• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சொல்லாத காதல் சொல்ல! 7

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 7

"வரலைனு சொன்னாலும் கேட்க மாட்டியா அபி?" ஆதி கொஞ்சம் காரத்தோடு சத்தமாய் கேட்க,

"டேய்! அவர் என்ன நினைப்பாரு? நம்ம சூர்யா சார் டா.. அவர் கல்யாணத்துக்கு போகலைனா... ப்ச்! நீ ஏன் டா இப்படி பண்ற?" என்றான் அபி.

"ப்பா! அதான் அபி இவ்வளவு சொல்றான்.. சாரி சொல்றாங்க இல்ல.. போய்ட்டு வாங்க ப்பா.. என்னை சக்தி பார்த்துப்பா.. இல்ல இல்ல பார்த்துப்பாங்க!" என்றாள் மது.

மேனேஜர் சூர்யாவிற்கு காலையில் திருமணம் முடிந்திருக்க அதைப் பற்றிய பேச்சு தான் சென்று கொண்டிருந்தது அபியின் வீட்டில்.

ஒரு வாரமாகி இருந்தது மது அபியின் வீட்டிற்கு வந்து.. வீட்டில் கணேசன் தவிர்த்து அனைவரும் பாசத்தோடே அவளை பாதுகாத்திட, ஆதி காலை, இரவு என வந்து பார்த்து செல்பவன் தானே பள்ளிக்கும் அழைத்து சென்று கூட்டி வந்து விடுவான்.

சீக்கிரமே தன்னோடு அழைத்து வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் கூட.

சூர்யா திருமணத்திற்கு செல்லும் எண்ணம் துளியும் ஆதியிடம் இல்லை. காலையில் மதுவைப் பார்த்துவிட்டு வேலைக்கு செல்ல தான் நேரமிருக்கும் என அப்போதே அவன் கூறிவிட்டான்.

"ஆமா! நான் உனக்கு வேலைக்காரி.. உன்னை பார்த்துக்க தான் இருக்கேன்!" சக்தி கூற,

"அப்போ பார்த்துக்க மாட்ட.. சரி வேண்டாம்.. அப்பா வாங்க.. நாம நம்ம வீட்டுக்கு போகலாம்!" மது கூற,

"ஷ்ஷ்! சக்தி! என்ன இது சின்ன பொண்ணுட்ட போய்.." என்ற சீதா மதுவை சமாதானப்படுத்த,

"சரி! இப்ப ஈவ்னிங் ரிசெப்ஷன் போய்ட்டு வந்துடலாம்!" என்றான் உடனே அபி.

"நானே இப்ப தான் மது கூட இருக்கேன்.. நான் எங்கேயும் வர்ல!" என ஆதி சொல்ல, அபியும் விடாமல் கேட்டதில் கோபமாய் கூறிவிட்டான்.

"ஆதி! போக வேண்டிய இடத்துக்கு போய் தான் ஆகணும்!" என்ற செண்பகவல்லி,

"மதுவையும் வேணா கூட்டிட்டு போ!" என்று கூற,

"மதுவா?" என அதிர்ந்த அபி, "இல்ல இல்ல! மது வேண்டாம்!" என்று மறுத்தான் உடனே.

அதில் ஆதி முறைக்க, "சரி இல்லையே! மேரேஜ்னு சொல்லிட்டு வேற எங்கேயும் போறிங்களா?" என்று சக்தி வர,

"ப்ச்! அதெல்லாம் இல்ல.. ரிசெப்ஷன் தான்.. பசங்க எல்லாரும் போறோம்.. அங்கே எப்படி மது?" என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அபி தடுமாற,

"ஓஹ்! பசங்க எல்லாரும்? அப்ப அதுவும் உண்டு.. அதானே மது வேணாம்ங்கற?" என்றாள் சக்தி கையை குடிப்பது போல் வைத்து காட்டி.

"குள்ள கத்தரி!" என முணுமுணுத்தவன்,

"நீங்க சொல்லுங்க ம்மா!" என்றான் சீதாவிடம்.

"வரலைனு சொன்னா விட வேண்டியது தானே? அவனை ஏன் டார்ச்சர் பண்ற?" என்றார் ஈஸ்வரி.

"அபியே எப்பவாச்சும் தான் இந்த மாதிரி நல்ல ஃபன்சன் எல்லாம் போவான்.. ஆதி போகலைனா எப்படி அபி போக?" என்று சீதா கேட்க,

'இதுக்காகவே சரினு சொல்லுவான் பாரு!' என சக்தி நினைத்த நொடி,

"ஒரு ஏழு மணிக்கா போலாம்.. நான் வீட்டுக்கு போய் கிளம்பிட்டு வர்றேன்!" என்றான் ஆதி.

"அப்போ மது?" அபி கேட்க,

"கவலைப்படாத! நான் ஒன்னும் வர்ல.. நான் வல்லி ஆச்சி கூட இருந்துக்குவேன்!" மது கூற,

"என் சமத்து டி நீ!" என கொஞ்சிக் கொண்டார் செண்பகவல்லி.

"சரி டா! அப்பா மார்னிங் வர்றேன்.. இப்ப கிளம்புறேன்!" என்று கூறி ஆதி மகளிடம் இருந்து விடைபெற, அபி அவனோட செல்ல இருந்தவனை தடுத்துவிட்டாள் சக்தி.

"நானும் வர்றேன்!" சக்தி கூற,

"ஹய்! நீ அதுக்காக தானே வர்றேன்னுற?" என குடியைக் கேட்க,

"ச்சீ! புத்தி போகுது பாரு.. இன்னைக்கு உன் பிரண்ட்டை ரெண்டுல ஒன்னு கேட்குறதா முடிவு பண்ணிட்டேன்!" என்றாள்.

"என்ன வேணா கேளு! சீக்கிரம் கிளம்பு இப்ப.. அவன் மனசு மாறிட போறான்!" என்று கூற அவசர அவசரமாய் சக்தியையும் கூட்டிக் கொண்டு ஆதி வீட்டிற்கு செல்ல, தயாராய் இருந்த ஆதி ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் வண்டியில் ஏறிக் கொண்டான்.

திருமண வரவேற்பிற்கு வந்து சேர்ந்த போது ஒரு புறம் மெல்லிசையும் மறுபுறம் விருந்தும் நடைபெற, மணமக்கள் நடுநாயகமாய் நின்றிருந்தனர்.

"ஆமா என்ன வெறும் கையை வீசிட்டு வந்திருக்க? கிப்ட் எதுவும் வாங்கல?" சக்தி அபியிடம் கேட்க,

"அதெல்லாம் எதுக்கு அசிங்கமா? கையை நாலு குலுக்கு குலுக்கினா போதாது?" அபி கூற,

அவனை முறைத்தபடி தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பிராண்டட் கைக்கடிகாரத்தை எடுத்து அபியின் கைகளில் வைத்தான் ஆதி.

"இதெப்படா வாங்கின?" அபி கேட்க,

"பின்ன உன்னை மாதிரியா எல்லாரும் இருப்பாங்க?".

"அப்ப ஒரு போட்டோக்கு போஸ் குடுத்துட வேண்டியது தான்.. வந்து சாப்பிட போகலாம்" என பரிசைக் கொடுக்க வரிசையில் நின்றனர்.

"வாங்க ஆதி! வா அபி!" என்ற சூர்யா சக்திக்கு தலையசைத்து புன்னகைத்தான் வரவேற்கும் விதமாய்.

சில நொடிகளில் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு கீழே இறங்க, "பொண்ணுக்கு மாப்பிள்ளை கொஞ்சம் சுமார் தான் டா!" என்று அபியிடம் வம்பு பேசியபடி வந்தாள் சக்தி.

"டேய்! டைனிங் இந்த பக்கம்!" மண்டபத்தின் வாசலை நோக்கி சென்ற ஆதிக்கு அபி குரல் கொடுக்க,

"ஹான்! ம்ம் ஒரு போன் பேசிட்டு வந்துடுறேன் டா" என்று வேகமாய் சென்றுவிட்டான் ஆதி.

"என்ன அவன் டென்ஷனா போற மாதிரி இருக்கு?" அபி கேட்க,

"தேவா! தேவா!..." என்று அழைத்தபடி ஒரு பெண் இவர்களை கடந்து வேகமாய் கிட்டத்தட்ட ஓடியபடி தான் வாசலுக்கு சென்றாள்.

"சரி அவன் வரட்டும்.. இங்கேயே வெயிட் பண்ணலாம்" சக்தி கூறவும் இருவரும் பேசியபடி அங்கேயே அமர்ந்தனர்.

"தேவா நில்லுங்க!" என்று அவன்முன் வழிமறித்து நின்றிருந்தாள் அவள் சுபத்ரா.

இதே வரவேற்பிற்கு தான் தானுமாய் வந்திருந்தாள் சுபத்ரா.

ஆதி மண்டபதினுள் நுழையும் பொழுது அப்பொழுது தான் உடனிருக்கும் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு சுபத்ரா பாத்ரூம் சென்றிருக்க, இருந்த கூட்டத்தில் நின்று மாப்பிள்ளையிடம் கைகொடுத்து ஆதி மேடையில் இருந்து இறங்கிய நேரம் தற்செயலாய் மேடையை கவனித்தபடி வந்த சுபத்ரா ஆதியை பார்த்துவிட்டாள்.

இருந்தாலும் அவன் தானா என உள்ளம் அடித்துக் கொள்ள சில நொடிகள் பார்த்தபடியே நிற்க, ஆம்! அவனே தான் ஆதி தேவா.

ஆதியும் அப்பொழுது அவளை கவனிக்கவில்லை. இறுதிப்படியில் இறங்கியவன் பார்வையும் எதிர்பாராமல் தான் அவள் கண்களைக் கண்டு கொண்டது. நொடி நேரம் தான் அவன் அதிர்ந்தது எல்லாம்.

அடுத்த நொடி அங்கிருந்து சென்றால் போதும் என்று நினைத்துவிட்டவன் வெளியேறப் பார்க்க, உடன்வந்த அபி, சக்தி எல்லாம் சுத்தமாய் நினைவில் இல்லை.

பிடித்து நிறுத்தி வைத்த அபியிடமும் ஏதோ காரணத்தை கூறி வெளியே வந்துவிட, அவனை இப்போது விட்டுவிட்டு இதற்கு மேலும் தேடி அலைய முடியாது என்று உணர்ந்தவள் அவனை வழிமறித்து நின்றும் விட்டாள்.

தேவா என்ற அழைப்பை கவனித்த அபி, சக்திக்கு நிச்சயம் அது தன் நண்பனை என அந்த நேரம் நினைவில் வர வாய்ப்பில்லை. அவர்களுக்கு அவன் என்றும் ஆதியே!

மூச்சு வாங்க கைகளை தனக்கு முன் நீட்டி நின்றவளை பார்க்காமல் வேறுபுறமாய் தலையை திருப்பி நின்றவன் மனதிலும் தவிப்பும் அலைக்கழிப்பும்.

"மது எங்க?" என்ற கேள்வியில் அவளை வெட்டும் பார்வை பார்த்த ஆதிக்கு அவள் வேறெதேனும் முதலில் பேசியிருந்தால் இல்லை கேட்டிருந்தால் மனம் கொஞ்சம் அமைதிப்பட்டிருக்குமோ என்னவோ.

மதுவைக் கேட்டவளை பார்வையால் அவன் எரிக்காமல் இருந்தது அதிசயம் தான்.

"உங்களை தான் கேட்குறேன்.. மது எங்க?" மீண்டும் சுபா கேட்க,

"ரொம்ப பத்திரமா.. அதைவிட ரொம்ப சந்தோசமா இருக்கா.." என்றவன் அவளைத் தாண்டி செல்ல,

"ஆனா நாங்க சந்தோசமா இல்ல.. உங்களால அக்கா இன்னும் எத்தனை நாளுக்கு..." என்றவளை முடிக்க விடாமல்,

"லுக்!" என்றவன்,

"யாரைப் பத்தியும் எனக்கு தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் இல்லை!" என்றான் பொறுமையை இழுத்து பிடித்து.

"ஆம்பளன்ற அதே திமிர் தான் உங்களுக்கும் இல்ல.." என்றவள்,

"அதே ரத்தம்.. அப்படி தான இருக்கும்!" என்று கூற,

"ஏய்!" என்றவன் இடத்தையும் நினைக்காமல் கையை ஓங்கி இருந்தான்.

வண்டியை அவன் நிறுத்தி இருந்த இடத்தில் ஆட்கள் அதிகமாய் இல்லை என்றாலும் செல்லும் வழி என்பதால் அவர்களை அந்த நேரம் கடந்து சென்ற இருவர் திரும்பிப் பார்க்க, அதை கவனித்தவன் கையை இழுத்துக் கொண்டான்.

"இதே கேள்வியை நானும் கேட்கலாம்.." என்று பற்களைக் கடிதப்படி கூறியவனை விழியகல அவள் பார்க்க,

"ஆனா நான் மாட்டேன்.. நான் அவ்ளோ சீப் இல்ல யாரை மாதிரியும்!" என்று கூற, தடுமாறி நின்றவள் பின் மது நியாபகம் வர,

"எங்களுக்கு மது வேணும்.. மூணு வருஷம் ஆச்சு.. எங்கேங்க எல்லாம் நாய் மாதிரி அலைஞ்சேன் தெரியுமா? அங்க ஒருத்தி இருக்குற பாதி உயிரையும் மதுவுக்காக தான் புடிச்சி வச்சுட்டு இருக்கா.. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?" என்றாள் விழ இருந்த கண்ணீரைத் துடைத்து.

"பாவத்தை ஏழேழு ஜென்மத்துக்கு செஞ்சிட்டு வெறும் மூணு வருஷத்துல கழிக்க நினைக்குற..." என்றவன் பேச விரும்பாதவனாய் முகத்தை காண்பித்து நகர,

"தேவா!" என அழைத்தவளை திரும்பிப் பார்த்து ஒற்றைப் பார்வையில் எட்டி நிறுத்தி இருந்தான். அந்த பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் மனம் உடைந்தாலும் இந்த நேரம் அவளுக்கு வேண்டியது மது.

அதற்காகவே அமைதியாய் நிற்க, ஆதியின் பார்வை அவளைத் தாண்டி பின் நின்ற இருவரையும் கவனித்தது.

சுத்தமாய் ஓய்ந்துவிட்டான் ஆதி. வருடக் கணக்கில் அவனைப் பற்றி அணு கூட கசிய விடாமல் இருந்தவனுக்கு இப்படி சில நிமிடங்களில் சோதனை.

சக்தி, அபி இருவரின் முகத்திலும் மிதமிஞ்சிய கேள்விகள். கூடவே அத்தனை அதிர்ச்சி.

நீண்ட நேரம் ஆகியும் உள்ளே வராத ஆதியை தேடி சக்தி அபி இருவரும் வெளியே தேடி வர, அப்போது தான் அவனையும் வாக்குவாதமாய் நின்ற பெண்ணையும் பார்த்தபடி அருகில் வர, சரியாய் கையை ஓங்கி இருந்தான் ஆதி.

திகைப்பாய் பார்த்து நின்ற இருவரையும் ஆதி பார்த்து நிற்க, அந்த பார்வையில் கெஞ்சலில் என சுபத்ராவும் இருவரையும் பார்த்தாள்.

"ஆதி! யார் இவங்க?" அபி கேட்க,

சொல்ல வேண்டிய அளவுக்கு தெரிஞ்சவங்க இல்லை.. வா போகலாம்!" என்று கூறி நடந்தான் ஆதி.

தொடரும்..