• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 25

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
125
99
28
Thanavur
துளி துளியாய் துரோகம் 25


வெண்பா ஜன்னல் வழியே வெளியேப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது. கண்ணால் பார்க்கும் எதுவும் கருத்தில் பதியவில்லை.

தந்தையிடம் சொல்ல வேண்டிய செய்தியை நினைக்கையில் தயக்கம் ஆலகால விஷமாய் தொண்டையை அடைத்தது. நிச்சயம் தந்தை இவள் கூற்றை ஏற்க மாட்டார்.

வயதான காலத்தில் அவருக்கு தன்னால் எத்தனை துன்பம் என எண்ணுகையில் உள்ளம் வலித்தது. இருப்பினும் அனைவரின் நன்மையைக் கருதி இதைச் செய்தாக வேண்டும். துஷ்யந்த் தன்னவள் மனநிலை உணர்ந்து அமைதியாக அமர்ந்திருந்தான்.

வேறு வழியில்லாமல் தந்தை பக்கம் திரும்பினாள். அவள் மும்முரமாக சாத்துக்குடி பழச்சாற்றை தன் மகளுக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா நீங்க இன்னொரு வேலை செய்யணும்” என தன் தந்தையிடம் நிதானமாகத் தயங்கி பேச்சைத் தொடங்கினாள்.

“என்ன வெண்பா சொல்லு?” அவர் தன் வேலையைச் செய்த வண்ணம் பாசத்துடன் வினவினார்.

“அது அப்பா நீங்க மதுரைக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போயிடுங்க .. அங்க உங்க ஸ்கூல் பிரான்ச் இருக்குல? என நிறுத்தி நிதானமாகக் கூறினாள்.

அப்படியே வேலையை நிறுத்தி அவள் பக்கம் திரும்பினார் “என்ன வார்த்தை சொல்லிட்ட வெண்பா உன்னை இந்த நிலைமையில் தனியா விட்டு என்னால வேற இடத்துல எப்படி இருக்க முடியும் சொல்லு? முடியவே முடியாது என்னாலப் போக முடியாது” எனச் சற்றே கோபத்துடனும் அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும் கூறினார்.

இதை எதிர்பார்த்த வெண்பா “நம்ம இரண்டு பேர் நல்லதுக்காக சொல்றேன். இப்ப என்னால முழுக்காரணத்தை சொல்ல முடியாது. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க அப்பா” கெஞ்சினாள்.

“முடியாது நான் இங்க இருக்கும் போதே என்னை ஏமாத்திட்டு போலீஸ் மாதிரி ஏதோ செய்ற .. நான் ஊரை விட்டு போனா அவ்வளவுதான். உன்னைக் கண்டிக்கவே ஆள் இல்லாம நீ இன்னும் என்ன ஏழரை இழுப்பனு சொல்ல முடியாது” எனக் காட்டமாக் கூறினார்.

“அங்கிள் நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாம இருங்க” என துஷ்யந்த் சொன்னான்.

துஷ்யந்தை பற்றி முன்னமே அஸ்வத் கூறி இருக்கிறான். அஸ்வத்திற்கு ஒரு விதத்தில் துஷ்யந்த் உறவினன் தானே.

“அங்கிள் என் வருங்கால மனைவியைக் கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியது என் கடமை.” என துஷ்யந்த் மீண்டுமாய் கூறினான்.

அதைக் கேட்டு வெண்பா தந்தை ஒரு நிமிடம் விக்கித்துப் போனார். அவர் கண்கள் கலங்க குலுங்கி குலுங்கி அழுதுவிட்டார்.

சில இளைஞர்கள் தாங்கள் மணக்கும் பெண் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது அவர்கள் உரிமை மற்றும் ஆசை. தவறும் இல்லை.

முகத்தின் ஒரு பக்கம் அலங்கோலமாக இருக்கும் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ள இனி யாரிடமும் கேட்க முடியாது. அவள் வாழ்க்கை பாழாய்ப் போனது என எண்ணியவருக்கு துஷ்யந்தின் வார்த்தைகள் அவர் அடிமனதிலிருக்கும் அத்தனை கவலைகளையும் மொத்தமாக வாரி சுருட்டி வெளியேற்றிவிட்டது. அதன் வெளிப்பாடு தான் அழுகை.

ஒரு தந்தையாய் தன் மகளும் திருமணம் குடும்பம் என நிறைவான வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.

வெண்பாவும் தந்தையுடன் சேர்ந்து அழுதுவிட்டாள். தந்தையின் மனக்கவலை அவளுக்குப் புரியாமல் இல்லை.

துஷ்யந்த் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தான். சில நிமிடங்களில் அவர்கள் சகஜ நிலைக்குத் திரும்பினர்.

“நீங்க இப்ப மதுரைக்கு போனா தான் வெண்பா எதிர்காலத்துக்கு உபயோகமா இருக்கும் அங்கிள். உங்களுக்கு ஒரு நாள் இதுக்கான காரணம் புரியும்.” என்றான் அமைதி அவர் அருகில் அமர்ந்து.

“தம்பி நான் ஒன்னு கேட்கணும்” என தயங்கினார்.

“எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க அங்கிள்”

“உங்களுக்கு உன்மையாவே வெண்பாவைக் கல்யாணம் செய்துக்க இஷ்டமா?”

“இது என்ன கேள்வி அங்கிள். நாங்க ரெண்டு பேரும் மூணு வருஷமா காதலிக்கிறோம்” என்றான்.

“அது வேற காலம் .. வேற சூழல் .. காதலிச்சிங்க .. ஆனா இப்ப? அவ முகம்??” என அவரால் பேச முடியவில்லை.

“என்னைப் பொருத்தவரை இப்ப வெண்பா ப்ளாஸ்டிக் சர்ஜரி கூட செய்துக்கணும் அவசியமில்ல. அவளை இப்படியே மனைவியா ஏத்துக்க தயார் தான் .எனக்கு மனசுதான் முக்கியம்”

இன்னமும் குழப்பம் அகலாமல் “உங்க வீட்ல? சொந்த பந்தம் அவங்க ஏத்துகணும் இல்லையா?…” அதற்கு மேல் பேச இயலாமல் தரையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

“நான் சத்தியம் செஞ்சி தரேன். வெண்பாவை என் ஆயுள் முழுக்க கண்ணுல வெச்சி பார்த்துப்பேன். என் வீட்டில் எல்லாரும் சந்தோஷமா வெண்பாவை ஏத்துப்பாங்க”

“என்ன தம்பி சத்தியம்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு” எனப் பதற்றத்துடன் துஷ்யந்த் கரத்தைப் பற்றினார். சிறிது நேரம் இருவரும் மனம் விட்டுப் பேசினர். அவர் மனம் லேசானது. பின்பு மனமே இல்லாமல் வீட்டுக்குக் கிளம்பினார்.

துஷ்யந்த் அவருடன் வெளிவரை சென்று அனுப்பிவிட்டு திரும்பினான். வெண்பா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். “என்ன அப்படிப் பார்க்கிற?” அவன் கேட்க

அவன் சட்டையைப் பிடித்து அருகில் இழுத்து அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள் “என்னால உனக்கு எத்தனை கஷ்டம். சாரி … தேங்க்ஸ் ..” என அழுகையுடன் வார்த்தைகள் கோர்வை இல்லாமல் விழுந்தது.

அவளை ஆதரவாக அணைத்தவன் “என் பழைய வெண்பா எங்க போனா? முதல் நாள் காலேஜ்ல ராக்கிங் செய்ய நினைச்ச பசங்களை வெச்சி செய்யக் காத்திருந்தாளே?” மிகவும் மெல்லிய குரலில் காதலுடன் வினவினான்.

சட்டெனத் தலைநிமிர்ந்து பார்த்தாள். இவனுக்கு எப்படி தன் மனதிலிருந்தது தெரியுமென?

“தனக்கு அனைத்தும் தெரியும்” என கண்களால் புன்னகையுடன் பதிலளித்தவன் அவளின் முகத்தின் கண்ணீர் கோடுகளை ஒரு பக்கம் தன் விரலால் துடைத்தான். மறுபக்கத்திற்குப் பஞ்சைக் கொண்ட மெல்ல ஒற்றி எடுத்தான்.

“அழாத டா எனக்கு அந்த பழைய தைரியமான வெண்பா வேணும். இன்னும் எத்தனை பேரை நீ வெச்சி செய்யணும். லிஸ்ட் பெருசா இருக்குல” எனச் சொன்னது தான் தாமதம்

இதைக் கேட்டுச் சிரித்துவிட்டாள். அவளை ஆதரவாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். அவளும் அவனை இருக்கமாக அணைத்துக் கொண்டாள். நிமிடங்கள் மௌனமாக கரைந்தன.

வெண்பாவின் தந்தை பள்ளியில் தன் மகளின் மரணம் வேதனை அளிப்பதாகவும். மன மாற்றத்திற்காக மதுரை பள்ளிக்கு இடம் மாற்றல் வேண்டும் என விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகமும் அவர் மேல் கொண்ட மதிப்பு மரியாதை மற்றும் அவரின் சூழல் கருத்தில் கொண்டு உடனே மாற்றல் வழங்கியது.

சுந்தரி மருத்துவமனையில் இருப்பதால் சிந்து மற்றும் பைரவி பங்களாவின் அவுட் ஹவுசில் தங்கிக் கொள்ளச் சுந்தரி கட்டளையிட்டார். அதன்படி இருவரும் இப்போது வர்ஷாவுடன் உள்ளனர். பங்களாவிற்குள் எந்த தடையுமின்றி அவர்கள் செல்லலாம்.

வர்ஷா ஓடிடியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தாள். வர்ஷாவிற்கு இரவு உணவை எடுத்துக் கொண்டு சிந்து வந்தாள். தட்டில் சப்பாத்தி சப்ஜி என அவளுக்குப் பிடித்த உணவுகளை சீராகவைத்துக் கொடுத்தாள்.

சிந்து பக்கம் கூடத் திரும்பாமல் தட்டை வாங்கி உண்ணத் தொடங்கினாள். கவனம் முழுவதும் திரைப்படத்தில்.

“வர்ஷா இன்னிக்கு துஷ்யந்தைப் பார்த்தேன்.” என்றாள் சிந்து.

அவள் வார்த்தையில் கவனம் செலுத்தாமல் “அது வேற யாராவது இருக்கும். நீ சரியா பார்த்திருக்க மாட்ட” என்றாள். மனதிலோ தன் கண்முன் தானே அவன் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மடிந்தான்.

“இல்ல அது துஷ்யந்த் தான் பா. வெண்பா இறந்துல இருந்து அவன் மனநிலை சரியில்லையாம். கவுன்சிலிங் கூடிட்டு போயிட்டு இருக்காங்க” என்றாள் உறுதியான குரலில்.

இதைப் பைரவி சொல்லி இருந்தாள் நிச்சயம் நம்பி இருக்க மாட்டாள். அவளுக்கு விளையாட்டு புத்தி. எதையும் சரியாகக் கவனித்து ஆராயமாட்டாள். ஆனால் சிந்து வார்த்தையில் நிச்சயம் உண்மை இருக்கும். அவன் வீட்டு அருகே சென்று காணத் திட்டமிட்டாள்.

அவளுக்கும் துஷ்யந்த் சடலம் என்ன ஆனது என அறிய ஆவலாக இருந்தது. அவன் குடும்பமும் அமைதியாக இருக்கிறது என்பது மற்றொரு நெருடல்.

“அவன் வீட்டு பக்கத்துல போய் பார்க்கலாமா?” வர்ஷா கேட்கவும். சரி என்றாள் சிந்து. இன்னமும் துஷடயந்தை காதலிக்கிறாள் வர்ஷா என நினைத்துக் கொண்டாள்.

இருவரும் ஒரு நாள் தொலைவில் இருந்து பார்த்தனர். சிந்து சொன்னது உண்மை என்று தெரிந்தது. அவன் உடல்மொழியில் தடுமாற்றம், உடையில் கவனம் இல்லை, பார்வையில் தெளிவு இல்லை என அவனிடம் பல மாற்றங்கள் தெரிந்தன.

மறுநாள் வர்ஷா துஷ்யந்திற்கு போன் செய்தாள். ஆனால் போன் ரிங் போனது பதில் இல்லை. பின் இரண்டு மூன்று முறை முயலவும் அதே நிலைமை தான்.

இதை உடனே தன் தாயிடம் கூற மருத்துவமனைக்குச் சென்றாள். சுந்தரி மருந்தின் தாக்கத்தால் சோர்வாகவும் எதையும் கிரகிக்கும் நிலையிலும் இல்லாமல் இருந்தார்.

வர்ஷா கமலாவின் எச்சரிக்கையும் மீறி “அம்மா துஷ்யந்த் திரும்பி வந்துட்டான். நான் போன் செஞ்சேன் எடுக்கவே இல்ல” என்றாள்.

சுந்தரிக்கு மகளின் செயல்பாடுகள் கவலையை அளித்தது. மகள் யாரையோ துஷ்யந்த் என்று நினைத்து பேசுவதாகவே நினைத்தார். இருப்பினும் அவள் மனம் நோகக் கூடாது என “விடு வர்ஷா கொஞ்ச நாள்ல பேசுவான். வெண்பா இறப்பினால் துக்கமா இருக்கான் போல .. அவன் உனக்குத் தான்” என்றார் வேண்டுமென்றே தொடர்பில்லாமல் பேசினார்.

மகளிடம் தன் ஆணையால் அவனைக் கொலை செய்து எரித்துவிட்டனர் என்று கூறவா முடியும்? அல்லது தனக்கு ஒரு நிழல் வாழ்க்கை உள்ளதை அவளிடம் பகிர முடியுமா? அதனால் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க இவ்வாறு கூறினார்.

“ஆறாவது மாடியில் இருந்து விழுந்து செத்துப் போனவன் எப்படிப் பிழைக்க முடியும்?” என்று அறிவிப் பூர்வமாகக் கேட்பார் என்று நினைத்து வர்ஷாவுக்கு ஏமாற்றமானது.

“அம்மா அது எப்படி மா?” என மீண்டும் கேட்க வந்தவள்

“வர்ஷா எனக்குத் தூக்கம் வருது” எனக் கண்ணை மூடினார்.

இனி தாயிடம் இதைப் பற்றிப் பேசி பலன் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

இதை வெளியிலிருந்து கமலா கேட்டுக் கொண்டிருந்தார். நல்லவேளையாக அந்த பேச்சு உப்பு சப்பில்லாமல் முடிந்ததில் நிம்மதி. தகவலை அஸ்வத்திற்குத் தெரிவித்தார்.

ஆனால் வர்ஷாவால் துஷ்யந்த் திரும்பியதை ஏற்கவும் முடியவில்லை. மறக்கவும் முடியவில்லை. யாரிடமும் இதைப் பற்றிப் பேசவும் இயலாது. இது தனக்கும் தன் தாய்க்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் என்பதால் மற்றவரிடம் விவாதிக்கவும் இயலாது.

பலமுறை துஷ்யந்த் எண்ணிற்கு போன் செய்தாள். பதில் இல்லை. பிறகு ஓரிருமுறை துஷ்யந்த் தாய் பேசினார் “படுத்திருக்கான். உடம்பு சரியில்ல” எனச் சில வார்த்தையில் முடித்துக் கொள்வார்.

துஷ்யந்த் தன் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராதவாறு ஒரு கதையைக் கூறியிருந்தான். அதில் சுந்தரி வர்ஷா பேர் இடம்பெறவில்லை. ஏன் எனில் அவர்கள் தன் காதலியால் வேட்டையாடப் பட வேண்டியவர்கள்.

வர்ஷா அன்று வந்த அடியாட்கள் யார்? அவர்களிடம் கேட்கலாம் எனத் தேடினாள். அவர்களும் சிக்கவில்லை.

இறுதியாக ஒரு நாள் துஷ்யந்த் அவன் வீட்டிலிருந்து கவுன்சிலிங்காகத் தாயுடன் கிளம்பும் தருணத்தில் வர்ஷா எதிர்பாராமல் சந்திப்பதைப் போல “ஆன்ட்டி எப்படி இருக்கீங்க?” என்றாள்.

“நல்லா இருக்கேன் வர்ஷா. நீ எப்படி இருக்க? அம்மா உடம்பு பரவாயில்லயா? எப்ப டிஸ்சார்ஜ்?” என அவரும் மரியாதைக்காக கேட்டு வைத்தார்.

“இப்ப பரவாயில்லை” என்றவள் “துஷ்யந்த் உனக்கு என்ன ஆச்சு?” அவனைக் கூர்ந்து நோக்கி கேட்டாள்.

அவன் அவளைப் புதிதாகப் பார்ப்பதைப் போலப் பார்த்துவிட்டு தன் அன்னைப் பக்கமாகத் திரும்பி “எனக்கு என்ன ஆச்சு?” என அதையே கேட்டான்.

“உனக்கு ஒன்னுமில்லடா கண்ணா கார்ல உட்கார்” எனக் கதவைத் திறந்து மகனை அமர வைத்தார்.

“வர்ஷா அவனுக்குப் பழைய விஷயம் எதுவும் ஞாபகம் இல்ல. இப்பதான் கொஞ்சம் பரவாயில்லை . நீ எதையும் அவன்கிட்ட கேட்காத” என்று சொன்னதுடன் “டிரைவர் வண்டியை எடு” என அவரும் காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

வர்ஷாவிற்கு ஒருபுறம் பயம் வாட்டி வதைத்தது. ஒருவேளை துஷ்யந்திற்கு பழைய நினைவுகள் திரும்பி விட்டால் என்ன செய்வது? தன் அன்னை தனக்காக செய்த கொலை பற்றி வெளியே தெரிந்துவிடும்.

துஷ்யந்த் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அவனைத் திருமணம் செய்து கொண்டால் அவனின் ஒவ்வொரு அசைவும் தெரியும்.

ஆனால் இவனைத் திருமணம் செய்து வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்குமா? கண்டிப்பாக இல்லை. ஆனால் தன் அன்னைக்கு நிம்மதி கிடைக்கும். தனக்காக அன்னை கொலை செய்திருக்கிறார். அவருக்காக தான் இதை செய்தே ஆக வேண்டும் எனத் தீர்மானித்தாள்.

முன்பு இவனைத் தானே காதலித்தோம் அப்போது இவனைப் பிடித்ததே.

வர்ஷா அன்னை நலனுக்காக துஷ்யந்தை திருமணம் செய்ய முடிவெடுத்தாள். காலப் போக்கில் அவனிடம் மாற்றம் தெரிந்தது. ஆனால் பழைய நினைவுகள் மட்டும் மீளவில்லை.

“ஐயோ வர்ஷா என் உயிரை எடுக்கிறா” என வர்ஷாவைப் பற்றி வெண்பாவிடம் புலம்பித் தள்ளினான். “பைத்தியம் மாதிரி நடிக்கிறது எத்தனை கஷ்டம் தெரியுமா?”

வெண்பா கண்ணில் நீர் வரும் வரை சிரித்தாள் “டேய் இன்னும் கொஞ்ச நாள் தான்” என அவனை அமைதியாக்கினாள்.

“சரி நேரம் ஆச்சு நான் டியூட்டி பாக்க கிளம்புறேன்” எனச் சென்றுவிட்டான். அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

தான் இங்கு அமர்ந்து இதைச் செய் அதைச் செய் எனக் கூறுகிறோம். பாவம் தன்னை சுற்றி உள்ளவர்கள் தனக்காக எத்தனை செய்கிறார்கள் என வெண்பா மனம் உறுத்தியது.

துளிகள் தெறிக்கும்…