• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 6.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
பகுதி – 6.

சர்வஜித் பெண்கள் இருவரின் உடைமைகளை பறித்துக்கொண்டு, தன் விசிட்டிங் கார்டை மட்டும் கொடுத்துச் செல்ல, முழுதாக ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. முழு அதிர்வில் அப்படியே நின்றுவிட்டார்கள்.

அதில் முதலில் தெளிந்தது ரூபி தான். “ஷாலு... என்னடி இது? இப்போ என்ன பண்றது?” நிஜத்தில் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“எ...எ...னக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலையே ரூபி” என்றவளுக்கு ஒரு உதவி செய்யப் போய் இப்படி சிக்கலில் வந்து சிக்கிக் கொண்டோமே என்று இருந்தது. இந்த விஷயத்தை உடனடியாக தன் அப்பாவின் கவனத்துக்கு கொண்டு சென்றால் எல்லாம் முடிந்துவிடும் என புத்தி சொன்னது.

ஆனால் தங்கள் முன்னால் இருப்பவனின் பலம் தெரியாமல் சட்டென அவளால் எதையும் செய்துவிட முடியவில்லை. அதைவிட தன் அப்பாவிடம் சொன்னால், விஷயம் தன் மாமாவிடம்தான் செல்லும் என அவளுக்குத் தெரியுமே.

அப்படி இருக்கையில், தன் அப்பாவிடம் சொல்லி விஷயத்தை இன்னும் சிக்கலாக்கிக் கொள்ள பிடிக்கவில்லை. தன் மாமா தனது விஷயத்துக்குள் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

அது மாமாவோடு நின்றுவிடாது. அவரது மகன் முத்துப்பாண்டியின் வசம் விஷயம் செல்வது அறவே பிடிக்கவில்லை. எனவே அந்த நினைப்பை அடியோடு கைவிட்டாள். ‘தன் மாமாவை விட, முத்துப்பாண்டியை விடவா வந்தவன் மோசமாக இருந்துவிடப் போகிறான்?’ என்ற நினைப்பு ஒரு அசட்டு தைரியத்தைக் கொடுத்தது.

ஆனால் வந்திருப்பவன் எத்தனை மோசமானவன், கெட்டவன் என அவளுக்குத் தெரியாதே. தெரிய வருகையில் என்ன செய்வாளோ?

தன் கையில் இருந்த அவனது கார்டைப் பார்த்தாள். அது அவனது அலுவலக கார்ட் என்பது புரிந்தது. அந்த கார்டின் தரத்தை வைத்தே அவன் எப்படிப்பட்டவன், அவனது உயரம் என்னவாக இருக்கும் என அவளால் ஓரளவுக்கு கணிக்க முடிந்தது.

வைஷாலி அந்த கார்டைப் பார்க்கவே, தானும் பார்த்தவள், “இதை எதுக்குடி நம்மகிட்டே கொடுத்துட்டு போயிருக்கான்?” ரூபிக்கு மூளை மொத்தமாக வேலைநிறுத்தம் செய்துவிட்ட உணர்வு.

“நம்மளை அங்கே போய் பார்க்க வரச் சொல்லி இருக்கான்னு நினைக்கறேன்” வைஷாலி சொல்ல, அதிர்ந்து போனாள்.

“என்னடி சொல்ற? அங்கேயா? எதுக்கா இருக்கும்? ஹையோ... எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சால் என்ன ஆகும்னு தெரியலையே. அதைவிட, இப்போ இன்டர்வியூ பத்தி கேள்வி கேட்க கால் பண்ணுவாங்க. நாம அட்டன் பண்ணலைன்னா என்ன நினைப்பாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷாலு...” சற்று நடுக்கமாகவே சொன்னாள்.

வைஷாலிக்கும் உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும், அவள் வீட்டுப்பக்கம் முரடர்களையே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அத்தனை கலங்கிவிடவில்லை. ‘என்னவென பார்த்துவிட்டு, பிறகு முடிவு செய்து கொள்ளலாம்’ என நினைத்தாள்.

“ரூபி... நாம ஏதாவது செய்யலாம்” அவளது பதட்டத்தை குறைக்க முயன்றாள்.

“நம்மகிட்டே பத்து பைசா கிடையாது, நம்ம ஃபோனும் அவனோட போய்டுச்சு. இப்போ என்ன செய்யறது?” வைஷாலிக்கும் அந்த கவலை இருக்கவே செய்தது. சரியாக அந்த நேரம் பெட்ரோல் பங்கில் இருந்து வந்த ஒருவன், விபத்தில் சிக்கிய பெண்ணின் கைப்பை, உணவுப்பை என அனைத்தையும் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தான்.

அதே நேரம் அங்கே ஒரு போலீஸ் வாகனம் வர, அதில் இருந்து இரண்டு போலீஸ்க்காரர்கள் இறங்கினார்கள். அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என இரு பெண்களுக்கும் புரிய, “அண்ணே... ஒரு நிமிஷம் எங்க கூட இருக்கீங்களா?” வந்தவனிடம் கேட்க, அவனும் சம்மதித்தான்.

எப்படியும் போலீஸ் தங்கள் பெட்ரோல் பங்குக்கு வருவார்கள் என்பதால், அவன் ஓடி ஒளிய விரும்பவில்லை. போலீஸ் மருத்துவமனைக்குள் செல்ல, அவர்கள் பின்னாலேயே இவர்களும் சென்றார்கள்.

வந்த போலீஸ், ரிசப்ஷனில் கேட்டு, இவர்களிடம் அவர்கள் திரும்ப, நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்லி, அந்த பெண்ணின் உடைமைகளை அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள்.

“உங்க ட்ரஸ் எல்லாம் ரத்தமா இருக்கே... நீங்க எப்படிப் போவீங்க?” அவர்களிடம் எல்லாம் விவரம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கேட்டார். இப்பொழுது விபத்து நடந்தவர்களுக்கு உதவி செய்தால், அவர்களை குற்றவாளிபோல் கேள்வி கேட்டு குடையக் கூடாது என்ற உத்தரவு இருக்கவே அப்படியே செயல்பட்டார்கள்.

“நீங்க வந்த வண்டியை எங்கே?” அவர் கேட்க,

‘இவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாமா?’ என எண்ணிய வைஷாலி தன் முடிவை மாற்றிக் கொண்டாள். கூடவே கையில் இருந்த கார்டையும் மறைத்தாள். தேவையில்லாமல், நிலைமையின் தீவிரம் புரியாமல் அவர்களை உள்ளே இழுக்க மனம் சம்மதிக்க மறுத்தது.

ஏனென்றால் கோபாலிடம் வரும் விஷயங்களை அவன் எந்த அளவுக்கு திரித்து, மறித்து என தனக்கு சாதகமாகவும், வருபவர்களுக்கு பாதகமாகவும் திருப்புவான் என அவளுக்குத் தெரியும். அதையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவள். எனவே வைஷாலியிடம் அத்தனை நிதானம் இருந்தது.

ரூபிக்கு அந்த காவலர்களிடம் பேசக் கூட கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வைஷாலிக்கு போலீஸ் முதல், அடியாள் துவங்கி அரசியல்வாதி வரைக்கும் பார்த்தவள் என்பதால் போலீசைப் பார்த்து பயப்படவில்லை.

“அவங்க எங்களை இறக்கிவிட்டுட்டு உடனே போய்ட்டாங்க சார். வழியில் நிறுத்தி ஏறியதால் அது யார் என்ற விவரம் எல்லாம் எங்களுக்குத் தெரியலை” வேகமாகச் சொன்னாள்.

“ஏட்டையா, அந்த பொண்ணோட பேகில் இருந்து ஏதாவது உபயோகமா கிடைச்சதா?” இன்ஸ்பெக்டர் ஏட்டிடம் கேட்க,

“அந்த பொண்ணோட ஆபீஸ் ஐடி கிடைச்சிருக்கு சார். அதில் எமெர்ஜென்சி நம்பர் கொடுத்திருந்தாங்க, அதுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அந்த பொண்ணோட வீடு இங்கே பக்கத்தில்தானாம், அவங்க ஹஸ்பன்ட் இப்போ வர்றதா சொன்னார்” ஏட்டைய்யா சொல்ல, அதை அனைவருமே கேட்டுக் கொண்டார்கள்.

“சார் நாங்க போகலாமா?” வைஷாலி கேட்டாள்.

“ம் ஆமா, நீங்க இங்கே இருக்கணும்னு இல்லை. நாங்க கூப்ட்டா மட்டும் நீங்க ஸ்டேஷனுக்கு வர வேண்டி இருக்கும்” இன்ஸ்பெக்டர் சொல்ல, இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி.

“அப்போ நானும் கிளம்பட்டுமா சார்?” அந்த பெட்ரோல் பங்க் பையன் கேட்க,

“நீ போப்பா, பங்கில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை எல்லாம் நாங்க பார்க்க வர்றோம்” அவர் சொல்ல, அந்தப் பையன் கிளம்பினான்.

அவன் பின்னாலேயே ஓடி வந்த வைஷாலி, “அண்ணே... எங்க வண்டி...?” அவனிடம் கேட்டாள்.

“ரெண்டு வண்டியையும் அங்கேதான் நிப்பாட்டி வச்சிருக்கோம். வந்து எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, இப்பொழுது இரு பெண்களுக்குமே அந்த வண்டி அவசியமாக இருந்தது. அது இருந்தால் எதையாவது செய்யலாம் எனத் தோன்ற அப்படியே நின்றார்கள்.

“வண்டியை எடுக்கணுமா மேடம்? நான் ஸ்கூட்டியில் தான் வந்திருக்கேன், என் வண்டியை எடுத்துட்டு போய்ட்டு, உங்க வண்டியை எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, ஒரு பெரும் நன்றியோடு அதை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

திரும்பி வந்து அவன் வண்டியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, ரூபியின் வண்டியில் இருவரும் கிளம்பினார்கள்.

“ஷாலு, இப்போ எங்கே போறோம்?” அவளிடம் கேட்டாள்.

“என் வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திட்டு, அவன் சொன்ன அட்ரசுக்குப் போறோம்” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் பேசவில்லை. நிஜத்தில் அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை என அவர்களுக்குத் தெரியுமே.

இருவரும் வைஷாலியின் வில்லாவுக்குச் செல்ல, அவர்களை இப்படி இரத்தம் உறைந்த ஆடையில் பார்த்துவிட்டு, அருணா பயந்து போனாள்.

“பாப்பா... என்ன இது? ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? எங்கேயாவது அடி பட்டிருக்கா? இருங்க நான் உடனே ஐயாவுக்கு கால் பண்றேன்” என்ற அருணா தன் அலைபேசியை எடுக்க ஓடினாள்.

“அக்கா, அக்கா... ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க” என்றவள் அவளைத் தடுத்தாள்.

“எங்களுக்கு எதுவும் இல்லை, நாங்க போன இடத்தில் ஒரு விபத்து, அவங்களுக்கு உதவி செய்யப் போனதில் உருவான இரத்தம்தான் இது. மற்றபடி எதுவும் இல்லை. நீங்க அவசரப்பட்டு அப்பாவுக்கு எதுவும் சொல்லிடாதீங்க” அவளிடம் சொன்னாள்.

“நிஜமா வேற எதுவும் இல்லையே பாப்பா?” மீண்டும் கேட்டாள்.

“நான் குளிச்சுட்டு வந்த பிறகு நீங்களே பாருங்க. இப்போ கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க” என்றவள், “ரூபி, நீ போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்து போ...” அவளிடம் சொன்னாள்.

அருணா கொண்டு வந்த தண்ணீரை இருவரும் குடித்து முடிக்கவே, அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் குளித்து வேறு உடைக்கு மாறிக் கொண்டார்கள்.

“அக்கா, எனக்கு உங்க ஃபோன் வேணுமே...” என்றவாறு அவளது அலைபேசிக்காக கை நீட்டினாள். அந்த அலைபேசி அவளது அப்பா பைரவன் வாங்கிக் கொடுத்ததுதான் என்பதால், எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் அவளிடம் கொடுத்தாள்.

“அக்கா, எங்க ஃபோனை நாங்க இன்டர்வியூ போன இடத்தில் வாங்கி வச்சுட்டாங்க. அதனால்தான் உங்க ஃபோனை வாங்கிட்டுப் போறேன். அப்பா ஃபோன் பண்ணா, இந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லுங்க” என்றவள் வீட்டில் இருந்து கொஞ்சம் பணம், தன் கைப்பை என எடுத்துக் கொண்டாள்.

அருணா மேலே குடைந்து எதையும் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காகவே வேகமாக வெளியேறினாள்.

இருவரும் வேகமாக வெளியே வர, “ரூபி, உங்க வீட்டுக்கும் கூப்ட்டு நான் சொன்ன அதே கதையை அவங்ககிட்டேயும் சொல்லு. இது ரிசப்ஷன்ல இருக்கற நம்பர்ன்னு சொல்லு...” அவளது கரத்தில் அலைபேசியை கொடுத்தவாறே சொன்னாள்.

“ஷாலு... எப்படிடி இப்படியெல்லாம் யோசிக்கற? எனக்கு பதட்டத்தில் நெஞ்சடைக்குது” புலம்பியவாறே அவள் சொன்னதைச் செய்தாள்.

“இந்த அட்ரசை மேப்ல போடு... என்னன்னு போய் பார்த்துடலாம்” என்றவாறு அவளிடம் அந்த கார்டைக் கொடுத்தாள்.

வைஷாலி வண்டியைக் கிளப்ப, ரூபி அவள் சொன்னதைச் செய்தாள். “இங்கே இருந்து ஒன் அவர் காட்டுது ஷாலு...” அவள் சொல்ல, வண்டியை செலுத்தத் துவங்கினாள். உள்ளுக்குள் அத்தனை பதட்டமாக இருந்தாலும், முயன்று தன்னை கட்டுப்படுத்தியவாறே சாலையில் கவனமானாள்.

இங்கே இப்படி என்றால், தன் காருக்குள் இருந்த சர்வஜித்துக்கு கார் சீட்டில் சிந்தி இருந்த ரத்தத்தைப் பார்த்து அவனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

‘அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என் காரை வழி மறிச்சு, என் காரிலேயே ஏறுவாளா? அவளை விடப் போவதில்லை’ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அவன் புகைக்கும் விதத்தை வைத்தே அவனது டென்ஷனை உணர்ந்த ஹரீஷ் வாயைத் திறக்கவே இல்லை.

கார் அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்குச் செல்ல, “கார் அப்படியே இருக்கட்டும்” பின்னால் திரும்பி ரத்தத்தைப் பார்த்தவாறே அவனிடம் உறுமிவிட்டுச் சென்றான். அவன் சொன்ன விதத்திலேயே அவன் செய்யக் காத்திருப்பது இன்னது என அவனுக்குப் புரிந்து போனது.
 
  • Love
Reactions: Shanbagavalli

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
அந்த பெண்களின் கைப்பைகள், ஃபயில்கள் அனைத்தும் பின்னால் இருக்க, செக்யூரிட்டியிடம் சொல்லி அவற்றை எடுத்து உள்ளே கொண்டு போய் வைக்கச் சொன்னான். சர்வஜித்திடம் எதையாவது பேசி வாங்கிக் கட்டிக்கொள்ள அவன் தயாராக இருக்கவில்லை.

சர்வஜித் புதிதாக வாங்கி இருந்த, அந்த கெமிக்கல் ஆலையில் ஓபன் இன்டர்வியூ நடப்பதாக இருக்கவே, அங்கே கூட்டம் அலைமோதியது. எப்படியும் நிறையப்பேர் வருவார்கள் என கணித்து இருந்ததால், அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் கச்சிதமாகவே செய்து இருந்தார்கள்.

தன் அறையில் சென்று அமர்ந்தவன், தன் மடிக் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்பொழுது எதிரில் இருந்த அந்த மிகப்பெரிய தொலைக்காட்சியில் சிசிடிவியையும் கண்காணித்துக் கொண்டே இருந்தான்.

நேரம் சென்றுகொண்டே இருக்க, ஹரீஷுக்கு அந்த பெண்களைப்பற்றி அவனிடம் கேட்பதா? வேண்டாமா? என்ற தடுமாற்றம். அவன் யோசிக்கையிலேயே அவனது அலைபேசிக்கு அழைப்பு வர, “சொல்லுங்க...” என்றான்.

“சார்... எம்டியைப் பார்க்க வேண்டி ரெண்டு பொண்ணுங்க வந்து வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வந்து ரெண்டுமணி நேரம் ஆகுது. சார் இன்னைக்கு இங்கே வர மாட்டாங்கன்னு சொல்லியும் வெயிட் பண்ணிட்டே இருக்காங்க.

“அதோட... அவங்க வந்திருக்கறதா அவர்கிட்டே சொல்லச் சொல்லி சொல்றாங்க. எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, அதான் உங்களுக்கு கூப்ட்டேன்” அப்படியெல்லாம் சர்வஜித்திடம் பேசிவிட முடியாது என அவளுக்குத் தெரியுமே.

பெண்களிடம் சொல்லியும், அவர்கள் கேட்காமல் போகவேதான் அவள் ஹரீஷுக்கு அழைத்துவிட்டாள்.

“ஓ... அங்கே வந்திருக்காங்களா? வெயிட் பண்ணுங்க, நான் சொல்றேன்” என்றவன் இதை சர்வஜித்திடம் எப்படிச் சொல்வது என யோசனையானான்.

அங்கே இருக்கும் இரு பெண்களில் ஒருத்தி ரூபி... அப்படி இருக்கையில் கையைக் கட்டிக்கொண்டு அவனால் இருக்க முடியவில்லை. மதியம் உணவு வேளையும் கடந்து நேரம் சென்றுகொண்டே இருக்க, அதற்கு மேலே அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை.

சர்வஜித்தின் அறைக்கதவை தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, கேள்வியாக அவனைப் பார்த்தான்.

“ரூபி... ம்கும்... அந்த பொண்ணுங்க நம்ம பெயிண்ட் கம்பெனியில் வெயிட் பண்றாங்களாம். வந்து மூணுமணி நேரத்துக்கும் மேலே ஆகுது” என்றவன் அவன் ஏதாவது சொல்வானா? என்பதுபோல் அவன் முகம் பார்த்தான்.

அவன் பெயரைச் சொன்ன விதம், தடுமாறி அதை மாற்றியது, இப்பொழுது தன் முன்னால் எதிர்பார்ப்பும், சிறு கவலையுமாக அவன் நின்றது என அனைத்தையும் சர்வஜித்தின் விழிகள் படம் பிடித்தன.

“இருக்கட்டும்...” என்றவன், நீ போகலாம் என்பதுபோல் தன் வேலையைத் தொடர்ந்தான். ஆனால் ஹரீஷோ முன்வைத்த காலை, பின்வைப்பதில்லை என்பதுபோல், அங்கேயே நிற்க, ‘சொன்னேனே’ என அவனை அழுத்தமாகப் பார்த்தான்.

சர்வஜித்தோ அந்த பெண்களை கதற விடுவது என முடிவெடுத்த பிறகு பின்வாங்குவானா என்ன? ஆனால் ஹரீஷ் அசையாமல் போகவே, “கொஞ்சம் கன்சிடர் பண்ணலாமே...” அவன் சொல்ல, சர்வஜித் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் அவனையே பார்த்தான்.

‘இவன் இப்படி இல்லையே...’ என்பதுதான் அவனது யோசனையாக இருந்தது. ஹரீஷுக்கு ‘பெண்களிடம் அவன் தவறாக நடந்து கொள்வான் என்ற பயம் எல்லாம் இல்லை. மாறாக அவர்களை எப்படி கஷ்டப்படுத்துவானோ?’ என்றுதான் உள்ளுக்குள் ஓடியது.

அவனோடு சில வருடங்களாக இருக்கிறான். அவனுக்கு கீழே நூற்றுக்கணக்கில் இல்லை, ஆயிரக்கணக்கில் பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அவனது கம்பெனி விளம்பரப்படங்களில் எல்லாம் எத்தனையோ நடிகைகள், மாடலிங் மங்கைகள், நவ நாகரீக யுவதிகள் என நடிக்கிறார்கள்.

அவர்களை எல்லாம் நிமிர்ந்து நேருக்கு நேராக ஒரு பார்வை பார்த்ததாக கூட அவனுக்கு நினைவில்லை. எத்தனையோ பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் தங்கள் பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க முயன்றார்கள்.

அவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக கூட அவன் கண்டுகொள்ளவே இல்லை. அப்படி இருக்கையில் இந்த பெண்களை தவறாக ஒரு பார்வை கூட பார்க்க மாட்டான் என அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவர்களை கஷ்டப்படுத்த முடிவெடுத்துவிட்டால், அதில் இருந்து நிச்சயம் பின்வாங்க மாட்டான் எனப் புரிந்ததாலேயே பயந்தான்.

அதுவும் கஷ்டப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வான் என நினைக்கையிலேயே மனதை என்னவோ செய்தது. அதில் வைஷாலி மட்டும் இருந்திருந்தாலே வருந்தி இருப்பான். ஆனால் அதில் ரூபியும் இருக்கையில் எந்த நிலையிலும் அவளை அப்படி விட்டுக் கொடுத்துவிட்டு அவனால் நிற்க முடியாது.

“ஹரீஷ்...” அடிக்குரலில் அவன் கர்ஜித்தான்.

அவனது கோபத்தில் பாதிக்கப்படாமல் ஆழமாக மூச்செடுத்தவன், “நான் இதுவரை எனக்காக எதையுமே கேட்டது இல்லை சார். முதலும் கடைசியுமாக ஒன்றைக் கேட்கிறேன், அவங்களை விட்டுடுங்க ப்ளீஸ்...” என்றான்.

சில பல நிமிடங்கள் அவனை அழுத்தமாகப் பார்த்தவன், “அவங்களை இங்கே அழைச்சுட்டு வர ஏற்பாடு செய்” என்று அவன் சொல்ல, சர்வஜித் இப்படிச் சொன்னதே போதும் என்பதுபோல் ஆசுவாசமானான்.

“இதோ... இப்போவே வரச் சொல்றேன்...” என்றவன், வேகமாக வெளியே சென்றான். தன் அலைபேசியை எடுத்து, காவியாவுக்கு அழைத்தான்.

“காவியா அவங்களை இங்கே கிளம்பி வரச் சொல்லுங்க. இந்த கம்பெனி அட்ரஸ் உங்களுக்குத் தெரியும்தானே?” அவளிடம் கேட்டான்.

“எஸ் சார்...” என்றவள் அலைபேசியை வைக்கப் போனாள்.

“அவங்க லஞ்ச் சாப்ட்டாங்களா?” வேகமாகக் கேட்டான்.

அவனது இந்த கேள்வியில் சற்று புருவம் நெரித்தாலும், “நோ சார்...” அவள் சொல்ல, எதுவும் சொல்லாமல் அவன் அலைபேசியை வைத்துவிட்டான்.

காவியாவும் அலைபேசியை வைத்தவள், வைஷாலியை அழைத்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்தைச் சொல்ல, அதைக் கேட்டவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. ஆனாலும் அது கோபப்படும் நேரம் இல்லை என்பதை புத்தி இடித்துரைக்க, ரூபியையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

அவள் சொன்ன இடம், இன்று தாங்கள் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருக்க வேண்டிய இடம். அதுவும் அது வைஷாலியின் வீட்டுக்கு அருகர் இருந்தது. அங்கே இருந்து இவ்வளவு தூரம் இருந்த இந்த அலுவலகத்துக்கு தங்களை அவன் வேண்டும் என்றே அலைய விட்டிருப்பது புரிந்தது.

உள்ளுக்குள் ஒருமாதிரி கோபம் கொந்தளிக்க, அது கோபப்படும் நேரமில்லை எனப் புரிய அங்கிருந்து கிளம்பினார்கள்.

விஷயம் தேர்ந்த ரூபியும், “நம்மளை அங்கேயே வரச் சொல்லி இருக்கலாமே... என்னடி இது? எனக்கு என்னவோ பயமா இருக்கு ஷாலு” என்றாள்.

“அங்கே இன்னைக்கு இன்டர்வியூ நடக்குது, அதுவும் ஓபன் இன்டர்வியூ. எதுவும் தப்பா நடக்காது வா...” என அவளுக்கு தைரியம் சொல்லி அழைத்துச் சென்றாள்.

அவர்கள் அங்கே இருந்து வந்து சேர்கையில் அப்பொழுது அங்கே கம்பெனியில் கேண்டிடேட் அனைவரும் வடிகட்டப்பட்டு, இறுதியாக பத்துபேர் மட்டும் எஞ்சி இருந்தார்கள். அப்பொழுதே நேரம் மாலை ஐந்தை நெருங்கி இருந்தது.

காலையில் பதட்டத்தில் கொஞ்சமாக உண்டது. அதற்குப் பிறகு அலைச்சல், பலமணிநேர காத்திருப்பு, மதியம் உண்ணவும் இல்லை. மீண்டுமாக ஒருமணி நேரத்துக்கும் மேலான பயணம் என களைத்துப் போயிருந்தார்கள்.

அவர்கள் வரவே, அவர்களை எதிர்கொண்டான் ஹரீஷ். “இந்தாங்க, இதைக் குடிங்க...” என்றவன் இருவருக்கும் வாங்கிவர வைத்திருந்த ஃப்ரஷ் ஜூசைக் கொடுத்தான்.

“இல்ல சார், வேண்டாம்...” வைஷாலி மறுக்க, ரூபி அவன் முகத்தைக் கூட ஏறிட்டும் பார்க்கவில்லை. அவனைப் பார்க்கையில் எல்லாம் அடிமனதில் உருவாகும் அந்த உணர்வு... அதைத் தடுக்க முடியாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நின்று இருந்தாள்.

“நீங்க மதியமும் சாப்பிடலை தானே, இதை மட்டுமாவது குடிங்க” தான் இப்படிச் செய்வதை சர்வஜித் பார்த்துக் கொண்டிருக்க நூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிந்தே செய்தான். அவர்களது களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரியவே கொஞ்சம் அழுத்திச் சொன்னான்.

அதில் ரூபிக்கு கோபம் வர, “அதான் வேண்டாம்னு சொல்றோம் தானே” சற்று எரிச்சலும் கோபமும் கலந்த குரலில் சொன்னாள்.

“இல்ல...” அவன் எதையோ சொல்லப் போக,

“என்ன இதில் எதையாவது கலந்து கொடுத்து எங்களை ஏதாவது பண்ணலாம்னு ப்ளான் பண்றீங்களா?” ரூபி வெடுக்கென கேட்டு வைத்தாள்.

“ஷ்... ரூபி...” தோழியை அடக்கியவள், “சாரி சார்... தேங்க்ஸ்... ஆனா எங்களுக்கு எங்க திங்க்ஸ் எல்லாம் கிடைத்தால் போதும், நாங்க கிளம்பிடுவோம்” வைஷாலி சொல்ல, அதை அவன் முடிவு செய்ய முடியாதே.

“ஒரே நிமிஷம் இருங்க...” என்றவன் உள்ளே சென்று ஒரு காபி கப்போடு வந்தவன், அவர்களுக்கென வாங்கிய ஜூஸில் இருந்து பாதிப், பாதி அந்த கப்பில் ஊற்றியவன், அதை வேகமாக குடித்தான்.

“ஒரு பத்து நிமிஷம் இப்படி வெயிட் பண்ணுங்க, எனக்கு எதுவும் ஆகலை என்பதை கன்ஃபாம் பண்ணிட்டு, இந்த ஜூசைக் குடித்த பிறகு சாரைப் பார்க்கப் போகலாம்” அவன் சொல்ல, ரூபிக்கு அத்தனை கோபமாக வந்தது.

“நீங்க இப்படிப் பண்ணா, நாங்க உங்களை நல்லவன்னு நம்பிடுவோமா? ஒரு ஹெல்ப் பண்ணதுக்குப் போய், என்னவோ கொலைக்குற்றம் செஞ்ச மாதிரி பிஹேவ் பண்றீங்க? இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லதுக்கே இல்ல சொல்லிட்டேன். நாங்க போலீசுக்குப் போவோம்...” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே,

“ஏன் போயிருக்க வேண்டியது தானே... இவர்களை யார் தடுத்ததாம்? போலீசோட வந்து திங்க்ஸ் எல்லாம் வாங்கிக்கச் சொல்லு ஹரீஷ். அவங்க போகலாம்...” தன் இரு கரங்களையும் பேன்ட் பாக்கெட்டுக்குள் திணித்தவன், கால்களை அகட்டி நின்றான் சர்வஜித்.

அவனது பேச்சில் பெண்கள் பயந்தார்களோ இல்லையோ, ஹரீஷ் நிச்சயம் பயந்தான். பெண்களுக்கு சர்வஜித்தைப் பற்றி தெரியாது, ஆனால் அவனுக்குத் தெரியுமே.

சர்வஜித்தின் கண்ணை மறைத்து கூலிங்கிளாஸ் இருக்க, அவன் என்ன நினைக்கிறான் என அவனது கண்களை வைத்து அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் நின்ற தோற்றம், ‘வந்து பார்...’ என இருக்க, பெண்கள் இருவரும் நிச்சயம் மிரண்டார்கள்.

அவனை அங்கே பார்த்தவுடன் ரூபி தன் வாயை கப்பென மூடிக் கொண்டாள். வைஷாலி தன் தைரியத்தை திரட்டிக் கொண்டவள், “சார்... நாங்க ஒரு ஹெல்ப் பண்ணோம், அது உங்களுக்கு இடைஞ்சலா ஆகிடுச்சு. நாங்க இப்படி ஆகும்னு நினைக்கலை. ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பில் செய்துட்டோம்.
 
  • Love
Reactions: Shanbagavalli

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
“அவங்களை நம்பி கணவன், குழந்தைகள்ன்னு ஒரு குடும்பமே இருக்கலாம். அவங்க எல்லாம் அனாதரவா நின்றுவிடக் கூடாதே என்ற ஒரே ஒரு நினைப்பு மட்டும்தான் அந்த நேரம் என்கிட்டே இருந்தது. மற்றபடி உங்களுக்கு கஷ்டம் கொடுக்கணும்னு நான் நினைக்கவே இல்லை.

“உங்களோட கஷ்டத்துக்கு, உங்களை கஷ்டப்படுத்தியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இதற்கு மேலே என சொல்லன்னு எனக்குத் தெரியலை. உங்களை ப்ளாக் செய்தது நான்தான், இவ இல்லை... சோ... இவளை மட்டுமாவது அனுப்பிடுங்க” வைஷாலி அவனிடம் பேசினாள்.

சர்வஜித் திமிரானவனாக அவளது கண்களுக்குத் தெரிந்தானே தவிர, கயவனாகத் தெரியவில்லை. அந்த ஒரு நினைப்பால் வைஷாலி அவனிடம் பேசினாள்.

“ஷாலு... உன்னை விட்டு நான் போக மாட்டேன்” என்ற ரூபி, தோழியின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள். எதிரில் நின்றவனது தோற்றம் அவளை வெகுவாக அச்சப்படுத்தியது. ஹரீஷை சுலபமாக கையாளத் தெரிந்த அவளுக்கு, சர்வஜித்தை பார்க்க கூட பயந்து வந்தது.

“உங்களை விடறதா யார் சொன்னது?” என்றவன், தன் கரத்தை நீட்ட, ஹரீஷ் அவன் கரத்தில் சிகரெட்டைக் கொடுத்தான். அதைப் பற்ற வைத்தவன், புகையை நெஞ்சுக்குள் நிரப்பி, நிதானமாக வெளியேற்றினான்.

ரூபிக்கு அந்த புகை சின்ன இருமலைக் கொடுக்க, சிகரெட் வாசனை வைஷாலிக்குப் பிடிக்கும் என்பதால் அவளிடம் எந்த மாறுதலும் இருக்கவில்லை. அந்த வாசனை அவளை மயக்க, அவன் அந்த சிகரெட்டை புகைக்கும் விதத்தைப் பார்த்தவள், தன்னை மீறி ரசித்து தடுமாறினாள்.

“சார்... நான் என்ன செய்தால் உங்க கோபம் போகும்? அதையாவது சொல்லுங்க, செய்யறேன்” எப்படியும் அவன் விட மாட்டான் எனத் தெரிந்த பிறகு, அதற்கு என்ன தீர்வு என்றுதானே பார்க்க முடியும். அதைத்தான் வைஷாலியும் செய்தாள்.

“கோபமா? கோபமா? கோபமா?” என்றவன் கேட்ட விதத்தில், ‘உன்மேல் கொலை வெறியில் இருக்கிறேன்’ எனச் சொல்லாமல் சொன்னது. அவன் கேட்ட விதத்தில், ரூபி தோழியின் பின்னால் ஒடுங்கினாள்.

அதே நேரம் ஹரீஷோ என்ன செய்வது எனத் தெரியாமல் நின்றிருந்தான். தான் இப்பொழுது இடையிட்டுச் செய்யும் எதுவும் அங்கே நன்மையை விளைவிக்கப் போவதில்லை என்ற புரிதல் வந்ததால் ஏற்பட்ட நிதானம்தான் அது.

தன் பேச்சு அந்த நேரம் ஏதும் எதிர்விளைவை கொடுத்துவிடக் கூடாது எனத் தோன்ற அமைதியாகவே நின்றான். சர்வஜித்தோ, தன் விரலை சொடுக்கியவன், பெண்கள் கையில் இருந்த ஜூசை குடிக்குமாறு செய்கையில் சொன்னான்.

‘அவன் அதை குடிக்காமல் விடப் போவதில்லை’ எனப் புரிய, வேகமாக அதைப் பருகினார்கள்.

“என்னோட கோடி ரூபாய் காரை அவ்வளவு ஈசியா ஆம்புலன்ஸ் ஆக்கிட்ட. அதில் ஒரு சின்ன தூசி இருந்தாலே நான் சகிச்சுக்க மாட்டேன், ஆனா அதில் ப்ளட்... நீ என்ன பண்ற, நீயே போய் அந்த ரத்தத்தை துடைக்க வேண்டிய திங்க்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து, நீட்டா துடைக்கற.

“அது மட்டும் இல்லை... காரை நீட்டா துடைச்சுட்டு, அந்த ரத்த வாடை வராமல் இருக்க என்ன செய்யணுமோ அதைச் செய்யற. அதுதான் நீ செய்ய வேண்டிய வேலை... வேலையை முடிச்சுட்டு, உன் திங்க்ஸ் எல்லாத்தையும் என்கிட்டே வந்து வாங்கிக்கோ” என்றவன் ஹரீஷைப் பார்த்தான்.

நிஜத்தில் இப்படி ஒரு விஷயத்தைச் சொல்வான் என ஹரீஷே எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் அவன் அதைச் சொன்ன பிறகு எதிர்த்து எதுவும் செய்ய முடியாது என்பதால் அமைதியானான்.

“ஹரீஷ் வண்டியைக் காட்டு...” என்றவன் தன் அறைக்குச் சென்றுவிட, ஹரீஷ் அவன் சொன்னதைச் செய்தான். காரை கிளீன் செய்ய அவன் சொன்னதில் வைஷாலிக்கு பெரிதாக எந்த மறுப்பும் இருக்கவில்லை.

‘இதோடு போனதே’ என்ற எண்ணம்தான் முதலில் எழுந்தது. ஆனால் அவள் சர்வஜித்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டாள் என்பதை அப்பொழுது அவள் உணரவே இல்லை. காரைக் கிளீன் செய்ய தேவையானவற்றை வாங்கி வந்து, இரு பெண்களும் காரை கிளீன் செய்யத் துவங்கினார்கள்.

காரின் சீட்டிலும், கீழேயும் ரத்தம் சிந்தி உறைந்திருக்க, கறுப்பு நிறக் காருக்கு எதிராக உள்ளே வெள்ளை நிறத்தில் இன்டீரியர் பளபளத்தது. அதில் இருந்த ரத்தத்தை சுத்தமாக துடைக்கவே ஒரு வழியாகி விட்டாள்.

ஆனாலும் பழைய பளபளப்பை அவளால் கொண்டு வர முடியவில்லை. காரை கிளீன் செய்துவிட்டு, சர்வஜித்திடம் சொல்ல, அவனோ ஹரீஷை பார்க்க வேண்டி அனுப்பி வைத்தான். சர்வஜித்தைப் பற்றி அவனுக்குத் தெரியாதா என்ன?

“இன்னும் கொஞ்சம் கிளீன் பண்ணுங்க...” அவன் சொல்ல, அவன் சொன்னதைச் செய்தார்கள். ஆனால் சர்வஜித் கிட்டத்தட்ட பத்து முறைக்கும் மேலே அவர்களை அந்தக் காரை துடைக்க வைத்தான்.

இது தன்னால் நேர்ந்தது என்பதால் வைஷாலி, ரூபியை எதையும் அதிகம் செய்ய விடவே இல்லை. “நீ வெளியே மட்டும் துடைச்சு விடு, உள்ளே எல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றவள் சுத்தம் செய்தாள்.

அந்த ரத்தக்கறை போக வேண்டி, சில அடர் தன்மை உடைய லிக்விட் எல்லாம் உபயோகிக்க வேண்டி வந்தது. அது வைஷாலியின் மென்மையான கரத்தின் தோலை பதம் பார்த்தது மட்டும் உண்மை. கை எரிச்சலும், மன உளைச்சலுமாக சோர்ந்து போனாள்.

வைஷாலியின் உள்ளங்கை எல்லாம் தோல் வழண்டு போனது. அந்த அளவுக்கு அவளை வேலை வாங்கினான். கொஞ்சம் கூட இரக்கம் காட்டவே இல்லை. ‘இதோடு போனதே’ என எண்ணிய வைஷாலிக்கு இறுதியில் அழுகையே வரும்போல் ஆகி விட்டது.

ரூபியோ ஹரீஷை பார்வையாலேயே கடித்துக் குதறாத குறைதான். அவன்மட்டும் என்ன செய்துவிட முடியும்? எப்படியோ ஒரு வழியாக சர்வஜித் திருப்தி அடைகையில் நேரம் இரவு எட்டு மணியைக் கடந்திருந்தது.

அருணாவின் அலைபேசியில் இருந்தே இரு பெற்றவர்களுக்கும் அழைத்து பேசிவிட்டதால் அவர்களும் சமாதானமாகி விட்டார்கள். ரூபி அன்று இரவு வைஷாலியோடு அவள் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டாள்.

அப்படிச் சொல்லவில்லை என்றால், ரூபியின் அப்பா உடனே அவர்கள் அலுவலகத்துக்கு கிளம்பி வருவதாகச் சொல்லவே அவ்வாறு சொன்னாள். அந்த இரவு நேரத்தில் மகள் தனியாக அவ்வளவு தூரம் பயணம் செய்து வர வேண்டாமே என அவர் நினைக்கவே, ரூபி இவ்வாறு சொல்லி அவரைத் தடுத்துவிட்டாள்.

இல்லையென்றால் அவர் நிச்சயம் அங்கே வந்து நின்று இருப்பார். அதனால் இங்கே பெண்கள் படும் துன்பம் யாருக்கும் தெரியாமலேயே போனது.

இறுதியாக சர்வஜித், “குட்...” எனச் சொல்லி ஹரீஷைப் பார்த்துவிட்டு முன்னால் அறைக்குச் சென்றான். அவன் செல்லவே, “நான் உங்க திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு வர்றேன்” என்றவாறு அவன் பின்னால் ஓடினான் ஹரீஷ்.

பெண்கள் இருவரும் அப்படியே அங்கேயே தரையில் பொத்தென அமர்ந்துவிட்டார்கள். வைஷாலிக்கு கண்களில் கண்ணீர் துளிர்க்க, கை எரிச்சலும், களைப்பும், சோர்வும், மன உளைச்சலும் எல்லாம் சேர, இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள்.

மூடிய விழிகளுக்குள் கடைவிழியோரம் கண்ணீர் வழிந்தது. ரூபி தோழியின் அருகே அமர்ந்து, அவள் கரத்தைப் பிடித்துப் பார்த்தாள். ஈரத்தில் கை ஊறி, கொப்பளித்து, வழண்டும் போயிருக்க, அவளுக்கு கை எரிச்சல் எப்படி இருக்கும் எனப் புரிந்தது.

“ஷாலு... ரொம்ப வலிக்குதாடி...?” என்றவாறே அவள் உள்ளங்கையில் ஊதினாள்.

“உனக்கு மட்டும் வலிக்கலையா?” என்றவள் அப்படியே அமர்ந்திருந்தாள். நிஜத்தில் ரூபியை அதிகம் எதையும் செய்ய விடாமல் தான் மட்டுமே அவ்வளவு துன்பப்பட்டாள். உள்ளங்கை மட்டுமல்ல, விரல்கள், விரல்களின் பின்னால் என தோல் எல்லாம் கூட உரிந்து இருந்தது.

தன் இருக்கையில் அமர்ந்த சர்வஜித், சிசிடிவி வழியாக அவர்களைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான். உள்ளே வந்த ஹரீஷ், அவர்களது பொருட்களுக்கு வேண்டி பார்த்து நின்றான்.

சற்று நேரத்துக்கு முன்னர், அவர்களது பொருட்களை எல்லாம் தன் அறையில் கொண்டு வந்து வைக்கச் சொல்லி அவன் சொல்லி இருக்க, அவ்வாறே செய்து இருந்தான். சர்வஜித்துக்கு அந்த நேரம் ஹரீஷின் மீது நம்பிக்கை இருக்கவில்லை.

தன் அனுமதி இல்லாமல், அவர்களது பொருட்களை எல்லாம் பெண்களிடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறு செய்தான். அது ஹரீஷுக்கும் புரியவே செய்தது.

“சார்...” என்றவாறு அங்கே இருந்த டீபாவின்மேல் இருந்தவற்றைப் பார்த்தான்.

“ம்...” என அனுமதி அளிக்கவே, அனைத்தையும் எடுத்துக்கொண்டு அவன் வெளியேறப் போக, ஒரு அலைபேசி அவன் கரத்தில் இருந்து நழுவி கீழே விழுந்தது. விழுந்த அந்த அலைபேசி, சர்வஜித்தின் காலடியில் சென்று விழ, அது ஒளிர்ந்தது.

லாக் ஸ்க்ரீனில் வைஷாலி தன் தகப்பனோடு இருந்த புகைப்படத்தை வைத்திருக்க, அதைப் பார்த்தவன் பார்த்த வண்ணம் இருந்தான். அதைப் பார்த்தவனின் மனம் சின்னதாக நடுக்கம் கொண்டது.

பகை முடிப்பான்.........