• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
காதலாடும் தூரங்கள் - 01

அதிகாலை மணி ஐந்து. விடிந்தும் விடியாத காலை பொழுது, ஆதவனின் அலைக்கரங்கள் பூமித்தாயை மெல்லத் தழுவி, தட்டி எழுப்பி, இருளை விரட்டி கொண்டிருந்த நேரம்.

அதே நேரம் ஒரு நாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் அந்த சிறிய வீட்டின் சமையலறையில் மின்னல் வேகத்தில் வேலைகளை செய்து கொண்டிருந்தாள் பூங்கொடி. ஏழு மணிக்குள் காலை மதியம் என இரண்டு வேலைக்கும் சமையலை முடித்தாக வேண்டும்.

அப்போதுதான் கணவன் பிள்ளைகள் என மூவரும் வேலைக்கும் பள்ளிக்கும் சாப்பிட்டு கிளம்பமுடியும். அவர்கள் சென்ற பிறகுதான் பக்கத்து ஊரான போடியில் இருக்கும் தன் அக்கா வீட்டின் விசேஷத்திற்கு அவளால் கிளம்ப முடியும்.

கணவன் வருவானா, தெரியாது? அவளையும் அனுப்புவானா தெரியாது? அதனால் அவனின் அனைத்து கேள்விகளுக்கும் தன் மனதை தயாராகவே வைத்திருந்தாள்.

நேற்றிரவே அவளின் அக்கா அமுதா அழைத்து சொல்லிவிட்டாள், “தம்பி வரலன்னா விட்டுடு. உன்னையும் அனுப்பலன்னாலும் கூட பரவாயில்லை. இதுக்காக அவர்கூட சண்டை போடாத.” என.

‘ஹான் சண்டையா நானா? அதுவும் அவனோடு. எல்லாம் தெரிந்தும் பேசுகிறவர்களை, ம்ச் சலிப்பு வந்தது. கட்டிய கணவன்தான் அனைத்து உரிமையும் இருக்கிறதுதான், இல்லை இல்லை இருந்ததுதான். ஆனால் அதெல்லாம் ஒருகாலத்தில். இப்போது ம்ச் மீண்டும் சலிப்பு…

சமீப காலமாக இப்படித்தான் அனைத்திற்கும் சலிப்பு பூங்கொடியிடம். வாழவும் சலிப்புத்தான். ஆனால் வாழவேண்டுமே. எங்கோ ஒரு மூலையில் நம்பிக்கை எனும் தீபம் மினுக் மினுக் என ஏரிந்துக்கொண்டு தான் இருக்கு.அவளுக்கு ஒரு கடமை இருக்கிறதே. அதற்காகவேனும் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

வழக்கம்போல மனம் இரும்பை சுமந்தது போல கனக்க, அதனால் எழுந்த பெருமூச்சை உள்ளேயே அமுக்கி கொண்டு சப்பாத்தியை தேய்க்க ஆரம்பித்தாள்.

ஹாலில் ஆள் நடமாட்டம் தெரிய, ‘மாமா எழுந்துட்டார்’ என கணித்தவள் வேகமாக டீயை அடுப்பில் ஏற்றினாள்.

சமையலறையைக் கடந்து கொல்லைப்புறம் செல்லும் கணவனின் ஆரவரம் தெரிய, கொதித்த டீயை வடிகட்டி அவன் வருவதற்குள் ஹாலில் இருந்த டீப்பாயின் மேல் வைத்துவிட்டு கிச்சனுக்குள் வந்து வேலையை தொடர்ந்தாள்.

அடுத்தடுத்து வேலைகள் வேகமாக நடந்தது. ஆறு மணிக்குள் சமையலை முடித்து, மகள் நர்த்தனாவையும் மகன் நவீனையும் எழுப்பி அவர்களுக்கு தேவையானதை செய்து, கிளப்பி என நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தாள். உடல் ஓய்வை கெஞ்சியது. ஒரு டீ குடிக்கலாம் போல இருந்தது.

இதில் அவள் காலையில் எதுவும் குடித்தாளா என்று கூட ஞாபகம் இல்லை. குடித்தாயா என்று கேட்கவும் ஆள் இல்லை, குடி என்று சொல்லவும் ஆள் இல்லை அந்த வீட்டில்.

ஒருவழியாக மகனை கிளப்பி கையில் சப்பாத்தியைக் கொடுக்க, “காலைல எப்படி சப்பாத்தி சாப்பிட முடியும். நான் சாப்பிடாம போகனும்னு வேணும்னே பன்றீங்களா?” என நவீன் கத்த,

“இல்ல நவீ அது அப்பாவுக்கு செஞ்சேன். உனக்கு வேண்டாமா, இரு தோசை ஊத்துறேன்..” என மகனிடம் கெஞ்ச

“ஒன்னும் தேவையில்ல.. நவீ கிளம்பு டைமாச்சு. கேண்டீன்ல சாப்பிட்டுக்கலாம். இப்போ நீங்க செஞ்சு கொடுத்ததும் அப்பா சாப்பிட்டுடுவாரா.?” என மகளும் தன் பங்குக்கு தாயை கத்த, இருவரையும் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள் பூங்கொடி.

இது தினமும் நடப்பதுதான். முகம் இயலாமையைக் காட்டினாலும் பிள்ளைகள் இருவரும் சாப்பிடாமல் செல்கிறார்களே என்ற ஆதங்கம் அவளை வேறு யோசிக்கவிடவில்லை.

“பாப்பா.. ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு போங்கடா.. காலைல சாப்பிடாம போகக்கூடாது. கேண்டீன் ப்ரேக்லதான் திறப்பாங்க. அதுவரை பசியோட என்ன செய்வீங்க. நவீ சொன்னா கேளுடா..” என மகனிமும், மகளிடமும் கெஞ்சிக் கொண்டிருக்க, அவர்களோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் ஸ்கூல் பேகை எடுத்துக்கொள்ள, இது அனைத்தையும் பார்த்தபடியே அறையில் இருந்து வெளியில் வந்தான் இளங்கோ.

“ப்பா போகாலாமா… டைமாச்சு..” என்ற மகளிடம்

“பத்து நிமிசத்துல போகலாம், சாப்பிடுங்க..” என கட்டளையாக சொல்ல, அந்த வார்த்தையை எதிர்த்து பேசும் தைரியம் இல்லாதவர்களாக அவரவர் தட்டை எடுத்துக்கொண்டு வேகமாக சாப்பிட ஆரம்பித்தார்கள்.

பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்தவன், அங்கு ஒருத்தி இயலாமையால் நின்றிருக்கிறாள் என்று தெரிந்தும் கூட பார்வையை அவள் புறம் திருப்பாமலே தன் போனை எடுத்து அமுதாவிற்கு அழைத்து “ஹான் அண்ணி எனக்கு இன்னைக்கு வரமுடியாது. இன்ஸ்பெக்ஷன் இருக்கு. உங்க தங்கச்சி மட்டும் வருவா… நாலு மணிக்கு முன்னாடி அனுப்பி விட்டுடுங்க” என்றுவிட்டு போனை அனைத்தவன் பர்சில் இருந்த பணத்தை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்துவிட்டான்.

கணவனின் கோபம், புறக்கணிப்பு எல்லாம் பழகிப்போன ஒன்றுதான். ஆனால் அது ஒவ்வொருமுறையும் நிகழும்போது முதல்முறை போலவே வலிக்கிறதே.

கண்கள் கலங்கத் தொடங்க, அதை மறைக்க வேகமாக தன் புகலிடமான கிச்சனுக்குள் சென்றாள்.

அவனுக்காக என மனைவி செய்து வைத்த சப்பாத்தியைத் தொட்டுக்கூட பார்க்காமல் சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றி சாப்பிட ஆரம்பித்தான்.

இளங்கோ சாப்பிட அமரவுமே பிள்ளைகள் இருவரும் அவனைத்தான் கவனித்தார்கள். சப்பாத்தியை எடுப்பானா என? எடுக்கவில்லை என்றதும் இருவர் முகத்திலும் வெற்றி சிரிப்பு. தங்கள் தந்தையை சரியாகத்தான் கணித்திருக்கிறோமென்று வந்த சிரிப்பு.

“நான்தான் சொன்னேன்ல நவீ அப்பா சப்பாத்தியெல்லாம், அதுவும் அவங்க செஞ்சதை சாப்பிட மாட்டார்னு..” என நர்த்தனா சொல்ல,

“ஆமா எனக்கும் தெரியுமே” என நவீனும் சொல்ல, அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் உண்பதே கடமை என்பது போல இளங்கோ சாப்பிட்டுக் கொண்டிருக்க, இதைக்கேட்ட ஒருத்தி அங்கு உள்ளுக்குள் உயிருடன் செத்துக் கொண்டிருந்தாள்.

என்ன முயன்றும் தன் கேவலை அடக்க முடியவில்லை கொடியால். இருகைகளாலும் வாயை மூடியவள் சத்தம் வராமல் சுவற்றில் சாய்ந்தபடி எதிர்சுவற்றை வெறித்தாள். விழிகள் அதன்பாட்டிற்கு நீரை வழியவிட்டுக் கொண்டிருந்தது.

இன்னும் எத்தனை நாளைக்கு இந்த வலியை அனுபவிப்பது. முடியவில்லை அவளால். எத்தனையோ முறை செத்துவிடலாம் என்று நினைத்திருக்கிறாள்தான். ஆனால் பிள்ளைகள் முகம் அதை மறக்க செய்து, வாழவேண்டும் என நம்பிக்கை கொடுக்கும்.

ஆனால் தற்போது அது கூட தோற்றுவிடும் போல் உள்ளது. பிள்ளைகளுக்கும் தன்னை பிடிக்கவில்லை என்று தெரிந்த பிறகு சோக நாட்களை எண்ணி எண்ணி கழித்து கொண்டிருக்கிறாள்.

அவளுக்கான அந்த கடமையை முடித்த நொடி அவளும் இருக்க விரும்பவில்லை இருக்கவும் மாட்டாள். ஆனால் காலம் எனும் அரக்கன் அவளுக்கு தேவன் ஆவானோ.

“நவீ கிளம்பு.. இன்னும் என்ன அக்காவோட சண்டை..” என்ற கணவனின் பேச்சு சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தவள் முந்தானையால் முகத்தை துடைத்துவிட்டு பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.

சில நிமிடங்களில் வீடு நிசப்தமானதும் தான் மூவரும் கிளம்பிவிட்டனர் என்று அவளுக்கு புரிந்தது.

கையைக் கழுவிவிட்டு வேகமாக வந்து வாசலில் எட்டிப்பார்க்க, கணவனின் பைக் தெருமுனையை தாண்டியிருந்தது.

மீண்டும் கண்ணீர் சுரக்க, அந்த நிலைப்படியிலேயே சாய்ந்துவிட்டாள் கொடி.

“என்னம்மா என்ன அப்படியே நின்னுட்ட..” என அப்போதுதான் அந்த வீட்டின் பின்புறமிருந்து வந்த கந்தவேல் மருமகளைப் பார்த்து கேட்க,

“ஒன்னும் இல்ல மாமா சும்மாதான். காஃபி குடிக்கிறீங்களா.?” என திணறியபடியே கேட்க,

மருமகளின் முகத்தில் தெரிந்த வேதனை அவருக்கு தெரியாதா.? இல்லை புரியாதா.? அதை கேட்டு மேலும் அவளுக்கு வேதனையை கொடுக்க விரும்பாமல் “உனக்கும் சேர்ந்து போட்டுட்டு வாம்மா, நீயும் களைச்சிப் போய்தான இருக்க” என்றவர் வாசப்படியிலேயே அமர்ந்துவிட,

“சரி மாமா” என்று உள்ளே சென்று பத்து நிமிடத்தில் இருவருக்கும் காபியுடன் வந்தாள்.

காபியை அருந்தியவாறே “ஏன் கொடி அமுதா வீட்டு விசேஷத்துக்கு உன்னை போக சொல்லிட்டானா.? என்ன சொன்னான் இளங்கோ..” எனவும்,

“நா நான் மட்டும் தான் மாமா போகனும், அவர் வரலன்னு அக்காவுக்கு சொல்லிட்டார். நீங்க எப்படி போறீங்க?” என முதலில் திணறினாலும், பிறகு சாதாரணமாக கேட்டாள்.

“அதுவந்துமா அது கார் புக் பண்ணி கொடுத்துருக்கான்மா இளங்கோ. அவங்க அம்மாவால பஸ் ஏறி அலைய முடியாதுல்ல அதான்..” என இப்போது திணறுவது அவர் முறையாகிப் போனது.

“சரிங்க மாமா.. நான் கிளம்பறேன் மாமா.. வேலையெல்லாம் முடிச்சி கிளம்பினா தான் நாலு மணிக்குள்ள திருப்ப வரமுடியும். பிள்ளைங்க வரதுக்குள்ள நான் வரனுமே மாமா..” என அவர் குடித்து வைத்த காஃபி டம்ப்ளரையும் எடுத்துக்கொண்டு நகர்ந்தவளின் முகத்தில் இருந்த விரக்தி அவருக்கு மகன்மேல் கட்டுக்கடங்காத கோபத்தை வரவைத்தது.

மருமகளின் முகத்தைப் பார்க்க பொறுக்காமல், “நீயும் எங்ககூடவே வாயேன்மா, நாங்க ரெண்டு பேர்தான போறோம்..” என மனம் கேட்காமல் கேட்டுவிட,

உள்ளே சென்றவள் நின்று திரும்பி “வேண்டாம் மாமா, அப்புறம் பாதி வழியில இறங்கினா எந்த பஸ்ஸூம் கிடைக்காது. இது எனக்கு பழக்கம்தான மாமா..” என வலிய சிரித்தவளைப் பார்த்து அந்த மனிதருக்கு நெஞ்சமெல்லாம் வேதனை படிந்தது.

“கொடி..” என அவர் தழுதழுக்க, “பழகிடுச்சு மாமா” என்றாள் அதே விரக்தி புன்னகையுடன்.

அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க ஆரம்பித்தவளைப் பார்த்தபடியே அன்றைய நாளை யோசித்தார் கந்தவேல்.

தன் மகனுக்கும் மருமகளுக்கும் பிரச்சினை ஏற்பட்ட அந்த பொல்லாத நாளுக்குப் பிறகு ஒரு நாள் மிகவும் நெருங்கிய சொந்தத்தில் ஒரு விசேஷம் என்று கிளம்பியிருந்தனர்.

அப்போதும் கந்தவேலும் அவர் மனைவி சுப்புலட்சுமியும் காரில் கிளம்ப, பேருந்திற்காக நின்றிருந்த கொடியை வழுக்காட்டாயமாகத்தான் தங்களுடன் அழைத்து சென்றனர்.

பாதி தூரம் சென்றிருந்த நேரம் தன் தாய்க்கு அழைத்தான் இளங்கோ. அப்போது சொல்லவேண்டும் என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. பேச்சுவாக்கில் “கொடி பஸ்ஸுக்கு நின்னுட்டு இருந்தா தம்பி, அவளையும் கூப்பிட்டுத்தான் போறோம்..” என்றுவிட்டார்.

உடனே “அவக்கிட்ட கொடுங்க..” என்றான் கோபமாக.

“என்ன தம்பி.. என்ன தம்பி ..” என சுப்பு பதட்டமாக கேட்க

“கொடுங்கன்னு சொன்னேன்..” என மீண்டும் அவன் கத்த, இங்கே இருந்தவர்கள் சுப்புவின் பதட்டத்தைப் பார்த்து வேறேதுவும் பிரச்சினையோ என நினைத்து பயந்து பார்க்க, அவரோ போனை கொடியிடம் கொடுக்க, ‘மாமாவுக்கு ஒன்னும் இருக்கக்கூடாது’ என பயந்த படியே வாங்கியவள் “மாமா” என அழைக்கும் முன்னே

“இவ்வளவு பட்டும் உனக்கு இன்னும் இந்த சொகுசு கேட்குதுல்ல.. ச்சீ என்ன ஜென்மம் நீ..” என்றுவிட, பட்டென போனை வைத்தவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள்.

மகன் என்ன சொன்னான் என தெரியாத கந்தவேல் மருமகளை “கொடி என்னம்மா..” என பதட்டமாக கேட்க,

மகன் என்ன பேசியிருப்பான் என்று அறிந்த சுப்புவோ மருமகளின் முகத்தைப் பார்த்து வேதனையடைந்தார்.

கணவர் அழைத்தும் அமைதியாக இருந்தவளை உலுக்கினார் சுப்பு. அதில் ‘ஹான்’ என நினைவுக்கு வந்தவள், தன் வலியை மறைத்து “அண்ணா வண்டியை கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க” என்றதும், வாந்தி போல ஒவ்வாமையாக இருக்குமோ என்று நினைத்து அவரும் உடனே நிறுத்திவிட, அதிலிருந்து இறங்கியவள் தன் மாமாவைப் பார்த்து “நீங்க கிளம்புங்க மாமா, இப்போ பஸ் வரும். நான் அதுல வரேன்..” என்றதும் தான், மகன் என்ன பேசியிருப்பான் என்று புரிந்தது.

மனைவியைப் பார்த்து தீயாய் முறைத்தவர், மருமகளிடம் ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் அவரும் இறங்கிக் கொண்டார்.

ஏதோ பிரச்சினை என்று புரிந்த டிரைவர் காரை ஒரு மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டார்.

தென்மாவட்டங்களின் கிராமப்புறங்களின் பேருந்து வசதி எப்படி இருக்கும் என்று நமக்குத்தான் தெரியுமே. நமக்கு வரும் கஷ்டம் போல் தொடர்ச்சியாக வராமல் மாமங்குக்கு வரும் சந்தோஷம் போல போல் தானே பஸ்ஸூம் வரும் என நாமா உணரதாத.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத கரிசல்காட்டில் நடுரோட்டில் நின்றிருந்தவளுக்கு அழக்கூட முடியவில்லை. நாற்பது நிமிடங்கள் கடந்த பிறகு ஒரு பேருந்து வர அதில் ஏற, அவளுக்குப் பின்னே கந்தவேலும் ஏறிக்கொண்டார்.

அந்த பேருந்துக்கு பின்னே காரில் வந்தார் சுப்புலட்சுமி. இந்த இடைப்பட்ட நேரத்தில் பலதடவை மகனுக்கு அழைத்துவிட்டார்.

ஆனால் அவனோ யார் போனையும் எடுக்கவில்லை. விசேஷம் முடிந்து வீட்டிற்கு வந்து கேட்டபோதும் அவர்களை விட்டு கொடியிடம் தான் சண்டையிட்டான்.

அதிலிருந்து அவளை யாரும் ‘வா’ என்று கட்டாயப்படுத்துவதில்லை. காலப்போக்கில் எல்லாம் சரியாகும் என்று அனைவரும் நினைக்க, அவளின் காதலாடும் தூரங்கள் தொடரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. காதலாடும் தூரங்கள் நேரங்களாகுமோ.??.
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
என்ன ஆரம்பமே அழுவாச்சியா இருக்கு
 

Kameswari

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
7
என்ன சண்டையா இருந்தாலும் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில் தான் இருக்கணும். இப்படியா பிள்ளைங்க முன்னாடி சண்டைப் போடுறது?
அதனால தானே இந்தப் பிள்ளைங்க அம்மாவ மரியாதையில்லாம பேசுறாங்க..
இப்படி இருந்தா அவளுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.. எந்த அளவுக்கு விரக்தி இருந்திருந்தா சாக நினைச்சிருப்பா?
பாவம் கொடி 😥
 
Last edited:

Vimala

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 10, 2023
Messages
31
Appadi enna thappu senja kodi..
aen ivlo kashtsm
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
அருமையான ஆரம்பம்.

இளங்கோ தான் கொடியின் கணவரா? ஏண்டா என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் இப்படியா, பொண்டாட்டியை நடுத்தெருவில் விடுவது. உனக்கு பொங்கல் இருக்குடா மவனே...

பிள்ளைகளும் கூட அம்மாவிடம் பாசமா இருப்பது போல் தெரியலயே... அப்படி என்ன நடந்து இருக்கும்?

கந்தவேலு நல்ல மாமனார்.

வெயிட்டிங் ரைட்டரம்மா....
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Jogamana arambama irie
Valthukal vani
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
என்ன சண்டையா இருந்தாலும் புருஷன் பொண்டாட்டிக்கு இடையில் தான் இருக்கணும். இப்படியா பிள்ளைங்க முன்னாடி சண்டைப் போடுறது?
அதனால தானே இந்தப் பிள்ளைங்க அம்மாவ மரியாதையில்லாம பேசுறாங்க..
இப்படி இருந்தா அவளுக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்.. எந்த அளவுக்கு விரக்தி இருந்திருந்தா சாக நினைச்சிருப்பா?
பாவம் கொடி 😥
பிள்ளைங்க ஏன் இப்படி நடந்துக்குறாங்க 🙄
 

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
அருமையான ஆரம்பம்.

இளங்கோ தான் கொடியின் கணவரா? ஏண்டா என்ன தான் பிரச்சனையா இருந்தாலும் இப்படியா, பொண்டாட்டியை நடுத்தெருவில் விடுவது. உனக்கு பொங்கல் இருக்குடா மவனே...

பிள்ளைகளும் கூட அம்மாவிடம் பாசமா இருப்பது போல் தெரியலயே... அப்படி என்ன நடந்து இருக்கும்?

கந்தவேலு நல்ல மாமனார்.

வெயிட்டிங் ரைட்டரம்மா....
நன்றி sis
 
Top