைந்து கொண்டு ரூமிற்கும் நிலைவாசலுக்கும் அலைந்தாள்.

திடீரென யோசனை தோன்றிட, 'பவன் ஜாக்கிங் கிளம்புறதுக்குள்ள அவனை கெஸ்ட் ரூம்ல தள்ளிவிட்டுட்டு, மாமாகிட்ட சொல்லி மத்தவங்களை சமாளிக்க வேண்டி தான்...' என்று முடிவெடுத்து வாசல்புறம் நோக்கி இரண்டெட்டு வைத்தவள், தான் இரவு உடையில் இருப்பதைக் கண்டு 'அடச்சீ சிவா நைட்டியோடேயா அவன் முன்னாடி நிக்கப்போறே...' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டு அவசரமாக அறைக்குள் சென்று சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டு வெளியே வந்தாள்.

ராமைக் கண்டவுடன் "சீக்கிரம் வாங்க" என்று அவனை அவசரப்படுத்திட, இதனை எதிர்பார்த்திடாதவன் தன்னைத் தான் அழைக்கிறாளா என்று சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான்.

அவள் வெளியே வருவாள் என்று அவன் நினைத்தான் தான். ஆனால் நிச்சயம் ரோட்டிலேயே வைத்து திட்டித் தீர்த்து அப்படியே திருப்பி அனுப்பத்தான் முயற்சிப்பாள், வீட்டிற்குள் அழைக்கமாட்டாள் என்று தான் நினைத்திருந்தான் அவன். அதேபோல் தான் வந்த வேலை முடிந்துவிட்டால் மிதுன்யாவிற்குத் தெரியாமல் வாரணாசி திரும்பிவிடலாம் என்றும் நினைத்திருந்தான்.

அவளோ தன்னுடைய அவசரத்தில் அவனின் முகபாவனையையோ, மற்றவர்களை கவனிக்கும் நிலையிலோ இல்லை. ஏன் தானே என்ன செய்கிறோம் என்று கவனிக்க மறந்தாள். கேட் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்த தோட்டக்காரன் கூட அவளை அதிசயமாகப் பார்க்க, 'கடவுளே இவளுக்கு ஏதோ ஆகிடுச்சி... இந்த ஒருவாரத்துல தலைகீழா மாறிட்டாளே...' என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டே ராமும் அவளை பின் தொடர்ந்தான்.

இருக்காதா பின்னே!!! அவசரத்தில் அவன் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டல்லவா இழுத்துச் சென்று கொண்டிருக்கிறாள்.

இருவரும் வீட்டிற்குள் நுழைந்த நேரம் சரியாக பவனின் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்க ஹாலில் வெளிச்சம் இல்லாதது வசதியாகிப் போக விரைந்து ராமையும் இழுத்துக் கொண்டு விருந்தினர் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

அவளின் செய்கைக்கான அர்த்தம் புரியாதவன் "ஹேய்... என்னாச்சு? ஏன் இப்படி இழுக்குறே?" என்று மென்மையாக காற்றோடு காற்றாக வினவிட, சட்டென ஒரு கையால் அவன் வாயையும், மறு கையால் தன் வாயையும் மூடிக்கொண்டு அமைதியாக கவனித்தாள்.

அவளின் நடவடிக்கைகள் அனைத்தும் சிரிக்கத் தோன்றினாலும், இப்போதைக்கு அவளின் அருகாமையை ரசிக்கவே செய்தான். பவன் கதவைத் திறந்து வெளியே சென்று மீண்டும் கதவு அடைக்கும் சத்தம் கேட்டப்பின் தான் அவள் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள்.

தன் வாயில் இருந்த கையை மட்டும் எடுத்துவிட்டு "சரியான இம்சை டா உன்னோட... சரி சரி வந்த வேலை முடிஞ்சது தானே! எப்போ கிளம்புறிங்க? எத்தன மணிக்கு ப்ளைட்?... டிக்கெட் புக் பட்ணிட்டிங்களா?" என்றாள்.

அவன் அவளையே பார்த்திருந்தானே தவிர பதில் பேசவில்லை... "கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லாம வாயில என்ன கொ...?" என்ற போது தான் தன் உள்ளங்கை அவனின் இதழ்களில் உரசிக் கொண்டிருப்பதை உணர்ந்து சட்டென்று கையை எடுத்தாள்.

அழகான கோணல்சிரிப்பை அவளின் செயலுக்கு பரிசளித்துவிட்டு, "இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்? என்னை ஏன் இங்கே ஒழிச்சி வெச்சிருக்க?" என்று வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டே கேட்டான்.

"பவன் இப்போ தான் ஜாக்கிங் போறான், உங்களைப் பார்த்தா ஏன் வந்திங்க? என்ன விஷயம்? என்ன ஏது? னு கேட்பான்... நீங்க வேற நான் வந்து கூப்பிடளேனா என்னை தான் பார்க்க வந்தேன்னு சொல்லிருவேனு சொன்னிங்களா... அதான், அவன் போனதும் மாமாகிட்ட பேசி அவர் மூலமா நீங்க வந்திருக்கிங்கன்ற விஷயத்தை எல்லார் காதிலேயும் போட்டு வைக்கனும்... அதுக்கு முன்னாடி அவனுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்..." என்று அவளது பதற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லிக் கொண்டே போனாள்.

அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன், அவளின் கடைசி வார்த்தைகளில் கோபமுற்று

"தெரிஞ்சா என்ன பண்ணிடுவான்? ம்ம்ம் என்ன பண்ணிடுவான்?"

என்று கேட்டுக் கொண்டே சட்டையின் கையை மடித்துக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினான்.

"அய்யோ... இப்போ அவன் கூட சண்டை போடவா வந்திங்க?" என்று மீண்டும் கடுப்பில் வார்த்தைகளை கொட்டினாள்.

"ஆமால... அவன் கூட சண்டை போடவா வந்தேன்!!???."என்று கூறி நேத்ராவின் கையைப் பிடித்து இழுத்து தன் அருகே நிற்க வைத்தான்.

தானாவே வழிய வந்து மாட்டிக் கொண்டதை நினைத்து கண்களை விரித்து முழித்தவளோ "நா... நா... நான் போறேன்..." என்று தட்டுத்தடுமாறி உரைத்து அறையைவிட்டு வெளியே செல்ல முயற்சித்தாள். மீண்டும் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து நிறுத்தி,

"இப்படி பாதிலேயே சொல்லாம கொள்ளாம விட்டுவிட்டு போனா என்ன அர்த்தம்? நேத்தும் இப்படித் தான் நான் என்ன சொல்லவறேனு கூட கேட்காம காலை கட் செய்தே!!! என்ன நெனச்சுட்டு இருக்கே நீ?" என்று கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க சிறிய முறைப்புடனே வினவினான்.

"நீங்க செய்ற எதுவுமே எனக்குப் பிடிக்கலேனு அர்த்தம்" நிச்சயமாக இதனை அவளால் அவன் கண்களை பார்த்து சொல்ல முடியவில்லை. அவன் சட்டை பட்டன்களைப் பார்த்துக் கொண்டே தான் கூறினாள்.

தன் ஒற்றை விரலால் அவள் தாடையில் கை வைத்து நிமிர்த்தி தன் முகம் காணச் செய்து, "இப்போ சொல்லு..."

அவளுக்கு பேச நா எழவில்லை. கண்களின் படபடப்போடும், பயத்துடனும் அவனைத் தான் பார்த்திருந்தாள்.

"என் ஜான்சிராணிக்கு என்ன பயம்? என்னை பிடிச்சிருக்குனு ஒத்துக்குறது அவ்வளவு பெரிய தப்பான விஷயமா என்ன?"

"அப்டினு யாரு சொன்னா!!!" அடுத்த நிமிடம் அவன் முகம் பிரகாசம் அடைய, "ஐ மீன் எனக்கு உங்களை பிடிச்சிருக்குனு யார் சொன்னா!!! அதெல்லாம் ஒன்னு இல்லே... நீங்க ரெஸ்ட் எடுங்க... நான் என் ரூமுக்கு போறேன்..." என்று கூறி அவன் கையிலிருந்து தன் கையை உருகிக் கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கூட கவனிக்காமல் அறையைவிட்டு வெளியேறினாள்.

தனதறைக்கு வந்தவளுக்கு ஏதோ ஒரு ஆழிப்பேரலையில் இருந்து தப்பி வந்தது போல் கை, கால்கள் உதறல் எடுக்க, தூக்கமோ தூரமாகச் சென்றிருந்தது. அடுத்ததாக கங்காதரனிடம் என்ன சொல்வது? எப்படி சமாளிப்பது? என்று பல யோசனைகளுடன் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தாள். இதுவும் ஒருவிதமான அவஸ்தையைத் தான் தந்தது அவளுக்கு. தவறு செய்து அதனை மறைக்கத் திட்டமிடுவது போல் உணர்ந்தாள் நேத்ரா.

விடியலுக்குப் பின் விமலாவின் சத்தம் அடுப்படிக்குள் கேட்ட மறுநிமிடம் எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியேவர, சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார் கங்காதரன். பவன் ஜாக்கிங் முடித்து வீட்டிற்குள் நுழைந்தான். அவனைக் கண்டதும் ஏதோ தப்பு செய்வது போல் தோன்றிட தலையைக் குனிந்து கொண்டாள் அவள். ஒருவேளை அவன் முகத்தைப் பார்த்திருந்தால் அவனின் மனநிலையை உணர்ந்திருக்க முடியுமோ என்னவோ!!!!

பவனோ நேத்ராவிற்கும், தந்தைக்கும் காலை வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு தன் அறைக்கு உடற்பயிற்சி செய்யச் சென்றான். கங்காதரன் நேத்ராவிடம்,

"என்ன ம்மா சிவா அங்கேயே நிக்கிற? வா வந்து உட்கார்." என்று அழைத்திட அவரின் அருகே சென்று அமர்ந்தாள்.

"மாமா... உங்ககிட்ட...." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவரின் அலைபேசி ஒலிர "ஒரு நிமிஷம் இருடா" என்று கூறிவிட்டு ஸ்வைப் செய்து காதில் வைத்தார்.

மறுமுனையில் ராமின் குரல் கேட்க, ஒரே ஒரு நொடி அவரின் கண்கள் நேத்ராவை தழுவி மீண்டது. "சொல்லுங்க ராம்கிரன்..." என்றவுடன் நேத்ரா அதிர்ச்சியாக கங்காதரனைப் பார்த்தாள். அடுத்த நிமிடமே விருந்தினர் அறையின் பக்கம் தன் கண்களை சுழலவிட்டாள். அறைகதவு முழுவதுமாக திறந்திருந்தது, அதிலேயே உள்ளே யாரும் இல்லை என்பதும் தெரிந்தது.

அவரின் குரல் கேட்டதும் இயல்பாக வரும் கேள்வியாக "எப்படி இருக்கிங்க சித்தப்பா?" என்றே ஆரம்பித்தான் ராம்.

"இங்கே எல்லாரும் நல்லா இருக்கோம் ப்பா... மிதுன் இப்போ தான் எழுந்திச்சிருப்பா... நான் மிதுன்யா கீழே வந்ததும் உங்களுக்கு கால் பண்ண சொல்லவா?..."

'காலைபொழுதில் வந்தான் தானே... இப்போ எங்கே போனான்... ஒருவேளை கனவாக இருக்குமோ... ஆனால் நான் இப்போதும் சுடிதாரில் தானே இருக்கிறேன். அவனை அழைக்கச் சென்ற போது மாற்றியது நன்கு நினைவில் இருக்கிறதே...' என்று நேத்ரா தன் சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.

மறுபக்கம் அவன் என்ன கேட்டானோ!!! ஆனால் கங்காதரனின் பதிலில் நேத்ரா தன் எண்ணவோட்டங்களில் இருந்து வெளியே வந்தாள்.

"சிவா என் பக்கத்துலே தான் இருக்கா... ஒரு நிமிஷம் அவளுக்கு விருப்பமானு கேட்குறேன்..." என்று கூறி நேத்ராவின் புறம் திரும்பி,

"சிவா ம்மா, ராம் தம்பி உன்கிட்ட பேசனுமாம், நீ பேச விருப்பப்படுறியா? இல்லே அப்பறமா பேச சொல்லவா ?" என்று அவளின் விருப்பத்தைக் கேட்க,

"ம்ம்ம்... பேசுறேன் மாமா..." என்றவுடன் ஃபோனை அவள் கையில் கொடுத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

"ஹலோ..."

"ஹேய்... தரு நான் உங்க வீட்ல இல்லே... ஏதாவது உளறி..." என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே கட் செய்து ஃபோனை டேபிலில் வைத்துவிட்டு தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

'என்ன நெனச்சுட்டு இருக்கான் இவன்... என்னை இந்த இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு பாடு படுத்திட்டான். வீட்டுக்குத் தெரியாம தப்பு செய்யவெச்சு அதுக்காக நிமிஷத்துக்கு நிமிஷம் என்னை தவிக்க விட்டுட்டான்...' என்று அவன் மேல் மூண்ட கோபத்தை வெளியே சொல்ல முடியாமல் மனதிற்குள் கரித்துக் கொண்டிருந்தாள்.

-ஊடல் கூடும்.​
 
Top