• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 45

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,330
541
113
Tirupur
தாமரை - 45

இளங்கோ வந்து சென்ற அடுத்தநாளே பல யோசனைகளுக்குப் பிறகு மகளுடன் மீண்டும் இளன்கோவின் வீட்டிற்கே வந்து விட்டார் நாயகி.

இப்போது அவரிடம் இருக்கும் ஒரே பிரம்மாஸ்திரம் தாமரைதான். அவளை எப்படியாவது இளங்கோவின் வாழ்வில் இருந்து மொத்தமாக ஒதுக்கிட வேண்டும் என்று தோன்ற, அதை அவரின் அண்ணனிடமும் கூற, அவருக்குமே தங்கையின் திட்டம் பிடிக்கத்தான் செய்தது.

இதுவரை நடந்த எதையும் கண்டுபிடிக்காத இளங்கோ, இனியும் கண்டுபிடிக்க வாய்ப்பில்லை என்று நினைத்துதான் இவர்கள் திட்டம் போட்டது.

ஆனால் இளங்கோ அப்படியே விட்டு விடுவானா என்ன.?

நாயகி இங்கே வந்தது தாமரைக்கு நெருடலாக இருந்தாலும், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. அதோடு அவரிடம் அதிகமான பேச்சுக்களும் வைத்துக் கொள்ளவில்லை.

ராணிக்குத்தான் நாயகியின் வரவு சுத்தமாக பிடிக்கவில்லை. தாமரையை வார்த்தைகளால் வதைப்பாரோ என்ற பயம். ஆனால் அதை ராணியால் நேரடியாக வெளிப்படுத்த முடியாத நிலை.

வசந்திக்கும் அதே பயம்தான். ஆனால் தாமரை இன்னும் சிறிது நாட்களில் பிரசவத்திற்கு பிறந்த வீடு சென்று விடுவாள் அதுவரை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து மனதை தேற்றிக் கொண்டார்.

மேலும் ப்ரீத்தாவை வைத்து எந்த பிரச்சினையும் செய்யாமல் இருந்தால் போதும் என்று தோன்ற அமைதியாகவே இருந்தனர் அனைவரும்.

ஆனால் இவர்கள் நினைத்து பயந்ததைப் போல நாயகி எந்த கோபத்தையும், வெறுப்பையும் தாமரையிடம் காட்டவில்லை. தாமரையிடம் நல்ல முறையில் பேசினார், பழகினார். அவளுக்கு சில அறிவுரைகள் கூட கூறினார்.

அவளுக்கு சின்ன சின்ன வேலைகள் கூட செய்தார். இது மற்றவர்களுக்கு அவரின் மனமாற்றம் என்று தோன்ற, இளங்கோவிற்கு மட்டும் அப்படி தெரியவில்லை.

அவனுக்கு அது நெருடலாகவே பட்டது. இவர் ஏதோ திட்டம் தீட்டுகிறாரோ என்று யோசிக்க ஆரம்பித்தான்.

காரணம் செழியன் இப்போதெல்லாம் அடிக்கடி ப்ரீத்தாவை பார்க்க, அவளை கல்லூரியில் விட என வந்தாலும், அவன் பார்வை நாயகியைத் தொட்டு, தாமரையிடம் வன்மமாக விழுவதை கவனித்திருக்கிறான்.

ப்ரீத்தாவிற்கு வர போகிற கணவன் என்ற எண்ணத்தில் இளங்கோவும், செழியனிடம் பிரச்சினை செய்யாமல் அமைதியாக கவனிக்க ஆரம்பித்தான்.

இருவரின் பார்வையும் அந்த ஒரு நொடியில் ஏதோ பேசி கொள்கிறது என்று அவனுக்கு புரிந்தது.

அதிலிருந்து தாமரையை அதிகம் கீழே விடுவதில்லை இளங்கோ. அவனும் மனைவியோடு அதிகமான நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தான்.

இளங்கோ தாமரை இருவரும் ஒரே அறைக்குள் இருந்தாலும், இருவரிடமும் பெரிதாக பேச்சு வார்த்தைகள் இருப்பதில்லை.

பேச வேண்டும் என இருவருமே நினைக்காததுதான் முக்கிய காரணம். பேச ஆரம்பித்தால், அது மீண்டும் ஒரு பிரச்சினையில் போய் முடிந்து விடுமோ என்று பயந்து அமைதியை தத்தெடுத்துக் கொண்டனர் இருவரும்.

அன்றும் அப்படித்தான் இருவரும் அறைக்குள் அமைதியாக இருந்தாலும், தாமரையின் முகம் ஒரு ஒவ்வாமையைக் காட்டிக் கொண்டிருந்தது. அதை இளங்கோவும் கவனிக்கத்தான் செய்தான்.

கர்ப்ப காலத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருவது இயல்புதான் என மகேஸ்வரி அவனிடம் கூறியிருந்தாலும், அவனால் அதை சாதாரணமாக எடுக்க முடியவில்லை.

அறையைச் சுற்றி நடக்கிறாள், பின் சில நிமிடம் உட்காருகிறாள்.. அதிலும் அசௌகரியம் தோன்ற படுக்கிறாள், பின் எழுந்து மீண்டும் நடக்கிறாள்.

இப்படியே தாமரை தொடர்ந்து செய்ய, இளங்கோவால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதோடு அவளது வயிறும் ஆறு மாதத்திற்குண்டான வளர்ச்சியில் இல்லாமல், பெரிதாக இருக்க, இப்போதெல்லாம் அதை நினைத்து அவனுக்கு பெரும்பயம்.

அதனால் மனைவியிடம் வேகமாக வந்தவன் “தாரா ஆர் யூ ஓக்கே?” என மூச்சு விடவே சிரமப்பட்டவளின் முதுகை வருடியபடியே பதட்டமாக கேட்டான் இளங்கோ.

“நாட்.. நாட் ஓக்கே. ப்ளீஸ் ராணிம்மாவை கூப்பிடுங்க..” என மேல் மூச்சு வாங்க கூறியவளைப் பார்த்து மேலும் பதட்டமானான் இளங்கோ.

“ஓ மை காட்.. தாரா என்ன செய்யுது? என்ன செய்யுது.?” என அவளிடம் கேட்டுக் கொண்டே இண்டர்காமை எடுத்து ராணியை உடனே மேலே வர வைத்தான்.

“ம்ச்.. நீங்க ஏன் டென்சன் ஆகுறீங்க. நீங்க பதட்டப்பட்டா நானும் டென்சன் ஆவேன். ஷ்யாம்க்கு கூப்பிடுங்க..” என அந்த எரிச்சலில் இளங்கோவைத் திட்ட ஆரம்பித்தாள் தாமரை.

“ஓக்கே ஓக்கே..” என அவளை சமாதானம் செய்வதற்குள் ராணியும் நாயகியும் அங்கு வந்துவிட்டனர்.

“என்ன இளா?” என நாயகி வேகமாக தாமரையிடம் செல்ல,

“தெரில த்த.. ஏதோ முடிலன்னு சொல்றா?” என்றபடியே போனை எடுத்து ஷ்யாமிற்கு அழைத்தான் இளங்கோ.

அவனிடம் தாமரையின் நிலையை பதட்டமாக கூற, “நீ அவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துடு.. நான் அவளுக்கு எமர்ஜென்சி அரேஞ்ச் பண்னிடுறேன்..” என்றான் ஷ்யாமும்.

“பாப்பா பாப்பா..” என ராணி அவளின் கன்னம் தட்ட,

“முடில ராணிம்மா..” என்ற தாமரைக்கு உடல் தள்ளாடியது.

“இளா.. தாமரையைத் தூக்கு. நடக்க வச்சு கூப்பிட்டு போக முடியாது. அவளால காலை நேராவே ஊன முடியல. சீக்கிரம் தூக்கு..” என்ற நாயகியின் பேச்சில் மனைவியை கைகளில் அள்ளிக்கொண்டான் இளங்கோ.

இவர்களின் சத்தத்தில் ப்ரீத்தாவும், சீனியும் வந்துவிட, “ரீத்து.. காரை ஓபன் பண்ணு..” என்றான் சத்தமாக.

அவளும் ஓடிச்சென்று கார் கதவை திறந்துவிட, சீனி டிரைவர் சீட்டில் அமர்ந்தார். ராணி உள்ளே அமர அவள் அருகே தாமரையை விட்டு, தானும் அமர்ந்து அவள் கைகளை இறுக பிடித்துக்கொண்டான் இளங்கோ.

நாயகி முன்னால் ஏறிக்கொள்ள, கார் அடுத்த இருபது நிமிடத்தில் மருத்துவமனை முன் நின்றது.

இவர்களுக்காகவே காத்திருந்த ஷ்யாம், தாமரையை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு அவசரமாக எமர்ஜென்சி நோக்கி ஓடினான்.

“ஒன்னும் இருக்காது தம்பி.. இந்த நேரம் இப்படித்தான் இருக்கும்..” என்ற ராணியின் சமாதானங்கள் அவன் காதை சென்று அடையவே இல்லை.

அதே நேரம் ஊரிலிருந்து செல்வம் மகளுக்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போயிருந்தார். இன்னுமே இளங்கோவிடம் சரியாக பேசவில்லை அவர். அதனால் அவனுக்கு அழைக்க தோன்றவில்லை.

“மகி.. பாப்பாவுக்கு போன் போட்டா எடுக்கல. உன் மருமகனுக்கு போட்டு என்னனு கேளு..” என்றார் மனைவியிடம் பதட்டமாக.

மகேஸ்வரியுமே அன்று காலையில் இருந்து மகளிடம் பேசவில்லை. அதனால் அவருக்குமே கணவரின் பதட்டம் சேர்ந்து கொள்ள “இருங்க மாமா நான் இளாவுக்கு கூப்பிட்டு கேட்குறேன்..” என இளங்கோவிற்கு அழைத்தார்.

அவர் அழைத்த நேரம் இளாவின் போனும் வீட்டில் இருக்க, அது யாரும் எடுக்காமல் அழைப்பு போய்க்கொண்டே இருக்க, மகேஸ்வரிக்கும் பதட்டம் கூடியது.

மனைவியின் முகத்தைப் பார்த்த செல்வம் உடனே ஷ்யாமிற்கு அழைத்தார்.

அழைப்பை எடுத்த ஷ்யாம் “மாமா பயப்பட ஒன்னுமில்ல… மார்னிங்க் இருந்து வாமிட் எடுத்துட்டே இருந்துருக்கா, அதான் இங்க கூட்டிட்டு வர சொல்லிட்டேன். இங்க வந்ததும் நான் கூப்பிட சொல்றேன்..” என சமாதானம் செய்து வைத்துவிட, பெற்றோருக்கு அங்கு நிலை கொள்ள முடியவில்லை.

மகேஸ்வரி வேகமாக பூஜை அறைக்கு சென்று கைக்கூப்பி வேண்டி, ஒரு மஞ்சத் துணியில் பதினொரு ரூபாய் காணிக்கை முடிந்து வைத்துவிட்டு, அங்கேயே தொய்ந்து அமர்ந்தார்.

அவரது விழிகளில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது. ‘இன்னும் ஏன் எங்க குடும்பத்துக்கு இந்த தண்டனை. அந்த சின்னஞ்சிறுசுகளை வாழ விடு சாமி..’ என மனதுக்குள் கடவுளிடம் வேண்டியபடியே பூஜை அறை சுவற்றில் சாய்ந்தமர்ந்தார்.

அவர் உடல் அழுகையில் குலுங்கியது.

மனைவியின் பயம் செல்வத்திற்கும் புரிய, அவரது உடலும் பயத்தில் இறுகித்தான் போனது.

வளைகாப்பிற்கு நாள் பார்க்கலாம் என்று முதல் நாள் இருவரும் போய் வள்ளுவரைப் பார்க்க சென்றனர்.

அவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்க, அந்த அமைதியே மகேஸ்வரிக்கும் பயத்தைக் கொடுத்தது.

“என்ன சாமி..?” என செல்வம் கேட்க,

“தனியா பார்த்தா ரெண்டு ஜாதகமும் ராஜா ராணி ஜாதகம்தான். ஆனா..” என இழுக்க,

“எங்களுக்கு புரியுற மாதிரி சொல்லுங்க சாமி..” என்ற மகேஸ்வரியின் குரல் அடைத்தது.

“புள்ளைங்க பிறக்கிற வரைக்கும் எதையும் சரியா சொல்ல முடியாது செல்வம். உன் மக மருமன் ரெண்டு பேருக்குமே இப்போ நேரம் சரியில்ல. உன் வீட்டு கன்னித் தெய்வம் மனசு வச்சா உன் மக வாரிசு தப்பும்.. இல்லைன்னா பிறக்கும் போதே..” என நிறுத்திவிட்டு உதட்டை பிதுக்க,

“அய்யோ..” என மகேஸ்வரி வாயில் கைவைத்து அதிர,

“என்ன சொல்றீங்க சாமி.. என் மக வயித்துல புள்ளையோட இருக்கா.. நாங்க என்ன செய்யனும்?” என செல்வமும் அதிர்ச்சியில் கேட்க,

“புள்ளையோட இல்ல.. புள்ளைங்களோட… இப்போ உன் மக சுமக்கிறது ரெட்டை கரு.. ரெண்டுமே பூமிக்கு வரும் போது குடும்பத்துல ஒரு பிரளயமே நடக்கும்..” என வள்ளுவர் நிறுத்த,

“ரெட்டையா?” என அதிர்ந்து மனைவியைப் பார்க்க, அவருக்குமே அதிர்ச்சிதான். அதனால் மனைவிக்கும் தெரியாது போல என நினைத்துக் கொண்டார் செல்வம்.

ஆனால் மகேஸ்வரி அதிர்ந்தது வள்ளுவரின் பேச்சில்தான்.

“ஆமாம் ரெட்டைதான். உங்க வீட்டு கன்னிப் பொண்ணோட சாபமும், பாவமும் அவங்க வீட்டு பையனை வாழ விடாது ப்பா.. அந்த பையனோட வம்சமும் தளிராது. நீங்க அந்த கன்னி பொண்ணை வேண்டி, தெய்வமா மதிச்சு, உங்க கொள்ளையில ஒரு நினைவுத்தூண் வச்சு கும்பிடுங்க. அவ மனசு இறங்கினாத்தான் உங்க பொண்ணு வாழ்க்கை நிலைக்கும்..” என்றுவிட, செய்வதறியாது திகைத்துப் போயினர் இருவரும்.

“இதுக்கு பரிகாரம்.. எப்போ செய்யனும்..? என்ன செய்யனும்?” என்ற செல்வத்தின் கேள்விகளுக்கு, அவர் பதில் கூற, மிகுந்த மன வேதனையோடுதான் வீடு வந்தனர் இருவரும்.

அடுத்தநாள் காலையிலேயே செல்வம் வேலையை ஆரம்பித்து விட்டார். தன் வீட்டின் பின்புறம் லட்சுமிக்கு மிகவும் பிடித்த இடமான மாமரத்தை ஒட்டியே அவளுக்கான நினைவுத்தூணை அமைக்க ஆரம்பித்தார்.

இன்றும் கூட அந்த வேலையில் தான் இருந்தார். மகளிடம் சில யோசனைகள் கேட்கவே அவளுக்கு அழைத்தார் செல்வம். அவள் எடுக்கவில்லை என்றதும் பயம் வந்துவிட்டது.

இதோ இப்போது அவர்கள் பயந்ததைப் போலவே நடக்க, பெற்றோர் இருவரும் சந்தன மாலை போட்ட லட்சுமியின் புகைப்படத்தை நீர் நிரம்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

‘என் பொண்ணை வாழ வை’ என மகளாக வளர்த்த தங்கையிடம் எப்படி கேட்பது என செல்வத்தை குற்றவுணர்ச்சி.

‘உன்னைத்தான் முழுசா தூக்கி கொடுத்துட்டேன். எங்களுக்கு உலகமே அவதான். அவளையும் எங்ககிட்ட இருந்து எடுத்துடாத.. என் பொண்ணை வாழ விடு..’ என மகேஸ்வரி மனதிற்குள்ளே அரற்றினார்.

வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த தன் அண்ணனையும் அண்ணியையும் பார்த்து மெல்ல புன்னகைத்தாள் புகைப்படத்தில் இருந்த லட்சுமி.



 

Lakshmi murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 14, 2022
816
79
63
Coimbatore
கண்டிப்பாக லெட்சுமி தாமரைக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டாள்.