• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
862
KT -06

கந்தவேலுவிடம் கணேசன் வந்த நோக்கத்தை சங்கர் கூறிவிட, “மாமா நம்ம வெங்கடேசையும் கூப்பிட்டுயிருக்கலாம், அந்த பரமன் பைய வெங்கடேஷுக்கு தெரிஞ்சவன்தான் போல, கொஞ்ச நாள் முன்னாடிதான் எனக்கு தெரியும். வெங்கடேஷ் தான் வீட்டுக்கெல்லாம் போகக்கூடாதுனு அவன மிரட்டி வச்சிருக்கான்.” எனவும் கணேஷ் தன் மாமனாரை அழுத்தமாக பார்த்தான். அந்த பார்வையில் என்ன இருந்தது என மற்றவர்களுக்கும் புரிந்தது.

“கணேஷு,நீ என்ன நினைக்கிறன்னு எனக்குப் புரியுது. பணத்தைக் கட்ட நானும் சரி, வெங்கடேஷும் சரி ரெடியாகத்தான் இருக்கோம், ஆனா கொடிதான் கூடவே கூடாதுன்னு சொல்லிடுச்சு.” என்றார் தவிப்பாக.

அன்று பூங்கொடி கூறும்போது அவர்களால் மறுக்க முடியவில்லை. ஆனால் அதை மறுத்து அன்றே அந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டுமோ என்று இப்போது யோசித்தார்.

“விடுங்க சித்தப்பா இனி பேசி என்ன ஆக போகுது. சீக்கிரம் இதை முடிச்சி விட்டோம்னா, புள்ள காடு கரைன்னு சுத்தாம வீட்டுல நிம்மதியா இருக்கும். ஆனந்தி, அமுதா கூட காட்டு வேலைக்கு போயி நான் பார்த்ததில்லை. ஆனா வீட்டுக்கே கடைகுட்டியா,செல்லமா வளர்ந்த எங்க பொண்ணு, இப்படி நாயா அலையுறத பார்க்க வருத்தமா இருக்கு சித்தப்பா..” என்றுவிட,

“என்னைய்யா பேச்சு இது. என் அக்கா பொண்ணுய்யா கொடி. அவளை எனக்குத் தெரியாதா.? நீ எனக்கு சொல்ல வேண்டியதே இல்ல. இதெல்லாம் நடக்கனும்னு இருக்கு, நடந்துடுச்சு. இளங்கோ செய்ததையோ, சுப்பு செய்ததையோ நான் சரின்னு சொல்லவே இல்ல. போனது எல்லாம் போகட்டும். எல்லாம் ஏதோ போறாத காலம். இனியாச்சும் அவங்களுக்கு நல்லது நடக்கட்டும். ஆளாளுக்கு வார்த்தையை விட்டு மனசு கஷ்டப்பட வேண்டாம்யா..” என கந்தவேல் மன்றாடலுடன் கேட்க, கணேஷூம் அமைதியாகிவிட்டான்.

கந்தவேலு சின்ன மகனுக்கு அழைத்து விசயத்தை சொல்லிவிட, அவனும் வந்துவிடுவதாக கூற, மூவரும் வருஷநாட்டுக்கு அருகில் இருக்கும் கடமலைக்குண்டு என்ற ஊரை நோக்கி சென்றனர்.

இங்கு இளங்கோவின் அலுவலகத்தில் “சொல்லுங்க இளங்கோ… இதுதான் உங்க முடிவா.?” என்ற ஹையரிடம்,

“எஸ் சார்..” என அடக்கமாக, அதே சமயம் அடமாக கூற,

“ஓகே.. ஓகே உங்க வொர்க் சீன்சியர்ட்டி தான் என்னை இவ்வளவு யோசிக்க வைக்குது. இன்னும் மூணு மாசம் இருக்கு. உங்க முடிவு என்னவா இருந்தாலும் சொல்லலாம். கடைசி நிமிசத்துல சொன்னாலும் கூட மாத்திக்கலாம். உங்களுக்காக நான் செய்வேன். உங்களை மாதிரி ஒரு ஆஃபிசரை அனுப்ப எனக்கு என்ன பைத்தியமா.?” என சிரிக்க,

“தேங்க் யூ சார், பட் அதுக்கு தேவையிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்புறம் அந்த ஸ்கூல் டீடைல்ஸ் கேட்டுருந்தேனே சார்..” என்றதும்

“எஸ்.. எஸ்.. வெய்ட்..” என தன்னிடமிருந்த விசிட்டிங் கார்ட் ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தவர், “இது என் வைஃபோட சிஸ்டர் ஸ்கூல்தான்.. போர்டிங்க் அவைலபிள். நீங்க போகும் முன்னாடி எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. நான் அவங்களுக்கு ரிமைன் பண்ணிடுறேன்..” என்க,

“தேங்க் யூ சோ மச் சார். இந்த உதவியை நான் எப்பவும் மறக்கமாட்டேன்..” என்று உணர்ந்து சொன்னவனிடம்,

“நாளைக்கு ஃபங்க்சன் ஞாபகம் இருக்குல்ல, கண்டிப்பா ஃபேமிலியோட வரனும் இளங்கோ. உன் வைஃப் கண்டிப்பா வரனும். என் வீட்டம்மா கேட்டுட்டே இருக்கா. முன்னாடியெல்லாம் இளங்கோ, அவர் வைஃப் இல்லாம எந்த ஃபங்க்சனுக்கும் வரமாட்டார். இப்போ அவரும் வரதில்ல, வைஃபையும் அழைச்சிட்டு வரதில்ல. நாளைக்கு கண்டிப்பா கூப்பிட்டு வர சொல்லுங்கன்னு சொன்னாங்க. உங்கிட்ட சொல்லிட்டேன். நாளைக்கு மறக்காம ஈவ்னிங் 5.30க்கு வந்துடுங்க..” என்றுவிட,

சரியென்பது போல் தலையாட்டிவிட்டு தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான் இளங்கோ.

ஏற்கனவே மனம் குழம்பிய குட்டையாய் தவித்தது. பல நாட்கள், இல்லை இல்லை பல மாதங்களுக்குப் பிறகு நேற்றிரவுதான் மனைவியை நிதானமாக பார்த்தான்.

தன் மனைவியா என்றே சந்தேகம் வந்துவிட்டது. கணேஷ் கூறியது போல வழக்கத்துக்கும் அதிகமான மெலிவு. அதிலும் அவள் படுத்திருந்த விதம் அவனை மிகவும் இம்சித்து கொண்டிருந்தது.

ஏன் இப்படி இருக்கிறாள்.? வயிற்றை ஏன் அப்படி பிடித்திருந்தாள்? அந்த மூன்று நாட்களா? இல்லையே. அதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே, தண்டிப்பதாக நினைத்து கொடுமை செய்கிறோமோ.. என பல பல யோசனைகள்.

அவன் காதலித்த அந்த பூங்கொடி இல்லையே இவள். மனம் பிசைந்தது. மிகப்பெரும் தவறு செய்துவிட்டது போல இதயம் கனத்தது.

அவளிடம் கேட்க வேண்டுமா.? பேச வேண்டுமா.? தனக்காக ஏங்கி தவிப்பவளிடம் என்ன பேசுவது என்று கூட புரியாமல் தவித்து கொண்டிருந்தான் அந்த நாற்பது வயதை நெருங்கிய ஆண்மகன்.

இப்படியே அன்றைய நாள் முழுவதும் குழப்பத்திலேயே சென்றது. அதேவேளையில்,
அந்த கந்து வட்டிக்காரன் பரமனிடம் வந்திருந்தார்கள் மூவரும்.

சற்று நேரத்தில் வெங்கடேசனும் வந்து விட பேச்சு ஆரம்பித்தது.

முதலில் இவர்களிடம் பேசவே பரமன் ஒத்துக் கொள்ளவில்லை.

வெங்கடேசன் தான் அவனை மிரட்டி பணிய வைத்தான்.

“பரமா உன்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் இந்த பிரச்சனையில இதுக்கு மேல நீ போகக் கூடாதுன்னு, ஆள் தெரியாம கை வச்சிட்ட, எங்க பக்கமும் தப்பு இருக்கு அதனால தான் இவ்வளவு பணிஞ்சு பேசுறோம், இதுக்கு பிறகு நீ பிரச்சனை பண்ண, அப்புறம் நான் வேற மாதிரிதான் இதை டீல் பண்ணனும்.” என வெங்கடேசன் பொறுமையாக எடுத்து சொல்ல,

“அண்ணா அதெல்லாம் வேண்டாம். இது நான் மட்டும் சம்பந்தப்பட்டது இல்லை. என்னோட இன்னொரு ஆளும் இருக்காங்க, நான் அவங்ககிட்ட கேட்டுட்டுதான் உங்களுக்கு பதில் சொல்ல முடியும்.” என்றவனிடம்,

“சரி கேளு, உனக்கு மேல இருக்கிற அந்த கொம்பன் யாரு, அவன்கிட்ட கேட்டு சொல்லு” என இப்போது கணேசன் வாய் திறக்க

“அண்ணா இதெல்லாம் சரியில்ல, நான் கேட்டுட்டு சொல்றேன் நீங்க மிரட்டுற மாதிரி பேசக்கூடாது.” என்ற பரமனிடம்,

“ஓ.. ஆம்பள உனக்கே, நான் இப்படி பேசுறது மிரட்டுறதா இருக்கா?, அப்ப நீ எங்க வீட்டு பொண்ணுக்கிட்ட வந்து பேசினதெல்லாம் நாங்க எந்த கணக்குல சேர்க்கிறது.” என கணேசன் எகிற,

“அண்ணா என் தொழிலை மீறி நான் எதுவும் செய்யல. வட்டிக்கு கொடுக்கிற, எல்லாரும் இதைத்தான் செய்றாங்க. நானும் அதைத்தான் செஞ்சேன் இப்பவும் சொல்றேன் நான் செஞ்சது தப்புன்னு எனக்கு தோணல.” என பரமனும் சற்று சூடாக பேச,

“டேய்” என கணேஷ் அவனிடம் பாய, இழுத்துப் பிடித்தனர் கந்தவேலும், சங்கரும்.

“நீ பேசின பேச்சுக்கு, அன்னைக்கு நான் இருந்திருக்கணும். உன்ன பொளந்திருப்பேன்டா. எவ்வளவு தைரியமா இப்பவும் அதையே பேசுற. பொம்பளைங்க கிட்டபோய் உன் வீரத்தை காட்டிருக்க.” என்று காட்டுதனமாய் கத்திய கணேசனிடம்,

“அண்ணா இருங்க நான் பேசுறேன்” என்றான் வெங்கடேசன். அவனையும் முறைத்தான் கணேசன்.

“பரமா நாங்க பிரச்சினை செய்ய வரல, அண்ணி எவ்வளவு பணம் தரணும், இதுவரை எவ்வளவு கொடுத்துருக்காங்க. அந்த கணக்கை சொல்லு, நாங்க முடிச்சி விட்டுட்டு கிளம்புறோம். தேவையில்லாத பேச்செல்லாம் வேண்டாம்” என வெங்கடேஷ் தீர்க்கமாக கூற, பரமனுக்கும் வேறு வழியிருக்கவில்லை.

போனை எடுத்து ஒரு நம்பருக்கு அழைத்து, “சார் அந்த லட்சுமிபுரம் பூங்கொடிக்கு பணத்தை செட்டில் பண்ண ஆள் வந்துருக்காங்க” என்றான் மெல்லிய குரலில்.

அந்த பக்கம் என்ன கேட்டதோ “அவங்க அப்பா, மாமனார், அக்கா வீட்டுக்காரர் அப்புறம் அவங்க கொழுந்தன்..” என இழுக்க அந்த பக்கம் பேரமைதி.

“சார்” என பரமன் இழுக்க, என்ன சொல்லப்பட்டதோ “சரிங்க சார், சரிங்க சார்” என பவ்யாமாக சொல்லி போனை வைத்துவிட்டான்.

“என்ன சொன்னான் உங்க கொம்பன்” என கணேஷ் நக்கலாக கேட்க,

“பணத்தை வாங்கிட்டு செட்டில்மெண்ட் முடிக்க சொல்லிட்டாங்க” என்றதும்,

“சரி முடிச்சி விடு, இனி அந்த வீட்டுப்பக்கம் உன்னை பார்க்கக்கூடாது.” என பல்லைக் கடித்தான்.

பெரியவர்கள் அங்கு பேருக்குத்தான் அமர்ந்திருந்தார்கள். இளையவர்கள் இருவரும் பேசி முடித்து கணக்கைப் பார்க்க, மூன்று லட்சத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கு பணத்தை அடைத்திருந்தாள் கொடி.

இரண்டு வருடத்தில் கூலி வேலைக்கு மட்டும் போய் இவ்வளவு கடனை அடைத்திருக்கிறாளா? என நால்வருமே அசந்து போய்விட்டனர்.

“அந்தக்கா மாசம் மாசம் தான் கட்டுவாங்க. அதோட வார வட்டியெல்லாம் போடல, மாச வட்டித்தான் போட்டிருக்கேன். தெரிஞ்சோ தெரியாமலோ அவங்க வாழ்க்கை கெட நானும் காரணம். அதனாலத்தான்..” என பரமன் இழுக்க,

“தம்பி.. உங்க தொழிலை தப்புனு சொல்லலைங்க. ஆனா கேட்குற முறையும், பேசுறவிதமும், நடந்துக்குறது தானுங்க சரியில்ல. அன்னைக்கு மட்டும் என் பொண்ணு எதாவது தப்பான முடிவுக்கு போயிருந்தா என்னாகிருக்கும் யோசிச்சு பாருங்க..” என்ற சங்கருக்கு அன்றைய நாளை நினைத்து இன்னுமே உடல் நடுங்கியது.

“தப்புதானுங்கையா.. அன்னைக்கு பிறகு நானோ, என் ஆளுங்களோ இப்படி பேசி யாரிடமும் வசூல் பன்றது இல்லைங்க..” என பரமனும் வருத்தப்பட,

“நல்லது தம்பி..” என பணத்தைக் கொடுத்து, அனைத்தையும் முடித்து ஒரு ஆசுவாசத்துடன் நால்வரும் கிளம்பினர்.

“அப்பா இங்க வரை வந்துட்டு வீட்டுக்கு வரலன்னா தப்பா பேசுவாங்க” என்ற வெங்கடேசிடம்

“வேண்டாம்யா.. நல்ல சூழ்நிலையில வரல. இன்னொரு நாள் வரோம். நீ இந்த வாரம் புள்ளைங்கள கூட்டிட்டு வா.. எங்களுக்கும் வயசாகுது, அலைய முடியாதுல்ல..” என கந்தவேல் கூறவும்,

“சரிதான் ப்பா..” என்றதோடு முடிக்க, அவனிடம் விடைபெற்று மூவரும் கிளம்பி வீடு வந்தனர்.

இங்கு கொடியை விட்டு எங்கும் அசையவில்லை சுப்பு. அவள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து, மதிய சமையலையும் முடிந்த பின்பும், அவர் அங்கிருந்து நகரவே இல்லை.

கொடியும் ஏனென்று கேட்கவில்லை, கேட்டு “ஏன் இதென்ன உன்வீடா, இல்ல உங்கப்பன் வீடா.. என் புள்ள கட்டின வீடு. என்னை ஏன் வந்தன்னு கேட்குற..” என்று பேச்சையே மாற்றிவிடுவார்.

அதெல்லாம் கேட்க இப்போது அவளுக்கு உடலிலும் சரி, மனதிலும் சரி தெம்பில்லை. இருந்தா இருக்கட்டும், போனா போகட்டும் என்ற மனநிலைதான்.

அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டாள். சுப்புவும் எதுவும் தோண்டி துருவி கேட்கவில்லை.
சந்திரா வேலைக்கு அழைக்க வந்தவர், சுப்புவை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டார்.

இப்படியே நேரம் செல்ல, வெளியில் சென்ற மூவரும் வந்துவிட்டனர். வந்தவர்கள் முதலில் சாப்பிட்டு, அதன்பிறகு கொடியிடம் மிகவும் பொறுமையாகவும், பக்குவமாகவும் கடனை அடைத்துவிட்டதாக கூறினர்.

சங்கர் மகளின் கையை இறுக்கமாக பிடித்திருந்தார். என்ன சொல்வாளோ என்று பயத்துடன் அனைவரும் அவளையே பார்க்க, “அதுக்குத்தான் நேத்து உங்ககிட்ட பணம் கேட்டேன்ப்பா. புதுசா யாருக்கிட்டயும் போய் கடன் வாங்கி பிரச்சினை ஆக கூடாதில்லே" என்றாள் யாரையும் பார்க்காமல்.

“அய்யோ கண்ணு, அமுதா பேசினதை எல்லாம் மனசுல வச்சுக்காத கண்ணு. அவளுக்கு உன் மேல உயிர் கண்ணு. நான் அன்னைக்கு மாப்பிள்ள கால்ல விழுந்ததை இன்னும் அவளால ஏத்துக்க முடியல. அதனாலத்தான் கோபத்துல பேசிட்டா..” என சங்கர் பதறிக்கொண்டு சொல்ல,

“பரவாயில்லப்பா.. நான் எதுவும் தப்பா நினைக்கல. எனக்கு இதெல்லாம் பழக்கமாகிடுச்சு தானேப்பா..” என்றவளின் குரல் இயலாமையில் துடித்தது.

“கண்ணு.. கண்ணு..” என்ற சங்கரின் பரிதவிப்பு அங்கிருந்த அத்தனை பேருக்கும் புரிந்தது.

ஒருவழியாக மகளை சமாதானம் செய்து, சங்கரும் கணேசனும் கிளம்ப, சுப்பு சற்றே ஆசுவாசமானார்.

அவர் தளர்ந்து அமர்ந்தவிதமே, கொடிக்கே சற்று வருத்தமாகத்தான் இருந்தது ஆனாலும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

இந்தக் கடனை முடித்தது அவளுக்குமே ஒரு ஆசுவாசம்தானே. நாளைக்கே ஏதேனும் விபரீதங்கள் நடக்கலாம். அப்போது இந்த கடனை வைத்து பிரச்சினையாகிடக்கூடாதே. அதனால்தான் அவள் சங்கரிடம் பணம் கேட்டது.

எப்படியோ பிரச்சினை முடிந்தது என அவள் யோசிக்க, அப்படியெல்லாம் நீ ஆசுவாசப்பட விட்டுவிடுவேனா என்பது போல் வந்து நின்றான் இளங்கோ. நம் மனதை காயப்படுத்துவது நம் சிந்தனைகளே, அவளின் சிந்தனையே அவன் தானே, அப்போ விட்டுவிடுவானா? தூரங்களை மேலும் மேலும் துயரங்களாக ஆக்குகிறானே...
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
இன்றைய எபி நல்லா இருக்கு. ஆனால், இளங்கோ என்ன செய்யப் போறான்னு தெரிஞ்சுக்க ஆவல்.

அடேய், பொண்டாட்டி தப்பு செஞ்சா, அதுக்கு இம்புட்டு பெரிய தண்டனையா? அவளை விட்டுப் போகும் அளவுக்கு மனசு வந்திருச்சா?

பாவம் அவள், அறிந்தால் எத்தனை வருத்தப்படுவா.

பங்சனுக்கு மனைவியை அழைத்துச் செல்கிறானா? இல்லயா பார்ப்போம்.

வெயிட்டிங்...
 

Chitra ganesan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
286
பொண்டாட்டி தப்பு பண்ணா தண்டனை கொடுக்க இவனுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அதுவும் விசாரிக்காமல் தண்டனை 😡
எப்படியோ கடன் முடிந்தது.அது யாரு இன்னொரு ஆள்?போனில் பேசியது?இது ஏதோ பிளான் பண்ணி கொடியை சிக்க வச்சது போல இருக்கே🤔
இப்ப கொடுங்கோலன் இளங்கோ வந்துட்டான்.என்ன சொல்லி கொடியின் மனசை காயப்படுத்த போகிறான்?😡
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Nice update
Ivan enna ooravitu poga plana

Anda nonnan yaru plan pottu kodi ah sikka vachirukangalo

Thalavarum visarikamale pondati ku thandansi kuduthachi


Inda vandutatila ini ennavo
 
Top