• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 2

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 2

"சக்தி! சாப்பிட வா.. எவ்வளவு நேரமா கூப்பிடறது?" சக்தியின் அன்னை ஈஸ்வரி அழைக்க,

"இதோ வரேன் மா!" என்ற குரல் மட்டும் வந்து கொண்டே இருந்தது.

"எவ்வளவு நேரமா கத்துறேன்.. வர்றாளா.. வர வர யார் பேச்சையும் மதிக்குறதே இல்லை!" என புலம்பியபடி சமைத்தவற்றை எடுத்து வைக்க,

"கச்சேரி ஆரம்பிச்சாச்சா?" என்று அபி வந்தான்.

"உனக்கு கிண்டலா போச்சா? உன்னாலயும் உன் அம்மாவாலயும் தான் அவ இப்படி இருக்குறா" என்று கூறவும்,

"அவனை ஏன் டி சொல்ற? நீ வளர்த்தது அப்படி!" என்று வந்தார் செண்பகவல்லி. சக்தியின் தந்தைவழி மற்றும் அபியின் தாய்வழி பாட்டி.

"நீங்க சும்மா இருங்க அத்த! நீங்க தான் அவ கெட்டு போக முதல் காரணமே! வீட்டு வேலை சொல்லி குடுத்தேன்.. என்னைய திட்டி அவளை செல்லம் கொடுத்தீங்க.. சமையல் கத்து குடுத்தேன்.. அதெல்லாம் இப்பவே எதுக்குன்னு அவளை கத்துக்க விடல.. அடலீஸ்ட் அவ வேலையை ஆச்சும் அவளே பார்த்துக்க விட்டிங்களா? எட்டு மணி கிளாஸ்க்கு ஏழு மணிக்கு தான் எழுந்துக்குறா.. பின்னாடியே சுத்தி குழந்தைக்கு மாதிரி ஊட்டணும்.. லஞ்ச் பேக் பண்ணி போகும் போது அவ முன்னாடி நீட்டணும்.. பொட்டு வச்சியா பூ வச்சியானு பத்துமுறை கேட்கணும்" என மாமியாரை வதக்கிவிட்டு சமயலிலும் வதக்கிவிட, அபி கப்சிப் என அமைதியாகிவிட்டான்.

"என்ன பாட்டிம்மா இன்னைக்கு கொஞ்சம் தூக்கலா இருக்கு.." அபி பாட்டியின் காதை கடிக்க,

"உன் அம்மா வேண்டுதல்னு காலங்காத்தால பழனிக்கு உன் அப்பாவை கூட்டிட்டு போய்ட்டா.. வர ராத்திரி ஆகும்.. உன் மாமனும் கம்பெனிக்கு சீக்கிரம் போய்ட்டான்.. இவ என்னைக்கு எல்லா வேலையையும் தனியா பார்த்தா? சீதா செஞ்சு வைக்கிறதை இவ பரிமாற தானே செய்வா? இன்னைக்கு வேலை எல்லாம் இவ தலையில விழுந்த காண்டு.. ராத்திரி உன் அம்மா வர்ற வரைக்கும் இனி இவ வாயை நிறுத்த முடியாது" என்றார் செண்பகவல்லி.

செண்பகவல்லி தியாகராஜன், சீதாவின் தாய். கணவன் குணசேகரன் இறந்து வருடங்கள் எல்லாம் உருண்டோடி இருக்க, தியாகராஜனுக்கு ஈஸ்வரியை கட்டிவைத்தவர் மகள் சீதாவுக்கு கணேசனை திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாய் அழைத்துக் கொண்டார்.

செல்வம் இல்லை என்ற குறை இல்லாமல் இருக்கவே அந்த பிரச்சனை இல்லை என்ற போதிலும் மருமகள் ஈஸ்வரி அவ்வபோது குடும்பத்தினரிடம் முகம் தூக்குவது உண்டு. அதேபோல தான் மருமகன் கணேசனும் தனியாய் தொழில் செய்து வந்தாலும் அவ்வப்போது மாமியார் சொத்தில் இருக்கும் பங்கினை பற்றி விசாரித்து ஈஸ்வரியை மட்டும் இல்லாது வீட்டினரையும் முகம் சுருக்க வைப்பார்.

"கொஞ்ச நேரம் வாயை மூடுறியா ம்மா? எவ்ளோ பேச்சு.. அத்தை இருந்திருந்தால் காலையில கிட்சேன்ல அவங்க வேலை செய்யிறதே தெரியாது.. அவ்ளோ சைலன்ட்டா வேலையை முடிப்பாங்க.. நீயும் இருக்கியே!" என்று வந்தாள் சக்தி.

"ஏன்டி சொல்ல மாட்ட.. அப்படி தான் தெரியும் உனக்கு.. நான்னா இந்த வீட்டுல எல்லாருக்குமே இளக்காரம் தானே" என்றவர், சப்பாட்டை அள்ளிக் கொண்டு,

"ம்ம் சீக்கிரம் சாப்பிடு.. லேட்டாகிட்டுன்னு ஓடாத!" என்று ஊட்ட ஆரம்பிக்க,

"என்னவோ டெய்லியும் இவளே மகளுக்கு பார்த்து பார்த்து செஞ்சு ஊட்டிவிட்டு அனுப்புற மாதிரி தான்.. சீதா நேத்து நைட்டு சொல்லிட்டு தான் போனா காலையில சக்திக்கு ஊட்டி விட்டுடுங்க அண்ணி இல்லைனா சாப்பிடாம ஓடிடுவானு.. இல்லைனா இவளுக்கு தெரியுமாக்கும் மக சாப்பிட்டாளா இல்லையானு!" என்று பாட்டி அபி காதில் முணுமுணுக்கு,

"ஷ்ஷ்! பாட்டி! அத்தைக்கு கேட்டுட போகுது!" என்றான் அபி மெல்லமாய்.

"உன்னை ஒருத்தன் கையில புடிச்சி குடுத்த அப்புறம் என்ன தான் செய்ய போறனு பாக்குறேன் டி!" என்று ஈஸ்வரி கூறும் பொழுதே,

"போதும்!" என்று எழுந்து கொண்ட சக்தி,

"ஆச்சி பை.. வர்றேன் டா!" என்று அபியிடமும் சொல்லிக் கொண்டு செருப்பை மாட்ட,

"இதென்ன டி நாலு வாய் கூட வாங்கல!" என்ற அன்னைக்கு,

"சமையல்ல சீதா அத்தை கைமணமும் இல்ல.. சாப்பாடு தந்ததுல அவங்க பாசமும் இல்ல!" என்றவள்,

"உன்னை.." என்று ஈஸ்வரி ஆரம்பிக்கும் போதே ஸ்கூட்டியை எடுத்துவிட,

"எது தான் என் பேச்சை கேட்டு நடக்குது!" என்று புலம்பலோடு அடுத்த வேலைக்கு சென்றார்.

"இவளும் அத்தையை ரொம்ப தான் டென்ஷன் பண்ணுறா பாட்டிம்மா!" என்றான் அபி.

"உன் அத்தை வாய் மட்டும் சும்மா இருந்ததாக்கும்.." என்ற பாட்டிக்கு பேத்தியை பேரனோடு சேர்த்து வைக்க தான் அத்தனை விருப்பமும்.

ஆனால் அந்த பேச்சை எடுக்கவே கூடாது.. அது நடக்கவே நடக்காது என்று கூறி இருந்தார் ஈஸ்வரி. அதனால் வாயை திறப்பதில்லை தவிர நினைப்பு இல்லாமல் இல்லை பாட்டிக்கு.

"சரி ஓகே நானும் அப்படியே கிளம்புறேன்.. மதுவுக்கு இன்னைக்கு அப்பொய்ன்மெண்ட் இருக்கு.." என்று அபி எழுந்து கொள்ள,

"மதுவை பார்க்க போறியா அபி?" என்றார் ஈஸ்வரி அபியின் லஞ்ச் பாக்ஸை வைத்தபடி அவன் கூறியதை கேட்டு.

"ஆமா அத்தை! ஆதி மட்டும் போய்ட்டு வந்திடுவான் தான்.. கூட சப்போர்ட்டா இருந்தா அவனும் பெட்டரா பீல் பண்ணுவான் இல்ல?" என்று கூற,

"சரி இரு.. குளோப் ஜாமுன் தர்றேன் கொண்டு குடு.. அவளுக்கு ரொம்ப பிடிக்குமே!" என்று எடுத்து வர உள்ளே செல்ல,

"எல்லாரையும் மயக்கி வச்சிருக்கா அந்த மயக்கினி.. கூட்டிட்டு வா டா.. பார்த்து ரொம்ப நாள் ஆச்சு!" என்று செண்பகவல்லி கூற,

"இந்த சண்டே பாக்கலாம் பாட்டிம்மா.. ஆதி கூட உங்களை பார்க்கணும்னு சொன்னான்" என்று கூற,

"அவனெல்லாம் பேச்சு தான்.. வீட்டு பக்கம் தான் வர்றது இல்ல" என்று பேச,

"சார் ரொம்ப யோசிக்குறார்.. நாம ரொம்ப ஹெல்ப் பண்ணிட்டோமாம்.. அதனால டிஸ்டர்பன்ஸ்ஸா இருக்க கூடாதுன்னு பார்த்து பார்த்து அவன் பண்ற வேலை இருக்கே.. அவன் கூட பரவால்ல பாட்டிம்மா.. மதுவையும் சொல்லி சொல்லி வளக்குறான்.." என்று அபி குறைப்பட,

"அவனுக்குன்னு ஒரு பொண்டாட்டி இருந்திருந்தா எல்லாம் தெரிஞ்சிருக்கும்.. அந்த பையனுக்கு விதிச்சது அவ்வளவு தான்" என்று அவர்கள் பேச்சை கேட்டு தனக்கு தோன்றியதை கூறியப்படி வந்தார் ஈஸ்வரி.

"ஏன் டா அபி! ஆதி எதாவது சொன்னானா.. மது அம்மாக்கு என்ன ஆச்சுன்னு?" பாட்டி கேட்க, ஈஸ்வரியும் பதிலுக்காய் பார்த்தார்.

"ம்ம்ஹும் இல்லை! நான் கேட்டதும் இல்லை.. முதல் நாள் அவன் என்கிட்ட வரும் போது.. அவன் நின்ன கோலம் என்னை இப்ப வரை அவன் கடந்த காலத்தை பற்றி எதுவுமே கேட்க விடாது.. அவனா சொன்னா தவிர நானா கேட்க போறதில்ல!" என்றவன் மதுவுக்கான ஸ்வீட்டை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

"ஆதிக்கு கூட அபி வயசு தான் இருக்கும்.. கூட ஒன்னு ரெண்டுனாலும் வாழ வேண்டிய வயசு தானே!" என்று கவலையை கூறிய செண்பகவல்லி பாட்டிக்கு அவன் வாழ்க்கை பற்றிய எதுவும் தெரியாதே!.

***********

"ஏன் டா? நீ ஏன் இப்ப இங்க வந்த?" ஆதி கேள்விக்கு,

"நான் ஒன்னும் உனக்காக வர்ல.. என் டார்லிக்காக வந்தேன்.. டூ ஹவர் பெர்மிஸ்ஸன்ல ஆபீஸ் எங்கேயும் போயிடாது!"என்ற அபி மருத்துவமனையின் ஸ்கேனிங் அறைக்கு அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, ஆதியின் பார்வை வெளியே சென்றது.

"சக்தியை தேடுறியா? அவளுக்கு முக்கியமான கிளாஸ்.. அதான் வர்ல.. போன் பண்ணுவா!" என்றான் அபி.

"நல்லது!" என்றான் ஆதி.

"ரிப்போர்ட்ஸ் எங்க? மது சாப்பிட்டாளா?" அபி கேட்க,

"வந்து தான் சாப்பிடுவா.. அடம் பண்ணினா வர மாட்டேன்னு.. ரிப்போர்ட்ஸ் டாக்டர் வாங்கிட்டு போயிருக்காங்க.." என்றவன் அபி அருகே அமர,

"கால் பண்ண மாட்டியா கிளம்பும் போது? எல்லாம் தனியாவே பார்த்துக்குவ.. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா நீ?" என்று அபி கேட்க,

"எப்பவும் பாக்குற செக்கப் தான்!" என்றான் ஆதி.

"கூடி போச்சு உனக்கு.. அந்த பெரிய மனுஷி வரட்டும்.. அவளுக்கும் என்னை மறந்து போச்சு இல்ல?" என்ற அபிக்கு ஆதி மௌனம் கொடுக்க, சக்தி அழைத்துவிட்டாள்.

பார்த்துவிட்டு அழைப்பதாய் கூறி வைக்கவும் மருத்துவர் வர ஆதி அருகே சென்று நின்று கொண்டான் அபி.

"ஆறு மாசத்துக்கு முன்னாடி பார்த்ததுக்கு இப்ப ரொம்பவே நல்லா இருக்கு.. இன்னும் ஒரு வருஷம் பார்க்கலாம்.. மூணு மாசத்துல ஒரு ஸ்கேன் பார்த்துடலாம்!" என்று பேச்சுக்கள் தொடர, ஆதியும் சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டான்.

அபி உடன் நின்றவன் அவர்கள் பேச்சை கவனித்தப்படி நிற்க, "பெரிய ப்ரோப்லேம் இருக்காது தான்.. ஆனாலும் அஸ் அ டாக்டரா இப்ப என்னால எதையும் சொல்ல முடியாது.. வீ ஹோப்!" என்று கூறி விடைபெற்றார்.

"வா மதுவை பார்க்கலாம்!" என்ற அபி ஆதியை எதுவும் நினைக்கவும் விடாமல் தனியேவும் விடாமல் கூடவே இருக்க, மதுவிடம் வந்துவிட்டனர்.

"வேண்டாம்னு சொன்னேன்ல.. ஏன்ப்பா இங்க கூட்டிட்டு வந்திங்க? எனக்கு பயமா இருக்கு!" என்று வந்தவளை அணைத்துக் கொண்டான் ஆதி.

சில நொடிகள் அவர்களுக்கான தனிமை கொடுத்து விலகி நின்று ரசித்து பார்த்திருந்தான் அபிநந்தன்.

"போலாம் ப்பா! இங்க வேண்டாம்!" என்ற மதுவின் பயம் புரியாமல் இல்லை.

"போலாம் மதும்மா!" என்று ஆதி கூற,

"ஹாய் மது டார்லி!" என்ற பின்பு தான் அபியை பார்த்தாள் மது.

"நீ எப்ப வந்த அபி?" என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்து தந்தையைப் பார்த்தவள்,

"எப்ப வந்தி.. ங்..க.. அபி... மாமா.." என்று இழுக்க,

"இதுக்கு என்னை நாலு அடி அடிச்சிருக்கலாம்.. உன் அப்பா சொன்னா செஞ்சுடுவியா.. இப்ப நான் கோச்சிகிட்டேன்.." என்று அபி திரும்பிக் கொள்ள,

"டேய்!" என்ற ஆதி அழைப்பிற்கு அபி திரும்பவில்லை.

"அய்யோ அபி! கோச்சிக்கோ.. ஆனா இங்க வேண்டாம்.. முதல்ல வெளில போலாம் வா!" என்று மது அழைக்க, அந்த அழைப்பிலேயே கரைந்து மதுவை தூக்கிக் கொண்டு வெளியே அபி வர, பின்னே வந்தான் ஆதி.

மதுவிற்கு கொண்டு வந்த இனிப்பினை கொடுத்து ஞாயிறு அன்று வீட்டிற்கு அழைப்பு வைத்து என மருத்துவமனை நினைவினை தற்போதைக்கு தன்னால் முடிந்த மட்டும் மறக்க வைத்து மதுவுடன் அபி இருக்க, ஆதி பார்வையாளன் ஆகி போனான்.

தொடரும்..