• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
KT - 04

தேனி பேருந்து நிலையத்தில் பஸ் நின்றும் மகள் எழாமால் இருக்க, எத்தனை நாள் அழுத்தமோ அல்லது இப்படி தூங்கியே பலநாள் ஆகிவிட்டதோ, அந்த தந்தைக்கு மகளை எழுப்ப மனமே இல்லை.

ஆனால் இறங்கித்தானே ஆகவேண்டும். “கண்ணு கொடிமா..” என்றவர் லேசாக மகளை உலுக்க, அதிலேயே பதறி எழுந்தவள், முகத்தை அழுந்த துடைத்துவிட்டு, “வந்துட்டமோப்பா, நல்லா தூங்கிட்டேன் ..” என்றவள் அவர் பதிலை எதிர்பாராமல் எழுந்துக்கொள்ள, தானும் எழுந்து இருவரும் இறங்கினர்.

“கண்ணு வா ஜூஸ் குடிக்கலாம். வெயில் பாரு மண்டையை பொளக்குது..” என மகள் மறுக்கும் முன்னே ஒரு ஜூஸ் கடைக்குள் நுழைந்துவிட, கொடிக்கும் வேறுவழியில்லை.

தந்தையின் பின்னே நடந்தாள். இருவருக்கும் மாதுளை ஜூஸை சொன்னவர், “இப்போ பஸ் இருக்கா கண்ணு, இல்ல ஆட்டோல போய்டலாமா..” என மகளிடம் கேட்க,

“இருக்குப்பா. கூட்டமும் இருக்காது. அதுலையே போயிடுறேன்.” எனவும், ஜூஸ் வர குடித்து விட்டு கிளம்பினர்.

கொடி சொன்னது போல கூட்டமில்லாமல் தான் பஸ்ஸும் வந்தது. அதில் ஏறியவள் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து, “சரிப்பா பார்த்து போயிட்டு வாங்க. அக்காவை ஒன்னும் சொல்ல வேண்டாம்.” என அவசர அவசரமாக சொல்ல,

“தள்ளி உட்காரு கண்ணு, நானும் கூடத்தான் வரேன்..” எனவும் கொடியின் முகம் அப்படியே மலர்ந்து பின் யோசனையானது.

“ஏன் ப்பா..” என்றவளிடம்,

“உங்கூட இருந்து எவ்வளவு நாளாச்சு கண்ணு, மில்லை மாமா பார்த்துப்பார். பேரனையும் பேத்தியையும் பார்க்காம எப்படியோ இருக்கு கண்ணு, அப்புறம் சந்திரா மாமியாரையும் பார்க்கனுமில்ல கண்ணு. அது கீழே விழுந்து ஒரு மாசமாச்சு, வந்து பார்க்கவே இல்லை. அது முறையில்லயே கண்ணு..” என நீண்ட விளக்கம் கொடுக்க,

“சரிப்பா..” என்றதோடு முடித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியாதா தந்தையைப்பற்றி. வீட்டில் ஏதும் பிரச்சினைகள் வந்துவிடுமோ என்று பயத்தில் வருகிறார் என்று. இப்படி பயந்து பயந்து தன் வீட்டிற்கு வருவது கொஞ்சம் வருத்தமே அவளுக்கு.

ஆனாலும் தந்தையின் வரவு அவள் மனதை கொஞ்சம் லேசாக்கத்தான் செய்தது. தந்தையின் தோளில் சாய்ந்து மீண்டுமொரு தூக்கம் பெண்ணுக்கு.

இங்கு போடியில் இருவரையும் பஸ் ஏத்திவிட்ட பிறகு கணேஷ் செய்தது, இளங்கோவிற்கு போன் அழைத்து பேசியதுதான்.

அப்போதுதான் இளங்கோவும் ப்ரேக்கில் கேண்டினில் அமர்ந்திருந்தான். கணேஷ் அழைக்கவும் ‘ஏன் வரவில்லை என கேட்க அழைப்பார் போல’ என சாதாரணமாக நினைத்து தான் போனை எடுத்தான்.

“சொல்லுங்க அண்ணா, ஃபங்க்சன் நல்லபடியா முடிஞ்சதா, நிவிக்குட்டி என்னை கேட்டாளா.? ரொம்ப முக்கியமான வேலைண்ணா, சென்னைல இருந்து இன்ஸ்பெக்ஷன் வந்துட்டாங்க. அதுதான் வரமுடியல..” என அமைதியாகவே காரணத்தை சொன்னான் இளங்கோ.

“ஒ, சரிப்பா.. அமுதா சொல்லுச்சு, நீ கூப்பிட்டு அவளுக்கு சொன்னியாம்.” என நிறுத்த, அதில் கொடிக்கு சொல்லாமல் அமுதாவிற்கு ஏன் சொன்னாய் என்ற கேள்வி இருக்க, அதை கணக்கில் எடுக்காமல்,

“ஆமா அண்ணா… நீங்க விசேஷத்துல பிசியா இருப்பீங்க, அதுதான அமுதா அண்ணிக்கிட்ட சொன்னேன். ஃபங்க்ஷன் எப்படி போச்சு. அங்க ஒன்னும் பிரச்சினை இல்லையே..” எனவும்,

அவன் பேச்சை மாற்றியது எரிச்சலைக் கிளப்பினாலும், அதை மறைத்து, “கொடிக்கு எதுவும் உடம்புக்கு பிரச்சினையா இளங்கோ, ரொம்ப மெலிஞ்சிப் போயிட்டா, கழுத்துப்பக்கம் வீங்கி இருக்குற மாதிரி கூட இருந்தது. உக்காந்து பேச கூட நேரமில்ல, உடனே கிளம்பிட்டா..” என மெதுவாக போட்டு வாங்க நினைக்க,

“அப்படியெல்லாம் இல்லயே அண்ணா.. இப்போ வேலைக்கு போறா அதனால மெலிஞ்ச மாதிரி இருக்கும். மத்தபடி எனக்கு ஒன்னும் வித்தியாசம் தெரியலையே..” என சாதாரணமாக சொல்ல,

“ஓ.. அப்படியா சரிப்பா.. மாமாதான் பயந்துட்டார். நான் சொல்லிக்கிறேன். நீயும் வேலையைப் பார்..” என்று வைத்தவருக்கு, இளங்கோ மேல் கோபம் என்பதையும் தாண்டி அத்தனை வருத்தம்.

‘பொண்டாட்டிய எப்படி கவனிக்கனும்னு, என் கொழுந்தன பார்த்து கத்துக்கோங்க’ என அமுதாவும் ஆனந்தியும் அடிக்கடி அவர்களின் கணவர்களோடு வம்புக்கு நிற்பார்கள்.

கொடியை அப்படி பார்த்துக்கொண்டவன். கையில் வைத்து தாங்கியவன். இப்போது அவளைப்பற்றி பேசவே யோசிக்கிறான்.

தப்பு செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள் இந்த உலகத்தில், தப்பு செய்வது மனிதயியல்பு, அதனை மறந்து மன்னித்து கடப்பது தானே இல்லறவாழ்வு, இவனுக்கு எப்போதான் புரியபோகுதோ...

அவர்களே சரி செய்து கொள்வார்கள் என்று வீட்டாட்கள் அமைதியாக இருக்க, இளங்கோவின் செயல் அப்படியெல்லாம் இல்லை என்று காட்டிவிட்டது.

பிள்ளைகள் இருவரையும் மதுரையில் ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு, இவனும் மதுரைக்கே வேலை மாற்றலாகி போவதாக கேள்வி.

இது கொடிக்கு இன்னும் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இன்று அவள் முகத்தை பார்த்தே கண்டுபிடித்திருப்பான். இளங்கோவின் இந்த முடிவு கொடிக்கு தெரிந்தால், அரை குறையாய் வாழ்ந்து கொண்டிருப்பவள் மொத்தமாக உயிரை விட்டுவிடுவாள்.

கைமீறி செல்வதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும், என நினைத்தபடியே வீட்டிற்கு கிளம்பினான் கணேசன்.

இங்கு தனக்கு முன்னே இருந்த ஆறிப்போன காபியை வெறித்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

கணேஷ் பேசியதிலிருந்து அவன் முகம் இறுகிப் போயிருந்தது. ‘அங்கேயும் போய் சீன் போட்டுட்டு வந்துருப்பா, நடிக்க அவளுக்கு சொல்லியா கொடுக்கனும்..’ என கோபம் கொண்ட மனம் கத்த,

‘டேய் டேய் கொஞ்சம் பொறு, உன் கோபத்தையெல்லாம் விட்டுட்டு யோசிச்சு பாரு, இப்போ எல்லாம் அவ ரொம்பவே சோர்ந்து தான் போறா. பழக்கமில்லாத காட்டு வேலைக்கு போறதாலன்னு காரணம் சொல்லாத, அதுவும் ஒரு காரணம். ஆனா அது மட்டுமே காரணம் இல்லை. இப்போ கண்டுக்காம விட்டு, நாளைக்கு பெரிய பிரச்சினையாகிட போகுது..’ என நியாயம் கொண்ட மனம் அவனை கத்த,

‘ம்ச் எல்லாம் நடிப்பு, என்னையே ஏமாத்தினவதான..’ என நியாயம் கொண்ட மனதை தட்டி அடக்கியவன், காஃபியை குடிக்காமலே எழுந்துவிட்டான்.

அதன்பிறகு வேலை செய்யவே மூடில்லை. ஆனாலும் அவனால் அங்கிருந்து நகர முடியாது. இன்ஸ்பெக்ஷன் போய் கொண்டிருக்கிறது. இதில் விடுமுறைக்கு வாய்ப்பே இல்லை. அப்படியே அமர்ந்துவிட்டான்.

மனைவி.! தன் காதல் மனைவி.! முன்னெல்லாம் அவளை நினைத்தாலே மனம் இனித்து, உடல்கூட சிலிர்த்துவிடும்.

ஆனால் இப்போது நினைத்தால் கசந்து போகிறது. எப்படி அவளால் என்னை ஏமாற்ற முடிந்தது. அவ்வளவு பெரிய முடிவை எப்படி என்னிடம் மறைக்க முடிந்தது.

இதை மறைத்தவள் இன்னும் என்னவெல்லாம் மறைத்தாளோ என்ற எண்ணம் தோன்றிவிட, அவளை அவனால் மன்னிக்கவே முடியவில்லை.

வருடங்கள் இரண்டாகிவிட்டது. அவள் மீதிருக்கும் கோபம் குறையவே இல்லை. தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகத்தான் அவளோடு இருக்கிறான்.

இதோ இருவருக்கும் விவரம் தெரிந்துவிட்டது. இனி அவனுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் அவள் தேவையில்லை, என்று யோசித்தவன், ஒன்றை யோசிக்க மறந்துவிட்டான்.

இப்படியொரு முடிவை அவளிடம் கூறினால், அடுத்த கணமே உயிரை விட்டு விடுவாள் என்பதை.. அவளைபற்றி அனைத்தும் தெரிந்து புரிந்து தான் காதலித்து திருமணம் செய்தேன் என்று மார்தட்டி கொண்டவனுக்கு காதலில், குடும்பத்தில் நம்பிக்கையே முக்கியம் என்பது தெரியாமல் போய்விட்டது.

இங்கு வீட்டிற்கு வந்த பூங்கொடி, பிள்ளைகள் வருவதற்குள் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து வைத்துவிட்டு, துவைத்த துணிகளை மடிக்க ஆரம்பித்தாள்.

சங்கர் சந்திராவின் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது ஆட்டோ சத்தம் கேட்க பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்று தெரிந்து வெளியே வந்தவளின் கையில், இருவரும் லஞ்ச் பேகை திணித்துவிட்டு, ஸ்கூல் பேகை அப்படியே கீழே போட்டுவிட்டு உள்ளே சென்று விட்டனர்.

இரண்டு பேகையும் எடுத்து மேஜையில் வைத்தவள், லஞ்ச் பேகுடன் கிச்சனுக்குள் செல்ல, அதற்குள் அங்கு இருவருக்கிடையே சண்டை வந்துவிட்டது. யார் முதலில் குளிப்பது என.

முன்னமும் இப்படி நடக்கும், இவளிடமே பஞ்சாயத்தும் வரும்தான். ஆனால் இப்போது இவளே போய் பேசினாலும் பதில் கொடுக்க மாட்டார்கள்.

மனம் கேட்காமல் “நவீ கொஞ்சம் வெய்ட் பண்ணு, அக்கா குளிச்சிட்டு வரட்டும்.” என்றதும்,

“எங்களுக்கு தெரியும், நீங்க உங்க வேலையை பாருங்க..” என இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாக பதில் சொல்ல, அப்படியே நின்றாள் கொடி. காரணம் இதைப் பார்த்தபடி வாசலில் நின்றிருந்தார் சங்கர்.

அவர் முகத்தில் தெரிந்த வேதனையில், தன் முகத்தை பட்டென்று, மாற்றி “வாங்கப்பா..” என கொடி அழைக்க, அப்போதுதான் அவரை கவனித்தனர் பிள்ளைகள்.

“ஹேய் தாத்தா.. எப்போ வந்தீங்க” என அவரை இருவரும் கட்டிக்கொள்ள, தன் வருத்தத்தை மறைத்து இருவரையும் இரு கைகளால் அனைத்துக்கொண்டவர், “என் கண்ணுங்களம் எப்போ வந்தாங்க.” என கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.

“இப்போதான்.. விகாஷ் அண்ணாவை கூப்பிட்டு வந்துருக்கலாம்ல தாத்தா. எங்களுக்குத்தான் லீவே இல்ல. அவனுக்கு என்ன?” என நர்த்தனா கேட்க, நவீனும் அக்காவிற்கு ஆமா போட்டான்.

“நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு சொன்னான், நீங்கதான் வரல. சரி விடுங்க நான் அவனை வர சொல்றேன்.” என சமாதானம் செய்தவர், வாங்கி வந்த திண்பண்டங்களை கொடுக்க, இருவரும் வாங்கி கொண்டனர்.

“நவீ இப்படி உட்காரு, நதிமா நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா. இன்னைக்கு நானே உங்களை டியூசன்ல விடுறேன்..” என்றதும் இருவருக்கும் சந்தோசம்.

“சூப்பர் தாத்தா..” என்றதும், நவீனிடம் பேச ஆரம்பித்துவிட்டார் சங்கர். மகளின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தை அவர் கவனிக்க தவறவில்லை.

எப்போதிருந்து பிள்ளைகளும் அவளை வெறுக்க ஆரம்பித்தனர் என தெரியவில்லை அவருக்கு. அவர்களிடம் பேசி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

அடுத்து இருவரும் சாப்பிட்டு சங்கருடன் அடுத்த தெருவில் இருக்கும் டியுசனுக்கு செல்ல, கொடியிடம் சொல்லாமல் வருவதை அவரும் கவனித்தார்.

நாளாக நாளாக பிரச்சினை சரியாகும் என்று நினைத்து ஒதுங்கியிருந்தது தவறோ என்று அந்த பெரிய மனிதனின் மனம் யோசிக்க ஆரம்பித்தது.

எப்படி தன் மகளின் வாழ்க்கையை காப்பாற்றுவது? மருமகனிடம் பேசவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

வீட்டில் இரவு உணவுக்கான வேலையை ஆரம்பித்தவள், “மதினி” என்ற குரலில் வெளியில் வந்தாள்.

“வா நந்தினி..” என்றதும்,

“இந்தாங்க அண்ணி பூ, அம்மா கொடுத்து விட்டாங்க..” என ஒரு சரம் ஜாதி மல்லியை கொடுக்க, ‘என்ன பூ வச்சிட்டு வந்து என் முன்னாடி நின்னா நான் அப்படியே மயங்கிடுவேன்னு நினைச்சியா, நீ அப்படி நினைக்கிற ஆளுதானே’ கணவனின் இந்த வார்த்தைகளுக்கு பின் அவள் எப்போது கடைசியாக பூ வைத்தாள் என்று கூட ஞாபகமில்ல. இன்று விசேஷத்திற்கு கூட வைக்கவில்லையே.

பூவை எல்லாம் வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதால் அதை வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, வளைகாப்பை பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர்.

“அண்ணி நாளைக்கு நம்ம காட்டுல வேலை இருக்குன்னு அம்மா சொல்ல சொன்னாங்க. வேற எங்கேயும் போக வேண்டாமாம். ஒரு வாரத்துக்கு நம்ம காட்டுலையே வேலை இருக்குமாம்.” என்றதும்,

“இல்ல நந்தினி சுமதியக்காகிட்ட வரேனு சொல்லிட்டேனே..” எனவும்,

“அதெல்லாம் அம்மா பேசிக்கட்டும் அண்ணி, நீங்க நம்ம காட்டுக்கு வாங்க..” என பேசிக்கொண்டிருக்கும் போதே இளங்கோ வந்துவிட,

‘என்ன சீக்கிரம் வந்துட்டாங்க’ என யோசனையாக பார்த்தபடியே நிற்க,

வந்தவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல், பக்கத்தில் நின்ற நந்தினியிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.

“என்ன அண்ணா சீக்கிரம் வந்துட்டீங்க..” என நந்தினி கேட்க,

“இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன்மா.. சீக்கிரம் முடிஞ்சிடுச்சு, அதான் வந்துட்டேன். அப்பத்தா எப்படி இருக்காங்க. நைட் வரேன் அம்மாக்கிட்ட சொல்லிடு..” எனவும் சரியென்று சொல்லி நந்தினி கிளம்பிவிட, தனியாக நின்ற மனைவியை நேராக பார்த்தான் இளங்கோ.

அந்த பார்வையில் இருந்த வெறுப்பு, கோபம், அந்நியத்தன்மை எல்லாம் கொடியால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தலையை குனிந்துகொண்டாள்.

இதே கண்ணில் அவள் பார்த்த காதல் பார்வைகளும், நேசப்பார்வைகளும், கனிவுப்பார்வைகளும் எத்தனை எத்தனை.

அவன் எதுவும் பேசாமல் நிற்கவே நிமிர்ந்து பார்த்தவளிடம், “என்ன இந்த பூவை கொடுத்து உன் புருசனை மயக்கிடுன்னு உங்க வீட்டுல சொல்லி அனுப்புனாங்களா.?” என வார்த்தைகளில் நெருப்பைக் கொட்டியவனின் பார்வை அங்கிருந்த பூவின் மேல் இருக்க, கொடியின் பார்வையோ அதிர்ந்து, வாசலில் பதிந்திருந்தது.

தன் பேச்சுக்கு பதில் சொல்லாமல் நிற்பவளிடம் பார்வையைத் திருப்பியவன், அது வாசலில் நிலைக்கவும் அவனும் திரும்பி பார்க்க, அங்கு கொடியை விட அதிர்ந்த பார்வையுடன் சங்கர் நின்றிருந்தார்.

“ப்பா..” என்றவளின் விழிகளில் இருந்து நீர் அருவி போல் இறங்கியது. இனி காலாடும் தூரங்கள் தூரங்களாகவே போகுமோ.......
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
410
இதுங்க ல்லாம் பிள்ளைங்களா ☹️☹️☹️
 

Vimala Ashokan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
276
டேய் இளங்கோ நீயெல்லாம் என்ன ஜென்மம் சே 😬😬
 

Sampavi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 21, 2022
Messages
131
Kodiyoda nilamai romba mosam appadi ennathan thapu panninaa 🙄
 

shanmugasree

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
36
Velankathavan pillaiga avana polathana irukum. Epdi pesuran. Kodi amma ku ithu eblo vethanaiya irukum
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Nice update
Velicham potachi ini enna vo
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
“என்ன இந்த பூவை கொடுத்து உன் புருசனை மயக்கிடுன்னு உங்க வீட்டுல சொல்லி அனுப்புனாங்களா?"

ஏண்டா படுபாவி, உன்னை மயக்க வீட்டுல இருந்து பூ வேறு கொடுத்து அனுப்பனுமா? ஏன் இப்படி, அப்பாவும் பிள்ளைகளுமா சேர்ந்து அவளைக் கொடுமை படுத்துறீங்க?

வாயில நல்லா வருது.

இந்த இளங்கோ ஆன்ட்டி ஹீரோ என்ற பட்டப் பெயருடன் இன்று முதல் அழைக்கப்படுகிறான்.

போடாங் கொய்யா😡😡😡

இனி எப்போதாவது அவ கிட்டே போய் பாரு. உனக்கு இருக்கு

வெயிட்டிங்....
 
Top