• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 59

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,341
557
113
Tirupur
தாமரை - 59

அன்று தாமரையைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தான் ஷ்யாம். அவனை முறைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவளை இடித்தபடி ஒட்டி அமர்ந்தான் ஷ்யாம். அதைக் கண்டு மேலும் முறைத்தவளிடம் “இன்னும் உன் கோபம் போகலயா?” என்றான் பாவமாக.

“ம்ச்..” என்று சலித்தவள் “ப்ரீத்தாக்கிட்ட நீ பேசுறியா இல்லையா? அவ ஏன் டல்லா இருக்கா? மறுபடியும் உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சினையா?” என்று அவன் கேட்டதற்கு பதில் கொடுக்காமல் வேறு பேசினாள்.

“அவங்க அம்மா இருக்குற வரை அவ அப்படித்தான் இருப்பா.” என்றான் பட்டென.

“டேய் என்ன பேச்சு இது..?” என்றாள் தாமரை கோபமாக.

“எங்கிட்ட கோபப்பட்டா என்ன செய்ய? நீ அவளை கூப்பிட்டு வச்சு பேசு. அவங்க அம்மா சம்மதிக்கலன்னு சோகமா இருக்கா, எங்கிட்டயும் முறைச்சிக்கிட்டு இருக்கா..?” என்றான் ஷ்யாம் எரிச்சலாக.

“ம்ச் தெளிவா சொல்லு?” என்று கடுப்பாக கேட்க,

“ம்ம் அவங்களுக்கு ஒரே பொண்ணாம். கல்யாணம் செஞ்சு இங்க வந்துட்டா அவங்களை யார் பார்த்துக்குவா? எங்களை அநாதையா விடுறதுனு முடிவு பண்ணிட்டியான்ணு எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணிருக்காங்க. மேடமும் அப்படியே அழுது வடிஞ்சிக்கிட்டு சோகமா சுத்திட்டு இருக்கு..” என்றான் எரிச்சல் மாறாமல்.

“ஷ்யாம் நீ பேசுறது சரியில்ல.. இதெல்லாம் நீ முன்னமே அவக்கிட்ட பேசியிருக்கனும். அவளை சமாதானம் செய்யாம என்ன செஞ்சிட்டு இருக்க. இதை அத்தான்கிட்ட சொன்னியா? அவருக்கு தெரியுமா?”

“ம்ச்.. அவளுக்கு எத்தனை தடவை சொல்லி புரிய வைக்க, நான் சொல்ல வர்ரதையே கேட்காம அவ இஷ்டத்துக்கு பேசினா, நான் என்ன செய்ய முடியும். இளங்கோகிட்ட இன்னைக்கு தான் பேசனும். அவன் ஃப்ரீ ஆகட்டும்னு வெய்ட் பண்ணேன்..”

“ஆமா ஃப்ரீயாக ஏதாவது வேலை செய்யனும். வெட்டியாதானே இருக்கார். போய் பேச வேண்டியது தானே, ஏதாச்சும் ரீசன் சொல்லிட்டே இருக்கனும். ஒருவேளை ரெண்டு பேருக்கும் செட்டாகதுன்னு, கழட்டி விடுற ஐடியால இருக்கியோ..” என கேட்டு முடிக்கும் முன்னே, அவர்களுக்கு பின்னால் ஒரு கேவல் சத்தம் கேட்க பதறி போய் இருவரும் திரும்பி பார்க்க, வாயை மூடித் தன் கேவலை அடக்கி, இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தா.

‘சோலிய முடிச்சிட்டா..’ என மனதுக்குள் நொந்து கொண்ட ஷ்யாம், தாமரையைப் பார்த்து பல்லைக் கடித்தான்.

“ஹேய் என்னை ஏன்டா பார்த்துட்டு இருக்க.. அங்க அழுதுட்டு இருக்கா அவளை போய் சமாதானம் செய். பாவம் எப்படி அழறா பார். உனக்கெல்லாம் காதல் வரலன்னு யார் அழுதா? அவ லவ்வுக்கு நீ தகுதியே இல்ல போடா..” என ராகமிழுத்து பேச,

அந்த பேச்சைக் கேட்ட ப்ரீத்தா, இன்னுமின்னும் அழுது கொண்டே தன் அறைக்குள் ஓடி மறைந்தாள்.

“இப்போ நிம்மதியா உனக்கு?” என பல்லைக் கடித்தான் ஷ்யாம்.

“கண்டிப்பா.. இப்போதான் குழுகுழுன்னு இருக்கு..” என பல்லைக் காட்ட,

“அவக்கிட்ட பேசிட்டு வந்து உன்னை பார்த்துக்கிறேன்..” என கோபமாக அந்த அறைக்குள் சென்றான் ஷ்யாம்.

முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாக இருக்க, ஆனால் அதை காட்டினால் மேலும் மேலும் வீம்பு செய்வாள் என்று புரிந்து, அவள் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் வந்தான்.

“விடு.. விடுங்க.. விடுங்க..” என திமிறியதை கூட கண்டு கொள்ளாமல் இளங்கோவின் அறைக்குள் வந்த பிறகுதான் விட்டான்.

அதற்குள் தாமரையும் “என்னடா பண்ற?” என கத்தியபடியே பின்னாடி வந்திருந்தாள்.

ப்ரீத்தாவை இப்படி பார்த்ததும் இளங்கோவிற்கு கோபம் வர, “டேய்..?” என ஷ்யாமை பார்த்து கத்த,

“என்ன? என்ன? ஆளாளுக்கு கத்திட்டு இருக்கீங்க? என்னை அதட்டுறதை விட்டுட்டு முதல்ல இவளுக்கு என்ன பிரச்சினைனு கேளுங்க?” என ஷ்யாமும் கத்த,

“அவ சின்ன பொண்ணு.. அவ என்ன செஞ்சாலும், நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போகக்கூடாதா?” என தாமரை பேச,

“இங்க பார் இளா? உன் பொண்டாட்டியை கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருக்கச் சொல்லு? இவ்ளோ பிரச்சினைக்கும் இவதான் காரணம். சும்மா இருந்தவக்கிட்ட எதையோ சொல்லி வச்சிருக்கா?” என ஷ்யாம் கடுப்பாக கத்த,

“ஏய் நான் என்ன சொன்னேன்?” என தாமரை திமிறிக் கொண்டு சண்டைக்கு கிளம்ப,

“தாரா.?” என்ற இளங்கோவின் அதட்டல் அவளை அமைதியாக்க, ‘க்கும்..’ என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் தாமரை.

“என்ன பிரச்சினை ரீத்து?” என ப்ரீத்தாவை பார்த்து கூர்மையாக கேட்டான்.

“ம்ம்ம்.. ஒன்னும் இல்ல மாமா?” என மெல்ல முணுமுணுக்க,

“அப்போ எதுக்குடி இவ்ளோ நேரம் அழுதுட்டு இருந்த..?” என ஷ்யாம் கத்த,

“ஷ்யாம் நீ கொஞ்ச நெரம் சும்மா இரு..” என அவனை அதட்டியவன், போனை எடுத்து தோட்டத்திற்கு சென்றிருந்த செல்வத்தையும், சீனியையும் வர சொன்னான்.

“ரீத்து.. உனக்கு இங்க இருக்க பிடிக்கலயா? இல்ல இவனை பிடிக்கலயா?”

“ம்ம் அது அதெல்லாம் இல்ல மாமா.” என மென்று விழுங்கினாள்.

“இப்போ சொல்லப் போறியா இல்லையா? ஒன்னுமில்லனா எதுக்கு அழுதுட்டு இருக்க? அவனை எதுக்கு டென்சன் பண்ணிட்டு இருக்க?” என கேட்கவும்,

“அம்மா..” என ஆரம்பித்து நாயகி தன்னிடம் பேசியதை கூற,

“சரி அதுக்கு என்ன பண்ணனும். இவன் அங்க வந்து இருக்கனுமா?” என கேட்க, பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள் ப்ரீத்தா. அந்த அமைதியே பதிலை சொல்லிவிட, ஏகத்துக்கும் எரிச்சல் கூடியது ஷ்யாமிற்கு.

“முதல்ல ஒரு விசயம் புரிஞ்சிக்கோ.. நான் இருக்கும் போது எப்படி அவங்களை உன் பொறுப்புல விடுவேன். அப்படி விட்டுடுவேன்னு நீ நினைக்கிறியா? அவ்ளோதான் நீ என் மேல வச்சிருக்கிற நம்பிக்கையா?” என்றான் தீர்க்கமாக..

“இல்ல மாமா?” என்றவளுக்கு, அவன் கேட்டதற்கு பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருக்க, செல்வமும் சீனியும் வந்து விட்டார்கள். அவர்களோடு வீட்டில் உள்ளவர்களும் என்னவோ என உள்ளே வந்து விட்டனர்.

ப்ரீத்தாவை யோசனையாக பார்த்தபடி வந்த சீனியிடம் “மாமா உங்ககிட்ட சொல்லாம நான் ஒரு முடிவு எடுத்துட்டேன். பாட்டிக்கும் இதுல விருப்பம்தான். நீங்களும் சம்மதிப்பீங்கன்னு நம்புறேன்..” என நிறுத்த,

“நீ என்ன செஞ்சாலும் எனக்கு சரிதான் இளா. எனக்கு காரணமெல்லாம் சொல்ல வேண்டியது இல்ல..” என்றார் அவர்.

“தேங்க்ஸ் மாமா..” என்றவன் “நாம மொத்தமா இங்க வந்துடலாம்னு முடிவு பண்ணிருக்கேன். பிசினஸ் எல்லாம் இங்க இருந்தே பார்த்துக்கலாம். ஜெர்மனி ப்ராஜக்ட் முடிஞ்ச பிறகு பெருசா அங்க ஒர்க் இருக்காது. இங்கேயே அதுக்கு தகுந்த மாதிரி ப்ளான் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். வீடு, காம்ப்ளக்ஸ், அபார்ட்மென்ட்ஸ் மட்டும் விட்டுட்டு மத்த எல்லாம் சேல் பண்ண ஏற்பாடு பண்ணிட்டேன். நீங்க என்ன சொல்றீங்க..” என்றான்.

“எனக்கு இதுல முழு விருப்பம் இளா. இங்க வந்த இந்த பத்து நாள்ல எனக்குமே இங்க ரொம்ப பிடிச்சிடுச்சு. ப்ரீக் குட்டியும் இனி இங்கதான்னும் போது, நமக்கு அங்க என்ன வேலை. உன்னோட முடிவு ரொம்ப நல்ல முடிவு..” என்றார் புன்னைகயாக.

“சாமி… ரொம்ப பெரிய முடிவு.. யோசிக்காம செஞ்சிருக்க மாட்டேன்னு தெரியும். ஆனா பின்னாடி வருத்தப்படுற மாதிரி இருக்கக்கூடாது. அதனால நல்லா யோசிச்சி செய்..” என்றார் மகேஸ்வரி.

“அத்தம்மா.. இது இப்போ எடுத்த முடிவு இல்ல. நான் இங்க வந்து உங்களை எல்லாம் பார்த்த பிறகு, சென்னை போகவே விருப்பம் இல்ல. அப்பவே முடிவு பண்ணேன். இனி இங்கதான் இருக்கனும்னு.. ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு..” என்று அவரை சமாதானம் செய்து செல்வத்தைப் பார்க்க, அவரோ விழிகள் நிறைய அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது அவரால் பேச முடியாது என்று புரிந்தவன் “அத்தை ஒன்னுமே சொல்லலயே..?” என நாயகியை கேட்க, அவரோ என்ன சொல்வது என தெரியாமல் தடுமாறி நின்றார்.

இதை வைத்து தான் மகளிடம் தன் திட்டத்தை செயல்படுத்தியிருந்தார். இப்படி எல்லோர் முன்பும் இளங்கோ கேட்பான் என்று அவர் நினைக்கவில்லை. இப்போது அவருக்கு மாற்றி பேசவும் வழியில்லை. அதனால் “மாமா சொன்ன பிறகு, நான் என்ன சொல்ல இளா?” என்றார்.

“அப்படியில்ல நாயகி. தம்பி கேட்குறது. இங்க உன்னால இருக்க முடியுமான்னுதான்?” என்றார் வசந்தி.

“கொஞ்சம் கஷ்டம் தான் அத்த. அதனால என்ன பழகிக்கிறோம்..” என சிரிக்க, இப்போது ப்ரீத்தாவை கூர்மையாக பார்த்தான் இளங்கோ.

தலையை நிமிர்த்தாமல் அப்படியே நிற்க, “என்னை நிமிர்ந்து பார் ரீத்து.?” என்றவன் “இப்போ உன் பிரச்சினை தீர்ந்துடுச்சா? இல்ல இன்னும் புதுசா இருக்கா?” என்றான் கோபமாக.

அதில் கோபம் வர பெற்றவள் “ஆமா இருக்கு.. ஆனா அதை உங்ககிட்ட சொல்லமாட்டேன்..” என்றாள் அவளும் கோபமாக..

‘இன்னும் என்ன?’ என எல்லோரும் அவளையே பார்க்க, அவள் பார்வையோ தாமரையைத் தொட்டு நின்றது..

‘இவ தான் ஏதோ சகுனி வேலை பார்த்திருக்கா?’ என நொடியில் கண்டு கொண்ட ஷ்யாம்.

“நான் கடைசி வரைக்கும் இவளுக்கும், இவ பிள்ளைங்களுக்கும் வேலை செஞ்சிட்டு சிங்கிளா சுத்தனும், அப்படித் தான டி.. என்ன ஒரு நல்ல எண்ணம்.. நீயெல்லாம் ஒரு ஃப்ரண்டா.. அந்த பைத்தியத்துக்கிட்ட என்னடி சொல்லி வச்ச..?” என தாமரையிடம் எகிறிக் கொண்டு சென்றான் ஷ்யாம்.

“ம்ச்.. அவங்க ஒன்னும் சொல்லல.. நான் பார்ததேன். அஞ்சு சிஸ்டர் கூட நீங்க செல்பி எடுத்து வச்சிருக்கீங்க..” என எல்லார் முன்னமும் பட்டென சொல்ல,

“ஏய் பைத்தியம்.. அவ என் சிஸ்டர் டி. சித்தி பொண்ணு.. இது கூட தெரியா?” என்று கத்தியவன் “என்கிட்ட கேட்டிருக்கலாம்ல..” என்றான் கோபமாக.

“நான் தாமரைக்கிட்ட கேட்டேன்..” என்றாள் உள்ளே போன குரலில்.

இப்போது எல்லோர் பார்வையும் கொலை வெறியோடு தாமரையைப் பார்க்க, அவளோ “சிஸ்டர்னு தான் நானும் சொன்னேன்..” என்றாள் பிடிபட்ட பாவனையோடு.

“நீ எப்படி எனக்கு சிஸ்டர் ஆகனும்னு சொல்லிருப்பன்னு எனக்குத் தெரியும் டி..” என்று பல்லைக் கடித்த ஷ்யாம், ப்ரீத்தாவை பார்த்து “இவ கூட சேருரதை குறைச்சுத் தொலை. இல்ல குடும்பத்துல கும்மியடிச்சிட்டு போய்டுவா..?” என்றான் ஆத்திரமாக..

“ம்ச் நல்லதுக்கே காலமில்ல..” என்றவள் “கூட்டம் முடிஞ்சா கிளம்புங்க.. எனக்கு ரெஸ்ட் எடுக்கனும்.” என்றதும் ‘இதெல்லாம் திருந்தவே திருந்தாது’ என மகேஸ்வரி மகளைத் திட்டிக்கொண்டே போக, ஷ்யாமோ தாமரையை முறைத்தபடியே, ப்ரீத்தாவை அழைத்துக் கொண்டு சீனியிடம் சென்றவன் “கொஞ்சம் வெளியே போய்ட்டு வரோம் அங்கிள். இப்படியே என்னால் விட்டுட்டு போக முடியாது..” என்றதும், அவரும் சரியென்று விட்டார்.

அனைவரும் சென்று விட, நவீன் இருப்பதா போவதா என்று தெரியாமல் பாவமாக இளங்கோவை பார்க்க, அதை கவனித்த தாமரை “யோவ்.. உனக்கு வேற தனியா சொல்லனுமா? நீ தனியா போனாலும் சரி, இல்ல உங்க பாசை தூக்கிட்டு போனாலும் சரி , இடத்தைக் காலி பண்ணு..” என கராராக கூற,

“பாஸ்.. உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு.. கவனமா இருங்க பாஸ்..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு, தாமரை அடுத்து பேசுவதற்குள், அறையை விட்டு ஓடிவிட்டான்.

“ஷப்பா.. எத்தன கொசுத் தொல்ல..” என முனங்கியபடியே கட்டிலில் சாய்ந்தவளையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

‘இனி இங்க தான்’ என்று சொன்ன பிறகு அவள் கோபம் கொஞ்சம் குறையும். அது பற்றி பேசுவாள் என நினைக்க, எதையும் பேசாமல் அமைதியாக படுக்கவும், இளங்கோவிற்கு சப்பென்றானது.

ஆனால் அவனுக்குள் ஏனென்றே தெரியாத ஒரு பயம் வியாபித்திருந்தது. இந்த அமைதியை அவனால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த அமைதிக்குப் பின் பெரும் பூகம்பம் இருக்குமோ? என்ற பயம் அவனை நிம்மதியிழக்கச் செய்தது.
 
  • Like
Reactions: saru