• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ராவை தன்னோடு இணைத்து சுற்றிய ஹரித்ராவிற்கு ஒரு கட்டத்திற்கு மேல் தலை சுற்றுவது போல் இருக்க நிற்க முடியாமல் அருகில் இருக்கும் ஷோஃபாவில் பொத்தென விழுந்தாள்.

மூச்சு வாங்கிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தால் நேத்ரா. அதற்குள் ஹரித்ராவும் தன்னை இயல்புக்கு மீட்டுக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் நேத்ராவைக் கண்டு,

"என்ன க்கா? பார்த்துகிட்டே இருக்கிங்க?"

"வளர்ந்துட்டே டி குட்டி ம்மா..."

"அப்படியா?"

"ஆமா... பேச்சும் கொஞ்சம் மாறிடுச்சு... ஆளும் நல்லா வளர்ந்து அழகா இருக்கே..." என்று அந்த பதின்பருவ நங்கையை, தன் தங்கையைக் கண்டு பூரிப்புடன் ரசித்தவாறே கூறினாள்.

ஆனால் மகிழ்ச்சியடைய வேண்டியவளோ, 'அழகா இருக்கே' என்று வார்த்தையில் முகம் சுருங்கி,

"அது தானே இங்கே பலபேர் கண்ணை உருத்துது" என்று தலைகுனிந்து கூறினாள்.

"பார்த்தியா பாப்பா... உன் முன்னாடியே என்னை எப்படி சொல்றா பாரு... பெத்தவளுக்கு என்னைக்காவது பிள்ளையோட வளர்ச்சியைக் கண்டு கண்ணு உருத்துமா!!! முன்னே மாதிரி அடிக்கடி வெளியே சுத்தாதேனு சொன்னா என்னை தான் நொடுக்குனு ஏதாவது சொல்லுறா...." என்று ஹரித்ராவின் அன்னை நேத்ராவிடம் புலம்பினார்.

"ஐயோ... அம்மா... நான் தெரியாம வாய் தெறந்துட்டேன். இனிமே உங்க முன்னாடி கூட பேசவேமாட்டேன் போதுமா... உங்களைப் பத்தி பேசாத போது நீங்களா தேவைமில்லாம மூக்கை நுழைக்காதிங்க..." என்று சிடுசிடுப்பாகக் கூறினாள் இளையவள்.

"அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்லுவாங்க டா ஹரிகுட்டி... என் தங்கச்சி ரெம்ப நல்லவளாச்சே... இப்போ எங்கேயிருந்து இவ்வளவு கோபப்பட கத்துக்கிட்டிங்க!!!" என்று அவளை குழந்தையாக நினைத்துக் கொஞ்சிட,

"அக்கா நீங்க வேற காமெடி பண்ணிட்டு இருக்கிங்க... நான் இன்னும் குழந்தை இல்லே க்கா... விட்டா இடுப்புல தூக்கிவெச்சி கொஞ்சுவிங்க போல..." என்று அந்த வயதிற்கே உரிய துடுக்குடன் உரைத்தாள்.

பதின்பருவம் முற்றிலும் இரண்டும் கெட்டான் வயது தானே. நாம் குழந்தையாக நினத்தால் 'நானும் வளர்ந்துவிட்டேன்' என்றும், வளர்ந்துவிட்டாய் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாக நடந்துகொள் என்று உரைத்தால், 'பார்க்கும் உங்கள் பார்வையில் தான் தவறு' என்றும் எதிர்வாதம் புரியும் வயது. அதே தான் இப்போது ஹரித்ராவும் செய்து கொண்டிருந்தாள்.

ஹரித்ரா அப்படிக் கூறவும் நேத்ராவின் முகம் சுருங்கிவிட, அதனைக் கண்ட கற்பகம் "ஹரிம்மா... அக்கா இன்னும் ஒருவாரம் தான் இருப்பா... அதுவரைக்கும் சந்தோஷமா பொழுதைகழிங்க... இப்படி மாத்தி மாத்தி சண்டை போட்டுக்காதிங்க..."

"சண்டையா!!! இதுவா!!!... அட போங்க அத்தை... அக்கா கூடலாம் சண்டை போடுவேனா... இது என் செல்ல அக்கா..." என்று கூறி நேத்ராவை கட்டிக்கொள்ள, அவளும் பதிலுக்கு ஹரித்ராவை அணைத்துக் கொண்டாள்.

இருவரும் தங்கள் பிரிவின் துயரை தீர்த்துக்கொள்ள, எல்லா நேரமும் ஒன்றாகவே சுற்றித்திரிந்தனர். இரவும் கூட ஹரித்ரா நேத்ராவின் அறையில் வந்து தங்கிக் கொண்டாள்.

இங்கே மதனோ எப்போது குற்றாலம் வந்தாலும் நண்பர்களைக் காணச் செல்கிறேன் என்று கூறி ஊர்சுற்றக் கிளம்புபவன், இப்போது வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடந்தான். அவனுக்கோ இந்த பத்து நாள் எப்போதடா முடியும், அன்னையை அழைத்துக் கொண்டு மதுரை செல்வோம் என்றிருந்தது.

நேத்ராவிற்கும் ஹரித்ராவிற்கும் பத்து நாட்கள் பறந்த வேகம் தெரியவில்லை. நேத்ரா ஊருக்குப் புறப்படும் நாளும் வர, இம்முறையும் ஊற்றாக வந்து கொண்டிருந்த அழுகையை அடக்கிடும் வழியறியாமல் தவித்தாள் இளையவள். சொல்லப் போனால் மூன்று வருடங்களுக்கு முன் நேத்ரா லண்டன் போகும் போது அழுததைவிட இப்போது தான் அதிகமாக அழுதாள்.

"ஹரிம்மா... அழாத டா... நான் இந்தமுறை ஃபாரின் கூட போகலே... இங்கே இருக்குற மதுரைக்கு தான் போறேன். உனக்கு என்னை பார்க்கனும்னாலோ, அல்லது எனக்கு உன்னை பார்க்கனும்னாலோ உடனே கிளம்பி வந்துடுறேன்... சரியா?" என்று அவளை சமாதானம் செய்ய முனைந்தாள்.

"எனக்கு நீங்க அக்கா நானே!!! பின்னே ஏன் என்னை தனியா விட்டுட்டு போறிங்க? என்னையும் கூட்டிட்டு போங்க..."

இதனைக் கேட்டதும் நேத்ராவிற்கு அதிர்ச்சியாகிப் போனது. "ஏடீ... விளையாடுறேயா? இப்போ தான் 11th ஜாயின் பண்ணிருக்கே... அதுக்குள்ள ஸ்கூல் மாத்திட்டு என் கூட வரேங்கிறே!!! அம்மாவையும், அப்பாவையும் யோசிச்சேயா?" என்று அவள் மனதை மாற்ற நினைக்க,

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நானும் வருவேன்..."

"டேய்... குட்டிம்மா... இத்தனை நாள் இப்படியெல்லாம் நடந்துக்கலேயே... இப்போ என்னடா ஆச்சு? ஏன் இப்படி அம்மா, அப்பாவைப் புரிஞ்சுக்காம நடந்துக்கிறே?" என்று பொறுமையாக ஆரம்பித்தவள் இந்த மாடுலேஷன் சரிப்படாது என்று உணர்ந்து நொடியும் தாமதிக்காது தன் குரலை உயர்த்தினாள்.

"அம்மா உன்னை திட்டுறாங்கனு அம்மா மேல கோபிச்சிட்டு என்கூட வரேனு சொல்றியே இதேது நாளைக்கு நான் திட்டினா என்மேலேயும் கோபிச்சிட்டு போவியா?"

ஹரித்ராவின் அழுகை இன்னும் அதிகமாகியது, 'நான் உங்களிடம் கோபிச்சிட்டு போவேனா?' என்ற கேள்வியைத் தாங்கிய அவளின் கண்களில் வழிவது கண்ணீர் அல்ல வலிகள் என்று நேத்ராவிற்கு புரிந்தது.

அதனை உணர்ந்தாலும் இப்போது அதற்காக அவளை சமாதானம் செய்தால் மீண்டும் என்னை அழைத்துச் செல் என்று கூறி அடம்பிடிப்பாள் என்று உணர்ந்த நேத்ரா,

"அடிச்சாலும் திட்டினாலும் அவங்க உன் அம்மா... அவங்ககிட்ட மொதோ ஃப்ரெண்ட்லியா பழகு... உனக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அவங்ககிட்ட சொல்லு... நீயாவே 'சொன்னா அவங்களுக்குப் புரியாது'னு நினைச்சுக்காதே..." என்று கண்டிப்புக்குரலில் கூறிவிட்டு, அருகில் வந்து அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு,

"குட்டிம்மா... அம்மா சொல்றதைக் கேட்டு நல்லபிள்ளையா நடந்துக்கோ... இன்னு இரண்டு வருடம் தான். ஸ்கூல் படிப்பு முடிஞ்சிடும்... காலேஜ் அங்கே வந்து படி... சரியா? என் கூடவே தங்கி படிக்க அக்கா ஏற்பாடு செய்றேன்..." என்று கூறி ஒருவழியாக அவளை சமாதானம் செய்து அங்கிருந்து புறப்பட்டனர் கற்பகம், நேத்ரா மற்றும் மதன் மூவரும்...

கற்பகம் மற்றும் மதன் தங்குவதற்கு அருகிலேயே ஒரு வீட்டை வாங்கிட நினைத்தார் கங்காதரன். ஆனால் அதனையும் மறுத்து "எங்களுக்கு சிறிய வீட்டில் இருந்து பழக்கம் தான்..." என்று கூறி கடைக்குச் சென்று வர வசதியாக அங்கு அருகிலேயே ஒருவீட்டை வாடகைக்குப் பிடித்திருந்தான் மதன். கற்பகமும் மதனின் முடிவை ஏற்றுக்கொள்ளவே மற்றவர்கள் மறுத்துப் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போனது.

பவன் தன் பர்னிச்சர் ஷோ ரூம்மிற்கான வேலையில் இறங்கியிருந்தான். இடைஇடையே தந்தையின் ரெடிமேட்ஸ்க்கும் சென்று வந்து கொண்டிருந்தான்.

மறுநாளில் இருந்து நேத்ரா தானும் கடைக்கு வருவதாகக் கூற, கங்காதரன் வியாபார நுணுக்கங்களை அவளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். மதன் தன் இருப்பைக் காட்டி, அவளுக்குக் கொடுத்த கால அவகாசம் தாண்டிவிட்டதை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இருந்தான்.

மதனுக்கு மறுப்புத் தெரிவிக்க எந்த காரணமும் கிடைக்காததால், அவன் கூறியது போல் திருமணத்திற்குப் பின் காதல் மலர வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணத்தில் கங்காதரனிடம் மதன் தன்னை விரும்புவதைக் கூறினாள்.

கங்காதரன் "உனக்கு விருப்பமா? இல்லையா?" என்று மட்டுமே வினவினார். விமலாவோ "இன்னும் கொஞ்சம் வருடம் கழித்து இது பற்றி யோசி" என்று அறிவுரை வழங்கினார். ஆனால் கற்பகமோ "வேண்டவே வேண்டாம்" என்று மறுத்திட, அவரின் இந்த முடிவை யாருமே எதிர்பார்த்திடவில்லை.

"ஏன் அத்தை இப்படி சொல்றிங்க? நான் உங்க மருமகளா வர்றது உங்களுக்குப் பிடிக்கலேயா?"

"முன்பு வேற ஒரு நினைப்பில் உன்னை மருமகளா ஆக்கனும்னு நெனச்சேன்... அந்த கற்பகம் இப்போ இல்லே. அதனாலத் தான் சொல்றேன் உன் மனசுக்கு என் பையனை விட நல்ல பையன் கிடைப்பான்..." என்றிட

"எனக்குத் தெரியும் அத்தே... மதன் இது பத்தி என்கிட்ட சொல்லிருக்கார்..." என்றிட இப்போது கற்பகத்திற்கு அதிர்ச்சி...

மதன் தன் ஒவ்வொரு செய்கையிலும் மிகவும் கவனமாக இருந்தான். பின்னாலில் நேத்ரா எவற்றை எல்லாம் காரணமாகக் கூறி மறுக்க முடியும் என்று யோசித்து அவ்விஷயங்களை எல்லாம் பேச்சு வழக்கில் உரைப்பது போல் அவளிடம் தெளிவுபடுத்தியிருந்தான். அதற்காக மூடி மறைத்தோ, மாற்றிக் கூறியோ எதுவும் கூறவில்லை. உள்ளதை உள்ளபடியே கூறி அதெல்லாம் கா.மு, கா.பி என்று அவளை யோசிக்கவிடாமல் ஏமாற்றியிருந்தான்.

அது என்ன கா.மு, கா.பி -னு கேக்குறிங்களா? அட அதாங்க காதலுக்கு முன், காதலுக்குப் பின்.

"தெரிஞ்சும் நீ ஏன் அவனை கல்யாணம் செய்துக்க நினைக்கிறே?" என்று கற்பகம் அவளின் இந்த முடிவுக்கு காரணம் வினவிட,

"ரெம்ப பெரிய காரணம்லா இல்லே அத்தை, குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியது இல்லை. வேற யாரையோ கல்யாணம் செய்துகிட்டு என் படிப்பை அவங்க பிஸ்னஸ்-க்கு யூஸ் பண்ணுறதை விட நம்ம பிஸ்னஸ் நம்ம மதன் கூட சேர்ந்து பார்க்குறது எனக்கு டபில் ஓகே.

ஒருவழியாக நேத்ரா, மதனை கல்யாணம் செய்துகொள்வதில் தனக்கு முழு சம்மதம் என அனைவரிடமும் கூறி சமாதானம் செய்திட, கல்யாணத்தேதியும் முடிவாகியது. கமல் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் வீடியோ காலில் பார்த்துக்கொள்வதாகக் கூறினான்.

தங்க சரிகை இளைந்தோடிய பட்டு சேலையில், தங்க ஆபரணங்களுக்கு மத்தியில் நேத்ராவின் கோதுமை நிறம் மதனின் கண்ணிற்குத் தெரியாமல் போக, முதன்முறையாக பெண்ணவள் 'என்னே அழகு!!!' என்பது போல் இமைக்காமல் பார்த்தான். முதல் நாள் நிச்சயதார்த்தம், மறுநாள் அதிகாலை முகூர்த்தத்தில் திருநாண் இடும் வைபவம் என மிகச் சிறப்பாக நிகழ்ந்தது நேத்ராவின் திருமணம்.

அதிகாலை முகூர்த்தம் என்பதால் கமலுக்கு லண்டனில் நல்லிரவாக இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்தாலும், மங்களத் திருநாணிடும் வேலையில் கண்ணீர் கோர்த்து நிற்க, நேத்ராவைப் பார்த்து

"திருமணத்தை நேரில் நின்று பார்க்கக் கூட விடாம, அவசர அவசரமா முடிக்கிறேலா!!! உன்னை வந்து கவனிச்சிக்கிறேன். என்கிட்ட செமத்தியா வாங்குவே... Happy married life..." என்று வாழ்த்துக்கு முன்னால் தன் மனக்குமுறலைத் தான் தெரிவித்தான்.

ஹரித்ராவிற்கு வைரஸ் ஃபீவர் என்று கூறி அவர்கள் குடும்பம் வரமுடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்து கங்காதரனிடம் பேசினார் ஹரித்ராவின் தந்தை.

இரவு வைபவம் மதனின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட, தன் அறையில் அவளின் வருகைக்காக காத்திருந்தான் மதன். நேத்ராவோ எந்தவித உணர்வும் இன்றி, பயமோ, வெட்கமோ, கூச்சமோ எதுவுமே இன்றி இயல்பாக மதனுக்கு "ஹாய்" என்று கூறிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.

"ஹேய் என்ன... இவ்வளவு கேஷூவலா வர்றே... ஒருவேளை ஃபாரின்ல படிச்சதுல இந்த தமிழ் பொண்ணுங்களுக்கு உண்டான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இதெல்லாம் மறந்துடுச்சா!!! ஃபஸ்ட் நைட் நெனச்சு உனக்கு ஒரு ஃபீலும் இல்லயா?" என்று சற்று ஆச்சரியமாகவேக் கேட்டான்.

கைகளை கட்டிக் கொண்டு உதடு பிதுக்கி இடவலமாக தலையசைத்து, அவனைப் பார்த்துக் கூறினாள்,

"இதைத் தானே ஆரம்பத்திலிருந்து சொல்றேன். எனக்கு ஒரு ஃபீலும் இல்லே. உங்களை மறுக்க காரணம் கிடைக்கலே. ஓகே சொல்லிட்டேன். இன்னைக்கு ஒரே நாளில் என்கிட்ட எல்லாத்தையும் எதிர்பார்த்திங்கன்னா அது என்னால முடியாது... மத்தபடி நமக்குள்ள நடக்க வேண்டியது இயல்பாவே நடக்கட்டுமே... ஒரே வீட்ல, ஒரே ரூம்ல, ஒரே பெட்ல தான் தூங்கப் போறோம்... அது போக பகல் நேரமும் ஒரே கடைல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டே தான் இருக்கப் போறோம்... நிச்சயம் மாற்றம் வரும். அப்போ நாமலும் நம்ம திருமண பந்தத்தில் இணையலாம்... உங்களுக்கு ஓகே தானே?" என்று ஒப்புக்கு அவனிடம் சம்மதம் கேட்க,

மதனோ தன் கோபத்தையும் காட்டமுடியாமல், இத்தனை நாள் நல்லவனாக நடித்ததில் அவளின் கூற்றை மறுத்து அவளிடம் அத்துமீறி நடக்கவும் முடியாமல் மனதிற்குள் புகைந்து "ம்ம்ம்" என்று வெளியே சிரித்து பதிலளித்தான்.

நேத்ராவும் பதிலுக்கு புன்னகைத்து "குட் நைட்" என்று கூறி படுத்துக் கொண்டாள்.

இருபது நாட்கள் விருந்து அழைப்பு, மறுவீடு என்று அலைந்தாலும், இரவு இருவருக்குள்ளும் எந்த மாற்றமும் நிகழவில்லை.

ஹரித்ரா திருமணத்திற்கு வராதது வேறு நேத்ராவின் மனதைக் குடைய, அலைபேசி அழைப்பு விடுத்தாள் நேத்ரா, ஒவ்வொரு முறையும் ஹரித்ராவின் அன்னையிடம் இருந்து வேறுவேறு விதமான தவிர்ப்புகள் வந்தது. ஒருமுறை இவ்வளவு நேரம் படித்துவிட்டு இப்போது தான் தூங்கினாள் என்றும், ஒருமுறை தோழி வீட்டிற்கு சென்றிருக்கிறாள் என்றும், அடுத்தமுறை டியூஷன் சென்றிருக்கிறாள் என்றும் பல விதமான தடைகள் ஹரித்ராவுடன் பேசுவதற்கு. பொறுமையற்று நேரில் காணச் செல்லாம் என்றால் மதன் வரமறுத்தான்.

"அம்மாவை கூட்டிட்டு போ... இல்லே உன் மாமாகிட்ட சொல்லி ட்ரைவர் ஏற்பாடு செய்துக்கோ... என்னை அழைக்காதே என்றுவிட்டான்."

அதற்காக நேத்ராவும் வருந்தவில்லை. திருமணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆனநிலையில் முதல்முறையாக குற்றாலம் செல்லும் காரணத்தால் மட்டுமே அவனை அழைத்தாள். அதுவும் அங்கே அவர்களின் உறவினர் வீட்டிற்கு செல்ல வேண்டி வந்தால் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டுமே. அதற்கு தான். அவன் மறுக்கவே கற்பகத்துடன் புறப்பட்டாள்.

அங்கே அவளுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஹரித்ராவைக் கண்டவள் முதலில் குழப்பமுற்றாலும், அவளை அறியாமல் கண்கள் கழங்கிட, அந்த இடமே தட்டாமாலை சுற்றுவது போல் இருந்தது நேத்ராவிற்கு. இளையவளுக்கோ இன்னும் ஏன் உயிருடன் இருக்கிறோம். இந்நிலையில் தானா தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் தமக்கை தன்னைக் காண வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கணமே மண்ணுக்குள் புதையமாட்டோமா என்ற உணர்வோடு, தன் தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள் தன் எட்டுமாதக் கருவை சுமந்து நின்ற நேத்ராவின் ஹரிக்குட்டி...

-ஊடல் கூடும்.
 
Top