• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 13

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 13

உடனே மதுவை தன்னோடு அழைத்து செல்ல தான் ஆதிக்கு விருப்பம்.. அதை நடைமுறைப்படுத்த முடியாதபடி இருந்தது சுபத்ராவின் பார்வை.

அந்த விழியின் கெஞ்சலில் தன்னை சமன்செய்தவன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் மதுவை சுபத்ராவின் கைகளில் கொடுத்துவிட்டு அவளை மட்டுமே நம்பி விட்டு செல்வதான பார்வையுடன் அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

அது தானோ அவன் செய்த பெரும் தவறு? ஆனாலும் அங்கே என்ன செய்திருக்க முடியும்? பெற்றவள், தாத்தா பாட்டி என இருக்கையில்?

தன் அண்ணனின் மீது தவறு என்றாலும் அதன்மூலம் தானே அங்கிருப்பவர்களின் மனதில் எல்லாம் என்ன இருக்கிறது என அறிந்து கொண்டேன் என்றும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

நிச்சயமாய் உதயனிடம் ஆதியும் இதை எதிர்பார்க்கவில்லை.

எங்கே அண்ணன் வழி மாறத் தொடங்கினான் என்று ஆதி நினைத்துப் பார்த்தால், ஒருவேளை வளர்மதி சரியாய் இருந்திருந்தால் இப்படி எல்லாம் நிகழ்ந்திருக்காதோ என்று தோன்ற, மறு நொடியே தன் அண்ணன் சரி இல்லை எனும் போது அடுத்தவரை குற்றம் சொல்வது எப்படி எனவும் தோன்றிவிடும்.

மதுவைக் குறித்து பயம் கவலை எல்லாம் இன்னும் சில காலங்களுக்கு என்ன செய்வது என்று மட்டும் தான்.. தெளிவாய் என்றால் தான் வெளிநாடு சென்று வந்து சுபத்ராவை திருமணம் செய்து கொள்ளும் வரை தான்.

என்ன ஆனாலும் மதுவை அதன்பின் யாரை நம்பியும் விட தயாராய் இல்லை அவன்.

ஆம்! சுபத்ராவையும் தான். எந்த காரணம் கொண்டும் அவளையும் அவன் விட்டுவிட தயாரில்லை. அதற்கு காதல் என்ற ஒன்றே காரணம்.

எங்கிருந்து மதுவின் மேல் இத்தனை பாசம்? அண்ணன் மகள் என்பதைத் தாண்டி அன்னை பாசத்தை தான் அனுபவிக்காததை போல, அன்னை இருந்தும் அனுபவிக்காத குழந்தையின் மேல் இதனால் தான் அன்பு ஊற்றெடுத்ததோ! அவனே அறியான்.

சுபத்ராவின் வீட்டிற்கு செல்லவே கூடாது என்ற முடிவையும் அவனால் எடுக்க முடியவில்லை.

ஆனாலும் இரண்டு நாட்களாய் செல்லவில்லை. சுபத்ரா அழைத்து பேசுபவளிடமும் மது குறித்த கேள்வி மட்டுமே!

அவன் மனநிலை அறிந்த சுபத்ராவும் வேறேதுவும் பேசாமல் இருக்க மூன்றாம் நாள் நடந்தது அந்த அசம்பாவிதம்.

உதயனை பார்த்துக் கொள்ள, கவனித்துக் கொள்ள என உடன் இருக்கவில்லையே என்றாலும் கணவன் என்றவன் காதலனில் இருந்து கணவனானவன். கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் வேறொரு பெண்ணை அதுவும் வீட்டிற்கே அழைத்து வந்து அவள் முன்னேயே உதயன் கைகோர்த்து நின்றது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்தது வளர்மதிக்கு.

அதைக் காட்டிக் கொள்ள கூட முடியவில்லை மற்றவர்களிடம். அந்த நேரத்தில் ஒடிந்து போயிருந்தாலும் அனைவரின் பார்வையும் உன்னால் தான் என்பதைப் போல அவளிடம் இருந்திருக்க, அந்த உண்மையையும் தாண்டி உதயன் எப்படி அப்படி செய்யலாம் என்பதில் தான் மனம் நின்றது மனைவியானவளுக்கு.

தன்னைப் பற்றிய உண்மை அவளுக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட, தன்னை தனியாய் நிற்க வைத்த கணவன் புறம் அவள் கோபம் சென்றிருக்க, உதயன் சென்றதும் மீண்டும் சுபத்ரா மதுவைக் காட்டி வளர்மதியை பேச ஆரம்பித்ததும் கோபம் எல்லாம் மதுவின் மேல் மாற ஆரம்பித்தது.

மதுவின் மேல் இருக்கும் கோபத்தை எல்லாம் கொட்டிக் கொண்டிருக்க, அதை பாதியில் தடுத்துவிட்டான் ஆதி.

அந்த நேரம் மாடியில் தன்னறைக்கு சென்றவள் தான் இன்று நான்காம் நாளாகியும் வெளிவரவே இல்லை.

சுபத்ராவும் வளர்மதி இருந்த அறைப் பக்கம் நினைத்தும் பார்க்காமல் மதுவுடனே இருக்க, சந்திரா மட்டும் மனம் கேளாமல் அவ்வப்போது சென்று சாப்பாடு வைத்துவிட்டு வருவார்.

மீண்டும் செல்லும் நேரம் சாப்பாடு அப்படியே தானிருக்கும்.

ராஜசேகர் யாரிடமும் பேசிடவில்லை. பேச என்ன மற்றவர் முன் நிற்கவே அவருக்கு முடியும் என்று தோன்றவில்லை.

எத்தனை தான் தன் பெண் என்று பாசம் இருந்தாலும் இத்தனை சிறிய பெண் முன் தான் அப்படி நடந்திருக்க கூடாது என நினைத்து நினைத்து அவர் மருகிக் கொண்டிருந்தார்.

அளவான பேச்சுக்கள் மட்டுமே அவ்வீட்டில் ஒலிக்க துவங்கி இருந்தது.

அன்று அறைக்குள் சென்ற வளர்மதிக்கு அடுத்த நாளே நண்பன் என பழகியவன் வெளியே அழைக்க, நடந்ததை சொல்லியும் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதைப் போல பேசியவனை நினைத்து கோபம் வர, அதே கோபத்தை அவனிடமும் காண்பித்து இருந்தாள் வளர்மதி.

தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கவும் வளர்மதி கண்டு கொள்ளாமல் இருந்துவிட, அடுத்ததாய் தான் அவன் இன்னும் எவ்வளவு. மோசமானவன் என தெரிய வந்தது வளர்மதிக்கு.

அவனுடன் வளர்மதி வெளிய சென்றிருந்த சமயம் எடுத்த புகைப்படங்கள்.. அவளே அறியாது எடுக்கப்பட்டிருந்தது.

முகம் கொண்டு பார்க்க தனக்கே கூசும் வகையில் அந்த புகைப்படங்கள் இருக்க, உடனே அழைத்துக் கேட்டவளுக்கு அடுத்த அதிர்ச்சியாய் அவன் பேசியது.

"அதான் புருஷனே போய்ட்டானே! பின்ன என்ன இன்னும் வேஷம்?" என்ற கேள்வி தான்..

தன் முட்டாள் தனத்தின் உச்சம் மொத்தமாய் ஆணி அடித்ததைப் போல தலையில் அந்த கேள்வி விழ, விழிகுத்தி நின்றது ஓரிடத்தில்.

"நான் சொன்னதை கேட்டனா நீயும் பிரீயா இருக்கலாம் நானும் உன்னை தொல்லை பண்ண மாட்டேன்!" என்றவன் எண்ணம் தெள்ள தெளிவாய் புரிய, தேள் கொட்டிய பின் புரிந்து கொண்டாள் அனைத்தும் தான் ஏற்படுத்திக் கொண்ட விஷம் என்று.

அவரவர் எண்ணங்களில் தவறுகளில் என மொத்தமாய் கலைந்திருந்தது அந்த கூடு.

"மனசே வெறுத்து போச்சு.. எனக்கு என்ன என்னலாமோ தோணுதுங்க!" என்று சந்திரா கணவனிடம் கூற,

"என்ன செய்யுறது சந்திரா?" என்றார் அமைதியாய்.

"கோவிலுக்கு போய்ட்டு வரலாம்ங்க.. திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணைனு சொல்லுவாங்க.. அந்த தெய்வத்துட்டயே எல்லாத்தையும் சொல்லிட்டு வரலாம்!" சந்திரா கூற மறுக்காமல் ஏற்றுக் கொண்டார் அவரும்.

"சுபா மதுவோட இருக்கா.. போய்ட்டு வந்திடலாம்!" என்று கூறி இருவருமாய் கிளம்பி இருந்தனர்.

அவர்கள் அறியாதது பெற்றவர்கள் வீட்டில் தானே என எண்ணி ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என உறங்கிக் கொண்டிருந்த மதுவை அறையில் தனியே விட்டு தோழியின் அவசர அழைப்பிற்கு சுபத்ரா சென்றிருந்தது.

அதிகப்படியான மன உளைச்சல் கொண்ட வளர்மதிக்கு கோபம் அதிகம் வரும் பொழுதெல்லாம் கத்தி அழுது கரைந்ததில்லை. தன்னுடைய மன அழுத்தத்தை நீக்கவோ அதிலிருந்து வெளி வரவோ தெரியாமல் சிலர் எடுக்கும் அதே தற்கொலை முடிவு தான் வளர்மதியும் மேற்கொண்டது.

அது அவளை மட்டும் அல்லாது அவள் மகளின் வாழ்விலும் பெரும் சூறாவளியாய் உள்ளிழுத்துக் கொண்டது.

விளைவு.. எரியும் தீயில் தன் அன்னையின் அலறல் குரலைக் கேட்டு தன் கண் முன்னே எதிர்பாராமல் கண்ட மது அந்த நொடி சிலையாய் மாறி இருந்தாள்.

"மது.. மது.." என்ற அன்னையின் அலறல் குரல் இன்றளவும் அந்த பிஞ்சு குழந்தையின் மூளையில் இருந்து அகலவில்லை.

முதலில் வீட்டிற்குலிருந்து வந்த புகையில் பதறியடித்து வந்த சுபத்ரா வளர்மதியை அந்த நிலையில் கண்டவள் அலறிவிட, அக்கம் பக்கத்தினர் வருகையோடு தாய் தந்தையும் வந்திருந்தனர்.

மதுவை காண வர ஆதி சுபத்ராவிற்கு அழைப்பு கொடுக்க அவள் ஏற்கவில்லை என்றதும் கிளம்பி வந்தவன் கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் கண்டு பயந்து துடித்த மனதை அடக்கி உள்ளே சென்ற போது பிழைக்க வாய்ப்பு இருக்கிறதா என்றே அறியாத நிலையில் தான் வளர்மதி அதில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தாள்.

ராஜசேகர், சந்திரா, சுபத்ரா என அனைவரின் கவனமும் தீயை அணைப்பதில் இருந்திருக்க, மதுவை அவர்கள் கவனிக்கவில்லை.

"குழந்த.. குழந்த...!" என யாரோ மதுவை தூக்கி வருவதைப் பார்த்தவன் அந்த நொடியில் விக்கித்துப் போனவன்,

"மது!" என்று பாய்ந்து அவர்களிடம் இருந்து பிடுங்கி இருக்க, "மது!" என்ற பெரியர்வகள் குரலும் சுபத்ராவின் குரலும் அலறலுடன் அழுகையாய் தான் வந்தது.

"குழந்தைக்கு ஒன்னும் இல்லபா.. அதிர்ச்சில தான் மயங்கி இருக்கும்.. காயம் எதுவும் இருக்குற மாதிரி தெரியலயே.." என்ற யாரோ ஒருவரி குரல் கேட்க,

மதுவை தூக்கிக் கொண்டு ஓடியவன் தன்னுடைய காரில் கிடைத்த,

"பொய்டு!" என்ற ஆதியின் குரலில் சுபா அதிர்ந்து நிற்க,

"அக்கான்னு வரும் போது மது உனக்கு முக்கியம் இல்லை.. உன் அப்பா அம்மாக்கு பேத்தி முக்கியம் இல்லைனு ரெண்டாவது முறையா புரிஞ்சிக்கிட்டேன்.. போ!" என்ற ஆதி சொல்லில் செய்வதறியாமல் சுபத்ரா நிற்க,

"ஷேம் ஆன் யூ!" என்றவன் வண்டியை எடுக்கும் நேரம் ராஜசேகர் மகளை அழைக்க,

"போ! போய் உன் அக்காவைப் பாரு!" என்று தீயாய் வார்த்தைகளை வாரி இறைக்க, மது தன் தேவாவின் கைகளில் தான் என்ற நிம்மதி இருந்தாலும் அவன் பேசிய விதத்தில்,

"உதயன் தம்பி தான் நான்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க!" வெறுமையாய் கூறியவள் தந்தையை நோக்கி ஓட, அந்த வார்த்தைகளின் அர்த்தத்தோட தன் எண்ணத்தை வலுவாக்கி, மதுவை கூட்டி வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தான்.

அது தான்! அன்று தான் இறுதியாய் சுபத்ரா மது, ஆதியை பார்த்த தினம்.

நிச்சயம் ஆதி இப்படி ஒரு முடிவெடுத்து மதுவுடன் தனியே தொலை தூரம் சென்றிடுவான் என சுபத்ராவே நினைக்கவில்லை.

தனக்காகவேனும் வந்திடுவான் என பல மாதங்கள் காத்திருந்தவளுக்கு தெரியவில்லை ஆதியின் கோபம்.

மது என்ற பிஞ்சு குழந்தை அங்கே அத்தனை பெரிய தீ விபத்தில் எவரின் கவனத்திலும் இல்லை என்பதே அவன் கோபத்திற்கு தீனியாய் அமைந்திருக்க யோசிக்கவே இல்லை. அங்கிருக்க முடியாமல் தனியே கிளம்பி வந்துவிட்டான்.

அடுத்து என்ன? எங்கே என்று தெரியாமல் வந்து நின்றவனுக்கு உறவாய் நண்பனாய் அபி கிடைத்திருந்தான்.

வளர்மதி உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரியவே வாரங்கள் ஓடி இருக்க, அடுத்தடுத்த அடியாய் அடுத்த நான்காம் மாதத்தில் கார் விபத்தில் தாய் தந்தையை இழந்திருந்தாள் சுபத்ரா.

சொல்லி அழவும் யாரும் இன்றி இன்று சக்தி, அபியின் முன் கதறி அழுதவளை சக்தி தாங்கி இருக்க, ஆதியின் கண்களிலும் கண்ணீர் துளிகள்.

"அக்காவை காப்பாத்திட்டோம் தான்.. அவ மனசு மாறிட்டா தான்.. ஆனா அப்ப இருந்து எங்களுக்குன்னு யாரும் இல்ல.. அவ கண்ணீர் விட்டா காயத்துல எரிச்சல் வரும்னு அவ முன்னாடி நான் அழல.. அவ என் முன்னாடி அழல.. ஏதோ வாழ்ந்துட்டு இருக்கோம் நடைபிணமா!" என்றவள் வார்த்தையின் ஆதியின் மீதான குற்றச் சாட்டு அப்பட்டமாய் தெரிந்தது.

புரியுது சிஸ்டர்! ஆனா மதுவோட ஹெல்த் கண்டிஷன் இப்ப என்னனு எங்களுக்கு தெரியுமா? அதுவும் யாராலனு உங்களுக்கு தெரியுமா? " ஆதியின் கோபத்தை எதிர்பார்த்து இருந்த சுபாவிற்கு மாறாய் அபியின் இந்த வார்த்தைகள் குழப்பத்துடன் அதிர்ச்சியையும் கொடுத்தது.

தொடரும்..