• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 10.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
பகுதி – 10.

வைஷாலி இருக்கும் வில்லா, அடியாட்கள், கோபாலின் கட்சிப் பிரமுகர்கள் என அனைவராலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. முத்துப்பாண்டியோ கோபத்தின் உச்சியில் கொதித்துக் கொண்டிருந்தான்.

“என்னப்பா நடக்குது இங்கே? நீங்க இருக்கும்போது இது எப்படி நடக்கலாம்? இதை எப்படி அவங்க நடக்க விடலாம்? அதுவும் அண்ணன் கட்சியில் இருக்கான்ப்பா. அப்படி இருக்கும்போது... நம்ம கை எப்படிப்பா இறங்கும்? நமக்கு கீழே ரெண்டு தொகுதி ஆறு MLA ரெண்டு MP இருக்கறாங்க.

“அதற்கு கீழே எத்தனை பஞ்சாயத்து தலைவர்கள், எத்தனை வார்ட் மெம்பர்கள். அத்தனையும் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே என்கையில், இது எப்படி நடக்கலாம்? இவங்க எல்லாம் நம்ம கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருக்காங்க. எல்லாத்தையும் மறந்துட்டு பேசறாரா? அதுவும்...” என்றவன் கூண்டுப் புலிபோல் நடந்து கொண்டிருந்தான்.

வைஷாலிக்கு, முத்துப்பாண்டியை இப்படிப் பார்க்கையில் கொஞ்சம் பயமாகவும், இவர்களை இப்படி ஆக்கியது எது என்ற நினைவில் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது.

“என்னப்பா ஆச்சு? மாமா இவ்வளவு அப்சட் ஆகி நான் பார்த்ததே இல்லையே” தன் தகப்பனிடம், வைஷாலி சின்னக் குரலில் கேட்டுக் கொண்டிருந்தாள்.

தகப்பனும் மகளும் முதல் தளத்தில் நின்று இருந்தார்கள். பைரவன் அவர்களது வரவு செலவுகளை பார்த்துக் கொண்டாலும் அரசியலுக்குள் தலையிடுவது இல்லை என்பதால் ஒதுங்கி நின்று இருந்தார்.

“இவங்களுக்கு முதல் சறுக்கல் ஆகி இருக்கும்மா” பைரவனுக்குமே நம்ப முடியாத திகைப்பில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“என்னப்பா சொல்றீங்க? நிஜமாவா? என்ன ஆச்சு?” அவளுக்குமே அந்த செய்தி அத்தனை அதிர்ச்சியைக் கொடுத்தது. உள்ளுக்குள் ஏதோ ஒரு மூலையில் சிறு சந்தோஷத்தையும் அது கொடுத்ததோ?

அடித்துக் கொண்டே இருப்பவன், அதுவும் அநியாயமாக அடித்துக் கொண்டே இருப்பவனின் மீது முதல் அடி விழுந்தால் ஏற்படுமே ஒரு மகிழ்ச்சி அப்படி இருந்தது. இந்த ஒரு அடியால் அவன் தோற்று விடுவான் என்பது இல்லை.

மாறாக அவனுக்கும் ஒரு அடி விழுந்து இருக்கிறது, அவனுக்கும் வலியின் அருமை தெரியும். அவனையும் அடிக்க ஒருவன் இருக்கிறான் என்பதில் ஒரு சந்தோசம் வருமே அதுதான் அவளிடமும் வெளிப்பட்டது.

“அவங்களோட தீம் பார்க்ல ஒரு பெரிய பிரச்சனை” என்றவருக்கு உள்ளுக்குள் அத்தனை யோசனை ஓடியது.

“அங்கே என்னப்பா பிரச்சனை? ஏதாவது ராட்டினத்தில் பிரச்சனையா? ஏதாவது டெத் ஆயிடுச்சா?” எந்த செய்திச் சேனலிலும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லையே என்ற எண்ணம் வைஷாலிக்கு. அதைவிட அப்படி ஏதாவது இருந்தாலும் கோபால் அதையெல்லாம் ஊதித் தள்ளி விடுவாரே என்று இருந்தது.

“அப்படி இருந்தால் கூட டெக்னிக்கல் ஃபால்ட் அது இதுன்னு சொல்லி சமாளிச்சு இருப்பாங்க. இது வேற...” என்றவர் கொஞ்சம் இடைவெளி விட்டார்.

பின்னர் அவராகவே... “அந்த தீம் பார்க் மற்ற ஆப்போசிட் தீம் பார்க்கை விட ஜெகஜோதியா போகக் காரணம் என்னன்னு தெரியுமா பாப்பா?” மகளிடம் கேட்டு அவள் முகம் பார்த்தாள்.

“தெரியுமேப்பா... அங்கேதான் நிறைய வாட்டர் ரைட் இருக்கு. மற்ற தீம் பார்க்ல எல்லாம் ராட்டினம்தான் நிறைய இருக்கும். ஆனால் இங்கே ஸ்பெஷலே அந்த வாட்டர் ரைட் தான். உள்ளே போனால் அந்த தண்ணிக்குள்ளே ஊறிகிட்டே இருக்கலாம் போல இருக்கும்.

“அதைவிட க்ளோரின் கொஞ்சம் இருந்தாலும் நல்ல தண்ணியா இருக்கும்ப்பா. அதில் குளித்தால் தலைமுடிக்கு எதுவுமே ஆகாது, நம்பி குளிக்கலாம். அடிக்கடி குளித்தாலும் பிரச்சனை வராது” அவள் சொல்ல, அவளைப் பார்த்து மெல்லியதாக புன்னகைத்தார்.

“அதுக்குத்தான் இப்போ பிரச்சனை வந்திருக்கு. அந்த தண்ணி எல்லாமே அவங்க போர் வாட்டர்தான் யூஸ் பண்றோம்னு சொன்னாலும், அது அப்படி கிடையாது. இல்லீகலா சில விஷயங்கள் செய்துதான் அங்கே நல்ல தண்ணி வருது.

“அதை யாரோ ஆதாரத்தோட, அந்த பைப் லைன் முதற்கொண்டு எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பிட்டாங்களாம். இதில் ப்ரஸ் பீப்பிள்க்கு வேற நேரடியா அந்த ஃபோட்டோ எல்லாம் போயிருக்க, இவங்களால் அதை மூடி மறைக்க முடியலை.

“அந்த அதிகாரிகளுக்கு மட்டும் விஷயம் போயிருந்தால் எப்படியாவது அவங்களை சரிக்கட்டி இருப்பாங்க. அதைவிட பழைய அதிகாரிகளா இருந்திருந்தால் முதல்ல இவங்களுக்குத்தான் ஃபோன் பண்ணி சொல்லி இருப்பாங்க.

“இப்பொழுது இருக்கும் அதிகாரிகள் புதுசு போல, அதனால் தகவல் கிடைத்த உடனேயே ஆக்ஷன்ல இறங்கிட்டாங்க. பத்திரிக்கைக் காரங்களும் அதே நேரம் சரியா அங்கே போக, லைவ்வா எல்லாம் ரெக்கார்ட் ஆகிடுச்சு.

“மக்களோட குடிநீரை நீங்க எப்படி உங்க சுயநலத்துக்காக யூஸ் பண்ணலாம்னு எதிர்க்கட்சி எல்லாம் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. இவங்களால் எதுவுமே செய்ய முடியாத சூழல்ல, மறு உத்தரவு வர்ற வரைக்கும் தீம் பார்க்கை க்ளோஸ் பண்ணி சீல் வச்சுட்டாங்க. அதுதான் இப்படி கொதிக்கறான்” அவர் சொல்ல, வைஷாலியால் கொஞ்சம் கூட நம்பவே முடியவில்லை.

“அதுக்கெல்லாம் ப்ராப்பரா பெர்மிஷன் வாங்கி இருப்பாங்களேப்பா” அவள் சொல்ல, அமைதியாக மகளைப் பார்த்தார். அந்த பார்வையே சொன்னது, அந்த நேர்மைக்கும் இவர்களுக்கும் கொள்ளை தூரமென்று.

“அரசாங்கத்துக்கு, கார்ப்பரேஷனுக்கு எல்லாம் சரியா வரி கட்டி தண்ணீர் வாங்கணும். இங்கே அதிகாரத்தைக் காட்டி, மிரட்டி, பணம் காட்டி என எல்லாம் செய்தால்? இப்படித்தான் சீல் வைக்க வேண்டி வரும்” ஆற்றாமையாகச் சொன்னார்.

“மக்களுக்குப் போக வேண்டிய குடிநீரை எல்லாம் அநியாயமா பிடுங்கி வாழ நினைச்சாங்க. அப்படித்தான் வாழ்ந்துட்டும் இருந்தாங்க. முதல்முறையா இவங்க விஷயம், இவங்க செய்யும் அநியாயம் வெளியே வந்திருக்கு” என்றவருக்கு நிஜத்தில் நம்ப முடியாத திகைப்புதான்.

“நிஜமாவாப்பா? சீலே வச்சுட்டாங்களா? எப்படியும் இவங்க அது இப்போ இவங்க சொத்தே இல்லைன்னு பல்ட்டி அடிப்பாங்களே” அவள் சொல்ல, தன் அலைபேசியை எடுத்து ஒரு செய்திச் சேனலை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

கிட்டத்தட்ட இருபது முப்பது வருடங்களுக்கு முந்தைய ஒரு பேட்டி அது. அதில் கோபால் தன் முதல் சொத்தைப் பற்றி அத்தனை பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு முன்னர், பத்து வருடங்களுக்கு முன்னர் என அதன் வளர்ச்சி, புதிதாக இடம் வாங்கி அதோடு இணைத்து விரிவாக்கம் செய்தது என சொல்லிக் கொண்டே போனார்.

“இதை வேற இப்போ சரியா யாரோ வெளியிட்டு இருக்காங்க. இப்படி ஒரு வலுவான ஆதாரம் இருக்கும்போது அவங்களால் இதை மறுக்க கூட முடியாது. இப்போ அவசரமா கை மாத்தி விட்டுட்டோம்னு சொல்லக் கூட முடியாத அளவுக்கு போன மாசத்தில் அங்கே நடந்த ஒரு பிரச்சனையில் கோபாலே நேரடியா இறங்கி அதைத் தீர்த்தார்.

“அதைச் செய்துட்டு, இது என் உயிர்த்துடிப்பான இடம், இங்கே எந்த விதமான அசம்பாவிதமும் நடக்க நான் விட மாட்டேன்’னு அவர் முழங்கினது எல்லாம் ஹாட் நியூஸா ஓடிகிட்டு இருக்கு. இது எப்படி நடக்குதுன்னு எனக்கு எதுவுமே புரியலை” பைரவனுக்கு அத்தனை யோசனையாக இருந்தது.

“என்னப்பா... என்னென்னவோ சொல்றீங்க? அத்தனை வருஷ தகவலை எல்லாம் இப்போ யார் தோண்டி எடுத்தது?” சற்று ஆச்சரியமும், அதிர்வுமாகக் கேட்டாள்.

“அதுதான்ம்மா எனக்கும் தெரியலை... கட்சி மேலிடம் காப்பாத்தும்னு எதிர்பார்த்தார் போல. இப்போ அதுக்கும் வாய்ப்பு கம்மின்னுதான் தோணுது” அவர் சொல்ல, வைஷாலிக்கு தன் செவிகளையே நம்ப முடியவில்லை.

“அப்பா... எவனோ ஒருத்தன்... ****பய எனக்கு ஃபோன் பண்ணி, ‘இனிமேல் உனக்கு உன் பிரச்சனையைப் பார்க்கத்தான் நேரம் சரியா இருக்கும்னு சொல்றான்ப்பா. எனக்கு அவன் வேணும்... அவனை என் கையாலேயே நசுக்கணும். அவனை ஏதாவது செய்யணும்ப்பா, அவன் இனிமேல் பேசவே கூடாது” விட்டால் அப்பொழுதே அவனைக் கொன்றுவிடும் வேகம்.

அதைப் பார்த்த கோபால், “எல்லோரும் கொஞ்சம் வெளியே இருங்க” அவர் சொல்ல, அடிபொடிகள் அனைவரும் வெளியேறினார்கள்.

“அவன் யாரைப்பா சொல்றான்?” வைஷாலிக்குப் புரியாமல் கேட்டாள்.

“நீ இன்டர்வியூ போயிருந்தியே அந்த கம்பெனி முதலாளியைப் பற்றிதான் பேசறான்” பைரவன் சொல்ல,

“அவன் இங்கே எப்படிப்பா வந்தான்? அவனுக்கும் நடக்கற பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கும்னு நினைக்கறீங்களா என்ன?” தகப்பன் முகம் பார்த்தாள்.

‘அங்கே கவனி’ என்பதுபோல் மகளிடம் செய்கை செய்தவர், அவர்கள் பேசுவதைக் கேட்கத் தயார் ஆனார்.

“முத்துப்பாண்டி... பேசும்போது வார்த்தைகளை சரியா போட்டு பேசணும். அதுவும் நம்மளைச் சுத்தி அத்தனைபேர் இருக்கும்போது வார்த்தைகளில் இன்னும் கவனம் வேணும். இவங்களுக்கு எல்லாம் நம்ம மேலே பயம் இருக்கும் வரைக்கும்தான் எல்லாம். அது போச்சு... எவனும் நம்மளை மதிக்க மாட்டான்.

“நீயே நம்மளை விட பெரியவன் ஒருத்தன் இருக்கான்னு இவங்களுக்கு சொல்லுவியா? கூடவே இருந்தாலும் எல்லாவனும் விசுவாசமா இருப்பான்னு நினைக்கறது ரொம்பத் தப்பு. நாம எப்போடா விழுவோம், நம்மளை ஏறி மிதிச்சு போய்க்கிட்டே இருக்கலாம்னு யோசிக்கறவங்க நிறைய பேர் இருப்பாங்க” அவர் சொல்ல, முத்துப்பாண்டியால் அடங்கவே முடியவில்லை.

“அப்பா... எனக்கு ஆத்திரமா வருது, நீங்க என்னன்னா கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” கடுப்பாக கத்தினான்.

“சில விஷயங்களில் நிதானம் ரொம்ப முக்கியம்டா முத்துப்பாண்டி. அது இல்லன்னா ஒரு மாவட்டத்தையே கட்டி ஆள முடியுமா? எத்தனை பேர், எத்தனை வருஷமா போராடியும் எதையாவது அசைக்கவாவது முடிந்ததா?” அவர் மீசையை முறுக்கி விட்டுக் கொள்ள, அங்கே மேஜைமேல் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து விசிறி அடித்தான்.

“எனக்கு அவனை முடிக்கணும்ப்பா. அதுவும் உடனே முடிச்சாகணும். அவனை வளர விடக் கூடாது” கொதித்தான்.

“முதல்ல என்ன நடந்ததுன்னு எனக்கு சரியா சொல்லு முத்துப்பாண்டி. அப்போதான் என்னால் ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியும். நாம நினைக்கற மாதிரி இல்லைன்னா, நாமளே அவனை வளர்த்து விட்ட மாதிரி ஆகிடக் கூடாது” அவர் சொல்ல, நடந்ததை விவரித்தான்.

கேட்டுக் கொண்டிருந்த கோபால் மட்டுமல்லாது, பைரவனும், வைஷாலியும் கூட அதிர்ந்து போய் பார்த்திருந்தார்கள்.

முத்துப்பான்டியோ, “அப்பா, அவன் துப்பாக்கி எல்லாம் அசால்ட்டா யூஸ் பண்றான். அது மட்டும் இல்லை, எங்கேயோ இருந்து சரியா ஆட்டி வைக்கறான்.

“எனக்கென்னவோ நடந்ததுக்கு எல்லாம் அவன்தான் காரணம்னு தோணுது. அவன் யார் என்னன்னு விசாரிக்கச் சொல்லி இருக்கேன். நமக்கு இவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்தவனுக்கு, நாமளும் ஏதாவது பெருசா செய்யணும்ப்பா” அவனை அடக்கியே ஆகவேண்டும் என்ற நிலையில் இருந்தான்.

நேற்று வரைக்கும் தங்கள் முன்னால் குரல் உயர்த்தி கூட யாரும் பேசியது இல்லை. முதலமைச்சர் வரைக்கும் செல்வாக்கானவர்கள். அவரே அரசியலில் ஏதாவது முடிவை எடுப்பதாக இருந்தால், அந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிச்சயம் கோபாலும் இருப்பார். அப்படி இருக்கையில், தங்களையே ஒருவன் அசைத்துப் பார்ப்பதா என்ற கோபம் அவனுக்கு.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
“இவ்வளவு தெளிவா நாம இங்கே இருக்கும் நேரம் பார்த்து அவன் வேலையைக் காட்டி இருக்கான்னா அவன் சாதாரணமானவன் கிடையாது பாண்டி. அவனைப் பதமாகத்தான் கையாளணும்” கோபால் தான் ஒரு அரசியல் சாணக்யன் என்பதை அவர் நிரூபித்தார்.

‘என்ன? மாமா பொறுமையா போறாரா?’ வைஷாலிக்கு அந்த நினைப்புதான். அதைவிட, ‘இவர்களையே ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டவனா அந்த சர்வா? அப்படியா? நிஜமாகவா?’ நிஜத்தில் அவள் எப்படி உணர்ந்தாள் என்றே சொல்வதற்கு இல்லை.

தான் இன்டர்வியூவுக்குச் சென்ற கம்பெனிக்குச் சென்று எதைத் தெரிந்துகொண்டு வந்து என்ன செய்யக் காத்திருக்கிறானோ? என அவள் நினைத்தால், அவன் அடி வாங்கிக்கொண்டு வந்து நிற்பதைப் பார்க்க அத்தனை பிடித்தது.

‘டேய் சர்வா... இதுக்காகவே நீ கொடுத்த கஷ்டத்தை எல்லாம் மன்னிச்சு மறந்து விட்டுடறேன்டா’ மானசீகமாக அவனிடம் சொல்லிக் கொண்டாள். ஏனோ துள்ளிக் குதிக்க வேண்டும்போல் இருந்தது.

‘நீ அவ்வளவு பெரிய அப்பாட்டக்கராடா? நிஜமாவா? உன்னை மட்டும் இப்போ நேர்ல பார்த்தேன்னா கை தட்டி பாராட்டுவேன்டா’ உள்ளுக்குள் கும்மாளமிட்டாள்.

அதே நேரம் பைரவனோ, “இவங்களையும் ஆட்டி வைக்க ஒருத்தனா?” ஆச்சரியமாகச் சொல்ல, வைஷாலிக்கு மனதுக்குள் அப்படி ஒரு கொண்டாட்டம். ‘எஸ்...எஸ்... இது சூப்பரா இருக்கு’ பல காலங்களுக்குப் பிறகு மிகுந்த சந்தோஷமாக இருந்தாள்.

அவள் மனதுக்குள் சர்வஜித் பெரிய ஆள் என்பது விதையாக விழுந்தது.

“அப்பா, முதலமைச்சர் கூட எப்போ மீட்டிங்? அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வேற வருதே? நம்ம தயவு முதலமைச்சருக்கு வேணும்ப்பா. அதைப்பற்றிப் பேசத்தான் உங்களை கூப்பிட்டு இருப்பார்ன்னு நினைக்கறேன்.

“அப்படியே இந்த விஷயத்தையும் பேசி முடிச்சு விடச் சொல்லுங்க. நாம ஊருக்குப் போகும்போது நம்ம கெத்து கொஞ்சம் கூட குறையக் கூடாது. எவனாவது ஒருத்தன் நம்மைப் பார்த்து சிரித்தாலும் அதை என்னால் தாங்கிக்க முடியாது” அந்த அதிகாரம் என்ற போதை அவனை அப்படிப் பேச வைத்தது.

“சரிடா... கொஞ்சம் அடங்கு...” என்றவர் யோசனையானார்.

வைஷாலியோ அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்தவள், “அப்பா... என்ன ஆகும்னு நினைக்கறீங்க?” அவள் தகப்பனிடம் கேட்டாள்.

“தலையே இவங்க கையில் இருக்கும்போது மற்றவர்கள் எல்லாம் இவங்களுக்கு புல்லுக்கு சமம்மா. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

ஆனால் அந்த தலையைத் திருப்பும் கழுத்து இப்பொழுது வேறு ஒருவனின் கரத்தில் சிக்கி இருப்பது அவர்களுக்குத் தெரியாதே. யானை மிதித்து பிழைத்தவனும் உண்டு. புல் தடுக்கி இறந்தவனும் உண்டு என அவருக்கு அந்த நேரம் தெரியாமல் போனது அதிசயமே.

இவர்கள் எந்த இடைத் தேர்தலில் தங்கள் கெத்தை காட்ட வேண்டும் என சொல்லிக் கொண்டு இருந்தார்களோ, அதற்கு ஆப்படிக்கும் வேலையை சர்வஜித் கன கச்சிதமாக செய்து கொண்டிருந்தான்.

அந்த நேரம் முதலமைச்சரின் முன்னால் அமர்ந்திருந்தான் சர்வஜித். அவனுடன் ஹரீஷ் மட்டுமே இருக்க, முதலமைச்சரின் பாதுகாவலர்கள் கூட வெளியில்தான் இருந்தார்கள்.

“சொல்லுங்க... என்னை அவசரமா நீங்க பார்த்தே ஆகணும்னு சொன்னீங்க?” ஏற்கனவே அவன் கேட்ட விஷயம் நிலுவையில் இருக்கவே சற்று குழப்பமாகவே கேட்டார்.

சர்வஜித் ஹரீஷைப் பார்க்க, தன் கையில் இருந்த அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு முதலமைச்சரின் மேஜை மேல் வைத்தான். “யாரு?” அவர் கேட்கையிலேயே அலைபேசியின் வாயிலாக குரல் ஒலிக்க, முதலமைச்சர் அப்படியே அமர்ந்து இருந்தார்.

“ஓகே... ஓகே... ம்...” என மட்டுமே அவரால் பதில் கொடுக்க முடிந்தது. ஏற்கனவே இந்த இடைத்தேர்தல் வருவதற்கு இந்த சர்வஜித் தான் காரணம் என அவருக்குத் தெரியும். ஆனாலும் பிரதமர் வரைக்கும் அவனுக்கு செல்வாக்கு இருக்கும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை.

அலைபேசி முடங்கிப் போக, ‘இது எப்படி சாத்தியம்?’ என்பது போலத்தான் முதலமைச்சர் உறைந்து போய் அமர்ந்து இருந்தார்.

“நான் சொல்ல வேண்டியது எதுவுமே இல்லை. இந்த முறை எதிர்க்கட்சி ஆள் தான் ஜெயிச்சாகணும். ஜெயிக்க வைப்பேன். அதோட... நான் கேட்ட பெர்மிட்...” என்றவன் ஹரீஷைப் பார்க்க, அவன் தன் கையில் இருந்த ஃபயிலை அவர் முன்னால் வைத்தான்.

“என் கட்சிக்காரனை நான் எப்படி விட்டுக் கொடுக்க முடியும்? என் கட்சியோட கெளரவம் அதில் அடங்கி இருக்கு” தானே எதிர்கட்சிக்கு துணை போவதா என ஆற்றாமையாக இருந்தது.

“உங்களோட அடுத்த கேண்டிடேட் யாரு? மிஸ்டர் வள்ளல் பெருமானா?” கேட்டவன், ஹரீஷைப் பார்க்க, அவன் தன் கையில் இருந்த டேபை ஓடவிட, முதலமைச்சருக்கு முத்து முத்தாக வியர்த்தது.

“இது...” அவர் எச்சில் விழுங்கிக் கொள்ள, சர்வஜித் தோரணையாக அவரை ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

“உன் அத்தனை MP, MLA வோட சரித்திரம், பூகோளம் எல்லாம் என் கையில் இருக்கு. அவங்களோடது மட்டும் இல்லை...” என்றவன் அவரை ஒரு பார்வை பார்க்க, முதலமைச்சருக்கு குப்பென வியர்த்தது.

தனக்கு முன்னால் அமர்ந்து இருப்பவன் எத்தனை ஆபத்தானவன் எனப் புரிய, அரும்பிய வியர்வையை அவரால் துடைக்க கூட முடியவில்லை.

“நான் சொன்னது நடந்தாகணும். அதற்கான விலை என்னன்னு சொல்லுங்க, உங்க சுவிஸ் அக்கவுண்டுக்கு அது போய் சேரும். இடையில் ஏதாவது விளையாடப் பார்த்தால், நான் விளையாடி அதை நீங்க பார்க்க வேண்டி இருக்கும்” ஒரு அனுதாபக் குரலில் சொல்ல, அப்படியே அமர்ந்து இருந்தார்.

“சரி... அதில் ஒரு சைனைப் போடுங்க, எனக்கு நிறைய வேலை இருக்கு” அவன் சொல்ல, அவருக்கு அவ்வளவு யோசனை. ‘சர்வஜித் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டுமா?’ என மனம் முரண்டு பிடித்தாலும், தனக்கு ஒரு சிறு வாய்ப்பு கூட கொடுக்காத அவனை அவரால் என்ன செய்துவிட முடியும்?

“இது என்னோட கட்சிக்கான, ஆட்சிக்கான ஆபத்தா நான் ஏன் பார்க்கக் கூடாது?” திடுமென எங்கே இருந்தோ முளைத்த ஒருவன், தங்கள் மொத்த அரசியலையும் ஆட்டி வைக்கும் சக்தியாக எழுந்ததால் எழுந்த பயம் தான் அது.

“அப்படி நான் நினைத்திருந்தால் உங்க ஆட்சியை கலைக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?” என்றவன் ஹரீஷிடம் கை நீட்டினான். அவன் கேட்டதில் இருந்த உண்மை அவருக்கும் புரிய, நீட்டிய அவன் கரத்தைப் பார்த்தார்.

‘இப்பொழுது என்னவோ?’ என்று அவர் பார்க்க, ஹரீஷோ அவன் கரத்தில் சிகரெட்டைக் கொடுத்தான்.

அதை கரத்தில் வாங்கியவன், “உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே?” அவன் கேட்டு வைக்க, ஹரீஷுக்கு சிரிப்பு வரும்போல் இருந்தது.

‘அவரை குனிய வச்சு ஆப்படிச்சுட்டு, சிகரெட்டுக்கு பிரச்சனை இல்லையேன்னு கேட்கறார் பார்?’ என எண்ணிக் கொண்டான். சர்வஜித்தோ அத்தனை ஆழமாக அதைப் புகைக்க, சட்டென அந்த அறை முழுக்க சிகரெட்டின் நெடி பரவியது.

அந்த சிகரெட்டை அவன் ரசித்து புகைக்க, அவன் இந்த உலகிலேயே இல்லை என்பதுபோல் இமைகளை மூடி அதை அனுபவித்தான். முதலமைச்சரோ அதை எரிச்சலாகப் பார்த்தவர், “இதில் நான் கையெழுத்து போட்டால், அவங்களோட கோபத்தை நீங்க சந்திக்க வேண்டி இருக்கும்” அமர்த்தலாகச் சொன்னார்.

“மிரட்டலா? ஹா...ஹா...ஹா... நீங்க அவங்களை விட்டு ஒதுங்கி இருக்கறது உங்களுக்கும், உங்க கட்சிக்கு ரொம்ப நல்லது. இல்லையா, கட்சிப்பெயரும் சேர்ந்து ‘உய்....’ என அவன் விசிலடிக்க, அவனைக் கொஞ்சம் திகிலாகப் பார்த்தார்.

‘மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்பதுபோல் அவன் சொல்லி வைக்க, அவனையே அழுத்தமாகப் பார்த்தார்.

“தம்பி அரசியல்ன்னா என்னன்னு புரியாமல் பேசறீங்க” என்றவாறே அவன் காட்டிய கோப்பில் கையெழுத்துப் போட, ஹரீஷ் அதை எடுத்துக் கொண்டான்.

“இந்த மூணு மங்கி பொம்மை பார்த்திருக்கீங்க?” விருட்டென எழுந்து நின்றவன் ஆக்ஷன் வேறு செய்து கேட்டு வைக்க, அவனைப் புரியாமல் பார்த்தார்.

“ப்ராக்டிஸ் பண்ணிக்கோங்க...” என்றவன் அங்கிருந்து வெளியேறப் போனான்.

“இது கோபால் மீதான வன்மமா?” முதலமைச்சர் பட்டென கேட்டு வைத்தார்.

‘க்ரேட்...’ என்பதுபோல் ஒரு மெச்சுதலான பார்வையை அவன் பார்த்து வைக்க, “நீங்க ரொம்ப சின்னப் பையன் தம்பி...” கோபாலின் சாணக்யத்தனமும், நரித்தனமும் அவரை இப்படி பேச வைத்தது.

அதற்கு அவன் எந்த பதிலையும் சொல்லாமல் போக, “இதற்கு மேலே என்கிட்டே உதவின்னு நீங்க வந்து நிற்க முடியாது” சற்று கோபமும், எரிச்சலும் கலந்து சொன்னார்.

“அப்போ நான் ஆளையே மாத்திடறேன்... சிம்பிள்...” என்றவன் சொல்லிச் செல்ல, அவருக்கு இதய மத்தியில் பூகம்பம். என்றவன் அங்கே நிற்காமல் வெளியே நடந்துவிட்டான். அவன் செல்லப் போக, தன் உதவியாளனை அனுப்பி, மீண்டுமாக சர்வஜித்தை அறைக்கு வர வைத்தார்.

அவர்கள் ஆட்சிக்கு வந்து இப்பொழுது இரண்டு வருடங்கள்தான் கடந்து இருக்கிறது. இன்னும் மூன்று வருடங்கள் பாக்கி இருக்க, அதற்கு இவனால் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாதே எனப் பயந்தார்.

சர்வஜித் மீண்டுமாக உள்ளே வர, “நான் சொன்னாலும் அவன் எதையும் கேட்க மாட்டான் தம்பி... எதிர்கட்சிக்காரன்தான் ஜெயிக்கணும்னு நான் சொன்னாலும், இவன் விட்டுக் கொடுக்க மாட்டான். நீங்க விஷயம் புரியாமல் சொல்லிட்டு போயிட்டே இருக்கீங்க? உட்காருங்க பேசுவோம்...” அவனிடம் சொன்னார்.

அவனது பலத்துக்கு, தன் பதவியைக் காப்பாற்ற இறங்கிப் போவதைத் தவிர வேறு வழி எதுவும் அவருக்கு இருக்கவில்லை.

“நான் இவ்வளவு சொல்லியும்...” என இழுத்தவன், “முதலமைச்சர் இன்னைக்கு நியூஸ் பார்க்கலை போல...” என்றவாறு சென்றுவிட்டான். அவன் சொன்னதில் ஏதோ விஷயம் இருப்பது அப்பொழுதுதான் புரிய, தன் பிஏவிடம் தொலைக்காட்சியை போடச் சொன்னார்.

அங்கே நடந்துகொண்டிருந்த பரபரப்பான செய்திகள் எல்லாம் அவர் கண் முன் விரிய, வந்திருப்பவன் சாமானியமானவன் இல்லை என மீண்டும் ஒருமுறை அவருக்குப் புரிந்தது. அதோடு கூட, பிஏ வெங்கடாச்சலமோ, “சார் ப்ரஸ் பீப்பிள் எல்லாம் வெளியே காத்துகிட்டு இருக்காங்க” அவர் சொல்ல, முதலமைச்சருக்கு தலை வலியே வந்துவிட்டது.

வந்தவன் சொல்லிச் சென்ற குரங்கு பொம்மை வேறு நினைவுக்கு வர, “அந்த கோபாலை வரச் சொல்லுய்யா... என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கான் அவன்?” அவர் எகிற, கோபால் வர வைக்கப் பட்டார்.

தன் பிரச்னைக்கு ஒரு தீர்வு காணவும், வரும் இடைத்தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என ஆலோசனை செய்யவும் வேண்டும் என அவர் வந்தார்.

ஆனால் முதலமைச்சரோ, “நீ எதையுமே செய்யாதய்யா. அந்த வள்ளல் தான் கேண்டிடேட்... என்ன செய்வியோ செய். இந்த நேரத்தில் உன் விஷயத்துக்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. எழுந்து போயா...” முதலமைச்சர் இப்படிச் சொல்ல, அதிர்ந்து போனார்.

தன் பலம் எங்கேயோ இறங்குவது அவருக்குப் புரிந்தது. இப்பொழுது இருக்கும் பிரச்சனையைப் பார்ப்பதா? இடைத் தேர்தலுக்கு செலவழிப்பதா? என்ன செய்ய எனப் புரியாமல் கோபால், விழி பிதுங்கினார்.

கோபாலுக்கு இது முதல் சறுக்கல் என்றால், சர்வஜித்துக்கு இது முதல் வெற்றி ஆயிற்றே.

பகை முடிப்பான்.....