• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
வீட்டிற்குள் நுழைந்த நேத்ரா யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் விறுவிறு என்று தன் அறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள். மெத்தையில் விழுந்தவள் மீண்டும் பெரிய கேவலுடன் அழத் தொடங்கினாள். மூன்று வருடங்களுக்கு முன் சந்தித்த அதே சூழ்நிலை. அப்போதும் முடிவு எடுக்கத் தெரியாமல் தப்பான முடிவை எடுத்து சீரழிந்தாயிற்று. இன்றும் தவறான முடிவைத் தான் எடுத்துவிடுவோமோ என்பதைவிட ராமை இழந்துவிடுவோமோ என்ற பயம் அதிகமாகவே இருந்தது.

எவ்வாறு எனக்குள் வந்தான்? மற்ற ஆண்களை விட அப்படி என்ன அவன் தனித்துவம் பெற்றான்? சொல்லப் போனால் பெண்ணிடம் வீரத்தைக் காண்பிக்கும் கோழையாகத் தானே முதல்முறை கருத்தில் பதிந்தான். அவன் பேசிய பேச்சுகளை எப்படி மறந்தேன்? என்று தன்னிடம் தானே பல கேள்விகள் கேட்டுக் கொண்டு விடை தேடிப் பார்த்தாள்.

அன்று மதன் இதே போல் வந்து தன்னை விரும்பவதாக கூறிய போதும் கல்யாணம் செய்துகொள்ள கேட்ட போதும் நான் என்னவாக உணர்ந்தேன். சொல்ல போனாள் ஒன்று கூட தோன்றவில்லையே, அத்தை பையன் விரும்புவதாகக் கூறுகிறான். தந்தைக்குப் பின் கிடைத்த சொந்தம் அவ்வளவு தானே தோன்றியது.

ஆனால் அன்று அவனுக்கு சம்மதம் சொல்லாமலே இருந்திருக்கலாமோ!!! என்று பல நாள் அதனை நினைத்து கலங்கியிருந்திருக்கிறேன். 'என் வாழ்வில் அந்த ஒரு அத்தியாம் மட்டும் காணாமல் போனால், அழிந்து போனால், மறைந்து போனால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!!' என்று இன்று பல மடங்கு தோன்றியது அவளுக்கு....

என்ன முயன்றும் மறக்க நினைக்கும் கடந்தகால நிகழ்வுகள் நினைவில் வந்து அவளை கொள்ளாமல் கொன்றது. கூடவே 'அக்கா அக்கா' என்று அழைத்துக் கொண்டு தன்னையே சுற்றி சுற்றி வந்த ஹரித்ராவின் நினைவுகளும் தான்..

நேத்ராவின் தந்தை ரவிச்சந்திரன், தாய் ரேவதி. இருவரும் சொந்தம் என்ற போதும் வசதியை காரணம் காட்டி ரேவதியின் தந்தை இவர்கள் காதலை மறுத்தார். வீட்டைவிட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டனர். இதனால் ரவிச்சந்திரனின் குடும்பமும் அவர்களை ஒதுக்கி வைத்துவிட, அவர்களுக்கு அந்த நேரத்தில் பக்கபலமாக இருந்து உதவியது கங்காதரனும் விமலாவும் தான்.

ரவிச்சந்திரனும், கங்காதரனும் சிநேகிதர்கள் என்பதால் தன் வீட்டின் அருகிலேயே அவர்களுக்கு வீடு பார்த்து எல்லாம் செய்து கொடுத்தார் கங்காதரன். விமலாவிற்கு பவனுக்கு முன்னாள் ஒரு குழந்தை எட்டு மாதக்கருவாக இருக்கும் போதே இறந்துவிட, அறுவை சிகிச்சை இன்றி வயிற்றை அழுத்தி வெளியே எடுத்தனர். அதில் அதிக மன உழைச்சலும், உடல் உபாதையும் கொண்ட விமலாவோ சொந்தங்கள் சுற்றியிருந்த போதும் கணவனின் அருகாமையை எதிர்பார்த்திட, தன் மனைவியின் ஏக்கத்தைத் தட்டிக் கழித்திட முடியாமல் கங்காதரன் விமலாவுடன் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டார். ரவிச்சந்திரனும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த வேலையும் கிடைக்காததால் கங்காதரனுக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

ரவியின் உதவியால் கங்காதரன் தொழில் பல மடங்கு பெயர்பெற்று விளங்கிட, அவரை முதலீடற்ற கூட்டாளியாக சேர்த்துக் கொண்டார் கங்காதரன். ரவியும் அங்கே இங்கே என்று அலைந்து திரிந்து நல்ல உயர்ரகத் துணியும், சிறந்து வேலைப்பாடும் கொண்ட ஆடைகளை கடையில் குவித்தார். ஒருவருடம் கடந்த நிலையில் ரேவதி கருவுற்றிட, ஆரம்பத்தில் இருந்து விமலா தான் அருகில் இருந்து அக்கறையாக பார்த்துக் கொண்டார். இழப்பின் அருமை அறிந்தவர் என்பதால் ரேவிதியை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டார்.

ரேவதியைப் பார்த்துக் கொள்வதில் விமலா தன்னை கவனிக்காமல் போக தன்னுடைய ஐந்தாவது மாதத்தில் தான், தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தார் விமலா. அப்போது ரேவதி நிறை மாதம் வேறு. விமலாவின் தந்தை அழைத்தும் ரேவதியை தனித்து விட மனமின்றி மறுத்துவிட்டார் விமலா. இதில் விமலாவின் தந்தைக்கு கோபம் தான் இருந்தும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சமாளித்தார்.

ரேவதி-ரவிச்சந்திரன் தம்பதியருக்கு நேத்ரா பிறந்த பிறகும் கூட விமலா தந்தை இல்லம் செல்ல மறுக்க, விமலாவின் தந்தை கங்காதரனை சத்தமிட, பெரிய வாக்குவாதம் வந்து உறவுகள் பிரிந்து சென்றது. அப்போது ரவி தான் கங்காதரனுக்கு பக்குவமாக எடுத்துச் சொன்றார்.

"சொந்தங்கள் இல்லாமல் சொத்து, சுகம் இருந்து என்னப் பயன். விமலா தங்கையை மனதில் வைத்து அவர் தந்தையுடன் சமாதானம் பேசு... 'எங்களுக்கு நாங்கள் போதும், நாளை எங்கள் பிள்ளைகள் போதும்' என்று நானும், ரேவதியும் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிகிறது... அதே தவறை நீயும் செய்துவிடாதே..." என்று அறிவுரை வழங்கிட, மீண்டும் இணைந்த உறவுகள் ரவிச்சந்திரன்-ரேவதி தம்பதியர் மரணத்திற்கு பிறகு முற்றிலுமாக முறித்துக் கொண்டது.

நேத்ரா பிறந்து பல கலவரங்களுக்குப் பின்னால் மூன்று மாதம் கழித்துப் பிறந்தான் பவன் கல்யாண். ஒரே வயதை ஒத்த குழந்தைகள், ஒரே பள்ளி என்று இருவரும் வளர வளர குடும்பங்களுக்குள் தானாகவே நெருக்கம் கூடியது. அடுத்த மூன்று வருடத்தில் கங்காதரன்-விமலாவிற்கு கமல கண்ணன் பிறந்திட, நேத்ரா என்னேரமும் கமலைப் பார்த்துக்கொள்ளும் ஆசையில் பவனின் வீட்டிலேயே கிடந்தாள்.

ரவியும் கங்காதரனும் தங்கள் துணிக்கடையை விரிவுபடுத்தி ரங்கா சில்க்ஸ் & ரெடிமேட்ஸ் என்று மாற்றினர். ரவிச்சந்திரனுக்கு ஒரேஒரு ஆசை தான். சொந்த ஊரில் வீடு வாங்கி தன் மனைவி, குழந்தையுடன் சொந்தங்களுக்கு மத்தியிலேனும் வாழ வேண்டும் என்பது தான்.

அதற்கு கங்காதரன் தான் ஐடியா கொடுத்தார். ரவிச்சந்திரனின் சொந்த ஊரான குற்றாலத்தில் ஒருகடை ஆரம்பித்துவிட்டால், அவர் அங்கேயும் கங்காதரன் மதுரையிலும் பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதனை நடைமுறைப்படுத்தவும் தொடங்கினர். அது தான் பின்னாளில் நேத்ராவிற்கு தொல்லையாக மாறப்போகிறது என்று அறியாமல் வேலைகள் மிகவும் மும்பரமாக நடந்தது.

கடைக்கான இடம் முதலில் லீஸ்ஸிற்கு எடுத்துக் கொண்டு சில வருடங்களுக்குப் பின் சொந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்தனர். கடையில் வியாபாரம் ஓரளவிற்கு நல்விதமாக செல்ல ரவிச்சந்திரன் இடம் வாங்கி வீடுகட்டும் பணியைத் தொடங்கினார். வீடு முழுமையாக கட்டி முடிப்பதற்குள் கடையில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது.

வேறு வழி இல்லாமல் குற்றாலம் கடையை மூட வேண்டிய சூழ்நிலை வர, வீடுகட்டும் பணியும் இடையிலேயே நின்றது. வாழ்க்கையில் தோற்றவராக சொந்தங்களுக்கு மத்தியில் தலை குனிந்து நின்றார் ரவிச்சந்திரன். அதெற்கெல்லாம் துவண்டுவிடாமல் மீண்டும் எழுந்து வந்தார்கள்.

ரவிச்சந்திரனுக்கு குற்றாலம் வீடு ஆசை என்பதைத் தாண்டி வெறியாகிப் போனது இப்பொழுது. தொடக்கத்தில் கடையில் முதல் போடவில்லை என்றாலும் நாளடைவில் அவரின் பங்களிப்பு அதிகமாகவே இருந்தது. அதே போல் மீண்டும் இரவு பகல் பாராமல் இருவருமாக இணைந்து தங்கள் உழைப்பை தொடர்ந்தனர். அவர்களின் உழைப்பிற்கு பிரதிபலியாக லாபம் மீண்டும் பல மடங்கு கிடைக்கவே, கங்காதரன் அந்த லாபம் மொத்ததையும் தன் நண்பனுக்குக் கொடுத்திட, தன் ஆசையை நிறைவேத்திக் கொள்ளும் கனவுகளோடு தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு குற்றாலம் நோக்கி சென்றார் ரவிச்சந்திரன்.

அடிமேல் அடி விழுவது போல் குற்றாலம் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு ரவிச்சந்திரனும், ரேவதியும் அந்த இடத்திலேயே இறந்துவிட உயிர் பிழைத்த பத்து வயது நேத்ரா கங்காதரனிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

கடனில் கட்டிய வீடு, சொந்தமாக கடையோ, சொத்தோ எதுவுமில்லை, பெண்பிள்ளையை தன் பொறுப்பில் ஏற்றால் கல்யாணச் செலவும் தன் தலையில் வந்துவிழும் என்று பல காரணங்களால் ரவிச்சந்திரன் குடும்பம் நேத்ராவை ஒதுக்கியது. அனைவரையும் தூக்கி சாப்பிடும்படியாக கங்காதரன் நேத்ராவை தன் பொறுப்பில் ஏற்று, ரவிச்சந்திரனுடன் தான் வெற்றி கொண்ட தொழிலையும் அதே அசுர வளர்ச்சியுடன் வழிநடத்தினார்.

நேத்ராவின் தந்தை ஆசைப்பட்டது போல் குற்றாலம் வீட்டைக்கட்டி முடித்து நேத்ராவின் பதினெட்டாவது வயதில் அவளுக்கு சொந்தமாகும் படியாக பத்திரம் பதிந்தார். எப்போதும் போல் லாபத்தில் பங்கை நேத்ராவின் பெயரில் வங்கி சேமிப்பில் சேர்த்து வைத்தார்.

தன் மூத்த பெண்பிள்ளையாகவே அவளை பாவித்திட, கங்காதரனின் சொந்தங்கள் 'புத்தி மழுங்கிவிட்டது போலும், அந்த பெண்ணை ஏதேனும் ஆசிரமத்தில் சேர்த்துவிட வேண்டி தானே... அதுவும் அந்த பெண் நம் இனமும் கிடையாது... இப்படி வளர்க்க வேண்டும் என்று இவருக்கு என்ன தலையெழுத்தா!!!' என்று காதில் விழும்படியாகவே பலவாறு பேசினார்கள். எதற்கும் காதுகொடுத்தார் இல்லை.

காது கொடுத்துக் கேட்கும் அளவிற்கு அவருக்கு முக்கியமாகவும் படவில்லை, நேரமும் இல்லை. இருவராக இணைந்த பார்த்தவற்றை தான் ஒருவரே ஓடி ஓடி பார்த்தார். சில வருடங்களுக்குப் பின் தான் இப்போது இருக்கும் வீட்டையும் கட்டி குடிபெயர்ந்தார் கங்காதரன்.

நேத்ராவிற்கும் பள்ளிப்பருவம் வரை எந்த கஷ்டமும் இல்லாமல் தான் இருந்தது. தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த நேத்ராவின் வாழ்வில் முதல் முறையாக எங்கிருந்தோ வந்து குதித்தனர் சொந்தங்கள்.

இதுவரை ஒருமுறை கூட கண்டிறாத அவளின் அத்தையும், அத்தை பெற்ற ரத்தினங்களாகிய மதனும், மாலதியும் நேத்ராவை வீட்டில் வந்து சந்தித்துச் செல்வதும், வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வதுமாக இருந்தனர்.

ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் நாளடைவில் அவளுக்கு அது கொஞ்சம் வெறுப்பாக இருந்தது. அதனை கங்காதரனிடம் கூறிட அவரோ,

"என்ன இருந்தாலும் உன் அத்தை டா அவங்க. உனக்குப் பிடிக்கலேனாலும் அதை முகத்தில் காண்பித்துவிடாதே... உன் அப்பாவை தூக்கி வளர்த்த அக்கா... அவங்க பிள்ளைகளும் உன் மேல் பிரியமாகத் தானே இருக்கிறாங்க... பின்னே ஏன் அவங்களோட பழகுறதுக்கு தயங்குறே..."

"எனக்கு என்னவோ நம்ம வீட்டோடு ஒன்றுவது போல் அவர்களுடன் மனம் ஒட்டமாட்டேன் என்கிறது மாமா..."

"சரிம்மா... உனக்கு பிடிக்கலேனா நீ அவங்களோடு தனியா போக வேண்டாம். உன் பாடிகார்ட்ஸ் அந்த தடிப் பசங்க பவனையும், கமலையும் கூட கூட்டிட்டு போ... சரியா?"

"இப்போ ஓகே மாமா... நான் ஜாலியா ஊர்சுத்துவேன். அவங்க கூட எங்கேனாலும் போவேன்... தாங்க் யூ மாமா..." என்று கூறி அவரை முத்தமிட்டுச் சென்றாள்.

"ஏய்... வாலு... நீ வந்த வேலை முடியவும் எங்கே ஓடுறே... +2 முடிச்சாச்சு... அடுத்து என்ன படிக்கிறதா இருக்கே?"

"அதை ஏன் என்கிட்ட கேட்குறிங்க மாமா... பவன்கிட்ட கேளுங்க அவன் எங்கே படிக்கிறானோ, என்ன படிக்கிறானோ அதே தான் நானும் படிக்கப் போறேன்..." என்று கூறி மீண்டும் ஓட இருந்தவளின் காதைப் பிடித்துத் திருகி,

"அந்த கதை இனிமே நடக்காது. இரண்டு பேரும் ஒரே கோர்ஸ் படிச்சாலும் வேற வேற காலேஜ்ல தான் சேர்த்துவிடுவேன். இன்னு எத்தனை நாளைக்கு அவனுகளோடு சேர்ந்து ரவுடித்தனம் பண்ணுவே. அவன் ஹாஸ்டலா இருந்தா நீ லோக்கல் காலேஜ். நீ ஹாஸ்டலா இருந்தா அவன் லோக்கல் காலேஜ்... இரண்டு பேரும் யோசிச்சு பதில் சொல்லுங்க..." என்றிட ஆளுக்கு முன்பாக ஈஈஈ என இளித்துக் கொண்டே தலையாட்டினாள்.

"நீ தலையாட்டுற வேகமே தெரியுது இரண்டு பேரும் சேர்ந்து என்ன யோசிப்பிங்கனு... அதனால நீ தனியாவே யோசிச்சு பதில் சொல்லு" என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

நேத்ராவின் முகம் ப்யூஸ் போன பல்பாக சுருங்கிவிட்டது.

-ஊடல் கூடும்.​
 
Top