• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 27.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
பகுதி – 27.

முத்துப்பாண்டியின் இறுதி காரியங்கள் அனைத்தும் முடிந்து இன்றோடு பத்து நாட்கள் கடந்துவிட்டது. கோபாலின் குடும்பத்தினர் அனைவரும் எப்படியாவது சர்வஜித்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என கட்டம் கட்டிக்கொண்டு திரிந்தார்கள்.

அவர்கள் தங்களது அடியாட்களை சர்வஜித்தின் மால், வீடு என கத்தி கம்புகளோடு அனுப்பி விட்டார்கள். ஆனால் அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு முழுத் தோல்வியே கிடைத்தது. அதுவும் சர்வாவின் வீட்டிலும், ‘மால்’லிலும் துப்பாக்கி ஏந்திய ஸ்பெஷல் ஃபோர்ஸ் ஒன்று எப்பொழுதும் காவலுக்கு இருந்தார்கள்.

‘அது எப்படி அவனது வீட்டுக்கும் அலுவலகங்களுக்கும் துப்பாக்கி ஏந்தியவர்கள் பாதுகாப்புக்கு நிற்கலாம்?’ என கோபாலின் வீட்டினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு மற்றுமொரு மிகப்பெரிய உண்மையே தெரிய வந்தது.

சர்வாவின் நிறுவனம்தான் இந்திய ராணுவத்துக்கு சிலரக துப்பாக்கிகளை தயாரித்துக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவனது அந்த நிறுவனத்தின் பலனாக, ராணுவத்தோடு அவனது நிறுவனத்துக்கு உள்ள தொடர்பின் காரணமாக துப்பாக்கி ஏந்தியவர்களின் பாதுகாப்பு அவனுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

முதலில் இந்த வேலையை அவனது தத்து அப்பாவின் நிறுவனம்தான் செய்துகொண்டு இருந்தார்கள் என்பதால், சர்வஜித்தின் மீது மற்றவர்களின் கவனம் பதியவில்லை. அதனால்தான் சர்வஜித் இதை டேக் ஓவர் செய்து இருந்தான்.

அதுவும் அவர்கள் யாரையாவது சுட்டாலும் சரி, கொன்றாலும் சரி சட்டம் உரிய விளக்கத்தைக் கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் என்ற உண்மையும் தெரியவர எதுவும் செய்ய முடியாத நிலை. ஆனால் சர்வஜித் அவர்களை எல்லாம் அப்படியே விட்டுவிடும் நிலையில் இருக்கவில்லை.

அன்றைக்கு கோபாலின் வீட்டுக்கே அவன் சென்று நின்றான். தன் வீட்டுக்குள்ளேயே கோபால் ஆட்களை ஏவி இருக்க, இதற்கு மேலே பொறுமையாகவும், நிதானமாகவும் இருப்பது முட்டாள்த்தனம் எனத் தோன்றியது.

இவன் கோபால் வீட்டுக்குச் சென்று நிற்க, விநாயகம் எகிறிக்கொண்டு வந்தான். “என் தம்பியைக் கொன்னுட்டு எவ்வளவு தைரியம் இருந்தால் எங்க வீட்டுக்கே வந்து நிப்ப?” என்றவன் அவனை அடிக்கப் பாய்ந்தான்.

சர்வஜித்தின் காவலுக்குச் சென்றிருந்த ஹரீஷ் வேகமாக அவனைத் தடுத்துப் பிடித்தான். விநாயகம் நல்ல பருமனான உடற்கட்டைக் கொண்டிருந்தாலும் ஹரீஷ் அவனை வெகு சுலபமாகத் தூக்கி தூரப் போட்டிருந்தான்.

கோபாலின் உடன் இருக்கும் அடியாட்கள் அவரோடு இருந்த பிறகும், அவர்கள் யாராலும் ஹரீஷை நெருங்கவே முடியவில்லை. மொத்தமாக ஐந்துபேர் பாய்ந்தும், அவர்களை எல்லாம் ஹரீஷ் அசால்ட்டாகவே சமாளித்தான். ஹரீஷ் வெளியே சண்டையில் இறங்கி இருக்க, சர்வஜித் வேக நடையிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

கோபால் அவனைப் பார்த்துவிட்டு முறைத்துக் கொண்டு நின்றார். வெளியே கேட்ட சத்தத்தில், ருக்மணி, ஜெயந்தி, கோதை என அனைவரும் வெளியே வந்திருக்க, அங்கே சர்வஜித்தைப் பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டார்கள்.

பெண்களுக்கு எல்லாம் அவன்மேல் வருத்தம் இருந்தாலும், சில நேரங்களில் நாம் உண்மையை ஏற்றுத்தானே ஆக வேண்டும். ருக்மணிக்கு அவனை வரவேற்க வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டார்.

“என் வீட்டை விட்டு வெளியே போடா...” கோபால் கத்தினார். “டேய்... என்னடா செய்யறீங்க? இவனை யாருடா வீட்டுக்குள்ளே விட்டது?” அவர் கத்த, சர்வஜித்தை அடிக்க இருவர் பாய்ந்தார்கள். அவர்களை ஒரே சுழற்றில் சுவரில் விட்டெறிந்தவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான்.

அதை அத்தனை ஆழமாக இழுத்து சுவாசித்து புகையை நிதானமாக வெளியிட, அதைப் பார்த்த பெண்களுக்கு மூச்சடைத்தது. ‘அம்மாடியோ... இதென்ன முழு சிகரெட்டையும் உள்ளே இழுக்கறார்?’ அந்த புகை அவனை எந்த அளவுக்குப் பாதிக்கும் எனத் தெரியாதா என்ன?

“போகத்தான் போறேன்... இல்லாமல் உன் வீட்டுக்கு விருந்தா சாப்பிட வந்திருக்கேன்?” புகை கக்கும் வாயோடு பேசினான்.

ஜெயந்தி அவன் புகையை வெளியேற்றியதில் மெல்லமாக இரும, “ஓ... சார்... சாரி...” என்றவன் உடனே அந்த சிகரெட்டை கீழே போட்டு அணைத்தான். அந்த நேரம் மூன்றாவது ஒருவன் நீளக் கத்தியோடு அவனைக் குத்த வர, பெண்கள் அலறிவிட்டார்கள்.

ஆனால் சர்வஜித் அவனை வெகு அசால்ட்டாக கையாண்டவன், அவனைக் கீழே போட்டு, அவன் கழுத்தில் அந்த கத்தியை ஊன்றி, தன் காலால் மிதித்தான்.

“இப்படியே ஒரே அழுத்து... கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேன்” என்றவன் பெண்களை குறிப்பாய் பார்த்து, தான் எதற்காக யோசிக்கிறான் எனச் சொல்லாமல் சொல்ல, பெண்கள் மூச்சுவிடவும் மறந்தார்கள்.

“இதோ பார்... நீ ஆள் பலத்துல மோத நினைக்கற. நான் என் பலத்தில் நிக்கறேன். முடிஞ்சால் இங்கே இருக்கும் மொத்த பேரையும் அனுப்பு, நான் ஒத்தையா சமாளிக்கறேன்” என்றவன் காலுக்கு அடியில் இருந்த கத்தியை மெல்லமாக அழுத்த, கீழே கிடந்தவன் உயிர் பயத்தில் அலறினான்.

சர்வஜித் கொஞ்சமாக அழுத்தியதிலேயே கீழே கிடந்தவனின் கழுத்தில் இருந்து குருதி எட்டிப் பார்த்தது. பெண்களின் முன்னால் ஒரு கொலையை பச்சையாக செய்ய முடியாமல் மட்டுமே தேங்கினான். இல்லையா... அந்த கத்தி எப்பொழுதோ அவன் கழுத்தில் இறங்கி இருக்கும்.

“நீ எனக்கு எதிரா ஒரு விரலை அசைத்தால் கூட இனிமேல் நான் சும்மா இருக்க மாட்டேன். நான் ஏற்கனவே சொன்னதுதான்... இனிமேல் நான் கொடுக்கற பிரச்னையை சமாளிக்கத்தான் உனக்கு நேரம் இருக்கும். எனக்கு பிரச்சனையைக் கொடுக்கணும்னு நினைக்க கூட செய்யாதே. அப்படிச் செய்தால்...” என்றவன் இதழ் ஓரத்தில் சிரிக்க, கோபாலே பயந்தார்.

“நியூஸ் சேனல் பார்க்கல? பார்த்துடாதே...” என்றவன் இடி இடியென சிரித்தான்.

அப்படியே ஜெயந்தியின் பக்கம் திரும்பியவன், “பெரிய அண்ணி... நீங்க சந்தோஷமா இருக்கீங்க?” என்றவன், தன் கரத்தால் தாடையைத் தேய்த்துக் கொண்டான்.

அவன் கேட்ட விதத்தில் ஜெயந்திக்கு அடிமனதில் ஒரு பயம் பிடித்துக் கொண்டது. “நியூஸ் சேனலை நீங்களும் பார்த்துடாதீங்க... ஹேப்பியா இருக்க மாட்டீங்க” அவன் சொல்லிக் கொண்டே இருக்கையில், விநாயகம் வெளியே இருந்து உள்ளே ஓடி வந்துகொண்டிருந்தான்.

கோபால் செய்திச் சேனலை வைக்க முயல, “அப்பா வேண்டாம்...” வேகமாக தடுக்க முயன்றான்.

விநாயகத்தின் பதட்டத்தைப் பார்த்தவன் அவனிடம், “நாயே சாவுடா...” என்றவன் ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான். அதுவும் அந்த விரலை ஸ்லோமோஷனில் ஆட்டி, நாக்கை அவன் கடித்த விதத்தில் விநாயகத்துக்கு உயிரே போய்விட்டது.

அதுவும் அவன் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் செய்கை வேறு அவன் உயிரையே ஆட்டம் காணச் செய்திருக்க, இது வேறு அவனைக் கொன்றது. விநாயகத்தின் அந்த பயத்தை பெண்கள் அனைவரும் புரியாமல் பார்த்தார்கள்.

சர்வஜித் சொன்னதில் பெண்களுக்கு என்னவோ ஏதோ என மனம் அடித்துக்கொள்ள, செய்திச் சேனலில் அந்த செய்தி பரபரப்பாக ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

“சற்று முன்னர் நமது தொலைக்காட்சிக்கு வந்து சேர்ந்த ஒரு டேப்பில் இருந்து பெறப்பட்ட சூடான செய்தி...

“பத்து வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கவுன்சிலரின் மரணத்தில் துப்பு துலங்கியது. ஆளும் கட்சி MLA வின் அண்ணனே அவரைக் கொல்லும் பரபரப்பு காட்சிகள்” என செய்தி வாசிப்பவள் தந்திக் குரலில் சொல்ல, அதைக் கேட்ட ஜெயந்தி மறுநொடி மயங்கி சரிந்தாள்.

“அக்கா...” “அம்மாடி...” “ஜெயந்தி...” கோதை, ருக்மணி, விநாயகம் என அனைவரும் அலற சர்வஜித் கோபாலைப் பார்த்து சிரித்தானே ஒரு சிரிப்பு... அவனுக்கு ஈரக்குலை நடுங்கியது.

‘இதெல்லாம் எப்படிடா?’ அவரால் செய்திச் சேனலில் ஓடும் விஷயங்களை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“இப்போ உன் விஷயத்தை கவனிக்க உனக்கு நேரம் சரியா இருக்கும்னு நினைக்கறேன்” என்ற சர்வஜித் நிதானமாக அங்கே இருந்து வெளியேறினான். செய்திச் சேனல்கள் அனைத்திலும் விஷயம் தீப்பற்றிக் கொண்டது.

ஜெயந்தியை உடனே தூக்கிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்கள். அவளை பரிசோதித்த மருத்துவர், “அவங்க இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி இருக்கு. அப்படி என்னதான் நடந்தது?” அவர் கேட்க, அவர்கள் என்ன பதில் சொல்வதாம்?

“அது ஒரு பெரிய கதை டாக்டர், நீங்க அவளைப் பாருங்க. இதனால் குழந்தைக்கு ஏதும் ஆபத்து இல்லையே?” கோதைதான் பேசினாள். அங்கே இருந்த ருக்மணிக்கும் சரி, கோபாலுக்கும் சரி பேச்சே வரவில்லை.

“அதை நாங்க இப்போ உடனே சொல்ல முடியாது. அவங்க இரத்த அழுத்தத்துக்கு மருந்து கொடுத்தால், அதை அந்த ஃபீட்டஸ் எந்த அளவுக்கு தாங்கும்னு எங்களுக்குத் தெரியலை. அதே நேரம் அவங்களோட உடல்நிலைக்கு இப்போ மருந்து கொடுக்காமலும் இருக்க முடியாது. லெட்ஸ் ஹோப் ஃபார் தி பெஸ்ட்” என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

அவர் செல்லவே, “என்னடா செய்து வச்சிருக்க? ஜெயந்தியோட முதல் புருஷனை கொன்னது நீயா? ஏன்டா? எதுக்குடா?” ருக்மணி கண்ணீர் விட்டார்.

“அம்மா... இப்போ அதெல்லாம் பேச நேரம் இல்லை... நீ போ...” என்றவனுக்கு வாய்ப்பு கிடைத்தால் சர்வஜித்தை கொன்று புதைக்கும் வேகம்.

கோபாலைப் பார்த்த ருக்மணி, “இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சுதான் நடக்குதா? நீங்களும் இதுக்கு உடந்தையா?” ருக்மணி கணவனிடம் கேட்டார். ஜெயந்தியின் முதல் கணவன் அவருக்கு ஒரு பிள்ளை போல் இருந்தவன். அப்படி இருக்கையில் அவனைக் கொன்றது தன் மகன் என்ற உண்மை அவரை உறையச் செய்து இருந்தது. அதை ருக்மணியால் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை.

“என்னடி வாய் ரொம்ப நீளுது? வாயை மூடிகிட்டு இருக்கறது உனக்கு ரொம்ப நல்லது” கோபால் சொல்ல, ருக்மணிக்கு உள்ளுக்குள் அப்படி ஒரு வேதனை மண்டியது.

ஜெயந்தியின் முதல் கணவன் சூர்யா இவர்கள் வீட்டிலேயே வளர்ந்தவன். சொல்லப்போனால் ருக்மணியின் செல்லப் பிள்ளை என்றே சொல்லலாம். அவன் உயிராக நேசித்த பெண்தான் ஜெயந்தி. அவளுக்கும் சூர்யா என்றால் அவ்வளவு பிரியம்.

சூர்யாவுக்குப் பெற்றவர்களும், உடன் பிறந்த தம்பி இருவர் இருந்த பொழுதும் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தால் கோபாலோடு இணைந்து கொண்டான். அங்கே கோபாலின் அலுவலகத்திலோ, கார் ஷெட்டிலோ என படுத்துக் கொள்வான்.

ருக்மணி கொடுக்கும் உணவு எதுவாக இருந்தாலும், அது பழையதாக இருந்தாலும் வாங்கி குடித்துவிட்டு அவர்கள் வீட்டையே சுற்றி வந்தான். அவனைப் பெற்றவர்களோ, தம்பிகளோ அழைத்தால் கூட வீட்டுக்குச் செல்ல மாட்டான்.

கோபாலின் ஆளுமையின் மீது அவனுக்கு அப்படி ஒரு மயக்கம் என்றே சொல்லலாம். அவர் சொல்லும் எதையும் கேள்வியே கேட்காமல் செய்துவிட்டு வருவான். மற்ற நேரங்களில் ருக்மணிக்கு வீட்டில் உதவுவான்.

காய்கறி வாங்கிக் கொடுப்பது முதல், ருக்மணி கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்றாலோ, ஏதாவது கடை வீதிக்குச் செல்வது என்றாலோ அவன்தான் அழைத்துச் செல்வான். தன் பேச்சைக் கேட்காத, தன்னை மதிக்காத பெற்ற பிள்ளைகளை விட, தான் பெறாத, தன் பேச்சைக் கேட்கும் சூர்யா என்றால் ருக்மணிக்கும் கொள்ளை பிரியம்.

நல்லநாள், விசேஷம்... திருவிழா என எதுவாக இருந்தாலும் அவனுக்கு தன் கையால் உடை வாங்கிக் கொடுத்து, பணம் கொடுத்து பார்த்துக் கொள்வார். கோபால் ருக்மணியை அடக்கியே வைத்து இருந்தாலும், செலவுக்கு தன் கையை எதிர்பார்க்கும் நிலையில் எப்பொழுதும் வைத்தது இல்லை.

வீட்டிலேயே மூடை மூடையாக சாக்குப் பையில் பணம் எப்பொழுதும் இருக்கும். ருக்மணிக்கு என தனி அக்கவுண்டும் இருக்க பணத்துக்கு என எப்பொழுதும் அவர் கணவனின் கரத்தை எதிர்பார்த்தது இல்லை.

கோபாலுமே சூர்யாவை நல்லவிதமாகவே பார்த்துக் கொண்டார். சூர்யா, ஜெயந்தியை விரும்புவது தெரிய, அவர்களுக்கு முன்னே நின்று திருமணம் செய்து வைத்தார்கள். அத்தனை சந்தோஷமாக, அன்னியோன்னியமாக வாழ்ந்து வந்தவர்களின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை.

ஜெயந்தி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த பொழுது திடுமென சூர்யா காணாமல் போயிருந்தான். கோபாலும் தன் சக்திக்கு உட்பட்டு, போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுத்து என பல விதங்களில் சூரியாவைத் தேடினார்.

ஆனால் சூர்யா காற்றில் கலந்து காணாமல் போயிருந்தான். அவன் எங்கே போனான்? எப்படிப் போனான்? என எந்த தகவலையும் அவர்களால் அறிய முடியவில்லை.

அந்த நேரத்தில்தான் விநாயகம் ஜெயந்தியை, தான் திருமணம் செய்து கொள்வதாக சொன்னான். இரண்டாவது திருமணம், அதுவும் கர்ப்பமாக இருக்கும் பெண் வேண்டாம் என கோபால் நல்ல விதமாகவே மகனுக்குச் சொன்னார். ஆனால் அவன் பிடிவாதமாக இருக்க, ஜெயந்தியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

ஜெயந்தியோ இந்த திருமணம் தனக்கு வேண்டாம் எனவும், தான் தன் பிள்ளையோடு வாழ்ந்துவிட்டுப் போகிறேன் எனவும் எவ்வளவோ போராடினாள். அந்த அளவுக்கு அவள் சூர்யா மீது உயிரையே வைத்திருந்தாள்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
வசதியான வாழ்க்கையை அவனோடு வாழவில்லை என்றாலும், ஒரு நிறைவான வாழ்க்கையை அவனோடு வாழ்ந்தாள். சூர்யாவின் வீட்டினர் கூட, தங்கள் மருமகளை தாங்களே பார்த்துக் கொள்வதாகவும், தங்களுக்குமே இன்னும் இரு மகன்கள் இருக்க, அதில் ஒருவனுக்கு அவளைத் திருமணம் செய்து கொடுப்பதாகவும் கூடச் சொன்னார்கள்.

அந்த அளவுக்கு ஜெயந்தி சூர்யாவின் வீட்டினரோடு நல்ல ஒட்டுதலாக இருந்தாள். அவளது குணத்தைக் கொண்டே அவர்கள் அப்படி ஒரு முடிவைச் சொன்னார்கள். ஆனால் இது எதற்குமே விநாயகம் ஒத்துக் கொள்ளவே இல்லை.

அவனது பிடிவாதத்தின் காரணமாகவே ருக்மணியே சூர்யாவின் வீட்டில் சென்று பேசினார். தான் அவளை தன் மகளைப்போல் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி, ஜெயந்தியையும் வெகுவாக பேசி சம்மதிக்க வைத்தார்.

ஜெயந்தி தங்கள் வீட்டுக்கு வந்த புதிதில், சூர்யாவை எண்ணி அப்படி அழுவாள். விநாயகமும் அவள் மனது மாற வேண்டி பொறுமையாகவே காத்திருந்தான். அவனது அந்த செய்கையைப் பார்த்து ருக்மணிக்கே கூட ஆச்சரியமாக இருக்கும்.

தன் மகன் ஜெயந்தியின் மீது வைத்திருக்கும் பிரியம் கண்டு சிலிர்த்துத்தான் போனார். ஜெயந்திக்கு குழந்தை பிறந்து, அதுவும் இறந்து போன பிறகு அவளுக்கு வாழ்க்கையே வெறுத்த நிலை.

விநாயகம் அவளைக் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டான். அவனது வெளி சகவாசங்களை எல்லாம் அப்பொழுது விட்டுவிட்டான். விநாயகத்தைப் பற்றி அவள் கண்டு வைத்திருந்த பிம்பங்கள் அனைத்தும் உதிர்ந்து போக, ஜெயந்தியின் மனம் அவன் பக்கம் சாயத் துவங்கி இருந்தது.

இவை எல்லாம் மற்றவர்கள் அனைவரும் அறிந்த கதை. ஆனால் விநாயகத்தின் கதை ஒன்று இருந்தது. விநாயகமும், சூர்யாவும் ஒரே வயதை ஒத்தவர்கள். ஒன்றாகவே கட்சிப்பணி, போஸ்டர் ஒட்டுவது, மாநாடு வேலைகளை கவனிப்பது என சுற்றிக் கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுதுதான் சூர்யா ஜெயந்தியைக் கண்டு அவள்மேல் காதல் கொண்டான். அதே நேரம் விநாயகமும் அவளை உள்ளுக்குள் விரும்பத் துவங்கி இருந்தான். அவனுக்கு அப்பொழுதே வேண்டாத பெண்கள் சகவாசம், குடிப்பழக்கம் என அனைத்தும் இருந்தது.

சூர்யா தன்னவளை சந்திக்கச் செல்கையில் எல்லாம், விநாயகத்தையும் உடன் அழைத்துச் செல்ல, அது தவறாகிப் போனது. காதலர்களின் தனிமைகள், செல்ல சீண்டல்கள், உரசல்கள் எனப் பார்க்கும் விநாயகத்துக்கு சூர்யாவின்மேல் தீராத வெறுப்பு எழுந்தது.

சூர்யா மட்டும் இல்லையென்றால் ஜெயந்தி எப்படியும் தனக்குத்தான் கிடைப்பாள் என எண்ணினான். அப்பொழுதே சூர்யாவை அகற்ற அவன் வெகுவாக முயன்றான். ஆனால் அவனது அப்பாவும் அம்மாவும் கூட சூர்யாவுக்கு துணையாக இருக்க, தன்னை அடக்கிக் கொண்டான்.

ஜெயந்தியைக் காணும்பொழுதெல்லாம் அவள்மீது மோகம் கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வேகம் அதிகரித்தது. அவள் தனக்குத்தான் வேண்டும் என மனம் போராடியது.

விநாயகம் அவர்களது திருமணத்தை நிறுத்த எவ்வளவோ போராடினான். கோபாலிடமே கூட சென்று, தனக்கு ஜெயந்தியைப் பிடித்திருக்கிறது, அவளைத் தனக்கு திருமணம் செய்து வைக்கச் சொல்லி கேட்டான்.

பொதுவாகவே எதற்கும் மறுக்காத கோபால் கூட அன்று அவனைத் திட்டிவிட்டார். சூரியாவின் மீது அவர் கொண்டிருந்த அபிமானமே அதற்குக் காரணம். இனி தனக்கு தந்தை உதவ மாட்டார் எனப் புரிய பொறுமை காத்தான்.

சூரியாவின் திருமணமும் முடிந்து அவன் அப்பா ஆகப் போகிறேன் என சொல்லிக் கொண்டு இனிப்புகள் வழங்கிய பொழுது வெறுத்துப் போனான்.

அவனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டான். விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனமாக இருந்தான். அன்று ஒரு கட்சிக் கூட்டம் இருக்க, அது முடியவே அனைவரும் கிளம்பினார்கள்.

மற்றவர்கள் முன்னிலையில் சூர்யாவை அவன் வீட்டுப் பக்கம் இறக்கி விட்ட விநாயகம், குறுக்கு வழியாக நடந்து சென்று அவனைத் தன்னோடு அழைத்துக் கொண்டான்.

“என்ன விநாயகம் திரும்பி வந்திருக்க? சூர்யா கேட்க,

“நல்ல செய்தி சொல்லிட்டு, உன் நண்பனான எனக்கு தனியா நீ ட்ரீட் தரலைன்னா எப்படி? அதுக்குத்தான் வந்திருக்கேன். நாம ரெண்டுபேர் மட்டும் போகலாம்” அவன் அழைக்க, சூர்யா அதைத் தவறாக நினைக்கவே இல்லை.

சூர்யா எப்பொழுதும் குடிக்கவே மாட்டான். ஆனால் அன்று அவனை தங்கள் பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்ற விநாயகம், அவனை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தான். அதில் அவன் விஷம் கலந்திருக்க, அதைக் குடித்த சில பல நிமிடங்களிலேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டான்.

தான் சாகப்போவது கூட சூர்யாவுக்கு தெரியவில்லை. “விநாயகம்... எனக்கு என்னவோ...” சொல்லிக் கூட முடிக்க அவனுக்கு நேரம் இருக்கவில்லை. விநாயகம் கொடுத்தது சயனைடு விஷம் ஆயிற்றே, அது நொடியில் தன் வேலையைக் காட்டி இருந்தது.

அவனை சாக்குப் பையில் கிடத்தி துண்டு துண்டாக வெட்டி, அங்கே இருந்த டிரைனேஜுக்குள் போட்டு மூடிவிட்டான். அந்த பண்ணை வீட்டை அவர்கள் எப்பொழுதாவதுதான் பயன்படுத்துவார்கள் என்பதால், அதை சுத்தம் செய்ய வேண்டிய தேவையே இருந்தது இல்லை.

விஷயத்தை கமுக்கமாக முடித்துவிட்டு, நல்லபிள்ளைபோல் தன் வீட்டுக்குச் சென்றுவிட்டான். இந்த விஷயங்கள் எல்லாம் விநாயகம் மட்டுமே அறிந்த ரகசியம். ஆனால் இப்பொழுதோ, அவன் கொலை செய்த வீடியோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட, உறைந்து போனான்.

ஏற்கனவே முத்துப்பாண்டியின் விஷயமே மீடியாக்களில் தீப்பற்றி எரிந்து அப்பொழுதுதான் அணைந்து இருந்தது. அடுத்த ஒரே மாதத்தில் விநாயகத்தின் இந்த செய்கை வெளியே வர, கோபாலுக்கு விழி பிதுங்கியது.

தன் மகனைத் தனியாக அழைத்தவர், “இது உண்மையா? நீதான் செய்தியா?” என்றார். விநாயகம் அமைதியாக இருக்க, அதுவே அவருக்குத் தேவையான பதிலைக் கொடுத்தது.

“இதை முன்னாடியே சொல்லி இருந்தால், அந்த பிணத்தை வேறு எங்கேயாவது மாற்றி இருக்கலாம். இப்போ...?” என்றவருக்கு தொண்டையை அடைத்தது. அந்த ட்ரைனேஜை திறந்து, அதற்குள் அந்த உடல் பாகங்கள் கிடைத்தால் நிச்சயம் விநாயகம் கொலைக்கேசில் உள்ளே போவான் எனப் புரிந்தது.

விஷயம் மீடியாக்களில் கசிந்த உடனேயே, போலீசும், ஃபாரன்சிக் ஆட்களும் அங்கே பண்ணை வீட்டில் கூடிவிட்டார்கள். டிரைனேஜ் சுத்தம் செய்யப்பட்டு, அடியில் இருந்த மட்கிப்போன மண்டை ஓடும், சில எலும்புத் துண்டுகள் மட்டுமே அவர்களுக்குக் கிடைத்தது.

அதை உடனே DNA டெஸ்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். செய்திச் சேனல்களில் எல்லாம் சூர்யாவின் குடும்பமும், தம்பிகளும் ஆவேசமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதுவும் சூர்யாவின் தாய் அழுத அழுகையை கண்கொண்டு காண முடியவில்லை.

விநாயகத்தின் கைதை தவிர்க்க முன்ஜாமீன் வாங்க முயல, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் எதுவும் முடியவில்லை. எப்படி இருந்தாலும் அவன் இரண்டு நாட்கள் உள்ளே இருந்தே ஆகவேண்டிய நிலை. மருத்துவமனைக்கே வந்த போலீஸ் அவனைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள்.

சர்வஜித் அனைத்தையும் எப்படி கச்சிதமாக திட்டமிட்டு செய்கிறான் என அவருக்குப் புரிய, தான் எழ முடியாமல் அடி வாங்குவது புரிந்தது. இந்த கொலைக்கேஸ் எல்லாம் அவருக்கு ஒரு விஷயமே கிடையாது.

திங்கள்கிழமை காலையில் தன் மகனை அவர் வெளியே கொண்டுவந்து விடுவார். ஆனால் சரியும் தன் சாம்ராஜ்யம், அதிகாரம்... ஏற்கனவே முத்துப்பாண்டி விஷயத்திலேயே வேலவனை ராஜினாமா செய்யச் சொல்லி மேலிடத்தில் இருந்து அவ்வளவு ப்ரஷ்ஷர்.

ஆனால் கோபால் அதை தனது தந்திரத்தால் மட்டுமே தவிர்த்து இருந்தார். இப்பொழுது மீடியாக்களில் எல்லாம் விநாயகத்தின் பிரச்சனை பெரிதாக பேசப்பட, இந்த முறை தன்னால் கூட வேலவனின் பதவியை காப்பாற்ற முடியாது எனத் தெரிந்து போனது.

இன்னும் ஆறு மாதங்களில் எலக்ஷன் வேறு இருக்க, தங்கள் பெயர் இந்த அளவுக்கு கெட்டுப் போயிருக்க, ரிசல்ட்டை நினைத்து கவலை கொண்டார். அரசியல்வாதிகளுக்கு அதிகாரமும், பதவியும் இல்லாமல் இருப்பது நிர்வாணமாக இருப்பதற்குச் சமம் ஆயிற்றே.

கோபால் விழி பிதுங்கிப்போய் அமர்ந்திருக்க, தங்கள் வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த வைஷாலி தன்னவனைப் பார்த்தாள். அவனோ ‘நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே’ என்பதுபோல் அமர்ந்திருந்தான்.

அந்த ஊரே தீப்பிடித்த உணர்வில் எரிந்து கொண்டிருக்க, ‘ரோம் நகரமே பற்றிக்கொண்டு எரிந்த பொழுதும் அங்கே ஒருவன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம்’ என்றுதான் சர்வஜித்தைப் பார்க்கையில் அவளுக்குத் தோன்றியது.

“என்னங்க... எப்படிங்க? இதெல்லாம்... என்னவோ யாரோ கூடவே இருந்து ரெக்கார்ட் பண்ண மாதிரி இருக்கு? அதுவும் பத்து வருஷத்துக்கு முன்னாடியேன்னா... அதெப்படி சாத்தியம்?” அவளால் நம்ப முடியாமல் கேட்டாள்.

“அவனை நான் கட்டம் கட்டி பதினைந்து வருஷமாச்சு... எந்த விதத்திலும் அவன் என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது” என்றவன் சிகரெட்டை எடுத்து புகைக்கத் துவங்கினான்.

“உங்களுக்கும் என் மாமாவுக்கும் என்ன சம்பந்தம்?” அவள் கேட்க, அதற்கு அவன் வாயைத் திறக்கவே இல்லை.

“நான் கேட்கறதுக்கு பதில் சொல்லுங்க...” அவள் அழுத்திக் கேட்டாள்.

“இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இன்னும் வரலை. ஆனா உன் மாமாவுக்கு இதுக்கு பதில் நல்லாவே தெரியும்” என்றவன் எழுந்து சென்றுவிட்டான். அங்கே அவன் இப்படியான விஷயங்களைத் துவங்கியது முதலே அவளுக்கு நிம்மதி என்பது இருக்கவில்லை.

அவன் பின்னாலேயே சென்றவள், “இனிமேல் என்ன ஆகும்?” அவனிடம் கேட்டாள். அவன் அசால்ட்டாக தோளைக் குலுக்க, அவளுக்கு சற்று கோபமாக இருந்தது.

“மாமாவை யோசிச்ச நீங்க, ஜெயந்தி அக்காவைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சீங்களா?” அவள் கேட்க,

‘எனக்கு அது அவசியமில்லாதது’ என ஒரு பார்வையை மட்டுமே கொடுத்தான்.

அவளோ அதைக் கண்டுகொள்ளாமல், “அவங்க இப்போ கர்ப்பமா இருக்காங்க, இந்த நேரத்தில் இப்படின்னா... அவங்க மனசு என்ன பாடுபடும். அவங்க குழந்தைக்கு...?” சொல்லிக் கொண்டே வந்தவள் அதிர்வாக அவனைப் பார்த்தாள்.

‘புரிஞ்சுடுச்சு போல...’ என்றவாறு கண்களால் அவளிடம் சொல்ல, அவள் இதயம் தாளம் தப்பியது,

“அவங்க வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஏதாவது ஆகணும்னே இப்படி பண்றீங்களா? ஒரு வேளை அது பெண் குழந்தையா இருந்தால் என்ன செய்வீங்க?” அத்தனை ஆற்றாமையாகக் கேட்டாள்.

அவனோ தோளைக் குலுக்கியவன், “ஒரு வாரம் ஆச்சு... இப்போ மிஸ் மீ இல்லையா?” அவன் கேட்க, அவனை எந்த விதத்தில் எடுப்பது என அவளுக்குப் புரியவே இல்லை. “நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்... நீங்க என்ன கேட்கறீங்க?” அவளுக்கு எரிச்சலாக வந்தது.

ஆனால் அவளது எரிச்சலைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அவன் அவளை நெருங்க, அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. அவனது இந்த குணம்... அவளை ஒரு விதத்தில் பயப்படுத்தியது. இதைப்பற்றி விசாலாட்சியிடம் கேட்பது என முடிவெடுத்துக் கொண்டாள்.

அவளை நெருங்கிச் சென்றவனோ, அவளை மொத்தமாக கொள்ளையிட்ட பிறகே விலகிச் செல்ல, அவனை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அவன் நெருங்கித் தொட்டாலே குழையும் தேகத்தையும், முத்தமிட்டாலே உருகும் இதழ்களையும் வைத்துக்கொண்டு அவள் என்ன போராடவாம்? அவனது அருகாமை அவளை வசமிழக்கச் செய்கையில் அவனோடு உருகிக் கரையவே முடிந்தது.

ஆனால்... அவள் கேட்டதற்கு விசாலாட்சியின் அந்த பதில்... அதை அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. வைஷாலி அவரது பதிலில், அவர் சொன்ன உண்மையில், ஸ்தம்பித்துப் போனாள்.

பகை முடிப்பான்........
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
விசாலாட்சி என்ன சொன்னாங்கன்னு தெரிய நாளைக்கு வர காத்திருக்கனுமோ 😒😒