• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 16

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,136
643
113
Tirupur
தாமரை - 16

மீனாட்சிபுரத்தின் ஊர்த் தலைவரான கருப்பையாவின் வீட்டிற்கு வந்திருந்தார் கந்தசாமி. அவர் உள்ளே வருவதைப் பார்த்ததும் “வா வா மச்சான்.” என கந்தசாமியை வரவேற்றவர், “தங்கம் இங்க பாரு யாரு வந்துருக்காங்கன்னு.?” என மனைவிக்கும் தெரியப்படுத்தினார்.

“அண்ணே வாங்கண்ணே.. என்ன நீங்க மட்டும் வந்துருக்கீங்க? லட்சுமி வரலையா? நேத்து சொல்லிவிட்டேனே.?” என்றபடியே கையிலிருந்த மோரைக் கொடுக்க,

“அவ அண்ணன் கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டான் தங்கம். அவன்தான் நீங்க முன்னாடி போய் மாமாவுக்கு உதவியா இருங்க. பாப்பா கிளம்பினதும் நான் கூட்டியாரேன்னுட்டான்..” என்றவர் மோரைக் குடிக்க,

“அது சரி மருமவன் சொன்னா சரியாத்தான் இருக்கும்..” என்ற தங்கம், “நீங்க பேசிட்டு இருங்க அண்ணே, நான் வேலையை பார்க்குறேன்..” என உள்ளே சென்றுவிட,

“என்னப்பா தங்கச்சி ஒரே பரபரப்பா இருக்கு, என்ன விசயம்.?” என கந்தசாமி விசாரிக்க,

“யோவ் மச்சான் தெரியாத மாதிரியே கேக்க பார்த்தியா? இன்னைக்கு அவ மவன் வந்துருக்கானாம். சீமையில இல்லாத மவன். அதான் காலையிலேயே இம்புட்டு அலப்பறை..” என எரிச்சலானார் கருப்பையா.

“அட விடு மாப்பிள்ள. இது எப்பவும் நடக்குறது தான? தங்கச்சி மனசையும் புரிஞ்சிக்கோய்யா?” என்றவர்க்கும் அது பிடித்தமில்லைதான். ஆனால் தங்கத்திற்காக அமைதியாக இருந்தார்.

கருப்பையாவின் குடும்பமும், கந்தசாமியின் குடும்பமும் மூன்று தலைமுறைகளாக மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை இரு குடும்பங்களுக்குள்ளும் சம்மந்தம் செய்து கொண்டதில்லை. நட்புக்குள் உறவுமுறை வந்தால் நட்பிற்கு மரியாதை இருக்காது என்று இரு குடும்பமும் நம்பியிருந்தது. அதனாலே அப்படியான எண்ணங்களை இரண்டு குடும்பமும் நினைத்துக்கூட பார்த்ததில்லை.

பிள்ளைகளும் இதுவரை காதல், கல்யாணம் என வந்து நின்றதுமில்லை.

மீனாட்சிபுரத்தில் திருவிழா ஆரம்பித்து இன்று மூன்றாவது நாள். இன்றுதான் அம்மனுக்கு பட்டுக்கட்டி ஊர்வலம் நடக்கும்.

அம்மனின் பட்டும், நகைகளும் கருப்பையாவின் வீட்டில் இருந்துதான் எடுத்து செல்லப்படும். அப்போது வீட்டு ஆட்கள் அனைவரும் இருக்க வேண்டும், முக்கியமாக ஆண்பிள்ளைகள் இருக்க வேண்டும் என்பது அவர்கள் முன்னோரின் கட்டளை.

அதை எப்போதும் அவ்வீட்டினர் தட்டியதில்லை. இப்போதும் கருப்பையாவின் மகன் வேலையென சென்னையில் இருக்க, எந்த விசேசத்திற்கும் வராதவன் இந்த திருவிழாவிற்கு மட்டும் கண்டிப்பாக வந்துவிடுவான். அதில் முக்கியபங்கு தங்கத்திற்கு உண்டு.

திருவிழா என பேச்சு ஆரம்பித்தாலே மகனை நச்சரித்து வர வைத்துவிடுவார் தங்கம். அவனும் தாய் பேச்சை மறுக்காமல் வந்துவிடுவான்.

கருப்பையா தங்கம் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள், மூத்தவன் கதிரவன், அடுத்தது பெண் மகேஸ்வரி. கதிரவன் படித்து முடித்ததும் சென்னையில் பெரிய வேலையில் இருக்க, மகேஸ்வரிக்கு சொந்தத்திலேயே வரன் பேசி, திருவிழா முடிந்ததும் திருமணம் என முடிவு செய்திருந்தனர்.

கந்தசாமிக்கும் இரு பிள்ளைகள் மூத்தவன் செல்வம், அடுத்து ஒரு பெண் மீனாட்சி. கந்தசாமியின் மனைவி அமிர்தம். லட்சுமி பிறந்த சில வருடங்களிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டார். அதிலிருந்து லட்சுமிக்கு அனைத்துமே செல்வம்தான்.

தாய் இல்லாமல் வளர்ந்ததாலோ என்னவோ இரு ஆண்களும், லட்சுமியை மிகவும் பாசமாகவும் பாதுகாப்பாகவும் பார்த்துக்கொண்டனர்.

தங்கமும் லட்சுமியை தனக்கு இன்னொரு மகளாகத்தான் பார்த்தார்.

அமிர்தம் இல்லாத குறையை ஒரு நாளும் லட்சுமி உணர்ந்ததே இல்லை. தங்கம் அப்படி உணரவிட்டதே இல்லை.

செல்வத்துடன் உள்ளே வந்த லட்சுமி “மாமா.. கதிர் மாமா வந்துட்டாங்களா?” என்று பரபரப்பாக உள்ளே ஓட,

“ஏய் கழுதை எத்தனை தடவை சொல்றது இப்படி ஓடாதன்னு, உன் மாமன் மேல இருந்து இன்னும் இறங்கி வரல, போய் உன் அத்தையை கேளு.” என்ற கருப்பையா, “மகேஷ், இன்னும் உள்ள என்ன பண்ற லட்சுமி வந்திருக்கு பாரு. செல்வத்துக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வா.” என மகளுக்கும் சத்தமிட,

“இருக்கட்டும் மாமா வரும்போது தான் நானும் பாப்பாவும் சாப்பிட்டு வந்தோம்,” என தன்னடக்கமாக கூறிவிட்டு தந்தைக்கு அருகில் நின்று கொண்டான் செல்வம்.

செல்வத்தை பார்த்ததும் கருப்பையாவிற்கு, வழக்கம்போல மனம் பொறாமை கொண்டது. இது ஆரோக்கியமான பொறாமை குணம். தன் மகன் இப்படி இல்லையே என்ற ஆதங்கம். தன்னுடைய மகன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதுபோலவே செல்வம் இருக்க, அந்த ஏக்கம் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது.

மகேஸ்வரி செல்வத்திற்கு காபியை கொடுத்துவிட்டு, “மாமா ஊர்வலம் முடிஞ்சதும் நானும் லட்சுமியும் டெய்லர் கடை வரை போக வேண்டியது இருக்கு, நீங்கதான் எங்களை கூப்பிட்டு போகணும்.” என கந்தசாமியிடம் கூற,

“நானா? எனக்கு வேலை இருக்கே தாயி, நானும் அப்பாவும் இங்க இருந்தே ஆகணும். செல்வத்துக்கும் வேலை இருக்கு.” என யோசனையாக,

“அப்போ நான் கூப்பிட்டு போறேன் மாமா, நான் சும்மாதானே இருப்பேன். எனக்கும் கொஞ்சம் சாமான் எல்லாம் வாங்க வேண்டியது இருக்கு. நான் ரெண்டு பேரையும் கூப்பிட்டு போயிட்டு வரேன்.” என்றவாரே கதிரவன் இறங்கி வர,

“இன்னைக்கும் வீட்டுல இல்லாம எங்கடா போற? இன்னைக்கு ஒருநாளாவது எங்ககூட இருந்து ஊர் வேலையைப் பார்த்தா என்ன.?” என கருப்பையா வழக்கம்போல மகனை சாட,

“சும்மா இரு மாப்பிள்ளை. தம்பிக்கு என்ன செய்யனுமோ செய்யட்டும்.” என கருப்பையாவை கடிந்தவர், “வா தம்பி எப்படி இருக்க? எவ்வளவு நாளாச்சு பார்த்து? வருஷத்துக்கு ஒரு தடவை தான் வர, அப்பவும் வந்துட்டு உடனே ஓடிப் போயிடுற.. கொஞ்சம் ஊர் பக்கமும் அடிக்கடி வா தம்பி. உன் அம்மாவதான் எங்களால சமாளிக்கவே முடியல.” என்ற கந்தசாமியிடம், “சரிங்க மாமா.. பாக்குறேன் மாமா..” என்ற தலையை மட்டும் மாட்டிக் கொண்டான் கதிரவன்.

இது பெயருக்கு சமாதானம் சொல்கிறான் என்று அங்குள்ள அனைவருக்கும் தெரியும். ஆனாலும் லும் யாரும்ஒன்றும் கூறவில்லை..

அடுத்து ஊரு ஆட்கள் எல்லாம் வர, நகைப்பெட்டியை கருப்பையா சுமக்க, அவரை பின் தொடர்ந்து குடும்பத்தாரும், ஊர் மக்களும் தொடர்ந்தனர்.

கோவில் வேலையெல்லாம் முடிந்தத்தும் பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான் கதிரவன். இருவருக்கும் தேவையானதை வாங்கிக் கொடுத்து, அவர்களை ஓட்டலில் சாப்பிடவிட்டு வீட்டுக்கு அழைத்து வர, இரவு எட்டை நெருங்கியிருந்தது.

அவனுக்காக காத்திருந்த செல்வம், “ஏன் மச்சான் இவ்ளோ நேரம், பசங்க வேற தோப்புல இருந்து ஆள் மாத்தி ஆள் கூப்பிட்டே இருக்கானுங்க. சீக்கிரம் வா.?” என தன் பைக்கை கிளப்ப,

“இரு மச்சான் அம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன், இல்லைன்னா சாப்பிடாம கூட உக்காந்து கிடக்கும்.” என உள்ளே போக,

“கிழிஞ்சது… நீ மட்டும் இப்போ உள்ள போன அவ்ளோதான். அத்தை விடமாட்டாங்க. நீ கிளம்பு. மாமாக்கிட்ட நான் சொல்லிட்டேன். அவர் சமாளிச்சிப்பார்.” என்ற செல்வம் கதிரவனை அழைத்துக்கொண்டு பறந்துவிட்டான்.

“எங்கடி நீங்க மட்டும் வந்துருக்கீங்க. கதிர் எங்க?” என்ற தங்கத்திடம்,

“அவன் ஆம்பளபிள்ளடி. எந்த நேரமும் வீட்டுக்குள்ளயே அடைஞ்சி கிடக்கனுமா? அவன் சோட்டு பசங்கக்கூட சுத்திட்டு வரட்டும். இப்படி வீட்டுக்குள்ளயே இருந்தா நாளைக்கு நமக்கு அப்புறம் இந்த ஊர்ல ஒருத்தன் அவனை மதிக்க மாட்டான்..” என கருப்பையா கத்த ஆரம்பிக்க,

“ம்ம் இப்ப எதுக்கு இப்படி கத்திட்டு இருக்கீங்க? கூட போனவன காணோம்னு கேட்டது குத்தமா? சொன்னா கேட்டுக்க போறேன். அதுக்கு ஏன் இப்படி ஊரே கேட்குற மாதிரி சத்தம். வெளிய இருக்க மைக்ல கேட்குற சத்தத்தை விட உங்க சத்தம்தான் அதிகமா கேட்குது.” என தங்கமும் பதிலுக்கு பேசிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

“ஏன் மாப்பிள்ளை அதான் என் தங்கச்சிக்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு தெரியும்ல. அப்புறம் எதுக்கு உனக்கு இவ்ளோ வீராப்பு..” என சிரித்த கந்தசாமி, “நான் கிளம்புறேன்யா.. பாப்பாவும் இங்கேயே இருக்கேன்னு சொல்லிடுச்சு. தம்பியும் வரமாட்டான். வீட்டுல யாருமில்ல.” என கிளம்ப எத்தனிக்க,

“அதான் அங்க யாருமில்லயில்ல மச்சான். இங்கேயே இருக்கலாம்ல..” என அவர் என்ன சொல்வார் என்று தெரிந்தும் கேட்க,

“என்னய்யா நீ தெரிஞ்சிக்கிட்டே கேட்குற? உன் தங்கச்சி உசுர் போன இடத்துல என் தலையை சாச்சாதான் எனக்கு தூக்கம் எட்டிப்பார்க்கும். இல்லைன்னா என் மனசே கனத்துப்போகும்யா.. புள்ளைகள பார்த்துக்க..” என்றவர் கிளம்பி சென்றுவிட்டார்.

மனைவியின் மேல் அத்தனை பாசம் கந்தசாமிக்கு. ஊர் கண்ணே அவர்கள் மீதுதான். அதுதான் அமிர்தத்தின் உயிரை பறித்து விட்டதோ என்றுகூட பலமுறை நினைத்திருக்கிறார்.

இங்கு தோட்டத்தில் இளவட்டங்களுக்கே உரிய வகையில் ஆட்டம் பாட்டம் என ஆரம்பித்தது. செல்வம் எப்போதும் அளவாகத்தான் குடிப்பது. கதிரும் அப்படித்தான். ஆனால் இன்று சற்றே கூடிவிட்டது. அவரை அப்படியே அழைத்துச் சென்றால் தங்கம் பார்த்து வருத்தப்படுவார் என புரிந்து மோட்டார் ரூமிலேயே படுத்துவிட்டனர் இருவரும்.

விடிந்தும் விடியாத காலையிலேயே கருப்பையா ஆள்விட்டு இருவரையும் எழுப்பி வீட்டுக்கு வர வைத்துவிட்டார்.

செல்வம் தங்கையை அழைத்துக்கொண்டு கிளம்ப, “செல்வம் நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போய் முதல் பத்திரிக்கை வைக்கனும். அப்பாகிட்ட சொல்லிடு. நீயும் வந்துடு..” என்றார்.

“நாளைக்கு அப்பா வருவார் மாமா. நான் உரக்கடை வர போக வேண்டியிருக்கு. அப்படியே அந்த வாழ மண்டியில பணம் வாங்க வேண்டியிருக்கு.. அதையும் பார்த்துட்டு வந்துடுறேன். நீங்க போய்ட்டு வாங்க…”

“சரிப்பா.. கதிர் நாளைக்கு நைட் கிளம்புறான். அதான் அவன் இருக்கும்போதே போய்ட்டு வந்துடலாம்னு பார்க்குறேன்..”

“அதுவும் சரிதான் மாமா? நீங்க போய்ட்டு வாங்க. மத்த இடங்களுக்கு போகும் போது நான் வரேன்.”


“சரிப்பா.. பார்த்து போங்க..”

செல்வம் கிளம்பியதும், காபியோடு வந்த மனைவியிடம் “நம்ம பாட்டனுங்க மட்டும் இதை சொல்லாம விட்டுருந்தா மகேஷுக்கு நான் வெளிய மாப்பிள்ளை பார்த்திருக்கவே மாட்டேன் தங்கம். நம்ம செல்வம் மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சுருக்கனும்.” என வழக்கம்போல புலம்ப,

“நெசம்தான் மாமா? எனக்கும் அந்த ஆசை இருக்கத்தான் செஞ்சிது. அண்ணன் மாதிரி ஒரு மாமனார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும். யாருக்கு அமையுதோ?” என தங்கமும் பெருமூச்சுவிட்டார்.

இதை அவர்களுக்கு பின்னே நின்றிருந்த மகேஸ்வரி கேட்டதை இருவரும் அறியவில்லை.

‘செல்வம் மாமாவா?’ என்று யோசித்தபடியே நின்றிருக்க, “ஏன் பாப்பா இங்க நின்னு என்ன செய்ற?” என்ற கதிரிடம்,

“ஒன்னுமில்ல ண்ணா.. சும்மா ஏதோ யோசனை..” என சமாளித்தவள், “போய்ட்டு எப்போ வருவ.. கல்யாணத்துக்கு ஒரு நாள் இருக்கும்போது வரேன்னு எல்லாம் சொல்லிட்டு இருக்காத. ஒருவாரத்துக்கு முன்னாடி இங்க இருக்கனும். அப்பா பாவம் எவ்ளோ வேலைதான் செய்வார். அவரும் பாவமில்ல..” என்று மிரட்ட,

“அடிப்பாவி.. நான் கூட ஏதோ பாசமா கூப்பிடுறனு நினைச்சேன். ஆனா இப்போதான தெரியுது உன் கல்யாணத்துக்கு வேலை செய்ய கூப்பிடுறன்னு..” என தங்கையின் தலையில் தட்டியவன், “நான் எதுக்குமா வரனும். உங்களுக்குத்தான் செல்வம் இருக்கானே. அவனை வச்சே எல்லாம் பண்ணுங்க. நான் இருந்தாலும் இல்லைன்னாலும் உங்களுக்கு கவலையே இல்லையே..” என சிரித்தபடியே பேசினாலும், அவன் மனதில் செல்வத்தின் மீது சிறு கோபமும், பொறாமையும் இருப்பதை மகேஸ்வரி கண்டு கொண்டாள்.

“அண்ணா என்ன நீ? உன்னை விட்டுட்டு நாங்க அப்படி செய்வோமா? நீ இங்க இருந்து செஞ்சிருக்கனும். செய்யல இல்ல. இப்போ ஏன் இப்படி பேசுற? நமக்கு உதவனும்னு அவங்களுக்கு என்ன இருக்கு சொல்லு. பழகின பழக்கத்துக்கு வந்து செய்றாங்க. அவங்களை அப்படி நினைக்கிறதே தப்பு. இனி நீ வந்துதான் எல்லாம் செய்யனும்னு நான் பிடிவாதம் பிடிச்சா, உடனே நீ வந்துடுவியா?” என வருத்தமாக கேட்க,

“ச்சே ச்சே என்ன பாப்பா? நான் சும்மா, அது ஒரு குட்டி கோபம், எல்லாரும் அவனையே கேட்குறீங்களேன்னு ஒரு குட்டி பொறாமை. அதெல்லாம் சும்மாடா, இங்க இருந்து போனா எல்லாம் மறந்துடும். நீ இதையெல்லாம் மண்டைல ஏத்தி, எல்லாரையும் டென்சன் பண்ணாத, சரியா?” என சமாதானம் செய்துவிட்டு செல்ல, மகேஸ்வரிக்குதான் இது சரியில்லை, இது சரியில்லை எதுவோ நடக்கப் போகிறது என மூளையில் ஓடிக் கொண்டே இருந்தது.

அடுத்தநாளே அவள் மனதை உறுத்தியோ எதுவோ ஒன்று நடந்தே விட்டது. அதை மகேஸ்வரி மட்டுமல்ல யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
19
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 16)


ஒத்துக்க மாட்டேன், ஒத்துக்க மாட்டேன்... இப்படி சொல்ல வந்த விஷயத்தை அரைகுறையா சொல்லாமலே போனிங்கன்னா.. நைட்மேர் வருமாம்.


அது சரி, செல்வத்துக்கு ஒரு தங்கச்சியா, ரெண்டு தங்கச்சியா...? லட்சுமி தங்கச்சின்னா, அப்ப மீனாட்சி யாரு..? எல்லா இடத்திலேயும் லட்சுமி பேரு தான் வருது, மீனாட்சி நினைப்பே வரலையே ?


😀😀😀
CRVS (or) CRVS 2797