• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 15

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 15

வெண்பா, துஷ்யந்த், சிந்து மற்றும் பைரவி இந்த நால்வரையும் எப்படி வீழ்த்தி அழிப்பது என்பதே வர்ஷாவின் தீவிரக் குறிக்கோளாய் மாறியிருந்தது.

சுந்தரி பங்களா சிந்து பைரவி இன்றி வெறிச்சோடி கிடந்தது. வேலையாட்கள் யாரும் தேவையின்றி வர்ஷாவிடம் ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். பேச அனுமதியும் இல்லை.

தாயும் தந்தையும் வேலையில் மூழ்கி இருக்கச் சிறுவயதிலிருந்து சிந்து பைரவி அருகில் இருந்ததால் வர்ஷா என்றுமே தனிமையை உணரந்ததில்லை. ஆனால் தற்பொழுது தனிமை வாட்டியது.

வர்ஷா சென்னையை அடைந்த பின்னர் அடுத்த தினம் சுந்தரியைக் காண மருத்துவமனை சென்றாள். ஆனால் சுந்தரியின் சயன கோலத் தரிசனம் தான் கிட்டியது. எதுவும் பேச முடியவில்லை. அன்னையிடம் மனக்குமுறலை கொட்டித் தீர்க்க வந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பின்பு வர்ஷா மாலையில் தந்தையைப் பிரதான பங்களாவில் சந்தித்தாள். காபி எஸ்டேட் தொடர்பான பத்திரங்களை சமர்ப்பித்தாள். அங்கு நடந்தவையில் மோகனுக்குச் சொல்ல வேண்டியதை மட்டும் வடிகட்டி சொன்னாள்.

மோகன் வழக்கத்திற்கு மாறாக மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். வர்ஷா அவரின் செயல்பாடுகள் கண்டு சந்தேகித்தாள். இருப்பினும் எதுவும் கேட்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு பின்னர் வர்ஷா அலுவலகத்தை அடைந்த போது இரண்டு அதிர்ச்சிகள் அவளை வரவேற்றன.

முதலாவது அதிர்ச்சி மோகன் நிறுவனத்தில் இயக்குநர் அந்தஸ்தைச் சிந்துவுக்கு மோகன் அளித்திருந்தார்.

“வாட் நான்சென்ஸ?” என்று வர்ஷாவின் ரத்தம் கொதித்து எதிர்வினை ஆற்றக் கூட நேரமில்லாமல் அடுத்த அதிர்வைக் கண்டாள்.

கல்பனாவிற்கும் அதே அந்தஸ்து பதவி அலுவலகத்தில் தனி அறை எனச் சகல சௌபாக்கியங்களுடன் இருவரும் தத்தம் அறையில் வேலைப் பார்த்து கொண்டிருந்தனர்.

சினத்துடன் மோகன் அறைக்குச் சென்றவள் “அப்பா என்ன இதெல்லாம்? ” எனக் கேள்வி எழுப்ப

அவர் மகளின் இந்த அவதாரத்தை எதிர்பார்த்தது போல “ சில விஷயங்களை நாம விட்டு கொடுக்கணும் வர்ஷா” என்றார் அமைதியே உருவாக

“முதல்ல உட்கார் .. தண்ணி குடி” எனத் தண்ணீர் பாட்டிலை அவளிடம் கொடுத்தார்.

தண்ணீரை குடித்தவள் “ சொல்லுங்க? அப்படி என்ன அவசியம்?”

“ராகேஷ் இன்னும் வீடு திரும்பலை”

“யார் ராகேஷ்?” எனப் புருவத்தை சுருக்கியவள் இரண்டொரு நொடிகளில் “ஓகே அவனா?” என நெற்றியைத் தேய்த்தபடி மேலே சொல்லுங்கள் என்று தந்தையை பார்த்தாள்.

“ராகேஷ் வீடு திரும்பவில்லை … அதனால கல்பனா என்னை பிளாக்மெயில் செய்யுறா .. ராகேஷை நான் கொலை செய்திட்டதா போலீஸ்ல கம்பிளைண்ட் கொடுத்திடுவேன். மீடியால சொல்லிடுவேன்னு மிரட்டினாள். அவளை அடக்கத் தான் இந்த சமரசம்” என்றார்.

“சமரசம் செய்திடா தம்பியை கொலைச் செய்திடலாமா?” கோபத்தை கடினப்பட்டு அடக்கியபடி கேட்டாள்.

சிறிது மௌனம் காத்தவர் பின்பு மெல்லிய குரலில் “அதுவுமில்லாமல் புள்ள தாச்சி ஆசையா கேட்கும்போது …” என வர்ஷாவை நேருக்கு நேர் காணச் சங்கடப்பட்டு வார்த்தைகளை முடிக்காமல் பேப்பர் வெயிட்டை கைகளால் உருட்டியபடி அதையே பார்த்தார்.

“இது கல்பனாவின் நடிப்பு. இதைத் தந்தை புரிந்து கொள்ளவில்லையா? அல்லது புரியாதது போல நடிக்கிறாரா? ஒருவேளை இந்த காரணத்தினால் தான் திருமணம் செய்து கொண்டாரா? திருமணத்திற்கு முன்பே கல்பனா கர்ப்பம் தரித்திருக்கிறாள். திருமணமும் நிர்ப்பந்தத்தால் நடைபெற்றதா?” எனப் பலவாறு சிந்தனைகள் சிதறின. அவளுக்கு தலை வலித்தது.

சில மாதங்களுக்கு முன்பு தன் தந்தை ஒரு நடிகையுடன் சுற்றுகிறார் என சில செய்தித் தாள்களில் கிசுகிசு மற்றும் யூடியூபிலும் கண்டாள். அவற்றை முதலில் வதந்தி என்றே நினைத்தாள். பின்பு ஒருவாறு உண்மை தெரிந்து திருமணத்தில் முடிந்தது.

“சரி சிந்துவுக்கு என்ன கதையைச் சொல்லப் போறீங்க?” என்றாள் கடுப்பாக

முகம் மலர “சிந்து யார்னு தெரிஞ்சா நீ ரொம்ப சந்தோஷப்படுவ வர்ஷா” என்றார்.

“முதல்ல விஷயத்தை சொல்லுங்க?” சுவாரஸ்யமின்றி கேட்டாள்.

“சிந்து செத்துப்போன என் தம்பி வெற்றியுடைய பொண்ணு” என்றார்

“என்னபா சொல்றீங்க? அவங்க செத்துபோயி ????” எனப் பழங்கதையை நினைவுபடுத்த முயன்று தோற்றாள்.

“ஆமா மா உன் சித்தப்பா வெற்றிக்கும் சித்தி கயல்விழிக்கும் பிறந்த குழந்தை தான் சிந்து. ஆனா குழந்தை பிறந்து ஒரு மாசத்திலேயே அவங்க விபத்துல இறந்துட்டாங்க. விபத்துல குழந்தை சிந்துவுக்கும் அடிப்பட்டு காயம் தான்.

கயல் உடைய அண்ணன் சிந்துவை காப்பாற்றிக் கொஞ்ச நாள் வளர்த்தார். ஆனா அதுக்கு மேல அவரால் முடியலை அதனால ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுட்டார்.
பாவம் சிந்து இத்தனை சொந்தம் இருந்தும் அனாதை மாதிரி .. நினைக்கவே கஷ்டமா இருக்கு”

“இதுக்குக் கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் யாரு?” எரிச்சலுடன் வர்ஷா கேட்க

”கயல் அண்ணன் தான் வந்து சொன்னார்.” என்றார் தீர்க்கமாக. அதாவது இதை அவர் முழுவதுமாக நம்புகிறார் என்றுப் பொருள்.

“அப்பா நீங்க இப்படி எல்லாத்தையும் நம்புவிங்களா?” என மேஜையைப் பலமாகத் தட்டியவள் “ஏன் இத்தனை வருஷமா சொல்லாமல் இப்ப வந்தார்? இத்தனை நாளா எங்க இருந்தார்?” அயற்சியுடன் கேட்டாள். எதையும் அவளால் ஏற்க முடியவில்லை. அனைத்தும் கட்டுக்கதை என்றேத் தோன்றியது.

“வர்ஷா எப்பவுமே பசங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயசுக்குப் பிறகுத் தன் அப்பா அம்மாக்கு எதுவுமே தெரியாது அப்படினு சில சமயங்களில் தோணுமாம். இப்ப நீ அந்த நிலைல தான் இருக்க. பிசினஸ் சூட்சமங்கள் உனக்கு நல்லா இருக்கு. ஒரு எஸ்டேட் டீல் முடிச்சட்டே .. அதுக்காக எனக்கு எல்லாம் தெரியும். நான் அதிபுத்திசாலினு நினைக்கிறதை முதல்ல நிறுத்து”

“நான் என் வாழ்க்கையில் லட்சம் மனிதர்களை சந்திச்சி இருப்பேன். உண்மை பொய் என்னால சுலபமா கண்டுபிடிக்க முடியும். கண்ணை மூடிட்டு நம்ப மாட்டேன். இந்த நிலைமைக்கும் நாம வந்திருக்கவும் முடியாது.” காட்டமாகப் பேசினார்.

வர்ஷா மௌனமானாள்.

மேலும் தொடர்ந்தார் “டி.என்.ஏ. டெஸ்ட் செய்து ரிசல்ட் பார்த்ததும் தான் நான் நம்பினேன். போதுமா? அதுவுமில்லாம இந்த கம்பெனி உருவாகக் காரணமே வெற்றிதான். அவன்தான் இதை முதன் முதலா தொடங்கினான். அவன் பணம் அவன் உழைப்புதான் இது” என்றார். பழைய நினைவுகள் கண்முன் தோன்றின .

உன் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதும் அவர் தொனியில் பொருந்தி இருந்தது. முகத்தில் கோபமும் உதித்தது.

ஆனாலும் வர்ஷா விடுவதாயில்லை. வெற்றி சித்தப்பாவை முகம் கூடச் சரியாக நினைவில் இல்லை. எனில் தன்னைவிட சிந்து ஒரு வயது இளையவள்.

“விபத்து எப்படி ஆச்சாம்?” வர்ஷா கேட்க

“அது விபத்து இல்ல கொலை. விபத்து மாதிரி செட்டப் செய்திருக்கு” என்றார்.

சுவாரஸ்யமாக உள்ளதே என நினைத்தவள் “யார் கொலை செய்தது?”

“சுந்தரி” என்றார் அவளை கூர்மையாகப் பார்த்தபடி

“அப்பா” என்றாள் அதிர்வாக “கல்பனா மேல இருக்கிற மோகத்துல அம்மா மேல இப்படி அபாண்டமா பழி போடாதீங்க” மனதில் உள்ளதை அப்படியே கொட்டினாள்.

“சுந்தரி என்கிட்ட இதைப்பத்தி பேசிட்டுதான் விபத்து மாதிரி செட்அப் செய்தாள். நான் எவ்வளவு தடுத்தும் கேட்கலை. கேட்கும் ரகமும் இல்லை. இதை நான் வெளியில் சொல்ல முடியுமா? உன் அம்மாவை காட்டிக் கொடுக்க முடியுமா? அதனால நானும் விபத்துனு சொன்னேன். இது யாருக்கும் தெரியாது.” என்றவர் கண்களில் நீர் கோர்த்தது.

” உன் அம்மா இரண்டு கொலை செய்திருக்காங்க என வெண்பா குறிப்பிட்டது இந்த நிகழ்வைத் தானா? எனில் அவளுக்கு எப்படித் தெரியும்? சிந்துவை அம்மா தெரிந்தே வீட்டுக்கு அழைத்து வந்தாரா? இல்லை தெரியாமலா?” ஆயிரம் கேள்விகள் மனதை குடைந்தன. ஒன்றுக்கும் விடை இல்லை.

எல்லா கேள்விக்கும் இறுதியில் பதில் சுந்தரியிடம் முடிகிறது. இல்லை கேள்வியே சுந்தரியிடம் தான் தொடங்குகிறது என நினைத்தாள். ஆனால் விடைகள் மிக அருகில் இருப்பது அவளுக்குத் தெரியவில்லை.

வர்ஷா தந்தை அறையைவிட்டு வெளியேறினாள். தன் அறைக்குச் செல்கையில் சிந்து அறையை நோட்டம்விட்டபடி நடந்தாள். கண்ணாடிக் கதவின் வழியே அவளைக் காண ஆயிரம் மத்தாப்பு ஒன்றாக வயிற்றில் எரிந்தது.

எப்பொழுதும் சாதாரண சல்வார் மற்றும் துப்பட்டா ஒற்றை பின்னல் என்று இருப்பவள். இன்று ஆளே மொத்தமாக மாறியிருந்தாள். பார்க்க அழகாகவும் இருந்தாள். வெஸ்டர்ன் உடை சிகை அலங்காரத்தில் மாற்றம்.

வர்ஷாவால் இதை ஏற்க முடியவில்லை. தனக்குக் கீழே பணி புரிந்தவள். இன்று தனக்கு சமமாக இருப்பதை ஏற்க முடியவில்லை.

வர்ஷா “சிந்து உன்னை பத்தே நாட்களில் இந்த கம்பெனியை விட்டு ஓட வைக்கிறேன்” என தனக்குள் சபதம் மேற்கொண்டாள்.

வர்ஷா “இந்த சித்தப்பா பெரியப்பா கதையை சுத்த ஹமபக்” என அவற்றை நம்பத் தயாராக இல்லை. தன் அன்னை கொலை செய்திருந்தால் வேரோடு பிடுங்கி நசுக்கியிருப்பார். இப்படி ஒரு காளானை விட்டி இருக்கமாட்டார்.

தன் அறைக்கு உள்ளே சென்ற போது அங்கு வேறொரு பெண் சிந்து இடத்தில் வேலை செய்தபடி இருந்தாள். அவள் திரும்பி இருந்தால் முதுகுதான் தெரிந்தது.

“ஹே யார் நீ?” மிரட்டும் தொனியில் வர்ஷா அதட்ட

மிகவும் பயந்தபடி திரும்பினாள் இனியா.

“நீ .. நீ எப்படி இங்க?” திகைப்பு உச்சியைத் தொட

“கம்பெனி இன்டர்வியூல செலக்ட் ஆகி ” என அப்பாவியாகப் பதில் அளித்தாள் இனியா.

இன்னும் சிந்து கல்பனா அதிர்வில் இருந்தே வெளிவரவில்லை. இப்போது இவளா? என்றுதான் நினைக்கத் தோன்றியது.

அதன் விளைவாக “உன்ன” என கழுத்தைப் பிடித்தாள் வர்ஷா. அதற்குள் இனியா சுதாரித்து சற்று பின் நகர்ந்தாள். அதனால் வர்ஷாவின் பிடி தளர்ந்தது. “ இன்னும் கொஞ்சம் லெப்ட் சைட் வா வர்ஷா. அப்பத்தான் சீசீ கேமரால நல்லா ரெகார்ட் ஆகும்” என்ற இனியா பின்பு ”ஐயோ அம்மா” எனக் கத்தினாள்.

அறையின் கதவு படார் எனத் திறந்து உள்ளே வந்தார் மோகன். “வர்ஷா என்ன காரியம் பண்ற?” என அதட்டி இனியாவை விடுவித்து அமர வைத்தார்.

இனியா கண்கள் சொருக அமர்ந்து மூர்ச்சை ஆவது போலச் சாய்ந்தாள். மோகன் அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து “இனியா இனியா” என எழுப்பினார்.

அவளும் மெல்ல கண்ணைத் திறந்து இருமினாள். “இனியா எப்படி இருக்க?” என மோகன் ஆதங்கத்தில் வினவ

“இப்ப ஓகே சார்” என பவ்யமாக எழுந்து நிற்க முயன்று பின் தள்ளாடினாள்.

“நீ உட்கார்மா” என அவளை அமர வைத்தார்.

“அப்பா அவ நடிக்கிறா” என வர்ஷா ஆத்திரத்தில் பொங்கினாள்.

“என்ன வார்த்தை பேசுற வர்ஷா? இந்த சீசீ கேமரா என் பெர்சனல் லேப்டாப்ல மட்டும் தான் கனெக்ட் ஆகி இருக்கு. வேற யாராவது பார்த்திருந்தா என்ன ஆகியிருக்கும்? உன் அம்மா மாதிரி கொலை பண்ற அளவு உனக்கு அப்படி என்ன வன்மம்?”

அவள் முன் தன் தந்தை தன்னை கண்டிப்பது வர்ஷாவுக்கு பிடிக்கவில்லை.

“கெட் அவுட்” என இனியாவை நோக்கி பல்லைக் கடிக்க

இனியா மெல்ல எழுந்தாள். “இனியா இதைப் பத்தி யார்கிட்டயும் வெளியில் சொல்லிடாத … வெரி சாரி” என மோகன் தன்மையாகப் பேசினார்.

இனியா “ சொல்ல மாட்டேன் சார் கவலைபடாதீங்க .. நோ பிராப்ளம் சார்” என்றபடி வெளியேறினாள்.

அதற்குள் சிந்து அவசர அவசரமாக மோகன் லேப்டாப்பில் இருந்து வர்ஷா இனியா கழுத்தைப் பிடிப்பதை தன் செல்போனில் ரெகார்ட் செய்து கொண்டாள்.

“வர்ஷா இந்த பெண் இனியாவை தான் உனக்கு பி.ஏ. வாக அபாய்ண்ட் செய்திருக்கேன். சிந்து பைரவி ரெண்டு பேரும் இல்ல. நீ கஷ்டப்படக் கூடாதுனு” என விளக்கம் அளித்தார்.

“எனக்கு பி.ஏ. னா நான் இன்டர்வியூ செய்ய வேண்டாமா? நீங்களே அப்பாயிண்ட் செய்தா என்ன அர்த்தம்? எனக்கு எப்படி வேணும்னு உங்களுக்குத் தெரியுமா?”

“சரி நான் இனியாவ சிந்துக்கு அசைன் பண்றேன். நீ உனக்குப் பார்த்துக்கோ” என்று இறங்கி வந்தார் மோகன்.

சிந்து என்ற பெயர் எரிச்சலை ஊட்டியது. இனியா சிந்து சேர்ந்து வேலை செய்தால் எளிதாகச் சதித் திட்டம் தீட்டுவார்கள். இவர்கள் பிரிந்து இருப்பதே நல்லது என எண்ணியவள் “அப்பா இனியா எனக்கே பி.ஏ. வா இருக்கட்டும். பாவம் நீங்க எனக்காக செலக்ட் செய்திருக்கீங்க” என்றாள்.

உள்ளுக்குள் தந்தை மீதும் கோபம் கனன்றது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் கண்டுபிடிப்பேன் என்றார். ஆனால் இனியா உலக மகா நடிப்பை நடித்திருக்கிறாள். அதைக் கண்டு பிடிக்க முடியவில்லை என மனதில் தந்தையைக் கரித்துக் கொட்டினாள்.

மகள் வார்த்தையை கேட்டு மோகன் நிம்மதியுடன் அகன்றார். அடுத்து இனியாவை அழைத்து ‘எனக்குச் சூடா பிளாக் டீ கொண்டு வா” என்றாள்.

இனியா கொண்டு வர அதில் சிறிதை வேறு கப்பில் ஊற்றி இனியாவை முதலில் குடிக்கச் சொன்னாள்.

வர்ஷா “விஷம் கலந்திருக்கானு செக் பண்ணனும் .. நீ என்னவேனா செய்கிற ஆள் ஆச்சே” கண்களை உருட்டிப் பேசினாள்.

இனியா குடிக்காமல் தேநீரை தயக்கமாகப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

“ அப்ப என் சந்தேகம் உண்மைதானா?” என தன் தேநீர் கோப்பையைத் தள்ளி வைத்தாள். மிகப் பெரிய விடயத்தை கண்டுபிடித்த மிதப்பில் வர்ஷா தன் போனில் கேமராவை ஆன் செய்து ரெகார்ட் செய்தபடி “இப்ப குடி” என்றாள்.

இனியா சிரித்த முகத்துடன் “இனிக்க மணக்கச் சுவைக்கத் தேநீர் அருந்துங்கள்” என அனைத்தையும் குடித்து முடித்தாள். வர்ஷாவின் பங்கையும் சேர்த்தே குடித்துவிட்டாள்.

வர்ஷா போனை கீழே வைத்து ஆத்திரத்துடன் முறைக்க “ இந்த பிளாக் டீ எனக்குச் சுத்தமா பிடிக்காது. எப்படிதான் குடிக்கிறாங்கனு யோசிக்கிறதுக்குள்ள ..” தோளைக் குலுக்கியவள்.

சரி எனக்கு ரீல்ஸ் போடப் பயன்படும் அந்த வீடியோ அனுப்பு எனத் தானே போனை எடுத்து தன் போனுக்கு அனுப்பிக் கொண்டாள்.

“ரொம்ப யோசிக்காத வர்ஷா வேலையை பார். என்னை வெச்சி செய்யணும்னு நீ நினைச்சா இப்ப பாத்தியா?” எனச் சிரித்து வெறுப்பேற்றினாள்.

இதில் இடை இடையே துஷ்யந்த் இனியாவிற்கு போன் செய்து “ஹாய் பேபி என்ன செய்ற .. எனக்கு ஒரு கிஸ் அனுப்பு”என அவன் கேட்க .. அதற்கு இனியா சிணுங்கலுடன் பதில் பேசிக் கொண்டிருந்தாள்.

”ஆபிஸ் நேரத்துல போன் பேசக் கூடாது” என வர்ஷா கண்டிக்க

“ இதோ ஒரே நிமிஷம்” என அரைமணி நேரம் பேசினாள். சீசீ கேமரா கவர் ஆகாத இடமே இனியாவின் ஆஸ்தான இருக்கை ஆனது.

இருவரும் வர்ஷாவை வெறுப்பேற்றினர்.



துளிகள் தெறிக்கும்…
 
  • Love
Reactions: jai_2000