• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 7.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
பகுதி – 7.

ஹரீஷ் அவன் காலடியில் கிடந்த அலைபேசியை எடுத்துக் கொண்டு செல்ல, சர்வஜித் வேகமாக தன் மடிக் கணினியை உயிர்ப்பித்தான். அதற்குள் சேமித்து வைத்திருந்த டாக்குமென்ட் பகுதிக்குச் சென்றவன், அதை ஓப்பன் செய்ய வேண்டிய கடவுச் சொல்லைக் கொடுத்து உள்ளே சென்றான்.

அத்தனை வேகமாக, பரபரப்பாக ஆராய்ந்தவன், தான் தேடியது கிடைக்க அதைத் திறந்தான். பைரவனின் ப்ரோஃபைலுக்குள் சென்றவன் கீழே ஆராய்ந்தான். அதில் பைரவனின் மனைவி, மகள் என கொடுத்திருந்த விவரங்களைப் படித்தவன் அடுத்த நொடி ஹரீஷுக்கு அழைத்தான்.

பின்னால் பார்க்கிங்கில் அவர்கள் இருவரும் இருக்க, அங்கே செல்லப்போன நொடியில் ஹரீஷின் அலைபேசி அதிர்ந்தது. அதில் ஒளிர்ந்த சர்வஜித்தின் எண்ணைப் பார்த்தவன், கேமராவைப் பார்த்தவாறே அலைபேசியை எடுத்து காதில் வைத்தான்.

“சொல்லுங்க சார்...” என்றவனுக்கு, ‘இவன் விடப் போவதில்லை’ என்ற எண்ணம்தான்.

“ஹரீஷ்... எல்லாத்தையும் உடனே இங்கே திரும்பக் கொண்டு வா...” அவன் கட்டளையாகச் சொல்ல, ஹரீஷ் எப்படி மீற? ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன் மீண்டும் அவன் அறைக்குச் சென்றான்.

அவன் சொன்ன பிறகு வேறு அவனால் மறுக்க முடியுமா என்ன? ஹரீஷ் மீண்டுமாக அறைக்கு வர, அவனிடமிருந்த பொருட்களை வேகமாக தன் கரத்தில் வாங்கினான். அவனிடம் வெளிப்பட்ட அந்த பரபரப்பிற்கான காரணம் ஹரீஷுக்குப் புரியவே இல்லை.

“என்ன சார்? ஏதும் முக்கியமான விஷயமா?” தன்னை மீறிக் கேட்டிருந்தான்.

அவனுக்கு பதிலைச் சொல்லாமல் அவர்களது கைப்பையை விட்டுவிட்டு, அந்த ஃபயில்களைப் புரட்டினான். ரூபியின் ஃபயிலை பிரித்து வைத்தவன், வைஷாலியின் ஃபயிலையும் பிரித்து வேகமாக அதில் பார்வையை செலுத்தினான்.

வைஷாலியின் பயோடேட்டாவில் கவனம் பதித்தவன், ஒவ்வொன்றாக உன்னிப்பாக படித்துப் பார்த்தான். அவளது சான்றிதழ்கள் ஒவ்வொன்றையும் பார்த்தவன், தங்கள் கம்பெனியின் விளம்பர கட்டிங்கை அவள் வைத்திருக்க, அதையும் கையில் எடுத்துப் பார்த்தான்.

அவளது அப்பாவின் பெயர் ‘பைரவன்’ என்பதிலேயே அவனது கவனம் முழுவதும் அச்சடித்ததுபோல் பதிந்து போனது. கல்லுக்குள் ஈரம் கசிவதுபோல், ஒரு இரக்கம் அவனுக்குள் சுரக்கப் பார்க்க, பட்டென அனைத்தையும் மூடினான்.

“ஹரீஷ், இவங்க டீட்டெயிலை எடுத்து வை...” என்றவன் அனைத்தையும் மீண்டும் அவனிடம் கொடுக்க, ஹரீஷுக்கு எதுவும் புரியவில்லை.

“ஓகே சார்...” என்றவன், அவன் இதோடு விட்டதே போதும் என்பது போல் வாங்கிக்கொண்டு சென்றான். அவன் செல்லவே, சர்வஜித்தால் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஏதேதோ எண்ணங்கள் எழுந்து மேலெழ, இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான்.

மனதின் அடியாழத்துக்குள் புதைத்து வைத்த பல விஷயங்கள் முட்டி மோதிக்கொண்டு மேலேறி வரத் துடிக்க, ஆழமாக மூச்செடுத்தான். உள்ளுக்குள் ஒன்று ரணமாக தகிக்கும் உணர்வு.

வேக வேகமாக வெளியே வந்தவன், அந்த காலியான அலுவலகத்தை விட்டு வெளியே வந்தான். கால்கள் பார்க்கிங் பக்கம் நகர, ஹரீஷ் அவர்களின் உடைமைகளை கொடுத்துக் கொண்டிருக்க, பார்த்தது பார்த்தவண்ணம் நின்றான்.

அவன் குறிப்பாக யாரைப் பார்க்கிறான் என யாருக்கும் தெரியவில்லை என்றாலும் அவனுக்குத் தெரியுமே. வைஷாலியை ஒரு மாதிரி ஊன்றி கவனித்தான். அது நல்லதற்கா? கெட்டதற்கா? என்றுதான் தெரியவில்லை. குளிர்கண்ணாடி மற்றவர்கள் கண்களுக்குத்தானே அவனுக்கு இல்லையே.

அந்த நேரம் இரு பெண்களுமே தங்கள் வண்டியை ஓட்டிச் செல்லும் நிலையில் இருக்கவில்லை. களைப்பு சோர்வு, வலி, பசிமயக்கம் என கலவையான உணர்வில் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அப்படியும் எப்படியாவது இங்கே இருந்து சென்றுவிட வேண்டும் என்றுதான் இருவரும் பரபரத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் இருவரின் கரத்தையும் பார்த்துவிட்டு ஹரீஷுக்குத்தான் மனதே கேட்கவில்லை.

“கை இப்படி பொத்துப்போய் இருக்கே, இப்படியே எப்படி வண்டியை ஓட்டிட்டுப் போவீங்க?” அக்கறையாகவே கேட்டான்.

“ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுத கதையா இருக்கு” ரூபி வெடுக்கென சொல்ல, அவளிடம் அவன் எதையோ சொல்லப் போக, அந்த நேரம் அவனுக்கு அருகே ஒருவன் சென்றான். ஹரீஷின் காதுக்குள் எதையோ சொன்னவன் அவன் கரத்தில் இருந்து ரூபியின் வண்டிக் கீயை தான் வாங்கிக் கொண்டான்.

அதைப் பார்த்த பெண்கள் இருவரும் பதறிப் போனார்கள். “ஹையோ, என்ன இது? எங்க வண்டி கீ...” இன்னும் என்ன வரப் போகிறதோ என்று உள்ளுக்குள் அப்படி ஒரு பதட்டமும், பயமும் உருவானது.

“உங்க வண்டியை அவன் வீட்டில் விடுவான். நீங்க காரில் ஏறுங்க” அவன் சொல்கையில் வேறு ஒரு கார் அவர்களுக்கு அருகே சென்று நின்றது.

“இல்ல... நாங்க இந்த காரில் ஏற மாட்டோம்” வைஷாலி அத்தனை பிடிவாதமாக நின்றாள். ரூபிக்குமே உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டது.

அவர்கள் விவாதிப்பதையும், மறுப்பதையும் பார்த்த சர்வஜித், “ஹரீஷ்...” என அழைத்தவன் தலையை அசைத்தான்.

அவனது அந்த குரலுக்கே இரு பெண்களின் தேகமும் வெளிப்படையாகவே நடுங்கியது. அந்த அளவுக்கு சர்வஜித் அவர்களைப் படுத்தி எடுத்திருந்தான். இந்த இடைவெளியில் ரூபியின் வண்டியை ஒருவன் கிளப்பிக் கொண்டே சென்றிருந்தான்.

சர்வஜித்தின் பார்வை மொத்தமும் வைஷாலியின் மீதுதான் இருந்தது. தன் குரலுக்கு அவளது தேகம் வெளிப்படையாகவே நடுங்கியது அவனுக்குப் புரிய, ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். அந்த நிக்கோட்டினின் சுவை அவன் நரம்புகளில் பாய, நிதானமாக புகையை வெளியேற்றினான்.

சர்வஜித் சொல்ல வருவது ஹரீஷுக்குப் புரிய, டிரைவர் பக்க கதவைத் திறந்தவன், “நீ இறங்கு குமார்...” என்றான்.

அவன் மறு பேச்சின்றி இறங்கிக் கொள்ள, “நானே உங்களை வீட்டில் கூட்டி போய் விடறேன், இப்போ வரீங்களா?” அவர்களிடம் கேட்டான்.

“அப்படி என்ன...” ரூபி எதையோ சொல்லப் போக, வைஷாலி பட்டென அவளது கரத்தைப் பிடித்து தடுத்தாள்.

“போகலாம் ரூபி...” அதென்னவோ அவ்வளவு நேரத்தில் ஹரீஷின்மீது ஒரு நம்பிக்கை பிறந்து இருந்தது. ரூபிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்றாலும், வைஷாலியின் ஓய்ந்த தோற்றமும், கண்ணீரும் அவளை வாய் மூடச் செய்தது.

இரு பெண்களும் அமைதியாக காருக்குள் ஏறி அமர, ஹரீஷ் காரைக் கிளப்பிச் சென்றான். சர்வஜித் அப்படியே நின்று அவர்கள் சென்ற திசையைப் பார்த்த வண்ணம் இருந்தான்.

ஹரீஷ் காரை ஓட்டிச் சென்றவன், வழியில் இருந்த மருத்துவமனையின் முன்னால் காரை நிறுத்தினான். “இங்கே எதுக்கு கூட்டி வந்தீங்க? எங்களை வீட்ல விடுங்க, அது போதும். இதுக்குத்தான் நான் இவர்கூட வேண்டாம்னு சொன்னேன்” ரூபி பொருமினாள்.

“உங்க கையைப் பாருங்க... ஒரு ரெண்டே நிமிஷம்... டாக்டரைப் பார்த்துட்டு போய்டலாம்” வைஷாலியைப் பார்த்தவாறே சொன்னான். அவளோ எதையும் மறுக்கும் நிலையில் எல்லாம் இருக்கவே இல்லை.

ஆனால் கரத்தை இப்படியே வைத்துக்கொண்டு எதுவும் முடியாது என புத்தி சொன்னது. கூடவே நிச்சயம் மருத்துவரைக் கண்டோ, இல்லையென்றால் ஏதாவது மருந்து போட்டால்தான் ஆயிற்று என கை எரிச்சல் சொல்ல, தோழியை பொறுமையாக இருக்குமாறு கண்களாலேயே சொன்னாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்...” ரூபி எரிச்சலாகவே சொல்லி முகம் திருப்பிக் கொண்டாள்.

“உங்களுக்கு வேண்டாம்ன்னா போங்க, அவங்களைப் பாருங்க” தன் பொறுமையை இழுத்துப் பிடித்தவாறே சொன்னான்.

“இதுதான் பிள்ளையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டுறதா? நல்லா இருக்கு நீங்க பண்றது. செய்யறது அநியாயம், இதில் நியாயம் வேற” ரூபி அவனை முறைத்துக் கொண்டே சொல்ல, ஹரீஷ் காரிலிருந்து இறங்கி விட்டான்.

‘நான் என்ன செய்தேன்? என்னிடம் நீ கோபப்பட எந்தவிதமான நியாயமும் இல்லை’ எனச் சொல்ல எழுந்த உணர்வை அடக்கினான்.

அவன் மட்டும் என்ன விருப்பப்பட்டா இதையெல்லாம் செய்தான்? சர்வஜித்தின் நியாயங்கள் எப்பொழுதும் வேறாகவே இருக்கையில், அவன்மட்டும் என்ன செய்துவிட முடியும்? அவன் ஒன்றும் இல்லாமல் போக இருந்த பொழுது, அவனைக் கட்டி வைத்தவன் சர்வஜித் தானே. எனவே அவன்மேல் கழுத்து வரைக்கும் நன்றி விசுவாசம் இருந்தது.

தவறான எதையும் அவன் செய்யச் சொல்லப் போவதில்லை என்ற நம்பிக்கையில், அவன் கை காட்டும் இடத்தில் பாய்வது அவனுக்கு வழக்கம் தான். ஒரு நொடி கூட நின்று அவன் யோசிப்பது இல்லை. ஆனால் இன்று சர்வஜித் செய்ததில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவனது கைகளும் கட்டப்பட்டு தானே இருந்தது.

இப்பொழுது கூட சர்வஜித் பெண்களின் பயம் புரிந்து தன்னை உடன் அனுப்பி வைத்ததை எண்ணி அவன்மேல் ஒரு அபிமானம் விழுகிறதே. அப்படி இருக்கையில் ரூபி இப்படி பேசுவது அவனுக்கு கோபத்தையே கொடுத்தது.

வைஷாலிக்கோ தோழியின் நடத்தை கொஞ்சமும் புரியவில்லை. ‘இவ என்ன இவர்கிட்டே இப்படி நடந்துக்கறா? ஏன்?’ உள்ளுக்குள் ஓடினாலும் அதைக் கேட்கும் சூழல் இது இல்லை எனப் புரிய அமைதியாகிவிட்டாள்.

அவன் கீழே இறங்கிய மறு நிமிடம் ஒரு மருத்துவர் அவனைத்தேடி விரைந்து வந்தார். “பேஷன்ட் எங்கே?” அவர் கேட்க, ஹரீஷ் காரின் பின்னிருக்கையை கை காட்டினான்.

“உங்களால் இறங்கி நடந்து வர முடியுமா?” அந்த மருத்துவர் கேட்க, இரு பெண்களும் காரில் இருந்து இறங்கி விட்டார்கள். வைஷாலி அதிக வலியில் இருப்பது புரிய, ரூபியும் அடங்கிப் போனாள்.

“உங்களுக்கு என்ன பண்ணுது?” என்ற மருத்துவர், அவர்களது கரத்தைப் பார்த்துவிட்டு ஹரீஷை ஒரு பார்வை பார்த்தார்.

“என்ன ஹரீஷ்... ஆசிட் பட்டுடுச்சா?” அதைப் பார்க்கையிலேயே அப்படி இல்லை எனத் தெரிந்தும், சந்தேகமாகவே கேட்டார்.

“இல்ல... நீங்க பாருங்க” அவன் சொல்ல, இரு பெண்களையும் அழைத்துச் சென்று பரிசோதித்தார்.

“இது எப்படி ஆனதுன்னு எனக்குச் சொல்ல முடியுமா?” அங்கே இருந்த தன் அறைக்கு அழைத்துச்சென்று அவர்களை அமர வைத்தவாறு கேட்டார்.

ரூபி அது எப்படி ஆனது என்ற முழு விவரத்தையும் சொல்லாமல், வேலை செய்ததில் இப்படி ஆகிவிட்டது என்பதுபோல் சொல்ல, பொறுமையாக கேட்டுக் கொண்டார். உண்மையைச் சொல்கிறேன் எனச் சொல்லி, மீண்டும் எதையாவது இழுத்து விட்டுக்கொள்ளக் கூடாதே என்று அவ்வாறு சொன்னாள்.

“ரொம்ப கை எரிச்சல், வலி இருந்தால் நான் ஒரு இன்ஜெக்ஷன் போடறேன். மறுபடியும் தண்ணிக்குள் கை வைக்காமல் இருந்தால் ரெண்டே நாளில் கம்ப்ளீட்டா க்யூர் ஆயிடும். அப்படியே நான் ஆயின்மெண்டும் எழுதித் தர்றேன், போட்டுக்கோங்க” என்றவர் தன் வேலையில் முனைப்பானார்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
ஐந்தே நிமிடங்களில் அவர்களுக்கு ஊசி போட்டு, கொப்பளித்து, வழண்டு இருந்த இடங்களில் எல்லாம் மருந்தையும் அவரே போட்டு விட்டார். அந்த மருந்தின் குளுமை அந்த காயத்துக்கு அத்தனை இதமாக இருந்தது.

பெண்கள் இருவரும் வெளியே வர, ஹரீஷ் அவர்களை ஏற்றிக்கொண்டு காரை கிளப்பினான். “உங்க வீட்டுக்கு முதல்ல போயிட்டு, பிறகு இவங்க வீட்டில் டிராப் பண்ணவா?” ஹரீஷ் கேட்க, ரூபி அவனைப் பார்த்தாளே ஒரு பார்வை.

அவள் தன்னை உக்கிர காளியாக முறைப்பது தெரிந்தே அவளை அவன் கவனமாக தவிர்த்தான். “இவ வீட்டில் எங்களை விட்டால் போதும்” ரூபி சொல்ல, அதற்கு மேலே அவன் வாதாடவில்லை.

அவர்கள் இருவரையும் வைஷாலியின் வீட்டில் இறக்கி விடுகையில், அங்கே உணவு டெலிவரிக்கென ஒருவன் நின்று இருந்தான். பெண்கள் இருவரும் காரில் இருந்து இறங்க, அருணா வேகமாக வந்தாள்.

“பாப்பா... இந்த தம்பி என்னவோ சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்னு சொல்லுது. நீங்க எதுவும் கொண்டு வரச் சொன்னீங்களா?” வைஷாலியிடம் கேட்டாள். வைஷாலி எதையாவது வெளியே இருந்து வாங்குவதாக இருந்தால் தன்னிடம் சொல்லிவிடுவாளே என்ற எண்ணம்தான் அவளுக்கு.

அது யாரின் வேலையாக இருக்கும் என அவளுக்குப் புரிய, “நீங்க போங்கக்கா... நான் வர்றேன்” அவள் சொல்ல, அவர்களது கைப்பை, ஃபயில்கள் என அனைத்தையும் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள்.

ஹரீஷ் காரில் இருந்து இறங்கவே, “எங்களுக்கு வேண்டி அக்கா சமைச்சு வச்சிருப்பாங்க. நீங்க இதை கேன்சல் பண்ணிடுங்க. அதோட... தேங்க்ஸ்...” என்றவளுக்கு குரல் கலங்கிப் போனது. ஒரு உதவி செய்ததற்காக தான் இத்தனை கஷ்டப்படுவோம் என அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

“அது லைட்ஃபுட் தான்... ப்ளீஸ் வாங்கிக்கோங்க” அவளது கலக்கம் அவனை ஒரு மாதிரி சங்கடப்படுத்தியது. ரூபிக்கோ அவனிடம் சூடாக எதையோ திருப்பிக் கொடுக்கச் சொல்லி நாக்கு தவித்தாலும், அங்கே அருணா நிற்கவே வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“இல்ல...” வைஷாலி மறுக்கப் போக,

“அக்கா... அதை வாங்கிக்கோங்க” அவன் அருணாவிடம் சொல்ல, அவளோ வைஷாலியைத்தான் பார்த்தாள். தாங்கள் வாங்கவில்லை என்றால் ஹரீஷ் வருத்தப்படுவான் எனப் புரிய, ‘வாங்குங்க...’ என்பதுபோல் அவள் தலை அசைக்க, அருணா வாங்கிக் கொண்டாள்.

“நான் வர்றேன்... ரெஸ்ட் எடுங்க, கையைப் பார்த்துக்கோங்க” என்றவன், ரூபியை நின்று ஒரு பார்வை பார்த்துவிட்டே நகர்ந்தான். அவன் அவ்வாறு பார்க்கவே, முகத்தை வெடுக்கென திருப்பிக் கொண்டாள் ரூபி.

அவன் காரை கிளப்பிச் செல்ல, வீட்டுக்குள் வந்த பிறகுதான் அருணா அவர்களின் கரத்தைப் பார்த்தாள். “பாப்பா... கைக்கு என்ன பாப்பா ஆச்சு? காலையில் கூட விபத்தில் உனக்கு எதுவும் அடி படலைன்னு தானே சொன்ன? இதென்ன பாப்பா கொப்பளிச்சு இருக்கு?” அவள் கரத்தைப் பார்த்துவிட்டு பதட்டமானாள்.

“அக்கா... அக்கா... நான் சொல்றதைக் கேளுங்க. நான் ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்கேன். இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காதீங்க. ரொம்ப பசிக்குது... சாப்பிட ஏதாவது தாங்க” அவள் பசிக்கிறது எனச் சொன்ன பிறகு அருணா மற்றதை எல்லாம் ஓரம் கட்டினாள்.

“எல்லாம் ரெடியா எடுத்து வச்சிருக்கேன் பாப்பா. வந்து சாப்பிடு வா... நீயும் வாம்மா...” அவள் ரூபியையும் அழைத்தாள்.

அருணா அங்கே இருந்து விலகவே, “ஷாலு... வெந்நீர் போடறேன், கொஞ்சம் உடம்புக்கு ஊத்திக்கறியா? நான் ஹெல்ப் பண்றேன்” வியர்வையும், களைப்பும், சோர்வுமாக இருக்க குளித்து உடை மாற்றாமல் முடியாது என்ற நிலைதான்.

“ம்ஹும்... இல்ல வேண்டாம்...” அவள் மறுக்க,

“ஷாலு... நான் சொல்றதைக் கேளு... நான்தானே... இப்படியே கண்டிப்பா முடியாதுன்னு உனக்கே தெரியும்” ஆடை முழுவதும் மண், புழுதி, சோப்பு நுரை, வியர்வை என இருக்க, வைஷாலிக்கும் அது புரியவே செய்தது.

“இல்லடி...” தோழியே என்றாலும் அப்படியெல்லாம் அவள் உதவியை நாட முடியவில்லை.

“நீ வா...” என்றவள் பிடிவாதமாகவே அவளை அழைத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.

“ஹீட்டர் ஆன்ல தான் இருக்கு... உன் நைட் ட்ரஸ் எல்லாம் எதில் இருக்குன்னு சொல்லு...” என்றவள் வைஷாலியின் உடைகளை எடுத்துச் சென்று உள்ளே வைத்துவிட்டு வந்தாள்.

“உனக்கும்தான் கை கொப்பளிச்சு இருக்கு ரூபி...” அவளுக்கும் கஷ்டம்தானே என்று இருந்தது.

“இங்கே பார்... உன் அளவுக்கு எனக்கு எதுவும் இல்லை. லேசா சின்ன கொப்பளம் தானே, அதுவும் பெருசா எல்லாம் இல்லை. என்னைத்தான் நீ எதையும் செய்ய விடலையே. காரை வெளியே மட்டும்தானே நான் கிளீன் பண்ணேன்” அவள் சொல்ல, அதற்கு மேலே அவள் எப்படி மறுத்தும் ரூபி கேட்கவே இல்லை.

“நான் கதவை லாக் பண்ணிட்டேன், கண்ணையும் மூடிக்கறேன்... நீ ரொம்ப சங்கடப்படாதே... டவ்வல் இருக்கு, உன்னை மறைச்சுக்கோ, அதையே கட்டிக்கோ... குளிக்கவும் ஹெல்ப் பண்றேன்” வைஷாலி மறுத்தாலும், பிடிவாதமாக தான் நினைத்ததை செய்துவிட்டே ஓய்ந்தாள்.

ரூபியும் குளித்து உடை மாற்றிவிட்டு, அங்கே புதிதாக இருந்த இரவு உடை ஒன்றை அவளும் அணிந்து கொண்டு இருவருமாக வெளியே வந்தார்கள். அங்கே அருணாவோ... இவர்களைப் பார்த்தவுடன் தட்டுகளை எடுத்து வைத்தாள்.

ஹரீஷ் கொடுத்த உணவுப் பொட்டலத்தைப் பிரிக்க, உள்ளே இரண்டு தயிர் சாதமும், இரண்டு வெஜ் சூப், சேன்விச்களும் இருந்தது. அருணா இரவு உணவுக்கென சப்பாத்தியும் குருமாவும் செய்திருக்க, நிச்சயம் அதைப் பிட்டு உண்ண முடியும் என்றே தோன்றவில்லை.

அனைத்தையும் எடுத்து வெளியே வைத்தவள், “எதைப் பாப்பா சாப்பிடற? சப்பாத்தியை பிட்டுப் போட்டு, குருமா இல்லன்னா பால் ஊத்தி ஊற வச்சு தரவா?” அவள் அப்படிக் கேட்கையிலே அவள்மீதான அக்கறை தெரிந்தது.

“இல்லக்கா... இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை... நான் தயிர்சாதமே சாப்ட்டுக்கறேன்” என்றவள் உடன் இருந்த சூப்பையும் எடுத்துக் கொண்டாள்.

ஹரீஷ் அவர்களுக்கென கொஞ்சம் யோசித்திருப்பதும் புரிய, “ரூபி, நீயும் முதல்ல இந்த சூப்பைக் குடி... பிறகு சாப்பிடலாம்...” என்றவாறு அவள் பக்கம் நகர்த்தினாள்.

“அக்கா, நீங்க சாப்ட்டீங்களா?” வைஷாலி கேட்க,

“நீ சாப்பிடாமல் நான் என்னைக்கு பாப்பா சாப்ட்டு இருக்கேன்? நீங்க சாப்பிடுங்க, நான் பிறகு சாப்பிடறேன்” என்றவள் ஒதுங்கி நின்றாள். அதென்னவோ வைஷாலியின் தாய் ரத்னாவுக்கு அவர்கள் உண்கையில் உடன் இருந்தால் பிடிக்காது. அந்த பழக்கம் அவளுக்கு இங்கேயும் வந்தது.

“அக்கா, நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க...” ‘என்னை மறுபடியும் சொல்ல வைக்காதே’ என்ற பாவனையில் அவள் சொல்ல, இரு இருக்கைகள் தள்ளி மற்றதில் அமர்ந்து கொண்டாள்.

இருவரும் உண்டுவிட்டு அறைக்குச் செல்ல, ஒரு மாதிரி தள்ளாட்டமாக இருந்தது. உடம்பு ஊமை வலியில் தவித்தாலும், போட்டிருந்த ஊசி அதன் வேலையை சரியாகச் செய்ய, கை வலி எதுவும் பெரிதாகத் தெரியவில்லை.

“ரூபி... நீயும் என்கூடவே படுத்துக்கோ” என்றவளுக்கு என்ன முயன்றும் கடைவிழியோரம் கண்ணீர் வழிந்தே விட்டது.

“ஷாலு... ஷ்... ஒன்றும் இல்ல... அழாத...” ரூபிக்குமே மனதும் உடலும் ஓய்ந்து போயிருக்க, அவளுக்கும் அழுகைதான் வந்தது. ஆனாலும் சர்வஜித் வைஷாலியைத்தான் அதிகம் டார்கெட் செய்தான் என்பதால், அவளுக்கு சேதாரம் கொஞ்சம் கம்மிதான்.

மருந்தின் உபயத்தால் பெண்கள் இருவரும் தூங்கிவிட, இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்கோ உறக்கம் என்பது கிஞ்சித்தும் வரவே இல்லை.

தன் அலைபேசியை எடுத்தவன், ஹரீஷுக்கு அழைத்தான். “சார்... சொல்லுங்க...” ஹரீஷ் குரல் கொடுக்கவே,

“அம்மா வீட்டுக்குப் போகணும், காரை எடு...” அவன் சொல்ல, நிஜத்தில் ஹரீஷ் உறைந்து போனான்.

‘என்ன சொன்னார்? அம்மா வீணா? இவருக்கு அம்மா இருக்காங்களா?’ இந்த மூன்று வருடங்களில் அவன் தனக்கு தாய் இருப்பதைப்பற்றி பேசியது கூட இல்லையே என்ற எண்ணம்தான் அவனுக்கு.

ஆனால் அந்த நள்ளிரவில் மூன்றுமணி நேரங்கள் பயணித்து பாண்டிச்சேரிக்கு சென்றவன், ஒரு சாதாரண ஓட்டு வீட்டின் முன்னால் நின்று அழைப்பு மணியை அழுத்தினான்.

அந்த நேரத்திலும் கொஞ்சம் கூட பதட்டப்படாமல் வந்து கதவைத் திறந்த தன் தாயை, “ம்மா...” என்ற அழைப்போடு இறுக அணைத்து கண் கலங்கினான் சர்வஜித். தன் மகனை அத்தனை ஆதூரமாக அணைத்துக் கொண்டார் அவனது தாய் விசாலாட்சி.

மகனது மனம் கலங்கும் அளவுக்கு என்னவோ நடந்து இருக்கிறது என்பதை நொடிகளுக்குள் புரிந்துகொண்டார். உள்ளுக்குள் ஒரு பெருமூச்சு எழ, கூடவே ‘தன் மகன் தன் பகைமுடிக்க இறங்கிவிட்டான்’ எனப் புரிய தன்னை நிதானித்தார்.

‘ஒரு வேளை என் காதில் வேறாக விழுந்திருக்குமோ?’ என எண்ணினான் ஹரீஷ். சர்வஜித் சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தால், அவனது அழைப்பும், அந்த கண்ணீரும் ஹரீஷை திகைக்கச் செய்தது.

அவனோடு இருந்த இந்த மூன்று வருடங்களில், ஒருமுறை கூட சர்வஜித் தன் தாயக் காண வந்ததில்லை எனப் புரிய, ஹரீஷ் எப்படி உணர்ந்தான் என்றே சொல்வதற்கு இல்லை. அதைவிட, சர்வஜித் அடுத்து பேசிய விதமும், குரலும்... ஹரீஷ் வாய்பிளந்தவாறு அப்படியே நின்றுவிட்டான்.

‘ஒரே நேரத்தில் நான் எத்தனை அதிர்ச்சியைத்தான்டா தாங்குவேன்?’ என்பதுபோல் நின்றிருந்தான் ஹரீஷ்.

பகை முடிப்பான்....