துளி துளியாய் துரோகம் 22
சுந்தரி சீராக காரை ஓட்டிக் கொண்டிருந்தார். எந்த தடையையும் லாவகமாகச் சமாளித்தார். தன்னால் வாகனத்தை மட்டும் அல்ல வாழ்க்கையிலும் எதையும் சாதித்துச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை சில தருணங்களில் கர்வமாக அவருள் உருவெடுத்தது.
அருகில் வர்ஷா அமர்ந்திருந்தாள். தன் செல்போன் மற்றும் சாலை என மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பார்வை அவளை போலவே தடுமாற்றத்துடன் இருந்தது. அதை சுந்தரி கவனித்தார். வர்ஷா வாழ்க்கையில் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
தங்கள் சாம்ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் மட்டுமே உள்ளாள்.
வர்ஷாவை நினைக்க நினைக்க மனதில் ஏதோ சொல்ல முடியாத வேதனை அதிகரித்தது. தன்னுடைய குணநலன்கள் மகளுக்கு இல்லை என வருத்தப்பட்டார்.
தாயும் மகளும் குடும்ப நண்பர் வீட்டுக் கல்யாண வரவேற்பிற்காகச் சென்று கொண்டிருந்தனர்.
வர்ஷாவுடன் சுந்தரி இருந்தால் சிந்து மற்றும் பைரவி இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி. அதனால் அவர்கள் இல்லை. அதிலும் எத்தனை பெரிய மனிதரின் வீட்டு விசேஷத்துக்குச் செல்கின்றனர். அதற்கு வேலை ஆட்களை அழைத்துச் செல்வது என்பது அவர்களின் அந்தஸ்துக்கு இழுக்கு.
சுந்தரி கல்யாண மண்டபத்தை அடைய விடுதியைக் கடந்து சென்றாக வேண்டும். அப்படி கடக்கையில் அந்த பகுதி முழுவதும் இருட்டாக இருந்ததை இருவரும் கவனித்தனர். சுந்தரிக்கு மின்வெட்டு நேரம் எனத் தெரியும்.
தெரு விளக்கு சில இடங்களில் மட்டுமே எரிந்தன. சுந்தரிக்கு அந்த விடுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். விடுதி இருட்டில் மூழ்கி யாருமில்லா அனாதையாக இருந்தாலும் சுந்தரி தன் இரண்டு ஆட்களை எப்போதும் அக்கம் பக்கத்தில் காவலுக்கு வைத்திருந்தார். அது எவருக்கும் தெரியாது.
அவர் கண்கள் எப்பொழுதும் போல விடுதியைத் தழுவியது. அப்போது ஆறாவது மாடியில் சிறிய வெளிச்சத்தைக் கண்டார்.
கல்லூரி விடுமுறை விடுதியிலும் யாரும் இல்லை என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருக்க அந்த வெளிச்சம் அவரை கலவரமாக்கியது. வண்டியை ஓரமாக நிறுத்தினார்.
“ஏன் வண்டியை நிறுத்திட்டீங்க?” வர்ஷா கேட்டாள்.
சுந்தரி இரண்டாம் கட்டடத்தைச் சுட்டிக் காட்டி “ஆறாவது மாடியை பாரு வெளிச்சம் வருதானு” சுந்தரி கேட்க
இருவரும் இப்போது கூர்மையாகக் கவனிக்க மீண்டும் வெளிச்சம் வந்து போனது.
சுந்தரி தன் செல்போனில் அதற்கான ஆப் மூலம் அந்த ஆறாவது மாடியின் சீசீ கேமராவில் பதிவானதைக் கண்டார் . அனைத்தும் தனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணுபவர் சுந்தரி ஆயிற்றே!!
அங்கே துஷ்யந்த் மற்றும் வெண்பா இருப்பது தெரிந்தது. அவர்கள் டார்ச் வெளிச்சத்தில் மெல்ல மெல்ல அனைத்தையும் கண்டுபிடித்தது. அவர்களுக்கு அனைத்து உண்மையும் தெரிந்துவிட்டது என்பது சுந்தரிக்கு நன்கு புரிந்தது. சற்று அதிர்ச்சியாகக் கூட இருந்தது.
“இங்கு மட்டும் குளுமையாக எப்படி உள்ளது?” என்ற வெண்பாவின் கேள்வி. அதனுடன் அவள் மிகச் சரியாக தாங்கள் மறைத்து வைத்திருந்த திரவங்களை எடுத்தது என அனைத்தும் அவரின் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தியது. இனி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அபாயம் நிறைந்தது என்று அடுத்த கட்ட நகர்வில் ஈடுபட்டார்.
உடனே வண்டியிலிருந்து இறங்கி அவசரமாக உள்ளே சென்றார்.
“அம்மா எங்க போறீங்க?” வர்ஷா சத்தமிட
“சத்தம் போடாத உள்ள உன் காதலனும் உன் வருங்கால சக்களத்தியும் சந்தோஷமா காதலிச்சிட்டு இருக்காங்க” என்றதும் உறைந்து நின்றாள் வர்ஷா. ஆத்திரத்துடன் எதுவும் பேசாமல் அம்மாவைத் தொடர்ந்தாள்.
வெண்பா சிறிய துணிப் பையில் திரவம் கலந்த கண்ணாடி குப்பிகளைப் போட்டுக் கொண்டாள். அதை தன் பேக்பேகில் போட்டுக் கொள்ள முனைகையில் தான் அந்த அறையின் விளக்கு உயிர் பெற்றது.
அதிர்ச்சியுடன் துஷ்யந்த் மற்றும் வெண்பா திரும்ப அங்கே சுந்தரி இருந்தார்.
சுந்தரியின் உடல்மொழி எள்ளல் பார்வை என அனைத்தும் நீங்கள் என்னிடம் தோற்றுவிட்டீர்கள் என்று சொல்லாமல் சொல்லியது. அவரின் சோலார் பேணல் குறித்த பதில் இன்னும் அதிர்வை உண்டாக்கியது.
சுந்தரி ஆறாவது மாடியை அடைவதற்குள் தன் ஆட்களில் ஒருவனுக்கு போன் செய்தார்.
துஷ்யந்த் வெண்பாவை தன் பின்னே நகர்த்திக் கொண்டான். “அத்தை நீங்க செய்ற எதுவும் சரியில்ல … உடனே சரண்டர் ஆகிடுங்க” என்றான்.
இதைக் கேட்ட வர்ஷா குழப்பத்துடன் எதுவும் புரியாமல் அதிலும் தன் அன்னையைக் குற்றவாளியைப் போல அவன் சொன்னதும் கோபம் வந்துவிட்டது.
“என் அம்மா என்ன செஞ்சாங்க? அவங்க எதுக்கு சரண்டர் ஆகணும் துஷ்யந்த்” என சீறினாள்.
தான் செய்யும் முறைகேடு மோசடி என எதுவும் தன் செல்ல மகள் வர்ஷாவுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார் சுந்தரி. இப்போது துஷ்யந்த் எதையாவது உளறி தன் மகளுக்கு எல்லாம் தெரிந்துவிடும் என்னும் பதட்டத்தில் “இந்த வெண்பா என்னை பத்தி ஏதோ தப்பா சொல்லி இருக்கணும்” என்று சொன்னதுதான் தாமதம்
வர்ஷா “வெண்பா என் துஷ்யந்தை என்கிட்ட இருந்து பிரிச்ச இப்போ என் அம்மாவா அக்யூசுடு மாதிரி ப்ரேம் பண்றியா? .. நான் விடமாட்டேன்” எனக் கீச்சு குரலில் ஆத்திரத்துடன் சத்தமிட்டாள்.
இதைக் கேட்ட துஷ்யந்த் மற்றும் வெண்பா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர் பின் வெண்பா “உன் துஷ்யந்தா?” எனக் கேட்டுச் சிரித்துவிட்டாள்.
“உன்னைக் கொலை செய்திட்டு நான் துஷ்யந்தை கல்யாணம் செய்துக்குவேன்” எனச் சீறினாள் வர்ஷா.
“அப்படி நீ செஞ்சாலும் அவன் மனசுல நான் தான் இருப்பேன்” என்றாள் வெண்பா.
“நான் சேலஞ் செய்றேன். துஷ்யந்தை நான் கல்யாணம் பண்ணாம விட மாட்டேன்.”
“இந்த ஜென்மத்துல நடக்காது” வெண்பா தானும் சளைத்தவள் அல்ல எனப் பதிலளித்தாள்.
அப்போது அலறி அடித்து சுந்தரியின் அடி ஆட்கள் இருவரும் வந்து நின்றனர். இருவரையும் எரித்துவிடுவது போல முறைத்தார் சுந்தரி “இதற்கா சம்பளம் கொடுக்கிறேன்” என குற்றம் சாட்டி துஷ்யந்த் வெண்பாவை காட்டினார்.
இங்கு யார் வரப் போகிறார்கள்? உள்ள என்ன இருக்கப் போகிறது? என இருவரும் சற்று அசட்டையாக இருந்துவிட்டதன் பலன் இதோ கண் எதிரே. அவர்களுக்கு எதுவும் தெரியாது. சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள்.
“ம்ம்” எனச் சுந்தரி உறுமி ஜாடை காட்ட இருவரும் துஷ்யந்த் வெண்பாவை தாக்க வந்தனர். துஷ்யந்த் ஒருவனையும் வெண்பா மற்றொருவனையும் முடிந்தவரைச் சமாளித்தனர்.
அடுத்து கட்டமாக வெண்பா துணிப் பையை எடுத்துச் சுழற்றி ஓங்கி சுவரில் அடித்தாள்.பைக்குள் கண்ணாடி குப்பிகள் உடைந்து திரவம் உள்ளே வெளியே எனச் கொட்டியது.
அந்த பையை கொண்டு ஓங்கி தன்னை தாக்க வந்தவன் மேல் அடித்தாள். அவன் அலறினான். அவன் சற்றே பின்னே நகர்ந்தான். ஆனால் வெண்பா விடாமல் துரத்தினாள். ஒரு கட்டத்தில் மீண்டும் அவள் அடிக்க எத்தனிக்க அவன் குனிய பின்னிருந்த சுந்தரி மேல் பலமாக பட்டது.
அடியாளுக்கு ஏற்பட்டது போலச் சுந்தரிக்கும் கண்ணாடி துண்டுகள் காயத்தை ஏற்படுத்தியது. அதைக் கண்டு வேண்டுமென்றே மேலும் ஒருமுறை அதே போல் தாக்கினாள் வெண்பா. அதோடு அந்த திரவங்கள் சுந்தரியின் காயத்தின் வழியே உடலுக்குள் சென்றது.
முகம் கை இடுப்பு என சில இடங்கள் கண்ணாடி காயத்தை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் அந்த திரவங்கள் பட்டு காயங்கள் எரிச்சலை உண்டு செய்தது.
வர்ஷா தன் அன்னையின் நிலைகண்டு அரண்டு போய்விட்டாள். அவள் இன்னமும் துஷ்யந்த் மற்றும் வெண்பா காதல் லீலை புரியவே இங்கு வந்துள்ளனர் என நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
சுந்தரியால் வலியை தாங்க முடியவில்லை. உச்சக்கட்ட கோபத்தில் “ரெண்டு பேரையும் கொல்லுங்க” என தன் ஆட்களைக் கண்டு ஓலமிட்டார்.
அப்படியே “வர்ஷா கார்ல பர்ஸ்ட் எயிட் பாக்ஸ் இருக்கு எடுத்திட்டு வா” என்றார் வலி வேதனையுடன்.
அவளும் தலைதெறிக்க ஓடிச் சென்று எடுத்து வந்தாள். சுந்தரி தானே இயன்றவரை தன் காயத்துக்கு மருந்திட்டார். கண்ணாடி துண்டுகள் சிலது உடல் உள்ளே சென்றுவிட்டது. அதை இங்கு எடுப்பது முடியாத செயல் வலியால் துடித்தார்.
வெண்பா சிறுவயதிலிருந்து காவல் துறையில் சேர விரும்பியவள் ஆயிற்றே ஆதலால் அவள் நன்றாகவே சமாளித்தாள்.
துஷ்யந்தும் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக இருந்தாலும் முயன்றவரைச் சமாளித்தான். துஷ்யந்தின் குத்துகள் அவனின் முகத்தைப் பதம் பார்த்தது.
துஷ்யந்த மற்றும் அந்த அடியாளும் சண்டையிட்டபடி அறைக்கு வெளியே வந்துவிட்டனர். அடியாள் பலமாக அடிக்க துஷ்யந்த் ஆறாம் மாடியின் நடைபாதையில் இருக்கும் சின்ன சுவர் பக்கமாக விழுந்தான்.
துஷ்யந்தால் அதற்கு மேல் சமாளிக்க முடியவில்லை. உதடு கிழிந்து ரத்தம் வழிந்தது. மூச்சிரைத்தது. ஆங்காங்கே சட்டை கிழிந்து ரத்தம் திட்டுகள் தெரிந்தன. இருப்பினும் வெண்பாவிற்கு எதுவும் நடக்கக் கூடாது என்பதே அவன் ஒற்றை குறிக்கோள்.
அடியாளின் அடுத்த தாக்குதலில் ஆறாம் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான் துஷ்யந்த்.
இதைக் கண்ட வெண்பா துடித்துப் போனாள். மற்றொரு அடியாளை அடிப்பதைக் கூட மறந்து துஷ்யந்த் விழுந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தாள். இருட்டாக இருந்தால் ஒன்றும் தெரியவில்லை.
கீழே செல்ல முயன்றாள். அதற்குள் அடியாள் அவள் கைகளை பின் பக்கமாக இழுத்து பலமாகப் பிடித்துக் கொண்டான்.
“துஷ்யந்த் துஷ்யந்த்” என அழுகையின் ஊடே சத்தமிட்டாள். அவள் குரல் இருட்டில் பயங்கரமாக எதிரொலித்தது.
மற்றொரு அடியாள் கீழே போய் பார்த்தான். அசைவின்றி கிடந்தான் துஷ்யந்த். அவனை சோதித்தான் மூச்சு பேச்சில்லை. மாடிக்கு வந்தவன் சுந்தரியிடம் “அவன் உயிரோடு இல்ல” என்றான்.
“இல்ல இல்ல இருக்காது. துஷ்யந்த் என்னைவிட்டு போக மாட்டான்” என கதறினாள் வெண்பா “ப்ளீஸ்” சரியா பார்த்துச் சொல்லு அவரை ஆஸ்பெட்டல் கூடிட்டு போகணும்” என தன்னை மறந்து கதறினாள்.
வர்ஷா வெண்பாவின் அழுகையை ஆனந்தமாக ரசித்தாள். துஷ்யந்த் இறந்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. தனக்குக் கிட்டாதவன் அவளுக்கும் இல்லை என்று நினைக்கையில் காற்றில் மிதப்பது போல மனம் இலகுவானது.
“இவளை முடிச்சிட்டு அவனைப் பார்க்கலாம்” எனச் சுந்தரி கீழே இறங்கினார்.
வெண்பா எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. ஒரே நொடியில் அனைத்தும் மாறிவிட்டது. துஷ்யந்த் இல்லாத உலகம் தனக்கும் வேண்டாம் என்று இருந்தாள். தன் தந்தையை நினைக்க அழுகை பீரிட்டது. இனி அவர் தனித்து என்ன செய்வார்? என கண்ணீர் ஆறாக ஓடியது.
அவர்கள் கீழ் இறங்கி காரை நோக்கி நடந்தனர். சுந்தரி மற்றும் வர்ஷா முன்னே நடக்க துவண்டு போன வெண்பாவை இரண்டு அடியாட்களும் ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்து நடத்தினர்.
சுந்தரி தன் காரில் வர்ஷாவுடன் கிளம்பினாள். மற்றொரு காரில் அடியாட்கள் வெண்பாவை உள்ளே தள்ளி ஒருவன் வண்டியோட்ட பின் இருக்கையில் வெண்பாவும் அவளின் காவலனும் அமர்ந்திருந்தனர்.
“ரயில்வே டிராக் பக்கமா போ” எனச் சுந்தரி கூறியது. இருட்டின் நிசப்தத்தில் துல்லியமாக்கக் கேட்டது. இரண்டு கார்களும் புறப்பட்டுச் சென்றன.
அவர்கள் செல்வதை இருட்டில் நின்றிருந்த மற்றொரு காரில் அமர்ந்தவன் பார்த்துக் கொண்டிருந்தான். அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அவன் முகம் உறைந்து போயிருந்தது.
“துஷ்யந்த்” என்ற வெண்பாவின் குரல் தான் அவன் வண்டியை நிறுத்தியது.
அவர்கள் இறங்கி வெளியே சென்று காரில் ஏறி போகும்வரை அனைத்தையும் தன் செல்போனில் அவற்றை ரெகார்ட் செய்தான்.
தன் காரையும் அவன் ஸ்டார்ட் செய்ய முனைகையில் “வெண்பா … வெண்பா” என மற்றொரு குரல் கேட்டது. காரிலிருந்தவன் எங்கிருந்து சத்தம் வருகிறதென்று சுற்றும் முற்றும் பார்த்தான்.
விடுதியிலிருந்து துஷ்யந்த் தாங்கி தாங்கி நடந்து வந்தான். ரத்ததால் குளித்திருந்தான். அவனின் ஒரு காலை ஊன்ற முடியாமல் தேய்த்தான். மற்றொரு காலிலும் அடி. ஆனாலும் வெண்பாவை தேடி அள்ளாடினான்.
அவன் நிலையைக் கண்ட காரில் இருந்தவன் சிலையாகி விட்டான். இத்தனை காயங்களுடன் எப்படி இவனால் நடக்க முடிகிறது என நினைத்தவன். துரிதமாக காரிலிருந்து இறங்கி அவன் அருகே சென்றான்.
ஆனால் துஷ்யந்த் சந்தேகமாக அவனைப் பார்த்து பின் வாங்க முயல “ப்ரோ ஒரு பொண்ண கிட்நாப் பண்ணிருக்காங்க. சீக்கிரம் வாங்க காப்பாத்தணும்” என்று பதட்டத்துடன் கூற .. துஷ்யந்துக்கு வேறு வழியும் இல்லாததால் சம்மதித்தான்.
துஷ்யந்தை தன் காரில் அமர வைத்தான். பிறகு அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்.
“வெண்பா வெண்பா” எனப் பேச முடியாமல் துஷ்யந்த் அரற்றினான்.
“வெண்பாவை காப்பாததான் போறோம் இருங்க” என்று அவர்கள் சொன்ன இடத்திற்குப் பக்கவாட்டில் சென்றான்.
சுந்தரி சொன்ன இடத்திற்குக் காரை ஓட்டிச் சென்றான். துஷ்யந்த் அதற்குள் காரில் மயங்கிவிட்டிருந்தான். ஏம்புலன்சுக்கு போன் செய்து துஷ்யந்தை அனுப்பலாம் என்றால் அதன் சத்ததால் சுந்தரி குருப் உஷாராகி விடுவார்கள்.
அதனால் சுந்தரி குறிப்பிட்ட இடத்திற்கு தன் காரை ஓட்டிச் சென்றான். அங்கே சுந்தரி ஆத்திரத்துடன் வெண்பாவை திட்டித் தீர்த்தாள்.
வர்ஷா வெண்பா கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். மனவலி உடல்வலியும் சேர்ந்து நிற்க முடியாமல் தடுமாறிச் சரிந்தாள் வெண்பா. களைந்த கூந்தல் வியர்வை மற்றும் அழுகையால் தளர்ந்திருந்தாள்.
சுந்தரி வன்மத்துடன் வெண்பாவிடம் பேசிக் கொண்டிருக்கையில் எதோ ஒரு திரவத்தை அவள் முகத்தில் வீசினாள். வெண்பா துடித்துக் கதறி அழுது மயங்கிச் சரிந்தாள்.
சுந்தரி அடியாட்களிடம் எதையோ கூற அவர்கள் வெண்பாவை ரயில்வே டிராக்கில் கிடத்தினர். அவளின் துப்பட்டாவைக் கொண்டு அவள் உடல் முழுவதையும் மூடினர்.
இரயில் வந்து அவள் இறக்கும்வரை யாருக்கும் காத்திருக்க முடியவில்லை. சுந்தரி மற்றும் அடியாளுக்கு உடல் வலி மிகுதியானது. இருவருக்கும் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நேரம் செல்ல செல்ல உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சுந்தரிக்கு வெண்பா மரணிப்பதை கண்ணாறா காண முடியாமல் போனதே என்பதில் மிகுந்த வருத்தம். சுந்தரி ஒரு கொலையைச் செய்யத் திட்டமிட்டால் இடம் ஆயுதம் என அனைத்தையும் மிகச் சரியாகத் திட்டமிடுவார்.
இது எதிர்பாராமல் நடந்த நிகழ்வு அதனால் சில குளறுபடிகள் நடந்துவிட்டது. அடியாட்கள் தங்கள் காரில் சில சின்ன ஆயுதங்கள். சாராய பாட்டிலில் ஏசிட் போன்றவற்றை அவசரத்திற்கு மறைத்து வைத்திருப்பார்கள்.
இரண்டு அடியாட்களில் ஒருவன் கண்ணாடி துண்டுகளான காயங்கள் மற்றும் அந்த திரவத்தின் தாக்கத்தால் மரண வலியிலிருந்தான். சுந்தரி மற்றொருவனிடம் “ஹாஸ்டல்ல இருக்கிற பாடிய கிளியர் பண்ணிடு” என்றாள்.
ஆனால் அவனோ காயப்பட்டிருக்கும் தன் நண்பனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல எண்ணியிருந்தான்.
சுந்தரியின் கட்டளையை மீற முடியாது என்பதால் அவசரமாகக் காரை ஓட்டி விடுதியில் பார்க்க துஷ்யந்த் அங்கு இல்லை. அவன் நண்பன் வலியில் “ஐயோ அம்மா” என துடித்தான்.
ஆனது ஆகட்டும் என நண்பனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.
சுந்தரி தன் மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
“எப்படி அடிபட்டது?” எனக் கேட்க
“சொன்னால்தான் டிரீட்மெண்ட் குடுப்பியா?” என அதிகாரத்துடன் கேட்டார். சுந்தரியிடம் சம்பளம் வாங்கும் மருத்துவர்கள் வாயை மூடிக் கொண்டு சிகிச்சை அளித்தனர்.
மோகன் வியாபார விஷயமாக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தார். அவரிடம் எதையும் போனில் பேச முடியாது. தாய் மருத்துவமனையில் வலி வேதனையில் இருக்கிறார். வர்ஷா முதல் முறையாகத் தனியாகப் போராடினாள்.
சுந்தரி கூட்டம் அங்கிருந்து சென்றுவிட்டனர். காரில் இருந்தவன் அவர்கள் சென்றதை உறுதி செய்து கொண்ட பின்னர். வெண்பாவின் அருகே சென்று சோதித்தான்.
அவள் உயிருக்கு ஆபத்தில்லை ஆனால் முகத்தில் ஏசிட் வீச்சினால் பாதிப்பு ஏற்பட்டிருந்து. அவளை மலரை போல மெல்ல தூக்கி காரின் பின் சீட்டில் துஷ்யந்த் அருகே சாய்த்துப் படுக்க வைத்தான். இருவரும் சுயநினைவின்றி கிடந்தனர்.
அப்போதுதான் வெண்பாவின் துப்பட்டா அங்கேயே விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் அங்குப் போய் துப்பட்டாவை எடுத்தான். அது எதிலோ சிக்கியிருந்தது. எடுக்க முடியவில்லை.
அவர்கள் மீண்டும் வந்துவிட்டால் பிரச்சனை எனத் துப்பட்டா போனால் போகிறது என வந்துவிட்டான். இருவரையும் தன்னுடைய மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்தான்.
இவன் தான் வெண்பா தந்தையிடம் வெண்பாவை பெண் கேட்ட மாப்பிள்ளை. தான் மணக்க இருக்கும் பெண்ணை இந்த நிலையில் கண்டது மகிழ்ச்சி துன்பம் என இரண்டையும் அளித்தது. என்ன ஆனாலும் வெண்பாவை மணந்தே தீர வேண்டும் என்ற உறுதி பூண்டான்.
துளிகள் தெறிக்கும்…