• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

நித்திலம்NMR

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
231
முன் கதை சுருக்கம்:
ரோஹன் மும்பை கடற்கரையருகே சரியான பராமரிப்பு இல்லாமல் போன ஒரு ரெசார்ட்டை வாங்கி, இப்போது திறமையாகவே நடத்தி வருகிறான். மஹி அந்த ரெசார்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த, இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஊழியர்.

கண்டதும் காதல் என்பது போல் ரோஹனுக்கு மஹியை கண்டதும் காதல் தான். ஆனால் அவளது வார்த்தைக்கு வார்த்தை சண்டையிடும் துடுக்குத்தனம் மிகவும் பிடித்துப் போகவே, காதலை நேரடியாக சொல்லாமல் சில சல்லாப மொழிகளில் அவளை வம்பு வளர்க்கத் தொடங்கினான்.

அதில் இருவருக்கும் சண்டை சற்று அதிகமாகி, தனக்கு பி.ஏ-வாக இருந்த மஹியை பதவி உயர்வு கொடுத்து தன்னிடமிருந்து தூரம் வைத்துவிட்டு, புதிதாக இளம் பெண்(ஶ்ரீநிதா) ஒருவளை நியமித்தான். இத்தனை நாள் ரோஹன் தன்னிடம் பேசிய விதம் கண்டு அவனை தவறாக ஊகித்தவள், இப்போது அவனது குணத்தை சரியாக கணிக்கத் தொடங்கினாள்.

இதற்கிடையே நீத்து தனது நண்பர்களை ரெசார்ட் வரவழைத்து சில தில்லுமுல்லுகள் செய்ய, அதில் போதை பொருள் உபயோகிக்கும் நண்பனின் கால்புணர்ச்சியால் அவளே அவனுக்கு இறையாகிப்போனாள்.

ரெசார்ட் உரிமையாளனாக மற்றும் ஒரு உண்மையான ஆண்மகனாக, நீத்து-வின் நிலை கண்டு கோபம் கொண்ட ரோஹன் கைகலப்பில் ஈடுபட, ஒருவன் இறந்து போனான் மற்றொருவன் அதிக காயங்களுடன் உயிர் தப்பினான்.

ரோஹன் மீது வழக்கு தொடுக்கப்பட, மஹி தனக்கு தெரிந்த ஓய்வுபெற்ற முன்னால் நீதிபதி(செந்தில்நாதன்)-ஐ வக்கீலாக அழைத்து வந்து ரோஹன் சார்பாக வாதாடச் செய்து, ரோஹனுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தாள்.


இனி
இல்லம் வந்தவுடன் ரோஹனிடமிருந்து தன் கைகளை உருகிக் கொண்டாள். கேள்வியாய் அவன் நோக்கிட, “அம்மா…” என்று எச்சரித்துவிட்டு அழைப்பு மணியை அழுத்தினாள். பின்னே! தினம் தினம் அறிவுரை வாங்கும் அவளுக்கு தானே தெரியும் அதன் கஷ்டம்.

விடலையவனும் ‘மாட்டினே டி’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியே நக்கல் சிரிப்பை உதிர்த்தான். அவனது சிரிப்பிற்கான அர்த்தம் புரிந்திட, கண்களை உருட்டி மிரட்சியுடன் கூடிய மிரட்டலையும் கண்களாலேயே விடுத்தாள். கதவு திறக்கப்பட, ஒரு அடி முன்னே சென்று, அந்த வீட்டு சொந்தகாரியாய் மாறி, “வாங்க பாஸ்” என்றாள்.

“ஹனி…” என்று ஹஸ்கி வாய்ஸில் அழைத்து, “நான் உன் பாஸ்’ஸா!!! இனிமே நீ தான் எனக்கு பாஸ்” என்று, அவளை பலி தீர்க்கும் கள்வனாய் மாறி வாசலில் வைத்தே ஆரம்பித்திருந்தான் தனது கள்ளத்தனத்தை.

“என்ன சொல்றிங்க தம்பி!” என்று, மஹியின் அன்னை வினவிட, தன்னை தன் அன்னையிடம் மாட்டிவிட்டவனை மானசீகமாக முறைத்துக் கொண்டிருந்தாள் மஹன்யா. தனது அன்னைக்குத் தெரியாமல் தான்.

“ஆமா ஆன்ட்டி… மஹி’யால தான் இன்னைக்கு என் ரெசார்ட் எனக்கு திரும்ப கிடைச்சிருக்கு… அதுக்கு ரெசார்ட்டை அவங்க பெயருக்கே எழுதிக் கொடுத்தாலும் தகும்” என்று மழுப்பினான். மஹன்யாவின் பார்வை இன்னமும் மாறாமல் இருக்க, அவனோ கண்ணடித்து இன்னும் கொஞ்சம் அவளுக்கு பீதியைக் கிளப்பினான்.

பொதுவாக பெண் பிள்ளையைப் பெற்ற அன்னைமார்கள் தன் மகளின் நட்பு வட்டத்தில் இருக்கும் ஆண் நண்பர்களை சற்று அதிகமாகவே கண்காணிப்பது உண்டு.

எல்லாம் தன் பிள்ளைகள் மேல் இருக்கும் நம்பிக்கையால் தான். 'தன் மகள் எந்த தவறும் செய்யத் துணிந்தவள் அல்ல... ஆனால் அந்த பையன் நற்குணங்கள் கொண்டவனா? இல்லை தவறான கண்ணோட்டம் கொண்டவனா? என்ற விழிப்புணர்வு காரணமாகத் தான்.

மஹியின் அன்னையும் அதே வகையைச் சேர்ந்தவர் தான். ஆரம்பத்தில் இந்த வழக்கு விடயமாக மஹி நீதிமன்றம் அலைவதை விரும்பாத அன்னையாகத் தான் இருந்தார்.

ஆனால் வழக்கில் இருந்த திருப்பங்களும், ரோஹனின் 'ஒரு பெண்ணை இழிவுபடுத்த நினையாத பாங்கும்' அவருக்கு பிடித்துப் போகவே, இப்போது அவனது ஒற்றை கண் சிமிட்டல் கூட தவறாகத் தோன்றவில்லை அவருக்கு...

மாறாக ஏதோ ஒரு விடயத்திற்காக தன் மகளை வம்பு வளர்த்து வெறுப்பேற்றுகிறான் என்று சரியாகவே ஊகித்திருந்தார்.

“நீங்க செய்த நல்ல காரியம் அப்படி தம்பி… நமக்கென்ன வந்ததுனு ஓரமா நின்னு வேடிக்கை பார்க்காம, தப்பு செஞ்சவனை அடிக்கப் போயி கடைசில நீங்க ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கிங்க... போதாதுனு அந்த பொண்ணுக்கு நடந்த அவமதிப்பை அத்தனை பேர் முன்னாலேயும் சொல்லி அசிங்கப்படுத்தாம...” என்ற கூறிக் கொண்டிருந்த அன்னையிடம் இடையிலேயே சண்டைக்குச் சென்றாள்.

“இதுல நீத்து’க்கு அவமதிப்பும், அசிங்கமும் எங்கே இருந்து ம்மா வந்தது? அப்படி அசிங்கப்பட வேண்டியதும், அவமானப்பட வேண்டியதும் அந்த ராஸ்கல் ராக்கேஷ் தான். பாஸ்டடு” என்று பல்லைக் கடித்துக் கொண்டு உரைத்தாள்.

தன்னோடு இருபத்து நான்கு மணி நேரமும் சண்டையிட்டுக் கொண்டு இருப்பதைப் போலத் தான் தன் அன்னையிடமும் முட்டிக் கொண்டு நிற்பாள் போல என்ற பிரம்மிப்போடு ரோஹன் மஹியைக் காண, தன் மகளின் முறையற்ற பேச்சால் தான் இப்படி அவளை வெறிக்கிறான் என்று நினைத்துக் கொண்ட பெற்ற மனம், விறைந்து மகளை அடக்கியது.

“ஏய் அதிக ப்ரசங்கி… நீ மொதோ பொண்ணு மாதிரி பேசுடி… அவ பேச்சையெல்லாம் காதுலேயே வாங்கிதிங்க தம்பி... நீங்க உள்ளே வாங்க.” என்று மகளை அடக்கி ரோஹனை உள்ளே அழைத்தார்.

மஹிக்கோ பேரதிர்ச்சி தான். ‘இப்போ நான் பேசுறதைக் கேட்டு தான் இவனுக்கு பேட் வேர்ட்ஸ்’ஸே தெரியப் போகுது பாரு! அவன் மட்டும் வாயத் தொறந்தான் அவன் பேசுற கெட்ட வார்த்தைக்கு நீ காத்தோட காத்தா காணாமப் போயிடுவே ம்மோய்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு "போங்க தம்பி போங்க..." என்று கேலி பேசவும் செய்தாள்.

தன்னவளின் மனதைப் படித்த ரோஹனோ பவ்வியமாக மஹியின் அன்னையைத் தொடர்ந்து வீட்டினுள் செல்ல, மஹி அவனை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தபடி,

“இப்படியே பொண்ணுங்களை பேசவே விடாதிங்க… வீட்லயே இத்தனை முட்டுகட்டைனா, வெளி உலகத்துல இன்னும் எத்தனை எத்தனை அடக்கு முறை இருக்கும்!” என்று தன் அன்னையுடன் மல்லுக்கு நின்றாள்.

“இங்கே பேசவிட்டா தான் மாமியார் வீட்லேயும் உங்க பேச்சை தான் எல்லாரும் கேட்கனும்னு அதிகாரம் பண்ண ஆரம்பிச்சுடுறிங்களே! கல்யாணம் ஆகிட்டா ஊருக்கே மகாராணி ஆகிட்டதா நெனப்பு” என்று அவளது அன்னையும் சம்மந்தமேயற்ற எதிர்வாதத்தில் இறங்கினார்.

“அம்மா நான் என்ன பேசிட்டு இருக்கேன்! நீங்க ஏன் சம்மந்தமே இல்லாம ஏதோ பேசிட்டு இருக்கிங்க? சரி உங்க பேச்சுக்கே வருவோம்... எந்த இடமாக இருந்தாலும் பொண்ணுங்களுக்கு வேண்டிய தேவைகளையும், உரிமைகளையும் அவங்க தான் கேட்டு வாங்கிக்கனும்.” என்றாள்.

“கிடைக்காத போது சில ஏமாற்றங்களையும் பழகி தான் ஆகனும். நாங்கல்லாம் பெரிய குடும்பத்துல வாக்கப்பட்டு, நாலு ஓரகத்தி, மூனு நாத்தனார்னு எல்லாரையும் அனுசரிச்சு தானே வாழ்ந்தோம். இப்போ உங்களுக்கு அந்த கொடுமைலாமா இருக்கு! கருவேப்பிலை, கொத்தமல்லியாட்டம் ஆண் ஒன்னு, பொண் ஒன்னு தான் எல்லார் வீட்டிலேயும்… ஆக மொத்தம் உங்க கூட ஒரே வீட்ல இருக்கப்போறது மாமி, மாமா மட்டும் தான். அந்த கிழடுகளையே அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியலே இப்போ இருக்க ஜெனரேஷன் பொண்ணுங்களால” என்று இன்னமும் இவர்கள் சண்டை நீண்டு கொண்டு தான் இருந்தது.

“உறவுகளுக்குள்ள சண்டை இல்லாம சுமூகமாக இருக்கணும்னா தனிக்குடித்தனமே சிறந்ததுனு எழுதப்படாத சட்டமே கொண்டு வந்துட்டாங்க… ஒரு ஜட்ஜ் சொன்ன அட்வைஸ் தான் இது… அதனால நீங்க சொல்ற மாதிரி, எல்லா கொடுமையையும் அனுசரிச்சு தான் ஆகனும்னு அவசியம் இல்லே.”

“ம்ம்ம்…. ஏன் பேசமாட்டே…. ஜட்ஜ் பொண்ணுல அப்படி தான் பேசுவே… சட்டம் படிக்காமலேயே சட்டம் பேசுறியே! நீயெல்லாம் சட்டம் படிச்சிருந்தே அவ்ளோ தான்! கணவன் மனைவி சேர்ந்து தான் இருக்கணும்னு சட்டம் கட்டாயப்படுத்தலேயேனு சொல்லுவே” என்று அவரும் பேச்சை வளர்த்துக் கொண்டே சென்றார்.

இவை எதையும் கண்டு கொள்ளாமல் ரோஹனின் குடும்பம் தங்கள் பாச பசையில் பிணைந்து ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.

ரோஹனின் அக்கா அழுகையுடன் வார்த்தைகளற்று அவனை அணைத்துக் கொள்ள, அவரை சமாதானம் செய்ய வேண்டிய ரோஹனும் வார்த்தைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு அமைதியடைந்தான்.

சுதாரித்துக் கொண்ட அவனது மாமன் தன் மனைவியை ஆருதலாக அரவணைத்து ரோஹனின் கைகளை கோர்த்தபடி நின்றிருந்தார். ரோஹனோ கண்களாலேயே தன் தந்தையை அணைத்து அவரிடம் அரவணைப்புத் தேடி ஏங்கி நிற்க, அதனைப் புரிந்து கொண்டவரும் மகள் மற்றும் மகனுடன் ஐக்கியமாகினார்.

“இப்போ என்ன தான் ம்மா உங்க பிரச்சனை?” என்று இறுதியில் மஹி குரலை உயர்த்தி சலித்துக் கொள்ள, அப்போது தான் அங்கிருந்த குடும்பத்திற்கு அவர்கள் இருவரும் கண்ணிற்குத் தெரிந்தனர்.

ரோஹனின் உடன்பிறப்பு கண்களைத் துடைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே சென்று அன்னையவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுத்து, அவரது கோபம் தனியச் செய்தாள்.

“ஆரம்பிச்சிட்டிங்களா ரெண்டு பேரும்! மஹி நீ மொதோ சாப்டேயா இல்லேயா?" என்று சண்டையையும் திசை திருப்பினார்.

"எங்கே! எனக்கு எங்கே உங்க தம்பி மிச்சம் வெச்சாரு? சாப்பிடுறாயானு கூட கேட்கலே! அதுவும் நீங்க சமைச்ச இறால் தொக்கை சாப்பிட ஆரம்பிச்சதும் அவருக்கு உலகமே மறந்திடுச்சு" என்று ரோஹனிடம் வம்பு வளர்க்கத் தொடங்கினாள்.

"அவ்பா.... வாய் திறந்தாலே பொய்... புழுகினி மூட்டே... நான் கேட்டதுக்கு உங்களுக்காக ஸ்பெஷலா சமச்சது... அதனால நீங்க தான் சாப்பினும் சொன்னா க்கா" என்று அவனும் பதிலுக்கு புகார்பட்டியல் வாசித்தான்.

"ஆமா உங்களுக்காக சமைச்சதை உங்களுக்காக சமச்சதுனு தானே சொல்ல முடியும்... ஏதோ உண்மைய சொல்லிட்டேனு நீங்களும் அப்படியே விட்டுடுவிங்களா? சரிப்பா எனக்காக சமைச்சதா இருந்தாலும் நீயும் கொஞ்சம் சாப்பிடு நானும் கொஞ்சம் சாப்பிடுறேன்னு பகிர்ந்து உண்ணுறது தானே மனிதநேயம்" என்று செந்தமிழில் சண்டையிட்டாள்.

சற்று காலம் தாய்க்கு ஓய்வு கொடுத்துவிட்டு தன்னுடன் சண்டையிடத் துடிக்கும் அவளது மனதை அறிந்து கொண்ட ரோஹனோ, "நான் தான் அப்பவே சொன்னேனே! பசியில் உன்னையும்..." என்று இழுத்து நிறுத்தி விறலியவளை ஆழம் பார்த்துவிட்டு, அனைவரது கவனமும் தன் மேல் விழுவதையும் கவனித்துவிட்டு, மஹியை திருட்டு முழி முழிக்க வைத்து அதனையும் ரசித்துவிட்டு பொறுமையாக,

"ஐ மீன் உன்னதையும் சேர்த்தே சாப்டுறுவேன், அதனால நீயும் கூடவே சாப்பிட உட்காருனு சொன்னேனே!" என்றான் ரோஹன்.

மஹி என்ன பேசுவது என்று தெரியாமல் தினறிக் கொண்டிருக்கும்போதே ரோஹனின் அக்கா அகப்பையில் உணவை அள்ளி மஹியின் புகுமுகம் தினித்திருந்தார்.

"பாவம் தான்" என்று உணவை ஊட்டிவிட்டு படி அவர் உரைத்திட,

"என்ன பாவம்?" என்றாள் மஹி.

"உனக்கு வரப்போற மாப்பிள்ளை தான்." என்று அக்கா கூற, அதற்கு மஹியின் அன்னையோ "ஆனாலும் எனக்கு ஒரு ஆசை... வரப்போற மாப்ளே இவளை அடக்கி ஆள்றவனா இருக்கனும்" என்றார்.

உடனே ரோஹனோ “வாய்ப்பே இல்லே ஆன்டி! எதிர்த்து பேசுற ஆம்பளே எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவன் தலைக்கு மேலே கை தூக்கி ‘அம்மா தாயே என்னை மன்னிச்சிடு நான் பேசினது தப்பு தான்’னு சொல்ற வரைக்கும் விடாமா ஆர்கிவ் பண்ணுவா” என்று அந்த அப்பாவி மாப்பிள்ளை தான் தான் என்ற பீதியில் கண்களை உருட்டிக் காண்பித்து கூறினான்.

அவன் கூறிய விதத்தில் அனைவருமே சிரித்துவிட, ரோஹனின் மாமனோ “என்னடா மாப்ளே சொந்த அனுபவம் போல!” என்று சற்றே சந்தேகக் குரலில் வினவினார்.

ரோஹன் மேலும் கொஞ்சம் தன் கண்களை உருட்டி “ஹாங் மாமா… ஒரு தடவையா! ரெண்டு தடவையா! மெனி மோர் டைம்ஸ் மாமா!!! மெனி மோர் டைம்ஸ்... விட்டா லைஃப் லாங் என் நிலைமை இது தான் போல” என்று கூறினான்.

அனைவர் முன்னிலையிலும் தன்னை மாட்டிவிட்டு கேலி பேசும் ரோஹனைக் கண்டு முறைத்து விழித்தாள் மஹி.

"பாருங்க... எப்படி முறைக்கிறானு... இதோ இப்போ, வீட்டுக்கு வர்ற வழியில கூட ஆர்கியூமெண்ட்.... முடியல மாமா முடியலே..." என்று அவளை சமாளிக்க முடியாமல் தான் தினமும் தினறித் தவிப்பதை நகைச்சுவையாக உரைத்தான்.

ரோஹன் வாய் ஓயாது மஹியை வம்பு வளர்க்க, ஒரு கட்டத்திற்கு மேல் அவளும் அவனை கலாய்க்கத் தொடங்கினாள், அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கும் தன் அன்னையை மறந்தவளாய்...

அன்னை அறியாத சூதில்லையே! என்ன தான் தன் மகள் சொல்லுக்கு சொல் என்று வளர்ந்திருந்த போதும் அதனை யாரிடம் வெளிக்காட்ட வேண்டும் என்ற பண்பறிந்து வளர்ந்தவள், என்று அறிந்த அன்னை மனம் இப்போது தான் மகளை நோட்டமிடத் தொடங்கியது.

அவரது ஆராய்ச்சிப் பார்வையை கவனித்த ரோஹனும் சற்று நேரத்தில் பேச்சை மாற்றி, இத்தனை நாள் தன் குடும்பத்தாரை எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்கு நன்றி கூறி, ஒரு நாள் குடும்பத்துடன் தனது இல்லம் வரும்படி அழைப்பும் விடுத்து விட்டு தனது இல்லத்திற்கு வந்து சேர்ந்தான் தன் இல்லாத்தாருடன்.

வந்த முதல் வேலையாக மஹிக்கு அவரது அன்னை பற்றி எச்சரித்து குறுந்தகவல் தட்டச்சு செய்து அனுப்பினான்.

மாலை நேரம் தன் இல்லத்தாரிடம் ஒரு முக்கிய நபரை பார்க்கச் செல்வதாகக் கூறி ஹோட்டல் தாஜ் அழைத்து வந்திருந்தான்.

அங்கே அவர்களுக்கு முன்னதாகவே திரு.செந்தில்நாதன் மேசை பதிவு செய்து காத்திருந்தார். அவரைக் கண்டவுடன் தன் தந்தையும், அக்கா கணவரும், அக்காவும் வெகு இயல்பாக பேசவே ரோஹனுக்கு அது முதல் அதிர்ச்சி.

சற்று நேரத்தில் செந்தில்நாதனின் குடும்பத்தாரும் வந்துவிடவே ரோஹன் ஸ்தம்பித்துப்போனான்.

தீயாய் தொடர்வாள்.
 
Top