• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 21

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 21

வர்ஷா முதல் முறையாகத் தான் விரும்பியது கைக்கு எட்டாமல் தவித்தாள். ஒவ்வொரு நொடியும் தான் வெண்பாவிடம் தோல்வியுற்றதை எண்ணி பொறாமை தீயில் கருகினாள்.

காதலர் தினத்தன்று துஷ்யந்த் அவள் முன் ரோஜா பூவை நீட்டியதும் ஒரு நொடி துஷ்யந்த் மற்றும் வெண்பா காதல் முறிவு ஏற்பட்டுவிட்டது என்றே கருதினாள்.

ஆனால் துஷ்யந்த் “இந்த ரோஜாபூ வெண்பாவிற்காக .. அவ என் காதலை ஏற்றுக் கொள்வாளா? போன்ற கேள்விகள் அவளுக்குள் இன்னும் பொறாமையைத் தீயை அதிகரிக்கச் செய்தது.

தினம் சந்தித்துக் கூடி மகிழ்கிறார்கள். இதில் தன்னிடம் இப்படி கேட்ட துஷ்யந்தை கண்டு கடுங்கோபம்க் கொண்டாள். அவனை வாழ்க்கை முழுவதும் தன் அடிமையாக்கி கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

துஷ்யந்த் மற்றும் வெண்பா இருவரும் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்த காட்சி ஆணி அடித்ததை போல மனதில் ஸ்திரமாய் நின்றுவிட்டது. எத்தனை முயன்றும் மறக்க முடியவில்லை.

சிந்து பைரவியிடம் அனைத்தையும் பகிரும் வர்ஷா இதைச் சொல்ல முடியவில்லை. தனக்கு அனைத்துமே மிகச் சிறப்பானது கிடைக்க வேண்டும் என்று எண்ணுபவள். இதுவரை அப்படி தான் கிடைத்துள்ளது. அப்படியிருக்கையில் தான் துஷ்யந்த் மனதில் இரண்டாவது ஸ்தானத்தில் இருப்பதாக அல்லவா கருதுவார்கள்? என்று எண்ணினாள்.

கல்லூரிக்கு செல்வதை மெதுவாக நிறுத்தினாள். படிப்பில் பிடித்தம் தளர்ந்து போயிற்று. தேவையான அளவு அடெண்டன்ஸ் இருக்கப் பார்த்துக் கொண்டாள். தேர்வு எழுதினாள்.

தன்னை சுற்றிப் பல கழுகு பார்வைகள் உள்ளதை வெண்பா அறியவில்லை. சுற்றுலா சென்று வந்த பின்னர் மகிழ்ச்சியாக நாட்கள் சென்றன.

“வெண்பா ஒரு நாள் லீவு எடுத்துக்க. நாம ரெண்டு பேரும் கோயிலுக்கு போயிட்டு வரலாம்” அவளின் தந்தை கேட்டுக் கொண்டார்.

“சரிங்க பா போயிட்டு வரலாம்” என்றாள். இனி அவருடன் நேரம் செலவிட வேண்டும் அவருக்கும் தன்னை தவிர யார் இருக்கிறார் என நினைத்துக் கொண்டாள்.

இருவரும் காலையில் கோயிலுக்குச் சென்றனர். தங்களுக்குப் பிடித்த உணவகத்தில் உணவு உண்டனர். மாலையில் அலைகளை ரசித்தபடி பீச்சில் அமர்ந்து கதைப் பேசினர். தந்தையின் மடியில் தலைசாய்த்தாள். அந்த நாள் முழுவதும் தந்தையுடன் மனநிறைவுடன் இருந்தாள்.

“வெண்பா உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு. கல்யாணம் பேசி முடிக்கவா?” என நிதானமாக அவள் தலையை வருடியபடி கேட்டார்.

அதிர்ந்தவள் சட்டென எழுந்து அமர்ந்தாள் “ அப்பா .. இதுக்குதான் இத்தனை லஞ்சமா?” எனப் பொய்யாகக் கோபித்தாள். துஷ்யந்த்தைப் பற்றிச் சொல்லிவிடலாமா என்று கூடத் தோன்றியது.

“இல்ல பையன் டாக்டர். அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கு. ஜாதகமும் நல்லா பொருந்தியிருக்கு” என மேலும் பேச முயன்றவரை

“அப்பா இன்னும் படிப்பு ஒரு வருஷம் மீதி இருக்கு”

“இதை நான் சொன்னேன். மாப்பிள்ளை கல்யாணத்துக்கு அப்புறம் எவ்வளவு வேணா படிக்க வைக்கிறேன் சொல்லிட்டார். குடும்பமும் நல்ல குடும்பம்” என்றார் எப்படியும் தன் மகளைச் சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில்.

இன்னும் எதுவும் முடிவாகவில்லை. அதற்குள் இவர் மாப்பிள்ளை என்று அழைப்பது எரிச்சலாக இருந்தது.

இப்போது கோபத்துடன் சண்டையிட்டால் தந்தையின் பிடிவாதம் தான் வெல்லும் என்று நன்கு அறிவாள்.

“அப்பா நீங்கச் சொன்ன மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமா படிக்கிறேன்னு வெச்சிக்கோங்க படிப்புலையும் கவனம் செலுத்த முடியாது. படிப்பு முடியலைன்ற கவலையில் கல்யாண வாழ்க்கையிலும் நிம்மதி இருக்காது. உங்க பொண்ணுக்கு ரெண்டும் இருக்காது” எனச் சொல்லி வாயை மூடவில்லை.

“அப்படியெல்லா அபசகுனமா சொல்லாத வெண்பா” என அதட்டிக் கவலையுற்றார்.

படிப்பை முடித்ததும் எப்படியேனும் துஷ்யந்தை தந்தை முன் நிறுத்தி சம்மதம் பெற வேண்டும். துஷ்யந்த் குடும்பமும் நல்ல குடும்பம் தான் என மனதில் சிந்தனைகள் தறிகெட்டு ஓடின.

“மாப்பிள்ளை போட்டோ ஒருமுறை பாருமா” என தன் செல்போனை எடுத்தார்.

அவர் செல்போனைப் பிடுங்கி அணைத்து அவர் சட்டைப் பையில் திணித்தாள். “படிப்பு முடியற வரை மூச்சு” என தன் உதட்டில் விரல் வைத்து குழந்தைகளுக்குச் சொல்வது போலச் சொன்னாள்.

“சரி எனக்குச் சத்தியம் பண்ணு .. படிப்பு முடிந்ததும் இந்த பையனை கட்டிப்பேன்னு” என்றார் விடாமல் கையை அவள் முன் நீட்டியபடி.

சற்று தயங்கியவள் அவர் கைமேல் தன் கை வைத்து “ நிச்சயமா அவரை கல்யாணம் செய்துக்கிறேன்” அவர் என்ற இடத்தில் துஷ்யந்தை நிறுத்தினாள் மனதில்.

தந்தையை ஏமாற்றுவது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போதைக்கு வேறு வழியும் இல்லை.

மறுநாள் காலை வெண்பா எப்பொழுதும் போலச் சமையல் வேலைகளை முடித்து தன் தந்தைக்கு உணவு பரிமாறி தானும் சாப்பிட்டுக் கிளம்பினாள்.

வெண்பா கல்லூரி செல்ல காத்திருந்தார் அவள் தந்தை. உடனே போன் செய்து “மாப்பிள்ளை வெண்பா படிப்பு முடியும்வரை கல்யாணம் வேண்டாம்னு சொல்ற” எனத் தயக்கத்துடன் கூறினார்.

“பரவாயில்லை மாமா .. நான் காத்திருக்கேன் பிரச்சனை இல்ல .. ஒரு தடவை வெண்பாவைப் பார்த்து பேசணும்” என்றார்.

“தாராளமா வீட்டுக்கு வாங்க” என்றார்.

“இல்ல நாங்க வெளியில எங்கேயாவது மீட் பண்றோம். உங்ககிட்ட சொல்லிட்டுதான் செய்வேன்” என்றார்.

“சரிங்க மாப்பிள்ளை உங்க சௌகிரியம்” என்றுவிட்டார்.

இதைக் கேட்டால் வெண்பா தையா தக்காவென குதிப்பாள் என்று தெரியும். அடுத்த வாரம் திடீர் சந்திப்பாக மாற்றி விட்டு சமாளிக்கலாம் என்ற சிந்தனைப் பெருமூச்சுடன் தன் வேலைகளைக் கவனித்தார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாலனிடமிருந்து கருமுட்டை எடுக்க அவளை அழைத்துச் சென்றனர். அவளும் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சென்று கொடுத்தாள். பணமும் கிடைத்தது.

மாலினிக்கு கருமுட்டை எடுத்த பின்னர் விடுதிக்கு அவளுக்கான பெண் ராணி அழைத்து வந்தாள். சட்டென மாலினிக்கு உதிரப் போக்கு அதிகமானது. அடிவயிற்றில் உயிர் போகும் வலி ஏற்பட்டது.

மாலினி போன் மூலம் ராணிக்குத் தெரிவித்தாள். ராணி அவளை ஆறாவது மாடிக்கு அழைத்துச் சென்றாள். தனக்கென உள்ள அறையில் மாலினியைப் படுக்க வைத்தாள். பின்பு பக்கத்து அறைக்குச் சென்று வந்து மாத்திரைக் கொடுத்தாள். அவள் விழுங்கியதும். ஊசியும் போட்டுவிட்டாள்.

மாலினி எழுந்ததும் “என்ன வேணும்?”

“பாத்ரூம் போகணும்” என்றாள் வேண்டுமென்றே

“இப்பவே கீழ கூடிட்டு போறேன்” என்றாள் ராணி

“இல்ல அவசரம் இங்கேயே பாத்ரூம் இருக்கும் இல்லையா?” என்றபடி. எந்த அறைக்கு ராணி சென்றாளோ அங்குக் கதவைத் திறந்து சென்றாள்.

அறையில் எதுவும் குறிப்பிடும்படி இல்லை. சில சூட்கேஸ் மட்டுமே இருந்தன.

அறைப் பார்க்கச் சாதாரணமாக இருந்தது. மருந்தை எங்கிருந்து கொண்டு வந்தாள் என்று மாலினிக்குப் புரியவில்லை. சூட்கேசில் இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டாள்.

பதட்டமாக ராணி வந்து “பாத்ரூம் அங்க இருக்கு. இங்க ஏன் வந்த?” என மிரட்டலாக மாலினியை அழைத்து பாத்ரூம் அருகே விட்டு வந்தாள்.

“நல்லா தூங்கினால் சரியாகிடும்” என்றாள் ராணி. சரி என்றவளை மீண்டும் மாலினியின் அறையில் விட்டுவிட்டுச் சென்றாள் ராணி. முன்பை போல ராணி இங்கு அதிகம் இருப்பதில்லை. வேறு ஆட்கள் வந்துவிட்டார்களா? என மாலினிக்கு குழப்பமாக இருந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு மாலினி தனக்கு ஏற்பட்டதைச் சிறிய தாளில் எழுதி அதை ஒரு புத்தகத்தில் வைத்து நூலகத்தில் வைத்துவிட்டாள். சிறிது நேரத்திற்குப் பிறகு வெண்பா வந்து அந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டாள்.

அடுத்த ஆறு மாதம் வெண்பா எதுவும் செய்யவில்லை. ஆதாரத்தைத் திரட்டுவதில் முனைந்தாள். அதனுடன் தன் படிப்பிலும் கவனம் செலுத்தினாள்.

மாலினி வெண்பா இருவரும் நேருக்கு நேர் சந்திக்காமலிருந்தனர். இதனால் சுந்தரி ஆட்கள் குழம்பிப் போயினர். மேலிடத்துக்கு தகவல்க் கொடுத்தனர்.

தகவலைக் கேட்ட சுந்தரி “அந்த பொண்ணு பயந்துட்டா போல இருக்கு” என நினைத்தார்.

வெண்பா துஷ்யந்திடம் அனைத்தையும் அவ்வப்பொழுது சொன்னாள்.

முதன் முதலில் இதைக் கேட்டவன் அதிர்ந்தான். காரணம் அந்த கருத்தரிப்பு மையம் அவன் அத்தை சுந்தரி உடையது அல்லவா?

“அத்தை கிட்ட எங்களைவிட பத்து மடங்கு சொத்து இருக்கு. அதுவும் இல்லாம அந்த பெர்டிலிட்டி சென்டருக்கு (Fertility Centre) அவங்க தினமும் போகிறதில்ல .. ரொம்ப ரேரா தான் போவார்களாம். அப்பா சொல்லி இருக்கார்.” துஷ்யந்த் கூற

“உனக்கு எப்படி தெரியும்?” வெண்பா நம்பவில்லை

“அண்ணிக்கு பிரசவம் அவங்க மருத்துவமனையில் தானே பார்த்தாங்க. அப்போ அத்தை வந்து பேசிட்டு போவார்களாம். அப்போது சொன்னதாம்” துஷ்யந்த் விளக்கமளித்தான்.

இது சுந்தரியின் யுக்தி தன்னால் முடிந்தவரை இப்படிக் காட்டிக் கொள்வது. தான் செய்யும் மோசடி வெளிவந்தால் தன்னுடன் பணிப் புரியும் மற்ற இரு மகப்பேறு மருத்துவர்கள் மேல் பழியைப் போட்டு தப்பித்து கொள்ளலாம்.

துஷ்யந்த் சொல்வது உண்மையாக இருக்கும் என வெண்பாவும் நம்பினாள். வர்ஷாவின் தாய்தான் சுந்தரி. அவள் துஷ்யந்திற்கு அத்தை முறை என்றெல்லாம் துஷ்யந்த் யாரிடமும் கல்லூரியில் சொல்லவில்லை.

வெண்பாவிடம் சொல்லியுள்ளான். அவனின் நெருங்கிய சில நண்பர்களுக்குத் தெரியும். நண்பர்களும் துஷ்யந்த் வர்ஷாவை இணைத்து கேலி கிண்டல் செய்வதுண்டு. துஷ்யந்த் அவற்றைக் கண்டு கொள்ளவே மாட்டான்.

நாட்கள் செல்லச் செல்ல துஷ்யந்த் வெண்பாவுடன் சுற்ற ஆரம்பித்ததும். “ உன் அத்தை பொண்ணுக்கு நான் அப்லிஷேன் போடவா. நீ நடுல வர மாட்டே இல்ல” என நண்பர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.

“என்னவோ செய்து தொலை” என துஷ்யந்த் அவர்களைத் துரத்திவிட்டான்.

துஷ்யந்தால் வெண்பா கூறியதை அத்தனை அலட்சியமாக விட முடியவில்லை. சுந்தரி அத்தை மீது சந்தேகம் துளிர்விடத் தொடங்கியது.

அவன் தேர்வுகள் முடியும்வரை காத்திருந்தான். அவன் படிப்பு தேர்வு என அனைத்தும் முடிந்துவிட்டது.

சுந்தரியின் கருத்தரிப்பு மையத்தைக் கண்காணிப்பது என்று முடிவெடுத்தான். தன் பைக் கார் என எதுவும் இல்லாமல் பேருந்தில் கருத்தரிப்பு மையத்திற்கு எதிரில் இருந்த மாலுக்கு வந்தான்.

அந்த மாலில் முன்பக்கம் சில இடங்களில் சுவருக்குப் பதிலாக அழகான கண்ணாடியால் கட்டி இருந்தனர். அதனால் உள்ளிருந்து வெளியே பார்க்க முடியும். ஆனால் வெளியிலிருந்து உள்ளே தெரியாது.

காலை முதல் இரவு வரை கண்காணித்தான். ஒரு நாள் மால் மற்றொரு நாள் அருகிலிருந்த உணவகத்தில் என்று பார்வையிட்டான்.

முதல் நாள் சுந்தரியும் வரவில்லை. எந்த இளம் பெண்ணும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவு ஒன்பது மணி அளவில் சுந்தரி வந்தார். கருத்தரிப்பு மையத்தின் பின் வாசல் வழியே வந்தார்.

காரை பார்க் செய்தவர் சட்டெனத் திரும்பிப் பல இடங்களை நோட்டமிட்டார். பிறகு சுந்தரி உள்ளே சென்றுவிட்டார். இவன் மறைந்திருந்து கண்காணித்தான்.

இது நோயாளிகளைப் பார்க்கும் நேரம் அல்ல. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே நோயாளிகளைப் பார்ப்பார். அதுவும் முன்னமே பதிவு செய்திருக்க வேண்டும்.

இப்படி பல கெடுபிடிகள் இருக்க இந்த நேரத்தில் எதற்கு என துஷ்யந்திற்கு புரியவில்லை. அதுவும் பின் வழியாக ஏன் வர வேண்டும்? அவனுள் எனப் பல கேள்விகள்.

வெண்பா சொன்னது உண்மையாக இருக்கும் என்றே தோன்றியது. அடுத்த செய்ய வேண்டியதை வெண்பாவுடன் பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் திரும்பினான்.

இவ்வுலகத்தில் எத்தனை எத்தனை மோசடிகள் நடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நமக்கு என்ன செல்லும் மனிதர்கள் தான் அதிகம். ஆனால் வெண்பா யாருக்கோ என்றில்லாமல் அதை தன் துன்பம் போல பாவிக்கிறாள். அவளை நினைத்து பெருமையாக இருந்தது.

ஆனால் இதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என துஷ்யந்த் எதிர்பார்க்கவில்லை.

வெண்பாவிற்கு இந்த விஷயத்தில் முழுமையாக உதவ வேண்டும் என்று முடிவு செய்தான் துஷ்யந்த்.

அடுத்த இரண்டு நாட்களில் விடுதியின் ஆறாம் மாடிக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர். இப்போது தேர்வு முடிந்து மாணவர்கள் ஊருக்குச் சென்றுள்ளனர். விடுதியில் யாரும் இல்லை.

அடுத்தாக அந்த பகுதியில் இரவு ஏழு மணி முதல் எட்டு மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும். யாரும் இல்லாததால் அந்த நேரத்தில் அனாவசியமாக ஜெனரேட்டர் பயன்படுத்த மாட்டார்கள். வெளியே ஒரு வாட்ச்மேன் சரக்கடித்து கொசுக்களின் மெல்லிசையில் மெய் மறந்து கிடப்பான்.

இதைவிட சாதகமான நேரம் கிடைப்பது அரிது என்பதால் அடுத்த நாள் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

இருவரும் குறிப்பிட்ட நாளில் சொன்ன நேரத்திற்கு அங்குச் சென்றனர். இரண்டு கட்டங்களில் ஒரு கட்டத்தின் பின் சுற்றுச்சுவர் உடைந்திருந்ததை வெண்பா முன்பே அறிவாள். அதன் மூலம் உள்ளே வந்தனர். இருவர் கையிலும் தேவையான டார்ச் முதலிய வஸ்துக்களும் இருந்தன.

முதல் கட்டத்தின் ஆறாம் மாடியில் கதவுகள் மூடி இருந்தன. ஆனால் பூட்டுகள் எதுவும் இல்லை. அந்த குறிப்பிட்ட அறைக் கதவு மட்டும் பூட்டியிருந்தது. சிறிய பூட்டை உடைப்பது அத்தனை சிரமாக இல்லை.

அந்த கடைசி அறை முழுவதும் காலியாக இருந்தது. ஒரு பொருள் கூட இல்லை. ஆனால் அறை மற்ற இடத்தைவிடக் குளிர்ச்சியாக இருந்தது. “இங்க மட்டும் எப்படி ஜில்லுனு இருக்கு” வெண்பா கேட்டாள்.

ஆனால் துஷ்யந்த் வேறொரு அறையை ஆராய்ந்தபடி இருந்ததால் அவளைக் கவனிக்கவில்லை.

ஒரே ஒரு பழைய கேலண்டர் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தது. யாரேனும் பார்த்தால் இங்கு எதுவும் இல்லை என சென்றிருப்பார்கள் .

ஆனால் வெண்பா அப்படி இல்லை. இங்கு ஏதோ முக்கியமான பொருள் உள்ளதென்று உள்ளுணர்வு உணர்த்தியது. அந்த பழைய கேலண்டரை எடுக்கவும். அந்த இடத்தில் மற்ற இடத்தை காட்டிலும் பெயிண்ட் நிறம் சற்றே மெலிதாக மாறி இருந்தது. அதன் மேல் தடவிப் பார்த்தாள். சிறிய இரும்பு லாக்கர் போன்று காணப்பட்டது. சட்டெனப் பார்த்தால் தெரியாது. சுவரின் வண்ணத்தில் அதற்கும் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. மீண்டும் தடவினாள். பத்து ரூபாய் நாணயம் அளவு எதோ டக்கென துருத்து கொண்டது.

“துஷ்யந்த்” என்று அழைத்துக் காட்டினாள். அது நம்பர் லாக் சிஸ்டம் கொண்ட இரும்பு அலமாரி . இருவரும் சேர்ந்து திறக்க முயன்றனர்.

“வர்ஷா பர்த்டே என்ன?” அவசரமாக கேட்டாள்

அவனுக்கு சரியாகத் தெரியவில்லை இருப்பினும் ஒருமுறை பர்த்டே பார்ட்டிக்குச் சென்றதால் நினைவுபடுத்திக் கூறினான். ஆனால் மிகச் சரியாகத் தெரியவில்லை.

அதை பிரயோகித்தாள். இரண்டு முறை தவறானது. மூன்றாம் முறை திறந்து கொண்டது.

உள்னே மிகச் சிறிய கண்ணாடி குப்பியில் ஏதோ திரவங்கள் இருந்தன. மருத்துவ உபகரணங்களான ஊசி கையுறை என்று சில பொருட்கள் இருந்தது.

வெண்பாக் கண்ணாடிக் குடுவைகளை எடுத்துத் தான் கொண்டு வந்திருந்த பையில் போட்டாள்.

அப்போது அந்த அறையின் விளக்கு உயிர் பெற்றது. திடுக்கிட்டு இருவரும் திரும்பச் சுந்தரி இரண்டு கைகளையும் குறுக்கே கட்டியபடி நின்றிருந்தார்.

அவர் உடல்மொழியில் எள்ளலும் குரோதமும் அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் கண்கள் வெண்பாவின் மேல் மட்டுமே நிலைத்திருந்தது.

“இந்த இடத்துக்கு சோலார் பேணல் (Solar panel) மூலமா கரண்ட் வருது. உன் சந்தேகம் தீர்ந்ததா?” எனக் கேலியுடன் வினவினார்.



துளிகள் தெறிக்கும்…








































 
  • Love
Reactions: jai_2000