பகுதி – 35.
வைஷாலியும், சர்வஜித்தும் ஒன்றாக அவனது கண்ணாடி மாளிகைக்கு வந்து இருந்தார்கள். வைஷாலியின் முகம் தாய்மையின் பூரிப்பில் திளைத்திருக்க, சர்வஜித்திடம் முதல் முறையாக ஒரு இலகுத் தன்மை இருந்தது.
“ஒரு நிமிஷம் இருங்க...” என்ற விசாலாட்சி, பின்னால் திரும்பிப் பார்க்க, ரூபி ஒரு ஆரத்தி தட்டோடு வெளியே வந்தாள்.
விசாலாட்சியைப் பார்த்த உடனே வைஷாலியின் மனம் பாரமாகிப் போக, முயன்று தன் முகம் மாறாமல் காத்தாள். அப்படி அவள் செய்தால், சர்வஜித்தே தாங்க மாட்டான் என அவளுக்குத் தெரியுமே. அதைவிட, அவன் தாயின் எந்த பேச்சையும் தட்டாமல் கேட்பதன் காரணம் கூட அவளுக்குப் புரிவதுபோல் இருந்தது.
“என்னம்மா இது?” சர்வஜித் புரியாமல் கேட்டான்.
“முதல் முறையா இந்த வீட்டுக்கு வர்றீங்க... ஆரத்தி எடுக்காமல் எப்படி? நீ எடும்மா...” விசாலாட்சி சொல்ல, ரூபி ஆரத்தி எடுத்தாள்.
ஆரத்தி எடுத்த ரூபி, “ம்... குடுங்க...” அவள் சர்வஜித்திடம் கரத்தை நீட்ட, தன் பர்சில் இருந்த துபாய் பணத்தை மொத்தமாக எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டான்.
அதைப் பார்த்தவள், “இதென்ன செல்லாத காசா கொடுக்கறீங்க?” ரூபி போலியாக அலற, சர்வஜித், சின்னதாக புருவம் நெரித்தவன் அவள் விளையாட்டை கண்டுகொண்டான். ஹரீஷோ பாய்ந்து வந்து அவள் வாயை மூடினான். ரூபியின் விளையாட்டு வைஷாலிக்குப் புரிய, வாய்விட்டு சிரித்தாள்.
“ஹரீஷ் அவளை விடுங்க... அவ சும்மா விளையாடறா” வைஷாலி சொன்ன பிறகுதான் ஹரீஷ் அவள் வாயில் இருந்து கரத்தை எடுத்தான். ஹரீஷ் சர்வஜித்தின் முகத்தைப் பார்க்க, அங்கே எந்தவிதமான கோபமும் இல்லை என்ற பிறகுதான் சற்று நிம்மதியானான்.
“சரி... சரி... வலது காலை எடுத்து வச்சு உள்ளே போங்க” என்ற ரூபி, ஆரத்தியை வெளியே ஊற்றச் செல்ல, ஹரீஷ் அவள் பின்னாலேயே சென்றான்.
“ரூபி... எந்த விதத்தில் நீ சார் முன்னாடி இப்படியெல்லாம் பேசற?” ஹரீஷுக்கு எப்பொழுதுமே சர்வஜித்தின் முன்னால் பேச்சே வராது. அதுவும் சர்வஜித் ஒன்றைச் சொல்லிவிட்டால் அதற்கு மறு பேச்சு கூட பேசாமல் அதைச் செய்து முடிப்பான்.
சர்வஜித் சொல்வது சரி வருமா? இல்லையா? என்று கூட அவன் யோசிக்க மாட்டான். சர்வஜித் ஒன்றைச் சொல்லிவிட்டால், அதன் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை அவனுக்கு நிறையவே இருந்தது.
“ஏன் பேசினால் என்ன?” கணவனிடம் எதிர் கேள்வி கேட்டாள்.
“சார் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. கோபத்தில் ஏதாவது சொல்லிட்டா உனக்குத்தான் கஷ்டம். நானும் எதுவும் கேட்க முடியாது” என்றான்.
“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா எனக்கு சாரைத் தெரியும். சார் என்னைக்காவது என்கிட்டே குரல் உசத்தி பேசியாவது நீங்க கேட்டு இருக்கீங்களா? அதெல்லாம் சார் எதுவும் சொல்ல மாட்டாங்க... நீங்க பயப்படாதீங்க. அப்படியே ஏதாவது சொன்னாலும் நான் டீல் பண்ணிக்கறேன்” என்றவள் முகத்தை ஒரு மாதிரி வெடுக்கென திருப்பிக் கொண்டு, கையில் இருந்த கத்தை பணத்தை அவனிடம் காட்டினாள்.
அவனோ அதைப் பார்த்துவிட்டு, “அவ்வா... அவ்வா... ஒரு ஆரத்தி சுத்தறதுக்கு இவ்வளவு பணமா? பேசாமல் நானும் பொண்ணா பொறந்திருக்கலாம்” என்றவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.
“அப்படி பொறந்திருந்தா நானும் கிடைச்சிருக்க மாட்டேன்... என் மூலமா...” மேலே சொல்லப் போனவளது வாயை பாய்ந்து பொத்தினான்.
“அம்மா தாயே... நான் இப்படியே இருந்துக்கறேன்...” அவன் சொன்ன விதத்தில், அப்படி ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அவர்கள் இருவரும் உள்ளே வர, விசாலாட்சி, வைஷாலி, சர்வஜித் என அனைவரும் ஒன்றாக நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள். வைஷாலி தோழியைப் பார்த்து கரத்தை நீட்ட, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.
அதைப் பார்த்த ஹரீஷ், ‘அது முதலாளின்னு இவளுக்கு கொஞ்சமாவது நினைப்பிருக்கா? அவங்க கையைப் பிடிச்சுகிட்டு நிக்கறா. சாரும் எதுவும் சொல்ல மாட்டேங்கறார்?’ எண்ணியவாறே மனைவியைப் பார்த்தான்.
அவனுக்குள் என்னவோ ஓடுவது புரிய, ரூபி ‘என்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினாள்.
‘எதுவும் இல்லை...’ என்றவாறு குறிப்பாக தோழியரின் இணைந்த கையை ஒரு பார்வை பார்த்தான். அதைப் பார்த்த ரூபி, இன்னும் அழுத்தமாக தோழியின் கரத்தை பற்றிக் கொள்ள, அவனுக்கு தலையிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
ஊரில் சர்வஜித் இல்லாத பொழுது, தோழியர் இருவரும் ஒன்றாகவே ஒரே அலுவலக அறை, சில நாள் இரவில் ஒரே படுக்கை அறையில் கூட உறங்குவதை கண்டு இருக்கிறான். இருவரையும் ஒன்றாக ‘மால்’லுக்கு ஒரே காரில் அழைத்துச் சென்றதும் அவன்தான்.
அப்பொழுது எல்லாம் வைஷாலி அவனிடம் எதையாவது கேட்டால், பேசினால் வெகு இலகுவாகவே பதில் கொடுப்பான். ஆனால் சர்வஜித்தின் முன்னால், வைஷாலியிடம் பேசக் கூட மாட்டான். அவ்வளவு ஏன் வைஷாலியை நேருக்கு நேராக பார்க்க கூட மாட்டான்.
இங்கே என்றால் அவனது மனைவியோ... சர்வஜித்தின் முன்பே வைஷாலியின் கரத்தை பிடித்துக்கொண்டு நிற்க, அவனுக்கு சற்று பதட்டமாகவே இருந்தது. ஹரீஷ் மனைவியிடம் கண்களால் எதையோ சொல்வதும், அதற்கு ரூபி வைஷாலியின் கரத்தை இன்னும் அழுத்தமாக பிடித்துக் கொள்வதையும் சர்வஜித் பார்க்கவே செய்தான்.
அதைக் கவனித்தாலும், விசாலாட்சி அவனிடம் எதையோ கேட்க, அதற்கு பதில் கொடுத்துக் கொண்டு இருந்தான்.
ரூபியோ, “எல்லாம் ஓகேயா?” தோழியின் காதில் கிசுகிசுத்தாள்.
“ம்...” சின்னதாக முனகியவள், கணவனைப் பார்த்தாள். ஹரீஷ் சர்வஜித்தின் பின்னால் நின்றுகொள்ள, அதைப் பார்த்த வைஷாலி அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அதற்கு மெல்லிய புன்னகையை உதிர்த்தவன் ஒரு மாதிரி விறைப்பாக நின்றுகொண்டான்.
அதைப் பார்த்தவள், “ஹரீஷுக்கு என்னவாம்?” தோழியிடம் கேட்டாள்.
“நீ என் முதலாளியாமா... நான் உன்னை தொட்டுப் பேசக் கூடாதாம்... அதுவும் சார் முன்னாடி கூடவே கூடாதாம்... இன்னும்...” என்றவள் யோசிப்பதுபோல் பாவனை செய்ய, ஹரீஷோ திருதிருவென விழித்தான்.
‘இவ என்னைத்தான் போட்டு கொடுக்கறா போல...’ அவன் நினைக்க, வைஷாலியும் அவனை திகைப்பாக பார்த்து அதை உறுதி செய்தாள்.
‘நான் காலம் முழுக்க இப்படி மைண்ட் வாய்சிலேயே புலம்பிக்கணும் போல... ஆண்டவா...’ நொந்துபோனான் ஹரீஷ்.
ரூபி சொன்னதைக் கேட்ட வைஷாலி சிறு அதிர்வோடு தோழியைப் பார்த்தாள். இந்த நொடி வரைக்கும் வைஷாலி அப்படியாக நினைத்தது கூட இல்லை. அப்படி இருக்கையில் ஹரீஷ் ஏன் அப்படி நினைக்கிறான் என அவளுக்குப் புரியவில்லை.
“ஓ...” என்றவள், ஹரீஷிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தாள்.
“எல்லாம் முடிந்ததாப்பா... இனிமேலாவது நீ நிம்மதியா, சந்தோஷமா உன் குடும்பத்தோட இருக்கணும்” விசாலாட்சி மகனின் கன்னம் வருடினார்.
“சரிம்மா...” என்றவன் தாயை தோளோடு அணைத்துக் கொண்டான். ரூபி தன்னவனை பார்வையாலேயே தன் பக்கம் அழைக்க, அவளுக்கு அருகே செல்லவில்லை என்றால், ‘ஹரீஷ்... இங்கே வாங்க’ என வாய்விட்டே அழைத்துவிடுவாள் என்பதால் அவளுக்கு அருகே சென்றுவிட்டான்.
“அவ்வளவு பயம்...?” ரூபி கணவனிடம் கேட்க, அவளை முறைத்தான். வாய்விட்டு எதையாவது சொல்லக் கூட பயமாகத்தான் இருந்தது. அதுவும் சர்வஜித் அங்கே இருக்கையில் அவன் அப்படியெல்லாம் நினைக்க கூட முடியாதே.
விசாலாட்சியோ, “இனிமேல் எந்த போராட்டமும் இல்லையே...?” தாய் மீண்டும் கேட்க,
”இல்லைம்மா... இனிமேல் உங்களோடதான் இருப்பேன்...” என்றவனது முகத்தில் ஒருவித சாந்தம் நிலவியது.
அது ஹரீஷுக்கும் புரிய, நிம்மதியாக மூச்சு விட்டான். ‘ஹப்பாடா... இனிமேல் சண்டைக்கு போக மாட்டார்’ என எண்ணியவன் ஒரு பெருமூச்சை வெளியேற்றினான்.
“என்ன இவ்வளவு பெரிய பெருமூச்சு விடறீங்க? சாரைப்பத்தி அப்படி என்ன யோசிச்சீங்க?” அவன் விலாவில் கையால் இடித்த ரூபி கணவனிடம் கேட்டாள். எங்கே இவளது பேச்சு வைஷாலிக்கு கேட்டுவிடுமோ என சற்று பதட்டமானான்.
“ஷ்... சும்மா இரு ரூபி...” அவளிடம் அடிக்குரலில் சொன்னான்.
“நீங்க என்னன்னு சொல்லுங்க. உங்க மைண்ட் வாய்ஸ் எனக்குத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?” என்றவாறு அவனைப் பார்த்து கண்ணடித்தாள்.
“உன்கிட்டே சொன்னது என் தப்புதான்...” அவன் புலம்ப, ரூபிக்கு பக்கென சிரிப்பு வந்தது. தான் சிரித்தால் மற்றவர்களின் கவனம் தங்கள் பக்கம் திரும்பும் என்பதால், அமைதியாக இருந்து கொண்டாள்.
“வெளியே இவ்வளவு விறைப்பா இருந்துகிட்டு, உள்ளுக்குள்ளே எப்படி செம காமெடி பீசா இருக்கீங்க?” அவனைச் சீண்டினாள்.
“ஏன்டி... ஏன்... ஏன்... உன் புருஷன் உசுரோட இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?” அதே குரலில் அவளிடம் கேட்டு வைத்தான்.
“என்ன ஹரீஷ்...? அவங்க என்ன சொல்றாங்க? உன் மைண்ட் வாய்சை நான் எப்போ கண்டு பிடிப்பேன்னு கேட்கறாங்களா?” சர்வஜித் கேட்க ஹரீஷ் ஆடிப் போய்விட்டான்.
“சார்...” அவன் அதிர்வாக அழைக்க ரூபியோ வெடித்து சிரித்தாள். வைஷாலிக்கு அங்கே நடப்பது புரியாமல் போக, குழப்பமாக அவர்களைப் பார்த்திருந்தாள்.
“ஹா...ஹா...ஹா... சார்... உங்களுக்குத் தெரியுமா?” சிரிப்பின் இடையே ரூபி அவனிடம் கேட்டுவேறு வைத்தாள். ஹரீஷின் முகம் ஒரு மாதிரி சங்கடமும், சிறு பயமுமாக உருமாற, சர்வஜித் அவனை ஒரு பார்வை பார்த்தான்.
“அதெல்லாம் தெரியாமலா இருப்பேன்?’ என சர்வஜித் சொல்ல, ஹரீஷுக்கு கொஞ்சம் பயம்தான்.
ஹரீஷோ, “வாயை மூடு ரூபி... நீ உள்ளே வா உனக்கு இருக்கு” ரூபியிடம் சின்னக் குரலில் மிரட்டினான்.
“சார்... என்னை உள்ளே கூட்டி போய் மிதிப்பேன்னு சொல்றார்” ரூபி சர்வஜித்திடம் மாட்டிவிட, ஹரீஷ் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்.
“ஐயோ இல்ல... இல்ல சார் பொய் சொல்றா...” சர்வஜித் பெண்கள் விஷயம் என வந்துவிட்டால் ரொம்பவே கெடுபிடி என அவனுக்குத் தெரியுமே. அவன் சொன்ன வேகத்தில் ரூபி இன்னும் சிரிக்க, சர்வஜித்தின் இதழோரம் புன்னகையில் லேசாக விரிந்தது.
அதைப் பார்த்த ரூபி... “ஷாலு... சார் இப்போ சிரிக்கறாரா?” தன் சிரிப்பை பட்டென நிறுத்தியவள் தோழியிடம் கேட்டாள்.
“என்னங்க... நான் சொன்னப்போ நீங்க நம்பலை தானே, இப்போ பாருங்க... ரூபி, நீங்க சிரிக்கறீங்களான்னு கேட்கறா?” வைஷாலி கணவனிடம் போட்டுக் கொடுக்க, ரூபி அவளை கையில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.
“ஸ்... ஆ... எரும மாடே எதுக்குடி இப்போ கிள்ளி விட்ட?” வைஷாலி தன் கரத்தை பரபரவென தேய்த்துக் கொண்டாள்.
“என்னடி பண்ற?” தோழியை அடக்க முயன்றாள்.
“என்ன கிள்ளிட்டாளா?” ஹரீஷ் கிட்டத்தட்ட கத்தினாள்.
“யோவ்... இந்த கேள்வியை சார் கேட்கணும். நீங்க என்ன ஊடால? நான் உங்களை மாட்டி விட்டேன்னு பெர்ஃபாம் பண்ணப் பார்க்கறீங்களா? கொன்னுடுவேன்...” ரூபி ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க, ஹரீஷ் விழித்தான்.