• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
நேத்ராவைக் கொன்றுவிடும் வெறியோடு அவளின் அருகே சென்ற ராமின் முன் முறைப்புடனும் விறைப்புடனும் வந்து நின்றான் ஒரு புதியவன்.

கோபம் கொண்ட ராமின் மூளைக்கு நேத்ராவைத் தவிர வேறு எதுவும் தெரிந்திடவில்லை. ராமின் பின்னால் வந்து கொண்டிருந்த சுராஜித்தும், அபியும் புதியவனை அடையாளம் கண்டு கொண்டனர்.

ஏர்போர்ட்டில் மிதுனயாவிடம் பிரபல ஏர்லைன்ஸின் ஊழியர் போல் பேசி அழைத்துச் சென்றவன் தான் அந்த புதியவன். அவனை அடையாளம் கண்டு கொண்ட அடுத்த நிமிடம் அபி அவன் சட்டையைப் பிடித்திருந்தான்.

"மிதுன் அண்ணி எங்கே டா?" என்றிட, அப்போது தான் அவனை கவனித்தான் ராம்.
புதியவனோ பட்டென தன் சட்டையில் இருந்த அபியின் கைகளை உதறிவிட்டு, இளநகையுடன் கை கூப்பி வணக்கம் செய்து,

"அண்ணிய பார்க்க வந்திருக்கிங்கலா. வாங்கலேன் உள்ளே போய் பேசலாம்" என்றான் இன்முகமாக.

அவனின் பதில் அங்கிருந்த நேத்ரா மற்றும் அபிக்கு அதிர்ச்சியைத் தந்தது. முதலில் அதிர்ச்சியிலிருந்து மீண்டது நேத்ரா தான். அந்த புதியவனை தன் புறம் திருப்பி,

"கமல் என்ன சொன்னே? மிதுன்யாவை நீ ஏன் அண்ணினு சொல்றே!!!" என்று அதிர்ச்சி குறையாது வினவினாள்.

"ஆமா சிவா. அண்ணனை கல்யாணம் செய்துகிட்டா அண்ணி தானே. அண்ணி இவங்களுக்காகத் தான் காத்துட்டு இருக்காங்க" என்றான்.

அடுத்த நிமிடமே அந்த கமல் என்பவனை முறைத்துவிட்டு உள்ளே விரைந்திருந்தான் அபி. கமலும் அபியும் பேசிக் கொண்டது ராமிற்கும் சுராஜித்திற்கும் புரியவில்லை.

என்ன நேர்ந்தது என்று நேத்ராவிடம் அடிக்குரலில் நேத்ராவை வினவினான் ராம். அவளும் மன்னிப்போடு சேர்த்து கமல் கூறியதை சொன்னாள். நேத்ராவின் மீதான ராமின் பார்வை வெறுப்பாக மாறியது.
அதனை நேத்ராவும் உணர்ந்தாள். அன்று அவன் அலுவலகத்தில் கூட ஏளனமாகப் பார்ப்பது போல் காட்டிக் கொண்டாலும் அதன்பின் சுவாரசியமாகவும் இறுதியில் ரசனையாகவும் அவன் பார்வை மாறியிருந்ததை அவள் அறிந்திருந்தாள். ஆனால் அப்போதெல்லாம் இல்லாத உணர்வு இப்போது அவனின் வெறுப்பான பார்வையில் தோன்றியது.

"பழி வாங்கிட்டேல" என ஏமாற்றத்தோடும், வலிகள் நிறைந்த பார்வையோடும் உரைத்தவன், அவளை உணர்ச்சிகளற்ற பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். அவன் கூற்றில் நேத்ராவின் மனம் ரணமாகத் துடித்தது. 'எனக்கும் இந்த திருமணத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை' என கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

மிதுன்யா இன்னும் எதுவும் சாப்பிடவில்லை என்று அவன் அன்னை வந்து சொல்லவும் அவளை பார்க்க தனது அறையிலிருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்த பவன் இன்னும் நான்கு படிகளே இருக்க கதவின் அருகே நின்றிருந்த ராமைக் கண்டு அப்படியே நின்றான்.

கண்களில் கனல் தெறிக்க இதழில் வெற்றிக் களிப்பின் கீற்றாய் விரிந்த கோணல் புன்னகையுடன் ராமைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் பவன்.

தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் இவன் தான், தான் கேள்வியுற்ற நேத்ராவின் தம்பியாக இருக்கக் கூடும். மிதுனை கட்டாயக் கல்யாணம் செய்ததும் இவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற ஊகத்தில் ராமும் அவனைத் தான் முறைத்துக் கொண்டிருந்தான்.

'ஶ்ரீராம் இன்டஸ்ட்ரியில்' இதுவரையிலான 'நேத்ரா சில்க்ஸ்' தொடர்பான அனைத்து டீலிங்ஸ்-உம் லட்சுமணனை அடுத்து பாரிவேந்தனும் அவரை அடுத்து தமிழ் பேசத் தெரிந்த காரணத்தினால், சமீப காலமாக அபினவும் தான் கவனித்துக் கொள்கின்றனர்.

நேத்ரா சில்க்ஸில் இருந்து கடந்த இரண்டு வருடங்காலாக நேத்ரா தான் ப்ரூஃவ் பார்த்து ஆர்டர் செய்வது, ஒப்பந்தம் கையெழுத்திடுவது என அனைத்தும் செய்து வருகிறாள் என்பதால் குடும்ப உருப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமற்றவர்களாகவே இருந்தனர்.

மீதிப்படிகளில் இறங்கிக் கொண்டே "அம்மா அந்த பொண்ணை வரச் சொல்லுங்க..." என்று தன் அன்னையிடம் உரைத்தான் பவன்.

விமலா தன் அறைக்குச் சென்று மிதுன்யாவை அழைத்து வந்தார். கூடத்திற்கு வந்த மிதுன்யா ராமைக் கண்டு, வெடித்து சிதறத் துடித்தக் கண்ணீரை உதட்டை இருக மூடி அடக்கிட, அதையும் தாண்டி பார்வையை மறைத்து கண்களில் தேங்கி நின்ற கண்ணீரோடு அவன் அருகே சென்று நின்றாள்.

மிதுன்யா வீட்டின் முதல் பெண்பிள்ளை என்பதால் பொதுவாகவே அனைவருமே அவளுக்கு அதிகச் செல்லம் கொடுத்து வளர்த்தனர். எதற்காகவும் அவள் ஏங்கியதோ கவலைப்பட்டதோ இல்லை.
தங்கள் வீட்டில் சிரித்த முகமாகவும், குறும்புகள் நிறைந்த குழந்தையாகவும் வலம் வந்தவள் இன்றோ சிறகுகள் வெட்டப்பட்ட பச்சியாய் தன் வலியை வாய் திறந்து சொல்ல முடியாமல் தவிப்பது கண்டு கலங்கி நின்றான் ராம்.

இந்த மூன்று நாட்கள் அவள் பட்ட மனவேதனையை பொலிவிழந்த அவள் கண்களே ராமிற்குக் காட்டிக் கொடுத்தது. இனி எக்காரணம் கொண்டும் அவளைவிட்டு ஒரு நொடிகூட பிரிந்திடக் கூடாது என்று அவன் உள்ளம் சொல்ல, அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து நின்றான்.

இனி என்ன நடக்குமோ என்று சுற்றியிருந்த அனைவரும் பார்வையாளராக மாறி அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ ராமைப் பார்த்து
"போலாம்" என்றாள்.

பவன், கமல் இருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
"இவங்க இரண்டு பேரையும் இப்படியே சும்மா விட்டுட்டு போகச் சொல்றியா?" என்று ஆக்ரோஷமாய் கத்தினான் அபி.

சுராஜித்தும் ராமின் கண்ணசைவு கட்டளைக்காகக் காத்திருந்தான். என்னப் பிரச்சனை வந்தாலும் எதிர்க்கொள்ளும் மனநிலையில் தான் ராமும் வந்திருந்தான்.

அனைத்தும் மிதுன்யாவின் 'போலாம்' என்ற வலிகள் நிறைந்த ஒற்றை வார்த்தையில் அடங்கி போயிருந்தது.

கங்காதரனும் விமலாவும் இதனை எதிர்பார்த்து தான் பகல் முழுதும் வேதனைப்பட்டனர். முதன்முறையாக கங்காதரன் மிதுன்யாவிடம் பேசினார்.

"இதோ பாரும்மா, உனக்கு விருப்பம் இல்லாமத் தான் இந்த கல்யாணம் நடந்திருக்குனு எங்களுக்குப் புரியுது. என்ன பிரச்சனைனு என்கிட்ட சொல்லுமா நான் தீர்த்துவைக்க முடியுதானு பாக்குறேன்."

"தீர்த்துவச்சி உங்க புள்ளகூட என்னை சேர்ந்து வாழச் சொல்றிங்கலா?" என்றாள் ஆதங்கமாக,

"இல்லே மா... சேர்ந்து வாழுறதுன்றது ஒரே வீட்ல, ஒரே அறையில வேண்டா வெறுப்பா ஒன்னா வாழ்றது இல்ல. மனசளவுலயும் காலகாலத்துக்கும் ஒன்றி வாழனும். கணவனோட முகம் கண்டு அவனின் குழப்பத்திற்கு தீர்வு சொல்ற மனைவியும், மனைவியின் குரல் கொண்டு அவளின் துயர் தீர்க்கும் கணவனுமா இருக்கனும். கடைசி காலம் வரைக்கும் மனம் பொருந்திய தம்பதிகளா இருக்கனும்.

உன் மனநிம்மதி அவனை தண்டிக்கிறதுல கிடைக்கும்னா அதையும் செய்ய நான் தயாரா இருக்கேன். அதுக்காகத் தான் கேட்குறேன்." என்று கூறினார்.

இப்போதும் அவளின் மனநிம்மதி வேண்டியே கூறினாரே ஒழிய தன் மகன் தவறு செய்திருப்பான் என்று அவர் நினைக்கவில்லை.

அவரை குழப்பமாகப் பார்த்தவள், "எனக்கே தெரியாத பிரச்சனையை தான் எப்படிச் சொல்வேன்!!!" என்றாள் கசப்பான குரலில்.

கங்காதரனோ நெற்றியை சுருக்கி புரியாத பாவனை செய்திட, மிதுன்யாவின் பார்வை பவன் மற்றும் கமலைத் தான் பார்த்திருந்தது.

வாரணாசி ஏர்போர்ட்டில் கமல் தன்னிடம் "நீங்க பயணிக்க வேண்டிய ஃப்ளைட்டுக்கு முன்னதாக ஒரு ஃப்ளைட் இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதில் பயணிக்கலாம்" என்று கூறியதையும் நண்பர்களைப் பார்க்கும் ஆர்வத்தில் அதில் ஏமார்ந்து அவன் பொறியில் சிக்கிய தன் முட்டாள் தனத்தையும், காலதாமதமாகவே வேறு விமானம் மாற்றி ஏறியிருப்பதை உணர்ந்ததையும் அதன்பின் தான் மயக்கம் அடைய நேர்ந்ததையும் தான் அவள் மனக்கண்ணில் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தாள். அதன் தொடர்ச்சியாக பவனின் மிரட்டலும் மூளையைக் குடைந்து கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. இதனை கங்காதரனிடம் சொல்ல ஏனோ அவளுக்கு மனம் வரவில்லை...

இருவரையும் காணக் காண அவளுக்கு கோபம் மேலோங்கியது. தன்னுடன் ராம், மற்றும் அபி இருக்கிறார்கள் என்ற தைரியத்தில்,
கங்காதரனைப் பார்த்து

"நீங்க என்னை ஆரத்தி எடுத்து அழச்சிட்டு போனப்பவே என்னை மருமகளா ஏத்துக்கிட்டிங்கனு புரியுது. ஆனால் என்னால ஏத்துக்க முடியலே.
தப்பு செய்துட்டு வந்த பையனை இன்னமும் கண்டிக்காம அவன் செய்த காரியத்துக்கு விளக்கம் எதிர்பார்த்து காத்துட்டு இருக்கிங்க... உங்க வீட்டிலேயும் ஒரு பொண்ணு இருக்குல... அவங்களுக்கு இந்த நிலைமை வந்திருந்தா இப்படித் தான் விளக்கம் கேட்டு காத்துட்டு இருப்பிங்களா?
உங்க பையன் என்னை மிரட்டின மாதிரி, உங்க பொண்ணை யாராச்சும் மிரட்டியிருந்தா அவனை உண்டு இல்லைனு செய்திருப்பாங்கல்ல உங்க பசங்க இரண்டு பேரும்" என்றிட,

"அதைத் தான் செய்திருக்கனும்..." என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஏதோ சொல்ல வந்தான் கமல்.

"கமல் ஷட்-அப்" என்று உறுமினான் பவன். அண்ணனின் உறுமலில் வாயை மூடிக் கொண்டான் கமல்.

மிதுன்யாவின் கூற்றில் அவமானத்தை உணர்ந்தது அபி தான். மிதுன்யாவை பேச வேண்டாம் என தடுக்க நினைத்து "அண்ணி.." என்று அழைத்திட, அவளோ

"அபி இவங்க தண்டிக்கிறதுக்கு கூட தகுதியானவங்க இல்லை. மன்னிக்கனும்னாலும் தண்டிக்கனும்னாலும் நம்ம எதிர்ல இருக்கவங்க மொதோ மனுஷங்களானு பாக்கனும். இவங்க எல்லாம் சாத்தான்..." என்று இன்னும், என்னென்ன சொல்ல முடியுமோ அத்தனை வசைச் சொற்களையும் மொழிந்தாள்.

கோபம் அடங்காமல் திட்டித் தீர்த்தவளை அபி தான் வெளியே அழைத்துச் சென்றான்.

மிதுன்யா வெளியேறிவுடன், நேத்ராவின் அருகே சென்ற ராம்

"நான் பேசினது தப்பு தான் அதுக்கு என்னை மன்னிச்சிடு." என்று அவளிடம் அமைதியாகப் பேசியவன், அடுத்த நிமிடம் பவனைப் பார்த்து

"ஆனால் இப்போ உன் தம்பி செய்த தப்புக்கு நிச்சயம் அவனை நிம்மதியா இருக்க விடமாட்டேன். உன் தம்பிய பத்திரமா இருக்க சொல்லு. அவனுக்கு எப்போனாலும் என்னாலும் நடக்கலாம்..." என்று மிரட்டும் தோரணையில் கூறிவிட்டுச் சென்றான் ராம்.
-ஊடல் கூடும்.​
 
Top