• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ரா மதுரையிலேயே பிரபலமான கல்லூரியில் பி.பி.ஏ சேர்ந்தாள். பவன் வேறுவழி இல்லாமல் சென்னையில் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்தான்.

வீட்டிலிருந்து கல்லூரி சென்றுவந்தபடி இருந்தாள் நேத்ரா. மாதம் ஒரு முறை அவளின் அத்தை கற்பகம் வந்து பார்த்துச் செல்வார். இத்தனை வருடப் பிரிவை சரிக்கட்டும் விதமாக வரும்போதெல்லாம் அன்புமழை போழிந்து, வெளியே அழைத்துச் செல்வார்.

அப்படி ஒருமுறை வந்திருந்த போது, "நேத்து குட்டி... இத்தனை வருஷம் உன்னை பக்கத்துல வெச்சி பார்த்துகிற பாக்கியம் எனக்குக் கிடைக்காமலே போச்சுடா... அதனால நீ இந்த அத்தை மேல கோபமா இருப்பேனு எனக்குத் தெரியும்... என் நிலைமை அப்படி டா... உன் மாமா தான் உன்னை ஒதுக்கி வெச்சிட்டார். இப்போ தான் அவரு இல்லேயே... இனிமேலும் உன்னை ஒதுக்கி வெச்சா அந்த சாமி கூட என்னை மன்னிக்காது டா..." என்று கன்னம் தடவிக் கொஞ்சினார்.

"கோபம் எதுவும் இல்லே அத்தை. நீங்களும் மாமா சொல்வதைத் தானே கேட்க முடியும்..." என்று சமாளிப்பாக பதிலளித்தாள்.

சொல்லப் போனாள் இப்படி ஒரு உறவு இருப்பதே அவளுக்குத் தெரியாது. அவளின் அன்னை, தந்தை இருந்த வரை அவர்களை ஒதுக்கி வைத்திருந்த உறவு, அவர்களின் இறப்பிற்குப் பின்னால் செலவு என்று அவளை ஒதுக்கி வைத்த உறவு… இப்படியாகப்பட்ட உறவை எப்படிச் சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பார் கங்காதரன்!!!. இப்படிப்பட்ட உறவு இருப்பது தெரிந்தால் தான் வறுத்தப்படுவாள் என்று நினைத்து அவளிடம் மறைத்தனர். ஆனால் யாரும் எதிர்பார்த்திடவில்லை மீண்டும் வந்து உறவு கொண்டாடுவார்கள் என்று.

"எவ்வளவு தன்மையா பேசுறே... அப்படியே உன் அப்பா குணம். எல்லாரையும் புரிந்து நடந்து கொள்ளும் நல்ல மனது. உன்னை யாரோ மாதிரி விட்டுட்டு போகவே மனசு வரலே டா. கொஞ்ச நாள் அத்தை வீட்ல வந்து தங்கிட்டுப் போயேன்..." என்று பீடிகை போட்டார்.

"அது வந்து... அத்தை...."

"அது தான் டா உன் சொந்த அத்தைவீடு. உனக்கும் உரிமையான வீடு... அங்கே வர இவ்வளவு யோசிக்கிறே!!!"

"அதுக்கு இல்லே அத்தை. நான் விமலா அத்தைகிட்டேயும், மாமாகிட்டேயும் கேட்கனும்..." என்று சங்கடமாக மொழிந்திட,

"உன் அத்தை வீட்டுக்கு வரதுக்கு ஒருத்தர் கிட்ட அனுமதி கேட்குற நிலையில எங்க வீட்டுப்பிள்ளை நிலையிருக்கிறதே... எல்லாம் என் தப்பு தான்... உன் மாமாவை எதிர்த்து எனக்கு என் தம்பி பிள்ளை தான் முக்கியம்னு சண்டை போட்டுனாலும் நான் உன்னை அழைச்சிட்டுப் போயிருக்கனும்... அப்படிச் செய்திருந்தா இன்னைக்கு உன் விருப்படி முடிவெடுக்கிற உரிமை உனக்கும் இருந்திருக்கும். உன்னை அந்த அளவுக்கு சுதந்திரமா வளர்த்திருப்பேன்...." என்று கண்களில் கண்ணீரோடு கூறிட, நேத்ராவிடம் எந்த மாற்றமும் இல்லை.

மீண்டும் ஆரம்பித்தார் கற்பகம், "எனக்குக் கொடுத்து வெச்சது அவ்வளவு தான். பார்த்துப் பார்த்து வளர்க்கத் தான் முடியலேனு நினைச்சா, பத்து நாளைக்குக் கூட பக்கத்துல வெச்சு பார்த்துக்க முடியலே... என் தம்பி இருந்திருந்தா நான் கேட்குறது முன்னாடியே 'இந்தா அக்கா என் பொண்ணு பத்து நாளைக்கு உன் வீட்டுக்கு வந்து தங்குவா பார்த்துக்கோனு' அவனே அனுப்பி வெச்சிருப்பான்..." என்று மீண்டும் வாய்மூடி கண்ணில் தண்ணீர் வைத்துக் கொள்ள, நேத்ராவிற்கு தான் என்னவோ போல் ஆகிப்போனது.

"அழாதிங்க அத்தை. செமஸ்டர் ஹாலிடேஸ்ல வரேன்..." என்று அவரை சமாதானப்படுத்த வேண்டி அப்போதைக்குக் கூறினாள்.

ஆனால் சரியாக விடுமுறை தொடங்கிய உடனேயே வந்து நின்றார் கற்பகம்.

"நேத்ரா நம்ம வீட்டுக்கு வரனும்னு ஆசைப்படுறா தம்பி. கூட்டிட்டு போக வந்தேன். லீவ் முடியும் வரை அங்கே எங்க கூட இருக்கட்டும்." என்று தன் பேச்சில் நேத்ராவை முன் நிறுத்தி செய்தியை சொன்னாறே ஒழிய கங்காதரனும், விமலாவும் மறுப்புக் கூற இடமளிக்கவில்லை.

அன்று காலை தான் சென்னையிலிருந்து வந்த பவன் இதனைக் கேட்டு நேத்ராவிடம் தன் கோபத்தைக் காண்பித்தான்.

"நீ ஊருக்குப் போறதுனா என்னை ஏன் வர சொன்னே... உனக்கு லீவ்னு சொல்லவும் தானே நானும் வந்தேன்." என்று அவளிடம் சிடுசிடுக்க,

நேத்ராவிற்கோ என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இப்படி முதல் நாளோ வந்து நிற்பார்கள் என்று நினைக்கவில்லை அவள். அப்படியே வந்திருந்தாலும் கங்காதரனும், விமலாவும் மறுப்புத் தெரிவித்துவிடுவார்கள் அல்லது இரண்டு நாளில் அழைத்துக் கொள்கிறோம் என்று கூறிவிடுவார்கள் என்று நினைத்திருந்தாள். ஆனால் நேத்ராவின் தந்தை ரவிச்சந்திரனின் விருப்பம் அறிந்தவர்கள் அவரின் பிள்ளைக்கு உறவு வேண்டாம் என்று நினைப்பார்களா என்ன!!!

அன்று நடந்த விபத்திற்குப் பிறகு இப்போது தான் சொந்த ஊர் வருகிறாள் நேத்ரா. முழுவதுமாக நினைவில் இல்லை என்றாலும் சில சின்னச் சின்ன நிதழ்வுகள் நினைவில் இருந்தது. கற்பகம் முதல் முறைமாக தன் இல்லம் வந்த நேத்ராவை தாங்கு தாங்கு என்று தாங்கினார். மதன் நேத்ராவை விட இரண்டு வயது முத்தவனாகவும், மாலதி ஒரு வயது மூத்தவளாகவும் இருந்தனர். மதனும், மாலதியும் நேத்ராவிடம் குழைந்தார்கள் என்று சொல்ல முடியாது, அதே நேரம் கண்டுகொள்ளவில்லை என்றும் சொல்ல முடியாது.

அந்த விடுமுறை முழுதும் அவ்வாறே சென்றிட, அடுத்த விடுமுறைக்கு வந்தவர் நேத்ராவின் கல்லூரியை மாற்றம் செய்யக் கோறி தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்டார் கற்பகம்.

"நேத்து குட்டி நீ படிக்கிற படிப்பு நம்ம ஊர் பக்கத்துல இருக்க காலேஜ்லேயும் இருக்குறதா நம்ம மதன் சொன்னான் டா. நம்ம மாலதி போர அதே காலேஜ் தான். மதன் நம்ம மாலதிக்கு ஸ்கூட்டி கூட வாங்கி கொடுத்திருக்கான். நீயும் மாலதியும் சேர்ந்தே போய்ட்டு வந்திடலாம். அத்தை உன்னை நல்லா பாத்துக்குறேன்... அங்கே வந்து படிக்கிறேயா ம்மா..."

"அத்தை இங்கே நான் படிக்கிற காலேஜ் ரெம்ப ஃபேமசான காலேஜ் அத்தை. இங்கே படிச்சா என்னோட ஹையர் எஜிக்கேஷன் ஃபாரின்ல படிக்கிறதுக்கு ஈஸியா இருக்கும் அத்தை..."

"ஓஓஓ... அப்போ இன்னும் இரண்டு வருடத்துல வெளிநாடு போயிடுவேயா!!! எனக்கு தான் என் தம்பி கூட இருக்கவும் கொடுத்து வைக்கலே... என் தம்பி புள்ள உன் கூட இருக்கவும் கொடுத்து வைக்கலே..." என்று கண்களைக் கசக்கிட,

நேத்ரா நிம்மதி இன்றி இருதலைக் கொள்ளி எறும்பாக சுற்றி வந்தாள். அவளின் மனம் கங்காதரன் குடும்பத்துடன் இருக்கத் தான் விரும்பியது. ஆனால் கற்பகத்தின் கண்ணீர் அவ்வபோது அவள் மனதை கலைத்தது.

இது தான் நேத்ராவின் இயல்பே. தொடக்கத்தில் கற்பகத்தின் பேச்சில் இருந்த ஒட்டாத் தன்மையை நன்கு அறிந்திருந்தாள் தான். ஆனால் எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல் கற்பகத்தின் பேச்சில் அவரின் வருத்தம் உண்மை தானோ என்று நினைக்கத் தொடங்கினாள்.

கங்காதரனும் தன் மகன்கள் கேட்பதற்கு முன்பாகவே என்னென்ன வேண்டுமென்று பார்த்து செய்து கொடுப்பவர், அதே போல் தான் நேத்ராவையும் நினைத்தார். அவள் கேட்பதற்கு முன்பாகவே அவளின் ஆசைகளை நிறைவேற்றி வைத்தார், விமலாவும் அதே போல் நடந்து கொண்டார். ஆனால் கற்பகத்தின் விஷயத்தில் இருவரும் தப்பு கணக்கு போட்டுவிட்டனர்.

தன் சொந்த அத்தையை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் தம்மிடம் கேட்கவும் துணிவில்லாமல் தவிக்கிறாள் என்று நினைத்து தங்கள் காதுக்கு விஷயம் வந்தவுடனேயே நேத்ராவிடம் கூட கேட்காமல் காலேஜ் மாற்றம் செய்தனர்.

"சிவா... நீயும், உன் அத்தையும் ஆசைப்பட்டபடி காலேஜ் மாற்றம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்தாச்சு டா... நீ ஒன்னும் கவலைப்படாதே உன்னோட ஹையர் எஜிக்கேஷனும் உனக்குப் பிடிச்ச இடத்தில் படிக்கலாம். எந்த பிரச்சனையும் வராது... நீ உன் படிப்பை மட்டும் கவனி டா..." என்று விமலா வாஞ்சையாகக் கூறிட,

நேத்ரா மகிழ்ச்சியுற்றாளா இல்லை ஏமாற்றமாக உணர்ந்தாளா என்று அவளுக்கே தெரியவில்லை. இதோ கல்லூரியிலும் சேர்ந்தாயிற்று. இனி யோசிக்க எதுவும் இல்லை. மீதம் இருக்கும் இரண்டு வருடப் படிப்பை இங்கேயே நல்ல முறையில் முடித்துவிட்டு முன்பே திட்டமிட்டது போல் ஹையர் ஸ்ட்டடீஸை லண்டனில் தொடரவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினாள்.

ஆனால் அது அவ்வளவு எளிய விஷயம் அல்ல என்று நிரூபிக்க கற்பகம் தன் அடுத்த வேலையைத் தொடர்ந்தார். "நேத்து குட்டி... இங்கே குற்றாலத்துல உன் பேரில் ஒரு சொந்த வீடு இருக்கு தானே!!! அது எங்கே இருக்குனு உனக்குத் தெரியுமா?"

"வீடு இருக்கிறது தெரியும். ஆனால் அது எங்கே இருக்குனு தெரியாது அத்தை. நான் பார்த்தது இல்லே."

"உன் அப்பா கஷ்டபட்டு கட்டின வீடு. உன் கண்ணுல கூட காண்பிக்காம வெச்சிருக்காங்க... என்ன மனுஷங்களோ!!!"

"கங்காதரன் மாமாவுக்கும், விமலா அத்தைக்கும் எனக்கு எப்போ என்ன செய்து கொடுக்கனும்னு தெரியும் அத்தை. என்னை ஏமாத்தமாட்டாங்க..."

"இன்னும் இப்படி வெள்ளந்தியாவே இருக்கேயே டா. உன் அப்பா பங்கையும் சேர்த்து அவங்களே அனுபவிக்கிறதுக்கு தான் இத்தனை வருஷம் உன்னை வளர்த்திருக்காங்க. கடைலயேயும் உங்க அப்பா பங்கு இருக்கு. நீ அவங்களை எதிர்த்து கேட்கமாட்டேனு தைரியத்துல இருக்காங்க... இனிமே நான் இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்..."

"இப்போதைக்கு யாரும் எதுவும் கேட்க வேண்டாம் அத்தை... நான் மொதோ என் படிப்பை முடிச்சுகிறேன்." என்று அப்போதைக்கு அவர் வாயை அடைத்தாள்.

ஆனால் அந்த மாதக் கடைசியில் அவளைப் பார்க்க வந்த கங்காதரன், அந்த வீட்டு சாவியை அவள் கையில் கொடுத்து "வீட்டுப்பத்திரம் உனக்கு கல்யாணம் ஆனதும் உன் கணவன் கைல தான் தருவேன் சிவா..." என்று கூறிவிட்டு சென்றார்.

அப்போதே அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டிருந்திருக்கலாம் நேத்ரா. ஏதேனும் கேட்டால் அப்பா பேரைச் சொல்லி வாயை அடைத்துவிடுவார்கள் என்று நினைத்து அமைதியாகப் போனது தான் அவர்களின் பலமாகிப் போனது.

மாலதியும், மதனும் தேவைப்பட்டால் மட்டுமே அவளுடன் பேசி வந்தனர். மதுரைக்கு அவளைக் காண வரும்போது கூட அவர்கள் இருவரும் பாசமாக இருந்தது போல் தோன்றியது நேத்ராவிற்கு. இங்கே அவர்கள் வீட்டிற்கு வந்த பிறகு அவர்களின் பார்வையில் கூட அந்நியத் தன்மை இருந்தது.

கங்காதரன் வீட்டு சாவியை கொடுத்துச் சென்றதற்குப் பிறகு அங்கே குடிபெயர்ந்தனர்.

"அக்கா... நீங்க தான் இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கிங்கலா?" என்று நேத்ராவிடம் கேட்டது ஓர் குரல்.

ஆள் வந்து தங்காவிட்டாலும் வீட்டையும் தோட்டத்தையும் பராமரிக்க கங்காதரன் செய்த ஏற்பாட்டில் அழகான பூச்செடிகளுடன் ரம்மியமாக இருந்தது அந்த தோட்டம். அங்கே நின்று பூச்செடிகளை ரசித்துக் கொண்டிருந்த நேத்ரா குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்தால் கன்னிப் பெண் என்றும் சொல்ல முடியாத, சிறுமி என்றும் சொல்ல முடியாத பனிரெண்டு வயது பெண் பக்கத்து வீட்டு காம்பவுண்டுக்குள் நின்றிருந்தாள்.

-ஊடல் கூடும்.
 
Top